Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label குடும்பம். Show all posts
Showing posts with label குடும்பம். Show all posts

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் – தொடர் - 30 24

அதிரைநிருபர் பதிப்பகம் | September 14, 2013 | , , ,


மக்கள்தொகைப் பெருக்கமும் குடும்பக் கட்டுப்பாடும்.
இன்றைய உலகப் பொருளாதாரத்தை அச்சுறுத்தி வரும் காரணிகளின் பட்டியலில் மக்கள் தொகைப் பெருக்கமும் அதைத் தொடர்ந்த வேலை இல்லாத் திண்டாட்டமும் முதல் வரிசையில் இடம் பிடித்து அமர்ந்து இருக்கின்றன. இன்று உலகில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் உணவு, உடை, உறைவிடம் ஆகியவை போதுமான அளவு வழங்கப் படவேண்டுமென்ற பொறுப்பு எல்லா நாடுகளின் ஆட்சியாளர்களின் தலையிலும் சுமையாக இருக்கிறது.  அத்துடன் வாழ்க்கைத்தரங்களை அதிகப் படுத்துவதும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும் கூட அரசுகளின் பொறுப்பாக இருந்து கொண்டு இருக்கிறது.

ஒரு புறத்தில் நவீன மருத்துவ  வசதிகளின் வளர்ச்சி காரணமாக இறப்பு விகிதம் குறைந்து வரும் நிலையில் பிறப்பு விகிதம் உலகெங்கும் கூடிக் கொண்டே  வருகிறது. உலகில் எங்கு பார்த்தாலும் கூட்டம்! கூட்டம்! கூட்டம்!. வீங்காமல் இருக்கும்  இந்த பூமி இந்தக் கூட்டத்தின் எடையை தாங்குமா என்கிற கேள்வி பொருளாதார நிபுணர்கள் பலரின் மத்தியில் எழுந்தது. ஒவ்வொருவரும் தங்கள் தங்களின் பார்வையில்  மக்கள்தொகை பெருக்கம் பற்றிய பொருளாதாரக் கோட்பாடுகளை அளிக்க ஆரம்பித்தனர். இவர்களுள் தாமஸ் ராபர்ட் மால்தஸ் என்பவர் அளித்த கோட்பாடு வல்லுனர்களால் ஓரளவுக்கு சரியான கோட்பாடு மற்றும் எச்சரிக்கை என்ற வகையில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

"சமுதாயத்தின் எதிர்கால வளர்ச்சியை பாதிக்கும் மக்கள் தொகைக் கொள்கை பற்றிய ஆய்வுரை" என்ற  தலைப்பில் ஒரு சிறிய ஆனால் மிகப் பெரிய செல்வாக்குப் பெற்ற நூலை எழுதியவர் தாமஸ் ராபர்ட் மால்தஸ் ஆவார். எங்கோ, ஒரு சிற்றூரில் யாரும் அறியாத ஒரு சமய குருவாக இருந்த இந்த ஆங்கிலேயர், 1798 ஆம் ஆண்டில் இந்த சிறு நூலை வெளியிட்டதும் உலகப் புகழ் பெற்றார்.

"உணவு உற்பத்திப் பெருக்கத்தை விஞ்சும் வகையில் மக்கள் தொகை பெருகி வருகிறது" என்னும் கருத்தே மால்தசின் அடிப்படை ஆய்வுரையாக அமைந்திருந்தது. அவர் தமது மூலக் கட்டுரையில் இந்தக் கருத்தைச் செறிவான வடிவத்தில் விளக்கியிருந்தார். "பெருக்கல் ஏற்றமாக மக்கள் தொகை பெருகிக் கொண்டு வருகிறது. (அதாவது 1,2,4,8,16.....என்ற பெருக்கல் மடங்குகளில் மக்கள் தொகை பெருகுகிறது). அதே சமயம், உணவு உற்பத்தி எண் கணிப்பு முறையில் ஒரே அளவில் (அதாவது 1,2,3,4,5.....என்ற எண் வளர்ச்சி முறையில்) மட்டும் பெருகி வருகிறது". என்று கூறினார்.  

இந்த நூலின்  பிந்திய பதிப்புகளில் மால்தஸ், தமது கொள்கையைச் சற்று தெளிவாக விளக்கியுள்ளார். அதாவது, பிறக்கும் உயிர்களுக்கு உணவு அளிக்க வேண்டுமென்ற அடிப்படையில், "உணவு உற்பத்தியின் வரம்பினை எட்டுகின்ற வரையில், மக்கள் தொகை வரையரையின்றி பெருகிக் கொண்டிருக்கும்". என்றார். மால்தஸ், தமது கொள்கையின் இரு வடிவங்களிலிருந்தும், "மனித குலத்தின் பெரும்பான்மை மக்களுக்கு வறுமையிலும், பட்டினியிலும் வாழ வேண்டிய தலைவிதி ஏற்பட்டிருக்கிறது. நீண்ட காலப்போக்கில், தொழில் நுட்ப முன்னேற்றங்களினால் இதைத் தடுக்க முடியாது போய்விடும். ஏனெனில், உணவு உற்பத்திப் பெருக்கம், ஒரு வரையறைக்குட்பட்ட இன்றியமையாத தேவையாக இருக்கிறது. காரணம் உணவு உற்பத்தியைச்   செய்யும் நிலம், நீர் முதலியவற்றை மனிதனால் புதிதாக உற்பத்தி செய்ய முடியாது. அதற்கு அவனுக்கு ஆற்றல் கிடையாது. ஆனால் வரம்பின்றி மனித உயிர்களை மட்டுமே அவனால்  புதிது புதிதாக  ‘கலகலென  பொலபொலென புதல்வர்களைப் பெறுவீர்’ என்கிற பாடல் வரிகளுக்கு ஒப்ப  உற்பத்தி செய்ய முடியும்.  அதாவது,  மக்கள் தொகையின் ஆற்றல் மற்றும் வளர்ச்சி,  மனிதனின் உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவு விளைவிப்பதற்கு இந்தப் பூமிக்கு உள்ள அளவு, ஆற்றல் மற்றும் வளர்ச்சியை விட வரம்பின்றி மிக அதிகமாக உள்ளது என்ற முடிவுக்கு வருகிறார்          மால்தஸ்.  அதாவது மக்கள் தொகை வளர்ச்சியையும் உணவு உற்பத்தியின் ஆற்றலையும் ஒரு ரேஸ்   பந்தயத்தில் ஓடவிட்டால் மக்கள்தொகை வளர்ச்சி,  தனது தலையை நீட்டியாவது ஜெயித்துவிடுமென்று பொருள்.

ஆகவே மக்கள் தொகையை கட்டுப் படுத்த ஏதாவது வழி இருக்கிறதா? வழி அமைந்து இருக்கிறதா?

மால்தசே வழிகளைச் சொல்கிறார்.  போர், கொள்ளை நோய், மற்ற தொற்று நோய்கள் போன்றவை மக்கள் தொகையை அடிக்கடிக் குறைக்கின்றன. ஆனால், இந்தக் கொடிய நிகழ்வுகளின்  விளைவுகள் அளவுக்கு மீறிய மக்கள் தொகைப் பெருக்கத்தின் அச்சுறுத்தலுக்கு எதிராக மனித இனம் தாமே விருப்பமின்றிக் கொடுக்கும் உயிர் பலிகளுக்குப் பின்பு கிடைக்கும் ஒரு தற்காலிகத் துயர் தணிப்பேயாகும். இதற்கு நிரந்தர வழி ஒன்று இருக்கவேண்டும். இருக்கிறதா? மால்தசின் கோட்பாட்டின்படி இருக்கிறது.

மட்டுக்கு அடங்காத  மக்கள்தொகைப் பெருக்கத்தைத் தவிர்ப்பதற்கு "ஒழுக்கஞ்சார்ந்த கட்டுப்பாடு" மட்டுமே சிறந்த வழி என மால்தஸ் வலியுறுத்துகிறார்.

·         காலம் கடந்த திருமணம்  ,
·         திருமணத்திற்கு முந்திய கற்பு நெறி,
·         திருமணத்திற்குப் பின்பு பாலுறவு கொள்வதில் தற்கட்டுப்பாடு

ஆகியவற்றையே "ஒழுக்கஞ்சார்ந்த கட்டுப்பாடு" என்று மால்தஸ் குறிப்பாகத் தருகிறார்.  ஆனால், நடைமுறையில் பெருகிவரும் சமூக நாகரிகங்களின் வரம்பு கடந்த வளர்ச்சியின் காரணமாக,  பெரும்பாலான மக்கள் இத்தகைய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க மாட்டார்கள் என்பதை மால்தஸ் நன்கு உணர்ந்திருந்தார். எனவே, நடைமுறையில், மட்டுக்கடங்காத  மக்கள் பெருக்கம் தவிர்க்க முடியாதது. அதனால், பெரும்பாலான மக்கள் வறுமையில் வாடுவதும் அதனால்  சாவதும்  தவிர்க்க இயலாதது என்ற முடிவுக்கு அவர் வருகிறார். இது  மனித இனத்தின் வளர்ச்சி, உற்பத்தி செய்யும் திராணியும் படைத்தது என்பதை ஒதுக்கிவிட்டு தோல்வி மனப்பான்மையை மட்டும்  காட்டும் ஒரு எதிர்மறையான முடிவு ஆகும்.

