அல்லாஹ்வின் திருப்பெயரால்....
தொடர் : 4
"அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்! "
அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடியவனாக, அல்லாஹ் நேர்வழி காட்டியவரை கெடுப்பவன் இல்லை. அவன் வழிகேட்டில் விட்டவரை நல்வழிப்படுத்துபவன் இல்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை என்றும், முஹம்மது (ஸல்)அவர்கள் அவனது அடியார் என்றும், அவனது தூதர் என்றும் உறுதி கூறுகின்றேன்”. நம்முடைய வாழ்வின் வழிகாட்டி, நம் உயிரினும் மேலான உத்தம நபி முஹம்மது(ஸல்) அவர்கள் தம்முடைய ஒவ்வொரு உபதேசத்திலும் மக்களுக்கு எடுத்துச் சொன்ன அதே உபதேசத்தை உங்களுக்கும் எனக்கும் நினைவூட்டியவனாக ஆரம்பிக்கிறேன்.
உலக மாந்தர்க்கெல்லாம் முன்மாதிரி நம் அருமை இறைத்தூதர் அண்ணல் நபி(ஸல்) என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை, ஏன் பிற மதத்தவர்கள் பலருக்கும் தெரியும் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மட்டும் தான் இந்த மனித இனத்திற்கு முன்மாதிரிகளில் முதன்மையானவர் என்று. ஆனால், முன் மாதிரி, என்று வெறும் பேச்சளவில் மட்டுமே நாம் சொல்லுகிறோமே தவிர அவர்கள் நமக்காக அல்லாஹ்விடமிருந்து கொண்டு வந்த வஹியான திருக்குர்ஆனின் கட்டளைகள், அல்லாஹ்வின் கட்டளைப்படி மார்க்கமாக்கப்பட்ட முஹம்மது (ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீகாரம் இவைகளை நம் வாழ்வில் கடைப்பிடித்து இறை மார்க்கமான “இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா ?” என்ற வினாவோடு இந்த அத்தியாயமும் தொடர்கிறது.
என்றுதான் படிப்பினைபெறப் போகிறோம்?
அல்லாஹ் யாரை நேர்வழிபடுத்த நாடுகிறனோ, அவர்களை யவராலும் வழிகெடுக்க முடியாது, அல்லாஹ் யாரை வழி தவற செய்கிறானோ அவர்களை யாராலும் நேர்வழிபடுத்த முடியாது. அல்லாஹ் யாரை நேர்வழிபடுத்தினானோ அவர்கள் ஈமானில் உறுதியோடு இருப்பதற்கு வல்லவன் ரஹ்மானில் அருள் உண்டு என்பதற்கு இந்த சகோதரியின் வாழ்வு ஓர் உதாரணம்.
ஆரம்பத்தில் இஸ்லாத்தை வெறுத்தவர், பின்னர் ஹிந்து மதத்தில் உள்ள பல கடவுள் கொள்கை வேண்டாம் என்று சொல்லி கிருஸ்தவத்திற்கு சென்றார், அதிலும் பல கடவுள் கொள்கை மேலோங்கி இருப்பதை அறிந்தார். ஒரு நாள் ஒரு நாளிதழில் நபி(ஸல்) அவர்கள் ஈசா(அலை) அவர்களைப் பற்றி நன்மதிப்போடு கூறிய செய்தியை வாசிக்கும் சந்தர்ப்பம் அவருக்கு ஏற்படுகிறது, நபி(ஸல்) அவர்கள் இவ்வளவு நல்ல மனிதரா? என்ற கேள்வியோடு தன் தோழி ஒருவரிடம் இஸ்லாம் பற்றி கேட்டு அறிந்து கொண்டு. பின்னர் இஸ்லாத்தை ஏற்கிறார். இஸ்லாத்தை ஏற்ற பின்பு தான் அவருக்கு காத்திருந்தது எண்ணிலடங்கா துன்பங்கள் அச்சுறுத்தல்கள், இந்த காணொளியில் சொல்லப்பட்டுள்ள சம்பவங்களை கேட்கும்போது நம்மை அரியாமலே கண்களில் கண்ணீர் வருவதை தடுக்க இயலாது.
இந்த காணொளியில் கேட்ட இந்த சகோதரி (ஆய்ஷா ஃபாத்திமா) அனுபவித்தது போல் நாம் என்றைக்காவது, இஸ்லாத்திலிருப்பதனாலோ அல்லது அந்த கொள்கையில் நிலைத்து நின்று ஏற்றதற்காக அனுபவித்திருக்கிறோமா?
உம்மா வாப்பா அப்பா உம்மம்மா சாச்சா பெரியப்பா இவர்களுக்கு பயந்து எத்தனை ஷிர்க்கான பித் அத்தான காரியங்களை அறிந்தோ அறியாமலோ செய்திருப்போம்? அல்லாஹ்வின் கட்டளை மற்றும் நபி(ஸல்) அவர்களின் வழி முறையை மீறியிருப்போம்?
காணொளியில் காணும் இந்த சகோதரி பட்ட கஷ்டங்களை காதுளால் கேட்டதும் நம் கண்களிலிருந்து கண்ணீர் வருகிறதே! ஆனால் அன்று அண்ணல் நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் மக்கத்து காபிர்களால் கொடுமைப் படுத்தப்பாட்டார்களே, அவைகள் எப்படிப்பட்ட கொடுமைகளாக இருந்திருக்கும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியுமா நம்மால்?
இந்த சகோதரி செய்த தியாகத்தில் எத்தனை சதவீதம் இஸ்லாத்திற்காக நாம் என்ன தியாகம் செய்தோம் என்ற கேள்வியை இப்போது நம்மை பார்த்துக் கேட்டுக் கொள்வோம்.
நம் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்களும், உத்தம சஹாபாக்கள் செய்த தியாகத்தில், அர்பணிப்பில் நம் வாழ்நாட்களில் இஸ்லாத்திற்காக ஒரு துளியளவு நாம் அர்ப்பணிப்பு செய்திருக்கிறோமா? என்ற வினாவை நமக்குள் ஒவ்வொரு நிமிடமும் கேட்டுக் கொள்வோம். இஸ்லாத்திற்காக முழுமையாக அர்ப்பணிப்போம். இன்ஷா அல்லாஹ்..
யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்...
M.தாஜுதீன்