அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, இந்த உரையாடலாய் அமைந்திருக்கும் ஆக்கம் யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு பதிய பட்டவையல்ல, அன்றாடம் நமதூரில் பொதுவில் நடந்தேறும் நிஜமான நிகழ்வுகளின் நிழலாக மட்டுமே.
இரண்டு பெண்மக்கள் ஒரு ஆண்மகனை பெற்றெடுத்த அதிரைப்படினத்து உம்மா உடல்நிலை சரியில்லாத நிலையில் அவர்களின் படுக்கை அறையிலிருந்து இளைய மகளை "தங்கச்சி" என்று அழைக்க !
பள்ளிக்கூட பாடங்களை எழுதிக் கொண்டிருந்த இளைய மகள் "என்னம்மா?" என்று பதற்றத்தோடு உம்மா அருகே செல்கிறாள்.
புள்ளைங்கள பெத்த உம்மா "தங்கச்சி மனசுக்குள்ளே பட படண்டு செரவடியா வருதுமா காக்காவுக்கு போன் போட்டு டாக்டரை சட்டுன்னு கூட்டிக்கிட்டு வரச்சொல்லுமா" என்று பதற, துடித்தே விட்டாள் இளைய மகள்.
விளையாடச் சென்ற காக்காவுக்கு உடனே ஃபோன் பன்னுகிறாள் இளையமகள் - தன் வீட்டிலிருந்து டெலிஃபோன் வருகிறதே என்று அவனும் பதறியவனாக "ஹலோ ! அஸ்ஸலாமு அலைக்கும்" என்றதும்.
மறுமுனையில் "வ-அலைக்கு முஸ்ஸலாம், காக்கா உம்மாவுக்கு படபடண்டு வருதாம் சட்டுன்னு டாக்டரை கூட்டிக்கிட்டு வரச் சொல்லுது, எனக்கு என்ன செய்வதென்று தெரியலை" குரல் உருக்கியது.
"சரி இந்த வந்துறேன்" என்றவன் தன் நண்பனிடமிருந்து இரவலாக டூவீலரை வாங்கி கொண்டு வேகமாக மருத்துவமணைச் சென்று அங்கிருந்த மருத்துவரை அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் செல்கிறான்.
அங்கே டாக்டரும் அவர்களது உம்மாவை பரிசோதித்துவிட்டு.
"உங்களுக்கு ஒன்றுமில்லை தைரியமாக இருங்கள் நான் தர்ர மாத்திரைகளை சாப்பிடுங்க" என்று பிள்ளைகளின் உம்மாவிடம் சொன்ன டாக்டர் அவர்களின் மகனை தனியாக அழைத்து.
"உங்க உம்மா கவலைப்பட்டு கவலைப்பட்டு ரொம்ப மனசு பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் அவங்களை கவலைப்படாம பாத்துக்கோ" என்று எடுத்துச் சொன்னார், அதன் பின்னர் டாக்டரை திரும்ப விட்டு விட்டு வந்ததும்.
வீட்டில் !

உம்மாவின் தோழி அதற்குள் நலம் விசாரிக்க வந்திருந்தார்கள்.. .
"அஸ்ஸலாமு அலைக்கும், என்னாவுளே ஒனக்கு என்ன பன்னுனுச்சு?"
"யாருமா வா வா எங்கடி போன? ஒன்னே ஆளே கானோ இப்பவாவது வந்து கேட்டியே ஒரு மாசமா மனசுக்கு சரி இல்லடி இப்பதான் டாக்டரு வந்து பாத்துட்டு போறாரு".
"ஆமவுளே இப்ப ஒ இளய மொவ சொல்லித்தான் எனக்கு தெரியும். அதா ஒன்னே பாக்கலாம்டு ஓடியாரேன்."
"தங்கச்சி சாச்சிக்கு சீனி கொஞ்சமா போட்டு தேத்தணி குடுமா...." இளைய மகளுக்கு குரல் கொடுத்ததும்
"இந்த போட்டு கொடுக்குரமா." என்றாள் இளையவள்.
"ஆமா எங்க ஒ மூத்த மொவ மாமியாவூட்டுக்கு போய்க்கிதா?"
"அவளையா கேக்குறா? அவளநேச்சுதாண்டி எனக்கு பெரும் கவலையா ஈக்குது."
"என்னவுளே சொல்றா?"
"அவ மாப்புள மெட்ராசுலே விசா யாவாரம் பாத்துட்டு அப்புடியே நெலமும் வாங்கி வித்துகிட்டு இருந்தாகவுளே! நல்லாத்தான் போய்க்கிட்டு ஈந்துச்சு யாரையோ பெரிய நாட்டுக்கு அனுப்புரெண்டு சொல்லி விசா அடிச்சிக்கிறாஹ அது ஏதோ ஏம்மாத்து விசாவா போச்சுண்டு விசாவுக்கு பண கொடுத்தவரு பணத்த கேட்டு பெரச்சனே பன்னுராருண்டு அவ்வோ வாப்பாட்டே பனோம் கேட்டாவுளே!
ஏதோ அங்க இங்க கடன வாங்கி அடைச்சோம், சரி அதோட வெளிநாட்டுக்கு போய் சம்பாரிச்சு வாங்குன கடனே எப்புடியாச்சும் அடைக்கச் சொன்னா அங்கெல்லாம் போமாட்டேண்டு சும்மாவே காலத்தே ஓட்டுரார்வுளே அதுனாலே ஏம்மொவ மாமியாவூட்டுலே ஈக்கிராவுளே!
அவ்வொளுக்கு தேவையா இந்த வயசுலேயும் முதுகு வலியோடும்.கால் வலியோடும் கஸ்ட்டப்பட்டு வாழ்நாளெல்லாம் வீணாக்கிட்டு ஈக்கிராஹ அதுவும் ரொம்ப கஸ்ட்டப்பட்டு இந்த ஊடு பல வருசத்துக்குப் பிறகு கட்டுனதுவுளே.
இப்ப எனக்கு ஒடம்புவேற சரியில்லையா எண்ட ரெண்டாவது மொவதான்வுல எல்லா வேலையும் பாக்குறா ஒரு வாரமா பள்ளிகொடதுக்கு வேற போவல.
மொவனும் 12வது படிக்கிறான் அவனை நல்லா படிக்க வைக்கனும்டு அவ்வோ வாப்பா கொஞ்ச கொஞ்சமா காசு சேக்குராஹா இந்த புள்ளைல்வோ நெலம தெரியாம ஆடுதுவோ."
அதற்குள் தோழி சாச்சி, "ஆமா வூட்டுக்கு வூடு வசப்படியான்தா ஈக்குது உளே! இந்த ஏண்ட ரெண்டுமகளுக்கும் எந்த கொரையும் இல்லாமதான் கல்யாணம் பண்ணி வச்சோம் ஏம்மகள்ற நகைகளெல்லாம் வித்து மூத்த மருமவனே மலேசியாவுக்கு அனுப்புனோம். போய் ஒரு வருசமாச்சு போனத்துக்கு ரெண்டு மாசம்தாவுல செலவுக்கு பணம் அனுப்புனாரு. இது வரைக்கும் அஞ்சி பைசா கூட இல்லவுளே!
ரெண்டாவது மருமொவனுக்குத்தான் வெளிநாடு அனுப்ப முயற்சி செஞ்சிட்டு இருக்கோம். அவருக்குத்தான் எங்கயுமே அமையமாட்டங்குது சரி விசா வரவரைக்கு எங்கயாவது ஒரு கடையிலே போய் இருக்க சொன்னாக்கா அதுலாம் சரியா வராதுன்னு சும்மா தோளமாரோட ஊற சுத்திக்கிட்டு வரார்வுளே!"
இவர்களின் சோகமான பேச்சுக்கிடையில் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று மீண்டும் மகனின் குரல்.
"வ-அலைக்க முஸ்ஸலாம் (வரஹ்) கண்ணான வாப்பா இன்னைக்கு ஸ்கூலுக்கு போவல ? தம்பி அசர் தொளுதுட்டியாமா?"
"இன்னும் தொளுவலமா டீ குடிச்சிட்டு போறமா."
மீண்டும் தொடர்ந்த தோழி சாச்சி "சரி அதெல்லாத்தயும் வுடு ஒ எளய புள்ளைக்காவது படிச்ச மாப்புள்ளையா பார்த்து கல்யாணம் பன்னி வைவுல."
"ஆமா நீ ஒன்னு படிச்ச மாப்புளைக்கு எங்க போறது? அதுவோ படிக்கவச்சதுக்குமுள்ள சேத்து நம்மட்டே லட்சக்கணக்குலே பணத்த கேக்குதுவோ."
"இப்ப உள்ள ஆம்புலபுள்ளைவோ அது வாங்ககூடாது இது வாங்ககூடாதுண்டு சொல்லுதுவோலே தவிர வூடு வானாண்டு புடிவாதமா சொல்ல மாட்டின்கிறதுவோமா"
"இது வொத்தான் அப்படி ஈக்குதுண்டு பார்த்தா ஓதி படிச்ச வூட்டுவொல்லேயும் ரொம்ப எதிர்பாக்குதுவோ."
ஆயிஷாராத்தா அங்கிருந்த தோழியின் மகனைப் பார்த்து, "இங்க பாத்தியா தம்பி ஒ ராத்தா மச்சான்ற சொல்லேக் கேட்டுகுட்டு உம்மாவே எவ்வளோவு கஸ்த்தப்படுத்துதூவோ .நீங்களாவது உம்மாவே கவலப்படவுடாம பாத்ததுகிடுங்கமா?"
"சரி சாச்சி, உம்மா நானாவது ராதாவுக்கு போனு போட்டு என்னாண்டு கேக்கவமா?"
"வானாண்ட வாப்பா இந்தக்கால புள்ளையள்வோலுக்கு நல்லது சொன்ன பொல்லாப்பா தெரியுது. அவங்களா அல்லாஹ்வுக்கும் மறுமைனாளுக்கும் பயந்து மனம்திருந்தி வரட்டும்"
"சரிவுளே நீ கவைப்படாத ஒ ஒடம்பே நல்ல மாறியா பாத்துக்கோ எல்லாத்துக்கு அல்லா ஈக்குரான் அவன் பாத்துக்குவா. நா போயிட்டு வரேவுல"
நிஜத்தில் நடந்திடும் நிகழ்வுகள் வாசிக்கும்போது நெகிழ்வைத் தந்தாலும், நேர்கொண்ட பார்வையும் நெஞ்சுரம் கொண்ட இளைய என் சமுதாயமே இனியாவது இவ்வாறன இழிவுக்குள் வீழ்ந்திடாமல் விழித்தெழுந்திடு உன்னைப் பெற்றவங்களும் உன்னவளைப் பெற்றவர்களும் இருவரும் பெற்றோரே ! அந்தப் பெற்றோரைப் பேனுவதில் நேர்மையை காட்டிடு முன்னுதாரமாய் திகழ்ந்திடு.
-லெ.மு.செ.அபுபக்கர்