திரைகட லோடிய
திரவியம் தேடிய
வகைவழி வந்தவர்
வளைகுடா வாசிகள்
தரைவழித் தேடல்
தரவில்லை திருப்தி
ஒருவழிப் பாதையில்
பெருவெளிப் பறந்து
உளவலிச் சுமந்து
ஊர்வழி நோக்குவர்
பாலையில்
மணல்வெளி எங்கும்
மனவலியோடு
உலவுவர் எனினும்
நிலவொளியில் நனைய
புல்வெளியில் சற்று
மல்லாந்த பார்வையில்
நிலா பார்ப்பதில்
நிம்மதி யுறுவர்
விடி விளக்கை ஏற்றிவைத்து
இரவு வந்துவிட்டிருக்கும்
இவர்
உறவும்
ஊரில் தனித்துவிட்டிருக்கும்
ஒளிர்ந்துகொண்டிருக்கும் நிலவைப்
பலர்
பார்த்துக் கொண்டிருந்தாலும்
அதனுள் பயணித்து
அவளையேப் பார்த்துக்கொண்டிருப்பர்
வானளவு வாழ்க்கையும்
சமமாக - மன
வாட்டமும் இருப்பினும்
நிலாப் பார்ப்பதில்
நிம்மதி யுண்டு
நிலா உலாவ,
வீதிகளில்
நிலவொளி உளவு பார்க்க
களவிக்கு உகந்ததெனக் காதலரும்
அமாவாசை நிலவை
களவுக்குத் தகுந்ததெனக் கள்வரும்
காண்பர்
மேகப் பின்னணியில்
நிலவைப்
பெண்ணெனக் காண்பவர்
மூன்றாம் பிறையை
நெற்றியெனப் பார்த்தால்
முதற் பிறையை
வகிடு எனக் கொள்வர்
அமாவாசையும் அழகுதான்
பெண்
திரும்பி நடப்பதாய்ச் சொல்வர்.
பெள்ரணமிகளைப் பற்றிப்
பிரச்னை ஏதுமில்லை
அமாவாசைகளில்
நிலவிருந்த இடத்தில்
என்ன இருக்கும் என
விஞ்ஞானம் கலக்காத கணிப்பில்
நிலவு விட்டுச் சென்ற வெற்றிடத்தில்
அவளையே வைத்துப் பார்ப்பர்.
சன்னலுக்குப் பின்னாலும்
பேரூந்திலும் வகுப்பறையிலும்
நிலவு பார்ப்பரெனினும்
பாட்டியின் பின்னாலிருந்து
எட்டிப்பார்க்கும் நிலா
அழகின் உச்சம் என்பர்
தேய்ந்தோ வளர்ந்தோ
தினமும் மாறும் நிலவை
பிழையறப் பார்ப்பவர்
பிறையெனப் பார்ப்பர்
பிறரோ
உட்புற வளைவை
ஒட்டிய வயிறெனக் கொண்டு
நிலவு ஏழை யென்றும்
வெளிப்புற வளைவை
முட்டியத் தொப்பை யென்று
நிலவு கொழுத்தது என்றும் காண்பர்
பார்ப்பவர் புத்திக்கேற்ப
வசப்படும் நிலவு,
வாய்க்கும்போதெல்லாம்
நிலாப் பார்த்தல்
அனிச்சையானவர்க்கே
அகிம்சை பிடிக்கும்
அழுத்தும் இம்சைகளுக்கிடையே
நிலாப் பார்த்தலும்
நினைவுகளை
நிலவுக்குள் பார்த்தலும்
வளைகுடா வாசிகளுக்கு மட்டும்
வசப்பட்ட வாழ்க்கை!
Sabeer AbuShahruk


