Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label மதிப்பு. Show all posts
Showing posts with label மதிப்பு. Show all posts

இந்திய ரூபாய் மதிப்பு வீழ்வது ! - எழுவதற்கா? அழுவதற்கா? 24

அதிரைநிருபர் பதிப்பகம் | June 19, 2012 | , , , , ,


அண்மையில் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியும், அதைத் தொடர்ந்து வரலாறு காணாத அளவுக்கு அந்நிய செலாவணி சந்தையில் இந்தியா ரூபாயின் நாணய மாற்று விகிதத்தில் ஏற்பட்ட சரிவும் பல வினாக்களை பலருக்கும் ஏற்படுத்தி இருக்கிறது. அதைப்பற்றிய ஒரு சிறு விளக்கக் குறிப்பைத்தரவே இந்தப் பதிவு அவசியமாகிறது. 

தொடங்கும் முன்பு ஒரு வார்த்தை – குறிப்பாக வளைகுடா நாடுகளில்  ஊதியம் ஈட்டுவோருக்கும் – NRI  என்ற பட்டம் பெற்றோருக்கும் கூறிட விரும்புகிறேன். அமெரிக்க டாலரின் விலை ஏற்றத்தின் விளைவாக நாம் அயல்நாடுகளில் சம்பாதிக்கும் தொகைக்கு இந்தியப் பணத்தில் அதிக அளவு கிடைப்பதாக எண்ணி நாம் ஒரேயடியாக மகிழ முடியாது. காரணம் நம்முடைய பண வருமானத்தின் அளவு கூடி இருக்கலாம். ஆனால் உண்மை வருமானத்தின் அளவு கூடவில்லை. பொருளாதார கலைச் சொற்களில் பண வருமானத்துக்கும் , ( DIFFERENCE BETWEEN MONEY INCOME AND REAL INCOME ) உண்மை வருமானத்துக்கும் நிறைய வேற்றுமைகள் உண்டு. அதாவது நம்முடைய ஊதிய வருமானத்தில் செலவு போக நம் கையில் சேமிப்பாக மிஞ்சுவதன் அளவுதான் உண்மை வருமானமாகும். அதைவிட்டு அதிக பண அளவிலான வருமானம் சென்ற மாதத்தை விட இந்த மாதம் கிடைத்தாலும் நமது வழக்கமான செலவுபோக கையில் மிஞ்சாமல் பற்றாக்குறைதான் நிலைமை என்றால் அது நமக்கு பண வருமானமேயன்றி நமது உண்மை வருமானமல்ல. நமது நாட்டின் பணத்தின் மதிப்பு குறைகிறது என்றால் நாம் உபயோகப்படுத்தும் அல்லது நுகரும் பொருள்களின் விலையும் கூடுகிறது அலது கூடும் என்று பொருள். இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். 

அதே நேரம் நாம் அயல்நாட்டில் ஈட்டும் சம்பளத்தைக்கொண்டு , இப்போதைய செலாவணி விகிதத்தில் ஊருக்கு பணம் அனுப்பி நாம் ஏற்கனவே வாங்கி இருந்த கழுத்தை நெறிக்கும் கடன்கள் இருந்தால் அவைகளை உடனே தீர்க்க முயற்சிக்கலாம். பேசிமுடித்து முன் பணம் மட்டும் கொடுத்து வந்திருக்கும் சொத்துக்களை இப்போது கூடுதலாக பணம் அனுப்பி பத்திரப் பதிவு செய்து கொள்ளலாம். இந்த செயல்கள்   ஓரளவுக்கு நமக்கு பயன்தரும் என்பதை சொல்லிக்கொண்டு இதைப்பற்றி சில குறிப்புகளை அலசலாம். 

கடந்த ஓராண்டாகவே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மெல்ல மெல்ல விழுந்துகொண்டிருந்தது; ஊசலாட்டம் ஆடிக்கொண்டிருந்தது என்பதை நாம் அறிவோம்.  2011 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திலிருந்து சற்றேறக்குறைய இப்போதைய  வீழ்ச்சிவரை ரூபாயின் மதிப்பு 22% சரிந்து வந்திருக்கிறது. பொருளாதார வல்லுனர்கள் இந்த சரிவு இன்னும் தொடரும் என்றுதான் கணக்கிடுகிறார்கள். ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ. 60 ௦ வரை வரக்கூடும் என்று ஜோசியம் சொல்கிறார்கள். 

