காதிர் முகைதீன் தந்த கொடைகள் எண்ணிலடங்கா! மருத்துவர்கள், பொறியியல்வல்லுநர்கள், வழக்குரைஞர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், தொழில்வல்லுநர்கள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், விளையாட்டுவீரர்கள் என்று பற்பலர். அவர்கள் காதிர் முகைதீனில் முழு வடிவம் பெறாவிட்டாலும், அதற்கான கரு அங்கேதான் உருவானது.
காதிர் முகைதீன் தந்த கொடைகளில் ஒன்று தான் ஹாஜி எம். முகம்மது தாஹா. BA, B Ed., தனது இனிமையான கணீரென்ற குரலில் அழகாகப் பாடுவார் மாணவர் தாஹா. துவக்கப் பள்ளியில் படிக்கும் காலம் தொட்டே இறை வணக்கக் கூட்டங்களில், சூரா பாத்திஹா, இறை வணக்கப் பாட்டு, நாட்டுப் பண் இவற்றை மொழிவார். இது உயர் நிலைப் பள்ளியிலும் தொடர்ந்தது. உயர் நிலைப் பள்ளியில் பேச்சுப் போட்டியிலும் கலந்துகொள்வார். படிக்கும் காலங்களிலேயே கவி படைக்கும் ஆற்றல் அவரைக் கவ்விக் கொண்டிருந்தது. தான் எழுதிய கவிதைகளை இசையோடு பாடுவார் கவிக்குயில் தாஹா.காதிர் முகைதீன் உயர் நிலைப் பள்ளியில் இவரோடு படித்தவர்கள், வழக்கறிஞர் மறவன் பிள்ளை, B.A.,B.L., அலியார் சார், த்ரீயெம் மீரசாகிப் ஹாஜியார், M.S.M. இப்ராகீம்,ஹனீபா சார் போன்றோர். பள்ளிப் படிப்பு முடித்து காதிர் முகைதீன் கல்லூரியில் படித்து பி.ஏ.(வரலாறு) பட்டம் பெற்றார். கல்லூரியிலும் அவரிடம் பேச்சார்வம்,கவியார்வம் மேலோங்கி நின்றது! இளைஞர் தாஹா கல்லூரியில் பயிலும் போதுதான் பேராசிரியர் அப்துல் கபூரிடம் பாடம் கேட்கும் பேறு பெற்றார்.
ஆசிரியர் படிப்பை (B.Ed) அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முடித்தார். ஆசிரியர் தாஹாவை ஆசிரியராகப் பெறுவதற்கும், நம் இளைஞர்களை இவர் மாணவர்களாகப் பெறுவதற்கும், இரு சாராருக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. ஒரு தனியார் உயர் நிலைப் பள்ளியில் 5 ஆண்டுகள் வரலாற்று ஆசிரியராகவும், 20 ஆண்டுகள் தலைமை ஆசிரியராகவும் பணிபுரிந்தார். 25 ஆண்டுகள் அந்த நிர்வாகத்திற்கு மாற்றான் தோட்டத்து மல்லிகையாக மணம் வீசியிருக்கிறார் தலைமையாசிரியர் தாஹா! இந்தச் சாதனையே போதும் இவர் சோதனையைச் சூழ்நிலைக்குச் சாதகமாக மாற்றிக்கொள்வார் என்பதற்கு. தமிழருவி தாஹா கவிதைகளைக் கொட்டிக்கொண்டே இருக்கும் நயாகரா! அவை வீழ்ச்சி அல்ல, எழுச்சி! வந்து விழும் கவி அருவிகளைப் புத்தக அணையில் தேக்கி வைத்து மக்களின் தாகம் தீர்க்கிறார் பதிப்பாசிரியர் தாஹா! பல நூற்கள் வெளியிட்டு தன் தாகத்தையும் தணித்திருக்கிறார்! இவர் இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தில் செயலாற்றி வருகிறார்.
மார்க்கச் சொற்பொழிவு நிகழ்த்துவதற்காக மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளுக்கு அதிரையின் பெயரை எடுத்துச் சென்றிருக்கிறார் பேருரையாளர் தாஹா. பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர் என்று பல துறைகளிலும் முத்திரை பதித்துள்ள இவர் வானொலிக் கவியரங்கங்களிலும் பங்கு பற்றி கவிகள் வழங்கி இருக்கிறார்.
‘இளமையைப் பக்குவப் படுத்துவதில் தான் எதிர்கால வாழ்வு கட்டப்படுகிறது’ என்றதிரு வி.க. வின் கருத்தைத் தம் பாடல்கள் தோறும் பதித்து வரும் பாவலர் இவர்.கல்லூரிகள், பள்ளிகள், பொது மேடைகளில் கவி பாடி புவியை ஈர்த்தவர். நாவலர் தாஹாவை அறியாதார் தமிழ் கூறும் முஸ்லிம் உலகில் யாருமில்லை. இங்கே அவரைப் பற்றிக் கூறுவது கொல்லன் உலைக்களத்தில் ஊசி விற்பதற்குச் சமமாகும்.
பாவலர் தாஹா தமிழகத்தின் மிகப் புகழ் வாய்ந்த கவிஞர்களின் தலைமையில் கவிகள் வாசித்திருக்கிறார். அவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்கள் கவி கா.மு. ஷரீப், கவிக்கோ அப்துல் ரகுமான், மு.மேத்தா, வலம்புரி ஜான் ஆகியோர். கவி மேதை தாஹா பல கவியரங்கங்களுக்குத் தலைமை தாங்கியிருக்கிறார். கவியரங்கங்களில் இவர் வழங்கிய கவிதைகள் “அரங்கேறிய கவிதைகள்” என்ற தலைப்பில் புத்தகமாக வெளி வந்திருக்கிறது.
குறிப்பிட்டுச் சொல்லும்படியான எத்தனையோ கவிதை வரிகளை கவிச் சிற்பி தாஹா செதுக்கி இருக்கிறார். அவற்றில் இரண்டு:
“செத்தவர் செல்வரென்றால் சவத்திலும் பேதமா?” என்று சமூகத்தைச் சாடுகிறார்.
டாக்டர் அப்துல் கலாமைப் பற்றிச் சொல்லும்போது, ‘இப்படி ஒரு ஜனாதிபதியா! என்று விரலும் மூக்கும் பேசிக்கொண்டன’ என்று வியக்கிறார்.
எழுத்தாளர் தாஹா இதுவரை 49 கவிதை நூல்கள் எழுதியிருக்கிறார். இதற்காக இவர் பட்டங்களும் விருதுகளும் நிறைய வாங்கியிருக்கிறார். சிறுவர் பட்டத்துக்காக நூல் வாங்குவர்; இந்தப் பெரியவர் நூல்களுக்காகப் பட்டங்கள் வாங்கியிருக்கிறார்!
இவரது கவி ஆற்றலைக் கண்ட பேராசியர் இறையருட் கவிமணி கா. அப்துல் கபூர் அவர்கள், இவருக்கு ‘அருட் கவி’ என்று பட்டம் வழங்கினார்கள். அன்று முதல் முகம்மது தாஹா, ‘அதிரை அருட்கவி’ என்று வழங்கப்படுகிறார். தஞ்சைப் பல்கலைக் கழகம் ‘புதுமைக்கவிஞர்’ என்ற பட்டம் வழங்கியுள்ளது. கவிஞர் தா. காசிம் பெயரில் ‘செம்மொழி இலக்கியச் சீரவை’ இவருக்கு விருது வழங்கியுள்ளது.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், அதைப் பற்றி சிறந்த நூல் எழுதியதற்காக ரூ. 25,000/= பொற்கிழி வழங்கியுள்ளது. ஜவ்வாது புலவர் நினைவாக (ஈரோடு) நபி புகழ் காப்பியம் எழுதியமைக்காக ரூ.5,000/= பொற்கிழி அதிரை அருட்கவி வழங்கப்பட்டார். பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம், 20-21 நூற்றாண்டு நாயகக் காவியங்கள் படைத்ததற்காகப் புகழ் பெற்ற எட்டு கவிஞர்களுக்கு பரிசும், பாராட்டும், விருதுகளும் வழங்கப்பட்டன. அவர்களுள் இலக்கியச் செம்மல் தாஹாவும் ஒருவர். ராமநாதபுரம் தமிழ்ச் சங்கம் டாக்டர் கமால் தலைமையில் கவிஞர் தாஹாவின் நூல் ஒன்றினை வெளியிட்டுச் சிறப்புச் செய்தது. இவை தவிர ‘கவிஞானி’, ‘ஆன்மீகக் கவிஞர்’, ’தமிழ்மாமணி’, ‘தீனிசைத் தமிழ்த் தேனருவி’, ‘கவிதைச் செம்மல்’ என்ற பட்டங்களும் வாங்கியுள்ளார். விருதுகள் இவரின் விழுதுகள்! அதனால் கவிப் பூங்காவில் அவர் வேரூன்றி நிற்கிறார்.
இவருக்கு 2 ஆண் மக்கள், 2 பெண் மக்கள். மகன்கள் வெளிநாட்டில ச்ம்பாதிக்கிறார்கள். நால்வருக்கும் திருமணம் நடந்துவிட்டது. ஓய்வூதியம் பெற்றுக்கொண்டு நிம்மதியாக வாழ்கிறார் இந்த நுண்மதியாளர். சாய்வு நாற்காலியில் சாய்ந்துவிடாமல், ஓய்வோடு ஓய்ந்துவிடாமல், ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார், இந்தத் தமிழ்த் தா(த்)ஹா!
-வாவன்னா