இதுவரை சொல்லப்பட்டவைகளை சுருக்கமாக தொகுத்து சொல்லிவிட்டால் விளங்குவது இலகுவாக இருக்கும்.
  • மக்கள் தொகை பெருகுகிறது.
  • பெருகும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தி பெருகாது.
  • மக்கள்தொகையை மனிதர்கள் தாங்களே முன்னின்று  தடுத்துக் கொள்ளவேண்டும்.
  • அப்படித்தாங்களே தடுத்துக் கொள்ளவில்லை என்றால் மக்கள் தொகைப் பெருக்கமே பஞ்சம், பசி, நோய் காரணமாக பெருகிய மக்கள்தொகையை  அழித்து கட்டுப்படுத்திவிடும். 
கருத்தடை சாதனங்களின் வாயிலாக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும்  என மால்தஸ் ஒரு போதும் கூறவில்லை. ஆயினும், அவருடைய அடிப்படைக் கொள்கையிலிருந்து இயல்பாக உருவாகும் தாங்களே தடுத்துக் கொள்ளவேண்டும் என்று கூறப்படும் கருத்து  அதுவாகவே இருக்க முடியும். மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குக் கருத்தடைச் சாதனங்களைப் பெருமளவில்  கையாள வேண்டும் என முதன் முதலில் பகிரங்கமாக வலியுறுத்தியவர், பிரிட்டனில் செல்வாக்கு மிக்க சீர்திருத்தவாதியாக விளங்கிய பிரான்சிஸ் பிளேஸ் (1771-1854) என்பவரே ஆவார். மால்தசின் கட்டுரையைப் படித்த பிளேஸ் அதனால் வெகுவாகக் கவரப்பட்டார். அவர் 1822 ஆம் ஆண்டில் கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்துவதை வலியுறுத்தி ஒரு நூலை எழுதினார். அவர் தொழிலாளர்களிடையே கருத்தடைக் கட்டுப்பாடு பற்றிய தகவல்களைப் பரப்பினார். அமெரிக்காவில், டாக்டர் சார்லஸ் நால்ட்டன் என்பவர் கருத்தடை முறை குறித்து 1822 ஆம் ஆண்டில் ஒரு நூலை வெளியிட்டார். 1860 களில் "மால்தசியக் கழகம்" அமைக்கப்பட்டது. குடும்பக் கட்டுப்பாட்டினை வலியுறுத்துபவர்களுக்கு ஆதரவாளர்கள் தொகை பெருகலாயிற்று. கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்துவதை அறநெறிக் காரணங்களுக்காக மால்தஸ் தாமே ஏற்கவில்லை என்பதால் கருத்தடைச் சாதனங்கள் மூலம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதை வலியுறுத்தியவர்கள் பொதுவாக, "புதிய மால்தசியக் கோட்பாட்டாளர்கள்" என அழைக்கப்பட்டனர்.

மால்தசின் கோட்பாடு, பொருளாதாரக் கோட்பாட்டின் மீதும் முக்கியமான விளைவை ஏற்படுத்தியது. மால்தசின் செல்வாக்குக்கு ஆட்பட்டிருந்த பொருளாதார அறிஞர் பலர் "வழக்கமான சூழ்நிலைகளில், ஊதியங்கள் பிழைப்பு மட்டத்திற்கு மேலே கணிசமாக  உயர்வதை மக்கள் தொகை பெருக்கம் தடுத்துவிடும்" என்ற முடிவுக்கு வந்தனர். மால்தசின் நெருங்கிய நண்பராக விளங்கிய புகழ்பெற்ற ஆங்கிலேயப் பொருளாதார அறிஞர் டேவிட் ரிக்கார்டோ இவ்வாறு கூறினார்: "உழைப்புக்கான இயல்பான விலை என்பது, தொழிலாளர்கள் நாம் உயிர் வாழவும், பெருக்கமோ குறைவோ இன்றித் தங்கள் வர்க்கத்தை நிலைபெறச் செய்யத்  தேவையான விலையேயாகும்". இந்தக் கோட்பாட்டினை "கூலி நிர்ணய இரும்பு விதி" என்று பொதுவாக அழைப்பர். இக் கோட்பாட்டைக் கார்ல் மார்க்சும் ஏற்றுக் கொண்டார். கார்ல் மார்க்சின் "உபரி மதிப்புக் கோட்பாட்டில்" இந்தக் கோட்பாடு ஓர் இன்றியமையாத அம்சமாக இருந்தது.

இன்றையக் குடும்ப கட்டுப்பாடு இயக்கம் மால்தசின் வாழ்நாளில் தொடங்கப் பெற்ற இயக்கத்தின் நேரடித்  தொடர்ச்சியாகும். அப்படிப் பார்க்கும்போது  மனித இனப் பெருக்கத்தின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவேண்டுமென்ற  கொள்கையை விதைத்தவர் மால்தசே ஆவார்.

ஒரு நாடு நல்லாட்சியைப் பெற்றிருப்பினும், மட்டுக்கு மீறிய மக்கள் தொகைப் பெருக்கத்தினால், அவதியுற வாய்ப்பு உண்டாகும் என்பதை முதலில் உலகின் கவனத்திற்குக் கொண்டு வந்தவர்  மால்தஸ்தான் என்று கூற முடியாது. அவருக்கு முன்னரே வேறு பல தத்துவஞானிகள் இக்கருத்தை வலியுறுத்திச் சென்றிருந்தனர். பிளேட்டோவும், அரிஸ்டாட்டிலும் இதைக் கூறியுள்ளதாக மால்தசே குறிப்பிட்டுள்ளார். "ஒவ்வொரு மனிதனுக்கும், தான் விரும்புகிற அளவுக்குக் குழந்தைகளைப் பெறுவதற்குச் சுதந்திரம் அளிக்கப்படுமானால், அதனால் ஏற்படக்கூடிய இன்றியமையாத விளைவு வறுமை தான்" என்று அரிஸ்டாட்டில் எழுதியிருப்பதாக மேற்கோள் காட்டுகின்றனார்.

மால்தசின் அடிப்படைக் கொள்கை முற்றிலும் அவருடைய சொந்தக் கொள்கை இல்லை. ஆயினும், அவருடைய முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடலாகாது. பிளேட்டோவும், அரிஸ்டாட்டிலும் போகிற போக்கில் மேற்போக்காகவே இந்தக் கொள்கையைக் குறிப்பிட்டுச் சென்றிருக்கின்றனர். அவர்களுடைய சுருக்கமான குறிப்புகள் பெரும்பாலும் கண்டு கொள்ளப்படவில்லை. இந்தக் கொள்கையை விரிவாகக் கூறியவர் மால்தசே ஆவார். அவர் தான் இது குறித்து ஏராளமாக எழுதினார். அனைத்திற்கும் மேலாக மக்கள் தொகைப் பெருக்கம் பற்றிய சிக்கலின் அபாயகரமான விளைவை வலியுறுத்தி, அதனை அறிஞர்கள் உலகின் கவனத்திற்குக் கொண்டு வந்த முதல் மனிதர் மால்தசே ஆவார் என்பதை மறந்துவிடலாகாது.

“ காதலுக்கு வழிவைத்து
கருப்பாதை சாத்த
கதவொன்று கண்டறிவோம்
அதிலென்ன குற்றம் ? 

என்று கேட்டார் பாரதிதாசனும். நாம்  இருவர்! நமக்கு இருவர்! என்ற முழக்கங்கள் மூலை முடுக்குகளில் உள்ள சுவர்களிலும் தீப்பெட்டிகளும் கூட  எழுதப்பட்டன. ஒன்றே பெருக! அதை நன்றே பெருக!  என்று திருத்தப் பட்ட மற்றும் இரண்டிலிருந்து குறைக்கப் பட்ட கோஷங்களும் முழங்கப் பட்டன. ஆடுமாடுகளுக்கு காயடிப்பது போல் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை என்ற முறையில் ஆண்களின் ஆண்மைத் தன்மை நீக்கப் பட்டது., பெண்களின் கர்ப்பமுறும் தன்மைகள் காவு  கொடுக்கப்பட்டன. அதற்காக அரிசிமுதல் பருப்புவரை இலவசப் பரிசாக வழங்கப் பட்டது. இதற்காக ஆள் பிடித்துக் கொண்டுவரும் முகவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப் பட்டது. மக்கள் நல்வாழ்வுத்துறை என்கிற சுகாதாரத் துறையில் குடும்பக் கட்டுப்பாடு தனி அங்கமாயிற்று. அதிகமான அறுவை  சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களுக்கு பதவி உயர்வும் வழங்கப் பட்டது. தெருவெங்கும் பாடல், ஆடல் , நாடகங்கள், திரைப்படங்கள் மூலம் பரப்புரைகளும் செய்யப் பட்டன. பேருந்துகள் முதல் விமானங்கள் வரை அடையாளச் சின்னமாகிய சிவப்பு முக்கோணம் பொறிக்கப்பட்டது.     

பொதுவாக சில அரசியல் கட்சிகள் முஸ்லிம்கள் குடும்பக் கட்டுப் பாட்டுத் திட்டத்துக்கு ஆதரவு தருவதில்லை. குடும்பத்தைக் கட்டுபடுத்தாமல் வத வத வென்று பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளுகிறார்கள். இதனால் முஸ்லிம்களின் மக்கள் தொகை எண்ணிக்கை கூடிவிடும் என்றெல்லாம் பழிதூற்ற  ஆரம்பித்தனர். இவற்றில் உண்மை இருந்தது. காரணம் முஸ்லிம்கள் ஈமானும் இறையச்சமும் உடையவர்கள். தங்களின் இறைவனும் தங்களின் இரசூல்  (ஸல்) அவர்களும் வகுத்த வழியிலேயே வாழவேண்டுமென்று நினைப்பவர்கள். இஸ்லாம் குடும்பத்தைக் கட்டுப் படுத்துகிறேன் என்ற போர்வையில் இறைவனால் படைக்கப் பட்டு  தாயின் கர்ப்பகருவறையிலேயே தனது சுஜூதை தொடங்கும் கருவைக் கலைக்க அனுமதி வழங்கவில்லை. இவை பற்றி விரிவாக பார்க்கலாம். இப்போது பொதுவான சில உண்மை கருத்துக்களை நோக்கலாம்.

என்னைக் கேட்டால் முஸ்லிம்கள் மட்டுமல்ல யாருமே குடும்பக் கட்டுப் பாடு செய்ய வேண்டியது இல்லை என்றுதான் கூறுவேன்.  குடும்பக்கட்டுப்பாடு செய்யாததால் மக்கள்தொகை பெருகுகிறது. மக்கள் தொகைப் பெருக்கத்தால் உணவுப் பற்றாக் குறை ஏற்படுகிறது . குடும்பக் கட்டுப்பாடு செய்துவிட்டால் எல்லாக் குறைகளும் தீர்ந்துவிடும் என்பது ஒரு  மோசடியான  பரப்புரையாகும்.   

சில  புள்ளி விபரங்களை வைத்து இந்த விவாதத்தை துவங்குவது நன்றாக இருக்கும். அதற்குமுன் இந்தத்தொடரின் அத்தியாயமான படைத்தவன் படைத்தது பற்றாக் குறையா என்ற தலைப்பிட்ட 12 & 13 ஆம் அத்தியாயங்களின் மேல் உங்களின் அறிவுக் கண்களை ஒரு ஓட்டம்  ஓட்டி கொள்வது நல்லது.

இன்றைக்கு உலகத்தில் 500  கோடி மக்கள் வாழ்கிறார்கள். என்றாலும் 1500  கோடி மக்களுக்கான உணவு உலகெங்கும் மொத்தமாக உற்பத்தியாகிக் கொண்டு இருக்கிறது. தவறு எங்கே நடை பெறுகிறது என்றால் எல்லா உற்பத்தியும் உலகின் பொருளாதாரத்தை   தனது கரங்களில் கட்டிப் போட்டு வைத்திருக்கும் பணக்கார நாடுகளில் குவிந்து கிடக்கிறது.100  கோடி மக்கள் வாழக் கூடிய பணக்கார நாடுகளில் மட்டும் 1000  கோடி மக்களுக்குத்தேவையான உணவுப் பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. பணக்கார நாடுகள் தனக்குத் தேவையானது போக, மீதி உள்ள கோதுமை, பால், அரிசி போன்றவற்றை  உணவுப் பற்றாக் குறையை ஏற்படுத்தவும் அரசியல் செல்வாக்கின்  மிரட்டல்களை பயன்படுத்தி அடிபணிய வைக்கவும் கடலில் கொண்டு போய் கொட்டி விடுகிறார்கள்.  எனவே மக்கள் தொகைப் பெருக்கத்தால்தான்  உணவுப் பொருள்களில்  பற்றாக் குறை ஏற்படுகிறது என்பது தவறான வாதமாகும்.  

உதாரணமாக, இன்றைக்கு இந்திய மக்கள் தொகை 110  கோடியாகும். சுமார் அறுபது எழுபது வருடங்களுக்கு முன்பு இந்திய மக்கள் தொகை முப்பது            கோடிதான். பாரதியார் அதனால்தான் ‘முப்பது கோடி முகமுடையாள்’ என்று பாடினார். இப்போது உள்ள உணவுப் பற்றாகுறையைப் போல அன்றும் இருக்கத்தான் செய்தது.

இந்திய மக்கள்தொகை நூற்றுபத்து  கோடி இருக்கும்போது எப்படி முப்பது கோடி மக்களுக்கு உணவு கிடைக்கவில்லையோ அதேபோல முப்பது கோடி மக்கள் இருக்கும்போது பத்து கோடி மக்களுக்கும் பத்து கோடி இருந்த போது மூன்று கோடி மக்களுக்கும் உணவுப் பற்றாகுறை  இருந்து வந்தது உண்மை. (இப்போதுதான் உணவுப் பாதுகாப்பு மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறி இருக்கிறது.) அப்படியென்றால் உண்மையில் பற்றாக்குறைக்குக் காரணம் மக்கள் பெருக்கமா? நிர்வாகக் குறைபாடா? பங்கிடுதலில் பாகுபாடா? அரசியல் அட்டகாசமா? இரக்கமற்ற நெஞ்சங்களா?

அண்மையில் The Economic Times என்கிற  ஆங்கிலப் பத்திரிகையில் படித்த ஒரு ஆய்வுக் கட்டுரையின் மொழிபெயர்ப்பை இங்கு தர விரும்புகிறேன்.( சற்று நீண்டுவிடும் ஆனால் நமது மக்கள் தொகையின் அளவும் அதிகமாக இருப்பதால் அதிகமாக எழுதவேண்டியாகிவிட்டது- பொறுமையுடன் படிக்க வேண்டுகிறேன். )

 உலகில் தினமும்  87 கோடிப்  பேர் பசியால் வாடும் நிலையில், சர்வதேச அளவில் வீணாகும் உணவுப் பொருள்களால்   75,000 கோடி டாலர்  அளவுக்கு இழப்பு ஏற்படுவதாக -அசனா லெபை டீக்கடை அல்ல - ஐக்கியநாடுகள் சபையில் உணவு மற்றும் வேளாண அமைப்பு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியப் பணத்தில் இது  48 லட்சம் கோடியாகும். இது நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி ( GDB)  மதிப்பில்  50 சதவீதமாகும். சுவிட்சர்லாந்து நாட்டின் ஜி டி பிக்கு நிகரான தொகையாகும் இது என்பது கூடுதல் ஆக கவனிக்கப்பட வேண்டியதாகும்.

உலக அளவில் உற்பத்தியாகி உண்ணாமல் வீணாக்கும் உணவுப் பொருள்களின் அளவு  33 சதவீதமாக உள்ளது. உலக மக்கள் தொகையில் மட்டுமல்ல உணவுப் பொருள்களை வீணாக்கும் நாடுகளிலும் உலகிலேயே சீனாதான் முதலிடம் வகிக்கிறது என்பது அதிர்ச்சி அளிக்கக் கூடிய தகவல்.

உலக நாடுகளில் அனைத்து மக்களுக்கும் முழுமையான உணவுப் பாதுகாப்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை . சில ஆப்ரிக்க நாடுகளோ வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. இந்த நிலையில் அரிசி, கோதும, சிறு தானியங்கள் மற்றும் காய்கறி பழங்கள் என பல ஆயிரம் கோடி டாலர் மதிப்புள்ள 130 கோடி டன் உணவுப் பொருள்கள் வீணாகிவருவது விடை காணமுடியாத பல சிக்கலான  கேள்விகளை முன் வைத்துள்ளது.   37  ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் , 2050- க்குள், உலக மக்கள் தொகை, மேலும்  200 கோடி அதிகரிக்கப் போகிறது.

சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆகிய நாடுகள் பொருளாதார மையங்களாகத் திகழ்கின்றன. இந்த நாடுகளைத் தன்னகத்தே கொண்டுள்ள ஆசியா கண்டத்தில் ஒரு தனிமனிதரால் ஆண்டுக்கு சராசரியாக 100 kilo காய்கறிகளும்   80 kilo உணவு          தானியங்களும் வீணடிக்கப் படுகின்றன என ஐ நாவின் புகார்ப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

அரபு மற்றும் பணக்கார நாடுகள் சுகாதாரம் குறித்து தேவைக்கும் அதிகமான எச்சரிக்கை உணர்வுகளைக் கொண்டுள்ளன. இதனால் காய்கறி, பழங்கள் மீது சிறிய கீறல் இருந்தாலும் அவை தூக்கி எறியப்படுகின்றன. உணவுப் பொருள்களின் காலாவதி தேதிகளில் அளவுக்கு அதிகமாகக் காட்டப்படும் ஆர்வமும் கவனமும் காரணமாக டன் டன்னாக விளைபொருள்கள் குப்பையில் கொட்டப் படும் அவலம் காணப்படுகிறது.

இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் உற்பத்தி நிலையிலேயே பெருமளவு உணவுப் பொருள்கள் வீணாகிவிடுகின்றன. சாலை ஓரங்களில் இருக்கும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப் படும் நெல் மூட்டைகள் ஒரு தார்ப் பாய் கூட போட்டு மூடப் படாமல் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் பொறுப்பற்ற செயலைக் காணலாம். அறுவடைக்குப் பின் சேமிப்புக் கிடங்குகள், குளிர்பதன வசதி இல்லாமலும், சரக்குப் போக்குவரத்தின் போதும் ஏராளமான வேளாண்மைவிளை பொருள்கள்  வீணாகின்றன.

உலக அளவில் சுமார் 140 கோடி ஹெக்டேர் நிலத்தில் சாகுபடியாகும் உணவுப் பொருள்கள் வீணாகின்றன என்று ஐநா கணக்கிட்டுள்ளது. இது மொத்த சாகுபடி பரப்பளவில்  28 சதவீதம் ஆகும். இது ஹராம் இல்லையா?  

உற்பத்தி, அறுவடைக்குப்  பின் பராமரித்தல் , சேமிப்புக் கிடங்கு  போன்றவற்றின் கட்டமைப்பு மற்றும் நிர்வாகக் குறைபாடுகளால் 54 சதவீத உணவுப் பொருள்களும் பதப் படுத்துதல், விநியோகம், நுகர்வு போன்ற இரண்டாம் கட்ட நடவடிக்கைகளில்    46 சதவீத உணவுப் பொருள்களும் வீணாகின்றன.

உணவுப் பொருள்களை வீணாக்குவது இரண்டு பாவங்களைச் செய்கிறது. ஒன்று தண்ணீர் போன்ற இயற்கை வளங்களும் வீணாக்கப் படுகின்றன. பொருளாதார நிலையும் தாழ்வுறுகிறது. இவற்றை மீறி மக்களுக்கு உணவளிப்பது என்கிற கோட்பாடு மழுங்கிப் போய் பட்டினிச்சாவுகளும் அதிகரிக்கின்றன. நிலைமைகள் இப்படி இருக்க இறைவனால் படைக்கப் பட்ட உயிரினங்களின் மேல் பழி போடுவது நியாயமா?

மக்கள் தொகையின் வளர்ச்சியின் காரணமாக, உண்மையில் பசுமைப் புரட்சி போன்ற பல்வேறு திட்டங்களால் உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவை எட்டிப் பிடித்தது என்பதும், சில உணவுப் பொருட்கள் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டன என்பதும் பொருளாதார வரலாறு சொல்லும் உண்மைகள் . அன்றைக்கு நெல் பயிரிடுதலின் காலம் ஆறு மாதங்கள் . இன்றோ பல பகுதிகளில் மூன்று மாதப் பயிராக விளைந்து வருகிறது. இன்னும் ஒன்றரை மாதப் பயிராகவும் பயிரிடும் நிலைமையை - எந்த இறைவன் இந்தியாவுக்கு அதிக மக்கள் தொகையை அளித்தானோ அதே இறைவன் தேவையை முன்னிட்டு மனிதனின் அறிவை உசுப்பிவிட்டான் என்பதே உண்மையாக  இருக்க  முடியும்.

மக்கள் தொகையின்  பெருக்கமும் நெருக்கமும்  நெருக்கடியும் விவசாயத்தில் மட்டுமல்ல அறிவியலிலும் மனிதனின்  கொடியை பட்டொளி வீசிப்  பறக்க வைத்தது.  புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், விமானச்சேவை முதல் கணினியின் அற்புதங்கள் வரை யும் அன்றாடம்  புதிது புதிதாக மனித மூளையின் அற்புதங்கள் , கண்டுபிடிப்புகள் வந்துகொண்டு இருக்கின்றன.

ஒரு பில்கேட்சின் தாயோ, அபுல் கலாமில் தாயோ, தாமஸ் ஆல்வா எடிசனின் தாயோ, ஐன்ஸ்டீனின் தாயோ , மார்க்கோனியின் தாயோ தங்களின் குடும்பத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக இந்த அறிவியலார்களை, கல்வியாளர்களை கருவிலேயே கலைத்து  இருந்தால் இவர்கள் இந்த உலகத்துக்குக் கிடைத்திருப்பார்களா?  குடும்பக் கட்டுப் பாட்டை ஆதரித்துப் பேசுபவர்களின் பெற்றோர் இதைச் செய்து இருந்தால் இப்படி ஆதரிப்போர் உலகை தரிசித்து இருக்க முடியுமா?

இஸ்லாம் நியாயமான காரணங்களுக்காக குடும்பக்  கட்டுப்பாட்டை ஆதரிக்கிறது.

தாயின் உயிருக்கோ அல்லது உடல் நலனுக்கோ ஆபத்து ஏற்படும் என அனுபவத்தின் வாயிலாகவோ அல்லது நம்பத்தகுந்த ஒரு மருத்துவர் மூலமோ அறிந்தால், குடும்பக்கட்டுப்பாட்டுக்கு அனுமதியுண்டு. இக்கருத்துக்கு ஆதாரங்களாகக் கீழ்வரும் திருமறையின் வசனங்களை இஸ்லாமியப் பொருளாதார  அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

''உங்களை நீங்கள் அழிவுக்கு உட்படுத்த வேண்டாம்' (2:195)

“மேலும் உங்களை நீங்கள் கொலை செய்து கொள்ள வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது அதிகம் அன்பு கொண்டவனாய் இருக்கிறான்.” (4:29)

தனது குழந்தைகளுக்காக வேண்டி ஹராத்தையோ அல்லது பாவத்தையோ செய்ய வேண்டிவருமென்று ஒருவர் அஞ்சும் நிலையிலும் குடும்பக்கட்டுப்பாட்டுக்கு அனுமதியுண்டு.

“அல்லாஹ் உங்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்த விரும்புவதில்லை.” (5:6)
என்று அல்லாஹ் உறுதியளிக்கிறான்.

தனது குழந்தைகளின் உடல்நலம் பாதிப்புறுமென்றோ அல்லது அவர்களை முறையாக வளர்ப்பதில் பிரச்சினைகள் தோன்றுமென்றோ அஞ்சுவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பினும் குறித்த செயற்பாட்டிற்கு அனுமதியுண்டு.

உஸாமா (ரலி) அறிவிக்கிறார்கள்  'ஒருமுறை ஒருவர் ரஸுல் (ஸல்) அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே! நான் எனது மனைவியிடத்தில் அஸ்ல் செய்கின்றேன்' என்றார். 'அதற்கு நபிகளார் 'ஏன் அப்படிச் செய்கின்றீர்?' என்று வினவ அதற்கு அம்மனிதர் “ நான் எனது இருக்கும்  குழந்தைகளையிட்டு அஞ்சுகின்றேன்' என்றார். அதற்கு நபிகளார் 'அது (அஸ்ல்) தீங்கிழைப்பதாக இருப்பின் பாரசீகத்தையும், ரோமாபுரியையும் பாதித்திருக்கும்' (அதாவது இத்தகைய தனி மனிதர்களின் நிலைகள் முழுச் சமூகத்தையும் பாதிக்காது. அவ்வாறு இருப்பின் அன்றைய வல்லரசுகளாகத் திகழ்ந்த ரோம, பாரசீகத்தைப் பாதித்திருக்கும் என்பதாகும்.) என்றார்கள்.” ( அஸ்ல் = Pls Ref: Sathyamargam. Com)

பால்குடிக் குழந்தையின் நிலையைக் கருத்திற்கொண்டு, தாய் கருத்தரிப்பதனால் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படும் எனக் கருதுவதும் குடும்பக் கட்டுப்பாட்டை நியாயப்படுத்துகின்ற ஒரு காரணமாகும்.

பால் குடிக் குழந்தை இருக்கும் நிலையில் தன் மனைவியுடன் (கருத்தரிக்கும் நோக்கோடு) உடலுறவு கொள்வதனை நபியவர்கள் இரகசியக் கொலை என வர்ணித்துள்ளனர். ஆயினும், இதனை ஷரீஅத் ஹராம் என முற்றாகத் தடை செய்யவில்லை என்பதனைக் கவனத்திற்கொள்ள வேண்டும்.

மேலே குறிப்பிட்ட நியாயமான காரணங்களுக்காகக் குடும்பக் கட்டுப்பாடு செய்வதனை இஸ்லாம் அனுமதித்திருப்பினும், கருச்சிதைவை அது அனுமதிப்பதில்லை.  ஒரு கருவை அதற்கு ரூஹ் ஊதப்பட்டதன் பின்னர் சிதைப்பது ஹராமான மாபெரும் குற்றமாகும் என்று கூறப் படுகிறது. ஆனாலும் குறித்த கருவானது சிதைக்கப்படாது தொடர்ந்து தாயின் வயிற்றில் இருப்பது அவளின் உயிருக்கே ஆபத்தையேற்படுத்தும் என்பது உறுதியாகத் தெரியவந்தால் இரு தீங்குகளில் ஒன்றைத் தேர்வு  செய்ய வேண்டியிருப்பின், அவற்றில் சேதம் குறைந்ததைத் தேர்வு செய்தல் வேண்டும் எனும் சட்டவிதியின் அடிப்படையில் கருவைச் சிதைப்பதைத் தவிர வேறு வழியே இல்லாத போது அதற்கும்  அனுமதியுண்டு. ஏனெனில், கருவிலிருக்கும் சிசுவுக்காக வாழுகின்ற தாயை இழக்க முடியாது. அது பொறுப்புடையதும் புத்திசாலித்தனமுடையதும்  ஆகாது.

இஸ்லாம் நடைமுறைக்கேற்ற பொருளியல் கொள்கைகளை போதித்து வழிகாட்டும் மார்க்கம் என்பதை இவற்றால் அறியலாம்.

"பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்கும் உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது’’ ( 11:6) என்கிற திருமறையின் வசனமும்,

“அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான் அவனே உணவு வழங்குகிறான்” (30:40) என்கிற வசனமும்,  மனித இனத்துக்கு இறைவன் தரும் வாரண்டியும் கியாரண்டியும் ஆகும். அகிலத்தைப் படைத்து ஆண்டுகொண்டிருக்கும் ரப்புல் ஆலமீனின்     வர்த்தைகளுக்குப் பின் வேறென்ன தேவை? படைப்பவனும் அவனே! பரிபாலிப்பவனும் அவனே! காப்பாற்றி உணவளிப்பவனும் அவனே!. உருவான கருவை இறைவன் அனுமதித்த காரணமின்றிக் கலைப்பவர்கள் தங்களின் ஈமானையும் இறையச்சத்தையும்  கலைத்துக் கொள்கிறார்கள் என்றே கூறுவேன். இறைவனின் எல்லைகளில் கை வைக்க எவருக்கும் உரிமை இல்லை என்றும் கூறுவேன்.

“இறைவா! நாங்கள் உன்னையே வணங்குகிறோம்!. உன்னிடத்தே நல்லுதவி தேடுகிறோம் . நீ எங்களுக்கு நேரான பாதையைக் காட்டி அருள்வாயாக!" என்கிற திருமறையின் தோற்றுவாயில் நாம் வைக்கும் கோரிக்கைகளை ஏற்று நமக்கும் நமது பிறந்த மற்றும் பிறக்க இருக்கும் சந்ததிகளுக்கும் நல் அருள் புரிவானாக! ஆமீன்.

இன்ஷா அல்லாஹ் மீண்டும் சிந்திப்போம்; சந்திப்போம்.

இபுராஹீம் அன்சாரி

முக்கிய அறிவிப்பு : இந்த தொடரை விரைவில் நிறைவுக்கு கொண்டுவர இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ்!

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் – தொடர் முகவுரை ! 13

அதிரைநிருபர் பதிப்பகம் | July 11, 2013 | , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…
உலகைப் படைத்தவனின் மிகப்பெரும் கிருபையால் “அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும்” தொடர் நம் சகோதர சகோதரிகள் அனைவரின் வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாது அவர்களின் அன்பான வேண்டுகோள் மேலும் மற்றுமொரு தொடரை எழுத தூண்டியது அல்ஹம்துலில்லாஹ். “அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும்” என்ற ஒப்பீட்டுத் தொடரை என்னுடைய அறிவுக்கு உட்பட்ட தேடலில் கிடைக்கும் அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் அடிப்படையில் இஸ்லாமிய வரலாற்று தகவல்களை இன்றைய நம் அனைவரின் அன்றாட வாழ்கை நிகழ்வுகளோடு ஒப்பீட்டுடன் கூடியதாக அமைத்திட முயற்சி செய்கிறேன் இன்ஷா அல்லாஹ்.

அன்புடன் நினைவூட்டுகிறேன், மார்க்க கல்வி கற்றறிந்த அறிஞனோ, அல்லது அனுபவமிக்க எழுத்தாளனோ அல்ல, இறைவன் வழங்கிய வாய்ப்புகளைக் கொண்டு இஸ்லாமிய அறிவுத் தேடலில் கிடைக்கும் தகவல்களை தொகுத்து பகிர்ந்தளிக்கிறேன். அவைகள் அனைவருக்கும் பயனளிப்பவைகளாக இருந்தால் அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

இனி தொடருக்கான அறிமுகவுரைக்குள் செல்வோம் இன்ஷா அல்லாஹ் !

இஸ்லாமிய குடும்பம் என்ற பாரதூரமான வார்த்தைக்கு ஏகப்பட்ட அர்த்தங்களை முஸ்லீம்களும் பிற சமூகத்தவர்களும் வரையறுத்து வைத்துள்ளார்கள். ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் ஏக இறைவனை மட்டும் வணங்குபவர்களாக இருக்க வேண்டும், அந்த குடும்பத்தவர்களின் சொல், செயல், வருமானம், செலவு, நடை, உடை, பாவனை, உணவு, இன்னும் பிற செயல்பாடுகள் யாவுமே அல்லாஹ் மற்றும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட குடும்பங்களைத் தான் இஸ்லாமிய குடும்பம் என்று நாம் சொல்வோம், இதுவே மிகப்பொருத்தமாக இருக்கும். 

அதே சமயம் ஒரு குடும்பத்தில் உள்ள சிலரோ அல்லது பலரோ அல்லாஹ்வுக்கு இணைவைத்துக் கொண்டு பிற நல்ல காரியங்கள் செய்தால் அந்த குடும்பத்தை இஸ்லாமிய குடும்பம் என்று சொல்வது நிச்சயம் பொருத்தமாகாதவை, மேலும் ஒரு குடும்பத்தில் உள்ள சிலரோ அல்லது பலரோ அல்லாஹ்வுக்கு இணையாக எதனையும் எவரையும் துணைக்கு வைத்துக் கொண்டு, நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிகளை புறக்கனித்து இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லாத புதினங்களையும் பிறசமய கலாச்சாரங்களையும் வணக்கம் என்று எண்ணி செய்து வருவபவர்களின் குடும்பத்தை இஸ்லாமிய குடும்பம் என்று சொல்லுவது பொருத்தமாகாத ஒன்று. இங்கு குடும்பம் என்று குறிப்பிடுவது தாய், தந்தை, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் அனைவரையும் சேர்த்தே குறிக்கும். ஆகவே தான் முன்பு குறிப்பிட்டது போல் இஸ்லாமிய குடும்பம் ஒரு மகத்தான, சிறப்பான, கண்ணியமான  பாரதூரமான வார்த்தை என்பதை நாம் முதன் முதலில் நம்முடைய மனதில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இஸ்லாமிய குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக நபி(ஸல்) அவர்களுக்கு முன்பு வாழ்ந்த இறைத்தூதர்கள் மற்றும் ஏகத்துவவாதிகளின் குடும்பங்களின் வாழ்வு, நபி(ஸல்) அவர்களின் வாழ்வு, அவர்களின் குடும்பத்தினர்களின் வாழ்வு, சத்திய சஹாபாக்களின் வாழ்வு, கண்ணியமிக்க மார்க்க மேதைகளின் வாழ்வு, என்று இஸ்லாமிய வரலாற்றில் முத்திரை பதித்தவர்களின் வரலாற்றுச் சம்பவங்களின் சிறு சிறு தொகுப்புகளைக் கொண்டு, நம்முடைய வாழ்வோடு நடைபெற்று வரும் சம்பவங்களை ஓப்பீடு செய்து நாம் எவ்வாறு படிப்பினை பெறவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் உங்கள் அனைவரின் எதிர்பார்ப்போடும் அதற்கு ஏற்றவாறும் அல்லாஹ்வின் மேல் நம்பிக்கை வைத்து இந்தத் தொடரை தொடர்கிறேன்.

