ஆட்டோவில் பயணித்துக் கொண்டிருக்கையில் இடையில் சிக்னலில் நிறுத்தத்திற்கான விளக்கு எரிந்ததால் ஆட்டோ நின்றது .
அஹமது ஆட்டோ ஓட்டுனரிடம் மீண்டும் பேச்சுக் கொடுத்தார் “என்னப்பா சென்னை வாழ்க்கையில் ஆட்டோ ஓட்டி குடும்பத்தை சமாளிக்க முடிகின்றதா?”
“பேஜார்தான் சார் வண்டி சொந்த வண்டியில்ல சார் நமக்கு சம்பளத்துக்கே கட்ட மாட்டிக்கீது சார்”
“வேறு தொழில் ஏதாவது செய்ய வேண்டியது தானே !?”
“வேற ஒன்னுந் தெரியாது சார்!”
“என்ன படிச்சிருக்கே?”
“டென்த் பாஸாகிட்டு பாலிடெக்னிக் (ஆட்டோ மொபைல்) படிச்சேன் சார் ஏ அப்பன் கஸ்மாலம் நீ பாலிடெக்னிக் படிச்சிட்டு ஆட்டோதானே ஓட்டப்போறே அத இப்பவே ஓட்டுன்னு வாடக ஆட்டோவ கையாண்ட கொடுத்துட்டான் சார், அப்ப ஓட்ட ஆரம்பித்தது ஓட்டிகினே இருக்கேன்.”
“வேற பொழுது போக்கு என்ன?”
“நல்லா கவித எழுதுவேன் சார்”
“அப்டியா!?”
“எங்க கவிதை ஒன்னு சொல்லேன்”
“பொம்னாட்டிங்க இருக்காங்க சார்”
“நல்ல எழுச்சியான கவிதை ஒன்னுசொல்லு!”
“கேட்டுக்கோ சார்
விழுந்தால் விதையாகிடு
எழுந்தால் மரமாகிடு
கிடைத்தால் சிறப்பாக்கிடு
உயர்ந்தால் உருவாக்கிடு
படி..........”
“சார் சிக்னல் விழுந்துச்சு, சார் அப்பால ஒரு சமயம் கெடச்சா சொல்றேன் வண்டி ஓட்றப்ப கவிதை சொன்னா டிஸ்ட்ரப்பாயிடுவேன் சார் சும்மா பேசிகினு வரலாம் சார்”
“ஒகே... ஒகே...”
“கவித சொல்ரப்ப நல்லா தமிழ் பேசுறே மத்த நேரத்துல சென்னை தமிழ் பேசுரியே?”
அதற்குள் T-nagar வந்தடைந்ததும் ஆட்டோவிற்கு பணம் கொடுத்து விட்டு ஜவுளிக்கடை நோக்கி நடக்கலாயினர். அஹமதுவிற்கு காத்திருந்தது அதிர்ச்சி...
ஆமினா பட்டென்று கண்ணில் பட்ட ஒரு ஜவுளிக்கடையில் ஏறினாள்.
“அது போத்தீசல்ல அங்கே இருக்கு” என்று அஹமது கையை படக்கென்று சுட்டிக்காட்ட
“தெரியுந் தெரியும்”
“அப்ப ஏன் இந்த கடைக்குப் போறே”
“இரண்டு மூனு கடை ஏறி வெலய விசாரித்தா தானே நல்லாருக்கும்”
‘பரவாயில்ல பொண்டாட்டி நமக்கு ஒத்துழைத்தால் உள்ளூர் வியாபாரத்திற்கு தோதா இருக்கும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார் அஹமது. (சுத்தவிடப் போகிறாள் மனைவி என்பதை அறியாது) கடைக்குள் நுழைந்ததும் நல்ல வரவேற்பு.
“சார், மேடம்,,, என்ன பாக்குறீங்க?”
“பட்டு பொடவ”
“முதல் மாடிக்கு போங்க” என்று வழிகாட்டி விட்டார்.
லிப்டில் மேலே சென்று பட்டு செலக்ஷனை அடைந்து பல வகைகளை பார்வையிட்டார்கள் புடவையை கடை காரர் காட்டிக் கொண்டிருக்கையிலே ஆமினாவின் கண்கள் வேறு திசைக்கு சென்றது.
“ஏமா நா காட்டிக்கிட்டு இருக்கையிலே எங்கோ பாக்குரீங்களே?” அங்கிருந்த சேல்ஸ்மேன் கேட்டார்.
“இந்தக் கடை சரி வராதுங்க” கோபமாக வெளியேறினாள் ஆமினா.
இப்படியே பல கடைகள் ஏறி இறங்க கடைசியில் போத்தீசுக்கே பெப்பே அங்கும் கலர் சரியில்லை என்று வாங்காமல் திரும்பிவிட்டாள். அந்தகடையில் பாவப்’பட்டு’ ஜட்டியும் பனியனும் தனக்காக வாங்கினான் விலை 285 ரூபாய். கடைசியாக ஒரு பிரபல்யமான கடையில் எடுத்தாகி விட்டது பட்டுப்புடவை! 9200 ரூபாய்க்கு.
“உன் பட்டுப் புடவையின் விலை 12,200/- ரூவா” என்றார்.
சட்டென திரும்பிய ஆமினா “என்னங்க சொல்ரிய!?”
“ஆமா பஸ்சு ஆட்டோ மற்ற செலவுகள் 3,000/- உன் புடவை 9,200 மொத்தம் 12,200 தானே?”
“வல்லா-நாளையில அத யான்ங் என் பொடவை யோட சேக்கிரிய வேனுன்னா உங்க ஜட்டி பனியன் செலவோட 3,285/- ன்னு வச்சிக்குங்க நல்லா இருக்கே சமத்துதான்.”
கடையிலிருந்து வெளியேறினார்கள் ஆமினாவிடம் அஹமது பொறுமையாக கேட்டார். “ஏம்மா 7-8 கடை ஏறி இறங்கி ஒரு பட்டுப்புடவை எடுத்தியே? ஆதிகாலத்து மனுசிங்க [கற்காலம்] தன் ஆடைகளுக்கு வெறும் இலை தழைகளை தான் உடுத்தினாங்க தெரியுமா?”
“தெரியுந் தெரியும்… அந்த இலைகளுக்கு எத்தன மரங்கள் ஏறி இறங்கி இருப்பார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?” என்றதும் அஹ்மதுடைய நிலமையை நீங்களே யூகிச்சுக்கிடுங்க.
தொடரும்...
மு.செ.மு.சஃபீர் அஹமது