இதற்கு நச் என்று ஒரு தலையாய காரணம் சொல்லவேண்டுமானால் அமெரிக்க டாலருக்கான நமது நாட்டின் தேவைகள் அதிகரித்துவிட்டன என்று சொல்லலாம். பொதுவாக பொருளாதார கோட்பாடுகளின் அரிச்சுவடி, எந்த ஒரு பொருள் அல்லது சேவைகளின் தேவை அதிகரித்து அதற்குத் தகுந்தபடி வரத்து இல்லையோ அந்தப்பொருள் அல்லது சேவைகளின் விலை உயரும் என்பதாகும். தக்காளி முதல் தங்கம் வரை இதே கோட்பாடுதான். அதன்படி பல்வேறு காரணங்களுக்காக நமது நாட்டின் அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரித்துக்கொண்டே போகிறது. இருக்கும் தேவைக்கு  சம்பந்தமே இல்லாமல் அமெரிக்க டாலரின் வரத்து குறைந்துகொண்டே போகிறது. இது முக்கிய காரணம். 

இப்படி தேவைகள் அதிகரித்து இருப்பதும் வரத்து குறைவாக இருப்பதும் அரசுக்கு தெரியாமல் திடீரென்று நடந்ததல்ல. இப்படி நடக்கும் என்று பல பொருளாதார மேதைகள் எச்சரித்துக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் ஆறு பொருளாதார நிபுணர்களைக்கொண்ட நமது அரசின் அமைச்சர் பெருமக்களுக்கு அயல்நாட்டு சுற்றுப்பயணம் பெருகியது மட்டுமல்ல அதற்கான செலவுகளையும் அரசே கொடுத்ததால் அந்த வலி தெரியவில்லை. 

இப்படி நமது நாட்டுக்கு அமெரிக்க டாலரின் பற்றாக்குறை ஏற்பட மூன்று  முக்கியமான காரணங்களைச் சுட்டிக்காட்டலாம். 

முதலாவதாக அந்நிய முதலீடுகளின் வெளியேற்றமும், குறைவான ஏற்றுமதிகளும். நமது நாட்டுக்கு அந்நிய செலாவணியைக் கொண்டுவரும் இரு வழிகள் நமது நாட்டில் செய்யப்படும் அந்நிய முதலீடுகளும், நாம் செய்யும் ஏற்றுமதி மூலம் வரும் பட்டியல் தொகைகளுமே ஆகும். 2000 – ஆம் ஆண்டு நம்மை நோக்கி அந்நிய முதலீடுகள் அதிக அளவில் வரத்தொடங்கின. இவைகள் பெரும்பாலும் அந்நிய நாட்டினர் நம் நாட்டில் செய்த முதலீடுகள் மட்டுமல்லாமல் நமது அரசியல்வாதிகள் செய்த மாயஜாலங்களின் மூலமும் கருப்பை வெள்ளையாக்கும் அகடம் பகடம் மூலமும் வந்தவை. ( படிக்க: எனது முந்தைய பதிவு அந்நிய முதலீடும் அன்னியர் முதலீடும் என்ற தலைப்பில் ) ஆனால் எப்படியானாலும் அவை அமெரிக்க டாலர்களாக வந்தன. ஆனால் சமீக காலத்தில் இந்த முதலீடுகளும் அதன் மூலமாக கிடைத்த இலாபங்களும்( REPATRIATION) வெளியேறத்தொடங்கியுள்ளன என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன. 2000  ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆம் ஆண்டுவரை நமது நாட்டிலிருந்து அந்நிய முதலீடுகள் பெரும்பாலும் வாபஸ் பெறப்படவில்லை.  ஆனால் 

2009 ல் 3.1 பில்லியன் டாலரும் 

2011 ல் 10.7 பில்லியன் டாலரும் நமது நாட்டின் அந்நிய மூலதனத்திலிருந்து வெளியேறிவிட்டன. 

