அவர்களின்
காலடியோசை
மெல்லமெல்லக் கரைந்து
விலகிச் சென்றதும்
தனிமை உக்கிரமாகத் தாக்கும்
அடுக்குமாடி கட்டடங்களின்
வசிப்பிடங்களைப் போல
குடியமர்த்தப்பட்டாலும்
ஆளரவமற்ற
அமைதியே நிலவும்
திடீர் மின்வெட்டால்
இருளின் அடர்த்தி கூடிப்போய்
நடமாட முனைந்தால்
தொடையில் தட்டும்
மேசையின் விளிம்பையோ
கால்களை இடறும்
கலைந்து கிடக்கும் பொம்மைகளையோ
அனுமானிக்க முடியாமல் வியாபித்திருந்தாலும்,
விடியலை எதிர்பார்த்துப் பழகி
இருட்டை ஊடுருவும் புலன்கள்கூட
செயலற்றுப்போகுமாறு
சூழும் இருளில்
இரட்டிப்பு இருட்டிருக்கும்
ஆத்திகம் வரையறுக்கும்
நரகம் அடுத்துவிட்டதைப்போல்
வெட்பம் தாக்கினாலும்
மாற்றுடை இல்லாத
சீருடை
நனைந்துவிடாது
தனிமையில் லாவன்டரும்
மனைவியுடன் மல்லிகையும்
பிடிக்குமெனினும்
மனம் லயிக்காதச்
சூடமும் சந்தனமும்
நாசியிலும் நாடி நரம்புகளிலும்
நறுமணம் வீசினாலும்
களிமண் மணமே மீறும்
நீட்டிப்படுத்திருக்க வேண்டும்
என்னும் நிபந்தனையில் சலுகையிருக்காது
முழங்கால் மடக்கவோ
முதுகு சொறியவோ தேவையிருக்காது
புரண்டு படுக்கக்கூட
போதுமான
இடம் இருக்காது
எல்லைமீறிய வேதனைகள்
கைமீறிப் போயிருக்கும்
நல்லவேளை
இவ்வாறாக அடையாளம் காணப்பட்டவை
என்னைச் சூழும்போது
இன்று ஊசலாடும் உயிர்
என் உடலில்
இல்லாமல் இருக்கும்.
சபீர் அபுஷாருக்