
இந்த தவறாக புரிந்து கொள்ளப்பட்ட குற்றவியல் சட்டம் எவ்வளவு தெளிவானது.அறிவுபூர்வமானது. நடைமுறைபடுத்த தகுதியானது பகிரங்கமானது. குற்றங்களை குறைக்க வல்லது என்பதை எடுத்து முன் வைப்பதுதான் இந்த பதிவு.
ஏற்றத்தாழ்வு
ஒட்டு மொத்த மனித குலத்துக்கும் நன்மைகளை வாரி வழங்குவதில் இஸ்லாம் என்றுமே முன்னிலை வகிக்கின்றது. இயற்கையிலேயே இறைவன் படைப்பில் மனிதன் எல்லா வகையிலும் ஏற்றத்தாழ் வோடுதான் படைக்கப்பட்டிருக்கின்றான். ஒரு கூட்டம் பலம் பொருந்தியதாக இருந்தால் , மற்றொரு கூட்டம் பலகீனமாக படைக்கப்பட்டிருக்கும், ஒருவன் செல்வந்தனாக இருந்தால் ஒருவன் ஏழையாக படைக்கப்பட்டிருப்பான். ஒருவன் குலத்தில் உயர்ந்தவன் என்றிருப்பான், ஒருவன் தாழ்ந்தவன் என்றிருப்பான்.இப்படி ஏற்றத்தாழ்வு , வறுமை செல்வம், வலிமை, பலகீனம் என்பது இறைவனின் இயற்க்கை படைப்பு.
வலிமை மிக்கவன் பலகீனமானவனை அடக்கி ஆளுதல், அவன் மீது தன் அதிகாரத்தை பிரயோகித்தல்,அவனுக்கு அநீதி இழைத்தல்.தன் வலிமையைக்கொண்டு அவன் சொத்து சுகங்களை சூறையாடுதல் எதிர்த்து நிற்பவர்களை தன் வலிமையைக்கொண்டு அடக்குதல் போன்ற அரசின் குற்றவியல் சட்டத்திற்கு கொஞ்சம் கூட பயமின்றி குற்றத்தை அவனால் அரங்கேற்ற முடிகின்றது. இது ஏன் நடைபெறுகின்றது?
அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் துப்பாக்கி கலாச்சாரம் சர்வ சாதாரணம். அங்கே பொம்மைகளை கடையில் வாங்குவதுபோல் மிகவும் சர்வசாதரணமாக வாங்கி விடுகின்றனர். அதன் பின் விளைவுகளை அதிகமாக தெரிந்து வைத்திருந்தும் பள்ளிக்கு செல்லும் மாணவன் கூட சர்வ சாதாரணமாக பயன் படுத்தும் அளவுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டு அதன் விபரீதம் வெளியான பின்னே சிந்திக்கத்தலைப்படுகின்றனர்.
குற்றங்களின் பின்னணியும், அதை செயல்படுத்திய விதமும் சர்வசாதாரணமாக ஆராயப்பட்டு குற்றங்களுக்குண்டான தண்டனை குற்றவாளி திருந்தி வரும் தண்டனையாக இருப்பதில்லை.மாறாக முன்பிருந்ததைவிட படுமோசமான மூர்க்கனாக வெளி வருகின்றான். அதைவிட பன்மடங்கு கொலைக்கு வித்திடும் ஒரு மாபாதக செயலின் முன் திட்டத்தோடு வெளியில் வருகின்றான். அநியாயக் கொலைக்கு கொலை என்றிருந்தால் குற்றங்கள் சங்கிலித்தொடராகும் வாய்ப்பே இல்லாமல் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து போகும். ஒரு குற்றமற்ற சமுதாயம் உருவாக வழி பிறக்கும். இதை இவர்களும் புரிந்திருக்க வில்லை.
ஆதலால் குற்றமற்ற சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் இவர்களுக்கும் தோல்வியே முடிவாக இருக்கின்றது. காரணம் கொடுக்கப்படும் தண்டனையில் வீரியம் இல்லை. தண்டனை பெற்றவன் இனி இக்குற்றத்தை கனவிலும் நினைத்துப்பார்க்காத அளவுக்கு தண்டனை பகிரங்கமாக இருக்கவேணும். இந்த தண்டனையை பார்க்கும் சமூகம் அந்த குற்றத்தை நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு தண்டனையில் கடுமை வேணும் இதை செய்யாதவரை மக்களின் இயல்பு வாழ்க்கை என்பது என்றும் ஒரு கேள்விக்குறியாகத்தான் சமூகத்தில் இருக்கும்.
ஏற்றத்தாழ்வு ஒரு காரணம்
ஏற்றத்தாழ்வுகள் என்று இருக்குபோது இயற்கையிலேயே மனித மனம் அவனை குற்றத்தில் ஈடுபட வைக்கின்றது . எல்லோருமே எல்லாவிதத்திலும் சரி சமமாக படைக்கப்பட்டிருந்தால் குற்றங்கள் ஏற்பட வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். ஒருவனிடம் இருக்கும் செல்வம், வலிமை ,குலப்பெருமை, ஆற்றல் அதிகாரம் மற்றும் அனைத்து உலக விஷயங்களில் மற்றவனை விட மேம்பட்டு இருக்கும்போதுதான் அவனை அவன் மனம் தவறு செய்ய அவன் அதிகாரத்தையோ, அவன் ஆற்றலையோ பயன் படுத்தத்தூண்டுகின்றது. வலிமை குன்றியவனுக்கு நீதி கிடைப்பது என்பது அரிதாகின்றது. இருவருமே பலத்தில் சமமானவர்களாக இருக்கும் பட்சத்தில் அங்கே ஒருவன் மீது ஒருவன் தன் வலிமையை பிரயோகிக்க வாய்ப்பில்லாமல் போகின்றது.
ஆனால் உலகில் மனிதன் படைக்கப்பட்ட நியதியில் ஏற்றத்தாழ்வு என்பது இப்புவியின் இயக்கம் நிற்கும் வரை தொடர்வதாகும். ஆதலால் குற்றங்களே நிகழாத உலகை காண்பது என்பது கும்மிருட்டில் நடுக்கடலில் கடுகை தொலைத்து விட்டு தேடுவதுபோல் தான். ஆதலால் உலக முடிவு நாள் வரை குற்றங்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கும் என்றாலும்,இக்குற்றங்களை களைய வழியே கிடையாதா? இதை தடுப்போர் யாருமில்லையா ? அதற்க்கு இவ்வுலகில் வேறு ஏதாகிலும் சக்தி இல்லவே இல்லையா ? இது தொடர் கதை தானா ? என்பதற்கு இல்லவே இல்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாவிட்டாலும் இவ்வுலகின் கணிசமான குற்றங்களை கண்டிப்பாக துடைத்தெறிய முடியம் என்பதற்கு தீர்வு ஒன்றுதான். அதுதான் இஸ்லாத்தின் அல் -குரானின் குற்றவியல் சட்டங்கள்.
தண்டனையில் கடுமை தேவை
உலகின் மற்ற எந்த சட்டத்தாலும் இன்றுவரை உலகளவில் குற்றங்களை குறைக்க முடியாமல் விழி பிதுங்கி ஒவ்வொரு நாடும் அமைதி வேண்டி ஆளாய் பறக்கும்போது. அதற்கு வடிகாலாய் இஸ்லாத்தின் குற்றவியல் சட்டங்கள் நம் முன்னே விரிகின்றது. இதன் அறிவுபூர்வ குற்றவியல் சட்டங்கள் எக்காலத்திற்கும் பொருத்தமானவை. மாற்றம் தேவை இல்லாதவை.
உலகில் உள்ள பெரும்பாலான அரசாங்கங்கள் குற்றவியல் சட்டத்தை அமுல்படுத்துவதில் இன்றுவரை தோல்வியைத்தான் தழுவி இருக்கின்றன. ஏனனில் குற்றங்களுக்காக கொடுக்கப்படும் தண்டனை குற்றவாளியை எந்த விதத்திலும் திருத்துவதாக இல்லை. மாறாக தண்டனை என்னும் பெயரில் அவர்கள் உள்ளே வாழும் சொகுசு வாழ்க்கை , நாம் தண்டனை பெற்று உள்ளே வந்து இருக்கின்றோம் என்ற அச்ச உணர்வை ஏற்ப்படுத்தாததுதான்.
அறைகூவல்
இந்த குற்றவியல் சட்டத்திற்கு முஸ்லிம்களாகிய நாம் உரிமை கொண்டாடும் அதே வேளையில், அதை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தும் வாய்ப்பில்லாத தேசத்தின் பிரஜைகளாக நாம் இருக்கின்றோம். இந்த நாட்டில் குற்றவியல் சட்டத்தின் பொறுப்பில் உள்ள அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இதை ஒரு அறைகூவலாகவே விடுக்கின்றோம்.
நீங்கள் உண்மையிலேயே நம் தேசத்தின் மீதும், நம் நாட்டின் இறையாண்மையின் மீதும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளவர்களாக இருந்தால். நம் நாட்டில் சட்டமும் ஒழுக்கமும் பாதுகாக்கப்பட்டு குற்றங்கள் குறைய வேணும் என்று உண்மையிலேயே விரும்பினால், பெண்களின் கற்பும், மானமும், பாது காக்கப்படவேனும் என்று உள்ளத்தில் உண்மையில் மனப்பூர்வமான உறுதி இருந்தால்,இது ஒரு குறிப்பிட்ட மதத்தின் சட்ட திட்டங்களில் உள்ளது என்ற குறுகிய வட்டத்தில் பார்க்காமல், இது மனிதக்கரங்களுக்கு அப்பாற்பட்ட , ஒரு இறை சக்தியின் மூலம் வந்தது என்று நினைத்து, குற்றத்திற்குண்டான சட்டமாக அமுல் படுத்திப்பாருங்கள் அதன் அற்புத விளைவை வெகு சீக்கிரம் அறிந்து கொள்வீர்கள்.
அப்படியின்றி, குற்றங்கள் மலிந்தாலும் பரவாயில்லை, நாட்டில், லஞ்சம், லாவண்யம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு,அயோக்கியத்தனம், மிரட்டல், இன்னும் என்னென்ன தீமைகள் உலா வருகின்றனவோ அவை அனைத்தும் தொடர்கதையானாலும் பரவாயில்லை , ஒரு சிறுபான்மை மக்களின் மார்க்கத்தின் குற்றவியல் நடைமுறை சட்டத்தை நாட்டின் குற்றவியல் சட்டமாக அறிமுகப்படுத்தத்தயாரில்லை என்று பகிரங்கமாக நீங்கள் சொல்வதைத்தவிர உங்களுக்கு வேறு வழி இல்லை என்று தான் எடுத்துக்கொள்ள முடியும்.
மனித சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது
மனிதன் இறைவனால் படைக்கப்பட்ட ஒரு பலகீனமான,ஆத்திரம், அவசரம், மற்றும் சொற்ப அறிவே கொடுக்கப்பட்ட ஒரு ஜீவன்.இறைவனால் படைக்கப்பட்ட மூளையைத்தவிர வேறொன்றும் நம் சிரசில் இல்லை. அது ஒரு குறிப்பிட்ட அளவில்தான் சிந்தித்து எதையுமே முடிவு எடுத்து இறுதி கட்டத்திற்கு வரும். அந்த சொற்ப அறிவே கொடுக்கப்பட்ட மூளையைக்கொண்டு மனிதனும் தான் மனிதன் என்ற முறையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் பொருந்தும் சட்டத்தைத்தான் தன் சிந்தனையில் கொண்டு வந்து சட்டமியற்ற முடியும்.
இது காலத்திற்கு ஏற்பவும் , குற்றத்தின் தன்மை, இடம், பொருள், ஏவல் அனைத்தின் தன்மையைப்பொறுத்து கண்டிப்பாக மாற்றங்களுக்கு உள்ளாகியே தீரும்.
ஆனால் இறைவனின் குற்றவியல் சட்டமோ எக்காலமும் எக்குற்றத்திற்கும் ஏற்றாற்போல் மாற்றத்திற்கு இடமின்றி மாறி வரும் காலத்திற்கும் மாற்றத்தேவையில்லாத ஒரு அறிவாற்றல் மிக்க சட்டமாகும். இப்பூவுலகில் அமைதிப்பூங்கா என்னும் குற்றமற்ற மனித சமூகம் எங்கும் உருவாக,குற்றத்தை ஒருவன் செய்யுமுன் அவனை ஒரு கணம் யோசிக்க வைக்கும் கடுமை நிறைந்த சட்டமாகும்.
ஒருவன் ஒரு திருட்டுக்குற்றத்திற்காக சிறை தண்டனை அனுபவிக்கின்றான் என்று வைத்துக்கொள்வோம். நம் நாட்டு குற்றவியல் சட்டப்படி ஒரு குறிப்பிட்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டு, அரசு செலவில் சாப்பாடு, மற்றும் எல்லாவிதமான சுகங்களையும் அனுபவிக்க வைத்துவிட்டு அவனை சிறையிலிருந்து விடுதலை செய்தால், சிறைத்தண்டனை அவனை எந்தவிதத்தில் மாற்றி இருக்கும். ஒரு விளைவும் அதனால் ஏற்ப்பட்டு இருக்காது. இதனால்தான். 15முறை சிறை சென்றவன் மீண்டும் கைது என்று செய்தித்தாள்களில் படிக்கின்றோமா இல்லையா ?
குற்றத்தின் தண்டனை எப்படி இருக்கவேணும் ? இந்த குற்றத்தை செய்தவன் இனிமேல் செய்யாத அளவுக்கு இருப்பதோடு, அவனுக்கு கொடுக்கும் தண்டனை பகிரங்கப்படுத்தப்பட்டு, இனிமேல் சமூகத்தில் அந்த குற்றமே நிகழாத வண்ணம் இருக்க வேண்டுமல்லவா ? இதைத்தான் இஸ்லாம் சொல்கின்றது.
மனித உறுப்பை சேதப்படுத்தினால் :
:உயிருக்கு உயிர் என்ற சட்டத்தில்தான் உங்கள் உயிருக்கு உத்திரவாதம் இருக்கின்றது என்று அருள் மறை குரான் அதிரடி சட்டத்தை அறிவுபூர்வமாக அள்ளித்தருகின்றது. ஒருவன் உயிருக்கு அநியாயமாக குறி வைப்பவனின் உயிருக்கும் குறி வைக்க சொல்கின்றது.
கண்ணுக்கு கண் பல்லுக்கு பல், என்று சட்டத்தை வரையறுத்து ஒருவனுக்கு அநியாயமான முறையில் தன் உறுப்புகளில் ஒன்று மற்றவனால் சேதப்படுத்தப்பட்டால், அவன் எந்த உறுப்பை சேதப்படுத்தினானோ, அதே உறுப்பை சேதப்படுத்தவேனும். அதை ஆளும் அரசே செய்யவேணும். அதையும் பகிரங்கமாக செய்யவேணும். என்று சொல்கின்றது.
ஒருவனின் உரிமையுள்ள பொருளை அவனுக்கு தெரியாமல் திருடி விட்டானா அவனது கையை வெட்டு . பின்பு பார் ஓராயிரம் கைகள் வெட்டப்படுவது தவிர்க்கப்படும், ஒரு பெண்ணின் கற்பு சூறையாடப்பட்டதா ? கொடு அவனுக்கு மரண தண்டனை, ஒரு லட்சம் பெண்களின் கற்பு பாது காக்கப்படும்
ஒருவன் உன் கன்னத்தில் ஞாயமின்றி அறைந்தானா ? அவனும் கன்னத்தில் அறையப்பட்டவேனும். ஒருவன் உன் பல்லை உடைத்தானா ? அவன் பல்லும் உடைக்கப்படவேனும்.இவை அனைத்தும் ஒரு அரசு தன் கட்டுப்பாட்டில் இருக்கும் குற்றவியல் சட்டத்தின் மூலம் குற்றத்தின் தன்மையில் அதில் பாரபட்சம் இல்லாமால் நடைமுறைப்படுத்தினால் குற்றமற்ற தேசத்தை நம் கண் முன்னே அரசில் கோலோச்சும் ஆளும் வர்க்கமும் அதன் அதிகாரிகளும் காணமுடியும். உங்கள் முன் தெளிவான அழகான குற்றவியல் சட்டங்கள் இருந்தும் கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்து கொண்டு இருக்கின்றீர்கள்.
ஒரே ஒருமுறை நடை முறைப்படுத்தி பாருங்கள் ஒரு 5 வருட காலத்திற்கு.இதன் உண்மை உலகுக்கு தெரியவரும். எவ்வளவு மாபாதக செயல் என்று கருதப்படும் குற்றங்களும் இருந்த இடம் தெரியாமல்,,உண்மை ஜனநாயகத்தின் காலில் போட்டு மிதிக்கப்பட்டு அமைதிப்பூங்காவாக ஒட்டு மொத்த தேசமும் குற்றமற்ற தேசமாக மலரும்.
இதனை சட்டமாக்கினால் ஏற்படும் நன்மைகள் :
1. குற்றங்கள் கணிசமாக குறையும்.
2. வழக்குகள் தேங்கும் நிலை ஏற்படாது.
3. சிறை குற்றவாளிகளினால் நிரம்பி வழியாது.
4. சிறை சாலைகளை அதிகப்படுத்த வேணும் என்ற அவசியம் இருக்காது.
5. நீதிபதிகள் எண்ணிக்கையையும், அரசு வழக்கறிஞர்கள் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தவேனும் என்ற அவசியம் இருக்காது.
6. சிறை சாலையில் குற்றவாளிகளுக்காக செலவிடப்படும் தொகை கணிசமாக குறையும். அந்தப்பணத்தை வேறு அரசின் பொது நலக்காரியங்களுக்கு பயன் படுத்தலாம்.
7. வழக்குகளுக்கான நீதி கிடைப்பது துரிதப்படுத்தப்படும்.
8. பொதுமக்கள் அச்சமின்றி நடமாட வழி வகை பிறக்கும்.
9. குற்றம் புரியும் எண்ணமுள்ளவனுக்கு குற்றம் செய்வதற்கு முன் பயத்தை ஏற்ப்படுத்தும்.
10.தாமதமாக கிடைக்கும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்னும் அவல நிலை அகலும்.
இக்குற்றவியல் சட்டத்தை அமுல் படுத்த தலைப்படும்போது, எந்த நாடு இதற்கு முன்னுரிமை கொடுத்து முந்திக்கொள்கின்றதோ அது அமைதிப்பூங்காவாக, குற்றமற்ற சமுதாய மக்கள் வாழும் பிரதேசமாக உண்மை ஜனநாயகம் என்னும் ஆலமரம் வேரூன்றி நிழல் தரும் நாடாக கண்டிப்பாக மாறும், இச்சட்டம் மாற்றிக்காட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.
* இன்னும் எத்தனையோ அலப்பரிய நன்மைகளை அள்ளித்தரும் தகுதி பெற்றது இந்த சட்டம்.
* குற்றவாளியை குலை நடுங்கவைக்கும் தன்மை பெற்ற சட்டம்.
* மனிதாபிமானத்தை ஆதரிக்கும் சட்டம்.
* எந்த அதிகாரத்திற்கும் வளைந்து கொடுக்காத , கொடுக்கக்கூடாத சட்டம்.
* நீதி செலுத்துபவன் உறவினரே பாதிக்கப்பட்டாலும் நீதியை நிலை நாட்டத்தவறாதே என்று நீதிபதிக்கு உரத்த குரல் கொடுக்கும் சட்டம்.
* நாணல் போல வளைந்து விடாமல் , தர்மத்தாய்க்கு நிழல் கொடுக்கும் சட்டம்.
* உண்மை தன்னை ஊனப்படுத்திவிடாமல், அதற்கு தலைகுனிவு வந்துவிடமால், தடுமாற்றத்திற்கு இடமில்லா சட்டம்.
* இப்புவி கண்டிப்பாக பின்பற்றி நடக்க வேண்டிய புனிதம் பொருந்திய சட்டம்.
* இறைவனின் இக்குற்றவியல் சட்டம்.
* அமுல் படுத்தி ஆதரித்து, அதன் பலனை வாழ்நாளிலேயே காணும் அரசு உண்டா?
* உண்டென்றால் அங்கே குற்றமற்ற சமுதாயமும் உண்டு.
* குற்றமற்ற அரசும் உண்டு .
வாருங்கள் இஸ்லாத்தின் குற்றவியல் சட்டத்தின் நிழலில்
குற்றமில்லாச் சமுதாயமாக.
அமைதியின் ஆனந்தத்தை நோக்கி...!
அபு ஆசிப் என்ற அப்துல் காதர்