Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label கல்வியும் கற்போர் கடமையும். Show all posts
Showing posts with label கல்வியும் கற்போர் கடமையும். Show all posts

கல்வியும் கற்போர் கடமையும் ! - குறுந்தொடர் - 1 1

அதிரைநிருபர் | July 21, 2016 | , , ,

தேடல்:


"தேடல்" என்பது மனிதனின் சமுதாய வாழ்கையில் அத்தியாவசிய அம்சங்களில் ஒன்று. ஆனால் எவற்றைத் தேடுவது ? எவ்வாறு தேடுவது? என்பதை உணர்ந்து தக்க பொருளைத் தக்க வழியில் தேடுவதே நல்லவர்கள் நாடும் நண்ணெறியாகும்.


இன்றைய மனிதர்கள் எவற்றையெல்லாமோ தேடியலைந்து கொண்டிருக்கிறார்கள் "இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு; அது எங்கிருந்த போது அதை நாடி ஓடு என இசை பாடி இன்பத்தை தேடியலைகிறது ஒரு கூட்டம். "பணமே பிரதானம்; அது இல்லையேல் அவமானம்" என்ற கொள்கை கொண்டு பணத்தை தேடியலைகிறது இன்னொரு கூட்டம் "பதவி வந்திடப் பத்தும் பறந்து வரும்" எனப் புதுமொழி பேசிப் பதவியைத் தேடித் திறிகிறது மற்றொரு கூட்டம்.


அறிவு:


இன்பம், பணம், பதவி போன்றவையெல்லாம் முதலிடம் கொடுத்துத் தேடப்பட வேண்டைய பொருளா ? நிச்சயமாக இல்லை. தேட்டத்தோடு தேடப்பட வேண்டிய பொருள் ஒன்றுண்டு, அதுதான் "அறிவு". அறிவே அகிலத்தின் அணையா ஜோதி" என்கிரார் கிரேக்க நாட்டு தத்துவ ஞானி சாக்ரடீஸ். "அறிவு அற்றம் காக்கும் கருவி" என்கிறார் வண்டமிழ்ப் புலவர் வள்ளவப் பெருந்தகை. "பணம், பதவி, அதிகாரம், செல்வாக்கு,அழகு எதைக் கொண்டும் சத்தியத்தை விளங்கில் கொள்ள முடியாது. அறிவு இருந்தால் மட்டுமே சத்தியத்தை விளங்கிக் கொள்ள முடியும்" என்பது அருமை திருமறைக் குர்ஆன் காட்டும் தெளிவுரை.


அறிவுதான் இன்று உலகை ஆட்சி செய்கிறது, ஆயுதம், பணம், பதவி எல்லாம் கூட அறிவுக்குப் பின்தான் பயன்படுகிறது என்பதை உலகறிந்த உண்மை. இத்தகைய அறிவையே தேடிப் பெறச் சொன்னார்கள் அருமை நபி(ஸல்) அவர்கள். "அறிவு இறை நம்பிக்கையாளர்களின் காணாமல் போன பொருள், அதைத் தேடி அடைய வேண்டிய உரிமை அவருக்குண்டு" என்பது அண்ணலார் அவர்களின் வாக்கு.


கல்வி:


மனிதனுக்குள் மறைந்து கிடக்கும் மாபெரும் சக்திதான் அறிவு. மண்ணுக்குள் மறைந்திருக்கும் தண்ணிரைப் போல் அறிவு மனிதனுக்குள் மறைந்திருக்கிறது. அதை வெளிக் கொணரும் ஒப்பற்ற கருவியாகக் கருதப்படுவது தான் "கல்வி" ஆகும்.


மண்ணைத் தோண்டத் தோண்ட நீர் ஊற்றெடுத்துப் பெருகுவது போல் கற்க கற்க அறிவும் ஊற்றெடுத்துப் பெருகும். எனவே தான் கல்வி கற்பது மனிதனின் அடிப்படைக் கடமை எனக் கருதப்படுகிறது.


கல்வி கற்றவரே சமுகத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறார். "கற்றவரும் கல்லாதவரும் சமமாவரா" என்பது இறைவன் தன் திருமறையில் தொடுக்கும் வினா. "கற்பவனாக இரு; அல்லது கற்பிப்பவனாக இரு" என்பது பெருமானார் (ஸல்) அவர்களின் போதனை. "கேடு இல் விழுச் செல்வம் கல்வி" என்பது வள்ளுவர் வாக்கு "கற்றவர்க்குச் சென்ற விடமெல்லாம் சிறப்பு" என்பது அவ்வையின் அமுத மொழி. "செல்வம் பெரிதா ? கல்வி பெரிதா" எனப் பட்டிமன்றங்கள் நடத்தப்படுகின்றன. இதை முடிவு செய்ய பட்டிமன்றங்களே தேவையில்லை கல்விதான் என்பது கண்கூடு. செல்வத்தை நாம் பாதுகாக்க வேண்டும்; கல்வியோ நம்மை பதுகாக்கும். செல்வம் செலவழிக்க செலவழிக்க அதிரகரிக்கும். செல்வம் இன்றிருக்கும் நாளை சென்று விடலாம்; ஆனால் கல்வி உயிருள்ளவரை உடனிருக்கும். எனவே தான் "கல்வி கற்க வேண்டியது ஆண் பெண் எல்லோருடைய கடமை" என இயம்பினார்கள் ஏந்த நபி(ஸல்) அவர்கள்.


எல்லை இல்லை:

'கல்வி கரையில; கற்பவர் நாள் சில' என்ற கூற்றும் 'கற்றது கை மண்ணளவு; கல்லாதது உலகளவு' என்ற கூற்றும் நாம் கற்க கூடிய கல்விக்கு எல்லை இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. காலத்தின் அருமை கருதிக் கல்விக் கூடங்களில் குறிப்பிட்ட கால வரம்பிற்குள் குறிப்பிட்டப் பாடத்திட்டத்தின் படி குறிப்பிட்ட நூல்களை மட்டும் கற்று நமது அறிவை வளர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறுகிய வரம்பிற்குட்பட்ட அக்கல்வியைக் கூட பல மாணவர்கள் முனைப்போடு கற்பதில்லை என்பது வேதனைக்குரிய விஷயம். முனைப்போ முயற்சி மேற்கொண்டு கற்றால் மட்டுமே தேவையான அறிவை நாம் தேடிக் கொள்ள இயலும் என்பதை கற்போர் கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்காக சில நெறிமுறைகளைக் கைக் கொள்ள வேண்டும்.


தன்னம்பிக்கை:

கல்விக்குத் தடையா இருப்பவை நான்கு. 1. மறதி, 2. சோம்பல், 3. அலட்சியம், 4.தூக்கம். கல்விக்குத் துணையாக இருப்பவை நான்கு.1.ஆசையும் ஆர்வமும், 2.முயற்சியும் உழைப்பும், 3.துணிவும் உற்சாகமும், 4.கவலையும் பிரார்த்தனையும். கல்விக்குத் தடையாக இருப்பவற்றைக் கல்விக்குத் துணையாக இருப்பவற்றைக் கொண்டு வீழ்த்தி வெற்றிகாண முயற்சிக்க வேண்டும்.


'சாதிக்க வேண்டும்' என்ற தன்னம்பிக்கையும், 'சாதித்தே தீர்வேன்' என்ற விடா முயற்சியும் கற்போரிடம் கட்டாயம் இருந்தாக வேண்டும். இவற்றோடு சோர்வற்ற உழைப்பும் சேர்ந்து விட்டால் அவர்களின் வெற்றியை தடுத்து நிறுத்தும் சக்தி வேறு எதற்கும் இல்லை.


