(*) மின்னிலே சுழன்றிடும்மிக்ஸியின் ஆட்சியில்
மண்ணிலே புதைந்தன
அம்மியும் குளவியும்..
(*) அறவை மில்களின்
ஆற்றலின் உதவியால்
உரலும் உலக்கையும்
உதவாக் கரைகளாம்..(*) ஆயத்த மாவினில்
ஆப்பமும் தோசையும்..
ஆட்டு கல்லுக்கு
அலுவலும் இல்லையாம்..
(*) குடங்கள் சுமந்து
கொண்டு வந்திட்டார்
குடிநீர் ஒருகாலம்!!
குழாய்கள் இப்போது.
(*) அறிவீர் ஓருண்மை..ஆதியில் சொன்ன
கருவிகள் மாறின
கடைசியில் பலனென்ன?
(*) மறைந்த அம்மியில்
கரங்களின் வலிமையும்
உரலின் மறைவினில்
உரமான தேகமும்
(*) குடைகல்லின் மறைதலில்
விரல்களின் வீரியம்
குடங்களின் மறைதலில்
கொடியிடை மேனியும்
(*) கூடவே மறைந்ததை
குறையல்ல! வரமென்றோம்
மாடர்ன் உலகுக்கு
மாறுதல் பலமென்றோம்..
(*) அறிவியல் வளர்ச்சியில்
யாவுமே நடந்திடும்
துரிதமாய்..அங்ஙணம்
மரணமும் வரின்?
(*) குறைவாய் உழைப்பும்
கூடுதல் உணவும்
நிறைவாய் சேர்க்கும்
நீள்பிணி நம்மில்..
(*) உண்ணுதலொத்த உடலுழைப்பும்
உழைப்பிற்கேற்ற உணவுகளுமே
முன்னவர் சொல்லிய
முறை ஆகும்..
(*) விகிதம் மாறா
விதம், உடல்பேணிடும்
சகிதம்வாழ, நம் அகவை
சதமென்றாதல் சாத்தியமே!! (இன்ஷா அல்லாஹ்)
அதிரை என்.ஷஃபாத்
இது ஒரு மீள்பதிவு

