டிஜிட்டல் கேமரா இன்றைய காலகட்டத்தில் சாதாரணமாக அனைவரது கையிலும் இருக்கிறது முந்தைய காலங்களைப் போல் நிறைய செலவழித்து ஃபிலிம் வாங்கி, அதில் போட்டோ எடுக்கும்பொழுது இது சரியா வரவேண்டுமே என்ற புலம்பல்களெல்லாம் இன்றைய சூழலில் தேவை இல்லை. போட்டோ எடுத்ததும் உடணடியாக LCD / LED Screen-னில் பார்த்துவிட்டு சரி இல்லை என்றால் மறுபடியும் ஃபோட்டோ (இஷ்டத்துக்கு) எடுத்து தள்ளலாம் பெரும்பாலான செல்போன்களில் கூட இந்த வகை கேமரா வந்துவிட்டது.என்பதை சென்ற பதிவிலும் பார்த்தோம்.
இந்த டிஜிட்டல் கேமரா எந்த அடிப்படையில் இயங்குகிறது என்பதை பற்றி கொஞ்சம் விலா வாரியா பார்ப்போம் (அது என்னங்க விலாவாரியா ) பொதுவாக கேமராவில் இருக்கும் லென்ஸை எப்படி பயன்படுத்துவது ஜூம் செய்வது போன்ற விவரங்களை பிறகு நேரம் கிடைக்கும்போது தனிப் பதிவாக பார்த்துக்கொள்வோம் (இப்படியே சொல்லிகிட்டே கடத்திடுவோம் ஏன்ன இதுவும் ஒரு ட்ரென்டுதானுங்க) தற்போது டெக்னிக் விஷயத்தை மட்டும் தெளிவாக பார்ப்போம்.
ஒளியானது லென்ஸ் மூலம் காமிராவிற்குள் சென்றதும் அங்கு என்ன நடக்கிறது என்பதை முதலில் பார்ப்போம்.

டிஜிட்டல் கேமராவில் ஃபிலிம் இருக்கும் இடத்தில் ஒரு செவ்வக வடிவில் சில்லு அதாங்க "சிப்பு"(இந்த chip தாங்க பிலிமுக்கு வச்சது ஆப்பு) ஒன்று இருக்கும். அதில் நெருக்கமாக பல வித ஒளியை உணரும் லைட் சென்சிடிவ் புள்ளிகள் இருக்கும். இவற்றை ஆங்கிலத்தில் பிக்சல் (pixel) என்று சொல்வார்கள் இது கேமராவிற்கு கேமரா மாறுபடும்.
இவற்றில் ஒளி பட்டால் அதை மின்னூட்டமாக (charge) மாற்றும். இந்த புள்ளிகள், சி.சி.டி. என்ற மின்னூட்டமாக மாற்றும் சாதனங்கள் லென்ஸ் வழியே விழும் பிம்பம் ஃபிலிமில் விழுவது போலவே மேற்சொன்ன சிப்பிலும் விழும். இந்த புள்ளிகள் அருகருகே இருப்பதால், பிம்பம் ஏறக்குறைய பிலிமில் இருப்பது போலவே இருக்கும். 5 மெகா பிக்சல் என்றால் சுமார் 50 லட்சம் புள்ளிகள் என்று அர்த்தம் இதை மிகச் சிறிய அளவில் வைத்திருப்பதால் படம் நன்றாகவே வரும். 1 மெகா பிக்சல் அல்லது 2 மெகா பிக்சலில் 10 லட்சம் அல்லது 20 லட்சம் புள்ளிகள் இருப்பதால், கொஞ்சம் தெளிவில்லாமல் வரும். பிக்சல் அளவு அதிகரிப்பதைப் பொருத்தே படத்தின் நுணுக்கமும் தெளிவும் கூடிக்கொண்டே போகும் (கேமரா வாங்கும் போது பிக்சல் கூடுதல் உள்ள கேமரவா பார்த்து வாங்க வேண்டும் அதே நேரத்தில் அதற்குண்டான விலையையும் கொடுக்கனும் )
இறைவன் நமக்கு அளித்த கண்களில் மிக மிக நுணுக்கமான 80 லட்சம் புள்ளிகள் இருக்கும் சில்லை விட சிறிய கண் திரையில் ஆட்டோமேடிக் லென்ஸ், ஒளி அதிகமானால் அல்லது குறைந்தால் சமாளிக்கும் திறமை, நிறம் அறிதல் என பல வகை விஷயங்களை செய்கிறது. நம் உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளுமே சிறப்பானவை என்றாலும் மூளையும் கண்ணும் மிகவும் சிறப்பான அதேவேலை மிகவும் சிக்கலானவை. அதன் அருமை இம்மாதிரி நாம் செயற்கையாக செய்யும் பொருள்களின் விவரங்களைப் பற்றி யோசிக்கும் பொழுதும் வாசிக்கும் பொழுதும் புரிய வரும்!

வீடியோ modeல், ஒரு விநாடிக்குள்24 இருந்து 25 அல்லது 30 போட்டோக்கள் எடுக்கப்பட்டு அவை அனைத்தும் சேமிக்கப்படும். ஒரு போட்டோ எடுத்து உடனே சேமித்து எல்லா மின்னூட்டத்தையும் பூஜ்யம் ஆக்கும். உடனே அடுத்த போட்டோ, சேமிப்பு, காலி சிலேட் இப்படி ஒரு வினாடிக்கு 25 முறை இந்த செயல் நடக்கும் (கவனிக்கவும் வினாடிக்கு 25 முறை இந்த வேலை நடக்கும் )
இதுவரைக்கும் டிஜிட்டல் பத்தி கொஞ்சம் விளங்கி கொண்டோம் அப்படியோ கலர் எப்படி வருகின்றது என்பதையும் கொஞ்சம் கலர்ஃபுல்லா பார்த்து விடலாம்.
நம்ம கண்ணுக்கு தெரியும் நிறங்கள் அனைத்தையும் சிவப்பு, பச்சை, நீலம் என்ற மூன்று வகை நிறங்களை வெவ்வேறு அளவில் கலந்து 'உருவாக்க முடியும். இதை ஆங்கிலத்தில் Red, Green, Blue என்றும் இதை சுருக்கமா RGB என்றும் சுருக்கமா சொல்வார்கள். பொதுவாக காமிராவில் ஒரு பொருளை போட்டோ எடுக்கும் பொழுது அதன் ஒவ்வொரு பிக்சலிலும் இவ்வளவு சிவப்பு இவ்வளவு பச்சை இவ்வளவு நீலம் என்ற விவரம் முழுதும் பதிவாக வேண்டும். அதை எப்படி செய்வது?
இந்த புள்ளிகள் இருக்கும் சில்லில் ஒவ்வொரு புள்ளிக்கும் மேல் சிவப்பு அல்லது பச்சை அல்லது நீல நிறக் கண்ணாடி புள்ளியின் அளவே இருக்கும். ஒரு சிவப்பு கண்ணாடிக்கு ஒரு நீலக் கண்ணாடியும் இரண்டு பச்சை நிறக் கண்ணாடிகளும் இருக்கும்.
இதனால் நாம் ஒரு புள்ளி என்பது அங்கு நான்கு புள்ளிகளால் உணரப்படும் இவை அனைத்தையும் சேர்த்தால்தான் அந்தந்த புள்ளியில் இருக்கும் உண்மையான நிறம் வந்துவிடும் (இந்த புள்ளிகளுக்கும் அந்த மலையாள புள்ளிகளுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது )
கலர் என்றதும் நினைவுக்கு வருது நாம் காணும் கனவுகள் யாவும் கருப்பு வெள்ளைதானாம் யாருக்கும் கலர் கனவுகள் வராதாம்! அப்படி யாராவது சிவப்பு கலர் புடவை உடுத்திக்கொண்டு என் கனவில் "பிரியாமானவர்களைக்" கண்டேன் என்று சொன்னால் அது மூளையின் கற்பனை திறனே தவிர வேறெதுவும் கிடையாது அதுபோல் நாம் பார்க்கும் அனைத்து பொருட்களும் நம் விழித்திரையில் தலை கீழாகவே விழும் அதை நேராக சரி செய்து கொள்வது நமது மூளையின் வேலை கேமாராவில் நாம் பிடிக்கும் படங்களும் பிலிம் அல்லது டிஜிட்டல் சிப்பில் தலைகிழாகவே பதிவாகும்.
அடுத்த பதிவிலும் கலர் பார்க்கலாம் ! (1985-95 கலர் அல்ல)…
தொடரும்
Sஹமீது