நாம் எல்லோரும் நம்முடைய பிள்ளைகளுக்கு நபி(ஸல்) அவர்களோடு வாழ்ந்த அபூபக்கர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி), அலி(ரலி), பிலால்(ரலி), யாசிர்(ரலி), அனஸ்(ரலி), அம்மார்(ரலி), காலித் பின் வலீத்(ரலி), ஹதீஜா(ரலி), ஆயிசா(ரலி), சுமைய்யா(ரலி), உம்மு சுலைம்(ரலி), உம்மு ஹபீபா(ரலி) போன்றோரின் பெயர்களை வைக்க ஆசைப்படுகிறோம், மேலும் நம் பிள்ளைகள் அவர்கள் போல் வரவேண்டும் என்று ஆசையும் படுகிறோம் இன்ஷா அல்லாஹ். மேற்சொன்ன அனைவரும் ஏதோ வானத்திலிருந்து நேரடியாக வந்தவர்கள் அல்ல, நம்மை போல் வாழ்ந்து மரணித்த சத்தியம் போற்றிய மனிதர்கள். இவர்கள் அனைவரின் வாழ்வுக்கு பின்னால் வலிமை மிக்க இஸ்லாத்தின் தாக்கம் இருந்ததினால் இன்று வரை நம் அனைவரின் உள்ளத்திலும் நிலைத்து நிற்கிறார்கள். இது போன்ற அர்த்தமுள்ள தியாகச் செம்மல்களின் வரலாறுகளை அறிந்துள்ள நம்மிடம் எந்த அளவுக்கு இஸ்லாமிய தாக்கம் உள்ளது என்பதைப் பரிசோதித்து பார்க்க வேண்டிய அவசியம் நமக்கு வேண்டும்.

நபி இபுறாஹீம் (அலை) அவர்கள் முதல் நபி(ஸல்) அவர்களின் வரலாறு தொட்டு, சத்திய சஹாபாக்களின் வரலாறு, மேலும் இன்று ஏகத்துவத்துக்காக தங்களின் வாழ்நாட்களை அர்பணித்து இஸ்லாமிய சேவை செய்து வருபவர்களின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்புகள் நிச்சயம் நம்மை நெறிப்படுத்தும். இன்ஷா அல்லாஹ்.

பொதுவாக பயான் என்றால்,  ஹதிஜா(ரலி), பிலால்(ரலி), யாசிர்(ரலி), சுமையா(ரலி), அம்மார்(ரலி), அபூபக்கர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி) போன்ற சஹாபாக்களின் வரலாற்றைத் தவிர வேறு என்ன உள்ளது என்று நினைத்தால் அது நம்முடைய அறியாமையே. ஆனால் லட்சக்கணக்கான இஸ்லாமிய் வரலாற்றுச் சம்பவங்கள் நிறைய உண்டு. நம்முடைய இஸ்லாமிய அறிவுத்தேடலை நாம் விரிவுபடுத்த வேண்டும்.

இந்த தொடருக்கான முன்னுரையாகவே இதுவரை நான் குறிப்பிட்டுள்ளவைகள்.

முந்தைய காலங்களில், இஸ்லாமிய விழிப்புணர்வு கட்டுரைகள் புத்தக வடிவிலிருந்து, இணையத்தில் வெளிவந்தது அவைகளும் ஆவனங்களாக இருக்கின்றன. சமீப காலங்களில் ஒலி மற்றும் காணொளி (ஆடியோ, விடியோ) என்று பதிக்கப்பட்டுச் செல்கிறது. எமது விருப்பம், நாம் கேட்கும் ஒவ்வொரு மார்க்க சொற்பொழிவுகளில் அனைத்தும் எழுத்து வடிவில் ஆவனப்படுத்தப்பட வேண்டும் என்பதே இன்ஷா அல்லாஹ்!. இதன் தொடர்ச்சியாக இதுபோன்ற இஸ்லாமியத் தொடர் பதிவுகளைத் தொகுத்தளிக்க இயன்றவரை முயற்சிக்கிறேன். உங்கள் அனைவரின் மேலான ஆலோசனைகளையும் வரவேற்கிறேன்.

எதிர்வரும் புதன்கிழமை தோறும் தொடர் பதிக்கப்படும் இன்ஷா அல்லாஹ் !

M. தாஜுதீன்

பேறு பெற்ற பெண்மணிகள் - ‘பணிக்கர்’ குடும்பத்திலிருந்து... 12

அதிரைநிருபர் பதிப்பகம் | November 19, 2012 | , , , , ,

தொடர் : 19

கேரளத்து ‏இந்து உயர் குலங்களுள் ஒன்றான ‘பணிக்கர்’ சாதியில் பிறந்து, பேறு பெற்ற பெண்மணிகளுள் ஒருவராக வாழ்ந்துவரும் சகோதரி ‘முனா’வைப் பற்றி நான் மிக நன்றாக அறிவே‎ன்.  ஏனெனில், அவர் தற்போது வாழ்ந்து வரும் சஊதி அரேபிய ‘கமீஸ் முஷைத்’ என்ற நகரில் நானும் சில ஆண்டுகள் பணி புரிந்துள்ளே‎ன்.  அங்குள்ள ‘தஅவா’ சென்டருட‎ன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததால், சகோதரி முனா எனக்கு நன்கு அறிமுகமானவர். ‏இந்தச் சகோதரியின் வாழ்வு, ஒரு சோகக் கதை!  என்றாலும், இஸ்லாமிய ‘தஅவா’க் களத்தில் இறங்கிவிட்டால், தனது சோகத்தையெல்லாம் மறந்து சுகம் பெற்றுவிடுவார்!

மலையாளம் மற்றும் ஆங்கில மொழிகளில் இஸ்லாமியப் பிரச்சாரக் கூட்டம் நடக்கிறதென்றால், அங்கே சகோதரி முனா கட்டாயம் மு‎ன்னணியில் நிற்பார்.  சில நேரங்களில் அவரே சொற்பொழிவாற்றுவார்; பலபோது, மற்றவர்களின் ஆங்கிலம் அல்லது அரபிச் சொற்பொழிவைத்தன் மலையாளச் சகோதரிகளுக்கு மொழி பெயர்த்துக் கூறுவார்.  வந்திருப்போரின் கேள்விகளைத் தொகுத்து, அவற்றிற்கான விளக்கத்தைச் சொற்பொழிவாளரிடமிருந்து பெற்று உரியவருக்கு அளிப்பார்.  இத்தகைய ‘தஅவா’ப் பணி, ஏறத் தாழ, எல்லா நாட்களிலும் அவருடையது!

இனி, சுகம் பெற்ற அவருடைய சோகக் கதையைக் கேட்போம்:

இறைவன் யார்?  உண்மையான அவனுடைய தன்மைகள் யாவை?  அவன் எங்கு இருக்கின்றான்?  இது போன்ற எண்ணங்கள் இளமையிலேயே எனது உள்ளத்தில் உதித்தெழுந்தன.  காரணம், என் தாயார் கடவுள் பக்தியுள்ளவர்.  நானும் அந்த வழியிலேயே வளர்க்கப்பட்டேன்.  வணக்க முறை எதுவாக இருந்தாலும், எனது இறைத் தேட்டம், மேற்கண்ட கேள்விகளிலேயே சுழ‎ன்று கொண்டிருந்ததால், என்னை நான் பிறப்பிலேயே ‘முஸ்லிம்’ ஆனவள் எ‎‎ன்றுதா‎ன் கருதுகி‎ன்றே‎ன்.  இதோ இந்த நபி மொழி இதற்குச் சா‎ன்று:   

“பிறக்கும் குழந்தைகளெல்லாம், ‘இஸ்லாம்’ எனும் இயற்கையிலேயே பிறக்கின்றன.  ஆனால், அதனதன் பெற்றோர்தாம் அதை யூதனாகவோ, கிருஸ்தவனாகவோ, நெருப்பு வணங்கியாகவோ மாற்றிவிடுகின்றனர்” என நபிகள் பெருமா‎ன் (ஸல்) அவர்கள் கூறுகி‎றார்கள்.

‏இவ்வடிப்படையில்தான், என்னைப் பிறப்பிலேயே முஸ்லிம் எனக் கூறினேன்.  இருப்பினும், மிகுந்த ஆசாரங்களில் மூழ்கிப் போயிருந்த எனது குடும்பச் சூழல், என்னையும் சிலைகளின் பக்கம் என் இளமைப் பருவத்தில் இட்டுச் சென்றதில் வியப்பில்லை..  எங்கள் வீட்டில், சிலைகளின் முன் வணங்கி நிற்பதும் அவற்றிற்காகப் படையல்களைச் செய்வதும் நோன்‎பிருப்பதும் தவறாமல் நடக்கும் காரியங்களாகும்.

நான் தரமான கிருஸ்தவப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டிருந்தேன்.  அதன் தலைமை ஆசிரியை எங்களைக் கிருஸ்தவக் கோயில்களுக்கும் இந்துக் கோயில்களுக்கும் அடிக்கடிக் கூட்டிச் செல்வார்.  அதன் மூலம், கிருஸ்தவக் கோயிலுக்குப் போகும் பழக்கமும் எனக்கு ஏற்பட்டது.  எனக்கு இந்துத் தோழிகளுட‎ன் கிருஸ்தவ-முஸ்லிம் தோழிகளும் ‏இருந்தனர்.  அந்தச் சிறுமிப் பருவத்தில், எனது வழிபாடுகளுக்கும் அவர்களின் வழிபாடுகளுக்கும் எந்த வேறுபாடும் எனக்குத் தெரியவில்லை.

ஒரு வழியாக, நான் எனது ‘நர்ஸ்’ பயிற்சியை முடித்துக் கல்லூரியிலிருந்து வெளிவந்தேன்.  ஓரிரு ஆண்டுகள் கேரளாவில் பணி புரிந்துவிட்டு, சஊதி அரேபியாவின் கமீஸ் முஷைத்துக்கு வந்து சேர்ந்தேன்.  அரபுகளையும் முஸ்லிம்களையும் பற்றி ‏இந்தியாவில் நான் கேள்விப்பட்டதற்கு மாற்றமாக, இங்குள்ள அரபு மக்களின் நடைமுறையும் அவர்களின் மார்க்கப் பற்றும் வெகுவாக என்னைக் கவர்ந்தன.  ஐவேளைத் தொழுகை அழைப்பு, ஒரு மாத நோன்பு, ஹஜ் வணக்கம் மற்றும் அதன் ‘தல்பியா’ இவையனைத்தும், என்னை இஸ்லாத்தின் மீது ஒரு விதமான பற்றுக் கொள்ள வைத்தன.  ஆனால், வெளிப்படையாக நான் ஒரு இந்துவாகவே ‏இருந்து வந்தேன்!

சஊதியிலிருந்து விடுப்பில் ‏இந்தியாவுக்கு வந்த எனக்குத் திருமணம் நடந்தது.  அந்த இ‏ல்வாழ்க்கையின் இன்பப் பரிசாக என் மகள் பிறந்தாள்.  அப்போது, எனக்கு ‏இன்பங்கள் அனைத்தும் கிடைத்துவிட்டதாக உணர்ந்தேன்.  ஆனாலும், ஏதோ ஒன்றுக்காக என் இதயம் ஏங்கிக் கொண்டிருந்ததையும் எ‎‎ன்னால் புரிந்துகொள்ள முடிந்தது.  அது எ‎ன்ன?

அது பற்றி என் கணவரிடம் கூறினேன்.  “நீ சாமியாராகப் போகிறாயா?  சாமி மடம் ஒன்றைத் தொடங்கு.  அல்லது, ஒரு ஸ்கூலைத் தொடங்கி, அந்தப் பக்கம் உ‎ன்‎ கவனத்தைத் திருப்பு” என்றார்.

ஓரிரு ஆண்டுகளைக் கழித்துவிட்டு, மீண்டும் சஊதிக்கு வந்து சேர்ந்தேன்.  அதே ஊர்; அதே வேலை; தோழிகளுள் சிலர் மட்டும் நாடுகளுக்குச் சென்றிருந்தார்கள்.  சஊதி மக்களுடன், குறிப்பாகப் பெண்களுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.  அவர்களின் பண்பாட்டை ஆழமாக அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டினேன்.  அவர்களுள் சிலர் எனது ஆர்வத்தைக் கண்டு, என்னுடன் நெருங்கிப் பழகத் தொடங்கினார்கள்.  அந்த நாட்களில் அவர்கள் என்னைத் தம்முடைய உற்ற சகோதரியாகப் பாவித்து, “எங்கள் மார்க்கத்திற்கு வந்துவிடுகிறாயா?” என்று கேட்டதும் உண்டு.  அப்போதெல்லாம், “ஊஹ¥ம்..” என்று மறுத்துவிடுவேன்.  ஆனாலும், சிலைகளிலும் சிலுவைகளிலும் எல்லாம் வல்ல இறைவனைத் தேடுவதில் பயனில்லை எ‎ன்ற எ‎ன் முடிவில் உறுதியாக இ‏ருந்தே‎ன் நான்!

அதற்குள் எனது அவ்வாண்டின் விடுப்பு வந்துவிட்டது.  இந்தியாவுக்குப் பயணமானேன். வீட்டுக்கு வந்து, உறவினருடன் சிறிது நேரம் மகிழ்ந்திருந்துவிட்டுத் தனிமையில் போய் ‘பகவத் கீதை’யை எடுத்துப் படிக்கத் தொடங்கினே‎ன்.

“உண்மைதானா?!  ‏இதைத்தான் அவர்கள் சொன்‎னார்களா?!”  எனக்குள் கூறிக்கொண்டேன்.  தமது மார்க்கத்தின் பக்கம் என்னை ஈர்ப்பதற்காக, எனது வேதத்திலிருந்தே அங்கிருந்த அழைப்பாளர்கள் எடுத்துரைத்த மேற்கோள் பகவத் கீதையில் சரியாகவே ‏இருந்தது!  அது நான்கு ‘பாயிண்ட்’களைக் கொண்டது: 

(1) ஒரே இறைவனை வணங்குவதையே கீதை வலியுறுத்துகிறது.
(2) நிலையான ஓரிறையை வணங்குவதால் மட்டுமே மோட்சம் கிடைக்கும். 
(3) குட்டி தெய்வங்களெல்லாம் நிலையான தெய்வத்தின் ஏவல்களை எடுத்து நடக்கும் வேலைக்காரர்களே ஆவர்.   
(4) என்றும் நிலைத்த ஏகனான இறைவ‎ன்‎ ஒருவன் உள்ளான் என்று உணரும் அறிவே உண்மையான அறிவாகும்.  இதைப் படித்த உடனே என் இதயத்தில் ஒரு விதமான ஆறுதல் ஏற்பட்டதை உணர்ந்தே‎ன்.

அதே நேரம், என்றென்றும் நிலைத்த இறைவனை வணங்கும் ‘கலப்பற்ற வணக்கம்’ (Purity of Prayer) என்ற ஒன்று உண்டு என்றறிந்து, அதனைப் பற்றி அறிய இந்து வேதங்கள் பிறவற்றை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன்.  நாராயணீயம், ராம தயாணீயம், பாகவதம், வேத உபனிஷத்துகள் ஆகியவற்றை எடுத்துப் படித்துத் தேடினேன்.  ஆனால், அவற்றில் வணக்க சுலோகங்கள் ‏அங்கொன்றும் ‏இங்கொன்றுமாக ‏இருந்தனவே தவிர,  நான் தேடிய அந்தக் ‘கலப்பற்ற வணக்க’த்தைக் காணவே முடியவில்லை!  குறிப்பிட்ட சில நாட்களின்‎ எனது விடுப்பில் இவற்றையெல்லாம் தேடிக்கொண்டிருக்க எனக்கு நேரமில்லை.

எனது விடுப்பு முடிவதற்குச் சில நாட்களின் முன், என் குடும்பத்துடன் அருகிலிருந்த கோயில் ஒன்றுக்குப் போனேன்.  ‘பிரதிஸ்டை’யைக் காண்பதற்காக பக்தர்களின் கூட்டம் முண்டியடித்துக்கொண்டு நின்றது.  நானும் அவர்களுள் ஒருத்தியாக நி‎ன்று கொண்டே‎ன்.  என் முறை வந்தபோது, அந்தக் கடவுள் சிலையைக் கண்டே‎ன்.  என் இதயம் அதனைக் கடவுளாக ஏற்க மறுத்தது!  வெம்பினேன்‎. வெதும்பினேன்.  அலைமோதிய கூட்டத்தின் ஓலத்திற்கிடையே, “இது கடவுளன்று!  இது ஒரு கற்சிலைதான்!  என் கடவுள் நிலையானவ‎ன்! முதலும் முடிவுமானவன்!” என்று கத்திவிட்டேன்!  யாருக்குத் தெரியும் என் தீனக் குரல்?  அடுத்து, என் உள்ளத்தில் உதித்த கடவுளிடம் மானசீகமாக மன்னிப்பைக் கேட்டுக்கொண்டு, அங்கேயே ‘சாஷ்டாங்கமாக’ வீழ்ந்தே‎ன் - சிலையை நோக்கியன்று; வேறு திசையில்!  அ‎ன்‎றோடு முடிந்தது, எ‎ன் சிலை வணக்கம்! 

கமீஸ் முஷைத்துக்கு வந்து சேர்ந்த என் உள்ளம் படாத பாடு பட்டது!  கடந்த கால வாழ்க்கையில் நான் கிருஸ்தவர்களின் பைபிளையும் படித்திருக்கிறேன்.  ‘நான் ஏன் முஸ்லிம்களின் வேதமான குர்ஆனைப் படிக்கக் கூடாது?’  பொறி தட்டிய உணர்வில், இயல்பாகவே என் கை ஆங்கிலத்தில் இருக்கும் அல்குர்ஆனின் ஒரு மொழிபெயர்ப்பைத் தேடி எடுத்தது.  அதன் வசனங்களை மேற்போக்காகப் படித்துச் சென்றபோது, கீழ்க்கண்ட வசனத்தில் என் பார்வை நிலை குத்தி நின்றது: 

“வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வைப் புகழ்ந்து துதிக்கின்றன. அவனே மிகைத்தோனும் பேரறிவுடையோனுமாவான். வானங்கள், பூமியின் ஆட்சியும் அவனுக்குரியதே. அவன் உயிர்ப்பிக்கின்றான்; மரிக்கும்படியும் செய்கின்றான்.  அனைத்தின் மீதும் அவன் ஆற்றல் உடையவன்.  ஆதியும் அவனே; அந்தமும் அவனே.  தோற்றுவதும் அவனே; மறைந்திருப்பதும் அவனே. அவன் அனைத்தையும் நன்கறிந்தவ‎ன்.” - (அல்-குர்ஆ‎ன்-57:1,2,3)

அடுத்தது என்ன?  தோழிகளும் அறிமுகமான மற்றவர்களும் புடைசூழ நான் ‘தஅவா’ செ‎ண்டருக்குச் சென்று, ‘ஷஹாதா’ மொழிந்து முஸ்லிமானே‎ன்!

அதற்கடுத்து என்ன?  முஸ்லிமல்லாத என் தோழிகளிடம் நான் முஸ்லிமானதைக் கூறியபோது, அதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.  போகட்டும்.  எனது சொந்த வாழ்க்கையின்‎ நிலை என்‎னவாயிற்று?

இன்பமான என் இல்லற வாழ்க்கையில் இ‏டி விழுந்தது!  என் கணவர் வெகுண்டார்!  என் அன்பு மகள் என்னுடன் பேசுவதை விட்டுத் தடுக்கப்பட்டாள்!  என் குடும்பம் அண்டை அயலாரின் தூற்றுதலுக்கு உள்ளானது!  என் உறவினர்கள் பகைவர்களானார்கள்!  என் கணவர் என்னைப்பற்றிப் பத்திரிகைகளில் விரும்பத் தகாத விளம்பரம் செய்து என்னைக் கேவலப் படுத்தியிருந்தார்!  என்னால் அழாமல் இருக்க முடியவில்லை.  எனினும், என் இதயத்தில் அமை‏தி குடிகொண்டிருந்தது! 

எனது அடுத்த விடுப்பு வந்தபோது, நான் என் தாயகம் செல்ல முடியாத நிலையில் தவிப்புக்குள்ளானேன்!  காரணம், நான் இந்தியாவுக்குச் சென்றடைந்த மறு நொடியிலேயே எ‎ன் தலை கொய்யப்பட்டிருக்கும்!  அந்த அளவுக்குப் பகைத் தீ கொழுந்து விட்டு எரிந்தது!  நான் அரபு நாட்டில் அகதியாகி முடங்கிப் போனேன்!  ஆனால், அல்லாஹ் என்னைக் கை விட்டுவிடவில்லை!  என் முஸ்லிம் நண்பர்களும் உடன் பணியாற்றும் உயர் அதிகாரிகளும் என் மீது அளவற்ற பாசத்தை அள்ளிப் பொழிந்தார்கள்.  அந்த நிலை, இ‏ன்றும் தொடர்கின்றது. இப்போது என் குடும்பம் மிகப் பெரியது; உலகளாவியது!   அல்ஹம்து லில்லாஹ்!

கட்டுரையாசிரியரின்‎பின் குறிப்பு:  நான் அந்த ஊரில் பணியாற்றியது வரை,  ஏறத் தாழப் பத்தாண்டுகளாகச் சகோதரி முனா இந்தியாவுக்குச் செல்ல முடியாதிருந்தார்!  ஆனால், அவரது இஸ்லாமிய வாழ்க்கை இனிதே கழிந்துகொண்டிருந்தது.  ஜமாஅத்தே இஸ்லாமியின் உறுப்பினரான கேரளச் சகோதரர் ஒருவர் சகோதரி முனாவுக்கு வாழ்வு கொடுக்க முன்வந்து, அவரைத் தம் இரண்டாம் மனைவியாக ஏற்றுக்கொண்டார்.  இருவரின் வாழ்க்கையும் இப்போது இன்பமாகக் கழிகின்றது.  அல்ஹம்து லில்லாஹ்!  
தொடரும் இன்ஷா அல்லாஹ்
அதிரை அஹ்மது

குடும்ப உறவுகளை உடைத்தெறியும் அரக்கர்கள்.. 20

அதிரைநிருபர் பதிப்பகம் | December 19, 2011 | , , , ,


அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே! 

நம் குடும்ப உறவுகளை உடைத்து நொறுக்க அமெரிக்காவோ, இஸ்ரேலோ தான் படையெடுத்து வந்து அங்கே அணு ஆயுதங்களை வைத்தெல்லாம் நொறுக்கும் அரக்கர்கள் என்று நினைத்து விட வேண்டாம்.

அப்படி என்றால் வேறு யாருதான் என்று குழம்புகிறீர்களா?

ஆணவம், மமதை மற்றும் தான்தோன்றித் தனமான போக்கினால் நம்மிலிருந்தே அணு உலையை விட கொடியதுமான நம் உயிர் உள்ள வரை அழியா நாவு என்னும் ஆயுதத்தைக் கொண்டு படை எடுக்கிறார்கள். 

அப்படியென்றால் அந்த அரக்கர்கள் எங்கெல்லாம் வந்து வேட்டு வைக்கிறார்கள் என்று தெரியுமா ?


1. புது மாப்பிள்ளை பெண் பேசும் நிகழ்வுகளின் போது அங்கே நினைத்த காரியம் கை கூடவில்லை என்ற நிலை வரும்போது.

2. நிர்ணயித்த அல்லது பேரம் பேசிக் கொண்ட வரதட்சணைத் தொகை,  சீர் செட்டுகள் (சீராட்டுகள்) சரியாக வந்து அடையாத போது.

3. 'மின்னல் ஹபீபி'  எனும் பண கொடுக்கல் வாங்கலின் போது.

4. ஒப்படைக்கப்பட்ட அமானிதத்தில் தில்லு முல்லு அல்லது மோசடி செய்யும்போது.

5. பாகப்பிரிவினை நேரத்தில் பங்குதாரர்களின் விஷயத்தில் அநீதியாக, அத்துமீறி அங்கே அநியாமாக நடந்து கொள்ளும் போது.

6. கூட்டுக் குடும்பமாக இருக்கும் அழகான சூழலில் அற்ப விசயத்திற்காகவும் சுயலாபத்திற்காகவும் அல்லது உற்றார் மீது எழுதும் பொறாமையினால் பிரச்சினை உண்டாகும் போது .

7. கணவன் மனைவிக்கிடையே சரியான புரிந்துணர்வுகள் இல்லாத போது.

8. வசதி வாய்ப்பு எனும் தர்பாரில் உள்ளவர்கள் அவைகள் அமையப் பெறாதவர்களை மதிக்காத போது.

9. பெற்றோரை இரக்கமின்றி மிதித்து மனைவியை கிறக்கத்தில் துதிக்கும் போது.

10. இல்லாத ஒன்றை அவதூறாக இட்டுக்கட்டி பழி சுமத்தும் போது.

இப்ப குழப்பங்கள் தீர்ந்து இருக்குமே!

இப்படிப்பட்ட அரக்கர்களிடம் எலும்பற்ற நாவு என்னும் ஆயுதத்தை சுழல விடாமல் அடக்கம் என்னும் கயிற்றால் வரிந்து கட்டுங்கள். 

குடும்ப உறவுகளை பாதுகாத்துக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்.

- லெ.மு.செ.அபுபக்கர்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு