நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

‘விழிப்புணர்வு பக்கங்கள்’ - புத்தகம் வெளியீடு அறிவிப்பு 20

அதிரைநிருபர் பதிப்பகம் | வியாழன், மே 31, 2012 | , ,

அஸ்ஸலாமு அலைக்கும்! (வரஹ்)...

எல்லாப் புகழும் இறைவனுக்கே !

நமது சமுதாயம் சார்ந்த பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, விழிப்புணர்வைத் தூண்டும் விதமாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் கட்டுரைகளை எளிய வடிவில் அமைத்து,  நமதூரைச் சார்ந்த சகோதரர்களின் இணையதளம் மற்றும் வலைப்பூக்கள் போன்றவற்றில் பதிந்துவருகின்றவற்றில் கீழ்க்கண்ட கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து, ‘விழிப்புணர்வு பக்கங்கள்’  என்ற பெயரில் என் முதல் நூலாக வெளியிட ஏற்பாடு செய்துள்ளேன். ( இன்ஷா அல்லாஹ் ! )


1. சீட்டுக் கட்டு ராஜா !
2. ரேஷன் கடைகளில் முறைகேடா ?
3. லஞ்சமா ?
4. கலெக்டரிடம் புகார் செய்ய !
5. தகவல் அறியும் உரிமைச் சட்டம்
6. கவனம்: நிலம் வாங்கும் முன் !
7. பேரூராட்சி மேற்கொள்ள வேண்டிய பணிகள் ?
8. கொசு(த்) தொல்லையிலிருந்து விடுபட...
9. கலப்படம் – ஓர் எச்சரிக்கை !
10. சிட்டுக் குருவியைக் காணவில்லை !
11. வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு !
12. வேலைவாய்ப்பு ! ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி ?
13. V.A.O. வின் பணிகள் யாவை ?
14. புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி ?
15. தண்ணீர் சேமிப்பீர் !
16. அதிரைக் கடல் !
17. குடிக்காதே !
18. அதிரையின் விருந்து உபசரிப்புகள் !
19. மந்திரவாதி !
20. TEEN AGE – பருவம் !
21. கள்ளக் காதல் !
22. மரணத்தின் நிரலாக.....!
23. பயண அனுபவங்கள் 

1. எனக்கு ஊக்கம் கொடுத்து, நல்ல பல ஆக்கங்களைப் பெறும் விதமாகப் பின்னூட்டமிட்டும், நேரிலும், மின்னஞ்சல், தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு அன்பைக் காட்டிய உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வாழும் நண்பர்கள், உறவினர்கள், சகோதர சகோதரிகள் மற்றும் சகப் பதிவர்கள் என அனைவருக்கும் எனது வாழ்த்துகளை அன்புடன் அறிவித்தவனாக.!

2. பல வேலைகளுக்கிடயே எனக்காக நேரத்தை ஒதுக்கி, இந்நூலில் உள்ள எழுத்துப் பிழைகளைச் சரிசெய்து தந்ததோடு, நல்ல ஆலோசனைகளை வழங்கிய மூத்த சகோ. அதிரை அஹமது அவர்களுக்கும், எனக்கு ஊக்கம் கொடுத்ததோடு, நல்ல பல ஆலோசனைகளை வழங்கிய மூத்த சகோ. ஜமீல் M.ஸாலிஹ், மற்றும் வலைத் தள நிர்வாகிகள், சக பதிவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகளை அன்புடன் அறிவித்தவனாக.!

3. மேலும் எண்ணற்ற வலைத் தள நண்பர்களை உருவாக்கித் தந்து, எழுத்து மற்றும் எழுத்து சார்ந்த நல்ல பல விசயங்களை நான் மேலும் கற்றுக்கொள்ள நல்ல அடித்தளமாக அமைத்துக் கொடுத்த நமது அதிரைச் சகோதரர்களின் வலைத்தளங்கள் மட்டுமே என்றால் மிகையாகாது ! நாம் அதிகமாகப் பேசாவிட்டாலும் நமது எழுத்துகள் கண்டிப்பாக அடுத்தவர்களை விழிப்புணர்வு பெறவைக்கும் (இன்ஷா அல்லாஹ்!) என்ற நம்பிக்கையில்.! 

4. இது ஒரு இலவச வெளியீடாகும். எனது சொந்தச் செலவில் முதல் பதிப்பாக ஆயிரம் பிரதிகள் அச்சிடுவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளேன் என்பதையும்.!

5. இந்நூலை நமதூரிலும் வெளிநாடுகளில் உள்ள நமது சமுதாயம் சார்ந்த பொது அமைப்புகளிடமும் வழங்கி, வெளியிட ஏற்பாடு செய்து, அதன் மூலம் கிடைக்கப்பெறுகிற நிதியை அந்தந்தப் பொது அமைப்பின் சமுதாயச் சேவைகளுக்கென்று பயன்படுத்திக் கொள்வதற்கும் கேட்டுக்கொள்ளலாம் என எண்ணியுள்ளேன். இதற்காகத் தங்களின் மேலான கருத்துகள் – ஆலோசனைகளை எதிர்பார்த்தவனாக.!

6. மேலும் நமது இணையதள வாசகர்கள் படிப்பதற்கு இலகுவாக நமது சகோதர வலைத் தளங்களில் “நூல் வடிவில்” (E-BOOK) பதிவேற்றம் செய்யப்படும் (இன்ஷா அல்லாஹ்!) என்பதையும்.!

7. இப்புத்தகம் மூலமாக நீங்கள் பெறப்போகும் பயனை உங்கள் மூலமாகப்  பலரும் இலவசமாகப் பெறுவதற்கு நீங்கள் மறுபதிப்பு செய்து வெளியிட எனக்கு முழு சம்மதம் என்பதையும்.!

8. இப்புத்தகத்தின் பாகங்கள் ஒன்று இரண்டாகி, மூன்று நான்காகி........என சக பதிவர்களின் சமுதாய விழிப்புணர்வு கட்டுரைகள் பங்களிப்புடன் தொடர வேண்டும் என்பதையும்.!

இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். 

அன்புடன்,

-சேக்கனா M. நிஜாம்

தொட்டால் தொடரும்...! குறுந்தொடர்-5 18

அதிரைநிருபர் பதிப்பகம் | புதன், மே 30, 2012 | ,

வாழ வைக்கும் பாலை

கொஞ்ச வருடங்களுக்கு முன்னாலெல்லாம் நல்ல பேரீத்தங்கனிகள் உண்ண வேண்டுமானால் யாராவது ஹஜ்ஜுக்குப் போய்வந்து தந்தால்தான் உண்டு.

அதற்காகவே குழந்தைகள் கூட்டம் ஹாஜிகளின் வீடுகளை சுற்றிச் சுற்றி வருவதுண்டு. அரேபியா "சபர்" ஆரம்பித்த பிறகு வீட்டுக்கு வீடு வித விதமான பேரீத்தங்கனிகள் ருசிக்கப்பட்டன. மாடி வீடுகளைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்ட குடிசைவாசிகளின் புதிய புதிய "அரேபிய" வீடுகளைப் பார்த்து "பழைய மாடி வீட்டுக்காரர்கள்" இப்போது பெருமூச்சு விட ஆரம்பித்தார்கள். அரபு நாட்டின் செல்வத்தின் செழிப்பு முஸ்லிம்கள் வாழும் நகரங்களை

மட்டுமல்ல....பட்டி தொட்டிகளையும் எட்டிப்பார்த்து நலம் விசாரித்தது. அதுவரை அரேபியாவுக்குப் போகாமல் போவதற்கு வசதியில்லாமல் இருந்தவர்களும் புறப்பட ஆயத்தமானார்கள்.

இங்கே நன்றியோடு ஒரு செய்தியை பதிவு செய்ய வேண்டும். அது.......

பண வசதியில்லாத ஏழை இளைஞர்கள் அரேபியா போய் சம்பாதிப்பதற்கு வழியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தபோது ஊரிலுள்ள வசதிமிக்க பணக்காரர்களும் உறவுமுறைத் தாய்மார்களும் அந்த ஏழைகளுக்கு வலிய வந்து பண உதவி செய்தார்கள். சிலர் நகைகளை விற்றும் குடியிருந்த வீட்டை விற்றும் அரேபியா சென்றார்கள். அப்புறமென்ன?

பெரும்பாலான முஸ்லிம் ஊர்களில் வசதியும் வாய்ப்பும் வளர ஆரம்பித்தது. கிழிந்த ஆடைகள் காணாமல் போகத்தொடங்கின. கடை வீதிகளில் "அத்தர்" "சென்ட்" வாசனை கம கமத்தது. "ஜக்காத்" வாங்கியவர்கள் கொடுக்க ஆரம்பித்தார்கள். பள்ளிவாசல்கள் புதுப்பிக்கப்பட்டன. 

அல்லது மிகப் பிரம்மாண்டமாய் கட்டப்பட்டன. ஊருக்குள் அது அடையாளமாய், கம்பீரமாய் எழுந்து நின்றது.

சின்னச் சின்ன ஊர்களிலுள்ள "அரேபிய மாப்பிள்ளைகளைகளுக்கு" பட்டணத்து பணக்காரர்களும் (பட்டணம் என்பது கிராமம் அல்லாத இடங்களைக் குறிக்கும்) நகரத்துச் சீமான்களும் பெண்கொடுக்கத் தேடி வந்தார்கள்.திருமண பந்தத்தின் மூலம் உறவுகள் பல இடங்களிலும் பரந்து விரிந்தது. 

புதிது புதிதாய் முஸ்லிம் குடியிருப்புகள் உருவாக ஆரம்பித்தன. 

விளைச்சல் இல்லாத வயல்களும் அரைகுறை விவசாயம் நடந்த நிலங்களும் வீட்டு மனைகளாய் மாறின. மாற்று மத மக்கள் வாழும் இடங்களின் மதிப்பைவிட முஸ்லிம்கள் புதிதாகக் குடியேறிய இடங்களின் விலைகள் பலமடங்கு அதிகமாக இருந்தன. கூட்டுக் குடும்பம் நடத்திய அண்ணன் தம்பிகள் தனித்தனி குடும்பங்களாய் பிரிந்து புது வீடுகளில் வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். வசதி வாய்ப்பும் புதிதாய் ஒட்டிக்கொண்ட பணக்கார குணநலன்களும் பெற்றோர் மீதான பாசத்துக்கு புதிய பரிமாணங்களை ஏற்படுத்தித் தந்தன. சமுதாயம் அதுவரைக் கண்டிராத புதிய பார்முலா அது.

ஒரு மகன் தாயையும் மற்றொரு மகன் தகப்பனையும் பங்குவைத்து ஆளுக்கொருவராக இழுத்துச் சென்றார்கள். முதுமையில் பசியையும் பட்டினியையும் தாங்க முயாத அந்த"ஏழைத் தகப்பனும் தாயும்" தங்களின் "பணக்கார பிள்ளைகளால்" பிரிக்கப்பட்டு நெஞ்சுக்குள்ளே அழுது நடை பிணங்களாகி விதவைகளைப்போல் வாழ கற்றுக் கொண்டார்கள். 

சமுதாயத்தின் கலாச்சாரமும் வேகமாய் மாறத் தொடங்கியது. பள்ளிவாசல்களிலும் பெண்வீட்டு முற்றத்திலும் நடைபெற்றத் திருமணங்கள் ஆடம்பரமாய் "திருமண மண்டபங்களில்" நடைபெற ஆரம்பித்தன. ஒரு சாயா மிக்சரோடு முடிந்த பெண்வீட்டு விருந்துச் செலவு எடுத்தஎடுப்பிலேயே "பிரியாணி" " நெய்ச்சோறு" என்று விண்ணைத் தொட்டது. கல்யாணத்துக்கு வந்தவர்கள் சுகமாக சாப்பிட்டுச் சென்றார்கள். பெண்ணை பெற்ற ஏழைகள் பெரும் பாடுபட்டார்கள். அரேபியா போய்வந்த பெருமையிலும் இஷ்டம்போல் பணத்தில் புரண்ட கர்வத்திலும் அன்றைய இளைஞர்கள் பலரிடம் அடக்கமும் பணிவும் பறிபோயிருந்தது. சமுதாயத்தில் ஏற்பட்ட ஒரு முக்கிய மாற்றத்தையும் இங்கே தொட்டுச் சென்றே ஆக வேண்டும்.அது -

முக்கியமாக மார்க்க விசயங்களிலும் பல முரண்பாடுகள் தோன்றின. ஜமாத்துக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தவர்கள் "அது சரியில்லை" "இது சரியில்லை" என்று சொல்ல ஆரம்பித்தார்கள். தமிழகத்தின் பல ஜமாத்துகள் உடைந்தன. புது ஜமாத்துகளும் முஸ்லிம் அமைப்புகளும் உருவாகின. இந்த அமைப்புகளைத் தேடி இளைஞர்கள் கூட்டம் ஓடியது. இதன் காரணமாக பல வீடுகளிலும் பிரச்சினைகள் பிரிவினைகள் ஏற்பட்டன. ஒரே ஊரில் இரண்டு மூன்று நாட்கள் பெருநாள் கடைபிடிக்கப்பட்டது. வாப்பாவுக்கு ஒருநாள்....மகனுக்கு ஒருநாள் என்று பெருநாட்களும் வித்தியாசப்பட்டன.

இந்தப் பிரச்சினைகளால் குடும்பங்கள் சில சிதறின. திருமணங்களும் அவரவர் சார்ந்த அமைப்புகளோடு நடைபெற ஆரம்பித்தன. "ஜக்காத்" பணம் எளியவர்களுக்கு கொடுக்கப் படாமல் இயக்கங்களுக்குக் கொடுக்கப் பட்டன. இப்படி ஏராளமான செய்திகளை சொல்லிக் கொண்டே போகலாம். இந்த கட்டுரைக்கு அது கரு இல்லை என்பதால் லேசாக தொட்டுக் காட்டப் பட்டுள்ளது.

எது எப்படி இருந்தாலும் வெளிநாடு செல்லும் சகோதரர்களின் மனநிலை மட்டும் "கசாப்புக் கடைக்கு இழுத்துச் செல்லப்படும் ஆட்டின்" மனநிலையிலிருந்து விடுபடவேயில்லை. விடுமுறை நாட்களில் அவர்கள் சந்தோசமாக நடமாடுவதுபோல் தோன்றினாலும் உள்ளுக்குள் ஒரு துயரத்தின் எரிமலை குமுறிக் கொண்டே இருந்தது. விடுமுறை முடிந்து மீண்டும் அரேபியா போவதற்கு முன்னால் அவர்கள் உடைந்துபோய் அழுவார்கள். மனைவியின் கண்ணீர் அவன் இதயத்தைத் துளைக்கும். அந்த அழுகையும் இதயத்தைப் பிசையும் வேதனையும் வார்த்தைகளில் விவரிக்க முடியாத துன்பத்தை தருவனவாக இருக்கும்.

இதனால் விளைந்த நன்மைகளை கணக்கிடும்போது இந்த வேதனைகள் சகித்துக் கொள்ளக் கூடியவைதான். எப்படி.....

1984 ல் நான் சுஊதியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.தம்மாம் நேப்கோ பேக்டரியில் வேலை. அருமையான அக்காமடேசன். மிக அருமையான நண்பர்கள். பேக்டரி வேலை என்பதால் "ஷிப்ட்" மாறி மாறி வரும். நாங்கள் சொந்தமாக சமைத்துச் சாப்பிடுவது சிரமமாக இருந்தது. அப்போதுதான் ஒரு "சமையல்காரர்" எங்களைத் தேடி வந்தார். அவர் பொதக்குடியைச் சேர்ந்த கண்ணியமிக்க ஒரு ஆலிம். 45 வயது இருக்கும். ஏதோ ஒரு விசாவில் வந்து சரியான வேலை இல்லாமல் அவதிப்பட்டார். நாங்கள் ஆறுபேர் சாப்பிடுவதற்கு அவர் சமையல் செய்து தந்தார்.நாங்கள் கணிசமான ஒரு தொகையை அவருக்குக் கொடுத்தோம். எங்களுக்குத் தெரிந்த நண்பர்களிடமும் சொல்லி வேறு பல சமையல் வேலைகளையும் பெற்றுக் கொடுத்தோம். மரியாதைமிக்க அந்த மனிதர் ஒரு மணி நேரத்தில் எங்களுக்கான சமையலை முடித்து விடுவார்.நேரம் இருந்தால் பல ஹதீஸ்களைக் கூறி விளக்கம் சொல்வார்.

ஒருநாள் அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது...."இப்படி வந்து கஷ்டப் படுறீங்களே...ஊருலே ஏதாவது இமாம் வேலை பார்க்கக்கூடாதா?" என்று கேட்டேன். அவர்..." இல்லை தம்பி...என்னைப்போல ஓதிப் படிச்சவங்க வீட்டிலே வறுமை தாண்டவமாடுது. வெளியே சொல்ல வெட்கப்பட்டு பல நாட்கள் பட்டினி இருந்திருக்கிறோம். எனக்கு அல்லாஹ் மூன்று பெண்பிள்ளைகளைத் தந்திருக்கிறான்...அவர்களை நான் நல்லமுறையில் கட்டிக் கொடுக்க வேண்டும். என்னைப் போன்ற பலர் வேறு வழியில்லாமல் ஊர் ஊராகப்போய் பள்ளிவாசல்களில் பயான் செய்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து கஷ்டப்பட்டு பிள்ளையை கட்டிக் கொடுக்கிறார்கள். எனக்கு அதில் விருப்பமில்லை. என் பிள்ளைகளை நான் சம்பாதித்து என் செலவில் கட்டிக் கொடுப்பேன்...." என்று கூறி கண்கலங்கினார். எங்களில் யாருக்கும் அவரை பிரிய மனமில்லை. எங்களால் இயன்ற உதவிகளை நாங்கள் அவருக்கு செய்தோம். 