2012 ல் 19 பில்லியன்  பிளஸ் டாலர்வரை வெளியேறும் என்று கணக்கிட்டு இருககிறார்கள். 

(கிளிக்கு ரெக்கை முளைச்சுடிச்சு. ஆத்தைவிட்டு பறந்து போயிடுச்சு.) இப்படி அந்நிய முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடு செய்த பணத்தை உருவிக்கொண்டு துண்டைக்காணோம், துணியைக்காணோம் என்று ஓடுவதற்குக் காரணங்கள்? ஆதாயம் இல்லாமல் ஆற்றைக் கட்டி யார் இறைப்பார்கள்? நாட்டின் மந்தமான பொருளாதார வளர்ச்சி, கூட்டணி அரசின் நிலையற்ற கொள்கைகள், வணிக கோட்பாடுகளுக்குட்படாத திட்டமிடமுடியாத செலவினங்கள் என்று காரணங்கள் சொல்லப்படுகின்றன. வணிக கோட்பாடுகளுக்குட்படாத  செலவினங்கள் என்பது அரசியல்வாதிகளுக்கு காரியம் நடத்திகொள்வதற்காகக்  கொடுக்கப்படும் இலஞ்சம் ஆகும். இவைகளுக்கு பயந்து அந்நிய முதலீடுகள் வாபஸ் பெறப்படுகின்றன. 

இரண்டாவதாக கச்சா எண்ணெய் விலை உயர்வு. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து கூடுவது ஒருபுறம் அதற்காக அமெரிக்க டாலரில் செலுத்தவேண்டிய பணம் கைவசம் இல்லாவிட்டால் சந்தையில் அதிக விலை கொடுத்தேனும் டாலரை வாங்கி செலுத்தவேண்டிய கட்டாயம். இதனால் எண்ணெய் நிறுவனங்களின் டாலர் தேவை, சந்தையில் டாலருக்கான விலையை ஏற்றிவிடுகிறது. 

மூன்றாவதாக யூரோவுக்கு வந்துள்ள சோதனை. உலகின் அந்நிய செலாவணி சந்தைகளில் அமெரிக்க டாலருக்கு அடுத்தபடியாக கருதப்படுவது யூரோ எனப்படும் ஐரோப்பிய யூனியனின் செலாவணியாகும். இந்த யூரோ ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் பொது செல்வாணியாகும். ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில்  கிரீஸ் – கிரேக்கம்-  நாடு ஒரு அங்கமாகும். கிரீஸ் நாட்டில் பலவித காரணங்களால் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுவிட்டது. ஒரு அங்கத்தினர் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி மற்ற அங்கத்தினர் நாடுகளை பாதிக்கும் என்று அஞ்சும் நாடுகள் கிரீஸை ஐரோப்பிய யூனியனிலிருந்து ஒதுங்கிவிடும்படி வற்புறுத்துகின்றன. அப்படி கிரீஸ் வெளியேறும் சூழ்நிலையில் யூரோவின்மேல் உள்ள அழுத்தம் அதிகமாகி  மதிப்புகுறையும். இதைக் கண்ட உலகின் மற்ற நாடுகள் யூரோவை வைத்து முதலீடு செய்வதை தவிர்த்து அமெரிக்க டாலரில் முதலீடு செய்யத் தொடங்கி இருககிறார்கள். இதனாலும் உலக அளவில் அமெரிக்க டாலரின் விலை உயர்ந்து வருகிறது. குற்றாலத்தில் இடி இடித்து கோயம்புத்தூரில் மழை பெய்வதுபோல்தான் இந்தக் கதை . இதற்குக் காரணம் உலகமயமாக்கல் என்ற பொருளாதரத்தில் புதிதாய்ப் புறப்பட்டிருக்கும் அசுரனும் அவனை ஊட்டி வளர்க்கும் வல்லரசுகளுமாகும். இந்நிலை இல்லாவிட்டால் கிரீஸ் நாட்டில்  ஏற்பட்ட அரிப்புக்கு இந்தியா மற்றும்  ஏனைய நாடுகள் சொரிந்து கொள்ள வேண்டியதிருக்காது. 

இந்த மாற்றங்களினால் நாம் எழுவோமா? அழுவோமா? பதில் என்ன வென்றால் நாம் இப்போது அழலாம் ஆனால் சில மாற்றங்களைக் கொண்டு வந்தால் நம்மால் எழவும் முடியும் . இப்போது எப்படியெல்லாம் நாம் அழவேண்டி இருக்கும்?

1. பெட்ரோலுக்கு இன்னும் அதிக விலை கொடுக்க நேரிடும். இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு தரும் மானியம் அதிகரிக்கப்படவேண்டிவரும். அரசுமானியம் என்பது மன்மோகன்சிங் அல்லது மண்டேசிங் அலுவாலியா வீட்டுப் பத்தாயத்தில் உள்ள கோதுமையை விற்று வருவதல்ல. அரசின் மானியம் கூடினால் வரிச்சுமை கூடும் இதனால் விலைவாசி உயரும். 

2. நாம் இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு அதிக விலை கொடுக்க நேரிடும். ஒரு விவசாய நாட்டில் இன்றும் நிறைய உணவுப் பொருள்களை இறக்குமதி செய்ய வேண்டிய கேவலமான நிலைமையில் இருக்கிறோம். 

3. வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தை மட்டும் பெரிதாக பேசுகிறோம். . வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் நமது மாணவர்களுக்கு அதிக கட்டணம் செலுத்த நேரிடும். விமானப் பயணத்தின் கட்டணங்கள் விமானம் பறக்கும் உயரத்துக்கு எகிறி விடும். 

4. விலை உயர்வால் நடுத்தரவர்க்கத்தின் நுகர்வு குறைவால் உற்பத்தியான பொருள்கள் தேக்கமடையும். உற்பத்திப் பொருள்களின் தேக்கத்தால் உற்பத்தி குறையும். முதலீடு செய்வோருக்கு முனைப்பு வராது. இலாபம் குறைவதால் சேமிப்பும்  அதன்மூலம் வரும் முதலீடுகளும் குறையும். பொருளாதார மந்த நிலை ஏற்படும். 

எப்படி எல்லாம் செய்தால் நாம் எழலாம்?

1. ரிசர்வ் வங்கி தன்னிடம் இருக்கும் அமெரிக்க டாலரை வங்கிகளுக்கு திறந்த சந்தையில் விற்று பற்றாகுறையை சற்று சரிக்கட்ட உதவலாம். இது ஒரு தற்காலிக முதலுதவியாகும். நீண்ட நாட்களுக்கு குணமாக்கும் மருந்தை அரசுதான் தரவேண்டும். 

2. தொழில் நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து முதலீடுமட்டுமல்ல தொழில் வளர்ச்சிக்கான  நீண்டகால கடன்களும் அமெரிக்க டாலரில் வாங்கிக்கொள்வதற்கு வகை செய்யலாம். 

3. எண்ணை நிறுவனங்களுக்கும், இன்றியமையாத பொருள்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கும் நிர்ணய விலையில் ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட அளவு அமெரிக்க டாலர்களை விற்பனை செய்யலாம். சந்தை நிலவரத்தில் வாங்கும் டாலரின் விலையில் உள்ள ஸ்திரமற்ற நிலையும் விலையும் இதனால் தவிர்க்கப்படலாம். 

4. கூட்டணிக்கட்சிகள் இழுத்த இழுப்புக்கெல்லாம் பொருளாதாரக் கொள்கைகளை மாற்றும் போக்கை மத்திய அரசு கைவிடலாம். ஒரு நிலையான அந்நிய முதலீடு மற்றும் அந்நிய செலவாணி கொள்கைகளை அறிவித்து பின்பற்றலாம். 

5. நாட்டின் மூல கனிம வளங்களை தனியாருக்கு குறைந்த விலையில் தாரைவார்ப்பதை நிறுத்தலாம். முக்கிய வருமானம் வரும் சுரங்க கனிமங்களை வெட்டி வெளிநாடுகளுக்கு அனுப்பி பட்டியலில் குறைத்து விலைபோட்டு – வித்தியாசங்களை சுவிஸ் வங்கியில் சேர்க்கும் சில அரசியல்வாதிகளின் ஊழல வெளிப்பட்டுள்ளதை தீவிர குற்றமாக கருதி அப்படி ஒதுக்கப்பட்ட மூல வளங்களை பறிமுதல் செய்யலாம்.   

6. வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் டெபாசிட்கள்  100 பில்லியன் வரை இருந்து இப்போது 50 பில்லியனாக ஆகிவிட்டது. ஊக்கப்படுத்தி அதிக டெபாசிட்டுகளை கவரலாம். 

7. உலகிலேயே அதிகம் தங்கம் இறக்குமதி செய்யும் நாடு என்ற பெயர் இந்தியாவுக்கு உள்ளது. இதற்கு ஏதாவது ஒரு கட்டுப்பாடு விதித்து கணவன்மார்களது கண்ணீரைத் துடைக்கலாம். வரதட்சணையாக தங்க நகை போடுவதற்கு ஒரு கட்டுப்பாடு விதிக்கலாம். ( யார் யார் அடிக்க வரப்போகிறார்களோ?).

8. வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செல்கிறேன் என்று சில குருவிக் கூட்டங்கள் அமெரிக்க டாலரை சலுகைவிலையில் வாங்கிக் கொண்டுபோய் வெளிநாடுகளில் விற்கும் நிலைகளைக் கட்டுப்படுத்தலாம். 

பொருளாதாரத்தில் பண மதிபபு குறைவது என்பது உலக அரங்கில் ஒரு நாட்டின் மரியாதைக்குரிய  பிரச்னை.   2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம், நிலக்கரிச் சுரங்க வயல்களைக் குறைந்த விலைக்குக் குத்தகை விட்டது, கனிமச் சுரங்கங்களில் அரசியல்வாதிகளை விருப்பம்போலச் சம்பாதிக்க அனுமதித்தது போன்ற நடவடிக்கைகளின் மூலம் நாட்டின் செல்வம் குறிப்பிட்ட சிலரால் சூறையாடப்பட்டுவிட்டது. 2ஜிஅலைக்கற்றை, நிலக்கரி மற்றும் கனிம வளங்கள் போன்ற அரசுக்கு வருவாய் பெற்றுத் தரும் தேசச் சொத்துகளைச் சரியான முறையில் விலை நிர்ணயம் செய்திருந்தாலே போதும். இந்திய அரசுக்குப் பல லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கும்.  இப்படி நாட்டின்  செல்வத்தின்  மூலமான வருமானம் இடைக்கொள்ளை இன்றி வகைப்படுத்தப்பட்டு இருந்தால் திடீரென்று உலகைத்தாக்கும் பொருளாதார வீழ்ச்சி சுனாமிகளில்  இருந்து தப்பித்துக்கொண்டு விழுந்த பொருளாதாரம் எழுந்த பொருளாதாரமாக நிற்கவே முடியும். அரபு தேசங்கள் அப்படித்தான் ஆடாமல் நிற்கின்றன. 

-இபுராஹீம் அன்சாரி

தமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | November 21, 2011 | , , , ,


பத்திரப் பதிவு - அரசு வழிகாட்டி மதிப்புக்கான வரைவு திருத்தம்

தமிழ்நாட்டில் கடந்த 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு அரசு வழிகாட்டி மதிப்பு என்கிற கைடு லைன் வேல்யூ அதிகரிக்கப்படாமல் இருந்தது. புதிய அரசு, அதன் பல்வேறு திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறை வரவே... இப்போது சுறுசுறுப்பாக மாநிலம் முழுக்க உள்ள ஒரு கோடி சர்வே எண்களுக்கான புதிய வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்கும் வேலையில் இறங்கி இருக்கிறது.  

மனை மற்றும் வீட்டை பத்திரப் பதிவு செய்பவர்கள் அதன் அரசு வழிகாட்டி மதிப்பில் (8 சதவிகிதம் முத்திரைத் தாள் கட்டணம், ஒரு சதவிகிதம் பதிவுக் கட்டணம்) 9 சதவிகிதத்தை கட்டணமாக செலுத்த வேண்டும். பெரும்பாலும் சந்தை மதிப்புக்கும் அரசு வழிகாட்டி மதிப்பும் இடையே வித்தியாசம் இருக்கும்.

தற்போது சந்தை மதிப்பு மற்றும் அரசு வழிக்காட்டி மதிப்பு இணையாக இருக்கும்படி அரசு புதிய வழிகாட்டி மதிப்பை நிர்ணயிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. பல இடங்களில் தற்போதுள்ள வழிகாட்டி மதிப்பை விட சுமார் 10 மடங்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது இப்போது ஒருவர் பத்திரப் பதிவுக்காக 20 ஆயிரம் ரூபாய் செலவிட்டால், இனி 2 லட்ச ரூபாய் செலவிட வேண்டி வரும்..!

இதற்கான வரைவு வழிகாட்டி மதிப்பு, புத்தகமாக தயாரிக்கப்பட்டு தமிழகம் முழுக்க பத்திரப் பதிவு அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படிருக்கிறது. மேலும், தமிழக அரசின் பதிவுத் துறை இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இதில், சந்தை மதிப்பை விட அதிகமாக அரசு வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்றால், அதை குறைக்கச் சொல்லி அரசுக்கு மனு கொடுக்கலாம். சாலை, குடிநீர், தெரு விளக்கு, பஸ் வசதி போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத இடத்துக்கு அதிகமாக மதிப்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தால் அரசு வழிகாட்டி மதிப்பை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வரைவு வழிகாட்டி மதிப்பு டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் இறுதி செய்யப்பட இருக்கிறது.  

இந்த வழிகாட்டி மதிப்பை பார்த்து சரிதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது சொத்து வைத்திருக்கும் மற்றும் விரைவில் வாங்கப் போகும் அனைவரின் கடமையும் கூட..!

ஏன் சரிபார்க்க வேண்டும் என்பதற்கான விளக்கம் சிறிய உதாரணமாக தருகிறேன்.  

ஒரு ஏரியாவுக்கு தவறுதலாக அரசு வழிகாட்டி மதிப்பு, மிக அதிகமாக நிர்ணயிக்கப்பட்டால் பாதிப்பு அந்த பகுதில் சொத்து வைத்திருக்கும் மற்றும் வாங்கப் போகிற இருவருக்கும்தான். எடுத்துக்காட்டாக ஒரு இடத்தின் அரசு வழிகாட்டி சதுர அடிக்கு 3,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உள்கட்டமைப்பு வசதி எதுவும் இல்லாத அந்த இடத்தின் மார்க்கெட் விலை 1000 ரூபாய்தான். இந்த ஒரிஜினல் மதிப்புபடி 1,000 ச.அடி மனையின் விலை 10 லட்ச ரூபாய். இதற்கு முத்திரை மற்றும் பதிவு கட்டணம் 9% என்பது 90,000 ரூபாய். ஆனால், அரசு வழிகாட்டி மதிப்பு 3000 ரூபாய் என்கிற போது, 1000 ச.அடி. மனைவின் மதிப்பு 30 லட்ச ரூபாயாகிவிடுகிறது. இதற்கான பத்திரப் பதிவு செலவு 4.5 லட்ச ரூபாயாக இருக்கும். அதவாவது, 10 லட்ச ரூபாய் இடத்துக்கு 4.5 லட்ச ரூபாய் பதிவு கட்டணம் என்றால் என்ன செய்வது?

இடத்தை விற்பவர் கணிசமாக விலையை குறைத்து கொடுத்தால் மட்டுமே வாங்குவார்கள். அப்படி நடக்கவில்லை என்றால், கடைசி வரைக்கும் சொத்து கைமாறுவது என்பதே இருக்காது. எனவே, அரசு வழிகாட்டி மதிப்பு இறுதி செய்யப்படுவதற்குள், அனைவரும் அவர்களின் சர்வே எண் அல்லது தெருவுக்கு என மதிப்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதை பார்த்து மறுப்பு தெரிவித்து சரிசெய்வதே செய்ய வேண்டிய காரியம்.

எனவே, மறந்தும் இருந்துவிடாதீர்கள். இருந்தும் மறந்துவிடாதீர்கள்..!

- சி.சரவணன்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு