கடந்த இரண்டு மாதங்களாக நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்த பாராளுமன்றத் தேர்தல் திருவிழாக் காட்சிகள், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதுடன் ஒரு முடிவுக்கு வந்துள்ளன. தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பு பல்வேறு விதமான கருத்துக்கள் வெளியிடப்பட்டன. பல்வேறு ஊடகங்களிலும் பிஜேபி அணியே வெல்லும் என்று கருத்துக் கணிப்புகள் சொல்லி இருந்தாலும் அது பற்றி பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஆயினும் பரவலாக எதிர் பார்க்கப்பட்ட அல்லது அரசியல் வல்லுனர்களால் சொல்லப்பட்டது என்னவென்றால் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை அமையாது ; இழுபறியாக இருக்கும்; மாநிலக் கட்சிகள் பெரும் வெற்றி பெற்று புதிய ஆட்சி அமைப்பதில் பெரும் பங்கு வகிக்கும்; பிஜேபி அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் மற்ற கட்சிகளின் ஆதரவு தேவைப்படும் ; மூன்றாவது அணி அமையும்; என்றெல்லாம் பல்வேறுவகையான கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன; வெளியாயின.
ஆனால் அனைவரின் கணிப்பையும் தோல்வி அடையச் செய்து பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, 330 க்கு மேலும் பிஜேபி மட்டும் தனித்து அறுதிப் பெரும்பான்மை எண்ணாகிய 272 இடங்களையும் தாண்டி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் பத்தாண்டு காலமாக நாட்டை ஆண்ட காங்கிரஸ் அரசு பதவி விலகி பிஜேபி அரசு அமைய இருக்கிறது. முதலாவதாக வெற்றி பெற்ற கட்சிகளுக்கு நமது நல வாழ்த்துக்களையும் நல்ல எண்ணங்களையும் சிறந்த ஆட்சிக்கான எதிர்பார்ப்புக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

வெளிப்படையாகப் பார்க்கும் போது பாரதீய ஜனதா கட்சி முன்னிறுத்திய மதவெறிக் கொள்கைகள் வென்றது போலத் தோன்றினாலும், பத்தாண்டுகள் ஆண்டுவிட்ட ஒரு கட்சியை மாற்றிப் பார்க்க மக்களின் மனம் இயல்பாகவே விரும்பி இருப்பதும் ஒரு காரணம் என்பதை தள்ளிவிட முடியாது. ஒரு வகையில் பிஜேபியின் வெற்றிக்கு காங்கிரசின் மோசமான ஆட்சியையும் முழுமையான காரணம் என்பதை நடுநிலையாளர்கள் ஏற்கவே செய்வார்கள். காங்கிரஸ் செய்த தவறுகளின் விளைச்சலையே அரசியல் ரீதியில் பிஜேபி அறுவடை செய்து இருக்கிறது. “ In fact, the election results are the expression of anger of people against Congress and their disastrous policies “ என்றார் இடதுசாரி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி. ராஜா.
தேர்தல் பரப்புரை காலங்களில் இன்று பிஜேபியால் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட நரேந்திர மோடி மீது பல புகார்கள் கூறப்பட்டன. பல எச்சரிக்கைகள் விடப்பட்டன. ஐயோ! இவரா! வேண்டாம் என்று பலரும் மக்களை நோக்கி வேண்டுகோள்கள் விடுத்தனர். ஆனால் அவை அனைத்தையும் மீறி இன்று நரேந்திர மோடியின் தலைமையில் புதிய அரசு அமைய இருக்கிறது. ஆனால் இப்படி நரேந்திர மோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காரணத்தாலேயே அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அவர் ஆண்ட குஜராத்தில் சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், அடக்குமுறைகள், படுகொலைகள், சொத்துச் சூறையாடல்கள் ஆகிய குற்றச்சாட்டுகள் மறைந்துவிட்டதாகக் கருதிவிட முடியாது. அந்தக் குற்றச்சாட்டுகள் அப்படியேதான் இருக்கின்றன. ஒருவேளை இப்போது நரேந்திர மோடி இப்போது ஏற்க இருக்கும் புதிய பிரதமர் பொறுப்பின் மூலம் அந்தக் கலங்கங்களைக் களையும் விதத்தில் செயலாற்றினால் அவர் மீது நம்பிக்கை ஏற்பட ஒரு வாய்ப்புள்ளது. தரப்பட்டுள்ள பொறுப்பான பதவிக்கு ஏற்ப அவர் நடந்து கொள்ளவேண்டுமென்று விரும்புவோம்.
