ஊரு, உலகத்துலெ எவ்ளோ பெரச்சனையலுவோ தலெவிரிச்சி ஆடுது. வெலெவாசி ஒயர்வு, பெட்ரோல், டீசல் வெலெ ஒயர்வு, பள்ளி, கல்லூரிக் கட்டணம் ஒயர்வு, மின்கட்டண ஒயர்வு, மின் தடை, போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும், எங்கு பாத்தாலும் ஊழல், லஞ்சம், நில அபகரிப்பு, உணவுப்பொருட்களின் வெலெவாசி ஒயர்வு மற்றும் பதுக்கல், கடத்தல், சில மாநிலங்களில் பசி, பட்டினி, பஞ்சம், வேலெயில்லாத் திண்டாட்டத்துனாலெ அன்றாடம் சர்வசாதாரனமாக்கப்பட்ட கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஒரு புறம் தீவிரவாத தாக்குதல்கள் (காவித்தீவிரவாதமா? இல்லை கபோதி தீவிரவாதமா?தெரியவில்லை பட்டிமன்றத்தில் தலைப்பிட்டு விவாதிக்கப்பட வேண்டியவை) குழந்தைகள் கடத்தல், போலி சாமியார்களின் காம அட்டூழியங்கள், கருப்பு பண பதுக்கல், கள்ளச்சந்தை என்று நாட்டில் ஏகப்பட்ட பிரச்சினைகள் பெருச்சாலி போன்று ஆங்காங்கே மேய்ந்து/ஊர்ந்து சென்று கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில்.
"நிமிசத்திற்கு எத்தனையோ லட்சங்கள் வருவாய் ஈட்டக்கூடிய, சிறுவயதிலிருந்து இந்திய அணியில் பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு, சர்வதேச போட்டிகளில் விளையாண்டு பல கோடான கோடிகளையும், விலையுயர்ந்த பரிசுப்பொருட்களையும் சிறுவயதிலேயே சம்பாதித்து இன்று இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரன் என்றும் கிரிக்கெட்டின் கடவுள்(??) என்றும் ஊராலும், உலகத்தாலும் புகழப்பட்டு நாட்டின் மொத்த ஊடகத்தின் கவனத்தையே தன் பக்கம் திருப்பி வைத்துள்ள "சச்சின் டெண்டுல்கர்" க்கு இந்தியாவின் உயரிய விருதான "பாரத் ரத்னா" விருது வழங்க வேண்டுமென மஹாராஷ்ட்ர மாநில முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் கச்சல் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி, நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சகமும் வரிந்து கட்டிக்கொண்டு அதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சிபாரிசு கடிதம் எழுதி அதை அப்படியே முன்மொழிந்து மத்திய உள்துறை அமைச்சகமும் இந்த விளையாட்டுத் துறையை பாரத ரத்னா விருது வழங்கும் பட்டியலில் உடனே சேர்க்கச்சொல்லி வலியுறுத்தி பாரத பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கின்றதன் அவசியம் தான் என்ன? அவசரம் தான் என்ன?அவர் கிரிக்கெட் விளையாட்டில் அர்ப்பணிப்புடன் சிறப்பாக விளையாண்டு நாட்டிற்கு நல்ல பெயரையும், புகழையும், பெருமையும் தேடித் தந்துள்ளார் என்பதில் மாற்றுக்கருத்து யாருக்கும் இல்லை தான். அவர் என்ன நாட்டுக்காக சும்மாவா விளையாண்டார்? ஒவ்வொரு போட்டிக்கும் பல கோடிகளை சம்பளமாக பெற்றும் அதற்கு மேல் விளம்பரத்தில் பல நூறுகோடிகளையும் சம்பாதித்தும் அல்லவா? அரங்கில் சிறப்பாக விளையாண்டார். நமக்கெல்லாம் விளையாட்டு அரங்கில் நுழைய இலவச டிக்கெட்டா கொடுத்தார்கள்? இல்லை தொலைக்காட்சியில் காண இலவச மின்சாரம் (!!!) தந்தார்களா ?
நாட்டை செழிப்பாகவும், வறுமைக்கோட்டிற்கு கீழே அன்றாடம் செத்து, செத்து வாழ்ந்து கொண்டிருக்கும் தாய் மண்ணின் கோடான கோடிமக்களை கைப்பிடித்து மேலே கொண்டு வர முயற்சித்தாரா? அறிவியல் மற்றும் மருத்துவத்துறையில் சிறப்பான ஆராய்ச்சி செய்து அதை நாட்டிற்காக அர்ப்பணித்தாரா? தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மூலம் விவசாய வளர்ச்சிக்கு வித்திட்டாரா? இல்லை நாட்டின் கடும்குளிரும் குண்டு மழையும் பொழியும் எல்லையில் நின்று அந்நிய நாட்டு படையுடன் சண்டையிட்டாரா? அல்லது நாட்டிற்கு பெருமை மட்டும் சேர்த்து விட்டு ரோட்டோர குடிசையில் வாழ்ந்து வருபவரா? நல்லா வெளையாண்டார் என்பதற்காக அவருக்குத்தான் தக்க சன்மானங்களும், வெகுமானங்களும், பரிசுப்பொருட்களும், பண முடிச்சுகளும் ஊராலும், உலகத்தாலும் உடனுக்குடன் கொடுக்கப்பட்டு விட்டதே? அவருக்கு எப்படியாவது பாரத ரத்னா விருதை வாங்கி கொடுத்து விட வேண்டும் என்று இராப்பகலாய் உறங்காமல் துடியாய் துடித்து வரும் மஹாராஷ்டிர முதல்வரும், நாட்டின் விளையாட்டு மற்றும் உள்துறை அமைச்சர்களும், பாரத பிரதமரும் அவர்கள் தங்கள் சொத்தில் ஒரு பங்கை அவருக்கு கொடுத்து அதை ஒரு பெரு விழாவாக எடுத்து மகிழ வேண்டியது தானே? யார் தடுத்தார்கள்? இல்லை வேண்டாம் என்றார்கள்? போட்டியில் நன்றாக விளையாண்டால் தலையில் தூக்கி வச்சி கொண்டாடுவார்கள். சரிவர விளையாட வில்லை எனில் தூக்கி எறிந்து கும்மியடிச்சி கேவலப்படுத்தி அட்ரஸில்லாமல் ஆக்கி விடுவார்கள்.
தமிழகத்தின் ஒரு கிராமத்தில் சொந்த வீடு கூட இல்லாத ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்து பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 1200க்கு 1171 மார்க்குகள் வாங்கி மாநிலத்திலேயே மூன்றாம் இடம் பிடித்து மருத்துவராக வேண்டும் என்ற தன் உயரிய கனவுடன் மருத்துவக்கல்லூரியில் இடமும் கிடைத்து மேற்கொண்டு அங்குள்ள கட்டணம் செலுத்த இயலாமல் அதை அப்படியே விட்டு விட்டு மேற்படிப்பெல்லாம் வீட்டின் பொருளாதார சூழ்நிலையால் தனக்கு ஒத்துவராது என்றெண்ணியவனாக தன் தந்தையுடன் ஒத்தாசையாக மண்வெட்டியுடன் வரப்பு வெட்ட கிளம்பி விட்டான் அந்த ஒரு இளைஞன். இவன் போல் எத்தனை லட்சம் இளைஞர்கள் நம் நாட்டில் உள்ளனர். இந்த வாலிபனுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க பரிந்துரைக்கப்பட்டால் பாரத ரத்னாவிற்குத்தான் பெருமையாக இருக்குமே ஒழிய இந்த மாணாவனுக்கல்ல....(இப்படியாக மாணவனுக்குஎல்லாம் நம்மை கொடுக்கிறார்களே என்று அந்த பாரத் ரத்னா விருது பெருமைப்படும்).
சச்சின் டெண்டுல்கரின் மேல் நமக்கு எவ்வித பொறாமையும், காழ்ப்புணர்ச்சியும் இல்லை. அவர் ஒரு மிகச் சிறந்த மட்டையடி வீரர் இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. நாட்டில் பல பிரச்சினைகள் பூதமாக உருவெடுத்து தாண்டவமாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இதெல்லாம் தேவைதானா? என்பதே கேள்வி. சுவிஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நாட்டின் கருப்பு பணத்தை வெளியில் கொண்டு வந்து அதை வைத்து ஊரறிய, உலகறிய ஒரு பெரு விழாவில் சச்சின் போன்ற ஏழைகளுக்கு வேண்டிய விருது கொடுத்து மகிழ்ந்தார்கள் என்றால் பரவாயில்லை.
அரசியல், புகழ், ஆட்சி, அதிகாரம் என்று கையில் வந்து விட்டால் உலக பொருளாதார மாமேதைகளும், புள்ளியல் மற்றும் கணித மேதைகளும், உலக வங்கியின் செயலாளராக பரிந்துரைக்கப்பட்ட நாட்டின் திட்டக்குழு வல்லுநர்களும் கூட கடைசியில் மழுங்கினிகளாகவும், மந்தாண்டைகளாகவும், சாதாரன மனிதர்கள் போல் ஆகி விடுவார்கள் போலும்......
இறைவா! நாம் பல்லக்கில் செல்ல விரும்பவில்லை; மாறாக நாலு பேர் எம்மை பார்த்து கேவலமாக எதற்கும் பல்லிளிக்க வைத்து விடாதே....
ஆதங்கத்தில் சாதாரன இந்திய மண்ணின் மைந்தனாக....
- மு.செ.மு. நெய்னா முஹம்மது.

