விதவைகளாகிவிட்ட விளைநிலங்கள்.
சமீபத்தில் படித்த ஒரு புதுக்கவிதை சற்று சிந்திக்கவைத்தது.
நம் கண்முன் காணும் காட்சிகளும் அதற்கு கட்டியம் கூறின.
"வயல வெளியில் -
நெல் போட்டேன் – நஷ்டவாளியானேன்
கரும்பு போட்டேன் கஷ்டவாளியானேன்
பருத்தி போட்டேன் பதட்டவாளியானேன்
பிளாட் போட்டேன் பில்லினர் ஆனேன்."
முன்பெல்லாம் பட்டுக்கோட்டையிலிருந்து அதிரை செல்லும் சாலையில் முதல்சேரி தாண்டி, செல்லிக்குறிச்சி ஏரி வரை இருபுறமும் வயல் வெளிகள். இன்று அவை லாரல் பள்ளிவளாகமாக மாறிவிட்டன. அதுதான் போகட்டும் என்றால் காதர் முகைதீன் கல்லூரிக்கு எதிர்புறத்தில் இருந்து ராஜாமடம் வரை இருந்த வயல் வெளிகள் கொஞ்சம் எம். எஸ். எம். நகராகவும் மற்றவை எந்த நகராகவும் இல்லாமல் வெறும் கழுத்து விதவையாக விளைநிலங்கள். அன்று பச்சை பசேல் என்று காட்சியளித்த பகுதிகள் இன்று வெறும் கருவைக்காடாக காட்சியளிக்கின்றன.
விதிவிலக்காக இங்கும் அங்குமாக இரு கட்டிடங்கள் அத்துடன் உருவாகும் ஒரு இறை இல்லம். இது தவிர எங்கு பார்த்தாலும் சிறிதும் பெரிதுமாக எல்லை கற்கள் . தேவை இருக்கிறதோ இல்லையோ இடங்களின் விலை ஏறும் என்றும் இன்னும் ஏறட்டும் என்றும் எதிர்பார்த்து ஜீவநாடியான விவசாயத்தை தொலைத்துவிட்டு வெட்டியாக மனித பேராசைக்கு சாட்சியாக நம்மை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. அன்று அன்னமூட்டிய விளை நிலங்கள் இன்று விதவைக் கோலத்தில்.
இந்த காட்சி நம் ஊர்போன்ற உப்புக்காற்று வீசும் காவிரியின் கடைமடைப்பகுதிகளில் மட்டுமல்ல. முப்போகமும் விளைந்த வரலாறு படைத்த – சோழநாடு சோறுடைத்து என்ற பெருமைக்கும் மாடு கட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டி போரடித்த பெருமைக்கும் சான்றாய் நின்ற பகுதிகளிலும்தான் என்பது கசப்பான நிதர்சனம்.
தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளில் விளைநிலங்கள் ஐந்து லட்சம் ஹெக்டேர்கள் அளவுக்கு குறைந்துள்ளன என்று மாநிலத் திட்டக்குழுவே தெரிவித்துள்ளது.
நகரமயமாதல் (URBANIZATION) மற்றும் தொழிற்துறையின் அபரிமிதமான வளர்ச்சி (INDUSTRIAL GROWTH) காரணமாகவே விளைநிலங்கள் குறைந்துவிட்டன என்று சுட்டிக்காட்டியுள்ள மாநிலத் திட்டக்குழு, விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களின் வளர்ச்சியும் திட்டமிட்ட அளவுக்கு இல்லை என்று கூறியுள்ளது.
விளை நிலங்கள் குறைந்திருப்பதற்காக இந்த காரணங்களை சொல்லலாம்.
1. விவசாய வேலைகளுக்கு தேவையான ஆட்கள் கிடைப்பதில்லை.
2. விவசாயத்தில் வேண்டும் என்கிற அளவுக்கு உற்பத்தி இருந்தாலும்கூட விலை போகிறதில்லை. சாதாரணமாக உற்பத்தி செலவுகளுக்கு கட்டுப்படியாகிற பொருளுக்கு ஏற்ற விலை கிடைக்காத ஒரு காரணத்தினால் விவசாயத்தை விட்டு வெளியேறுகின்ற வாய்ப்பு அதிகமாய் வருகிறது.
3.அரசினுடைய வளர்ச்சி திட்டங்களுக்காக விவசாய நிலங்களை எடுத்துக்கொள்கின்றார்கள். சிப்காட் போன்ற தொழில் பேட்டைகள், சாலை, ஸ்பெஷல் எக்ஸ்போர்ட்ஸ் பூங்காக்கள்,. ஐ.டி. , நவீன விமான நிலையங்கள் இந்த மாதிரி எல்லாவற்றையுமே கட்டிட வசதிகளுக்காக எடுத்துக்கொள்கிறார்கள்.
4. சாலை வசதிகள் இப்போது பெருமளவு பெருகி வருகிறது. நான்கு வழிச்சாலைகள் அதிகளவில் போடுகிறோம். அதற்காக விவசாய நிலங்களைததான் கையகப்படுத்த வேண்டியிருக்கிறது.
5.. நகரங்கள் விரிவடைந்து கொண்டே போவதால் வீடுகள் கட்ட நிறைய இடங்கள் தேவையும், வீட்டுமனைகளின் விலை உயர்வையும் பொறுத்து விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படுகின்றன.
இவற்றுள் விவசாயத்துக்கு தேவையான ஆட்கள் கிடைப்பதில்லை என்பது தலையாய காரணமாக திட்ட கமிஷன் சுட்டிக்காட்டுகிறது.
கிராமப்புறங்களில் இருந்து ஒரு கணிசமான கூட்டம் நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்ந்து கொண்டே இருப்பதும், அரசின் இலவச திட்டங்களால் இன்றியமையாத பொருள்களுக்கு உழைத்து வரும் வருமானத்தை எதிர்பார்த்திருக்க வேண்டியதில்லை என்கிற நிலைமைகளும், இருபத்தி நாலு மணி நேரமும் மக்களை கட்டிப்போடும் தொலைக்காட்சி சேவைகளும், இலகுவாக கிடைக்கும் மதுவுக்கு உழைக்கும் கூட்டத்தின் கணிசமான சதவீதம் அடிமைப்பட்டு கிடப்பதும், பாடுபட்டு செய்யும் விவசாயம் பலதடவைகளில் பொருளாதார ரீதியில் பொய்த்து போவதன் காரணமாக ஏற்படும் மனரீதியான ஊக்கமின்மையும் ஆட்கள் கிடைப்பதில்லை என்பதற்கு காரணங்களாக சொல்லலாம்.
அரசின் நூறு நாள் வேலை திட்டத்தின் காரணமாகவும் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. ஆனால் அதற்கு பரிகாரம் செய்யமுடியும். அரசின் ஊரக மேம்பாட்டுத்திட்ட (RURAL DEVELOPMENT) பணிகளோடு விவசாய நிலங்களையும் மேம்படுத்தும் பணியையும் இணைத்துக்கொண்டால் இக்குறையை ஓரளவு களைய முடியும்.
ஒரு காலத்தில் வெளிநாட்டிலிருந்து ஆட்கள் வந்தால் புரோக்கர்கள் என்று சொல்லப்படுகிற வெளிநாட்டு சாமான்களை வாங்கி விற்கும் ஆட்கள் கொண்டுவந்த சாமான்களுக்கு நல்ல விலை தருவதாக சொல்லி பட்டியல் போட வீடு தேடி வருவார்கள். இன்றோ நாம் ஊர் போன மறுநாள் நம் வீடு தேடி வருபவர்கள் நில பேரங்களில் ஈடுபட்டுள்ள புரோக்கர்கள். தடுக்கி விழுந்தால் இப்போது புரோக்கர்கள் மேல் விழ வேண்டி இருக்கிறது. தாமரங்கோட்டையில் தோப்பு இருக்கிறது. அங்கு ஒரு தங்கப்புதையல் இருக்கிறது என்றும் சம்பையில் சதுப்பு நிலம் இருக்கிறது. அங்கு சாத்துக்குடி சாகுபடி செய்யலாம் என்றும் ஏரிப்புரகரையில் இடம் வாங்கினால் ஏலக்காய் பயிரிடலாம் என்றும் ஆசை வார்த்தை காட்டி எதையாவது தலையில் கட்டிவிடுகிறார்கள். சில இடங்களில் அதிகமான இலாபம் கிடைப்பதால் நிறைய இடங்களில் வெறும் இடங்களை வாங்கிப்போட்டு அப்படியே விலை ஏறும் என்று காத்து இருக்கிறார்கள். அந்த முன்னாள் விவசாய பூமிகள் விவசாயம் செய்யப்படாமல் வீணாக கிடக்கின்றன.
இப்படி சிலர் பெருமளவில் வாங்குகிற இடங்களை செப்பனிட்டு விவசாயத்துக்கு ஏற்ற இடமாக பக்குவப்படுத்தி பயிர் செய்ய எத்தனிக்கிறாகளா என்றால் அது ஒப்பிடுகையில் மிகக்குறைந்த சதவீதமே.
இந்த மாதிரி விளைநிலங்கள் மற்ற ஒரு காரணங்களுக்காக மாற்றப்படுவது என்ற போக்கு தொடர்ந்து நீடித்து வருவதன் காரணமாக தேவைப்படும் உற்பத்தியினுடைய அளவு குறைவதோடு மட்டுமில்லாமல் யூனிட் புரொடக்ட்விட்டி என்று சொல்லப்படுகிற ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்து நாம் உற்பத்தி பண்ணுகிற விளைபொருளை இரண்டு மடங்காக்க வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுகிறோம்.
அப்போதுதான் இருக்கக்கூடிய மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்றவகையிலே உணவு உற்பத்தியை செய்ய முடியும். அப்படியே குறைந்த அளவு விளை நிலத்தில் இடுபொருள் (INPUT) என்கிற ஒரு காரணியை மட்டும் கூடுதலாக்கிவிட்டு (OUTPUT) என்கிற கண்டுமுதல் வரவில்லை என்றால் அது பொருளாதார கோட்பாடுகளின்படி குறைந்து செல் உற்பத்திவிதி (LAW OF DIMINISHING MARGINAL RETURNS ) க்கு உட்படும்.
இது கையில் இருக்கிற வெண்ணையை விற்றுவிட்டு நெய்க்கு அழும் கதையாகவே இருக்கும். கண்களை விற்றுவிட்டு சித்திரம் வாங்க முயன்றால் உலகம் கை கொட்டி சிரிக்காதா? அரிசி வாங்கும் பணத்தில் சட்டி வாங்கி வைத்தால் எதைப்போட்டு சமைப்பது?
இப்படி விளைநிலங்களை வாங்கிப்போட்டுவிட்டு அதை எந்த உற்பத்திக்கும் பயன்படுத்தாமலும் ஏற்கனவே உற்பத்தியானதையும் நிறுத்திவைத்திருக்கும் போக்கை சட்டத்தாலோ அரசின் தலையீட்டாலோ தடுத்து நிறுத்தமுடியுமா என்று சிலர் மனதில் கேள்வி எழுகிறது.
இதற்கு பதில் தடுத்து நிறுத்தமுடியும் என்பதே.
விளை நிலங்களாக இருந்தவற்றை தொடர்ந்து மூன்று வருடங்கள் (CULTIVATION) என்கிற விவசாயப்பணிகளில் ஈடுபடுத்தாமல் விதவை நிலங்களாக போட்டுவைத்தால் அரசு ஊராட்சி மன்றத் தலைவரின் சிபாரிசின் பேரில் மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவில் அவற்றை மீண்டும் மாற்றி அமைத்துக்கொள்ளவோ அல்லது அரசுக்கு தேவை என்று எடுத்துக்கொள்ளவோ சட்டப்படி முடியும் . குறைந்த பட்சம் இந்த போக்கை தடுக்கவாவது முடியும்.
இந்தியா ஒரு விவசாய நாடு என்றும் , 70 சதவீதம் மக்கள் விவசாயத்தை சார்ந்து பிழைக்கிறவர்கள் என்றும் சமூக அறிவியலில் படித்து எழுதி மார்க் வாங்கி இருக்கிறோம். இன்றோ 52 சதவீதம் நகரீயமாக்கப்பட்டுவிட்டது என்றும், நமது கிராமங்களில் இருந்து விவசாயத்தை சார்ந்து பிழைத்தவர்கள் நகர்புறங்களுக்கு நகர்ந்து விட்டார்கள் என்றும் திட்ட கமிஷன் கூறுகிறது. இது ஆபத்தின் அறிகுறி.
சென்னை ,மதுரை ,திருச்சி, கோவை ,சேலம், நெல்லை போன்ற பெரு நகரங்களை ஒட்டி அமைந்துள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களை அண்டை மாநிலத்தைச் சார்ந்தவர்கள் அயல் நாடு வாழ் இந்தியர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனத்தினர் போன்றவர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கியும் விற்றும் ஒரு செயற்கையான மற்றும் கடுமையான விலை ஏற்றத்தை உருவாக்கியுள்ளனர் இதனால் அன்றாடம் காய்ச்சிகளான ஏழை எளிய மக்கள் நிலம் சார்ந்த கூலித் தொழிலையும் இழந்து தமது தாய் மண்ணையும் பறி கொடுத்து சொந்த மண்ணிலேயே அகதிகளாகும் நிலைமைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர் ஆகவே பரவலாக விளை நிலங்கள் பறிபோவதை தடுக்கவும் பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் வணிகத்தின் பெயரால் விவசாய நிலங்களின் மீது செலுத்துகிற ஆளுமையை அல்லது ஆக்கிரமைப்பை கட்டுப்படுத்த வேண்டும்
எந்த ஒரு நாடும், தனக்கு காலகாலமாக கை கூடி வந்த மண்ணின் பரம்பரியமான தொழிலை மறந்து அந்த வாழ்வாதாரங்களை தலைகீழாக மாற்ற தலைப்பட்டாலோ பேணிகாக்காமல் உதாசீனம் செய்தாலோ முன்னேற முடியாது. சரித்திரம் அப்படி சான்று பகரவில்லை.
தனக்கே உரித்தான-தன தாய் மண்ணுக்கே சொந்தமான- தலைமுறைக்கும் கைவந்த தொழில்களோடு புதிய மாற்றங்களோடும் நவீன தொழில் வளரச்சிகளோடும் கைகோர்த்து அரவணைத்து வளர்ந்த நாடுகளே அதிகம். ஒரு விவசாய நாடு என்று முத்திரை குத்தப்பட்ட நாட்டின் விவசாய நிலங்கள் வீணாகி கிடப்பதையும் அதன் விவசாயிகள் மனமொடிந்து மாற்று தொழில்களுக்கு மண்டியிடுவதும் ஆரோக்யமான பொருளாதார வளர்ச்சியின் அடையாளமாக கருத முடியாது.
ஒரு நாட்டு மக்களின் உண்மையான வளர்ச்சி அவர்கள் கையில் இருக்கும் செல் போன்களும், தோளில் தொங்கும் லேப்டாப்களும் அல்ல. பசி இல்லாத வயிறுகளும்-உற்பத்தி பெருக்கமும் -ஏற்றுமதி அதிகரிப்பும் -அன்னியசெலாவணி கை இருப்பின் பெருக்கமும்- வெளிநாட்டு கடன் சுமை குறைவும்- உள்நாட்டு சேமிப்பின் பெருக்கமும்தான் வளர்ச்சி அடையும் நாடுகளின் அடையாளம். இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டால் நடக்காது. விளை நிலங்களை விதவைகளாக்கிவிட்டு ஒரு விவசாய நாடு விந்தைகள் செய்ய இயலாது. வல்லரசு ஆகப்போகிறோம் என்று வார்த்தை சாயம்தான் அடிக்கலாம்.
இன்னும் 50 ஆண்டுகளில் இந்தியா வல்லரசு ஆகிறதோ இல்லையோ – இப்படியே போனால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்தியா இன்னொரு எத்தியோப்பியாகவோ.
சோமாலியாகவோ மாறி சோத்துக்கு சிங்கி அடிக்கப்போவது திண்ணம்.
-இபுராஹீம் அன்சாரி
வண்ணப்படம் : Sஹமீத்