இது மரியாதைக்குறிய ஆசிரியர் [N.M. முகம்மது ஹனீபா] ஹனீபா சார் அவர்களுடைய பேட்டி. இதை வெளியிட உதவிய வாவன்னா சார் அவர்களுக்கு மிக்க நன்றி.[ எல்லா முன்னால் மாணவர்கள் சார்பிலிருந்தும்]
பணி வாழ்வும் பணி ஓய்வும்
என்னுடைய ஆசிரிய அறப்பணியை பற்றிக் கூறும்பொழுது., 1959- ஆம் ஆண்டு S.S.L.C. முடித்திருந்தேன். 1961- வரையிலும் ஒன்றுமறியாது விழித்திருந்தேன். ஒரு நாள் வழக்கம்போல் சேர்மேன் வாடிக்குப்போனேன். மர்ஹூம் தாளாளர் (S.M.S. ஷேக் ஜலாலுதீன் )அவர்களைச் சந்தித்தேன். கல்வித் தந்தை ஹாஜி S.M.S. ஷேக் ஜலாலுதீன் அவர்கள் என்மீது மிகவும் பிரியம் உள்ளவர். என்னை அழைத்துச் சொன்னார்: “D.E.O. சுல்தான் முகைதீன் (கல்வி அதிகாரி) இன்று நம் பள்ளிக்கு வருகிறார், ஆய்வுக்காக. உணவு உன் வீட்டில்தானாமே” என்றார். ஆமாம். “D.E.O. எனக்கு என் சாச்சா மூலம் பழக்கம்” என்றேன்.
அச்சூழலில் D.E.O. சுல்தான் முகைதீன் அவர்கள் ஆசிரியப் பயிற்சிக்கான விண்ணப்பத்தைத் தந்து “இதில் கையெழுத்துமிடும்” என்றார். இதைக் கவனித்துக் கொண்டிருந்த தாளாளர் அவர்கள், “ஆசிரியர் பயிற்சிக்குப்பின் நம் பள்ளியில் உனக்கு வேலை உண்டு” என்றார்கள். நான் மகிழ்ந்துபோனேன். 1961-63-ல் பயிற்சி முடிந்தது. ஹாஜி S.M.S. அவர்கள் தேர்வு முடிவதற்கு முன்னரே பணி ஆணை கொடுத்தார்கள் (அவர்களுக்கு மறு உலக வாழ்க்கையில் இறைவன் வெற்றியைக் கொடுப்பானாக!). பணி செய்தேன் காதிர் முகைதீன் உயர் நிலைப் பள்ளியில், பத்தாண்டுகள். பிறகு MELT என்னும் ஆங்கிலத்தில் பயிற்றுவிக்கும் முறையிலும் பயிற்சி பெற்றேன். பள்ளியில் எல்லா பாடங்களையும் நடத்தினேன். கணக்குப் பாடம் நடத்துவதில்தான் எனக்கு ஆர்வம் அதிகம்.
பள்ளிக்கூடத்தின் எல்லா நடவடிக்கைகளிலும் கலந்துகொண்டேன். மாணவர்களை பேச்சுப் போட்டிக்கு ஊக்கப்படுத்தி, தயார் படுத்தினேன். பேச்சாளர்கள் நிறைய உருவானார்கள். பள்ளி விழாக்கள் வெற்றிகரமாக் நடைபெற என் பங்களிப்பை நிறையத் தந்திருக்கிறேன்.
இந்த நிலையில் என் தந்தை அழைத்தார், வாணிபத்தில் உழைக்க! ஐந்தாண்டுகள் வாணிபத்தில் கழித்தேன். நட்டம் வாணிபத்தில் மட்டம் போட வைத்தது. தளர்ந்து போனேன்.
தாளாளர் என் நிலை அறிந்தார்கள். ”தளராதே! ஹனீபா, பள்ளிக்கு போ! வேலையைப் பாரு, ஆசிரியராய்” என்றார்கள். பணியைத் மீண்டும் தொடர்ந்தேன். சிறப்பு நிலை இடை நிலை ஆசிரியர் தகுதி கிடைத்தது. அதன் பின் “இடைநிலை உதவித் தலைமை ஆசிரியராகப் பணி உயர்வும் பெற்றேன். 1999-ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்று தகுதியான ஓய்வூதியமும் பெற்று நல்லபடியாக வாழ்ந்து வருகிறேன். அல்ஹம்துலில்லாஹ்!
என்னிடம் படித்த மாணவர்கள் வெளிநாடுகளில் வேலை செய்கிறார்கள். அவர்கள் வெளி நாட்டிலிருந்து வந்தால் என்னைக் கண்டு, ”சார்! நல்லா இருக்கிறீர்களா?” என்பார்கள். அவர்கள் யாரென்றே தெரியாமல் முழிப்பேன். ”சார் உங்களிடத்தில்தான் படித்தேன்” என்று அவர்கள் பெயர்களைச் சொல்வார்கள். புரிந்து கொள்வேன். என்னிடம் படித்தவர்கள் எத்தனையோ பேர் வெளி நாடுகளில் இருக்கிறார்கள். அவர்கள் ஊரிலிருந்து வந்தால்,”நல்லா இருக்கிறீர்களா?” என்று கேட்பார்கள். என்னிடம் படித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தமிழ் இணைய அறிஞர் உமர் தம்பி, டாக்டர்கள் மீராசாஹிப், அமீன், சலீம், Er.அகமது அலி மற்றும் சிலர்.
படித்த காலத்திலிருந்து இன்று வரை என்னோடு பழகிக்கொண்டிருப்பவர்கள் தஞ்சையின் புகழ் பெற்ற மருத்துவர் Dr.S. வாஞ்சிலிங்கம், M.D.,D.M., S.K.M. ஹாஜா முஹைதீன், வா. அப்துல் காதிர், அலியார் சார் ஆகியோர். டாக்டர் வாஞ்சிலிங்கம் என் குடும்ப நண்பர்; குடும்ப நிகழ்ச்சிகளுக்குப் போக வர இருப்போம். டாக்டர் வாஞ்சிலிங்கத்திடம், அப்பாயின்ட்மென்ட் வாங்குவது மிகவும் கடினம். ஒரு சமூக சேவையாக எண்ணி பலருக்கு அப்பாயின்ட்மென்ட் வாங்கிக்கொடுத்து வருகிறேன்.
எனக்கு இரண்டு ஆண் மக்கள், இரண்டு பெண் மக்கள். நால்வரும் மணமானவர்கள். மூத்த மகன் அலி அக்பர், கா.மு. கல்லூரியில் அலுவலகத்தில் பணி யாற்றுகிறார். இளைய மகன் சகாபுதீன், M.Sc. Computer Science படித்திருக்கிறார். கா.மு.ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் தற்காலிகமாக கணினி ஆசிரியராகப் பணிபுரிகிறார்.
வீட்டுக்கும் பள்ளிவாசலுக்கும் இடையில் பேரன் பேத்திகளோடு பொழுது திருப்தியோடு போய்க் கொண்டிருக்கிறது. இறைவனுக்கே எல்லாப்புகழும்.
N.M. முகம்மது ஹனீபா