இப்படி வறுமையில் வாழ்ந்த சமுதாய அந்தஸ்துள்ள மா மனிதர்களின் மானத்தைக் காப்பாற்றி அவர்களுக்கும் கண்ணியமான வாழ்வை அமைத்துத் தந்து வாழ வைத்ததும் வைப்பதும் இந்த அரபு நாட்டு வருமானம்தான்.

ஊரில் தெருக்கூட்டுவது,கட்டிடக் கூலி வேலை செய்வது,போன்ற சாதாரண வேலைகளைச் செய்ய முன்வராத படிக்காத இளைஞர்கள் அந்த வேலைகளை அரபு நாடுகளில் தயக்கமின்றி செய்தார்கள்.வேலை நேரம் குறைவு என்பதால் பார்ட் டைம் ஆக வேறு வேலைகளும் செய்து பணம் சம்பாதித்தார்கள். துன்பங்களை தூர எறிந்துவிட்டு களத்தில் குதித்த இந்த களப்பணியாளர்களின் குடும்பங்கள் கொஞ்ச வருடங்களில் "ஓகோ" என்று முன்னுக்கு வந்தன. அவர்களின் பிள்ளைகள் நல்ல படிப்பு படித்தார்கள். தமிழக முஸ்லிம்களிடமிருந்த "கல்லாமை" சமுதாயத்திலிருந்து விரட்டப்பட்டது.

அதன்பிறகு படித்தவர்களும் வசதி உள்ளவர்களும் அரேபியப் பயணத்தை மேற்கொண்டனர். சமுதாயம் ஒட்டு மொத்தமாக வளர்ச்சிப் பாதையை நோக்கிப் பயணித்தது. உள்ளூரிலும் உள்நாட்டிலும் பல முஸ்லிம்கள் தொழில் முதலீடுகளை அரேபியாவில் இருந்துகொண்டே செய்தார்கள்.

பல முஸ்லிம்கள் கலை அறிவியல் கல்லூரிகளும் பொறியியல் கல்லூரிகளும் ஆரம்பித்தார்கள். கல்வி வளம் பெருகியது .பணமும் படிப்பும் வளர வளர பிள்ளைகளிடம் நல்ல பண்புகளும் அறிவும் வளர ஆரம்பித்தன. ஓரிருவர் மட்டுமே இன்ஜினியர்களாகவும் டாக்டர்களாகவும் இருந்த ஊர்களில் இன்று எண்ணற்ற இன்ஜினியர்களும் டாக்டர்களும் உருவாகி இருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம்....இந்த அரேபிய உழைப்பால் கிடைத்த வருமானம்.

....சமுதாய விழிப்புணர்வு, சமூக முன்னேற்றம், கல்வி, வேலை வாய்ப்பு, சமூக அந்தஸ்து , அரசியல் பலம் என்று பல்வேறு துறைகளில் முஸ்லிம் சமுதாயம் வெற்றி நடை போடுவதற்கு காரணமாக இருப்பது இந்த "திரை கடலோடியும் திரவியம் தேடும்" ஆர்வம்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. இதற்கு நம்முடைய மார்க்கமும் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பே வழிகாட்டியிருக்கிறது என்பது ஆச்சரியமான உண்மை. அதை அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன்....இன்ஷா அல்லாஹ்.

......இந்த பதிவுகள் நேரம் போகாமல் எழுதப் படக் கூடிய பதிவுகள் அல்ல. நாம் கடந்து வந்த பாதை..... இனி நாம் முன்னேற வேண்டிய பாதை.... 

இவற்றை படம் பிடித்துக் காட்டும் தொடர். இதை படிப்பவர்கள் தயவு செய்து தங்கள் கருத்துக்களையும் தங்கள் அனுபவங்களையும் பதிவு 

செய்தால் அது எனக்கும் நம் அனைவருக்கும் உதவியாக இருக்கும் என்பதை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

( இன்ஷா அல்லாஹ் தொடர்வேன்...)
-அபூஹாஷிமா

அதிராம்பட்டினம் - 2012 40

ZAKIR HUSSAIN | செவ்வாய், மே 29, 2012 | , , , , ,


ஊர் போய்வந்தால் ஏதாவது எழுத மேட்டர் நிச்சயம் கிடைக்கும் என்பது தெரிந்தாலும் எல்லாவற்றையும் எழுதத்தான் முடியவில்லை. பொதுவாக நீண்ட ஆர்டிக்கிள் எழுதி வஞ்சிப்பதில்லை என சபதம் எடுத்திருப்பதால் முடிந்த அளவு சுருக்கமாக எழுதியிருக்கேன். [இதை சொல்றதுலெ ஒரு பத்தி வேஸ்ட் ஆயிடுச்சே என கமென்ட் எழுதுவதை தவிர்க்க] கையில் காமெரா, 2 மொபைல் ஃபோன், ஆறாய் ஓடும் வியர்வையை துடைக்க கர்ச்சீப் இவைவகளை கையில் வைத்துக்கொண்டு கைலியை உடுத்திக்கொண்டு நடப்பது ஒரு டெஸ்ட்தான் எனக்கு. [வெள்ளை கைலி கட்டினால்தான் மதிப்பு-advice by Sabeer & Mohamed Ali !!].

ஊரின் அகலம் குறைந்து ஒரு இன்ச் கிடைத்தாலும் அதற்கும் ஒரு விலை / மனை என்று ஊர் முன்னேறியிருக்கிறது. 


மார்க்கெட்டில் ஏலம் விடுபவர் " 3600...3600, 3650...' என்று சொல்லும்போது ஏதோ மோட்டோர் சைக்கிளுக்குத்தான் ஏலம் என்று நினைத்தால் அது இறால். அப்படியே மார்க்கெட் மாஸ்கிங்-இல் 'ப்ளாக் & ஒயிட்'டுக்கு கற்பனை செய்தால் மொத்த மீன் மார்க்கெட்டு பொருள்களும் 3000 த்தை தாண்டாது . கிணற்று அடி, உமல், தேங்காய் கீற்று.... எல்லாம் வெளிநாட்டு சபுராளிகள் அதிகமான பிறகு மாயமாகி விட்டது.

தற்போதைய சூழ்நிலை ஊர் ராஜஸ்தான் பாலைவனம் மாதிரி சரியான உஸ்னம். விமானம் கீழே இறங்குமுன் ஹ்யூமிடிட்டி பயமுறுத்துகிறது. கீழே தெளிவாக தெரியாமல் வெண்புகை சூழல் மாதிரி இருந்ததை பக்கத்தில் இருந்த அறிவாளி ' என்னன்னே... திருச்சி முழுக்க பனி இப்படி சூழ்ந்திருக்கு" நு கேட்கும்போது "லொட்"னு மண்டையில் குட்டனும்போல இருந்தது.

வழக்கம்போல் பட்ஜெட் விமானமாதலால் 'சீட்'டில் உட்காருவதற்கு ஏறக்குரைய பிணத்தை போட்டோ எடுக்க வைத்திருப்பதுபோல் அசைய முடியாத சின்ன சீட்டில்தான் உட்கார வைத்து அழைத்து வருகிறார்கள்.

பக்கத்தில் "புள்ள பூச்சி" மாதிரி ஒரு குடைச்சல் பார்ட்டி உட்கார்ந்து கொண்டு சார் நீங்க சாப்பிடற சாப்பாட்டிலெ ஃபுட் பாயிசனாயிட்டா என்ன சார் செய்வீங்க" என கேட்டு எதற்கும் ரிஸ்க் எடுத்தால் ஏடாகூடமா ஆயிடும்" நு பயம் காட்டிக்கொண்டே வந்தார். " யோவ்.... இப்ப பறக்குற உயரமே 36,000 அடி... இதிலெ இல்லாத ரிஸ்க்கா இந்த சாப்பாட்டெ சாப்பிட்டு வரப்போவுது" என்று கேட்டவுடன் என்னிடம் ஏன் சார் இப்படியெல்லாம் பயமுறுத்துரீங்கனு கேட்டுட்டு... இஸ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டார்.
 


பிறகு ஏதோ ஒரு சாமியார்/குரு பெயரைச்சொல்லி கன்னத்தில் போட்டுக்கொண்டு "ஒன்னும் ஆகாது நான் என் குரு கிட்டே வேண்டிக்கிட்டேன்" என்றாரே அதுதான் எனக்கு காண்டு.' யோவ் ..உன் குரு என்ன திருச்சி ஏர்போர்ட் கன்ட்ரோல் ரூம்லயா நிக்கிறாரு... அதுசரி, உங்க குருவும் இந்த ஃபிளைட்லெ வந்தா யார்கிட்டே வேண்டிப்பாரு?' என்று நான் கேட்டவுடன் 'சார் நீங்க தந்தை பெரியார் கட்சியா?" என்றார். ' ஏன் உங்களுக்கு பிடித்த தலைவரை விளிக்க வேறு உறவு முறையே கிடைக்கலையா?' நான் இப்படி கேள்விக்கு மேல் கேள்வி கேட்டவுடன் அப்புறம் என்னுடன் அவர் "காய்" விட்டு விட்டார்.

அதிராம்பட்டினத்து வெயில் சும்மா சொல்லக்கூடாது. மூனு தலைமுறைக்கு வர வேண்டிய வியர்வையை இந்த தலைமுறையிலேயே வெளியாக்கிவிடுகிறது. இதில் கரன்ட் கட் [ அதிராம்பட்டினத்தில் இன்வர்ட்டர் இல்லாத வீடுகள் இனிமேல் எந்த மனிதர்களும் புழங்காத "கஸ்டம்ஸ்" பில்டிங் மாதிரி ஆகிவிடும். - இப்போது கஸ்டம்ஸ் இருந்த இடத்தில் மனை போடப்பட்டிருக்கிறது. ]. நான் இருந்த 5 நாளிலும் இரவில் மட்டும் குறைந்தது 1200 கொசு அடித்திருப்பேன். இரவு முழுதும் எலக்ட்ரிக் பேட் துணை [கமெர்சியல் டேக் லைன் மாதிரி இல்லே] கொசுக்களின் டெக்னிக் அதிசயமானது. நாம் எலக்ட்ரிக் பேட்டை கையில் எடுத்தவுடன் நம் முகத்துக்கு பக்கத்திலும் நம் முதுகுப் பக்கதிலும் ஒழிந்து கொள்கிறது.

கால ஒட்டத்தில் மாற்றமடையாத சில இடங்கள் மனதுக்கும் இளமையை புதுப்பிக்கிறது. காலை நேரத்தில் ரயில்வேஸ்டேசனில் ஸ்டேசன் மாஸ்டரிடம் பேசிக்கொண்டிருந்ததில் என்னை விட அவருக்கு சந்தோசம் என நினைக்கிறேன். அவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது பரீட்சைக்கு படித்த இடங்கள், உப்பு மாங்காய், தூரத்து கானல்நீர், படிக்காமல் ரவுசுபன்னும் பசங்களின் அரட்டை எல்லாம் எனக்கு மறு ஒளி/ஒலிபரப்பானது.

தெருக்கள் அனைத்தும் ஒரு முறை உள்ளே போனால் வெளியாவது எங்கே என்று தெரியாத அளவுக்கு சின்னதா சுறுக்கப்பட்டு விட்டது. சிலர் வீடு கட்டியிருப்பதை பார்க்கும்போது வென்டிலேசனுக்கு கொஞ்சம் கூட முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இதனால் காற்றுவராத வீட்டில் இருந்து மருத்துவத்துக்கு செலவழிக்கும் வயதானவர்களை பார்க்கும்போது மனசுக்கு ரொம்பவும் கனத்தது. நம் ஊரில் முன்பு இல்லாத "கூல்ட்ரிங்க்ஸ் / டேங் பவுடர் ட்ரிங்க்ஸ்" இன்னும் 50 வருடத்துக்கு தஞ்சாவூர் டாக்டர்களுக்கு வருமானத்தை உறுதி செய்யும். தோசை / இட்லி / மோர் போன்ற நல்ல உணவுகளை புறக்கனிப்பதும் / கேவலம் பேசுவதும் நம் மக்களிடம் இருக்கும் வரை உடல் சுகாதார ரீதீயாக எந்த மாற்றமும் கொண்டுவர முடியாது. இதில் கொடுமை என்னவென்றால் ஒத்துக்கொள்ளாதவர்களுக்கும்  சில உணவுகளை கொடுத்து விட்டு 'ஒன்னும் செய்யாது" என கேஸ்ட்ரொஎன்ட்ராலஜிஸ்ட் மாதிரி நம் சனங்கள் பேசுவதுதான்.

நம் ஊரில் பெண்களுக்கு எதிராக ஒரு மவுனயுத்தம் நடப்பதாக நான் கருதுகிறேன். பெண்கள் தொடர்ந்து பொருளாதாரம் / கல்வி போன்ற விசயங்களில் ஆண்களை சார்ந்திருக்கும் சூழ்நிலை மாறாத வரை பெண்கள் முன்னேற்றம் என்பது இன்டர்நெட்டில் எழுதி அதற்கு கமென்ட் எழுதும் விசயத்தோடு ' சுபம்' போட்டுவிட்டதாக நான் நினைக்கிறேன். எதிர்கருத்துள்ளவர்கள் உங்களின் எண்ணத்தை எழுதலாம்.[ என் கணிப்பும் தவறாக இருக்கலாம் இல்லையா?] ஊரில் இருக்கும்போது நடந்த சில விசயங்கள் மனதுக்கு கவலையை அளித்தது. ஒரே இறைவனை ஏற்றுக்கொண்ட சகோதரர்கள் இன்னொரு சகோதரரை அடித்து மருத்துவமனையில் சேர்க்கும் அளவுக்கு நடந்து கொண்டது. கந்தூரி என்ற பெயரில் நடந்த ஸிர்க் கான விசயங்கள் எங்கெல்லாம் முஸ்லீம்களை இழுத்து சென்றிருக்கிறது?. அன்றைக்கு நடந்த கந்தூரியில் பல முறை கரண்ட் "கட்"டானது 

டார்வின் கோட்பாட்டுக்கு உயிரூட்டம்
  
விரயமாகும் இளையசமுதாய சக்தி

பலர் போலீஸ் ஸ்டேசனில் போய் நின்றது. / பலர் மருத்துவமனையில் நின்றது/ பலர் ட்ராபிக் ஜாமில் போக வேண்டிய இடத்துக்கு போக முடியாமல் தவித்தது. இது போன்ற கந்தூரிகள் தவிர்க்கப்படா விட்டால் நம் மக்கள் மார்ச்சுவரியிலும் , கோர்ட் வாய்தாவிலும், கண்ணீர் அஞ்சலி போஸ்டரிலும், சிறையில் பார்வையாயளர்களின் நேரத்தில் கையில் உணவுப் பொட்டலத்துடன் காத்துக் கிடக்கும் நம் பெண்களையும் பார்க்கும் அவலத்தை உருவாக்குவதுடன் , அதற்க்கான நேர / பண விரயத்தையும் உருவாக்கி விடுவார்கள் என்பது நிச்சயம்.

பொதுவாக வெளிநாட்டிலிருந்து வரும் பணம் / சென்ட் / மற்றைய பொருட்களை விரும்பும் நம் மக்கள்... அதை சம்பாதிப்பவனின் வார்த்தைக்கு கொஞ்சம் கூட முக்கியத்துவம் தராமல்..' இவன் பேசுரது நடைமுறைக்கு ஒத்து வராது"ங்ற மாதிரி நினைக்கும்போது இருக்கும் அவர்களின் எனர்ஜியை என்னால் ஈசியாக உணர முடிகிறது.


எத்தனையோ மைனஸ் பாயின்ட் இருந்தாலும் நம் ஊரை பிரிந்து வரும்போது. "மறுபடியும் எப்போது வருவோம்?" என்ற கேள்விக்கு மட்டும் இன்னும் யாருக்கும் விடை "சரி"யாக தெரியவில்லை.

-ZAKIR HUSSAIN

மனுநீதி மனித குலத்துக்கு நீதியா? - அலசல் தொடர் - 1 16

அதிரைநிருபர் பதிப்பகம் | திங்கள், மே 28, 2012 | , , , ,

எனது முந்தைய ஆக்கமான ‘ இன ஒதுக்கீடும் ,இட ஒதுக்கீடும்- உரசும் உண்மைகள் “என்ற தலைப்பிட்ட பதிவைத் தொடர்ந்து, ஆண்டாண்டு காலமாக இந்திய சமூகத்தை ஆட்டிப்படைத்து வரும் ஆரியக் கொள்கைகளைப்ப்ற்றிய ஒரு விரிவான அலசல் தேவை என்று மனதில் பட்டது. அதனை முன்னிட்டு ஆரியக் கொள்கைகளின் அடிப்படையாகக் காட்டப்படும் மனு நீதி ( நீதியா அது? பேதி.) தர்மத்தை சற்று விரிவாகப் படிக்க ஆரம்பித்தேன். பல அதிர்ச்சிகளை சந்தித்தேன். நாம் படிக்கும் திருமறையிலும், நபி மொழிகளிலும் தென்றல் தவழ்கிறது- பகுத்தறிவு மணம் கமழ்கிறது. ஆனால் மனுநீதியைப் படிக்கும்போது மனிதகுல நாகரிகங்களுக்கு சற்றும் பொருந்தாத கருத்து நாற்றம் குடலைப்பிடுங்குகிறது. இவைகளை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள நினைத்தே இந்த ஆக்கம்.

யாரையும் புண்படுத்தவோ, எள்ளி நகையாடவோ அல்ல. துவேஷ மனப்பான்மையுடனும் அல்ல. இருப்பதை எடுத்துக்காட்டி இவை அறிவுக்கு ஏற்புடையதா? சரிதானா? என்ற கேள்விகளைக் கேட்கவே இந்த அலசல். இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் ஏன் இன்னும் பிற்பட்டே இருககிறார்கள் என்ற கேள்விக்கு ஒரு சிறு விடையை அல்லது சிந்தனையை இந்த ஆக்கம் தரலாம். உண்மைகளை வெளிக்கொண்டு வரும்போது விதண்டாவாதிகளுக்கும், பிற்போக்குவாதிகளுக்கும் கோபம வரலாம் என்று எதிர்பார்த்தே இதைப் பதிகிறேன். உண்மையைச் சொல்ல ஓடி ஒளிய வேண்டியதில்லை. இதில் தோலுரித்துக் காட்டப்படப்போகும் அததனைக்கும் அதிலேயே வரி வரியாக ஆதாரம் இருக்கிறது. நாமாக எதையும் கற்பனை செய்து எழுதவில்லை. மாற்று மத நண்பர்களும் இதை படிக்கும் வண்ணம் இதை பங்கீடு செய்வோம். அவர்கள் வினா எழுப்பினால் விடை தருவோம்.

முதலாவதாக

மனு நீதியின் அடிப்படையில் Chapter 1/31 வது சுலோகம் இப்படி சொல்கிறது.  

But for the sake of the prosperity of the worlds he caused the Brahmana, the Kshatriya, the Vaisya, and the Sudra to proceed from his mouth, his arms, his thighs, and his feet. .
இதன் பொருள்: உலக  மனிதர்களிடையே தொழில்களின்  அடிப்படையில்  பிராமணர், ஷத்ரியர், வைசியர், சூத்திரர்  ஆகிய இனங்களை முறையே கடவுள் தனது வாய், தோள், தொடை மற்றும் கால் பாதங்களில் இருந்து படைத்தார் என்பதாகும். அதாவது பிராமணரை வாயிலிருந்தும், ஷத்ரியரை தோள்களில் இருந்தும், வைசியரை தொடைகளிலிருந்தும் , சூத்திரரை காலடியிலிருந்தும் படைத்தாராம்.

முதலாவதாக நாம் கேட்க விரும்பும் கேள்வி : அறிவியல் ரீதியாக ஆணின் விந்து பெண்ணின் சினை முட்டையோடு சேர்ந்துதானே உயிர்கள் உருவாக முடியும். அது மனித இனப்பெருக்கமாக இருந்தாலும் சரி- விலங்குகளின் இனப்பெருக்கமாக இருந்தாலும் சரி- தாவர இனங்களாக இருந்தாலும் சரி – நியதி ஒன்றுதானே. அது எப்படி வாயிலிருந்தும், தோளில் இருந்தும், தொடையில் இருந்தும், காலடியில் இருந்தும் உயிர்கள் உருவாக முடியும்? போகட்டும் . அவர்கள் கூற்றுப்படி கடவுள் படைப்பதால்  அறிவியல் காரணங்களை ஆராயத்தேவை இல்லை என்றே வைத்துக்கொள்ளலாம். தான் படைத்து பிறக்கவைக்கும் உயிர்களை தனது மக்கள் என்று கடவுள் கருதமாட்டாரா? அந்த தனது மக்களில் ஒரு பெற்றவர் பாகுபாடுவைத்து படைக்கும்போதே படைப்பாரா? அப்படிப்படைத்தால்  அவர் கடவுளா? அட கடவுளே தனது பிள்ளைகளை இப்படி வித்தியாசம் வைத்துப்படைத்து இருக்கிறாரே நாமும் பார்த்தால் என்ன என்று படைப்பினங்கள் நினைக்காதா? விடைகளே சொல்லமுடியாத விந்தைகள். முத்துப்பேட்டை ஆலங்காட்டில் சட்டிபானை செய்பவன் கூட ஒரே மாதிரியாக செய்கிறானே – படைக்கிறானே. அந்த தகுதியைக்கூடவா இந்த ஆரியரின் கடவுள்கள் என்று கூறப்படுபவை இழந்துவிட்டன?

உலகில் உருவான மற்ற எந்த மதமுமே இப்படி மக்களில் பேதம் பார்த்து தரம் பிரிக்கவில்லை என்பது மத ஆராய்ச்சியாளர்களின் ஒருமித்த கருத்து. ஒரு சிறிய மலைசாதியினர், மிருகங்களைப் பச்சையாக கடித்து உண்ணும  காட்டுவாசிகள்  பின்பற்றும் மதங்களில்  கூட இப்படி பிறப்பிலேயே பாகுபாடுகள் இல்லை. இல்லை. இல்லவே இல்லை.

இத்தகைய பிறப்பின் தொழில்ரீதியான பாகுபாடுகளின் அடிப்படையில் பார்த்தால் பிராமணர்கள் என்பவர்கள்  அர்ச்சிக்க,  வேதங்களை உச்சரிக்க, சிலைகளைத்தொட, நகைகளை அணிவித்து அலங்காரம் செய்ய,  பிறருடைய பாவங்களை கழிக்க அருகதை உடையவர்கள். நேராக சொர்க்கம் செல்லும் தகுதி இவர்களுக்கு மட்டுமே உண்டு. மற்ற வர்ணங்களைச் சேர்ந்தவர்கள் இந்தப் பிறவியில் நன்மைகள் செய்து மறுபிறவியில் பிராமணராகப் பிறந்தால்தான் சொர்க்கம் போக முடியும்.

அடுத்து ஷத்ரியர்கள் என்பவர்கள் அரசர்கள், படைத்தளபதிகள், படை வீரர்கள் ஆகியோராவர். இவர்கள் போரில் செத்தால் நான் ஸ்டாப் பிளைட்டில் சுவர்க்கம் போய்விடுவார்களாம்.

வைசியர்கள் என்பவர்கள் வியாபாரிகள். சூத்திரர்கள் என்பவர்கள் அடிமைகள், இழிந்தவர்கள், தீண்டத்தகாதவர்கள். மனு நீதியின் சொந்த வார்த்தையில் இவர்கள் “பாக்யசாதியினர் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் ஒரு பிராமணன், பசு, சிசு, பெண் ஆகியோரின்  உயிரைக்காப்பாற்ற தங்கள் உயிரை விட்டால் டைரக்ட் சொர்க்கம் கிடைக்கும். அத்தியாயம் 10  சுலோகம் 62. (அடப்பாவிகளா? )
இதுதான் மனுநீதி தரும் சமுதாய அமைப்பு. இதில் கை கொட்டி சிரிக்கத் தகுதிபடைத்த வேடிக்கை என்னவென்றால் இந்த நான்கு வகை இனத்தில் முதல் மூன்றுவகையினர் இந்திய மக்கள் தொகையில் 10% மட்டுமே உள்ளவர்கள். இதில் பிராமணர்களின் அளவு வெறும் 3% தான். பாக்கி  90% மக்கள் இவர்களின் வேதத்தின்  கணக்குப்படி அடிமைகள் , இழிந்தவர்கள், கடையர்கள், தலித்துகள் ஆவார்கள்.   இந்த 3% ஒரு கை விரல்களைவிட குறைவான சதவீதத்தினர்தான் பல்லக்குகளில் ஏறி பவனி வருகிறார்கள். இவர்களை  “போற்றிப் பாடடி பொண்ணே ஐயர் காலடி மண்ணே! என்று மற்றவர்கள் துதி பாடுகிறார்கள்.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு ‘என்று பாடிப்புகழ்ந்தார் பாரதியார். ஆனாலும் என்ன பயன்? மனுநீதியின் அளவுகோளின்படி வள்ளுவர் சூத்திரர்-அதாவது இழிந்தவர்- தொடத்தகாதவர். உலகின் நாற்பது மொழிகளில் வள்ளுவரின் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டு இருக்கிறது. வெள்ளை மாளிகையிலும், கிரெம்ப்ளின் மாளிகையிலும், பக்கிங்க்ஹாம் அரண்மனையிலும் திருக்குறள் தமிழ் நூலாகவே வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் என்ன புண்ணியம் அவர் பிறப்பால் ஒரு தீண்டத்தகாதவரே.

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவர்போல், இளங்கோ போல் யாங்கணுமே கண்டதில்லை.’’ என்று பாரதியார் போடுகிற லிஸ்டில் இளங்கோவைத்தவிர மற்றவர்கள் சூத்திரர்கள். தொடக்கூடாதவர்கள். கம்பன் எழுதிய இராமயணத்தை நம்புகிறவர்கள்- அந்தக்கதையில் வரும் கற்பனை இராமர் பாலத்தை வைத்து சேது சமுத்திரத்திட்டம் என்கிற ஒரு பெரிய பொருளாதாரத்திட்டத்தை முடக்கிப் போடுகிறவர்கள்-  கம்பனை தங்கள் இனத்தில் சேர்க்கத் தயாரில்லை. கம்பனை மட்டுமா ? கம்ப இராமாயணத்துக்கு மூலமான முதல் இராமாயணம் எழுதிய வால்மீகி முனிவர்கூட சூத்திரரே – தொடத்தகாதவரே. காரணம் அவர் ஒரு வேடர்.

திருமந்திரம் என்ற ஆக்கம் தந்து – சைவ சித்தாந்தம் என்கிற தத்துவத்தை வழங்கிய திருமூலர் , முதல் சைவ சித்தாந்த சாஸ்திரம் வழங்கிய திருவுந்தியார், வைணவ சித்தாந்தம் வழங்கிய திருப்பான் ஆழ்வார் என்கிற ஆழ்வார், கண்ணப்ப நாயனார், நந்தனார், திருநீலகண்டர், திருமங்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், பல்வேறு பதினெட்டு சித்தர்கள், பெரியபுராணத்தில் குறிப்பிடப்படும் 63 நாயன்மார்கள் என்று கூறப்படுபவர்களில் பிராமணராய்ப் பிறந்தவர்கள் தவிர மற்ற அனைவரும் உள்பட  மனு நீதியின் முன் தாழ்த்தப்பட்டோர்கள்- தீண்டத்தகாதவர்கள்- இழிந்தவர்கள்- அடிமைகள். (ஆதாரம்: DALITS &  UNTOUCHABLE SAINTS  OF HINDUS).

வீர சிவாஜி என்று கூறுகிறார்கள். சிவசேனை என்று படை அமைத்து மாற்று மாநிலத்தவரை சூறையாடுகிறார்கள்.  சிவாஜியின் பெயரில் கட்சிவைத்து மும்பையில் வாழும் இஸ்லாமியர்களை கொத்துக்கொத்தாகக் கொல்ல நினைக்கிறார்கள். பொருளாதார முதுகெலும்புகளை ஒடிக்கும்  விதத்தில் வர்த்தக நிலையங்களை தீ வைத்துக் கொளுத்துகிறார்கள். இந்த சிவாஜியின் வாழ்வில் என்ன நடந்தது? பல வெற்றிகளைப் பெற்று வந்தும் மராட்டியத்தின் மன்னனாக முடிசூடிக்கொள்ள சிவாஜியை அனுமதிக்கவில்லை இந்த மனுநீதி பாகுபாடு. சிவாஜி ஒரு சூத்திரன் - அவன் ஷத்ரியன் அல்ல ஆகவே மன்னன ஆகும் தகுதி அவனுக்கு இல்லை என்று மறுத்ததும் ஒரு பிராமணன் கூட அவனுக்கு முடிசூட்டுவிழா மந்திரம் சொல்ல முன் வராததும்தானே வரலாறு? முதலில் சிவாஜியை போற்றுபவர்கள் அவனை  சாதியின் பெயரால் இழிவு படுத்திவைத்து இருக்கும் சாஸ்திரத்தை மாற்றட்டும். அதன்பின் மும்பையிலிருந்து   தமிழ்நாடு, உ.பி. மற்றும் பீகார் மாநிலத்தோரை  விரட்டலாம்.

திருவள்ளுவரிலிருந்து வீர சிவாஜி வரை மட்டுமல்ல இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை வரைந்த டாக்டர் அம்பேத்கார்வரை இன்னும்  ஆயிரக்கணக்கான உதாரணங்களைத் தர இயலும். இவர்களைக்காணும்போது தினமும் டி வி யில் வரும் ஒரு விளம்பரம்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.

“தினமும் ரெண்டு வேள பால் கொடுக்கிறே ஆனால் கால்சியத்துக்கு என்ன கொடுக்கிறே?

“ அதுதான் சொல்றேனே பால் கொடுக்கிறேன். “

“பால் கொடுக்கிறே ஆனால் கால்சியம் கிடைக்குதா?  “

அதேபோல் இந்த பட்டியலில் உள்ள தனிமனிதர்களுக்கு அவர்கள் செயலால் பால் கிடைக்கிறது ஆனால் பிறப்பால் அவர்களுக்கு கால்சியம் கிடைக்கவில்லை. வள்ளுவர் முதல் வால்மீகி வரை சாதி மறுக்கப்பட்ட சவளைப்பிள்ளைகளே.
சாட்டை சுழலும்.. . 
-இபுராஹீம் அன்சாரி

உங்களுக்குத் தெரியுமா?

புதுக்கோட்டை நகரத்தின் மையப் பகுதியில் உள்ள பல்லவன் குளக்கரையில், இக்குளத்தில் இஸ்லாமியர்களும், ஆதிதிராவிடர்களும் கால் நனைக்கக்கூடாது என்று செதுக்கி வைக்கப்பட்டிருந்த கல்வெட்டை தான் பதவியேற்ற முதல் பணியாக அகற்றியவர் திவான் கான் பகதூர் கலிபுல்லா என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமாநன்றி: உண்மை இதழ், மே மாதம் 2012

பழகு மொழி - 12 1

அதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, மே 27, 2012 | , ,

(2) சொல்லியல்
சொல் எனப் படுவது யாதெனில், ஓரெழுத்தாக இருந்தாலும் பல எழுத்துகளாகச் சேர்ந்தாலும் தமிழில் பொருள் தருமானால் அது "சொல்" என வழங்கப் படும். சொல்லை வடமொழியில் "பதம்" எனக் குறிக்கின்றனர். பதம் எனும் வடசொல், தமிழ் இலக்கண நூல்களில் வெகுஇயல்பாக ஆளப் பட்டுள்ளது.

எழுத்தே தனித்துந் தொடர்ந்தும் பொருள்தரிற் பதமாம் அதுபகாப் பதம்பகு பதமென இருபா லாகி யியலு மென்ப - நன்னூல் 128.

(2) 1 ஓரெழுத்து ஒருமொழிச் சொற்கள்:
தமிழில் ஓரெழுத்து ஒருமொழிச் சொற்கள் நாற்பதுக்கும் அதிகமுண்டு எனக் கூறுவர். அவற்றுள் பல வழக்கொழிந்து போயின. நாம் தெரிந்து கொள்ளத் தக்க ஓரெழுத்து ஒருமொழிச் சொற்கள் சிலவற்றை இங்குக் காண்போம். "ஓரெழுத்து ஒருமொழி அனைத்தும் நெடிலாக அமையும்; குறிலோசை எழுத்துகள் ஓரெழுத்து ஒருமொழியாக வாரா" என்பது தொல்காப்பியரின் துணிபு : நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒருமொழி; குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைபு இலவே - தொல்காப்பியம் - மொழிமரபு 10,11.

ஆனால், நாம் பாடம் (1):1:1:3இல் படித்த அகச்சுட்டு எழுத்துகளான அ,,உ ஆகிய மூன்றும் வினா எழுத்தான ''வும் குறில்களே. தனிச் சொல் எனும் தகுதி பெறாமல் இடைச் சொல் வகையைச் சேர்ந்திருப்பதால் அவை ஒதுக்கப் பட்டன போலும். எனினும், தனிச் சொல்லாகவே அமையும் இரு குறில் எழுத்துகளும் உள:

(2) 1:1 ஓரெழுத்து ஒருமொழிச் சொல் - குறில்:
து = சாப்பிடு எனும் பொருள் தரும் ஏவல் வினை

நொ = வருந்து (ஏவல்)

+சொல் = அச்சொல்(சுட்டு)
+பாடம் = இப்பாடம்(சுட்டு)
+பக்கம் = உப்பக்கம்(பின் பக்கம் - சுட்டு)
+நூல் = எந்நூல்? (வினா)


மேற்காணும் ஓரெழுத்து அகச்சுட்டு/வினா ஒருமொழியின் புறச்சுட்டுச் சொற்கள்: அந்த, இந்த, உந்த, எந்த ஆகியனவாகும்.

(2) 1:2 ஓரெழுத்து ஒருமொழிச் சொல் - நெடில்:
 = பசு

 = பறக்கும் பூச்சி; =வழங்கு (ஏவல் வினை)

 = ஊன்/இறைச்சி
 = அம்பு (கருவி)
 = ஐந்து (எண்: ஐ+பால்=ஐம்பால்)
 = மதகில்/அணையில் நீரைத் தடுத்து வைக்கப் போடும் பலகை
கா = காத்தல் (வினை); கா=தோட்டம்/சோலை: பூ+கா = பூங்கா (பெயர்)
கை = கரம் (சினை/உறுப்பு)
கோ = மன்னன்
கௌ = கவ்வு (ஏவல்)
சா = சாவு
சீ = அழி/விலகு/நீங்கு (ஏவல்)
சே = செம்மை (பண்பு)
தா = கொடு (ஏவல்)
தீ = நெருப்பு
தை = தை(காலம்); தை = தையல் செய் (ஏவல்)
நா = நாக்கு
நீ = நீ (முன்னிலைச் சுட்டு)
பா = பாடல்
பூ = மலர்; பூ = பூமி/உலகு
போ = செல் (ஏவல்)
பை = கைப்பை/பணப்பை
மா = மாம்பழம்; மா = பெரிய (பண்பு)
மீ = மேல்
மை = மசி
வா = அழைப்பு (ஏவல்)
வை = வை (ஏவல்)
வௌ = திருடு (ஏவல்)

மீக்கூறிய 28 ஓரெழுத்து ஒருமொழிச் சொற்களுள் கை, சீ, தா, தீ, தை, நீ, பூ, போ, பை, மை, வா, வை ஆகியன நாம் உரைநடைப் பேச்சிலும் எழுத்திலும் இயல்பாகப் பயன்படுத்துபவை. மற்றவை பா எழுதுவதற்குப் பயன் படுவனவாகும்.இனி, இன்னொன்றும் வழக்கில் வரக்கூடும்: "ஆடி மாதம் ஆற்றில் வெள்ளம் வந்தால் ''ப் போடு!"

- தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.
-ஜமீல் M.சாலிஹ்

கந்தூரி ஊர்வலம் - தடைவிதிக்க கோரிக்கை... 8

அதிரைநிருபர் பதிப்பகம் | சனி, மே 26, 2012 | , , , ,


அதிரையில் கடந்த செவ்வாய் கிழமையன்று (22-05-2012) கந்தூரி போதைக் குண்டர்களால் தக்வா பள்ளி அருகில் சகோதரர் அஹமது ஹாஜா தாக்கப்பட்டார், இதனைத் தொடர்ந்து பெரும் கலவரம் ஏற்படும் பீதி ஏற்பட்டது அதன் பின்னர் காவல்துறை ஆய்வாளர் செங்கமலக் கண்ணன் தலையிட்டு சூழலை கட்டுக்குள் கொண்டு வந்தார்.

தக்வா பள்ளி நிர்வாகம் தொழுகைக்கு இடையூறு விளைவித்த கந்தூரி போதைக் குண்டர்களின் செயலைக் கண்டித்தும், கந்தூரி என்ற அனாச்சார ஊர்வலம் இனிமேல் தக்வா பள்ளி மற்றும் நடுத்தெரு வழியாக செல்லத் தடை விதிக்க கோரியும் காவல்துறை ஆய்வாளரிடம் மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.-அதிரைநிருபர் குழு

புதிய நினைவுகள் ...........!!!! 14

அதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, மே 25, 2012 | , ,


கடற்கரையின் காற்றில்
ஒரு வண்ண மயில்
தோகையை விரித்து
அற்புத எண்ணங்களை
ஓவியமாக இறகுகளில் வரைந்து
விரித்து ஆடியது ஒரு நிகழ்வு எனில்......

கடற்கரையின் காற்றுக்கு அருகிலுள்ள கருமேகமே நினைவுகளாகும்...


                  ***************
கார் மேகங்கள் குவிந்து ,
அங்குமிங்கு அலைமோதி ,
தப்படித்து ,குவியல் குவியலாய்
ஒரே இடத்தில் கூடுவது என்பது நிகழ்வு எனில்.....

தரையில்,மலையின் மேலே நீராவது மேகங்களின் நினைவாகும்...

                   ******************
மலையின் மேலே
அழகாய் தவழ்ந்து ,
மேற்படும் நினைவுகளாம்
இலைகளின் அசைவுகளும் ,பூச்சொரிவுகளும் ,
பறவை ,விலங்குகளின் விளையாட்டையும் ,
தன் மீது வீழும் சருகுகள் ,பூக்கள் என
யாவயும் படம்பிடித்து தவழும் நீரோடை என்பது நிகழ்வு எனில் .....


சற்று தொலைவில் மலையின் நுனியில் ஓரம் சென்று பிரம்மாண்ட அருவியாய் மாறுவது அதன் நினைவாகும் ...

                          ***********
ஆர்ப்பரிக்கும் அலப்பறையில்
நெஞ்சு புடைத்து ,
ஆனந்த திமிரில் சந்தோஷ சிதறல்களாய்
கொட்டும் அருவி என்பது நிகழ்வு எனில்....

எதார்த்தம் அறிந்து தரையில் ஆறாக மாறுவது அருவியின் நினைவுகளாகும்..


                          **************
திக்கு திசை தெரியாமல் ,
பின்புலத்தில் அருவியின் தைரியம் என
மார்தட்டி எதிர்படும் தடைகளை உடைத்து ,மிதித்து
செல்லும் ஆறு ஒரு நிகழ்வு எனில் ..............

சுடும் பிரதேசத்தின் வெயிலினால்
சுட்டு புடமெடுத்த மணல் பருக்கைகளை மின்னிடும்
வைரமாக்குவது ஆற்றின் நினைவுகளாகும் ...........

                   ******************

ஆற்று நீரின் உறவால்
மின்னிடும் மணல் பருக்கையின்
பிம்பங்கள் ஒரு நிகழ்வு எனில் ............
வளமொங்கும் பயிர்களை வளர்த்து
மீந்தும் நீரை வழியனுப்புவது மணல் பருக்கையின் நினைவாகும் ....

                     *************
கடத்தி வரப்பட்ட நீரின்
ஆற்றுப் படுகையில் காய்ந்து ,
பூக்கள் இழந்து நிற்கும் செடிகள் என்பது நிகழ்வு எனில் ......
பருவக்காற்றில் அசைந்தாடும் பூக்களின்
பிம்பங்களை தன மீது சுமந்து ,செடிகளின்
பார்வைக்கு விருந்தாக்க முனைவது ஆற்றின் நினைவுகளாகும் ..

                 ******************
இல்லாத எல்லைகளை தொட்டு
முடித்து,
ஆற்றின் அடைக்கலம் கடல் என்பது நிகழ்வு எனில் ...........
அதன் நினைவுகள் ..???
முதலிலிருந்து படியுங்கள்

---Harmys---

கந்தூரி போதை ::: நடந்தது என்ன !? - காணொளி 2

அதிரைநிருபர் பதிப்பகம் | வியாழன், மே 24, 2012 | , , ,

கந்தூரி போதை வெறியாட்டத்தில் தாக்குதலுக்கு ஆளான சகோதரர் அஹமது ஹாஜா அவர்களிடம் நடந்தது என்ன !? அவரே தான் சார்ந்திருந்த சூழலையும் கலவரக்கார்களின் வெறியாட்டத்தையும் விளக்கிடும் காணொளி நடுநிலையாளர்களின் பார்வைக்கு !

மீண்டும் வழியுறுத்துகிறோம் !

கந்தூரி எனும் இழிவிலிருந்து நமதூர் என்றைக்கு விடுபடுகிறதோ அன்றைக்குத்தான் அதிரை முஸ்லிம்களின் மானம் காக்கப்படும்.கவிதை, ஓர் இஸ்லாமியப் பார்வை – 19 5

அதிரைநிருபர் பதிப்பகம் | புதன், மே 23, 2012 | , ,

கவிதைகள் பற்றிய நபியவர்களின் நிலைபாட்டை அறியாத நிலையில் – தமது இஸ்லாத்தின் தொடக்க காலத்தில் –  நபித்தோழர் உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள் கவிதைகள் இயற்றும் கவிஞர்களைச் சாடிவந்தார்கள்!  ஆனால், பிற்காலத்தில் அன்னார் இஸ்லாத்தின் இரண்டாவது மக்கள் பிரதிநிதியாக (கலீஃபா)ப் பொறுப்பேற்ற பின்னர், கவிதைகளை ஆதரித்ததுடன், கவிதைக் கலையைச் சிறார்களுக்குக் கற்றுக் கொடுக்குமாறு ஆர்வமூட்டியுள்ளார்கள் என்ற உண்மையை அன்னாரின் வரலாறு நமக்குக் கூறாநிற்கின்றது.  அதற்கான சான்றுகளை இப்பதிவில் காண்போம்.

நபியின் பாசறையில் வார்த்தெடுக்கப்பட்டவராதலால், உமர் இதில் மிகுந்த எச்சரிக்கையையும் கடைப்பிடித்தார்கள். ‘ஜாஹிலிய்யா’ எனும் அறியாமைக் காலம் முதல், அரபுகளிடம் கவி புனையும் பழக்கம் இருந்துவந்ததை முந்தையப் பதிவுகளில் நாம் கண்டோம். அப்பழக்கம் இஸ்லாத்திலும் தொடர்ந்ததால், ஓரிரு வரம்பு மீறல்கள் நடக்கவே செய்தன. அத்தகைய வரம்பு மீறல்களை உமரவர்கள் வன்மையான கட்டளைகளைக் கொண்டு தடுக்காமலும் இருக்கவில்லை. இத்தகைய கவிதைகளில் பாலியல் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகப் பெண்களின் பெயர்களுடன் சில கவிதைகள் வலம் வந்தபோது, உமரவர்கள் அவற்றிற்குத் தடை விதித்தார்கள்.  கலீஃபாவின் இக்கட்டளையை மீறிய கவிஞர்கள் மீது கடுமையான தண்டனை பாய்ந்தது!

ஆனால் அதே வேளை, உமரவர்கள் தமது ஆட்சியின் கீழ் இருந்த மாநிலங்களின் ஆளுநர்களுக்கு அவ்வப்போது கட்டளைகள் பிறப்பித்த நேரங்களில், பள்ளி மாணவர்களின் பாடத் திட்டத்தில் கவிதைக் கலையையும் ஒரு பாடமாகச் சேர்த்துப் பயிற்றுவிக்குமாறு அறிவித்தார்கள்!
(சான்று: அல்லாமா, அபுல்ஃபரஜ் இஸ்ஃபஹானியின்كتاب الاغاني)    

உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில், அவர்களால் அமர்த்தப்பட்ட மாநிலங்களின் ஆளுநர்களுள் சிலர் ஆடம்பர வாழ்க்கையை மேற்கொண்டுள்ளார்கள் என்ற தகவல் கலீஃபாவுக்குக் கிட்டியது. உடனே எச்சரிக்கை ஓலை பறந்தது!  அதன் பயனாக, திருந்தியவர்கள் அடங்கினார்கள்; இன்னும் சிலர் விளக்கமளித்தார்கள். அவர்களுள் காலித் இப்னு சஈத் (ரலி) என்ற நபித்தோழர் ஒருவர். கலீஃபாவின் கவிதை ஆர்வத்தைக் கருத்துள் கொண்டு, காலித் (ரலி) கவிதையிலேயே மறுமொழி வரைந்தனுப்பினார்கள்.
(சான்றுகள்:فتوح البلدان /كتاب الخراج  )  

கலீஃபா உமர் (ரலி) அவர்கள் நபியின் பள்ளிவாசல் எனப்படும் ‘மஸ்ஜிதுன் நபவி’யை விரிவு படுத்திக் கட்டியபோது, பள்ளியின் வளாகத்தினுள் மேடையொன்றை அமைத்து, அதை மக்களின் பொது மன்றமாகவும் கவிஞர்களின் கவியரங்கமாகவும் ஆக்கினார்கள்!
(சான்று: خلاصة الوفاء في أخبار دار المصطفى

தம் அருமைத் தோழர் உமரைப் பார்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,

يا ابن الخطاب، والذي نفسي بيده ما لقيك الشيطان سالكا فجا قط إلا سلك فجا غير فجك

(கத்தாபின் மகனே!  என் உயிரைத் தன் கைவசம் வைத்திருப்பவன் மீது ஆணையாக, ஒரு தெருவில் நீங்கள் நடந்து செல்வதை ஷைத்தான் கண்டால், அவன் உங்கள் தெருவை விட்டு வேறொரு தெருவில்தான் செல்வான்) என்று சொன்னார்கள்.
(சான்றுகள்: சஹீஹுல் புகாரீ – 3294/3683/6084, சஹீஹ் முஸ்லிம் - 4768)

மேலும் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

لو كان بعدى نبى لكان عمر بن الخطاب

“எனக்குப் பின்னர் நபி இருப்பாராயின், அவர் உமராகத்தான் இருப்பார்.  எனினும், எனக்குப் பின் நபியில்லை.”
(திர்மிதீ(3686), முஸ்னது அஹ்மத், ஹாக்கிம், தபரானி, இப்னு ஹிப்பான்)

இறைத்த தூதர் (ஸல்) அவர்கள் இன்னும் கூறினார்கள்:

إن الله جعل الحق على لسان عمر وقلبه

திண்ணமாக, அல்லாஹ் உமரின் நாவின் மூலமும் இதயத்தின் மூலமும் உண்மையை உறுதிப் படுத்திவிட்டான்.”    (சான்று: திர்மிதீ – 2682)  

மேற்கண்ட சிறப்புகளையும், ‘ஷஹீத்’ (புனிதப் போரில் உயிர் துறப்பவர்) என்ற பெருஞ்சிறப்பையும் பெற்ற கலீபா உமர் (ரலி) அவர்களின் கவிதைப் பற்றினைப் பற்றி அறியும்போது, நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

(ஆய்வு இன்னும் தொடரும், இன்ஷா அல்லாஹ்....)
-அதிரை அஹ்மது
adiraiahmad@gmail.com

கந்தூரி போதையால் அதிரையில் வன்முறை ! 29

அதிரைநிருபர் பதிப்பகம் | புதன், மே 23, 2012 | , ,


இன்று (22-05-2012) மாலை மேலத்தெரு கந்தூரியின்போது மேலத்தெருவைச் சேர்ந்த நால்வரால், நடுத்தெரு 19ஆம் வார்டு உறுப்பினர் சகோதரி சவ்தாவின் கணவரும் த.மு.மு.க. தொண்டருமான சகோதரர் அஹ்மது ஹாஜா தாக்கப்பட்டார்.

நமதூரில் கந்தூரிகள் களையிழக்கத் தொடங்கியுள்ள இக்காலகட்டத்தில், அல்லாஹ்வின் இல்லமான பள்ளிவாயில்களைக் கடக்கும்போது, தாரை தப்பட்டை டான்ஸு போன்றவை இருக்கக்கூடாது என்று மேலத்தெரு தவ்ஹீதுச் சகோதரர்களால் காவல்துறையிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டு, ஆர்.டி.ஓ. முன்னிலையில் இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி, அதிரையில் உள்ள பள்ளிகளுக்கு முன்னும் பின்னும் நூறு நூறு மீட்டர்களுக்குள் எவ்விதை ஓசையும் இருக்கக்கூடாது என்று ஆர்.டி.ஓ. உத்தரவிட்டிருந்தார்.

அந்த உத்தரவு மேலத்தெரு பாக்கியாத் ஸாலிஹாத் பள்ளியில் கடைபிடிக்கப்பட்டு, கந்தூரி ஊர்வலம் மௌன ஊர்வலமாகச் சென்றது. தக்வாப் பள்ளிக்கு ஊர்வலம் வரும்போது மக்ரிபுத் தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்தது. பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பள்ளிவாயிலில் கடைபிடிக்கப்பட்ட அமைதியை கந்தூரி ஊர்வலத்தினர் தக்வாப் பள்ளி அருகில் கைவிட்டனர்.

மக்ரிபுத் தொழுகை முடிந்து ஸலாம் கொடுக்கும்போது வழக்கமான முழக்கங்களுடன் கந்தூரி ஊர்வலம் கடப்பதைக் கண்ட சகோதரர் அஹ்மது ஹாஜா, ஊர்வலத்தை மேற்பார்வையிட வந்து, தக்வாப்பள்ளிக்குப் பின்புறம் நின்றிருந்த நமதூர் இன்ஸ்பெக்டர் செங்கமலக் கண்ணனிடம் சென்று புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அங்கிருந்து அகன்று மேள-தாளக்காரர்களிடம் சென்று பாட்டு-தாளங்களை நிறுத்துமாறு சொல்வதற்காகச் சென்றுவிட்ட வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட கந்தூரி போதையினர், சகோதரர் அஹ்மது ஹாஜாவைத் தக்வாப் பள்ளிக்குப் பின்புறமுள்ளஅவரது வீட்டுச் சந்தை அடுத்த சந்துக்குள் தள்ளிச் சென்று கீழே தள்ளி, அவரது நெஞ்சிலும் இடுப்பிலும் மாறி, மாறி கால்களால் உதைத்தும் கைகளால் தாக்கியும் நையப் புடைத்துள்ளனர். ஒத்தைக்கு ஒத்தை என்றால் சமாளிக்கக்கூடிய சகோதரர் அஹ்மது ஹாஜா, கயவர்கள் நான்கு பேர் என்பதால் நிலைகுலைந்து போனார். பலத்தை காயமடைந்த அவர், தற்போது பட்டுக்கோட்டை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தனிப்பட்ட முன்விரோதம் ஏதுமில்லாத இந்தக் காட்டுமிராண்டித் தாக்குதல், கந்தூரிக் கமிட்டித் தலைவர் மற்றும் குழுவினரின் தூண்டுதலால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கும் என்பதே நடுநிலையாளர்களின் ஐயமாகும்.

சகோதரர் அஹ்மது ஹாஜாவைத் தாக்கிய நால்வரின் பெயர்களைக் குறிப்பிட்டு, நகர த.மு.மு.கவினர் திரளாகச் சென்று, அதிரை நகரக் காவல்துறையில் புகார் அளித்திருக்கின்றனர். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் அதற்கான சான்றிதழைத் த.மு.மு.கவினருக்கு வழங்கியுள்ளனர். அத்துடன், எஃப் ஐ ஆர் பதிவு செய்து, குற்றவாளிகளை நாளைக்குள் கைது செய்து விசாரிக்கப் போவதாக உறுதியளித்துள்ளனர். த.மு.மு.கவின் மாநிலச் செயலாளர் தமீமுன் அன்ஸாரி, டி எஸ் பியிடம் தொலைபேசி வாயிலாக புகார் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேற்கொண்டு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக நகர த.மு.மு.கவினர் நாளைக் காலை பத்து மணிக்கு அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளனர்.

குற்ற நிகழ்வு, நகர காவல்துறை ஆய்வாளர் செங்கமலக் கண்ணன் ஸ்பாட்டில் இருக்கும்போது நடந்தேறியது என்பதால் குற்றவாளிகள் நிச்சயம் தப்பித்துவிட முடியாது.

இச்சம்பவத்தில் நடுநிலை வகிக்க வேண்டிய பொறுப்பான பதவியில் இருப்பவர்களே, கந்தூரிக் கோஷ்டியினருக்கு வெளிப்படையான ஆதரவாளராகத் தன்னை இனங்காட்டிக் கொள்வதும் குற்றவாளிகளுக்குப் பரிந்து பேசுவதும் அவர்களது தூய சேவைகளுக்கு இழுக்கைத் தேடித் தருவனவாகும்.

கந்தூரி எனும் இழிவிலிருந்து நமதூர் என்றைக்கு விடுபடுகிறதோ அன்றைக்குத்தான் அதிரை முஸ்லிம்களின்  மானம் காக்கப்படும்.

-அதிரைநிருபர் குழு


உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு