எத்தியோப்பியா
குறுந்தொடர் : 6
ஏசி அல்லது ஃபேன் இல்லாத (அதற்கான தேவையே இல்லாமல் வருடம் முழுவதும் ஊட்டி வானிலை) அந்த ஹோட்டலில் இரவு ஓய்வு எடுத்து விட்டு அடுத்த நாள் பொருட்காட்சிக்குத் தயாரானோம். ஏற்பாட்டாளர்கள் காலையில் ஏழு மணிக்கே நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் வாசலில் தங்களது வாகனத்தை கொண்டுவந்து காத்திருந்தார்கள். சில பொருட்களை கஸ்டம்ஸ் பிடித்து வைத்திருந்ததால் அதனை பெற்றுவர வேண்டி நான் பொருளாதார அமைச்சகத்திற்கு போக வேண்டியிருந்தது, அங்கு போகும் வழிநெடுகிலும் அந்த நாட்டின் அழகு கண்கொள்ளாக் காட்சியாக மனதைக் கொள்ளையடித்தது.
மனதைக் கொள்ளையடிக்கும் அழகிய கிராம சாலைகள்
தெள்ளத் தெளிவான சாலைகள் (சோறுபோட்டு சாப்பிடும் அளவிற்கு இல்லாவிட்டாலும் ஒரு ஆஃபிரிக்க நாட்டிற்கு இதுவே கூடுதல்)
படத்தை நன்றாக உற்றுப் பாருங்கள் ஆஃபிரிக்க யூனியன் செல்லும் வழி
வாழ்வைத்தேடிச் செல்லும் மண்ணின் மைந்தர்கள்…
கண்ட காட்சிகளெல்லாம் நமக்கு டாட்டா காட்டியது, அதன் பிறகு பொருளாதார துறை அனுமதிக் கடிதம் கஸ்டம்ஸ் என்று நீண்டது. நான் பட்ட கரடுமுரடு கஷ்டங்களை இங்கே எழுதி உங்களைக் கஷ்டப்படுத்த விரும்பவில்லை.. எல்லாம் நல்ல மாதிரியாக முடிந்து, ஒரு வழியாக பொருட்காட்சி நடக்கும் மெஸ்க்கல் ஸ்கோயரை வந்தடைந்தோம். அந்த மக்கள் ரொம்பவே பூசணிக்காய் திண்பாங்கபோல நம் நாட்டில் வாழைப்பழம் தொங்குவதுபோல அங்கே பூசணிக்காய்கள் மலையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன ஒவ்வொரு கடையிலும்.
பூசணிக்காய்களின் கடை…
பொருட்காட்சியைத் தொடங்கி வைக்க அமைச்சர் இன்னும் ஒரு மணிநேரத்தில் வருவார்! வருவார்!! என்று பத்து மணி நேரமாகக் கத்திக் கொண்டிருந்தார்கள். ஆனாலும்ம் அமைச்சர் வந்த பாடில்லை, அவரை வரவேற்க ஏற்பாடு செய்திருந்த பேண்ட் குழுவினரின் இசை காதைப் பிளந்து கொண்டிருந்தது. எத்தியோப்பியாவின் ஒவ்வொரு அரசு நிகழ்ச்சியிலும் அந்த பகுதியின் பெருபான்மையான மக்களின் இனத்தலைவர் அரசு மரியாதையுடன் அழைத்து வருவது மரபாம். அந்த வகையில் அடிஸ் அபாபாவின் தலைவர் அவர் ஒரு முஸ்லிம், மரியாதையுடன் அழைத்து வரப்பட்டார்.
நான்தான் பேண்ட் பேக்ரவுண்டுடன் (நிழற்படத்தில் நிஜமாக பேண்டு சத்தம் கேட்குதா !?)
அடிஸ் அபாபாவின் தலைவர் ராஜ மரியாதையுடன் அழைத்து வரப்படுகின்றார்
ஒரு வழியாக அமைச்சர் வந்துவிட்டார், பொருட்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு பூத்தாக சென்றவர், அவரின் உதவியாளர்கள் “துபாய்” கம்பெனி இவர்கள் என்றவுடன் தாவிக்குதித்தவராக என்னிடம் வந்தார் (துபாய் என்ற வார்த்தையை மரியாதையுடனும, மதிப்புடனும் உலகிற்கு அறிமுகம் செய்த பெருமை மேதகு கண்ணியதிற்குரிய சேக் முகம்மது அவர்களையேச் சாரும்), நான் அவரிடம் ”உங்கள் நாட்டிற்கு வியாபாரம் செய்ய வந்திருக்கின்றோம் உங்களின் ஆதரவு தேவை” என்றேன். அவர் மகிழ்ச்சியுடன் அதற்கு எப்போதும் எங்களின் ஒத்துழைப்பு உண்டு. இன்னும் மென்மேலும் தருவோம் அதற்காக நீங்கள் இங்கே தொழிற்சாலைகளை தொடங்கி உற்பத்தி செய்தால் என்றார்.
தன்னாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட வேண்டும் என்ற நினைப்பு உள்ள அம்மைச்சரிடம் “நிச்சயம் வருங்காலத்தில் செய்வோம்” என்றேன் மகிழ்வுடன் அவர், அருகில் இருந்த அமைச்சக தலைமைச் செயலாளரை அழைத்து தகவல் அட்டையைக் கொடுத்து அறிமுகம் செயதபின் எந்த நேரத்திலும் ”என்னை தொடர்ப்பு கொள்ளலாம்” என்றார். அந்த பெண் தலைமைச் செயலர் "ஆஃபிரிக்கா நாடுகள் அனைத்தும் இப்பொழுது உள்நாட்டில் உற்பத்தி செய்ய முன்வரும் தொழில் நிறுவனங்களை சிவப்புக்கம்பளம் கொண்டு அழைக்கின்றன. ஆஃபிரிக்காவில் தொழிலாளர் கூலி சீனா / இந்தியாவைவிட ரொம்ப குறைவுதான் அரிதான வளங்கள் (Rare Earth Element (REEs) குறைவாக இருந்தாலும், இருக்கும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து இங்கேயே தயாரிப்பதற்கான சாத்தியங்களும், அல்லது உதிரி பாகங்களை இறக்குமதிச் செய்து ச்சும்மா நட்டு, போல்டை மட்டும் அங்கு உற்பத்தி செய்து “Made In Africa” என்று போடுவதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே உள்ளன.. என்ன திருப்பூர் சபீர் காக்கா கிளம்பிடலாமா ? ஒரு கொசுறுச் செய்தி சீனாதான் உலகின் 95% அத்தியாவசிய வளங்களை வைத்திருக்கின்றன அதனால்தான் இன்று வாப்பா உம்மாவைத்தவிர அனைத்தும் சீனா தயாரிப்புகளாகி வருகின்றன.
பொருளாதார துறை அமைச்சருடன் சின்னச் சின்ன உரையாடல்கள்.
பொருளாதார துறைத் தலைவியுடன்
பொருட்காட்சியின் இடையில் டீ கிடைக்காததால் காஃபி குடித்தேன். நிச்சயம் அது தேன் தான் - காஃபியின் பிறப்பிடமே எத்தியோப்பியாதான்…”café” என்ற காஃபி அதிகமாக விளையும் இடம் எத்தியோப்பியாவில்தான் உண்டு. ஆனால், நம் மேற்கத்திய நாடுகள் வழக்கம்போலவே தன் அதிகாரங்களை பயன்படுத்தி உயர்ந்த நறுமண மிக்க காஃபி ரகங்களின் காப்புரிமையைத் தன் வசப்படுத்தி வைத்து கொண்டு இம்மக்களின் வயிற்றில் அடிக்கின்றன.
அது சரி காஃபி கண்டுபிடித்த கதை உங்களுக்கு தெரியுமா ?? எத்தியோப்பியாவின் கடைக்கோடி கிராமத்தில் வாழ்ந்த ஒரு பெரியவர் (அவர் பெயர் ஹாரோ என்று நினைக்கின்றேன்) தன் ஆடுகள் ஒரு நாள் வழக்கத்தைவிட உற்சாகமாக இருப்பதைக் கண்டார். அதற்கான காரணம் தெரிந்து கொள்ள ஆசைப்பட்ட அந்த பெரியவர் அதன் உணவுகளைக் கவனித்தபோது ஒரு விதமான கொட்டைகளை சாப்பிட்ட அன்றைக்குதான் அவைகள் உற்சாகமாக இருப்பதை கண்டுபிடித்தார். அந்தக் கொட்டைகளை பறித்து, காய வைத்து தானும் சாப்பிட்டு பார்த்தார் உடம்பில் ஒரு வித உற்சாகம் தோன்றுவதைக் கண்டார். அங்கிருந்துதான் கிளம்பிற்று காஃபி இன்றும் அவர் பெயரில் நிறைய சங்கிலித்தொடர் காஃபி கடைகள் உண்டு. அவர்தான் காஃபியின் வாப்பா .ஸ்டார் பக்ஸ் அந்த கடைகளின் காப்பிதான் (copy). எத்தியோப்பியா சென்றால் இதனை நீங்கள் உணர்வீர்கள்.
எத்தியோப்பியாவின் பாரம்பரிய காஃபிக் கடை
அவர்கள் சாப்பிடும் உணவை நாம் சாப்பிடுவது கடினம்தான், எத்தியோப்பியாவின் தேசிய உணவு “கேத்ஃபூ” ஒரு விதமான ஸ்பெஷல் ரொட்டியுடன் (நம்மூர் மைதா தோசைபோல இருக்கு) ஆட்டுக்கறியை வேகவைக்காமல் கீமாவாக்கி அதனை ரொட்டிக்கு தொட்டுச் சாப்பிடுகின்றார்கள். அந்த நாட்டின் பாரம்பரிய இரவு விடுதிக்கு (நாசமாப்போன ஆஃபிரிக்க மட்டும் மேலைநாடுகளில் இரவை தூங்குவதற்கு பயன்படுத்தாமல் இப்படி விழித்திருந்து உடல் நலத்தை கெடுப்பது பொழுதுபோக்கு என்று நினைக்கின்றேன். நான் போனது கலாச்சார இரவு விடுதி) சென்றபோது இது எனக்கு பரிமாறப்பட்டது வற்புறுத்தலின் பேரி்ல், அல்லாஹ் பெயர் சொல்லி அறுக்கப்பட்டதா? என்று தெரியாத உணவை அந்த நாட்டின் அதிபரே வந்து சொன்னாலும் சாப்பிடமாட்டேன் என்று சொல்லிவிட்டு அந்த ரொட்டியை மட்டும் சிறிது சுவைத்தேன். புளிப்புச்சுவையுடன் இருந்த அந்த ரொட்டி குமட்டிக் கொண்டு வந்தது, பாத்ரூம் வருகின்றது என்று சாக்கு சொல்லிவிட்டு பக்குவமாக அதனை ஃபிளஸ் செய்துவிட்டு வந்தேன்.
தேசிய உணவு “கேத்ஃபூ”
இந்த உணவுகளை வெறுத்தாலும் ”மந்தி”க்கு அடிமையான நான் இதுவரை கிட்டத்தட்ட சென்ற நாடுகள் மற்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நாடுகளின் உணவங்களில் எல்லாம் சாப்பிட்டு விட்டேன். ஆனால் எத்தியோப்பியாவின் பைத்தல் மந்தியின் சுவைக்கு முன்னர் எதுவும் எடுபடவில்லை. அதன் சுவை நாக்கில் நின்றதால் தினமும் டாக்ஸி பிடித்தாவது அந்த மந்தியை ஒரு பிடிபிடித்துவிட்டு வந்துவிடுவேன். அதனால் சிறிது தொந்தியும் வந்துவிட்டது :).. எத்தியோப்பியாவின் ஆட்டுக்கறி ஒரு சுவைதான்
மந்தியின் எழிலான !!! தோற்றம்..வாய் ஊறுதா ?
யாருடைய வீடும் இல்லை பைத்தல் மந்தி உணவகம்தான்
எத்தியோப்பியா மக்கள் பெரும்பாலும் நண்பர்களாக பழகக்கூடியவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரியே. இருந்தாலும் பெண்களிடம் பழகும்போது மிகக்கவனமாக இருக்க வேண்டும் கேஸுவலாக எதற்கும்/எதனையும் செய்ய தயங்காதவர்கள் ஒரு சில எத்தியோப்பியப் பெண்கள் (சில ஷைத்தானிய தனமான விளையாட்டுகளும் அடங்கும்). மனக்கட்டுபாடு இல்லாவிட்டால் எங்குமே ஒழுக்கமாக வாழ முடியாது. பல சவுதிக்காரர்கள் அங்கு அலையும் நிலையைக் கண்டால் மனம் ரொம்பவே கஷ்டப்படுகின்றது. வியாபரத்திற்காக அலைந்தால் மகிழ்ச்சி கொள்ளலாம், ஆனால் விசயமே வேறு அங்குள்ள டாக்சிக்காரர்கள் அவர்களைப்பற்றி சொல்லும் சம்பவங்கள் நமக்கு தலைக்குனிவை ஏற்படுத்துகின்றன..அல்லாஹ் நம் அனைவரையும் அந்த இழிச்செயலை விட்டும் காப்பாற்ற வேண்டும்.
கீழேயுள்ள படத்திற்கும் செண்டிமெண்டுக்கும் சம்பந்தம் உண்டும் அடுத்த தொடரோடு இதனைக்கண்டுவிட்டு, மேலும் சிலவற்றை கூறிவிட்டு தொடரைமுடிப்போம் காத்திருப்பீர்களா ??
முகமது யாசிர்