கண்ணுக் கெட்டும் தூரம்வரை
கம்பீரமாய்க் கடல்
காலைத் தொட்டு உதிரும்போது
காதலுடன் மணல்
சேற்று வாசம் எனினும்
காற்று வீசும் கடற்கரை
எனதூர் காற்றுக்கு மட்டும்
விரல் முளைத்து உடல் வருடும்
பார்த்துப் பார்த்துப்
பழகிப்போன சூரியன்
பழகிப் பழகிப்
பரிச்சயமான சந்திரன்
தென்னைமரத் தோகை
தென்றல் வீசி அசையும்
தேனிருக்கும் இளநீர்
தானிருக்கும் குலையில்
எழுதிவைக்க மறந்த
நினைவுகளைச் சேமிக்கும்
வாய்க்காலும் வரப்புகளும்
உப்பளமும் ஊருணியும்
பாங்கொலிக்கும் பள்ளிகள் - பொறுப்பாகப்
பங்களிக்கும் பெரும் புள்ளிகள்
தழும்பி நிற்கும் நீர்நிலைகள்
அரும்பி நனைக்கும் படிக்கரைகள்
தும்பி பறக்கும் சிறுகாடு

ரயில் ஓடும் ஊர் ஓரம்
வெயில் காயும் வெட்டவெளி
மயில் வந்து ஆடாவிடினும்
ஒயில் குன்றா எழில் எனதூர்
என்னவாயிற்று?
இன்றோ
கலைந்துபோன கனவைப்போல
குழைந்து கிடக்கிறது எனதூர்
விளையாட்டுத் திடலிலும்
வற்றிப்போன குளத்திலும்
குழுக்கள் குழுக்களாய்
குடியும் கும்மாளமும்
ரயில் நிலையத்தைப் பார்
வெயில் சாய்ந்தால் "பார்"
ஆப்ரிக்க வயிறுகளாய்
காய்ந்து மெலிந்த
வாய்க்காலிலும் கால்வாயிலும்
செழிப்பாய் நிற்கின்றன
நீர் உறிஞ்சும் செடிகொடிகள்
கார்காலத்தில்
பனிப்பொழிவிலாவது
ஈரம் பார்த்துவிட
ஏங்குகிறது ஊர்
வசந்த காலத்திலேயே
உலர்ந்து உதிர்ந்துவிட
இலையுதிர்க் காலத்தில்
உதிர்க்க இலையின்றி
பருவ காலம் ஒன்று
அழிந்து மறைகிறது
கைவிடப்பட்ட சேது சமுத்திர
திட்டத்தின் எச்சமான
அகலச் சாலையில்
ஆக்ரமிப்புகள் ஆரம்பம்
கற்பனை கதாபாத்திரமோவென
கலங்க வைக்கிறது
இணையத்தில் மட்டுமே
எழுச்சி பேசும் எனதூர்
மழை பொய்த்து
பிழை மிகைத்து
பிடிவாதமான பிரிவினைகளால்
உருக்குலைந்து
ஊரழிந்து போகிடுமோ
உறவறுந்து விலகிடுமோ!?
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்