நம் தமிழகத்தில் பரவலாக பள்ளிவாசல்களில் அதிகாலைத் தொழுகைக்குப் பிறகும் அந்தி வேளைத் தொழுகைக்குப் பிறகும் அனைத்து பிறமத சகோதர சகோதரிகள் (சமயத்தில் கைக் குழந்தைகளுடன்) வரிசையாக நின்றிருப்பார்கள். அவர்களின் பிணி. துயரம் அல்லல்களை அல்லாஹ் நீக்குவான் என்ற நம்பிக்கையுடன் வாசலில் காத்திருப்பார்கள். அதுபொழுது நினைத்ததுண்டு, சிலசமயங்களில் நிர்வாகிகளிடம் கேட்டதுமுண்டு.
”ஏன் இந்த பள்ளிநிர்வாகம் இதுபோன்று வருபவர்களை முறையாக உபசரிப்பதில்லை?,
அவர்களிடம் ஏன் நல்ல முறையில் அன்புடன் கனிவுடன் பேசுவதில்லை?
ஏன் அவர்களுக்கு நம் வணக்க வழிபாட்டினை விளக்குவதில்லை?
அவர்களை வரிசையாகவோ அல்லது பாதையில் இடையூறில்லாமல் நிற்கும்படி சொல்வதைக்கூட கடிந்துகொள்ளாமல், கனிவுடன் சொல்லலாமே?”
என்று பல கேள்விகள் தொடுத்ததும் உண்டு.
இருதினங்களுக்கு முன் படித்த செய்தியொன்று தூக்கிவாரிப்போட்டது.
செய்தியினை முழுவதும் படித்துமுடித்தவுடன் கண்கள் குளமானது.
முஸ்லீம்களென்றால் தீவிரவாதிகள், திருக்குர்ஆன் போதிப்பது தீவிரவாதம், முஸ்லீம்களல்லாதோரைக் கொல்வதே புனிதப்போர் என்று எள்ளளவும் உண்மையற்ற, மேல்நாட்டினரின் கீழான சிந்தனைகளை உள்ளிருத்தி 2008ம் ஆண்டு (FITNA) விதைத்த விதை 2013ல் தமிழ் நடிகரின் மூலம் (விஸ்வரூபமாய்) விருட்சம் கண்டபோது உலகளாவிய தமிழ்பேசும் முஸ்லீம்களல்லாது பொதுபுத்தி கொண்டோரையும் வெகுண்டெழச் செய்த படவிவகாரம் உலகறியும்.
அந்த விதை பரவ காரணமாக இருந்த நெதர்லாந்து (டச்சு) நாட்டின் பாரளுமன்ற உறுப்பினர் ஆர்நோத் வான் டோர்ன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் என்பதே அந்தச் செய்தி.
”எப்படி நீங்கள் போய்.............?” என்ற கேள்விக்கு,
“பள்ளிவாசலில் எனக்குக் கிடைத்த கனிவான வரவேற்பே இஸ்லாத்தைப் பற்றி மேலும் அறியத் தூண்டியது......” என்ற பதில் என் கண்களை குளமாக்கியது.
இஸ்லாத்தின் எதிரிகள் என்று பட்டம் சூட்டப்பட்ட பலர் இஸ்லாத்தினைத் தழுவினர் என்ற செய்தி, நமக்கு வேண்டுமானால் இஸ்லாத்தின் தொடக்க வரலாற்றுப் பக்கங்களில் உமர் (ரலி) அவர்கள் தொட்டு பழக்கமானதாய் அறிந்திருக்கலாம்.
நம் ஈருலக நாயகர் பெருமானார் (ஸல்) அவர்களின் உயிரை மாய்க்க வந்த உமர் அவர்கள், உடன்பிறந்தவள் உரைத்த திருவசனம் கேட்டு, ’உண்மைதான் இது உண்மைதான்’ என்று பொருளறிந்து ஓடோடி உத்தம நபியின் முன் சத்திய மார்க்கத்தினை ஏற்றுக்கொண்டார்.
முஸ்லீம்களாகிய நம்மிடையே நித்தம் ஐவேளை திருவசனங்கள் மொழியப்பட்டும் ஏதும் பொருளுணராததால் எந்த மாற்றமும் திடுக்கமும் ஏற்படுத்தாத சூழலில், ஆர்நோத் வான் டோர்ன் போன்றோருக்கு இஸ்லாத்தினை இழிவுபடுத்துதலே புனிதம் என்று கற்றுக் கொடுத்திருக்கும் போது திருவசனங்கள் கேட்டும் என்ன மாற்றங்கள் நேர்ந்திருக்கும்?
உலகில் நடந்த விரும்பத்தகாத குற்றச்செயல்களையும், அதன் பின்னுக்கு இருந்தவர்களையும், நியாயம் கோரி போராடுபவர்களை தீவிரவாதிகளாகவும் இறைமறை வசனங்களின் உண்மையறியாமல் இவர்களாக பொருள் தேடி, சில பல வசனங்களை ஒலிக்கச் செய்தும் மேற்கோளிட்டும், இஸ்லாமியர்களுக்குச் சான்றாய் மூன்றரை வயது குழந்தையிடம் பேட்டி(!)கண்டும், பெண்களுக்கு சுதந்திரமில்லை என்றும் இவை அனைத்திற்கும் மேலாக இஸ்லாத்தினை மனித குலத்திற்கே எதிரானதாக சித்தரித்தும் படங்கள் தயாரிப்பதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
ஆர்நோத் வான் டோர்ன் இன்று கதறுகிறார்........ யாரிடம்?
படைத்த வல்ல அல்லாஹ்விடமும் அவனின் திருத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களிடமும் கண்ணீர் வடிக்கிறார். ”இறைத்தூதரே என் அறியாமையால் நான் வெளியீடு செய்த படத்தை நினைத்து வருந்துகிறேன்” என்று கலங்கி நிற்கிறார்.
”கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக ஊடகம் தான் எனக்கு இஸ்லாத்தினை இவ்வளவு கொடூரமாக அறிமுகப்படுத்தியது. இஸ்லாம் என்பது வன்முறை போதிக்கும் மதம் என்றும், பெண்களை அடிமைப்படுத்தும் மதம் என்றும் சமூகத்திற்கெதிரானது” என்று மட்டுமே அறிந்திருந்ததாக சொல்கிறார் டோர்ன்.
ஃபித்னா படத்திற்கு உண்டான எதிர்ப்பு, வெளியான அரைமணி நேரத்திலே தடைசெய்யப்பட்ட நிகழ்விற்குப் பின் இஸ்லாத்தினை மேலும் அறிந்துகொள்ள நினைத்த போது, அவரின் நண்பர் அபு ஹுலானி உள்ளூர் பள்ளிவாசலுக்கு அழைத்துச்சென்றிருக்கிறார், அங்கு அவருக்குக் கிடைத்த சிறப்பான உபசரிப்பும், வரவேற்பும் ஆச்சர்யமளித்திருக்கிறது. தாம் நினைத்திருந்ததிற்கு முற்றிலும் எதிராக நடக்கிறதே என்று இஸ்லாத்தினை அறிய அதிக ஆர்வம் பிறந்திருக்கிறது.
திருக்குர்ஆன், ஹதீஸ் தொகுப்புகள் மற்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை ஓராண்டு ஆராய்ந்து கற்றுத்தேர்ந்து, உலகின் உன்னதமான மார்க்கம் இஸ்லாமே என்று ஓங்கியொலித்து உறுதியோடு ஏற்றுக்கொண்டுள்ளார் டோர்ன்.
உலகமே இதை நம்ப மறுத்திருக்கையில், நகர மேயரைச் சந்தித்து தான் இஸ்லாத்தினை ஏற்றுக்கொண்டதை முறையாக அறிவித்து, தனக்கும் மற்ற முஸ்லீம்களைப் போலவே அலுவலக நேரத்தில் தொழுகைக்கான நேரத்தில் தொழுவதற்கு அனுமதிகோரியுள்ளார்.
புனித இறையில்லம் மற்றும் இறைத்தூதரின் பள்ளியினைத் தரிசிக்க வந்த அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் உலகுக்குச் சொன்னது,
”யார் நம்ப மறுத்தாலும், இது (இஸ்லாத்தினை ஏற்றிருப்பது) எனது வாழ்க்கையில் ஓர் முக்கியமான முடிவாகும். இதுநாள் வரையிலும் மற்றவர்களைப் போலவே நானும் நிறைய தவறுகள் பாவங்கள் செய்திருக்கிறேன். அதனால் நிறைய பாடம் கற்றுக்கொண்டிருக்கிறேன். இப்போது அல்லாஹ் எனக்கு நேர்வழியினைக் காட்டியிருக்கிறான். இந்த நேரான வழியில் செல்லும் என் வாழ்க்கையின் புதிய தொடக்கத்தில் கற்றுக்கொள்ள வேண்டியதோ கடலளவு.
’தீமையினை நன்மையைக் கொண்டு மாற்றவேண்டும்’ என்ற இறைவசனத்திற்கேற்ப, அறியாமையினால் இஸ்லாத்தினை தவறாகச் சித்தரிக்கும் படம் கொடுத்த இந்த உலகிற்கு, இஸ்லாத்தின் மாண்பையும், ஈருலக நாயகர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் புனித வாழ்வினையும் சொல்லும் படம் தயாரித்து வெளியிடுவேன்.”
நமது பள்ளிவாசல்கள் உள்ளூரில் செய்யப்போகும் புதிய தொடக்கம் எப்போது?
புதுசுரபி

