தலைப்பிறை மேற்கில் தோன்றும்
உற்சாக குழந்தை ஊரில் பிறக்கும்
சிறுவர் பெரியவரின் உள்ளமோ
சமுத்திர சந்தோசத்தில் மூழ்கும்
பள்ளிகளெல்லாம் பரவசமடையும்
வணக்கவழிபாடுகள் வெள்ளமாய்
வழிந்தோடி வயதுகள் வேறுபாடின்றி
வல்லோனை அழுதுதொழுது புலம்பும்
வீட்டுப்பெண்டிரும் வேண்டியதை
சடைவின்றி சரிவரசெய்து வைப்பர்
நல்ல அமல் பல நன்றாய் செய்திடுவர்
நமக்கெல்லாம் நன்மையை வேண்டிடுவர்
ஏழை எளியோரும் ஏக்கத்துடன்
எதிர்பார்த்த ஏந்தல்மிக்க ரமளானும்
அவர் ஒரு மாத வாழ்க்கைத்தரம்
உயர்ந்து நிற்கஉன்னதமாய் உதவிடும்.
எல்லோரின் உள்ளமும் உற்சாக
சாரலில் ஒரு மாதம் குளிர்ச்சி பெரும்
நன்மை பல செய்ய நாடி செல்லும்
வரியவரின் பசி உண்மையாய் உணரும்
அஸருக்குப்பின் பள்ளி வாசலில்
அலைமோதும் சிறுவர் கூட்டம்
வரிசையில் நின்று நோன்புக்கஞ்சி
வாஞ்சையுடன் வாங்கிச்செல்லும்
வாடாவும் சம்சாவும் தெருதோறும்
வாய்க்கப்பெறும் காசிருந்தும் இயலாமல்
நோன்பு திறக்கும் சமயம் எண்ணி
அமைதியாய் பொறுமை கொள்ளும்
அன்று வானில் பார்த்த தலைப்பிறையோ
இன்று ஏனோ உள்ளத்தில் தோன்றி மறையுது
வாஞ்சையுடன் வாங்கி வந்த நோன்புக்கஞ்சி
இன்று ஏக்கத்துடன் ஏங்கவைத்து ஏமாத்துது
உருண்டோடி விட்ட வருடங்கள் பல
உருளாமல் இருக்கும் நினைவுகள் சில
மறைந்த நம் மனிதர்கள் பலர் அதை
மறக்காமல் நினைக்கும் சிலர்
நீயும் நானும் சிறுவனாய் ஓடித்திரிந்த
நாட்களிலே நல்லநாட்களாய் ரமளானே
இருந்து வந்ததை மறக்க இயலவில்லை
மாற்றாக வேறெதுவும் இருக்கவில்லை
சஹரு நேர சவுரு பக்கிர்சாவும்
அவருடன் வந்த அரிக்களாம்பும்
உறங்குவோரை எழுப்பி விடும்
உற்சாக ஓசைகள் இன்றுமுண்டோ?
சிறு வயது சேட்டைகள் இன்று
சில நேரம் நினைவில் வந்து
குறிப்பிட்ட வயதெட்டிய எம்மை
வாஞ்சையுடன் பக்குவப்படுத்தும்
கண்சிவக்க குளித்துவந்த குளக்கரையும்
காணாமல் போன கொரங்குமட்டையும்
அதன் மேல் சவாரி செய்த நினைப்பும்
உள்ளத்தில் தூசிதட்டி துப்புறவு செய்யும்
நஹராவின் ஒலி ஊரெல்லாம் கேட்கும்
தொழுகைக்கு எம்மை தயார்படுத்தும்
வல்லோனை வணங்கிநிற்க விரைந்தோடும்
தவறிய தொழுகைக்கு தவ்பா செய்யும்
உற்றார், உறவினர் உறவு பேணும்
இல்லாதோருக்கு உள்ளார் கொடுத்து
இன்பத்தின் சுவைதனை இனிதே சுவைக்கும்
வல்லோனின் வாக்கால் வாழ்க்கை துலங்கும்
கஞ்சி மேல் பிச்சி போட்ட வாடா
கெஞ்சினாலும் கிடைக்காதா இன்று
பிஞ்சு மனசு கிழடானாலும் என்றும்
கைத்தடியின்றி நினைப்பால் கம்பீரமாகும்
பிறை பதினேழில் படையெடுத்த பத்ருப்படை
கத்தியின்றி ரத்தமின்றி களத்தில் நிற்கும்
போரின்றி கொண்டு வந்து குவித்திடும்
நல்ல நாக்குருசி நார்சாவும் ரெடியாகும்
தலை நோன்பு சீனிச்சோறு இனிப்பால்
நினைக்கும் பொழுதெல்லாம் தித்திக்கும்
நித்திரைக்கும் வேட்டுவைத்த
நிதர்சனமான உண்மையாகும்
உள்ளம் குளிர உம்மா தந்த சர்பத்தும்
பார்வையால் உண்டுமகிழும் பதார்த்தங்கள்
பசித்தலால் உருவாகும் பல ருசித்தல்கள்
பழைய நினைவால் வந்த ரசித்தல்கள்
ஏழைகளின் ஏக்கம் தீர்ந்து காசும் சேரும்
பயனடைந்தவர்களின் உள்ளமோ இன்னும்
பன்னிரண்டு மாதமும் ரமளானை வேண்டும்
ரஹ்மத்தும் ரஹ்மானிடமிருந்து வந்துசேரும்
சென்ற ரமளானில் எமக்கு சலாம்
சொன்ன சொந்த,பந்தத்தின் பலர்
எம்மை விட்டு சென்று விட்டனர்
இறைவனடியும் சேர்ந்து விட்டனர்
இறையை போற்றிப்புகழ்வோரும்
இறை நிராகரிப்போரும் எப்படியும்
சேருமிடம் இணையில்லா இறைவனடி
எல்லோருக்கும் பொதுவான வழிப்படி
புனித ரமளானே வருக!
எங்களுக்கெல்லாம் நல்லருள் தருக!
சென்றுமறைந்த நம்மவர்கள் யாவரின் கப்ருகளுக்கும் சொர்க்கத்தின் நறுமணம் வீசச்செய்க!
என்று புனித ரமளானை வாழ்த்தி வரவேற்றவனாக அதிரை நிருபரின் நிர்வாகக்குழுவினர்களுக்கும், இங்கு நம் கட்டுரைகளை தவறாது படித்து கருத்திடும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும், உற்றார், உறவினர்கள், அன்பு மிகு நண்பர்கள், பாசமிகு சொந்த பந்த அனைவருக்கும் முழு பரக்கத்தும், ரஹ்மத்தும், மஹ்ஃபிரத்தும் நம் அனைவர்களுக்கும் குறையாது வந்தடைய வல்ல ரப்புல் ஆலமீனை இந்த நல்ல தருணத்தில் து'ஆச்செய்கின்றேன்.
ஆமீன்.... யாரப்பல் ஆலமீன்...
மு.செ.மு. நெய்னா முஹம்மது.