* அதிரையில் கொடிமரம் ஏற்றி அதனைத் தொடரும் கந்துரியால் இதுவரை மூன்று உயிர்கள் பலியாகி உள்ளது. சமீபத்தில் சந்தனம் பூசப் போன ஒருவர் மூச்சி மூட்டி மண்ணறைக்கு சென்று விட்டது பற்றி இந்த கொடி(ய)மரம் ஏற்றிய மரமண்டைகள் துளிகூட அலட்டிக் கொள்ளாமல் இன்னும் சுதந்திரமாக ஊர் சுற்றி வருவது எழுந்து நிற்கும் இந்தக் கொடிமரத்தை விட கொடூரமாக இருந்தது அவர்களின் தொடர் செயல்கள்.
* தரகர் தெரு பிரச்னை ஆங்கங்கே கொழுந்து விட்டு எரிகின்றது இதற்கு முக்கிய காரணம் பஞ்சாயத்துக்கு கட்ட வேண்டிய ரூபாய் 10 ஆயிரத்தை கட்டவில்லை என்று சொல்லி பஞ்சாயத்தும், அபராதம் கட்ட வேண்டிய வரும் மோதிக் கொண்டதில் பலருக்கு காயமும். வீடுகளுக்கு சேதமும் இதனால் இரு தரப்புக்கும் பல லட்சங்கள் செலவுடன் நிம்மதியும் இழந்தது தான் மிச்சம்.
*ஊரில் கூட்டம் அதிகம் காணப்படும் இடங்களில் முன்னணியில் இருப்பவைகளான, போலீஸ் ஸ்டேஷன், டாஸ் மாக் என்று ஸ்டைலாக அழைக்கப்படும் கேடுகெட்ட சாரயக்கடைகள், ஹாஸ்பிடல்ஸ் மற்றும் மெடிக்கல் ஷாப்ஸ் ஆகியவை.
* முன்பெல்லாம் வெளியூர்களிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் ஊருக்குள் நுழையும்போது சற்றே நிமிர்ந்து பார்த்தால் பட்டென்று கண்ணில்படுவது பள்ளிவாசல்களின் மினாராக்கள். இப்போது எந்தப் பக்கம் ஊருக்குள் நுழைந்தாலும் நேர் கொண்டு பார்த்தால் கண்ணில் படுவது அரசு நடத்தும் டாஸ் மாக் சாராயக்கடைகள் அன்னாந்து பார்த்தால் செல்ஃபோன் டவர்கள் தான்.
* இந்த முறை ஊரில் அதிகமதிகம் பஸ் பயணம் மேற்கொண்டதில் நிறைய அனுபவம் கிடைத்தது. அதில் ஒன்று இராமநாதபுரத்தில் இருந்து பஸ் புறப்பட்டதும் ஒருவர் போனில் "அப்பத்தை சுட்டுவை" என்று சத்தமாக சொன்னவர் மூன்று மணி நேரம் கழித்து மல்லிபட்டினத்தில் கைலி அவிழ்ந்தது கூட தெரியாமல் பஸ்ஸை விட்டு இறங்கிப் போனார் குடிகளில் பலவகை உண்டாம் அதில் ஒருவகை பயணக்’குடி’யாம் இது.
* SP பட்டினம் என்ற ஊரைப் பற்றி கேள்விப்பட்டுள்ளோம் அந்த பக்கம் பஸ்ஸில் போகும் போதுதான் அதன் முழு அர்த்தம் தெரிந்தது சுந்தர பாண்டியன் பட்டினம் இதைத்தான் சுருக்கி SP பட்டினம் என்று வைத்துள்ளார்கள். இந்த ஊருக்கு அடுத்த ஊர் ‘பாசி பட்டினம்’ நல்லவேளை இந்த ஊரின் பெயரை சுருக்கி வைக்கவில்லை அப்படி சுருக்கி வைத்திருந்தால் மூக்கை மூட வைத்திருக்கும்.
* ஊரில் ஏராளமான வீடுகளில் பகல் சாப்பாட்டுடன் சமையல் சட்டி சாப்பாட்டு பொட்டிகள் எல்லாம் கழுவி கவிழ்த்தி வைத்து விடுகின்றார்கள். காரணம், ஊரில் இரவு கடைகள் பெருத்துப் போய் விட்டதால் .இரவு கடைகள் தற்போது இலவச டோர் டெலிவரியும் செய்து வருகின்றார்கள்.
* நம் ஊரில் பெரும் பாலான கொடுக்கல் வாங்கல் சிக்கல்கள் எல்லை தாண்டி பட்டுக்கோட்டையில் உள்ள ராஜக்களிடமும் தம்பிகளிடமும் கட்டப் பஞ்சாயத்து வைத்து தீர்த்து வைத்து விடுகின்றனர். பணம் கொடுக்கக்காமல் டிமிக்கி கொடுப்பவரிடம் கிடிக்கி பிடி போட்டு பணத்தை வாங்கி பணம் கொடுத்தவருக்கு தங்களை கழிவுத் தொகையை கரைத்துக் கொண்டு திருப்பி கொடுத்து விடுகின்றனர் ராஜாக்களும் தம்பிகளும்..
* காசை கரியாக்குவதை கேள்விப்பட்டுள்ளோம் கரியை காசாக்குவதை இராம்நாட்டில் இருந்து தூத்துக்குடி போகும் பாதையில் பார்க்கலாம் அதாவது கருவங் காட்டை வெட்டி கரி மூட்டம் போட்டு கரியை காசக்குகின்றனர்.
* எந்தவொரு வேலைக்கும் இப்போது ஊரில் ஆள்கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கு. இதற்கு காரணம் 25 ஆண்டுகளுக்கு முன் மக்கள் தொகையை குறைக்க அரசு கொடுத்த விளம்பரம் அதாவது நாம் இருவர் நமக்கு இருவர். அதன் பின் நாம் இருவர் நமக்கு ஒருவர் (நாமே குழந்தை நமக்கேன் குழந்தை என்று விளம்பரம் கொடுக்காமல் இருந்தார்களே!!) என்று ரப்பரை பயன்படுத்த சொல்லி இப்போ ரப்பர் தோட்டத்திற்கே வேலைக்கு ஆள் கிடைக்காமல்அரசு செய்து விட்டது !
* ஒரு முறை ஊரில் இருந்து வெளி ஊர் செல்லும்போது போகும் வழி நெடுக எல்லா ஊரிலும் ஒரே MGR திரைப்பட பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருந்தது காரணம் விசாரித்தபோது அன்றைய தினம் MGR பிறந்தநாளாம் செத்தவருக்கு பிறந்த நாள் கொண்டாடும் ஈன பிறவிகளை நினைத்து நொந்து கொள்ளத்தான் முடிந்தது நம்மால், இவர்கள் திருந்த இந்த நூற்றாண்டில் வாய்ப்பே கிடையாது.
* இப்போது ஊரில் பெரும் பணக்காரர்களும் சிறு பணக்காரர்களும் கூட்டணி போட்டு செய்யும் தொழில் வியாபாரத்திற்கென பல லட்சங்களை வாங்கி கொண்டு மாதம் முடிந்ததும் லாபம் என சொல்லி ஒரு லட்சத்திற்கு 2 ஆயிரம் முதல் மாதாமாதம் கொடுத்து விடுகின்றனர். இதில் பலரும் பல லட்சங்களை கொடுத்து விட்டு மாதம் முடிந்ததும் பல ஆயிரங்களை வாங்கிக் கொண்டு உல்லாசமாக ஊர் சுற்றுகின்றனர் இவ்வகை வரவுகள் கூடுமா கூடாதா என அதிரைநிருபரில் ஒரு பட்டி மன்றம் வைக்கலாம்.
* நம் ஊர் பிரபலமான மார்கெட் தற்போது மார்க்கெட் இழந்து தவிக்கிறது. காரணம் வட்டிக்கு வாங்கி மீன் வியபரம் செய்யும் வியாபாரிகள் வட்டிக்கான காசையும் மீன் தலையில் கட்டுவதால் ஊர் வாசிகள் பலரும் மார்கெட் பக்கம் தலை வைத்து கூட படுப்பது கிடையாது.
* தினமும் விபத்து செய்திகள் தலைப்பு செய்திகளக வந்த வண்ணம் உள்ளது முக்கியமா ECRல் நடக்கும் விபத்துக்கள் வெளிநாட்டில் நடக்கும் விபத்துகளுக்கு நிகராக உள்ளது.
* நம்ம ஊரில் பிரியாணியில் கறி துண்டு பெருசா போடுறாங்க, நம்ம ஊரில் போடும் மனைக்கட்டில் ரோடு சின்னதா போடுறாங்க.
அதான் திரும்பி வந்துட்டேனே….! இருந்தாலும் இனி சும்மா இருக்கப் போவதில்லை !
Sஹமீது





