அதிரை பேரன் சோஃபாவில் உட்கார்ந்து மடிக்கணினியில் எதையோ ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருக்க, குடையை மடக்கியபடி உள்ளே வருகிறார் அதிரையின் அப்பா.
“அஸ்ஸலாமு அலைக்கும்”
“அலைக்குமுஸ்ஸலாம் அப்பா”
“வாங்கப்பா. சாணி ஏதும் மிதிச்சிட்டு வந்தியலோ, நாறுதே அப்பா?’
“வெளியே வாசப்படில செருப்ப நல்லா தேச்சிட்டுத்தானே வந்தேன். அத உடுங்க பேராண்டி. நீங்க என்னத்த பாக்றிய?’
“இதெல்லாம் உங்களுக்கு வெளங்காது அப்பா. உங்க காலத்ல இதெல்லாம் கெடையாது.’
“அது சரி. சும்மா காட்டுங்களேன் வாப்பா. நானுந்தான் பார்க்றேன்.”
“சொன்னா கேக்க மாட்டியலே அப்பா….”
“(பார்த்துக் கொண்டே) என்ன நம்ம புள்ளைவ்ளா உட்காந்து பேசிக்கிட்டிருக்காஹ. இதுல என்ன புதுமை?”
“அப்பா, இதுக்குப் பேரு விவாதம். வாயால அடிச்சிக்கிட்டு உழுவுறது.”
“எதப்பத்தி விவாதமாம் பேராண்டி?”
“அதப்பத்தித்தான் அப்பா.”
“எதப்பத்தி டாப்பா?
“அதான் ஆதார பூர்வமா சொன்னேனே...அதப்பத்தித்தான் அப்பா.”
“என்ன பேராண்டி.. ஒன்னுமே சொல்லாம சொல்லிட்டேன் சொல்லிட்டேங்கிறியல?”
“அதான் விவாதம் அப்பா. உங்களுக்கு வெளங்காதுன்டு சொன்னா கேக்றியலா?”
அவ்வமையம் அதிரை பேராண்டியின் தோஸ்த் பேராண்டியும் ஸலாத்தோடு உள்ளே நுழைய, அப்பா அவனிடம் தொடர்கிறார்
“அஸ்ஸலாமுஅலைக்கும்”
“வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ. வா தம்பி, உன் தோழனுக்கு என்னாச்சுன்னு தெரியலே. ஒரு மாதிரியா பேசுது. என்னெண்டு கேளேன்.”
“ஏன்...என்னெண்டு பேசுறான்? விவாதம் ஏதும் பார்த்தானா அப்பா?”
“அட, என்ன இப்டிப் போட்டு ஒடக்கிறிய! ஆமா. அதத்தான் பார்க்றான்.”
“அப்பா, உங்களுக்கு வெளங்காது. விவாதம் பார்த்தா அப்டித்தான் பேசுவான். இவன் மட்டுமில்ல, விவாதம் பார்க்ற ஒவ்வொருத்தரும் ஒரு நாலைஞ்சு நாளைக்கும் மந்திரிச்சி வுட்ட மாத்ரித்தான் பொலம்புவாங்க. நீங்க ஒன்னும் கவல படாதிய.”
“தோளபுள்ள பேராண்டி, நீயாவது சொல்லுப்பா. விவாதம்னா என்னா?”
“அப்பா, விவாதம்னா... மொத மொதல்ல நேராவோ மீடியா மூலியமாவோ யாரையாவது வாய்க்கு வந்த மாதிரி கன்னாபின்னான்னு திட்டுவாங்க. திட்டு வாங்கிட்டு அமைதியா இருந்தா உட்றுவாங்க. ஏண்டா திட்றியன்னு கேட்டா கடுப்பாகி மேலும் கேவலமாவும் அசிங்கமாவும் திட்டுவாங்க. சரி, திட்டாதிய. பேசித்தீர்த்துக்கலாம் என்று கூப்பிட்டா, மேடை போட்டு மைக் வச்சி, விடியோவெல்லாம் எடுத்து பரஸ்பரம் திட்டிக்குவாங்க இந்த சனியனத்தான் விவாதம்பாங்க. “
“எல்லாம் நம்மூட்டு புள்ளைவோ மாதிரித்தானே தெரியுது. யாராவது பெரிய மனுஷன்ட்ட சொன்னா இவங்க பிரச்னையைத்தீர்த்து வைக்க மாட்டாங்களா பேராண்டிங்களா?”