காலந்தவறாமை:

கல்வியில் சாதிக்க விரும்பும் மாணவர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டிய ஒன்று காலம் தவறாமை. "கடமை கண்போன்றது; காலம் பொன் போன்றது" என்ற மூதுரை முழுமையாகக் கடைபிடிக்க வேண்டும். குடிக்க நீர் கிடைக்காத பாலைவனத்தில் நீண்ட தூரம் பயணிக்கும் ஒருவன் தன்னிடமுள்ள சிறு அளவு நீரைச் சிக்கனமாகச் செலவழிப்பதில் எவ்வளவு கவனமாக இருப்பானோ அந்த அளவு, நேரத்தை செலவிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். படிப்பைப் பாதிக்கும் வேறு எதிலும் நேரத்தை வீண் விரயம் செய்யக் கூடாது.


தேர்வுக்காக மட்டும் படிப்பது என்ற வழக்கம் நல்லதல்ல, நாள் தோறும் படிக்கின்ற வழக்கத்தைக் கொள்ள வேண்டும். வகுப்பில் அன்று நடந்த பாடத்தை அன்றிரவே மீண்டும் படித்து மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். இதைத் திட்டமிட்டுச் செய்தால் அதுவே திகட்டாத பழக்கமாகிவிடும்.

தொடரும்...

-SKM ஹாஜா முகைதீன் M.A. Bsc., BT.

 (முன்னால் தலைமையாசிரியர். கா.மு. மேல்நிலை பள்ளி, அதிரை)


மீள் பதிவு


கல்வியும் கற்போர் கடமையும் ! - குறுந்தொடர் - நிறைவு 10

அதிரைநிருபர் பதிப்பகம் | July 29, 2011 | ,

மனனம் செய்தல்:

தேர்வுக்காகப் படிக்கும் போது மனப்பாடம் செய்வது நல்லதா ? பல்வேறு பாடங்களிலுள்ள நூற்றுக் கணக்கான செய்திகள் அத்தனையும் மனப்பாடம் செய்வது எளிதான செயலன்று. அவற்றை மனனம் செய்வதற்கு அதிகமான நேரம் தேவைப்படலாம். இதனால் பல செய்திகள் மனனம் செய்ய முடியாமல் விட்டுப் போகலாம். அப்படியே எல்லாவற்றையும் மனனம் செய்திருந்தாலும் எந்த அளவு அவை நினைவில் நிற்கும் என்பது உறுதியல்ல. எனவே எல்லாவற்றையும் மனனம் செய்வது என்பது ஏற்கத்தக்கதல்ல. முக்கியமான சிலவற்றை மட்டும் மனனம் செய்வது தவறல்ல. குறிப்பாக கனிதம், அறிவியல், பாடங்களைல் உள்ள வரையறைகள் (diffiniations) சூத்திரங்கள் (formulas)வரலாற்றுப் பாடத்தில் வரும் வரலாற்று நிகழ்வுகள் நடந்த ஆண்டுகள், இடங்கள், மொழிப் பாடங்களில் இடம் பெறும் செய்யுள் வரிகள்,இதரப் பாடங்களில் இடம் பெற்றுள்ள பாட வல்லுநர்களின் மேற்கோள்கள் (Quotations) போன்றவற்றை மனனம் செய்து கொள்வது நல்லது. மற்ற பாடச் செய்திகளைப் படித்துப் புரிந்து மனதில் உள்வாங்கிக் கொண்டு தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்குத் தகுந்த முறையில் விடை எழுதுவதே சாலச் சிறந்தது.

நினைவாற்றல்

பொதுவாகக் கல்விக்கு - குறிப்பகத் தேர்வுக்கு நினைவாற்றல் என்பது மிக இன்றியமையா அம்சமாகும். படித்தவை நினைவில் நில்லாது போனால் தேர்வைச் செம்மையாகச் செய்ய முடியாது போய்விடும். நினைவாற்றலை வளர்க்க சில நடைமுறைகள், பயிற்சிகள் மிக உதவும். ஆண்டுத் தொடக்க முதலே தேர்வைக் கருத்தில் கொண்டுப் படிக்கத் தொடங்க வேண்டும். இவ்வாறின்றித் தேர்வுக் காலத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாகப் படிப்பது பாடத்தை மனதில் திணிப்பது போலாகிவிடும். இவ்வாறு திணிக்கப்படுபவை நிச்சயமாக நினைவில் நிற்காது அடுத்ததாக, படிக்கும் போது மனதை ஒருமுகப்படுத்துதல் (concentrations) அவசியம். தேவையற்ற விஷயங்களில் மனதை அலையவிடக்கூடாது. மனம் ஒரு பதிவு செய்யும் கருவி அது சிதைவடையும் போது பதிவு செய்ய இயலாது. மனம் சிதைவடையாது அதை ஒருமுகப்படுத்துவதற்கு தொழுகை அதாவது இறைவணக்கம் நல்ல பயிற்சியாக அமையும். எனவே தினமும் மாணவர்கள் படிக்கத் தொடங்கும் போதே இறைச் சிந்தனையோடும் பிரார்த்தனையோடும் தொடங்குவது நல்லது. அடுத்ததாக, படித்தவற்றை நினைவு படுத்திப் பார்க்க வேண்டும். படித்தவற்றை பல முறை எழுதிப் பார்ப்பது மிகுந்த பலனைத் தரும்.

செயல் முறை ஈடுபாடு:

சீனநாட்டுக் கல்வியாளர் ஒருவரின் கூற்று இங்கு கவனிக்கத்தக்கது. "பாடச் செய்திகளைச் சொல்லக் கேட்டேன்; உடன் மறந்து விட்டது;அச்செய்திகளைப் படித்தேன்; கொஞ்ச நேரம் நினைவில் நின்றது. அது பற்றிய செயல் முறையை (Experiment) உற்று நோக்கினேன்; இன்னும் கொஞ்ச நேரம் நினைவில் நின்று மறைந்தது; நானே அச்செயல் முறையில் ஈடுபட்டேன்; என்றும் மறக்காது நினைவில் நின்று விட்டது". கணிதப்பாடத்தை சுமையாகக் கருதும் மாணவர்களே இன்று அதிகம். அத்தகையோர் இச்சீனக் கல்வியாளரின் கூற்றை நினைவில் கொள்ள வேண்டும். வகுப்பில் ஆசிரியர் செய்து காட்டும் கணக்குகளைக் கவனித்தால் மட்டும் போதாது. அக்கணக்கையும் அதையொட்டிப் பயிற்சிக்ககத் தரப்பட்டுள்ள மற்றக் கணக்குகளையும் போட்டுப் போட்டுப் பார்க்க வேண்டும். அதமிழ்ல் இப்படி ஒரு பழமொழி உண்டு. 'மூட மூட ரோகம்; பாட பாட ராகம்; போட போட கணிதம்.

வேகமும் நுட்பமும்:

தேர்வு அறையில் அமர்ந்துத் தேர்வு எழுதுகின்ற நாம் மிக்க கவனத்துக்குரிய தருனமாகும். அத்தருனத்தில் தேர்வர்களிடம், வேகம், திட்பம் (speed and accuracy) இரு திறமைகளும் ஒருங்கே வெளிப்பட வேண்டும். தேர்வுக்காக அனுமதிக்கப்படும் 2 1/2 அல்லது 3 மணிநேரத்திற்குள் வேகமாகச் செயல்பட்டுக் கேட்கப்படும் எல்லா வினாக்களும் விடை எழுத வேண்டும். அதே நேரத்தில் விடைகள் பிழையின்றிச் சரியாக அமையுமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

புற ஆற்றல்:

படிப்பைப் பூரித்தி செய்து விட்டுக் கல்விக் கூடத்தை விட்டு வெள்யேறும் நம்மை சமுதாயம் பல்கலை அறிந்த ஓர் அறிஞனாக அங்கீகரிக்க வேண்டும் என ஆசைப்படுவது தவறல்ல. அதற்காகப் படிக்கின்ற காலத்திலேயே பாடம் தவிர்த்த பல்வேறு கலைகளிலும் (exta-curricular activities) தேர்ச்சி பெற முயற்சிக்க வேண்டும். அவ்வகையில் எழுத்தாற்றல், பேச்சற்றல், பொது அறிவுத்திறன் முக்கியமானவை. கல்விக் கூடங்களில் அமையப் பெற்றுள்ள மாணவர் மன்றங்களை முழுமையாகப் பயண்படுத்திக் கொண்டு இத்தகைய திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்வது நலம் பயக்கும். இவை பிற்காலத்தில் சமுதாயத்தில் மிகச் சிறந்த அந்தஸ்த்தை பெற்றுத்தர வல்லவை.


ஆரோக்கியமான உடல் படைத்தோரே அறிவார்ந்த ஆற்றல்களை வெளிக் கொணர முடியும். ஆரோக்கியமான உடலுக்கு உடற்பயிற்சி அவசியம். கல்விக் கூடங்களிலுள்ள உடற்கல்விக் கழகம் மூலம் உடற்பயிற்சிலும்,, விளையாட்டுக்களிலும் ஆர்வத்தோடு பங்கேற்று உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். "சுவர் இருந்தால் மட்டுமே சித்திரம் வரைய முடியும்" என்ற தமிழ் பொன் மொழியையும் "Saound mind in Sound Body" என்ற ஆங்கிலப் பொன் மொழியையும் மறந்து விட வேண்டாம்.

ஒழுக்கம்:

ஒழுக்கமே கல்வியின் உயர் நோக்கம் என்பதால் கல்வி கற்போர் ஒழுக்கத்தை உயிர் எனப் போற்ற வேண்டும். "ஒழுக்கத்தை ஊட்டாத கல்வி வேண்டாத ஒன்று" என்பது மாநபி(ஸல்) அவர்களின் மணிமொழி. கூர்மையான அறிவு படைத்தவனாயினும் சரி அவனிடம் மனிதப் பண்பு அறவே இல்லையெனில் அவன் ஓங்கி வளர்ந்த ஒரு மரத்துக்குத் தான் ஒப்பாவான் என்பதை

"அரம்போலும் கூர்மை ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்"

என்ற குறட்பா குறிக்கிறது. பெற்றோர்களுக்குப் பணிந்துப் பணிவிடை செய்தல், ஆசிரியர்களுக்குக் கீழ்படிதல், மூத்தோரர மதித்தல்,இளையோரிடம் அன்பு காட்டுதல், எளியோரிடம் இரக்கம் காட்டுதல், சம வயதினரிடம் நட்பு பாராட்டுதல், பெண்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளுதல் போன்றவை மாணவர்களை மாண்புறச் செய்யும் ஒழுக்க நெறிகளாகும்.

இறையச்சம்:

எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு கல்வியாளரிடம் இறையச்சமும், இறைபக்தியும் அவசியம் இருத்தல் வேண்டும். தான் நாடியவர்களுக்கே இறைவன் கல்விச் செல்வத்தை வழங்குகிறான் என்பதால் அவனுடைய அருளின்றி அச்செல்வத்தை முழுமையாக அடைய முடியாது. கற்றதன் பயன் இறைவனைத் தொழுதலே என்பதை

"கற்றதனா லாய பயனென்கொல் வாளறிவன்
நாற்றாள் தொழார் எனில்"

என்ற திருக்குறள் தெளிவுபடுத்துகிறது, அதுவே இறைவன் அவனுடைய திருமறையில் கூறுவதற்கிணங்க "எனக்குக் கல்வி அறிவை அதிகப்படுத்தித் தருவாயாக" என தினமும் அவனைத் தொழுது வணங்கி பிரார்த்தித்து நம்முடைய கல்வியறிவைப் பெருக்கிக் கொள்வோமாக.


SKM ஹாஜா முகைதீன் M.A. Bsc., BT.
 (முன்னால் தலைமையாசிரியர். கா.மு. மேல்நிலை பள்ளி, அதிரை)


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு