Scene-1 “மாப்ளெ, இது என்னோட விசிட்டிங் கார்டு...கவர்மென்ட்லெ உனக்கு ஆக வேண்டிய விசயங்களில் எது குறுக்கு வழியிலெ கெடைக்க கஷ்டமா இருக்குதோ உடனே எனக்கு சொல்லு...உடனே முடிச்சி தர்றேன்...டீலிங்குக்கு தகுந்தாப்லெ நாமெ ரேட் பேசிக்கலாம்.”
Scene-2 “நான் முஸ்லீம்தான், அதுக்காக சாமி படம் கல்லா பக்கத்திலெ வச்சிருக்கிறதிலெ என்ன தப்பு? மத்த ஆளுங்க வரணும்னா நான் இப்படி செஞ்சாத்தான் முடியும்.”
Scene-3 “கல்யாணம் பண்ணும்போது பணம் எதுவும் வாங்கலீங்க...ஆனால் மாமனார் கொடுக்கனும்னு சொல்றது எதுக்கு ? அவர் அவருடை மகளுக்குதானே கொடுக்க சொல்றோம்..”.
Scene-4 “வியாபாரத்திலெ ரொம்ப ஞாயம் அநியாயம் பார்க்க முடியாதுங்க அப்படி பார்க்க ஆரம்பிச்சிட்டா லாபத்தை பார்க்க முடியாதுல...”
Scene-5 “நான் செய்றது மார்க்கப்படி தப்புதான்....இப்ப நான் செய்யாட்டி இன்னொருத்தன் செய்யத்தான் போறான்..அதுக்கு நானே செஞ்சிட்டு நாலு காசு பார்க்கலாமே...”
Scene-6 “நம்மல்லாம் எப்ப மாப்ளே படிக்கிறது..நமக்கு தெரிந்த ஒரே வழி பேப்பர் ச்சேசிங்தான்.’
Scene-7 “என் முதலாளி ஒரு கேப்மாரி , அவனுக்கு சின்சியரா வேலைபார்க்கனும்னா நான் ஒன்னும் தியாகி இல்லை...அதனாலே இருக்கும்போதே என்னென்ன திருட்டுத்தனம் செய்யணுமோ அதெல்லாம் செஞ்சி நாலு காசு தேத்தீக்கிட்டாதான் உண்டு’
Scene-8 “நல்லா இருக்கும்போது மட்டும் போட்ட ஆட்டத்தை பார்க்கனுமே....இப்போ பாயிலெ படுத்தபிறகு...உறவு உரிமையெல்லாம் கண்ணுக்கு தெரியுதா...இன்னும் படட்டும்....அப்போதான் புத்திவரும்...”
மேற்குறிப்பிட்ட வசனங்கள் எதுவும் நான் ஏதோ சீரியலில் பார்த்தது...திரைப்படத்தில் உள்ள வசனம் என நினைக்க வேண்டாம். அனைத்தும் நான் பார்த்த, கேட்ட விசயங்கள்.
இப்படி மனிதர்கள் விஷம் கக்க யார் அல்லது என்ன காரணம் என நினைத்திருக்கிறோமா?.
இதன் காரணங்கள் முக்கியமாக எதுவாக இருக்கும். மார்க்கம் சொல்லித்தந்த விசயங்களில் அதிக கவனமின்மை. இன்னும் சொல்லப்போனால் தீர்ப்பு நாளைப்பற்றி கொஞ்சம் கூட நம்பிக்கையில்லை. இருந்தால் இப்படி உலக ஆதாயத்துக்காக மிருக வாழ்க்கை வாழ சப்பைக்கட்டுகள் இருக்காது.
இதுபோல் நேர்வழியில்லாமல் கேள்விப்பட்ட விசயங்கள் இருந்தால் நீங்களும் எழுதுங்களேன்....[கயவர்களை அறியும் முயற்சிதான் - இதுக்கெல்லாம் கேலக்ஸி டேப் பரிசாக கேட்கக்கூடாது ]
ரசனையும் யோசனையும் !
இப்போது மீடியாவின் பங்கு பல விசயங்களில் "தீர்மானிக்கும் காரணி'யாகி விடுகிறது. 2 நாளைக்கு முன் "தினத்தந்தி' பத்திரிகை பார்த்தேன். பார்த்து பல வருடம் ஆகிவிட்டதால் [பிரின்ட் ஃபார்மேட்] பழைய ஞாபகத்தில் இப்படித்தான் இருக்கும் என நினைத்த என் கற்பனைக்கே ஒரு சவால்....வரி விளம்பரங்கள் அனைத்தும் சாலையோர மருந்துக்கடை மாதிரி ஒரே லாட்ஜ் மருத்துவர் மாதிரி இதை வாங்கி சாப்பிட்டால்........ !
இந்த விளம்பரங்களில் மயங்கியவர்கள் பல பேர் இப்போது மருத்துவ மனைகளில் யாராவது ஒரு நல்ல டாக்டருக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கலாம். நிறைய 'மன்மதன்"ஸ் எல்லாம் கண்டதையும் சாப்பிட்டு விட்டு எமர்ஜன்ஸி வார்டில் வேலைபார்ப்பவர்களை ஒழுங்காக சாப்பிடக் கூட விடமாட்டார்கள். எப்படி செய்திப்பத்திரிகைகள் எல்லாம் இப்படி மருந்துவியாபாரிகள் ஆனது என்பதற்கு முதல் காரணம் வாசகர்களின் ரசனை ரொம்பத்தான் மாறிக்கிடக்கிறது.
மருத்துவக் கேள்வி பதில்களில் கூட தனது பெர்சனல் விசயங்களை வெளிச்சம் போட்டு காட்டுவதும், அதற்கு ஒரு டாக்டர் பதில் சொல்வதுபோல் இருப்பதும் ஒரு ட்ரண்ட் ஆகி விட்டது. பேசன்ட்டை பார்க்காமல் டயாக்னாசிஸ் செய்வது எப்படி இந்த டாக்டர்களால் முடிகிறது??? [பெயர், ஊர் எல்லாம் நாமே கற்பனையில போடுறதுதான். அப்படி போட்டாதானே சர்குலேசன் எகிறுது!!! - ஒரு உதவியாசிரியர் செப்பியது இப்படி.
சரி நம் வலைத்தலங்களுக்கு வந்து பார்த்தால்.. சில வலைத்தளங்கள் “பஸ்ஸ்டான்ட் கக்கூஸ்”.. மத / இயக்க சம்பந்தமாக எழுதுவதில் உள்ள வலைத்தளங்கள் மற்ற மதங்களை / இயக்கங்களை / பிடிக்காதவர்களை விமர்சிக்க [திட்ட] மட்டும் ஆரம்பித்தது போல் இருக்கிறது. மற்ற மதங்களைத் திட்டி ஒரு மதம் வளர்க்க முடியாது.
சீரியல் பார்க்கும் பெண்களைத் திட்டிக் கொண்டே சீரியல் பார்க்கும் ஆண்களை என்ன செய்வது??... யாராவது பெண்கள் இதற்கு பதில் சொல்லட்டும்.
சரி, ரசனை மாற யோசனை என்ன?. [அப்பாடா தலைப்புக்கு தகுந்தமாதிரி எழுதவில்லை என என்னை யாரும் குறை சொல்ல முடியாது] யோசனை சொல்வதை வாசகர்களிடம் விட்டு விடுகிறேன் [இதிலேயே தெரியலெ... எனக்கு யோசனை சொல்லத் தெரியலேனு]
குறிப்பு: தலைப்பு கொடுத்தால் எழுதுகிறேன் என்று எழுதி அபு இப்ராஹிம் கொடுத்த தலைப்பில் எழுதியிருக்கிறேன். திட்றதா இருந்தால் என்னை மட்டும் திட்டவும்.
ZAKIR HUSSAIN
இது ஒரு மீள்பதிவு...
இது ஒரு மீள்பதிவு...