Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label தியாகம். Show all posts
Showing posts with label தியாகம். Show all posts

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 4 11

அதிரைநிருபர் பதிப்பகம் | July 31, 2013 | , , , ,


அல்லாஹ்வின் திருப்பெயரால்..

முந்தைய அத்தியாயத்தில் ஈமானில் உறுதிமிக்க தியாகச் செம்மலாகத் திகழ்ந்த அன்னை ஹதீஜா (ரலி) அவர்களைப் பற்றிய வரலாற்றுச் சம்பவத்தைங்களைப் பார்த்தோம். அதுபோல் மற்றுமொரு ஓர் ஈமானியத் தாயின் உறுதியான உயிரோட்டமான ஈமானைப் பற்றிய ஒரு சில வரலாற்றுச் சம்பங்களைப் பார்ப்போம்.

நபி(ஸல்) அவர்களுக்கு முன்னால் நம்முடைய தலைச்சிறந்த மூதாதையர்களில் முன்னணியில் இருப்பவர்கள் தான் நம் அருமை நபி இபுறாஹீம்(அலை) அவர்கள். அவர்களின் மனைவி அன்னை ஹாஜரா(அலை) அவர்களின் வயது முதிர்ந்த பருவத்தில் அந்த தம்பதியர் அவர்கள் இருவருக்கும் இஸ்மாயில்(அலை) என்னும் அழகிய குழந்தை பிறக்கிறது. (மேலும் பார்க்க அல்குர்ஆன் 14:39) தவமாய்த் தவமிருந்து கிடைத்த அந்த பொக்கிஷமாக நபி இஸ்மாயில்(அலை), இவர்களின் வழித்தோன்றலில் வந்தவர்கள் தான் நம்முடைய ரஹ்மத்துலில் ஆலமீன் அண்ணல் நபி முஹம்மது (ஸல்) அவர்கள். நபி இபுறாஹீம் (அலை) அவர்களின் வழியைப் பின்பற்றுமாறு அல்லாஹ் நபி(ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடுகிறான் (மேலும் பார்க்க அல்குர்ஆன் 3:95)

நபி இபுறாஹீம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ்வின் கட்டளை வருகிறது, அன்னை ஹாஜரா (அலை) அவர்களையும், பால்குடிப் பச்சிளம் குழந்தை நபி இஸ்மாயில் (அலை) அவர்களையும் மக்காவின் மானுட புழக்கம் இல்லாத அந்த வெட்டவெளி பாலைவனத்தில் விட்டு விட்டுச் செல்லும்படி அல்லாஹ் கட்டளையிடுகிறன். நபி (இபுறாஹீம் அலை) அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்தவர்களாக எவ்வித மறுதலிப்பின்றி அன்றைய மக்கா பிரதேசத்தை விட்டு செல்ல ஆரம்பத்து விடுகிறார்கள். அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் நபி இபுராஹீம் (அலை) அவர்களிடம் கேட்கிறார்கள் “பச்சை பயிர்கள் அற்ற இந்த வரண்ட பூமியில் என்னை விட்டுவிட்டு எங்கே செல்கிறீர்கள்” இபுறாஹீம் அலை) அவர்களிடமிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. அன்னை ஹாஜரா (அலை) மீண்டும் “அல்லாஹ் கட்டளையிட்டானா?” என்றும் கேட்கிறார்கள், அதற்கு இபுறாஹீம் (அலை) அவர்கள் “ஆம் அல்லாஹ் தான் இப்படி விட்டு விட்டுப் போகச் சொன்னான்” என்று பதிலுரைத்தார்கள்.

உடனே அந்த ஈமானியத் தாயிடமிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் இஸ்லாமிய வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவைகள். “அப்படியானால் அல்லாஹ் எங்களை கை விடமாட்டான்” என்று தன்னுடைய ஈமானிய உறுதியை கியாம நாள் வரை மக்களும் சொல்லும் விதமாக அந்த தியாகப் பெண்மணி அன்னை ஹாஜரா(அலை) அவர்கள் சொன்னார்கள். பின்னர், அல்லாஹ்வே அன்னை ஹாஜராவுக்கும், நபி இஸ்மாயீலுக்கும் (அலை) உணவளித்தான். ஸஃபா-மர்வா மலைக் குன்றுகளுக்கு இடையே அன்னை ஹாஜரா அவர்கள் தண்ணீருக்காக அங்குமிங்கும் ஓடினார்கள், அல்லாஹ் ஜம்-ஜம் என்ற நீரூற்றை வரவைத்து, இவ்வுலக இறுதி நாள் வரை அன்னை ஹாஜராவின் ஈமானை ஞாபகப்படுத்தும் விதமாக செய்துள்ளான். (மேலும் பார்க்க புகாரி:3364 Volume :4 Book :60)

அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் அல்லாஹ் மேல் வைத்திருந்த நம்பிக்கை, அவர்களின் ஈமானிய உறுதியில் சிறிதளவேனும் நம்மிடம் ஈமானிய உறுதி அல்லாஹ் மேல் முழு நம்பிக்கையாக இருக்கிறதா என்பதை சிந்திக்க வேண்டும். 

அல்லாஹ்வின் தீனை எத்திவைக்க இஸ்லாமிய பிரச்சாரத்திற்காக ஒரு ஆண் வேறு ஊருக்கு செல்ல நினைத்தால், நம் தாய் தந்தையர்கள், மனைவிமார்களிடம் அன்னை ஹாஜரா ஈமானிய உறுதியுடன் சொன்னது போன்ற வார்த்தையை எதிர்ப்பார்க்க முடியுமா? நபி(ஸல்) அவர்களின் அருமை மனைவி அன்னை ஹதீஜா (ரலி) அவர்கள் சொன்ன ஆறுதல் வார்த்தைகளைப் போன்று நாம் செவியுற முடியுமா?

பொருளாதாரத்தில் இலட்சங்கள் செலவு செய்து கடமையான ஹஜ்ஜுக்கும், உம்ராவுக்கு செல்கிறோம், அங்கே ஜம்-ஜம் நீரையும் பருகுகிறோம் அதனை ஊரில் இருக்கும் சொந்தங்களோடு பகிர்ந்து கொள்ளவும் எடுத்து வருகிறோம், அந்த தருணத்தில் ஈமானிய தாய் அன்னை ஹாஜரா அவர்கள் செய்த தியாகத்தை எண்ணி அவர்கள் பட்ட கஷ்டத்திற்காக என்றைக்காவது நாம் கண்ணீர் சிந்தியிருப்போமா? தன்னுடைய ஈமானின் உறுதியோடு தன் மகனின் உயிரைக் காப்பாற்ற போராடிய போராட்டத்தால் கண்டெடுத்த ஜம்-ஜம் தண்ணீரை ஒரு புனித நீராக மட்டுமே காண்கிறோமே, அதை அல்லாஹ்வுக்காக செய்த தியாகத்தின் ஒரு அத்தாட்சியாக நாம் கண்டு அன்னை ஹாஜரா (அலை) அவர்களின் ஈமானிய உறுதியை நினைவு கூர்ந்து நம்முடைய ஈமானை  வலுப்படுத்த முயற்சித்திருப்போமா?

ஈமானைச் சோதனை செய்து பார்க்க நம்முடைய சமுகத்தின் முன்னோடி இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு மீண்டும் அல்லாஹ்வின் கட்டளை வருகிறது, தன்னுடைய மகனை அல்லாஹ்வுக்காக அறுத்து பலியிட வேண்டும் என்ற கட்டளை வருகிறது.

வயது முதிர்ந்த பருவத்தில் கிடைத்த பொக்கிஷம், நீண்ட காலம் தன் மனைவியையும், மகனையும் பிரிந்திருந்தார்கள் அல்லாஹ்வின் தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள். தன்னுடைய மகனை அறுத்து பலியிட தயாராகிறார்கள் தந்தை இப்றாஹீம் (அலை) அவர்கள், தன் அருமை மகன் இஸ்மாயிலிடம் கேட்கிறார்கள், “அல்லாஹ் உன்னை அறுத்து பலியிட கட்டையிட்டுள்ளான் என் அருமை மகனே உன்னுடைய நிலை என்ன?” அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் “எனதருமை தந்தையே அல்லாஹ் ஏவியதை நீங்கள் செய்யுங்கள், என்னை பொறுமைசாலியாக காண்பீர்கள்” என்று தன்னுடைய ஈமானின் உறுதியை உலகுக்கு காட்டிய முன்மாதிரி தியாகத்தின் சுடராகத் திகழ்ந்தார்கள் இஸ்மாயீல் (அலை) அவர்கள்.

நம்முடைய பிள்ளைகள் மார்க்கச் சூழல் கல்வியோடு உலக கல்வி படிக்க அரபு மதர்ஸாவோடு ஒன்றிணைந்த பள்ளிக் கூடத்திலோ அல்லது வெளியூரிலோ அல்லது வெளிநாட்டிலோ படிக்க வைக்க வேண்டும், குறைந்தபட்சம் இந்த தியாகத்தை செய்ய நாம் பல முறை யோசிக்கிறோம், மார்க்க கல்வியை கற்கப்போகும் அந்த பிள்ளையின் எதிர்காலம் என்னவாகும் என்கிற ஒருவித குழப்பத்தோடு தள்ளாடுகிறோம். ஆனால், யூத கிருஸ்தவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வித் திட்டமான இந்த அற்ப உலக கல்விக்காக கண்டம் விட்டு கண்டம் தாண்டி படிக்க வைக்க உடனே முடிவு செய்து தன் பிள்ளையின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று நம்பி அனுப்பி வைக்கிறோமே, மார்க்க கல்வியோடு உலக கல்வி பயிலப்போகும் நம் பிள்ளையின் எதிர்காலத்தை அல்லாஹ் சிறப்பாக்கி வைப்பான் என்ற நம்பிக்கை ஏன் நம்மிடன் உறுதியாக வர மறுக்கிறது?

எத்தனை ஆடுகள், மாடுகள் உணவுக்காவும், உலுஹியாவுக்காகவும் அறுத்திருப்போம்? எத்தனை விதமான பொட்டலங்களாக அந்த கறியினை பங்கு வைத்திருப்போம்? அவன் இத்தனை ஆடு / மாடு அறுத்திருக்கிறான், நாம் அதைவிட இரண்டு கூடுதலாக அறுக்க வேண்டும், அவன் மாடு கொடுக்கிறான், நான் ஒட்டகம் கொடுக்க வேண்டும் என்று மனிதர்களுக்காக போட்டி போடுகிறோமே, என்றைக்காவது அந்த தியாகங்கள் செய்த தாய் தந்தையரான இபுறாஹீம் (அலை) ஹாஜரா (அலை) அவர்களின் அருமை மகனார் இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் ஈமானிய உறுதியையும் அவர்கள் அல்லாஹ் மேல் வைத்திருந்த முழு நம்பிக்கையையும் ஞாபகப்படுத்திக் கொண்டு ஆடு / மாடு / ஒட்டகம் அறுத்து பங்கிட்டு வைத்திருக்கிறோமா? அதன் மூலம் நம்முடைய ஈமானை உறுதிப்படுத்த முயற்சி செய்திருப்போமா? பங்கு வைத்த கறியில் பற்றாக்குறை என்பதற்காக கடையில் கறி வாங்கி உலுஹிய்யா என்று அல்லாஹ்வை ஏமாற்றி மனிதர்களை திருப்திபடுத்தும் நிலையில் அல்லவா நம்முடைய ஈமான் பலவீனமாக உள்ளது என்பதை என்றைக்காவது சிந்தித்திருப்போமா?

அல்லாஹ்வின் கட்டளையை நம்பி ஈமானிய உறுதிமிக்க அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் போன்றவர்கள் வளர்ப்பில் தான் ஈமானில் உறுதிமிக்க பொறுமைசாலியான இஸ்மாயீல் (அலை) அவர்களை அல்லாஹ்வின் உதவியால் வளர்த்தெடுக்க முடிந்தது. அல்லாஹ்வின் கட்டளைப்படி நடக்கும் ஈமானில் உறுதிமிக்க தாய் தந்தையின் துஆ மற்றும் அவர்களின் வளர்ப்பால் வளர்ந்த பிள்ளைகள் பொறுமைசாலியாக இருந்து இஸ்லாத்திற்காக தியாகம் செய்யும் பிள்ளையாக அல்லாஹ்வின் உதவியால் வாழ முடியும், இதுவே நாம் இந்த அத்தியாயத்தில் பெறும் படிப்பினை.

தந்தை, தாய், மகன் ஆகியோரின் ஈமானில் நிலைத்த உறுதிக்கு முன்மாதிரியான இப்றாஹீம் (அலை), அன்னை ஹாஜரா (அலை) இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் வாழ்விலிருந்து படிப்பினை பெற்று நம்முடைய ஈமானை உறுதி படுத்த முயற்சி செய்வோம். நம் சந்ததியரை ஈமானிய உறுதியுடன் இறுதிநாள் வரை நிலைத்திருக்க பக்குவப்படுத்துவோம். அல்லாஹ் நம் எல்லோரையும் ஈமானில் உறுதி மிக்கவர்களாக ஆக்கி அருள்புரிவானாக.
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
M தாஜுதீன்

குறிப்பு : கட்டுரையில் மேலும் பார்க்க என்று அடைப்புக்குறிக்குள் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் எண்கள் மட்டும் இடப்பட்டிருக்கும் நோக்கம் நீங்களும் தேடியெடுத்து அல்குர்ஆனையும் ஹதீஸ் களையும் புரட்டிப் பார்த்து அறிய வேண்டும் என்பதற்காகவே.

முதுமை என்பது ஒரு குழந்தைப் பருவம்! 9

அதிரைநிருபர் | June 22, 2011 | , , ,

என் பெற்றோர் என்னைச் சந்திக்க வந்துவிட்டு, ஒரு வியாழக்கிழமை அன்று ஊருக்குத் திரும்பிச் செல்ல ஆயத்தம் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களை விடைகொடுத்து அனுப்புவதற்காக நாங்கள் விமான நிலையத்திற்குச் செல்ல ஆயத்தமானோம். உண்மையில், அவர்கள் ஊருக்கு விமானத்தில் திரும்பிச் செல்ல இருக்கிறார்கள் என்பது, அவர்களுக்குத் தெரியாது. என் பெற்றோர், அதுவரையில் விமானப் பயணமே செய்ததில்லை! எனவே, இம்முறை விமானப் பயணத்தின் சுகானுபவத்தில் அவர்கள் திளைக்கட்டும் என்று முடிவெடுத்து, அவர்களுக்கான இருக்கையை உறுதிப்படுத்திவிட்டுத்தான், என் தந்தையாரிடம் விமானப் பயணச்சீட்டை நீட்டினேன்.

என் தந்தையின் முகத்தில் பளிச்சிட்ட வியப்பையும் ஆனந்தத்தையும் கண்டு மகிழ்ந்த நான், விமானம் பறக்கும் உயரமென்ன, அதைவிடப் பன்மடங்கு உயரப் பறந்தேன்! பள்ளிச் சிறுவன் ஒருவனைப்போல், அவர் தான் எடுத்துச் செல்லவேண்டிய பொருள்களை ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக்கொண்டிருந்ததும், தனது சாமான்களை ஏற்றிக்கொண்டு உருட்டிச் செல்லும் 'ட்ராலி'யை நகர்த்திப் பார்த்ததும், நாங்கள் விமான நிலையத்தை அடைந்த பின்னர் பயணிகளின் பரிசோதனைக்காகக் காத்திருந்ததும், தனக்குச் சாளர இருக்கை (Window seat) கேட்டுப் பெற்றதும் ஆகிய அவருடைய ஒவ்வொரு அசைவும் என்னைக் குதூகலிக்கச் செய்தது.

இறுதியாக, எங்களுக்கு விடைகொடுத்துவிட்டு விமானத்தில் ஏறும் நேரத்தை அடைந்தபோது, என்னை நோக்கி வந்த அவருடைய முகத்தைப் பார்த்தேன்; அவர் கண்கள் பனித்தன! "Thanks my dear son" என்று அவர் கூறியபோது, அவருடைய அதரங்கள் துடித்தன! அவருடைய நன்றிக்கு ஆயிரம் பொருள்கள் கூறலாம்! நான் செய்ததோ, ஒரேயொரு உதவிதான். அதன் பயனை உணர்ந்த அந்தத் தந்தையின் உள்ளமோ, அதற்காக அயிரமாயிரம் நன்றிகளை அள்ளித் தந்துகொண்டிருந்தது!

அவர் எனக்கு நன்றி கூறியபோது, எனது அந்தச் சாதாரண உதவிக்காகத் தந்தையிடமிருந்து இத்துணை உணர்வுகளின் வெளிப்பாடா என்று வியந்து நின்றேன்! "எனக்கு ஏனப்பா இவ்வளவு நன்றிப் பெருக்கு?" எனக் கூறி எனது தாழ்மையை வெளிப்படுத்தினேன். அடுத்த வினாடியில், எனது கடந்த கால வாழ்க்கையின் எல்லா விதமான நிகழ்வுகளும் என் இதயத்தில் படங்களாக விரிந்தன:

நாம் குழந்தைகளாக இருந்தபோது, பெற்றோர் நம்முடைய எத்தனைக் கனவுகளை நனவுகளாக்கினர்! அவர்களின் பொருளாதார நிலைபற்றி அறியாமல், நாங்கள் கிரிக்கெட் மட்டை வாங்கிக் கேட்டோம்; வாங்கித் தந்தார்கள். விதவிதமான ஆடைகள், விளையாட்டுச் சாதனங்கள் எல்லாம் வாங்கித் தந்தார்கள். புதுப்புது இடங்களைக் கண்டு களிக்கச் செய்தார்கள். அவர்களின் பொருளாதார வசதியைப்பற்றி எங்களுக்கேது கவலை? எங்களுக்கு எங்கள் ஆசைகள் நிறைவேறவேண்டும்; அவ்வளவுதான். அவற்றை நிறைவேற்றித் தருவதற்காக அவர்கள் என்னவெல்லாம் தியாகங்கள், அர்ப்பணிப்புகள் செய்தார்கள் என்பது பற்றியெல்லாம் நாங்கள் சிந்தித்துப் பார்த்தோமா? அல்லது, அவர்கள் நிறைவேற்றித் தந்த எங்கள் விருப்பங்களுக்காக எப்பொழுதாவது அவர்களுக்கு நாங்கள் நன்றி சொன்னோமா?

இது போன்றே, இன்று நாங்கள் எம் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக, அவர்களைத் தரமான பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைக்கிறோம். அதற்கான செலவுகளைக் கணக்குப் பார்ப்பதில்லை. அவர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து, நம்மைப்பற்றிப் பெரிதாக எண்ணிக்கொள்ளும் அதே வேளை, நம்மை உயர்நிலையில் ஆக்க நம்முடைய பெற்றோர்கள் என்னவெல்லாம் தியாகங்கள் செய்திருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கத் தவறிவிடுகின்றோம்!

என் சிறு வயதில் என் பெற்றோர் என்னிடம் கேட்ட பல கேள்விகளுக்குப் பொறுமையில்லாமல் பதில் சொல்லியிருக்கிறேன். அப்போதெல்லாம், அவர்கள் என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், இப்போது என் மகள் கேட்கும் கேள்விகளுக்கு நான் மிகவும் அடக்கமாகவும் அமைதியாகவும் பதில் கூறுகின்றேன். இப்போதுதான் நமக்கு உணர்வு வருகின்றது, முதுமை என்பது மற்றொரு குழந்தைப் பருவமாகும் என்று. எனவே, நாம் நம் குழந்தைகளைப் பாசத்துடன் பராமரிக்கும் விதத்திலேயே நம் பெற்றோர்களையும் முதியவர்களையும் நோக்கவேண்டும்.

நம் குழந்தைகள் வந்து நம்மிடம் கேள்விகள் கேட்கும்போது, செய்தித்தாளைப் படித்துக்கொண்டிருக்கலாம். அப்போது, அவர்களின் முகத்தை நோக்கிக் கனிவாக பதில் கூறுவதற்குப் பகரமாக, ஒரே வார்த்தையில் பதில் கூறி அவர்களை விரட்டிவிடக் கூடாது.

"Thanks!" என்ற சொல்லைக் கூறி, என்னை இவ்வளவு தூரம் சிந்திக்கச் செய்துவிட்ட என் தந்தையை, அவருக்கு இன்பத்தைத் தரும் இந்தப் பயணக் கனவை நனவாக்கிக் கொடுக்க இவ்வளவு நாட்கள் காத்திருக்க வைத்துவிட்டேனே என்ற குற்ற உணர்வால் கூனிக் குறுகி நின்றேன் நான். எனக்கு நன்றாகத் தெரியும், அவர்கள் என்னை உயர்த்தி வைத்துப் பார்ப்பதற்காக என்னவெல்லாம் தியாகங்கள் செய்திருப்பார்கள் என்று. எஞ்சியிருக்கும் நாட்களில் அவர்களின் எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுப்பேன் என்று இவ்வேளை நான் எடுக்கும் உறுதிப்பாடு நிலைத்திருக்கவேண்டும், அவர்களின் மரணத்தின் பின்னரும்!

அவர்கள் முதுமையை அடைந்துவிட்டதால், அவர்களின் இதய வேட்கைகளைத் தியாகம் செய்துவிட வேண்டும்; அவர்களின் பேரப்பிள்ளைகளின் பராமரிப்பில் தங்கள் எஞ்சிய காலத்தைக் கழிக்கவேண்டும் என்பது கருத்தன்று. அவர்களுக்கும் ஆசைகள் இருக்கத்தான் செய்யும்! எனவே, உங்கள் பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுங்கள்! அவர்கள் விலைமதிப்பற்ற சொத்தாவர்!

'Human Relations' என்பது பற்றிய கருத்தாய்வு நிகழ்ச்சி ஒன்றில், Indian Institute of Technologyயில் பணி புரியும் திரு வி. பாலசுப்ரமணியன் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவிலிருந்து.

--அதிரை அஹ்மது


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு