நேற்றைக் கிழித்து
நினைவுக் கூடையில் வீசி
காற்றைக் கிழித்து
கனவு வெளியில் பற!
பறப்பது எங்ஙனம்?
றெக்கை விரிக்கும் பறவைக்கு
காற்றில் மிதக்க
எடை குறைவே
விடை
கனவை விரித்துப் பறப்பதற்கு
கவலை அழுத்தாத
கனம் குறைந்த
மனம்.
எந்திரப் பறவைக்கே
இயக்க,
புற சக்தி
எண்ணப் பறவைக்கோ
மயக்கும்
அக யுக்தி
காற்றின் மூலக்கூறும்
நாம்
உராய்ந்து பறக்க
உற்சாகமாய்
நமை வாழக்கூறும்.
பறக்க
இறக்கைகள
வளர்க்க வேண்டியதில்லை
வாய்த்தாலே போதும்
பூமித் தாயை
மூன்று பரிமாணங்களில்
கண்டு களிக்கயில்
எங்கும் வருடிக் கடக்கும்
எம் நிழல்.
கூர் புத்தியால்
குழப்பங்களைக் கீறி
குடைந்து குடைந்து பறந்து
ஈர்ப்பு விசை
இழந்த வெளியில்
இளைப்பாறலாம்,
மிதந்து கோண்டே
சுமை என்றால்
நடக்காத பொழுதினில்
கால்களும்
பறக்காத போதினில்
சிறகுகளும்கூட சுமைதான்
ஒற்றையாய்ப் பறப்பது
சுமைகளிலிருந்து
விடுதலை என்றல்ல;
இனியும் சுமக்க
இனிய சுமை வேண்டியத்
தேடலே!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்