“நீங்க வேற அப்பா. பெரிய மனுஷன் யாராவது தலையிட்டா போச்சு, அந்தாள படு கேவலமாவும் அந்தரங்கமாவும் திட்டுவாங்க. பாலியல் குத்தமோ பொருளாதார கையாடலோ சுமத்தி ஓச்சுடுவாங்க. இவிங்க சல்லியம் தாங்க முடியாம ஒவ்வொரு பெரிய மனுஷனும் அவங்கவங்க தனியா கடைய விரிக்க ஆரம்பிச்சிடுவாங்க. ஒரே வார்த்த/ ஒரே வசனத்துக்கு ஆளாலுக்கு அர்த்தம் சொல்லி அவங்கவங்க சொல்றதுதான் சரின்னு ஒத்துக்கச் சொல்லுவாங்க. ஒத்துக்கலயா? திட்டுவாங்க. விவாதத்தை ஆரம்பிக்கக்கூட ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுக்க மாட்டாங்க. கிரிக்கெட் டாஸ் போட்டுத்தான் முடிவெடுப்பாங்க.”
“கிரிக்கெட் டாஸா? அதென்ன பேராண்டிங்களா?”
(அப்பாட பேராண்டி குறுக்கிட்டு) “அட அத வுட்றா. இட்ஸ் கெட்டிங் இண்ட்டு ட்டூ ட்டெக்னிக்கல்.”
“என்ன சொல்றான்? தோழப்புள்ள எங்கிட்ட சொல்ல வேணாம்றானா?”
“இல்லப்பா, உங்களுக்கு வெளங்காதுன்றான்.”
“அவன் கெடக்றான். நீ சொல்லு தோழப்புள்ள பேராண்டி. டாஸ் தெரியும். அதென்ன கிரிக்கெட் டாஸ்?”
“அது...வந்து... எனக்கு கிரிக்கெட் தெரியாதே தாத்தா. அவன்ட்ட கேளுங்க. அவந்தான் ஃபோர் சிக்ஸ்ண்டெல்லாம் உளறிக்கிட்டு இருப்பான். டேய் நீயே சொல்லு.”
“அது... அப்பா, எனக்குக் கிரிக்கெட்டும் தெரியும் டாஸும் தெரியும் ஆனா கிரிக்கெட் டாஸில் என்ன சூட்சமம் இருக்குன்னு தெரியாது அப்பா.”
“அப்டீன்னா என்னான்னு அவங்கள்ட்டே கேட்க வேண்டியதுதானே?”
“அத கேட்டா வெளக்கஞ்சொல்லியே விடிய வச்சிடுவாங்க. வுட்டுப்பாருங்க, எது நேர்மையானது கிரிக்கெட் டாஸா… ஹாக்கி டாஸான்னு ஒரு விவாதம் வச்சாலும் நாலு நாளைக்குப் பேசற அளவுக்கு வெவெரமானவங்க.”
“நாலு நாளைக்கா?”
“ஆமா அப்பா, அதொன்னும் செரமம் இல்ல. ஒரே சேதிய திருப்பி திருப்பி சொல்லியே இழுப்பாங்க. விவாதப் பொருளைப் பத்தி ஒரு நிமிஷம் பேசிட்டு, விவாதிப்பவரைப் பத்தி அவர் வேட்டி சட்டயப் பத்தி தொப்பியப் பத்தி ஒரு மணி நேரம் வேணும்னாலும் பேசுவாங்க.”
“எதப்பத்தி பேசுறாங்கலாம்?”
“யாருக்குத் தெரியும்?. எத்ப்பத்தி பேசினாலும் ஏதோ சூனியம் வச்ச மாதிரி ஒரே சேதியத்தான் சுத்திச்சுத்தி வருவாங்க. அவங்களத் திட்னதுபோக மீதி நேரத்ல அவங்க கேள்விக்கு பதில் சொல்வாங்க அப்பா.”
“என்ன கேள்விங்க பேராண்டி?”
“என்ன கேள்வியா இருந்தாலும் பதில் ஒன்னுதானே அப்பா.”
“அதெப்டி?”
“’கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்ட்டோம்’னுதான் எல்லா கேள்விக்கும் பதில் சொல்வாங்க அப்பா.”
“இதையா இப்டி உழுந்து உழுந்து இவன் பார்க்றான்?”
“டேய் வாடா போலாம். அப்புறம் கொருத்துப் போட்டுட்டா ஆட்ட்த்ல சேர்க்க மாட்டாங்க”
இருவரும் புறப்பட்டு ஃபுட்பால் ஆட போகிறார்கள்.
(திரை)
மு.கு.: வழக்கமான அப்பா பேரன் படைப்பாளிக்கும் இதற்கும் தொடர்பில்லை... !
அதிரைநிருபர் பதிப்பகம்