கண் பார்வை விழிப்புணர்வு பதிவுகள் - 2
வீதிக்கு வீதி
விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள்...
விழிகளுக் கென்றும்
மொழிதல் வேண்டும்!
எண்ணும் எழுத்தும்
கண்ணெனக் கொள்-
கண்ணொளி போயின்
எண்ணேது எழுத்தேது?
கிட்டப் பார்வையும்
குழி லென்ஸும்
சோடா புட்டியென
'சேடை' பேச்சும்
முன்னேற உனக்கு
முட்டுக் கட்டை!
ஓரப் பார்வைகளை
ரசிக்கும் வயதில்
தூரப் பார்வை
துயர மல்லவா?
சின்னத்திரையும்
பெரிய திரையும்
விழித்திரையின் எதிரிகள்...
கணினித்திரையின்
காணொளிகூட
கண்ணொளி உண்ணும் கருவியே.
நேரம் தவறிய தூக்கம்
நிதானமற்ற நோக்கும்
வர்ண வண்ண உலகை
மங்கலாய் மற்றிக் காட்டும்.
உறக்கமும் இறத்தலும்
உக்கிர இருட்டு
பார்வை பழுதானால்
பகல்கூட இரவே!
கண்களை உருட்டி
களைப்பை விரட்டு
காலையும் மாலையும்
கண்களைக் கழுவு!
காய்கறி கீரையும்
காரட்டுச் சாரையும்
கலந்த சாப்பாடு
கண் பார்வைக்கு காப்பீடு!
முகத்திற்கு நேரே
விளக்கொளி தவிர்த்து
வாசிக்கும் வரிகளில்
வெளிச்சம் பாய்ச்சு!
இறைவன் இமைகள்
தந்திராவிடில்
கண்களைக் காத்தல்
கடினமா யிருந்திருக்கும்!
கண்களைப் பேண்
களங்களைக் காண்!
-- சபீர்
Sabeer.abuShahruk
Sabeer.abuShahruk