இந்த தேர்தல் முடிவுகள் சொல்லும் இன்னொரு விஷயம் என்னவென்றால் 1984 தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் ஆட்சியமைத்த கட்சிகள் தனிப்பெரும் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கவில்லை. பல மாநில உதிரிக் கட்சிகளின் ஆதரவிலும் அமைச்சரவையின் உள்ளிருந்தும் வெளியிலில் இருந்தும் ஆதரவு பெற்றே தந்து ஆட்சியை நடத்தி வந்தது. இதன் மூலம் ஆளும் கட்சி , தான் நினைப்பதை செயல்படுத்த இயலாத நிலைகள் பலமுறை ஏற்பட்டன. அதுமட்டுமல்லாமல் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் மிரட்டல்களுக்கும் ஆளாகி, அமைச்சரவையில் அவர்கள் கேட்கும் துறைகளையும் கொடுத்தே தீர வேண்டிய நிலைமைகளும் ஏற்பட்டன. அது மட்டுமல்லாமல் கூட்டணியில் இருந்த கட்சிகள் ஊழல் முதலிய தவறுகளைச் செய்யும் பொது அவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்க முடியாமலும் கூட்டணி தர்மங்கள் அரசின் கைகளைக் கட்டிப் போட்டன.
ஆனால், இந்த முறை பிஜேபிக்கு மக்கள் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் வலுவைக் கொடுத்து இருக்கிறார்கள். தங்களது கூட்டணியில் இருக்கும் எவரையும் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டுதான் ஆளவேண்டுமென்ற அவசியமில்லாமல் சுதந்திரமான அரசை அமைக்க மக்கள் பிஜேபிக்கு உத்தரவிட்டு இருக்கிறார்கள் என்பது ஒரு ஆரோக்கியமான நிலை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். எந்த நல்ல காரியத்தையும் செய்ய விடாமல் கூட்டணிக் கட்சிகள் முட்டுக் கட்டை போட்டன என்று பிஜேபியும் காரணம் சொல்லி தப்பித்துக் கொள்ள முடியாது.
இந்த முறையும் ஆட்சியமைக்கப் பற்றாக்குறையான பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் பிஜெபிக்குக் கிடைக்குமென்றும் , அந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி பலவித பேரங்களை பேசி சொந்த நலனுக்காகவும் தங்கள் மீது இருக்கும் வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் வகை ஏற்படுத்திக் கொள்ள தமிழகம் உட்பட்ட பல மாநிலங்களில் இருந்தும் அரசியல் வாதிகள் நினைத்து இருந்தனர். ஆனால் யாரிடமும் மண்டியிட வேண்டிய அவசியம் இல்லாமல் பிஜேபி மெஜாரிட்டி பெற்று இருக்கிறது. இவ்விதம் ஒரு பெரும்பான்மையை பிஜேபி பெறாவிட்டால் செல்வி ஜெயலலிதா போன்றோரின் பேரங்களுக்குப் பணிய வேண்டி இருக்கும்; டாக்டர் அன்புமணியை அமைச்சரவையில் சேர்க்க வேண்டி இருக்கும். இப்போது இந்த நிர்ப்பந்தங்கள்- நெருக்கடிகள் - மிரட்டல்கள் எதுவும் தேவை இல்லை என்பது பிஜேபிக்கு ஒரு பெரிய நிம்மதிப் பெருமூச்சாகும் இல்லாவிட்டால் வாஜ்பாய் காலம் போல அவதிப் பட்டு இருக்க நேரிட்டு இருக்கும். இப்படிப்பட்ட நிலைமைகளிலிருந்து நரேந்திர மோடி காப்பாற்றப்பட்டு இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
தேர்தல் கணிப்புகளைச் செய்த பல்வேறு வகையினர் கர்நாடகாவில் பிஜேபிக்கு பெரும் அளவுக்கு இடங்கள் கிடைக்காது என்று வாதிட்டனர். காரணம் அண்மையில்தான் அங்கு சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆகவே இப்போதும் காங்கிரசே அதிகம் வெல்லும் என்று ஆரூடம் கணிக்கப்பட்டது. ஆனால் அந்த ஆரூடம் பொய்யானது. அங்கு பிஜேபி பதினேழு இடங்களில் வென்றது பிஜேபிக்கு இன்ப அதிர்ச்சியாகும்.
அதே போல் பிஜேபி உடைய பெரும்பான்மை பலத்தை உ. பி மற்றும் பீகாரில் அது பெறப்போகும் இடங்களின் எண்ணிக்கைகளின் அளவு உருவாக்கும் என்ற கணிப்பின்படி இவ்விரு மாநிலங்களிலும் மிகப்பெரும் வெற்றியை பிஜேபி வென்றெடுத்துள்ளது. பீகாரைப் பொறுத்தவரை ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாக் கட்சிக்கே அதிக இடங்கள் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டே இடங்களைத்தவிர பாக்கியை பாரதீய ஜனதா அள்ளிச் சென்றது. இந்த இரு மாநிலங்களில் மட்டுமே பிஜேபிக்கு கிட்டத்தட்ட நூறு இடங்கள் கிடைத்துள்ளன.
அதே போல் உ பி போன்ற பெரிய மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் சமாஜ்வாடியும் தனது இடங்களை பிஜேபியிடம் இழந்தது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. உ பி யில் எண்பது இடங்களில் காங்கிரஸ் பெற்றது இரண்டே இடங்கள் மட்டுமே . அவையும் சோனியாவும் ராகுல் காந்தியும் பெற்ற இடங்கள் மட்டுமே.
தலை நகர் டில்லியில் அண்மையில் ஒரு பெரும் எழுச்சி நடத்தியதாக அறியப்பட்டு நாற்பத்தி ஐந்து நாட்கள் மாநிலத்தை ஆட்சியையும் செய்த ஆம் ஆத்மிக் கட்சி , நாடெங்கும் 400 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியது. டில்லியில் சட்டமன்றத்தில் வென்ற ஆம் ஆத்மிக் கட்சியால் ஒரு பாராளுமன்ற இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை. ஒட்டு மொத்த இந்தியாவில் இவர்கள் முன்னணி வகிப்பது நான்கே இடங்கள்தான்.
நாடெங்கும் இப்படி பிஜேபி அலையோ அல்லது மோடி அலையோ வீசி இருந்தாலும் கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பிஜேபி குறிப்பிட்ட வெற்றியை ஈட்ட இயலவில்லை. அங்கெல்லாம் அலைகளின் ஒலி கேட்கவில்லை. அந்த அலை எங்கே போனது என்றும் தெரியவில்லை.
அதேபோல் இடதுசாரிகளும் தங்களின் வழக்கமான தளம் உள்ள மாநிலங்களில் போதுமான அளவு வெற்றி பெற இயலவில்லை. இதற்குக் காரணம் , இடது சாரிகளைப் பொறுத்தவரை காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆகிய இரண்டு பெரிய கட்சிகளையுமே எதிர்த்தார்கள். இரண்டு பெரிய கட்சிகளையும் எதிர்க்கும் அளவுக்கு இடதுசாரிகளுக்கு பலம் இருக்கிறதா என்றால் இல்லை. இதை உணராமல் இரண்டு மலைகளுடன் மோதி தங்களின் வாக்குகளைப் பிரித்து, பிஜேபி வெற்றி பெற உதவினார்கள் என்றே சொல்ல வேண்டும். அத்துடன் இந்த தேர்தலில் மக்கள் எந்த சித்தாந்தங்களையும் விவாதித்து முன்னிலைபடுத்தி வாகளைக்கவில்லை. இதுவும் ஊடகங்கள் ஏற்படுத்திய ஆட்டைக் கழுதையாக்கிய விந்தை.
தமிழகத்தைப் பொறுத்தவரை முன்பு சட்டமன்றத் தேர்தலில் செய்த அதே தவறை திமுக மீண்டும் செய்து ஒரு இடம் கூட வெற்றி பெற இயலாத நிலைக்குத் தன்னைத்தானே தள்ளிக் கொண்டது. கடைசி நேரத்தில் காங்கிரசை கழற்றி விட்டதற்கான விலையை திமுக கொடுத்து இருக்கிறது என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அது மட்டுமல்லாமல் மயிலாடுதுறை போன்ற தொகுதிகளில் கூட்டணியில் இருந்தாலும் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளருக்கு மனப்பூர்வமாக திமுகவினர் வேலை செய்யவில்லை ; வாக்களிக்கவில்லை என்கிற செய்திகளையும் கேட்கிறபோது அவர்களுக்கு இந்த தண்டனை தேவையானதே என்றே கருத வேண்டி இருக்கிறது.
அதே நேரம் திமுகவின் இந்த தோல்வி, அதன் சூரியனின் அஸ்தமனமல்ல. இது போல பல வெற்றி தோல்விகளை சந்தித்தக் கட்சி; பெரும் தொண்டர் பலம் உள்ள கட்சி; மீண்டும் எழுந்து நின்று உதிக்கும் வல்லமையும் வாய்ப்பும் உள்ள கட்சி. சரியாக நடந்து கொண்டால் வரும் சட்டமன்றத்தில் பிரகாசிக்கும் வாய்ப்புள்ள கட்சிதான் திமுக.
நன்கு ஆய்ந்து பார்த்தோமானால் அதிமுகவின் வாக்கு வங்கி அப்படியே உதவி இருக்கிறது. அதிமுகவுக்கு எதிரான வாக்குகள் பலவாறு சிதறி அதிமுகவை வரலாறு காணாத மாபெரும் வெற்றியைப் பெற வழிவகுத்து இருக்கிறது. அத்துடன் தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்தால் போடப்பட்ட 144 தடை உத்தரவும் அதைப் பயன்படுத்தி, பெருமளவில் பணப்பட்டுவாடா நடந்ததையும் வெட்கமின்றி தலைமை தேர்தல் ஆணையரே ஒப்புக் கொண்டார். நாமும் கண்ணால் பார்த்தோம். இந்த வெற்றியின் பின்னால் பணபலம் இருந்ததை மனசாட்சியுள்ளோரால் மறுக்க இயலாது.
அத்துடன் பிஜேபி தலைமையில் தேமுதிக போன்ற அதிமுக எதிர்ப்புக் கட்சிகள் தமிழருவி மணியன் போன்ற அரசியல் முகவர்கள் மூலம் பேரம் பேசப்பட்டு தனி அணியாக உருவாக்கப்பட்டு, அதில் அடிப்படையில் வெட்டுப் பழி குத்துப்பழியாக அதுவரை அரசியல் நடத்திக் கொண்டிருந்த பாமகவும் இணைக்கப்பட்டது. இவர்களுடன் வைகோவுடைய மதிமுகவும் இணைந்து நின்றது. இந்த அணி அமைக்கப்பட்டதன் நோக்கமே அதிமுக மற்றும் பிஜேபியின் இரகசிய உடன்பாட்டின் ஒரு அங்கம் என்று ஒரு கருத்தும் நிலவுகிறது. இப்படி ஒரு அணியை அணையாக அமைத்து அதிமுகவுக்கு எதிரான ஓட்டுக்கள் திமுகவுக்கு விழாமல் தடுப்பதற்காகவே என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இதை நம்பவும் இடமிருக்கிறது.
இருந்தாலும், தமிழக அரசியலில் சில தேவையற்ற தொங்கு சதைகள் வெட்டி வீழ்த்தப்பட்டு இருக்கின்றன. அடிப்படை எதுவுமில்லாமல் அரசியல் கட்சி தொடங்கி, குறிக்கோளே இல்லாமல் கட்சி நடத்தி, கூத்து அடித்துக் கொண்டிருந்த நடிகர் விஜயகாந்தின் கட்சி, வேரடி மண்ணோடு வீழ்த்தப் பட்டு இருப்பது தமிழக அரசியலில் ஒரு மகிழத் தக்க விஷயம். அதே போல் ஒரு திராவிடக்கட்சியாக பரிணமித்து ஒரு இந்துத்வா கட்சியுடன் கூட்டணிவைத்த மதிமுகவும் அடையாளம் தெரியாமல் வீழ்த்தப்பட்டு இருப்பதும் ஒரு நல்ல விஷயமாகவே தோன்றுகிறது. இப்படிப் பட்டியலில் உள்ள தேவையற்ற அரசியல் கட்சிகளை அடையாளம் இல்லாமல் ஆக்கிய தமிழக வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இன்னும் இருக்கும் சிலரையும் வரும் தேர்தல்களில் புறக்கணித்து புறமுதுகிட்டு ஓட வைக்க வேண்டும்.
எப்படியானாலும் ஜனநாயக முறைப்படி வெற்றி பெற்றவர்களின் வெர்றியை அங்கீகரிக்கும் மரபுக்கு ஏற்ப நாமும் அவற்றை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். மக்கள் பெரும் நம்பிக்கையுடன் நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டுமென்ற ஆவலில் ஒரு மாற்றத்தை வேண்டி இவர்களுக்கு வாக்களித்து இருக்கிறார்கள். வெறும் மத நம்பிக்கைகளை மட்டும் வைத்து மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அமைதியைக் குலைக்கும் முயற்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளில் புதிய அரசு ஈடுபடவேண்டும். அதற்கு மாநிலத்தில் வெற்றி பெற்றுள்ள அதிமுக அரசு உறுதுணையாக இருக்க வேண்டும். வெற்றி பெற்ற இருவரும் ஒத்துழைத்து இந்த மாநிலத்துக்கான மின்சாரம், நீர்-ஆதாரம், மீனவர்கள் பிரச்னைகள், இலங்கை தமிழர், கச்சதீவு உட்பட்ட பிரச்னைகளில் ஒன்றுபட்டு மக்கள் நலமுடன் வாழ எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.
வளர்ச்சியின் நாயகன் என்று வடிவமைக்கப்பட்டுத்தான் பா.ஜ.க.பிரதம வேட்பாளரை முன்னிறுத்தினார்கள். இந்த வளர்ச்சியின் நாயகனின் முன் அவரது புதிய அரசுக்கு பல சவால்கள் காத்து இருக்கின்றன. புதிய அரசு எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் யாவை என்று தனிப்பதிவாக எழுதுவோம். இப்போது இந்திய தேர்தல் நடைமுறை அங்கீகரித்த வெற்றியை நாமும் ஏற்போம். அன்பும் அமைதியும் நிலவும் இந்த நாட்டில் தொடர்ந்து அமைதியும் சகிப்புத்தன்மையும் சகோதரத்துவமும் வேற்றுமையில் ஒற்றுமையும் நிலவச் செய்ய இறைவனை வேண்டுகிறோம்.
அதிரைநிருபர் பதிப்பகம்