Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label பெண்மை. Show all posts
Showing posts with label பெண்மை. Show all posts

மலரே அழுந்தாதே! 51

அதிரைநிருபர் பதிப்பகம் | November 10, 2014 | , , , , ,


அன்பார்ந்த அன்னையரே
அதிமதியுடைய மகளிரே
மன அழுத்தம் தினம் அழுத்த
அவதியுறும் யுவதிகளே

ஊரெல்லாம் ஓய்ந்துவிட
உறவெல்லாம் உறங்கிவிட
இரவெல்லாம் விழித்திருந்து
எதைத்தான் சிந்திப்பீரோ

இவ்விருள்தான் நீங்கிடுமா
இரவும்தான் விடிந்திடுமா
என்றெல்லாம் எண்ணியெண்ணி
எதைத்தான் சாதித்தீரோ

மறைந்துவிட்டக் கதிரவனுக்கு
உதித்தெழத் தெரியாதா
திரண்டுவிட்ட இருளையும்தான்
விரட்டிவிட முடியாதா

அஸ்த்தமன திசை குறித்து
அலட்டிக் கொள்ளாமல்
அடுத்தநாள் உதய ஒளியால்
நிரப்புங்கள் இதயத்தை

எதிர்மறை எண்ணங்களை
அதிகமாய் உருப்போட்டு
புதிர்களை உருவாக்கி
அதிலன்றோ அமிழ்கின்றீர்

அடைய விரும்புவனக்
கிடைக்குமென நம்புங்கள்
இறையை நம்பி நீங்கள்
முறையாய் முயன்றிடுங்கள்

வீட்டறையில் முடங்காமல்
வெளிக்காற்றை சுவாசியுங்கள்
காற்றலையில் கலந்துவரும்
கிளிமொழிகள் நேசியுங்கள்

தொலைக்காட்சி நெடுந்தொடரின்
வலைகளுக்குள் சிக்க வேண்டாம்
அபிமான நாயகியின்
அவலங்கண்டு அழவும் வேண்டாம்

எதிர்பார்ப்புகளைக் கூட்டி
ஏமாறுவதைத் தவிருங்கள்
எல்லா கனவுகளும்
பலிக்குமென்ற இச்சை வீண்

கணவனின் பார்வையில்
கண்டிப்பாய் காதலுண்டு
கைபிடித்த நாள்முதலாய்
கனியுமன்பு என்றுமுண்டு

பிள்ளைச் செல்வங்களுடன்
பேசுவதே பேரின்பம்
பாடம் ஓதிக் கொடுப்பதிலே
பாதிபாரம் இறங்கிவிடும்

நிறைவான குடும்பத்தில்
முறையான வாழ்க்கையிலே
குறைவில்லா மகிழ்ச்சி
இறைதந்த வரமன்றோ

அதை
பாரமென்று கருதி
சாபமாக மாற்றுதல்
தீர்வில்லா சுமைகொண்டு
அழுத்தாதோ மனத்தை

மாத்திரை மருந்தைவிட
மன அழுத்தம் போக்குதற்கு
மார்க்கத்தில் மறையுண்டு
மருந்திடவே இறையுமுண்டு

மன அழுத்த நிழல் படிந்து
மலர் வனங்கள் வாடிடாமல்
தினம் குளித்த பூக்களென
முகம் மலர்ந்து வாழியவே!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

என் இதயத்தில் இறைத்தூதர்...! – 2 - [பெண்மை போற்றுவோம்] 7

அதிரைநிருபர் பதிப்பகம் | March 02, 2014 | , , ,


"பெண்களைப் போற்றுகிறோம்" என்று பொய்கள் பல கூறி,ஒரு மாயையை உருவாக்கி, உண்மையில் பெண்களை கேவலமான முறையில்தான் 'இஸ்லாத்தைத் தவிர' உள்ள பிறமதங்கள், சித்தாந்தங்கள், இசம்கள் எல்லாம் கங்கணம் கட்டி செயல் பட்டுக் கொண்டிருக்கின்றன.

தேவர் அடியார்கள் என்ற பெயரில் (இதுவே விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு மற்றொரு பெயராக உருவெடுத்திருக்கிறது) பிறமத ஆலயங்களில், இளம் பெண்களை வைத்து சேவையென்ற போர்வையில் அவர்களை தங்களின் பாலியல் வல்லுறவுக்கும் பயன்படுத்தி வருவதை தெய்வத் தொண்டுதான் என பெண்களை கேடு கெட்ட நிலைக்குத் தள்ளியது இந்து மத சட்டங்கள். மிக சமீபத்தில், கர்நாடகாவில் தொன்று தொட்டு நடைபெறும் இப்பழக்கத்தை இந்திய சுப்ரீம் கோர்ட் தடை செய்து உத்தரவு போட்டது நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.அதுபோல  அவர்களுக்கு சொத்துக்களில் பங்கு கிடையாது என்றது இந்து சனாதன சட்டம், ஆகையினால்தான் இந்திய பாராளுமன்றத்தில் இந்துப் பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்க வேண்டும் என்று சட்டமும் இயற்றப்பட்டது. ஆக இப்படி நடை முறைக்கு ஒத்துவராத சட்டங்களை வைத்துள்ள இந்து மதம் அடிக்கடி பாராளுமன்றம் ,சுப்ரீம் கோர்ட் என்று குட்டு வாங்கிக் கொண்டு இருக்கிறது.

இந்துப் பெண்கள் விதவையானால், மிகவும் அடிமைத் தனமான காட்சிகள் அரங்கேறும், தாலி கழற்றி, வளையல்கள் உடைத்து , அவர்களின் பொட்டை அழித்து, வெள்ளாடை தரித்து, ஒப்பாரியும்,கூக்குரலும் இட்டு என பெண்களுக்கு எதிரான, குரூர கொடுமைகள் நடத்தப்படும்.கணவனை இழந்த அந்தப் பெண்படும் அவலங்கள் போக, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பெண்களின் மாண்பு குலைக்கப்படுகிறது என்பது கண் கூடு.

கிறிஸ்துவதப் பெண்களுக்கு அவர்களின் இயற்கை உபாதைகளில் ஒன்றான மாதவிடாய் காலங்களில் இழைக்கப்படும் கொடுமைகள் மிக அதிகம். அதைச் செய்ய அவர்களின் பைபிளே ஊக்கம் கொடுக்கிறது.

"சூதகஸ்திரீ தன் சரீரத்தில் உள்ள உதிர ஊறளினிமித்தம் 7 நாள் தன் விலக்கதில் இடுக்க கடவள். அவளைத் தொடுகிற எவனும் சாய்ங்கால மட்டும் தீட்டுப் பட்டிருப்பானாக! அவள் தீட்டாய் இருக்கும் சமயத்தில் அவள் எதில் உட்காருகிறாளோ, படுத்துக் கொள்கிறாளோ, அதெல்லாம் தீட்டும் (இன்னும் நீண்டு கொண்டிருக்கிறது - ஆதாரம் :லேவியராகமம் 15:19-30).

ஆனால், அல்குர்ஆன் என்ன சொல்கிறது ?

"மாதவிடாய் பற்றி அவர்கள் உங்களிடம் கேட்கிறார்கள் அது அருவருக்கத்தக்கதாகும் என (நபியே) நீங்கள் கூறுங்கள், ஆகவே மாதவிடாயின் போது   அப்பெண்களை (தாம்பத்திய உறவிலிருந்து) விலக்கிக் கொள்ளுங்கள்" – (குர்ஆன் 2:222).

அந்த நேரத்தில், கணவனை உறவு கொள்வதிலிருந்து, விலகி இருக்க மட்டும்தான் சொல்கிறது இஸ்லாம். அவள் நின்றது, உட்கார்ந்தது, படுத்தது, தொட்டது இவைகள் எல்லாம் தீட்டு என்று சொல்லவில்லை. அந்த நேரத்தில் உறவு கொள்வது, மிக ஆபத்து என்கிறது அறிவியல்.இஸ்லாத்தை பொருத்தவரை அது எந்த அமைப்புவிடமிருந்தும் குட்டு வாங்காது, மாறாக, அதுதான் அறிவியலையும் மற்ற எல்லா அமைப்புக்களையும் குட்டி குட்டி திருத்திக் கொண்டிருப்பதை நாம் நிதர்சனமாக பார்க்கிறோம்,அல்லவா?

இஸ்லாம் மட்டுமே ஏக இறைவனால்,அங்கீகாரம் பெற்றது என்பது இதன் மூலமும் நிரூபணம் ஆகிறது அல்லவா?

ஒரு சமயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளியில் இருந்து கொண்டு "ஆய்ஷாவே ! (தொழுகைத்) துணியை எனக்கு எடுத்துக் கொடு" என்று கூறியதற்கு, ஆய்ஷா (ரலி) அவர்கள் நிச்சயமாக நான் மாதவிடாய் காரியாக இருக்கிறேன் எனக் கூற, நபி(ஸல்) அவர்கள் "உன் மாதவிலக்கு, உன் கையில் இல்லை" எனக் கூறினார்கள். அப்போது அத்துணியை ஆயிஷா (ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு எடுத்துக் கொடுத்தனர் என அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் - நூல் : முஸ்லிம் 172.

எவ்வளவு அழகான நடைமுறை கொண்ட மார்க்கம் இஸ்லாம் எனும்போது மெய்சிலிர்க்கிறது.

பெண்களுக்கு மிக மிக உயரிய இடம் கொடுத்து அழகு பார்க்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் "ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்து விட்டால் அந்த இடத்திற்கு அல்லாஹ் வானவர்களை அனுப்புகிறான். அவர்கள் அங்கு கூறுவார்கள் "வீட்டில் உள்ளவர்களே ! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்" பின்னர் அந்தக் குழந்தையை தன் இறக்கைகளால் அரவணைத்துக் கொள்கிறார்கள். மேலும், அதன் தலைமீது கரங்களால் தடவியவாறு கூறுவார்கள் "இது ஒரு பலவீனமான ஆன்மாவிலிருந்து பிறந்த ஒரு பலவீனமான ஆன்மாவாகும். இந்தக் குழந்தையை பாதுகாத்து வளர்ப்பவருக்கு மறுமை நாள் வரையில் இறைவன் உதவி கிடைத்துக் கொண்டே இருக்கும்" - அறிவிப்பாளர் : நப்த் இப்னு ஜுரைத் (ரலி) ஆதாரம் : அல் முஅஜ முஸ்ஸகர், ஹதீஸ் எண் 243.

மேற்கண்ட ஹதீஸை நிதானமாகப் படித்து, உள்வாங்கி அசை போட்டுப் பாருங்கள். பெண் குழந்தைகளை இதைவிடவா போற்ற முடியும்? இந்த ஹதீஸைக் கண்ணுறும் முஸ்லிமுக்கு எத்தனை பெண் குழந்தைகள் பிறந்தாலும், அகமகிழ்வான். அல்லாஹ்வின் உதவி, மறுமை வரை கிடைப்பதென்றால் சும்மாவா ? பெண் குழந்தை பிறந்ததற்கே அவ்வீட்டில் உள்ள யாவருக்கும் சுபச் செய்தி கிடைக்கிறது! ஆஹா இனிக்கிறதே ! முஸ்லீமாக இருப்பது நமது உள்ளம் பனிக்கிறதே !

ஆனால், முஸ்லிம் அல்லாத பிறமதத்தவர்களோ பெண் குழந்தை பிறந்தால், லபோ-திபோ என அடித்துக் கொள்ளத்தான் முடியும்! கூண்டுக்கிளே..! பிறமதம் பின்பற்றும் பெற்றோருக்கு பிறந்த பெண்ணே! உன்னைப் போற்றிப் பாதுகாக்கா தூய மார்க்கத்தை தழுவிக் கொண்டு ஈடேற்றம் பெறு... வெற்றி பெறு...! அழைக்கிறோம்... அரவணைக்க காத்திருக்கிறோம் !

இன்ஷா அல்லாஹ் தொடரும்...
இப்னு அப்துல் ரஜாக்

என் இதயத்தில் இறைத்தூதர் ! - 1 9

அதிரைநிருபர் பதிப்பகம் | February 23, 2014 | , , , ,

பிஸ்மில்லாஹ்ஹிர்ரஹ்மானிர்றஹீம்...

அல்லாஹ் நமக்கு வழங்கிய அருட்கொடையாம் அல்குர்ஆனும், அண்ணல் நபியும் வழங்குகின்ற அறிவுரைகள், எச்சரிக்கைகள், சான்றுகள் நற்செய்திகள் இவைகள் எல்லோமும் இவ்வுலகிலும், மறுமை வாழ்விலும் நாம் வாழ்வாங்கு வாழ வகுக்கும் உன்னத மருந்தென்றால் மிகையல்ல !

எந்த ஒரு துறையாக இருக்கட்டும், அந்த விஷயமாக அல்லது நடைமுறையாக உள்ளவைகளுக்கு, எப்படியெல்லாம் நம் வாழ்க்கைக்கு பயன் உள்ளதை மட்டுமே கொண்ட அமுத ஊற்றுக்களே அல்குர்ஆனும், அண்ணல் நபிகளின் ஹதீஸ் என்னும் அமுத மொழிகளும் அன்றோ !

அவ்வாறுள்ள மொத்த விஷயங்களையும் - அல்லது தனித் தனியேயான எந்த ஒரு விஷயத்தையும் எடுத்து, அதனை திருக்குர்ஆன் ஒளியிலும், ஹதீசின் வழியிலும் ஆராய்ந்தால், நாம் மெய்சிலிர்க்காமல் கண்கள் பனிக்காமல் உள்ளம் உருகாமல் இருக்க முடியாது. மூக்கின் மேல் விரல் வைத்து அசைபோடாமல் இருக்க இயலாது.

உதாரணமாக பெண் / பெண் குழந்தை / பெண்மக்கள் / தாய் / மனைவி / சகோதரி என்ற வரையறுக்குள் மட்டும் நின்று அந்தப் பெண்களைப் பற்றி திருக்குர்ஆனில் ஏகன் அல்லாஹ்வும், அவனுடைய இறுதித் தூதர் அண்ணல் நபிகளும் எப்படி அறிவுறுத்தி, நாம் அவர்களின் சொற்படி எவ்வாறு நடக்க வேண்டும் என கட்டளையிட்டுள்ளார்கள். அந்த பெண்கள் மூலம் நாம் எவ்வாறு சுவர்க்கம் அடைய இயலும் என்பதை விளக்கியுள்ளார்கள் என்பன போன்றவைகளை அறியும் போது, உண்மையில் நம் பெண்கள், முஸ்லிம் பெண்கள் மிக அதிகமாக கொடுத்து வைத்தவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். 

பாவம் ! இந்நேரத்தில், பிறமதக் கோட்பாடுகளைப் பின்பற்றும் பெண்களின் பல்வேறு வகையான நிலைகளில் உள்ள அவலங்களை எண்ணி, பரிதாபம் மட்டுமே காட்ட இயலும் ! இறைவன் நாடினால் அந்த பெண்களும் இஸ்லாத்தை தங்களது வாழ்வியலாக ஏற்று, கரை சேர்ந்தால் - வெற்றி அவர்களுக்கும் தான் !

எனவே, இஸ்லாத்தின் கோட்பாடு பற்றி பெண்களின் அந்தஸ்து பற்றி அறியும் முன் பிறமத பெண்களுக்கு ஒரு வேண்டு கோள் ! "பிறமத சகோதரிகளே... ஏகன் அல்லாஹ்வும், அண்ணல் நபிகளும் கற்றுத் தந்த நடைமுறைகளையும், பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள், அவர்களுக்குரிய முக்கியத்துவங்கள் அனைத்தையும் - பிறமதக் கோட்பாடுகளை பின்பற்றும் பெண்கள் அங்கிருக்கும் அடிமைத்த சூத்திரங்கள், பெண்ணுரிமை, பெண்மைக்கான முக்கியத்துவம் இவைகள இஸ்லாம் வழங்கிய அறிவார்ந்த்த ஆய்வுப் பார்வை கொண்டு, இறைவேதமான அல்குர்ஆன் மற்றும் நபிகளாரின் வாழ்வியல் வழிகாட்டலோடு ஒப்பிட்டுப் பாருங்கள்,உரசிப் பாருங்கள். எவை நன்மையானவை, தீமையானவை எவைகளை வாழ்வியல் நெறியாக ஏற்று பின்பற்ற வேண்டும், எதனை விட்டு வெளியேற வேண்டும் என்பதை நன்கு அறிந்து கொள்வீர்கள்.

முஸ்லிம் பெண்களே ! அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டிய வழியில் இன்னும் பலமாக இஸ்லாமிய வாழ்வு நெறியை பலப்படுத்த உறுதி மேற்கொள்ளுங்கள்  ! ஏக இறைவன் அல்லாஹ்வும், அண்ணல் நபிகளும் உங்களின் மேல் கரிசனப் பட்டு, இரக்கப்பட்டு, சுவர்க்க வழிகளை இலேசாக்கி, யாரும் உங்களை  சுரண்டி விடக் கூடாது என சட்ட்ம் இயற்றி, உங்களை மிகவும் உயர்த்தி வைத்து, முதலிடம் வழங்கியுள்ளார்கள். அதைக் கையாள்வது நீங்கள் வாழும்  நெறியில்தான் இருக்கிறது. சுவர்க்கமும் கூட  தாயின்  காலடியில் இருப்பதை நபிகளின் வாக்கு உறுதிப் படுத்துவதையும் மறந்து விட வேண்டாம்.

இனி !

பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்த அந்த அரேபிய மண் கலாச்சாரம் ! பெண்கள் ஒரு போகப் பொருள் எனக் கொண்டு, அசிங்கம் கண்ட அந்த சமூகம், அப்படி சீர் கெட்டிருந்த சமூகத்தில் ஒரு புரட்சி மின்னல் தோன்றியது, அல்லாஹ்வின் தூதராக !

"இரண்டு பெண் குழந்தைகளை முறையாக வளர்ப்பவரும், நானும் சொர்க்கத்தில் இவ்வாறு நுழைவோம்" என நபி (ஸல்) அவர்கள் தங்கள் இரு விரல்களாலும் சைகை செய்தார்கள்" - அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக்(ரலி) - நூல் : திர்மிதி

சுப்ஹானல்லாஹ் ! இரண்டே வரி... சுருக்கமான வார்த்தைகள் !! அதன்  பொருளோ கடலிலும் பெரிது !!!

இன்றுகூட, பெண் பிள்ளை என்றால் ஆற்றிலும், குளத்திலும் மூழ்கடிப்பதும், நெற்மணிகள் கொடுத்தும், கழுத்தை நெறித்தும், பேருந்து இரயில் நிலையங்களில் பரிதவிக்க விட்டு,அநாதைகளாக்கப்பட்டும் நடந்து கொண்டுதானே இருக்கிறது. ஆனால் அண்ணல் நபி அவர்களின் பெண் குழந்தைகளின் மேல் உள்ள கரிசனத்தைப் பாருங்கள். நம் அருகில் நின்று கொண்டு, நம்மை நோக்கி, அந்தத் தூதர் சொல்வது போல் இல்லையா ?

பெண் குழந்தை பிறந்து விட்டதே என கவலை கொள்ளாதே, நல்ல முறையில் அவர்களை வளர்த்து வாருங்கள் ! பிறகென்ன என்னுடன் கூட சொர்க்கம் செல்லலாம், வாருங்கள், வாருங்கள் என நம் அருமை தலைவர்  கூப்பிடுவது கேட்கவில்லையா ? 

ஆ! அழைப்பது யார் தெரியுமா ? நபி ! நம் உயிரினிலும் மேலானவர் ! அல்லாஹ்வின் தூதர் ! அல்லவா ? பொய்யுரைக்காத உதடுகள் அவைகள் ! எனவே,சொர்க்கம் நிச்சயம்.பெண் பிள்ளைகளை நன்றாக வளாத்த்தாலே சொர்க்கமா? இந்த மாதிரி super deal எங்காவது கிடைக்குமா?

வாருங்கள் சகோதரர்களே  ! நம் தலைவர் அழைக்கிறார்... மாமனித அழைக்கிறார்... சுவர்க்கம் புக அழைக்கிறார் !

பெண் மகள் பிறந்து விட்டாளே என கவலைப் படாதே ! வரதட்சனைக்கும்,நகைகளுக்கும்,பெண்ணுக்கு  வீடு கட்டி முடிக்க காலமெல்லாம் உழைக்க வேண்டுமே  எனவும்  பயப்படுகிறீர்களா ? 

வரதட்சனையாய் நகையும், வீடும் கேட்கும் கேடு கெட்டவர்களை விரட்டியடி ! அல்லாஹ்வின் மேல் தவக்குல் வையுங்கள் ! பெண் பிள்ளைகளை ஆசை ஆசையாய் வள்ர்த்தெடுங்கள் ! அண்ணல் நபியின் கையைப் பிடித்துக் கொண்டு சுவர்க்கம் செல்லலாம் ! இன்ஷா அல்லாஹ்...!

இதற்கு மேலும் வேற என்னதான் வேண்டும் நமக்கு!!!

இறைவன் நாடினால் தொடரும் !
இப்னு அப்துல் ரஜாக்

பெண்ணியம் 13

அதிரைநிருபர் பதிப்பகம் | July 17, 2012 | , , , ,

பெண்ணியம் பற்றிய பார்வைக்கு முன் பெண்மையைப் பற்றி ஒரு தெளிவு அவசியம். பசியின் இருப்பை அறிவிக்காவிடில் உணவைப்பற்றிய தேடலுக்கு அவசியமிராது அல்லவா, அதைப்போல.

பெண்மை:

கண்ணியம் மிக்கது பெண்மை.  எண்ணியும் பார்த்து எடையிடவியலாத புண்ணியம் மிக்கது பெண்மை. உன்னையும் என்னையும் உள்ளிலே சுமந்து உயிரிலே உணர்ந்து, ஈன்றெடுத்து, கணக்கிடவியலாத கூலித்தொகை கடனாய் நம்மீது நிலுவையில் நிற்க அதைத் தள்ளுபடி செய்த தியாகத்தின் திருவிளக்கு பெண்மை.  விண்ணையும் மண்ணையும் உலகத்தில் படைத்தவன் தன்னையும் படைத்து தரணிக்கத் தரவிழைந்து தனக்குப் பதிலாக அன்னையைப் படைத்தான்.  அவன் தன் பண்புகளாம் கருணையையும் இரக்கத்தையும் அன்பையும் அருளையும் அவளுள் விதைத்தான்; அன்னையென அமைத்தான். 

ஆண் ஆணாகப் பிறந்து ஆணாக வளர்ந்து ஆணாகவே மரிக்கின்றான்; பெண்னோ பெண்ணாகப் பிறந்து பிறர்க்காக வாழ்ந்து, நிலவாக வளர்ந்து ஜொலித்தவள் பிறையெனவேத் தேய்ந்து, தாயாகத் திகழ்ந்து, சாகாமல் இருக்கின்றாள்; சிந்தையில் ஜொலிக்கின்றாள்.

எவர் மனத்திலாவது அவர்தம் அம்மா இறந்து விட்டிருக்கிறாளா? வேலை நிமித்தமோ வேறுவேறு தேவைக்கோ வீட்டை விட்டு வெளியேச் சென்றவனுக்கு வீடே மையப்புள்ளி என்பதுபோல, இறந்தாலும் இருந்தாலும் எல்லோருக்கும் மையப்புள்ளி அம்மா அல்லவா? இறக்காமல் இருக்கும் அம்மா நம் வழியெல்லாம் வாய்க்கும் வாச மலர்த் தோட்டமெனில் இறந்து நம் இதயத்தில் இருக்கும் அம்மா பாலைவனச் சோலை அல்லவா?

இறுதிப் படுக்கைக்குப் பின்னர் வாய்க்கும் இறுதி இருப்பிடத்தைப் போன்றது வாழ்க்கையும் அதன் வழிவகைகளும்; ஒற்றையானது; நெருக்கடியானது. அம்மா என்னும் உணர்வே நமக்கு எதையும் இலகுவாக்கித் தரும். 

அம்மா இறந்துவிட்டால், ஒரு மனிதனுக்காக இறைவனிடத்தில் யார் வேண்டினால் அது நிறைவேறும் சாத்திம் கூடுதலாக உள்ளதோ அவர் இறந்துவிட்டதாகவே அறியப்படுகிறது.  உலகில் மனிதன் யாருக்குக் கூடுதலாகக் கடமைப்பட்டிருக்கிறான் என்றொரு கேள்வியை மனிதப்புனிதர் ரசூல் (ஸல்) அவர்களிடம் கேட்டபோது அவர்கள் அம்மாவுக்கு என்று பதில் தர, அடுத்தடுத்து யார்யாருக்கு என்று கேட்கப்பட்டபோதெல்லாம் மூன்று முறையும் அம்மாவுக்கே என்று சொன்னதாக நபிவழி அறிவிப்புகள் உள்ளன.  ஒரு சமுதாயத்திற்கே நல்வழி காட்டியவரின் அறிவிப்பைவிட கூடுதலாக நான் ஒன்றும் சொல்லிவிடவியலாது அம்மாவின் சிறப்புகளை.  அத்தகைய அம்மா, பெண்மை எனும் தன்மைக்குக் கிரீடம்; பெண்களின் வளர்ச்சிமாற்றங்களின் உச்சகட்டச் சிறப்பு; தியாகமெனும் பண்பை படம் வரைந்து பாகங்களைக் குறித்ததுபோல் வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கும் நேரலை.

பெண்மையின் மற்றுமொரு மாசற்ற வடிவம் மனைவி.  சுமைதாங்கியின் சுயநலமற்ற சேவையே மனைவியின் பிழைப்பு. மனைவியை மதிக்கத் தெரிந்தவனே மனிதனாகிறான்; மனிதத்தின் கோட்பாடுகளுக்குள் அடங்குகிறான். நம்மை ஈன்றவளைப் போலவே நமக்காக ஈன்றெடுப்பவளும் மேன்மையானவளே.  நம்மை கைபிடித்த நாள் முதல் கதி கணவனே என்றானவள்; கண்ணுக்கெட்டாத தூரத்தையும் வாழ்வில் நம்மோடு கைகோர்த்துக் கடக்கக் கூடியவள். தலை வலித்தால் தைலத்தைத் தொட்டாலும் தம் உயிர் தோய்த்தேத் தேய்த்து விடும் பாசம் மிக்கவள் மனைவி.  மருந்து குணப் படுத்துகிறதோ இல்லையோ அவள் அருகிலிருந்து கவனித்தது பிணி தீர்க்கும்.

சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன், “நல்ல மனைவி, கெட்ட மனைவி, மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்என்றெல்லாம் பேசிக்கொள்ளக் கேட்டிருக்கிறேன்.  மனைவியில் நல்ல மனைவிதான் இருக்கிறாள்; கெட்ட மனைவி என்று யாருமில்லை – ஆரம்பம் முதல் வளர்க்கப்படும் விதத்திலும் அவள்தன் பெற்றோர்கள் வாழ்ந்து காட்டிய விதத்திலும் ஊடகங்களால் சித்தரிக்கப் படும் மாயத் தோற்றத்திலும் பாதிக்கப்பட்டு கெட்டவளாக உருவாக்கப் படுகிறாள் என்பதே என் நிலைப்பாடு.

மனைவியை மனைவியாய்ப் பார்த்தலே அவளுக்கு நாம் செய்யும் முதல் பிரதி உபகாரம். நாமோ ஆண் என்ற அர்த்தமற்ற அகந்தையில் அவளை அற்பமாகத்தான் பார்க்கப் பழகி இருக்கிறோம். புகார் எனச் சொல்ல விஷயமே இல்லாத அளவுக்கு அவளை அன்பாலும் பாசத்தாலும் முற்றுகையிட வேண்டும்.  மனைவிக்கு எதிரான பிரச்னைகளில் வெற்றியைவிடச் சுவையானது அவளிடம் தோற்பது. இதை உணர்ந்தால் யாவரும் நலமே.

சரி, மேலும்சகோதரியாகவும் மகளாகவும், பாட்டியாகவும் தோழியாகவும் பெண்மையின் வடிவங்கள் இருந்தாலும், பெண்மையின் இரண்டு முக்கிய முகங்களைச் சுருக்கமாகப் பார்த்து விட்டோம்.  ஆதலால் பெண்ணியம் பற்றிய என் கருத்தும் அதைத் தொடர்ந்து தற்காலத்தில் பெண்ணியத்தின் புரிதலும் நடப்பும் பற்றி அலசுவோம்.

பெண்ணியம்:

என்பதுகளில் என்று நினைவு, புதுமைப் பெண் என்றொரு புதுத் தோற்றத்தில் பெண்கள் ஆர்வம் காட்டத் துவங்கினர்.  அக்காலகட்டத்தில் வலுவான ஊடகங்களாகத் திகழ்ந்த தினசரிகளும் சஞ்சிகைகளும் திரைப்படங்களும் சமூகவியலரும் ஆணாதிக்கத்திற்கெதிராக பெண்களைப் புரட்சி செய்யத் தூண்டினர்.  அப்பாவிப் பெண்டிர் பலரும் புதுமைப் பெண் எனும் வார்த்தையைத் தவறாகப் புரிந்துகொண்டு தத்தமது சுய மரியாதை, பொருளீட்டல், கல்வி  மேம்பாடு, சமுதாயத்தில் அந்தஸ்து போன்றவற்றில் எழுச்சி பெறாமல், ஆணுக்குப் பெண் அனைத்திலும் சமம் என்னும் நோக்கிலும்,பாவாடை துறந்து ஜீன்ஸ் அணிவதிலும், பூ வைத்துப் பின்னி முடியாமல் கூந்தலை ஷாம்பூ இட்டு அலைபாய விடுவதிலும், மஞ்சள் முகம் மாற்றி பருக்களில் முடியும் களிம்புகளைத் தடவுவதிலும், இயற்கையான பொலிவைச் செயற்கையான எழிலாக மாற்றியமைப்பதிலும் புதுமை செய்தனர்.  புதுமைப் பெண் அநாவசியமான ஒப்பனைகளால் சீக்கிரமே முதுமைப் பெண் போல தோன்றலானாள்.

தீமைக்கு எதிராக பொங்கி எழுந்து கேள்வி கேட்பதைத் தவறாகப் புரிந்துகொண்டு மூத்தவரையும் கணவரையும் தாய் தந்தையரையும் எதிர்த்துப் பேசினாள் புதுமைப் பெண். தடுமலுக்குத் தும்முவதைப் போல தத்தம் கணவன்களின் சிறு கோபத்திற்கெல்லாம் தாலியைக் கழட்டி வீசினர் புதுமைப் பெண்டிர்.  சொந்தக் காலில் நிற்பது என்றொரு சந்தமில்லாப் பாட்டுக்கு அபிநயம் பிடித்தனர். சுயமாக உழைத்து சம்பாதித்து பொருளாதாரத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததும் தன்னிச்சையாக எல்லாவற்றையும் தீர்மானித்து மூத்தவர்களின்அறிவுரைகளைத் தூக்கி வீசினர்; யாரையும் எடுத்தெரிந்து பேசினர்.

தெளிந்த நீரோடையென சிலிர்த்தும் சிரித்தும் நகர்ந்த வாழ்க்கைமுறை கல்பட்டு கலங்கியதுபோல புதுமைப் பெண் என்னும் சொல்பட்டுச் சிதறியது. காட்டாறு என வேகம் பிடித்துக் கரைகளை உடைத்தது என்னவோ உண்மை என்றாலும் கலந்தது இலக்கில் அல்ல; தேங்கிக்கிடந்த சாக்கடையைச் சேர்ந்தது; சகதியாய் முடிந்தது.

தொடர்ச்சியாக, கவர்ச்சிமிக்க மேநாட்டு நாகரித்தின்பால் வீணாக ஈர்க்கப்பட்ட புதுமைப் பெண் நம் நாட்டுக் கலாச்சார கட்டுக்கோப்புகளை உடைத்தெறிந்தாள்.  காலவோட்டத்தில் இருந்த இடத்துப் பெருமையை இழந்தும் நாடிய இடத்து நாகரிகத்தில் முற்றிலுமாகக் கலந்து நாசமாகப் போய்விடாமலும் இரண்டுங்கெட்டான் நிலைக் குத்தள்ளப்பட்டுப் போனாள் புதுமைப் பெண்.

கசப்பு மருந்தில்தானே கடும் நோய் குணமாகும்? உடலுக்கும் மனத்திற்கும் சுகமான சிலவற்றைத் துறந்து வாழ்ந்தாலே ஈடேற்றம் கிடைக்கும்.  கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழத் தலைப்பட்டால் தற்காலிக சுகத்தில் சொக்கி இளமையும் இல்லறமும் எல்லாமும் சட்டென முடிந்து சூனியமே மிஞ்சும். 

புதுமை என்னும் பெயரில் பெண்ணியம் நன்னயம் கெட்டு தன்னையும் கெடுத்து தன் சமுதாயத்தையும் சீரழிக்கும் அவலம் நீங்க வேண்டும்.  புதுமை என்றால் என்ன என்றொரு தெளிவு வேண்டும்.

பெண்ணாக வாழ்தலே பெண்ணுக்குப் பெருமை; பெண்ணாக வாழ்ந்தாலே பெண்ணியம் சிறக்கும். பெண்களை அடிமைப் படுத்தி வைத்திருந்ததற்காக சிலிர்த்தெழுந்திருக்கும் பெண்ணியத்தைப் பாராட்டத்தான் வேண்டும்; ஊக்குவிக்கவும் வேண்டும் அவர்கள் மென்மேலும் சிறப்புகளும் புகழும் பெற எல்லா விதத்திலும் உதவ வேண்டும்,அதுவே சரியான ஆண்மை.

அதே சமயம், பெண்ணியம் சிறக்க என்ன வழி என்பவற்றில் மிகவும் கவனமாகவும் உண்ணிப்பாகவும் சில கோட்பாடுகளை வகுத்துக் கொள்ளவேண்டும்.

பெண்ணியம் சிறக்க:

பெண்மையின் மென்மையோடு பெண்ணியம் சிறக்க வேண்டும்.  கற்றுத் தெளிவுற வேண்டும். உலக மற்றும் மார்க்கக் கல்வியில் சிறக்க வேண்டும்.  நன்மை எது தீமை எது என்று பகுத்துணரப் படிக்க வேண்டும். பாசமெனும் ஆயுதத்தால் தம் சொந்த பந்தங்களைக் கட்டிப்போட வேண்டும்.

வீட்டில் உழைக்க வேண்டும், குடும்பம் தழைக்க வேண்டும். ஊட்டி வளர்க்கும்போது உள்ளன்பைக் காட்டி வளர்க்க வேண்டும்.  பொருளாதாரத் தேவை அழுத்தும் சூழ்நிலை ஏற்பட்டால் மட்டும் தன் உடைதனைப் பேணி அன்னிய ஆடவரிடமிருந்து விலகி உழைத்தல் நடைமுறைச் சாத்தியமெனில் வேலைக்குப் போய் பொருளீட்டி தன்னிறைவு பெறவேண்டும். அங்கங்கள் மறைக்கச் சொல்வது அடிமைப் படுத்துவதா? பெண்மையெனும் தன்மையே பெண்ணுக்குச் சிறப்பென்ற சீர்திருத்தம் செப்பினால் பெண்ணுரிமைப் பறிப்பதாய் பிதற்றுதல் நேர்மையா?! தெருச்சரக்கா பெண்மை திறந்து கிடக்க?
தீயவர் கண்கள் தீண்டிக் கெடுக்க? நட்சத்திர அந்தஸ்தல்லவா நங்கையர்க்கு உலகில்?

மதங்களின் தலைப்பின் கீழ் ஒன்றும் வேண்டாம், புர்கா என்று பெயரேதும் அவசியம் அல்ல.  அங்கங்கள் தெரிய ஆபாசமாய் அணியாமல் பெண்களே நீங்களே ஓர் உடையை வடிவமையுங்கள். அது பெண்ணின் அழகை வெளிச்சம்போட்டு காட்டாதிருக்க வேண்டும்; இயல்பாகவே பெண்ணின்பால் ஈர்க்கப்படும் ஆடவரைக் தவறானக் கண்ணோட்டத்தில் கவர்ந்திழுக்காதிருக்க வேண்டும். பெண்கள் சமூகத்தில் தத்தமது அகத்தழகால் போற்றப்பட வேண்டுமேயன்றி சடுதியில் அழிந்து போகும் புறத்தழகுக்காகவல்ல. அரைகுறை ஆடையோடு வலம் வரும் பெண்ணிற்கு ஏற்படும் கொடுமைகளுக்கு ஆண்களை மட்டும் குற்றம் சொல்லலாகாது. ஆணும் பெண்ணும் ஒருவர்மீது ஒருவர் ஈர்க்கப்படும் குண நலன்களோடுதான் படைக்கப் பட்டிருக்கிறார்கள்.  மனக் கட்டுப்பாடுகளை உடைத்தொழிக்கும் திறன் தோற்றத்திற்கு உண்டு என்பதே இயற்கை. மானம் காப்பது அனைவரின் கடமை அதிலும் பெண்களின் மானம் பிரத்தியேக கவனம்கொண்டு பாதுகாக்கப்பட வேண்டியதாகும்.

பெண்கள் மீது ஆண்களால் விலங்குகளாக அணிவிக்கப்பட்ட சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் வீசி யெறிந்து விடலாம்.; படைப்பிலேயே இறைவனால் விதைக்கப்பட்ட பண்புகளை, பெண்மையெனும் தன்மையை உதறிவிட இயலாது; உதற முனையவும்கூடாது.

ஊடகங்களில் பெண்களின் கைகள் ஓங்கியிருப்பது வரவேற்கத்தக்கதே.  ஆனால், புதுமை, நவீனம் என்னும் சமாலிப்பில் எழுத்துகளின் ஆடை உறித்து ஆபாசமாகவும் பெண்களின் அங்கங்களின் கொச்சைப் பெயரை உபயோகித்து எழுதுவதும் முட்டாள்தனமானது. நவீனத்துவம் என்னும் வேடத்தில் வசதியாக மறைந்துகொண்டு ஆபாசமாக எழுதுவதை பெண்ணியத்தின் எழுச்சி என்று ஏற்றுக் கொள்ள முடியாது.  எத்தனையோ பெண்கள் நாகரிகமான முறையில் இலக்கியம் படைக்கிறார்கள், எழுத்தால் புரட்சி செய்கிறார்கள், மாற்றங்கள் கொணர்கிறார்கள்.  அத்தகையோர்களே புதுமைப் பெண்கள்.

எழுத்தோ சொல்லோ சீர்திருத்தமாக அமைய வேண்டும்; சமுதாயத்தை நாற்றமடிக்கச் செய்யக் கூடாது.   அசிங்கமான வார்த்தைப் பிரயோகங்களோடு ஆண் பெண் உறுப்புகளை வர்ணிப்பது படுக்கையறைக் காட்சிகளை அப்பட்டமாக எழுதுவது போன்றவற்றால் யாருக்கு என்ன பயன் என்று புரியாமல் பெண்ணியம் நவீன உலகக் கொடியைக் கைகளில் பிடித்து கோஷம் எழுப்புவதைக் கண்டால் பரிதாபமாக இருக்கிறது.  நன்மை என்று கருதி அவர்கள் தமக்கு எதிராகவே காரியமாற்றுகிறார்கள். 

புகழ்போதைக்கோ பணத்தேவைக்கோ பெண்மையை தாரை வார்க்கும் நிலை மாற வேண்டும். பெண்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் சாதகமாகப் பயன்படுத்தி பெண்கள் நன்மையை ஏவி தீமையைத் தடுத்தால் மட்டுமே பெண்ணியம் தழைக்கும்; பெண்மையும் பிழைக்கும்.

sabeer abushahruk


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு