மத்திய ரயில்வே துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் இன்று (26-02-13) மத்திய ரயில்வே பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் (பாராளுமன்ற தாக்குதல் அல்ல) செய்ய இருக்கிறார். ஆனால் அதில் நமதூர் வழி திருவாரூர் காரைக்குடி அகல ரயில்பாதைப்பற்றி ஏதேனும் சொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் ஒன்றும் தெரிவிக்கவில்லை.
இந்த வழித்தடத்தில் காலம் காலம் ஓடிய கம்பன் எக்ஸ்பிரஸ் என்ன ஆனது?
அதில் பல வருடங்கள் பயணித்து அனுபவித்த பகுதி மக்களின் போராட்டங்களுக்கு கிடைத்த பலன்கள் என்ன?
மத்திய உள்துறை மந்திரியாக இருந்த சமயம் திரு. ப. சிதம்பரத்தை நம் ஊர் பெரியவர்கள் அவர் வீட்டில் நேரில் சந்தித்து அகல ரயில்பாதையை துரிதப்படுத்தி அதில் கம்பனை விரைவில் ஓட்டச்செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொண்டு கொடுக்கப்பட்ட மனுவிற்கும் பிறகு அவர் மத்திய அரசின் லட்டர் பேடிலிருந்து அதை பெற்றுக்கொண்டதற்காகவும் பின்னர் அதை ரயில்வே துறை அமைச்சருக்கு பரிந்துரைக்கப்பட்டதற்காகவும் எழுதி அனுப்பப்பட்ட அந்த நகல் கடிதத்தால் ஏற்பட்ட பலன்கள் என்ன?
நமது தஞ்சை தொகுதி பாராளுமன்ற எம்.பி.யும் மத்திய நிதித்துறை இணையமைச்சருமான திரு. பழநிமாணிக்கத்தை நேரில் பல முறை சந்தித்து நமதூர் பெரியவர்கள் கொடுக்கப்பட்ட மனுக்களுக்கும், அகல ரயில் பாதை பணிக்காக அவர் கொடுத்த வாக்குறுதிகளுக்கும் என்ன பலன் கிடைத்துள்ளது?
திமுகவின் பாராளுமன்ற எம்பிக்கள் குழு தலைவரும், முன்னாள் மத்திய கப்பல் துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தவரும், மன்னார்குடியை சொந்த ஊராகக்கொண்ட திரு. டி.ஆர்.பாலு அவர்களிடமும் நம்மூர் பெரியவர்கள் நேரில் சென்று மனு கொடுத்துள்ளார்கள். அதன் பலன் என்ன?
திரு. பழநிமாணிக்கம் அவர்களும், திரு. டி.ஆர். பாலு அவர்களும் நம் பகுதி அகல ரயில்பாதை பணிகள் பற்றி மாறி, மாறி பத்திரிக்கைகளில் பேட்டியும், வாக்குறுதியும் சில நாட்களுக்கு முன்னர் அறிவித்து வந்தனர். அதன் பயன் தான் என்ன?
நமக்கு அருகில் உள்ள முத்துப்பேட்டையை சொந்த ஊராகக்கொண்டு வேலூர் தொகுதியின் தற்பொழுது எம்பியாக இருக்கும் ஜனாப் அப்துல் ரஹ்மான் அவர்களை நேரில் சந்தித்து மனுக்கள் கொடுக்கப்பட்டு என்ன ஆனது?
புதிதாக ரயில் வழித்தடம் அமைத்துக்கேட்டால் அதனால் பாதிக்கப்படும் விவசாய நிலங்களின் உரிமையாளர்கள், விவசாயிகளால் பல போராட்டங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஓடிக்கொண்டிருந்த குறுகிய ரயில்பாதையை அகல ரயில்பாதையாகத்தானே இப்பகுதி மக்கள் ஆக்கிக்கேட்கிறார்கள்? பிறகு ஏன் இந்த சுணக்கமும், தயக்கமும் என்று தெரியவில்லை.
இப்பகுதி உப்பளங்களாலும், கருவாட்டு மண்டிகளாலும் அரசுக்கு வருவாய் அதிகம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இப்பகுதி மக்களின் வாக்குகளில் தானே நீங்கள் பாராளுமன்ற உறுப்பினராகி அங்கு அலங்கரிக்க முடிகிறது? என்ற குறைந்தளவு நன்றி விசுவாசம் நம் எம்பிக்களுக்கு வர வேண்டாமா?
இவர்களிடம் மனுக்கள் பல கொடுத்து நம் மக்கள் மல்லுக்கட்டி நின்றும், மாறி, மாறி இவர்கள் வாக்குறுதிகளை வாரி வழங்கியும் கடைசியாக நம் மண்ணில் கம்பனை கொண்டு வந்து சேர்ப்பதற்குள் அதை பயன்படுத்தி இன்னும் கொஞ்சம் மிச்சம், மீதி உசுரோடு இருக்கும் எத்தனையோ நம் பெரியவர்களும் போய்ச்சேர வேண்டிய இடம் போய்ச்சேர்ந்து விடுவார்கள் போலும். அதற்குள் பல பாராளுமன்ற தேர்தல்களும், சட்ட மன்ற தேர்தல்களும் நம்மை சந்தித்து விட்டுப்போய் விடும் போல் தெரிகிறது.
மத்திய அரசு நாட்டின் பொருளாதார வளர்ச்சி +8 சதவிகிதம் வளர்ச்சி அடைந்திருப்பதாக அறிவித்திருந்தாலும் நம்மைப்பொறுத்தவரை இன்னும் நாம் -8 சதவிகிதம் தாழ்ச்சி அடைந்ததாகவே கருதவேண்டியுள்ளது பழைய பல விடயங்களை இன்று ஒப்பிட்டு பார்க்கும் பொழுது......
கணவன் இறந்ததால் ஒரு விதவையாக்கப்பட்ட மனைவிக்கு கழட்டப்படும் வண்ண ஆடை, அணிகலன்கள் போல் சமீபத்தில் நம் ஊர் இரும்பு ரயில் பாதைகள் பெயர்த்தெடுக்கப்பட்டன. அகல ரயில்பாதை பணி மூலம் அவளுக்கு என்று தான் அணிகலன்கள் அணிவிக்கப்பட்டு மறுமணம் செய்து வைக்கப்படுமோ? காத்தே இருப்போம்.
மு.செ.மு. நெய்னா முஹம்மது