ஏட்டுக் கணக்குப் பிழையென்றால்
ஏழுக்கு எட்டு விடையென்றாகும்
வீட்டுக் கணக்கில் குளறுபடி
வீண்சண்டை விவாதம் அடிதடி
ஓட்டுக் கணக்கைக் கணிக்காவிடில்
ஒழித்துக் கட்டும் தேர்தல் களம்
சொத்துக் கணக்கில் சுத்தமில்லை
கம்பிக் கணக்கை எண்ண நேரிடும்
உப்புக்குச் சப்பாய் கூட்டிக் கழித்து
தப்புக் கணக்குப் போட்டுவிட்டால்
கைமேல் பலனெனக் கிடைப்பதெல்லாம்
கைத்தடி வயதில் நோகடிக்கும்
உன்றன் கையில் உள்ளதெல்லாம்
உனக்கே உனக்கென எண்ணவேண்டாம்
உலகையே வென்றதாய் உவகையோடு
உற்சாகக் கூச்சல் போடவேண்டாம்
உள்ளங்கை ரேகை ஒன்றைத் தவிற
உள்ளதெல்லாம் போகும் உணரவேண்டும்
உள்ளெண்ணமும் செயலும் நல்லதென்றால்
உயர் நன்மையாய் மாறி நிலைத்து நிற்கும்
செலவைக் கணக்கிடாமல் - பெரும்
வரவு வந்தும் பலனில்லை
உறவைக் கவனிக்காமல் - இவ்
வுலக வாழ்வில் விடிவில்லை
விளைவுகளைத் தீர்மாணிக்கும்
வினைகளாற்றக் கற்றுக்கொள்
கனியிருப்பக் காய் கவரும்
குருட்டுத்தனம் மாற்றிக்கொள்
ஏழ்மை இழிவெனவோ
இயலாமை விதியெனவோ
முதுமை முடிவெனவோ
மதிப்பீடு முறையல்ல
எல்லா கிழக்கிலும்
விடியல்கள் காத்திருக்க
எல்லா முடிவினிலும்
இன்னுமொரு துவக்கம் உண்டு
எல்லா செயல்களுக்கும்
ஏகப்பட்ட வழியிருக்க
தப்புக் கணக்குப் போட்டு
சதுப்புச் சேற்றில் சிக்கிவிடாதே!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்