நாக்கு - அதை அடக்கு !!!
தலைப்பைக் கண்டதும் சாப்பாட்டு பிரியர்கள், பிரியமாக கோபப்படாதீங்க. ருசியான சாப்பாட்டுக்காக நாக்கை நாலு முழம் நீட்டி, நானூறு கிலோமீட்டர்ல ஒரு நல்ல சுவையான உணவு பறிமாறும் உணவகம் இருந்தால், உடனே கிளம்பிவிடுகிற டைப் ஆளுதான் நானும். இங்க சொல்லப்போவது வேற விடயமிது.
சிலரைக் கண நேரிடும்போது அவர்களிடம் "நல்லா இருக்கீங்களா?" என்று கேட்டால் போதும்
"அது, இது, அப்படி இல்ல, இப்படி இல்ல" என்று தாழ்வான வார்த்தைகளையே கூறி நம்மை இல்லாமல் செய்து விடுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்காக, கா.மூ.தொ கூட்டணியில் உட்கட்சி பொறுப்பிலிருக்கும் இந்த உறுப்பினர் வாரம் முழுவதும் பேசும் வார்த்தைகளை ஒன்றாகச் சேகரித்து கோர்த்தால் ஏறத்தாழ 500 பக்கம் உள்ள புத்தகத்தை தயார் செய்து விடலாம்… "தொன தொன ஆட்களுக்கு 500 பக்கம் உள்ள புத்தகமா?’ என்று சாவன்னா காக்கா சவூதில் இருந்து கேட்கிறது காதில் விழுகிறது.
“முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.” - அல்குர்ஆன் (அத்தியாயம் 49:12)
“உங்கள் நாவை பேணிக்கொள்ளுங்கள் “ - நபிமொழி
“தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு." - திருவள்ளுவர்
நாவினால் சுட்ட வடு." - திருவள்ளுவர்
“நாக்கு கத்தியை விட கூரானது “ - யாரோ
“முள்ளில்லாத நாக்குமா “ - நம்மூர்காரங்க
சுவையை அறிய தரும் நாக்கு சுட்டும் விடும், அதனால் பல நட்புகளும், உறவுகளும், செயல்களும் கெட்டுவிடும்.
ஒரு ஊரில் மூன்று தவளைகள் நல்ல நண்பர்களாக இருந்து வந்தன, அதில் ஒன்றுக்கு உணவு இல்லாவிட்டாலும் மற்றவர்கள் கொண்டு வந்ததைப் பங்குபோட்டு சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருந்தன. அவர்கள் ஒருவருக்கொருவர் சிரிப்பும் கும்மாளமுமாக வாழ்ந்து வந்தன (நம்மைபோல சீரியஸாக அல்ல எப்பவுமே ஒரு சில கவலைகள் ஏதாவது விதத்தில் நம்மை ஆட்டிப்படைத்து போலன்று)
அழகிய மாலை நேரத்தில் இவை மூன்றும், இரைக்காவும், இன்பதிற்காவும் வாக்கிங் போய்க்கொண்டிருந்தன. அப்பொழுது இலைகள் மூடிய கடின கற்கள் உள்ள பழமைய் வாய்ந்த பாழும் கிணற்றில் தெரியாமல் கால் வைத்ததில் இரண்டு தவளைகள் தவறி விழுந்தன. அதில் ஒன்று மட்டும் நூலிழையில் தப்பித்து நணபர்களைக் காப்பற்ற போராடியது.
கிணற்றில் விழுந்த இரண்டு தவளைகளும், தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமே, உணவில்லாத இக்கிணற்றிலிருந்து எப்படியாவது வெளியேறி விடவேண்டும் என்ற நோக்கில் தத்தித்தத்தி கிணற்றை விட்டு வெளிவர குதித்தன. மேல நின்று கொண்டிருந்த தவளை அவைகளை பார்த்து ‘குதிக்காதீர்கள், குதிப்பதால் நீங்கள் தட்டு தடுமாறி கிணற்றில் உள்ள கற்களால் காயமேற்படும் அல்லது தலையிலடித்து சாவதைவிட அங்கேய தங்கி விடுங்கள் என்று ஆரவாரமாக காட்டு கத்து கத்தியது. அதைக் காதில் வாங்காத இரண்டும் தவளைகளும் மீண்டும் மீண்டும் குதித்தது, அதில் ஒரு தவளை மேலே உள்ள தவளை உண்டாக்கிய பயத்துடன் கீழே பலமாக விழுந்ததில் அடிபட்டு மாய்ந்தது. மற்றொரு தவளை குதித்து குதித்து சாதித்தது அதன் பின்னர் கிணற்றுக்கு மேலே வந்து உயிர்க்காற்றை சுவாசித்தது.
மேலே இருந்த தவளை அதனைக் கண்டு ஆச்சரியப்பட்டு, “ நான் வர வேண்டாம், குதிக்கவேண்டாம், அது உயிருக்கு ஆபத்து என்று கத்தியும், நீ எப்படி மேலே வந்தாய்” என்று கேட்க.
அதற்கு மேலே தப்பித்து வந்த தவளை சொன்னது "நீ குதிக்க வேண்டாம் என்றா கத்தினாய் !!! எனக்கு காது கேட்காததால் நீ ஆரவாரமாக கத்தியது என்னை உற்சாகப் படுத்தி மேல வர செய்யத்தான் என்று நினைத்து உற்சாகத்துடனும் ,ஊக்கத்துடனும் குதித்தேன்,மேலே வந்துவிட்டேன்" என்றது.
ஆகையினால் இங்கே அறியப்படும் நியதி என்னவென்றால் “ சில சொற்கள் கொல்லும் வேறு சில சொற்கள் வெல்லும்” என்பதற்கேற்ப நல்ல சொற்களை நாவால் அடுத்தவர்களுக்கு சொல்லுங்கள் அது அவர்களுக்கு, ஊக்கமளிக்கும், பக்குவபடுத்தும், உங்களைப் பண்படுத்தும், வேண்டாத சொல்லை பிறருக்கு நீங்கள் சொன்னால் அது அவர்களை மட்டுபடுத்தும், மடமையாக்கும்.
நாவால் கெட்ட & சீரழிந்த குடும்பங்களையும், வாழ்க்கைகளையும் நிறைய பேசலாம் & எழுதலாம் ஆனால் நாம் உதாரணத்திற்காக சொல்லும் சில சம்வங்கள் யாரையும் தனிப்பட்ட முறையில் பாதித்துவிடும் என்பதால் அதனை தவிர்ப்பதற்காகவே மேற்சொன்ன உதரணத்தை சொல்லிக் காட்டினேன் ஆதால அவைகளை தவிர்த்திடுவோம்.
நாவை கட்டுக்குள் வைத்து பேணிக்கொள்வோமா நண்பர்களே !!! பேச வேண்டிய இடத்தில் அவசியமானதை பேச வேண்டியதை பேசினால் பிரச்சனை என்பதே வராது.
“உலகத்திலேயே பயங்கரமான ஆயுதம் எது?”
“தரிகெட்டுப் போன நயவஞ்சகரின் நாக்குத்தான் அது!” – என் எஸ் கே.
சிந்தனை & ஆக்கம்
- முகமது யாசிர்


