கடந்த வாரத்தில் அழைப்புப் பணி தொடர்பாக, அண்டைவீட்டாரோடு நாம் பேணவேண்டிய சில கடமைகளைப் பார்த்தோம். இப்போது நமது வீட்டை விட்டு சற்று வெளியே வந்து நம்மைச் சுற்றியுள்ள சமூக அமைப்பையும் சமுதாயத்தையும் நோக்குவோம். ஒரு அழைப்புப் பணியாளர் தனது சொந்த ஒழுக்கங்களைப் பேணுவதும் தனது அண்டைவீட்டாரிடம் நடந்து கொள்ளும் முறைகளும் எந்த அளவுக்கு இதயங்களை வெற்றி கொண்டு இஸ்லாத்தில் இணைக்குமோ அந்தச் செயல் எவ்வாறு இறைவனுக்கு இனிக்குமோ, அதே அளவு இன்னும் அதைவிட ஒரு படி மேலாக, ஒரு அழைப்பாளன் தனது சமுதாயத்தோடும் தான் இணைந்து வாழும் சமூகத்தோடும் எவ்வாறு நடந்து கொள்கிறான் என்பதிலும்கூட இழைந்து ஊடுருவி இருக்கிறது.
நுமான் இப்னு பஷீர் ( ரலி ) அவர்கள் புகாரியில் ஒரு அற்புதமான நபி மொழியை அறிவிக்கிறார்கள்.
“ஒருவருக்கொருவர் இரக்கம் காட்டுவதிலும் அன்பு செலுத்துவதிலும் ஒருவர் மற்றவரைச் சார்ந்து நிற்பதிலும் இறை நம்பிக்கையாளர்கள் ஓர் உடலைப் போன்றவர்கள். அந்த உடலின் ஓர் உறுப்புக்கு நோய்கண்டுவிட்டால் அதனால் உடலின் மற்ற உறுப்புகளும் இருப்புக் கொள்ளாமல் அதன் துன்பத்தில் பங்கு கொள்கின்றன. ஓர் இறை நம்பிக்கையாளன் அதைப் போன்றே பிறரின் துயர் கண்டு வாடவேண்டும். “ – என்பதே அந்தப் பொன்மொழி .
பெருமானார் ( ஸல்) அவர்கள் சொன்ன அற்புதமான உவமைகளில் ஒன்றாக இந்த நபி மொழி கருதப்படுகிறது. சமுதாயத்தையும் சமூகத்தையும் ஒரு முழு உடலுக்கு ஒப்பிட்டார்கள். காலில் முள் குத்தினால் வாய் ஆ! என அலறுகிறது; கை அந்த இடத்தைத் தடவி விடுகிறது; கண்கள் வலி தாங்காமல் கண்ணீரைச் சொரிகின்றன; மூளை அதற்கான மருந்தைத் தேடுகிறது. காலில் தானே முள் குத்தியது! அதனால் மற்ற உறுப்புகள் ஏன் பதற வேண்டும்? பதைக்கவேண்டும்?
தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்று நம்மில் பலர் இருக்கிறோம். விஷமுள்ள கொடிய பாம்பு , அடுத்த வீட்டுக்குள் புகுந்துவிட்டால் அது நமது வீட்டுக்குள்ளும் வர எவ்வளவு நேரம் ஆகும்? தீயின் துளி ஒன்று அடுத்த வீட்டுக் கூரையில் பட்டுவிட்டால் தொடர்ந்து நமது வீட்டுக்கும் பற்றிப் பரவி எரிய பல ஆண்டுகளா ஆகும்? ஆகவே ஒருவருக்கு ஒன்று சம்பவித்தால் அது அவரை மட்டுமே சார்ந்தது அவரை மட்டுமே பாதிக்கக் கூடியது என்று விட்டுவிட இயலாது. ஒரு உடல் உறுப்பைப் போல செயல்பட்டு ஒருவருக்குத் துன்பம் ஏற்பட்டால் அடுத்தவர்களும் அந்தத் துன்பத்தைக் களைய ஒன்றிணைந்து நடவடிக்கைகளை எடுப்பது நம்மையும் அழிவிலிருந்து காப்பாற்றும் என்பது நாம் படிக்காமலேயே கற்றுக் கொள்ள வேண்டிய பாலபாடமாகும். இந்தக் கருத்தைதான் பெருமானார் (ஸல்) அவர்களின் அமுதமொழி நமக்கு சொல்லித்தருகிறது. அழைப்புப் பணியாளரும் இதை அடிப்படையாகக் கற்றுக் கொள்ள வேண்டிய கருத்தாகும்.
ஒரு கதை ஒன்று சொல்வார்கள். அது ஒரு கதை மட்டுமல்ல நல்ல ஒரு பாடமும் கூட.
ஒரு விவசாயி வீட்டில் எலித் தொல்லை அதிகமாக இருந்தது. அதை ஒழிப்பதற்காக விவசாயி ஒரு எலிப்பொறியை வாங்கி வந்து தனது மனைவி இடம் காண்பித்து இன்று இரவு இந்த எலிப் பொறிக்குள் ஒரு சுட்ட கருவாட்டுத்துண்டை வைத்துவிடு! தொல்லை தரும் எலி வந்து சிக்கிக் கொள்ளும் என்று சொன்னார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த எலி மிகவும் கவலையோடு அந்த வீட்டில் இருந்த சேவலிடம் போய் என் உயிருக்கு ஆபத்து! இதோ! என்னைப் பிடிக்க எலிப்பொறி வந்திருக்கிறது என்று சொன்னது. ஆனால் சேவல் அதைப் பற்றி எனக்கென்ன கவலை? நீதான் கவலைப் பட வேண்டும் என்று எலி இடம் சொன்னது. நேராக எலி அங்கிருந்த வான்கோழியிடம் போய் அதேபோல் புலம்பியது. வான்கோழியும் அது உன்பிரச்னை எனக்குக் கவலை இல்லை என்றது. பிறகு நேராக அந்த வீட்டில் வளர்ந்த செம்மறியாட்டிடமும் போய் எலி தனது கவலையைத் தெரிவித்தது. கவலையில்லாமல் தலையை ஆட்டிய ஆடும் போடா! போய் உன் உயிரைக் காப்பாற்றிக் கொள் எனக்கு எவ்விதக் கவலையும் இல்லை என்று சொல்லி எலியை விரட்டிவிட்டது.
அன்று இரவு எலிப்பொறி தயாராக்கப்பட்டு வைக்கப்பட்டுவிட்டது. நடு நிசி! எலிப் பொறி இயங்கும் சப்தம் கேட்டது. உடனே விழித்த விவசாயியின் மனைவி எலி மாட்டிக் கொண்டது என்ற சந்தோஷத்தில் எலிப்பொறியை நோக்கிப் போய் இருட்டிலேயே அதில் கையை வைத்தாள். உண்மையில் பொறியில் மாட்டியது எலியல்ல ஒரு விஷப் பாம்பு! அந்தப் பாம்பு அந்த வீட்டுக்காரியை கடித்துவிட்டது. விஷம் தலைக்கேறி விட்டது. வீட்டுக்காரியை வைத்தியரிடம் தூக்கிக் கொண்டு ஓடினார்கள். வைத்தியர் பாம்பின் விஷத்தை இறக்கி, வீட்டுக்காரியை காப்பாற்றிவிட்டு அந்த அம்மையார் மிகவும் களைப்பாக இருந்தததால் அவருக்கு ஒரு கோழியை அறுத்து சூப் வைத்துக் கொடுக்கச் சொன்னார்.
தனது அன்பு மனைவிக்கு முன் விவசாயிக்கு கோழி பெரிதாகப் படவில்லை. எந்தக் கோழி எலிப்பொறியால் தனக்கு எந்தக் கவலையும் இல்லை என்றதோ அந்தக் கோழி இப்போது அடுப்பில் சூப்பாக கொதித்தது. அடுத்தநாள் இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட சொந்தக்காரர்கள் உடல்நலம் விசாரிப்பதற்காக திரண்டு வந்தார்கள். அவர்களுக்கு விருந்து வைக்க வீட்டிலிருந்த வான்கோழியும் அறுத்து சமைக்கப்பட்டது. வீட்டுக்காரி பெரிய ஆபத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறாள் ஆகவே ஆட்டை அறுத்து ஏழைகளுக்குக் கொடுத்துவிடு என்று ஒரு பெரியவர் சொன்னதால் செம்மறி ஆடும் அறுத்துப் பங்கிடப்பட்டது. வீட்டின் ஒரு ஓரத்த்தில் எலிப் பொறி கிடந்தது. வீட்டுக்காரர் உன்னால்தானே இவ்வளவும் என்று என்று முனங்கிக் கொண்டே அதைத்தூக்கிப் பரணியின் மேல் போட்டார். எலி மட்டும் எப்போதும்போல சுதந்திரமாக ஓடி விளையாடியது.
இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் ஆபத்தின் அடையாளங்கள் வரும்போது அது நமக்கு வராது என்று நாமே நினைப்பதும் கூடாது; நமக்கு வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று விலகவும் கூடாது. அதேபோலத்தான் சமூக , சமுதாய வாழ்வும்.
ஊருக்குள் ஓடி வரும் வெள்ளம் ஆட்களின் ஐடிகார்டைப் பார்த்து இழுத்துச் சென்று அழிப்பதில்லை. அழிவையும் இழிவையும் அனைவரும் ஒன்றுகூடித்தான் தடுக்க வேண்டும். எனக்கென்ன என்று இருப்பவர்களையே கேடுகள் முதலில் சூழும்.
“மனிதர்கள் சீப்பின் பற்களைப் போன்றவர்கள் ; மனித இனத்தோர் அனைவரும் ஒரே இறைவனின் குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் “ என்ற நபி (ஸல்) அவர்களின் பொன்மொழி சாதி மத இனம் கடந்து மனிதர்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு உதவிக் கொள்ளவேண்டுமென்று நமக்கு எடுத்துச் சொல்கிறது.
நாட்டில் திடீரென்று இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுகின்றன. இந்தப் பேரிடர்கள் குலம் பார்த்து குணம் பார்த்து வருவதில்லை. அறிவியல் கணிப்புகளை மீறி இயற்கைப் பேரிடர் ஏற்பட்டு விடுகின்றன. அண்மையில் தமிழகத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் இதற்கு சிறந்த உதாரணமாகும். இப்படிப் பட்ட நிலைமைகள் ஏற்படும்போது அத்தகைய இடர்களால் இடரப்பட்டு இடருறும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டப்படுவதில் முதல் கரம் ஒரு அழைப்புப் பணியாளரின் கரமாக இருக்கவேண்டும். இதயங்களை இஸ்லாம் வெல்லவேண்டுமானால் அழைப்புப் பணியாளரின் கரங்களில் ஏந்தும் அன்புநிறைந்த வாளால் மட்டுமே இயலும். .
தேவையில் உதவுபவனே உண்மையான நண்பன் என்று சொல்வார்கள். ( A FRIEND IN NEED IS A FRIEND INDEED )
“உதவி வரைத்தன்று உதவி , உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து என்று திருக்குறளும் சொல்கிறது. துன்பத்திலும் துயரத்திலும் இருப்பவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் பண்பு ஒரு அழைப்பாளனின் அடிப்படை குணமாக இருக்க வேண்டும். உதவி தேவைப் படாத நேரங்களில் செய்யப்படும் உதவிகள் பயனற்றவையாக இருக்கும். அந்த வகையில் இயற்கை பேரிடர் , உயிர்காக்கும் அரிய வகை இரத்த தானம், மருத்துவ உதவிகள் ஆகியவை ஒரு அழைப்பாளரின் சமூக சேவைக்கான பட்டியலில் முதலிடம் பெற வேண்டும்.
மனிதர்களுக்கு மற்ற மனிதர்களின் உதவிகள் தேவைப்படும் இடங்கள் என்று நாம் சில இடங்களைத் தேர்வு செய்தால் அவற்றுள் மருத்துவ மனை, சிறைச்சாலை, காவல் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், இரயில்வே நிலையங்கள் ஆகியவை நிச்சயம் இடம் பெறும். காரணம் இங்கெல்லாம் எவ்வளவு வசதி படைத்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு எதிர்பாராதவகையில் மனித உதவிகள் அவசியம் தேவைப்படும்.
சாலைவிபத்துக்களில் எதிர்பாராமல் சிக்கிக் கொள்பவர்கள் எவ்வளவு பெரிய வசதி படைத்தவர்களாக இருந்தாலும் அவர்களுடைய உறவினர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும்வரை அவர்கள் அனாதைகள்தான். சில நேரங்களில் அவர்களால் தங்களின் முகவரியைக் கூட சொல்ல இயலாத நினைவிழப்பு, கோமா போன்ற சிக்கல்களில் அவர்கள் மாட்டிக் கொள்வார்கள். இதே மாதிரி நிலைகள் மனிதர்களுக்கு காவல் நிலையங்களிலும் சிறைச்சாலைகளிலும்கூட ஏற்பட்டு விடுகின்றன. அப்பாவிகள் சிலர் சந்தேக வழக்குகளில் கைது செய்யப்பட்டு தங்களுடைய நிலைமைகளை விளக்க சந்தர்ப்பமின்றி தடுத்துவைக்கப்படுகின்றனர். நிலுவையில் உள்ள பொய்வழக்குகள் அவர்கள் மீது புனையப்படுவதையும் நாம் அறிந்து இருக்கிறோம். அத்தகைய சூழ்நிலைகளில் இன மத பேதமின்றி மனிதர்கள் அனைவரையும் தேடிப்போய் உதவுவதில் அழைப்புப்பணியாளருக்கு ஆயிரம் வேலைகள் உள்ளன.
அண்மையில் நாம் நேரடியாக அறிந்து மகிழ்ந்த ஒரு சம்பவம் என்னவென்றால் கடலூர் மாவட்டத்தில் கணக்கின்றி பெய்த மழையும் அதைத்தொடர்ந்த காற்றும் அங்குள்ள மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டன. அத்தகைய சூழ்நிலையில் அந்த மாவட்டத்தில் ஒரு முக்கியமான முஸ்லிம்களின் கேந்திரமான பரங்கிப் பேட்டை என்ற ஊரைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஒன்று திரண்டு பாதிக்கப்பட்ட மக்களை பள்ளிவாசல்களைச் சேர்ந்த திருமண மண்டபங்கள், முஸ்லிம்களால் நடத்தப்படும் பள்ளிக் கூடங்களில் தங்க வைத்ததுடன் அவர்களுக்கு வேண்டிய உணவுத் தேவைகளையும் சிறப்பாக செய்து கவனித்துக் கொண்டார்கள்.
ஏற்கனவே 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியிலும் பல மீனவக் குடியிருப்புகளை கூட்டத்தோடு காப்பாற்றி அழைத்து வந்து இவ்வாறு காப்பாற்றித் தொண்டு செய்தார்கள். இவர்களின் இப்படிப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகள் மத, சமூக நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டு என்பது ஒருபக்கமிருந்தாலும் இஸ்லாம் வலியுறுத்திச் சொல்கிற அனைத்து மக்களுக்குமான மனிதாபிமானம்தான் இங்கே புகழ்மொழியாக கோலோச்சியது. சுனாமிக்குப் பின் கருணையுள்ளம் கொண்ட முஸ்லிம்களைக் கண்டுவிட்டு தங்களின் வாழ்வுமுறையாக இஸ்லாத்தை தேர்ந்தெடுத்தவர்கள் அந்த ஊரில் ஏராளம்.
முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள் , மனித உயிர்களை அழிப்பவர்கள் என்று மேல்நாட்டார் மற்றும் எதிர்மறை ஊடகங்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நிலையில் முஸ்லிம்கள் , மற்றவர்களின் துயர் துடைப்பதற்காக அணிகளாகத் திரண்டு அனைத்து உயிர்களையும் அரவணைத்துக் காக்கும் செயல்களை அரங்கேற்றுவது எவ்வளவு பெரிய மரியாதையை இந்த மார்க்கத்துக்குப் பெற்றுத்தரும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
நமது இத்தகைய செயல்களும் அழைப்புப்பணியின் வகைகளில் அடங்குவதுதான்.
இன்ஷா அல்லாஹ் இன்னும் நிறையப் பேசலாம்.
தொடரும்...
இப்ராஹீம் அன்சாரி



