நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை... - 2 36

அதிரைநிருபர் பதிப்பகம் | புதன், அக்டோபர் 31, 2012 | , , ,

தொடர் - 2

மகள் சொன்னதை கேட்டு பதறிய எனக்கு ஞாபகத்திற்கு வந்த இந்த குர்ஆன் வசனத்தை என் மகள்களுக்கும், மனைவிக்கும் சொன்னேன்.

بسم الله الرحمن الرحيم

   أَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ مُسَخَّرَاتٍ فِي جَوِّ السَّمَاءِ مَا يُمْسِكُهُنَّ إِلَّا اللَّهُ ۗ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يُؤْمِنُونَ

"வான(மண்டல)த்தின் (காற்று) வெளியில் (இறை கட்டளைக்குக்) கட்டுப்பட்டு பறக்கும் பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை (ஆகாயத்தில்) தாங்கி நிற்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை; நிச்சயமாக இதில் ஈமான் கொண்ட மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன." - அல்குர்ஆன் - 16:79

ஆகையால், இந்த அலுமினியப் பறவை விழுந்து விடாமல் காப்பவனும் அல்லாஹ்வே என்று ஆறுதல் கூறினேன்.

விமானம் சென்று கொண்டே இருந்தது, விமானத்தின் திரையில் சான்பிரான்சிஸ்கோ புறப்பட்டு, கனடா எல்லை வரை சென்று - ஜப்பானின் டோக்கியோ மேலே (பசிபிக் மேலே) பறந்தது விமானம். நீண்ட பயணத்தின் முதல் கட்டமாக ஹாங்காங் வந்து சேர்ந்ததை காட்டிக் கொண்டே வந்தது (சுமார் 14 மணிநேரப் பயணம்). இடையிடையே நேரத்தைக் கணித்து இருக்கையிலேயே தொழுது கொண்டோம். பிறகு 1 1/2 மணிநேர இடைவெளியில் மீண்டும் பயணம் சிங்கப்பூர் நோக்கி. சிங்கப்பூர் வந்தடைந்தபோது வெள்ளிக்கிழமை காலை 11:20 மணி.


சிங்கப்பூர் நெருங்க, நெருங்க பச்சைப் பசேல் என்ற பசுமையான போர்வைக்குள் அழகான குட்டிக் குழந்தை தூங்குவது போல் கண்களுக்கு தெரிந்தது இந்த சிங்காரச் சிங்கப்பூர்.

அன்று ஜும்மா தினம் இன்ஷா அல்லாஹ் ஜும்ஆ தொழ வேண்டும் என்கிற எண்ணம் அலைமோதியது, அடுத்த சென்னை ஃபிளைட் இரவு 08:30 மணிக்குத்தான். எனவே, டெர்மினல் மாறினோம் வெளியில் செல்ல இமிக்ரேஷன் முடிக்க வேண்டும். அமெரிக்க பாஸ்போர்ட்களுக்கு சிங்கப்பூர் விசா எடுக்க வேண்டிய தேவையில்லை. இமிகிரேஷனில்! நான் ஒரு நாள் மட்டும் விசா போதும் என்றேன், மூன்று மாதங்களுக்கு தந்தார்கள்.

அந்த பிரமாண்டமான சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் ஈத் பெருநாளைக் குறிக்கும் வண்ணம் அழகாக ஜோடித்திருந்தார்கள்.


Money exchange சென்று சிறிது சிங்கப்பூர் டாலர் மாற்றிக் கொண்டு வெளியில் வந்தோம். லேசான தூறல் ஆரம்பித்திருந்தது, ஏர்போர்ட் வாசலில் ரெடியாக இருந்த டாக்ஸியில் ஏறி சிறிது முஸ்தபா செண்டர் வந்தடைந்தோம். சிங்கப்பூர் வெள்ளி 21.40 வந்தது அதைக் கொடுத்து விட்டு அருகில் பள்ளிவாசல் இருக்கிறதா ? என்று விசாரித்தோம்.

''அங்குளியா மஸ்ஜித்" இருக்கிறது என்று சொன்னார்கள். அங்கு சென்றபோது தமிழில் பயான் நடந்து கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் தமிழ் பேசும் முஸ்லிம் பெருமக்கள் நிம்மதியாக 'ஜும்ஆ" தொழுதுவிட்டு, அருகில் உள்ள ஹலால் ரெஸ்டரண்டில் பகல் உணவை முடித்துக் கொண்டு, அங்கேயிருக்கும் கடைகளில் சில பொருட்களை வாங்கினோம். சிங்கப்பூர் விலைவாசி பற்றிய என் கருத்து 'பல பொருட்கள் இந்தியா, அமெரிக்காவை விடவும் அதிகமாகவே இருந்தது. அமெரிக்காவிலிருந்தே தேவையான பொருட்களை வாங்கி வந்து விட்டதால் இங்கு வேறு அதிகமாக வாங்காமல் திரும்பிவிட்டோம்.

இனி ஏர்போர்ட்டுக்கு போகலாம் என வெளியிலே வந்தபோதுதான் கண்ணில் பட்ட அந்த காட்சி அதிர்ச்சியாக இருந்தது.
தொடரும்...
A.R.அப்துல் லத்தீஃப்

வாழ்கைப் பயணத்தில் உறவுகள் - 8 26

அதிரைநிருபர் பதிப்பகம் | புதன், அக்டோபர் 31, 2012 | ,

மச்சான் - உறவு...

கல்லூரி காலங்களில் சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை  ராகிங் செய்வார்கள் .. இதெல்லாம் ஏன் என்று கேட்டால் இருவருக்குள் நட்பு பாலம்  உருவாக சிறிய பரிகாச விளையாட்டு என்பார்கள். மூன்று அல்லது நான்கு வருட நட்புக்கு விபரீதமான கேலி கிண்டல் செய்வது என்றால், வாழ் நாள் முழுவதும் உறவாக திகழ போகும் ஒரு உறவை கேலி கிண்டல் செய்வதற்கு சொல்லவா வேண்டும்...!!

ஹல்வா கேட்கும் மச்சினி...

கல்யாணமாகி  முதல் நாள் காலையில் புதுமாப்பிள்ளை பெண் வீட்டை வெளியே செல்ல எத்தனிக்கும் மாப்பிள்ளையின் செருப்பு நேற்றிரவு இட்ட இடத்தில் காணாமல் தவிப்பார். வீட்டுக்குள்ளேயிருந்து ஒரு சப்தம் வரும் “மச்சான் செருப்பு இங்கே இருக்கு செறுப்பு வேணும்னா, எங்களுக்கு நல்ல ஸ்வீட் வங்கி தரனும்” என்ற நிபந்தனையோடு கேலி கிண்டல் துவங்கும். இந்த கிண்டல் சில வாரங்கள் தொடரும். சிலரின் கேலி கிண்டல் முகம் சுளிக்கும் அளவிற்கு கூடுதலாகும். சிலர் இனிப்பு என்று எதிர்பார்க்கும் பண்டங்களில்  உப்பை அதிகமாக போடுதல் போன்றவை நமதூரில் நாற்பது வருடங்களுக்கு முன்பு அதிகமாக காணப்பட்டது. அது கனிசமாக குறைந்து பேச்சளவில் மட்டுமே உள்ளது எனலாம். ஆனால், நாகூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிகவும் கேலியும் கிண்டலும் கொஞ்சம் தூக்கலாகவே நடைபெறும். சில சமயம் விபரீத நிகழ்வுகளும் நடப்பதுண்டு. அப்படி ஒரு சம்பவம் ..

மாப்பிள்ளை வீட்டுக்குள் வரும் நடை பாதையில் கொட்டை பாக்கு பளிங்கு ரவை போன்றவைகளை தரையில் போட்டு அதன் மேல் புல்லு பாயை போட்டு வைத்து மாப்பிள்ளையை நடக்க வைத்து சறுக்கி விழ வைத்து வேடிக்கை பார்க்க திட்டம். அதே போன்று மாப்பிள்ளையையும் அதன்மீது நடந்து வந்தார். பாயில் கால் வைத்ததுதான் தாமதம் சறுக்கி கீழே விந்தார். பிடரியில் அடிப்பட்டு அதே இடத்தில பரிதாபமாக அவர் உயிர் பிரிந்த காட்சி அந்த பகுதியை அதிர்ச்சி அடைய வைத்தது. ஆனால் அந்த பகுதி மக்களின் கேலிய்ம் கிண்டலும் இன்னும் மாற வில்ல.

அன்றைய காலங்களில் புதுமண தம்பதிகளிடையே புரிந்துணர்வு ஏற்படவும் அவர்கள் இருவருக்கும் பரஸ்ப்பர உணர்வு வரவேண்டும் என்பதற்காக ஏற்படுத்த பட்டது. அது இன்றைய காலத்திற்கு தேவையில்லாத ஒன்று காரணம் ஆணும் பெண்ணும் இக்கால திரைப்படங்கள் சீரியல்கள் எல்லா வற்றையும் கற்று கொடுத்து விட்டதால் சம்பிரதாயங்கள் தேவை இல்லை என்றே சொல்ல வேண்டும். சில வீடுகளில் மச்சான் வரவு வெற்றியானதாகவும்  இன்னும் சில இடங்களின் துயரமாகவும் அமைந்து விடுகிறது.

மச்சான் மச்சினன் உறவு பற்றி முக்கியமான ஒன்றை கூற விரும்புகிறேன். மச்சானின் மெய் காவலன் மச்சினன் எனலாம், தூத்துக்குடி பகுதி மீனவர்கள் முத்துக்குளிக்கும் போது ஆழ கடலில் மூழ்குவார்கள். அப்போது மூழ்கும் நபர் இடுப்பில் கயிறை கட்டி  மேல் மட்டத்தில் மச்சினன் பிடித்து இருப்பார் மூச்சு முட்டும் தருணம் வந்தால் கயிறை அசைப்பார், உடனே மேல் மட்டத்தில் உள்ளவர் இழுத்து கரை எற்றுவார். அந்த கயிறு மச்சினன் கையில் தான் கொடுப்பார்களாம். ஏன் என்றால் சகோதரியின் தாலி காக்க வேண்டும் என்ற உணர்வு மச்சினன் இடம் அதிகமாக இருக்குமாம்.   
தொடரும்...
அதிரை சித்தீக் (தகப்பனார் பெயர் முகம்மது இப்ராஹீம்)

போலிகள் - பயிரை மேயும் வேலிகள் ! 30

அதிரைநிருபர் பதிப்பகம் | செவ்வாய், அக்டோபர் 30, 2012 | , , ,

விளக்கினை ஏற்றிவிட்டு
.. விசிறியால் வீசுவாரோ
அழுக்கினை நீக்கிவிட்டு
.. அசுத்தமும் பூசுவாரோ?

தேசியம் பேசுகிறார்
.. திருடுகள் பண்ணுகிறார்
ஆசியும் கூறுகிறார்
.. அழிவையே எண்ணுகிறார்

வேலியே பயிரைத்தான்
.. வேகமாய் மேய்தற்போல்
போலிகள் இவர்கள்தாம்
.. போதனைச் சாயத்தில்

என்ன மனிதரிவர்?
.. எளியவர்க்கு நல்லவராம்
அன்னார் நடித்திடுவார்
.. அரசியலில் வல்லவராம்

ஓரங்க நாடகம்
..ஒவ்வாத பாத்திரம்
யாரங்குக் கேட்பது
...எல்லாமே சாத்திரம்

என்னென்ன ஒப்பனை
...எளியோரின் வேதனை
எண்ணாமற் போதனை
....எளிதாய்ப்பொய் விற்பனை

அரிதாரம் இவர்களின்
....ஆதாரம் ஆனது
புரியாத பதங்களே
...பூமாலை ஆனது

இல்லாத ஒத்திகை
..எழுதாத வசனம்
பொல்லாத  செய்திகள்
..பொழுதானால் விசனம்


அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

அமெரிக்காவில் மற்றுமொரு புதிய பள்ளிவாசல் - அல்ஹம்துலில்லாஹ் ! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | செவ்வாய், அக்டோபர் 30, 2012 | , ,


அஸ்ஸலாமு அலைக்கும்,

28-10-12 ஞாயிற்று கிழமை அன்று அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள ஜமெய்க்கா என்ற இடத்தில் இலங்கை தமிழ் முஸ்லிம்களால் ஒரு அழகிய பள்ளிவாசல் கட்டி முடிக்கப்பட்டு அல்லாஹ்வின் அருளால் இனிதே லுஹர் தொழுகையுடன் திறப்பு விழாவும் நடைபெற்றது. அல்ஹ்மதுலில்லாஹ் !

நியூயார்க்கில் இதுவே  தமிழர்களால் நடத்தப்படும் முதல் பள்ளிவாசலாகும் திறப்புவிழாவின் போது ஏராளமான அதிரை சகோதர்கள் கலந்து கொண்டார்கள்.தகவல்: N.K.M.அப்துல் வாஹித் அண்ணாவியார்

American Adirai Forum - உதயமானது ! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | செவ்வாய், அக்டோபர் 30, 2012 | , , ,


அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு - American Adirai Forum [A A F]

சிறப்புரை: ஷைக் நஜீர்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரித்தாகட்டும்.

அமெரிக்கா வாழ் அதிரையர்களின் கூட்டமைப்பு வெற்றிகரமாக இன்று  28-Oct-2012 (ஞாயிற்றுக் கிழமை) துவங்கப்பட்டது. இந்நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்தேறியதற்கு வல்லமை நிறைந்த அல்லாஹ்வின் உதவியே காரணம் அன்றி வேறில்லை.

முக்கிய இந்நிகழ்வுக்கு குடும்பத்துடன் வந்து சிறப்பித்த அனைத்து அதிரை சகோதரர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன் ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

மேலும் வல்லேஹோ மஸ்ஜிதில் சிறப்புடன் ஏற்பாடு செய்த சகோதரர்கள் அப்துல் மாலிக், மதீனா, ஷேக் அலி இவர்களின் முயற்சிக்கும் பங்களிப்பிற்கும் எனது தனிப்பட்ட நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


சகோதரர்களின் சந்திப்பின் நிறைவாக கீழ்கண்ட சகோதரர்கள் பொறுப்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்:-

அமெரிக்கா அதிரை சகோதரர்களின் கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகள்

தலைவர் : சகோ. ஹக்கீம்

துணைத் தலைவர் : சகோ. ஷிப்ளி முஹம்மது

செயலாளர் : சகோ. ஷைக் நஸீர்

இணை செயலாளர் : சகோ. தமீம்

பொருளாளர் : சகோ. இக்பால் M.ஸாலிஹ்

Peer Assistant Leader : சகோ. ஜுபைர்

இறைவன் நாட்டப்படி விரைவில் மண்டல பொறுப்பாளர்களை அந்தந்த பகுதி வாரியாக தேர்ந்தெடுக்கப்படும்.கூட் டமைப்பின் நெறிமுறைகள்:-

1. நம் சமூகத்திற்கு (அமெரிக்க அதிரையர்கள்) சேவை செய்வதே முக்கிய குறிக்கோளாகும்.

2. சந்தாதாரர் மட்டுமே கூட்டமைப்பின் சகல வசதிகளையும் பெறமுடியும், சந்தாதாரர் அல்லாதவர்களுக்கு கூட்டமைப்பின் நலன்களில் பங்களிப்பு இல்லை.

3. மாதம் டாலர் 25/- சந்தாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

4. அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு, நம் சமூக சகோதரர்களின் இறப்பு மற்றும் அதற்கான இறுதிக் கடமைக்கான (கஃபன், நல்லடக்கம்] செலவினங்களை சந்தாதரர்களுக்கு மட்டுமே ஏற்கும்.

5. உறுப்பினர்களுக்கிடையே ஒருவருக்கொரு உதவிபுரிதல், எதிர்பாராத விபத்துக்கள் அல்லது இடர்களுக்கு உதவுதல்.

6. அதிராம்பட்டினத்தில் வாழும் நலிந்த மக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரம் செழிக்க பாடுபடும்

7.  A.A.F..தனது முழு ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பை அதிரை பைத்துல் மால் வழியாகவே செய்யும் அதுவும் AAFன் செயற்குழு அனுமதி பெற்ற பின்னரே செயல்படுத்தும்.

8. ஜகாத், தர்மங்கள், ஃபித்ரு சதக்கா முறையாக வசூல் செய்யப்பட்டு அதனை தேவையுடைய மக்களுக்கு வழங்குவ து.

9. ஆகுமாக்கப்பட்ட  (ஹலால்) சம்பாத்தியமே நிரந்தரம் என்பதை உறுப்பினர்களுக்கு கட்டாயமாக வழியுறுத்தி அதன்படியே செயல்பட தூண்டுவது.

10. AAF புதிதாக அமெரிக்கா வரும் அதிரை சகோதரர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகள் தங்குமிட வசதி, வேலை வாய்ப்பு ஆகியவைகளை ஏற்படுத்திக் கொடுக்க முன்னின்று உதவுவது.

11. சமூக கட்டமைப்பு உருவாக்குவது (சமூக கூடல், பொழுது போக்கு விடயங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் ஒன்று கூடல்)

12. இளைஞர்களுக்கு அவர்களின் எதிர்காலத்தினை செப்பனிட வழிகாட்டுவது.

13. AAF எவ்வகையிலும் நேரடியாக பள்ளிவாசல் கட்டிட நிதிக்காக பொருளாதார உதவியினை அதன் பொருளாதரத்திலிருந்து வழங்காது. உறுப்பினர்கள் தங்களின் சொந்த முயற்சியில் தனியாகவோ அலல்து கூட்டாகவோ நேரடியாக நிதி திரட்டுவதில் AAF எவ்வகையிலும் தலையிடாது.

14. AAF ஏழைக் குமர்களுக்கு அல்லது திருமண நிதி உதவிகள் செய்யாது.

15. அதிரை அல்லாத சகோதரர்கள் கூட்டமைப்பில் இணைந்து செயல்படலாம், அவர்கள் அமெரிக்காவில் அதிரையர்களுக்கு என்ன சலுகைகளோ அவையனைத்தும் பெறுவார்கள். ஆனால், அவர்களின் சொந்த ஊர்களுக்கு அந்த உதவி நீட்டிக்கப்படமாட்டாது.

16. கூட்டமைப்பின் நிகழ்வுகளை யாரும் முன் அனுமதியின்றி நேரடியாக மீடியாவிற்கு அனுப்பக்கூடாது அல்லது மின்னஞ்சல் பகிர்வுகள் செய்யக்கூடாது.

17. இறைவன் நாடினால், ஒவ்வொரு வருடமும் (முஹர்ரம் - துல்ஹஜ்) இஸ்லாமிய கால அட்டவணைப்படி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்


நிழ்வின் நிரலாக:- Meeting minutes:

நிகழ்வு சரியாக லுஹர் தொழுகைக்கு பின்னர் துவங்கியது. அனைவருக்கும் கோழி பிரியானி மற்றும் தந்தூர் கறி (ஃப்ரிமோண்ட்லிருந்து ) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜசாகல்லாஹு கைரன்!

தகவல் : இக்பால் M.ஸாலிஹ்

லக்கேஜும் நானும் ! 50 வது பதிவு ! 37

அதிரைநிருபர் பதிப்பகம் | திங்கள், அக்டோபர் 29, 2012 | , , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் 

அதிரைநிருபர் வலைத்தளம் பலரின் வாழ்த்துகளுடன் சிறப்புடன் வளர்ந்தோங்கி வருகிறது. இதன் தொடக்க  காலத்திலிருந்து இந்த தளத்துடன் நான் கைகோர்த்து வருபவன் என்கிற உரிமையில் மட்டுமல்ல - இந்தப் பதிவு அதிரைநிருபர் தளத்தில் முத்தாய்ப்பாக எனது ஐம்பதாவது பதிவு என்கிற முறையில் மிகவும் சந்தோஷப் படுகிறேன். 

அரை நூறு என்பது அனைவரின் வாழ்விலும் ஒரு மறக்க முடியாத மைல்கல். இந்த தருணம் என்னைப் பொருத்தவரை மகிழ்வான தருணம். இந்த மகிழ்ச்சியை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வது இன்னும் மகிழ்வான தருணமாக எனக்குள் உணர்கிறேன். 

ஒரு புகைப்படக் கலைஞனாக ஊடகத்துறையில் ஊடுருவிய நான் பல்வேறு தருணங்களில்,  பல்வகையான காட்சிகளை எனது பேசும்படத்தின் மூலம் காட்சிப் படுத்திக் காட்டி இருக்கிறேன். 

நமது பிறப்பிடமான அதிரை, அது குற்றாலமோ, கொடைக்கானலோ அல்ல. ஆனாலும் அதிரையிலும் குளுமை உண்டு என்று பலமுறை காட்டிய ஆத்ம சந்தோசம் எனக்குண்டு.

அதேபோல் தமிழகம் உட்பட நாட்டின், உலகின் பலபகுதிகளை சுட்டிக்காட்ட - சுட்டுக்காட்டிய உள்ளார்ந்த ஆத்ம திரும்ப்தியும் எனக்குண்டு.

பழங்களை, பறவைகளை, ஊற்று நீரை, ஓடும் ரயிலை, உப்பலங்களை, ஊற்று நீரை,  தென்னந் தோப்புகளை, தெருக்களை, மீன்பிடிக் காட்சிகளை, மிதக்கும் படகுகளை, சுட்ட நண்டுகளை, சூடு மாறாத கோழிகளை இப்படி பலவற்றை படம் பிடித்து  எனது நாற்பத்தி ஒன்பது பதிவுகளை அலங்கரித்து இருக்கிறேன். 

அத்துடன் அவ்வப்போது எனது சிற்றறிவுக்கு எட்டிய சில கருத்துக்களை கட்டுரைகளாகவும் பகிர்ந்து இருக்கிறேன். நான் படிக்க நேர்ந்த சில அறிவியல் ஆக்கங்களுக்கு என் பாணியில் உங்கள் அனைவர் கவனத்துக்கும் தந்து மகிழ்வித்தும், எச்சரித்தும் இருக்கிறேன். பகிர்ந்து கொள்ளப்பட்ட இன்பம் இரட்டிப்பு ஆகுமென்பதை அறிந்தவனாகையால் நான் சந்திக்க நேர்ந்த நகைச்சுவையான நிகழ்வுகளை பகிர்ந்து இருக்கிறேன். 

இத்துடன் ஐம்பது பதிவுகளும் அரங்கேற உறுதுணையாக இருந்த வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். எனக்கு உறுதுணையாக இருந்த அதிரைநிருபரின் நெறியாளர், நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர் குழுவினருக்கும் என் ஆக்கங்களுக்கும் பேசும் படங்களுக்கும் பின்னுட்டமிட்டு என்னை உசுப்பேத்திய அனைவருக்கும் நான் மிகவும் கடமைப்பட்டு இருக்கிறேன். பல கவிஞர்கள், அறிஞர்கள் கோலோச்சும் இந்த தளம் மென்மேலும் வளர்ந்து சமுதாயப் பனியாற்ற துஆச்செய்தவனாக எனது ஐம்பதாவது பதிவை இங்கே பதிவு செய்கிறேன் இன்ஷா அல்லாஹ் !


லக்கேஜும் நானும் ! 50 வது பதிவு !

விடுமுறை நாட்கள் ஓடிய ஓட்டம் எந்தப்பக்கம் என்று திருப்பிப் பார்க்கும் முன்னறே எங்கள் விடுமுறையும் நிறைவுக்கு வரும் நாளும் நெருங்கியது. அதுவும் சவூதிக்கு என்றது எடுத்து செல்ல சாமான்களும் கூடியது 26 ஆகஸ்ட் பகல் திருச்சியிலிருந்து கொழும்பு வழியாக தமாமுக்கு விமான டிக்கெட் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்ததை உறுதி செய்து கொண்டு, அன்று இரவு சாமான்களை எடை போட்டு பார்த்ததில்  மொத்தம் 70  கிலோ இருந்தது ஏர்-லங்காவில் 35 கிலோ தான் அனுமதி பெட்டி கட்டும்போதே தலை சுத்தி வாந்தி  மயக்கம்  எல்லாம் சேர்ந்தாற் போல் வந்தது.  ஒரு குருட்டு கணக்கில் அனைத்தையும் எடுத்துக்கொண்டு ஏர்போர்ட் போவது என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற, இரவே அனைத்தையும் சாமான்களையும் ரெடி செய்து வைத்து விட்டேன் .

வாடகைகார் காரரிடம்  காலை  பத்து மணிக்கு வந்துவிட சொல்லி விட்டேன் அப்போ தானே  பத்தரைக்காவது வருவார் என்ற எண்ணத்தில். ஆனால் மனுஷன் சரிய பத்துமணிகெல்லாம் வீட்டிற்கு  வந்து விட்டார் வந்ததும் வராததுமா ஏம்பா “நீ பொறபுட்டு போற ஆளா தெரியலையே” என்று குதர்க்கமா பேசி லக்கேஜ் டென்சன் பத்தாதற்கு இவரும் BP (!!?)யை ஏற்றிவிட்டார் அப்போதுதான் விளங்கியது சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டது 

அனைத்து சாமான்களையும் எடுத்துக்கொண்டு (அள்ளிக்கொண்டு) அரக்க பரக்க காரில் ஏறி அமர்ந்ததும்  கார் புறப்பட்டது புறப்பட்ட சிறிது நேரத்தில் நமக்கு வியர்த்து கொட்ட ஆரம்பித்தது.

டிரைவரிடம் “காகா AC யை கொஞ்சம் போடுங்களேன்” என்றதும் 

அவர் “A /C போட்டால் வாடகை கூடுமே” என்ற தத்துவத்தை உதிர்த்தார்.

“வாடகை கூட தாரேன் முதலில் A/C யை போடுங்கள்” என்றேன்.

அதற்குள் பெட்ரோல் பம்ப் வந்தது  டிசல் போட வண்டியை நிறுத்தினார். நம் ஊரில் காரும் சரி ஆட்டோவும் சரி வாடகைக்கு எடுத்துப் போனால் போகும் போதுதான் எரிபொருள் நிரப்புகின்றனர் முன்பே  யாரும் எரிபொருள் நிரப்பி வைப்பதில்லை அந்த பெட்ரோல் பங்க் போற வரைதான் எரிபொருள் வைத்துள்ளனர்.


வாடகை வாகனங்களை அவசரத்திற்குத்தான் நாம் பயன்படுத்துகிறோம். ஆனால், நம் ஊரை பொறுத்தவரை பாம்பு கடித்து சாகும் நிலையில் உள்ளவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து போனால் கூட வாகன ஓட்டுனர்கள் பெட்ரோல் பங்க்  போய் பெட்ரோல் / டிசல் போட்டுக் கொண்டுதான் ஆஸ்பத்திரிகே போவார்கள்!!

சரி விசயத்திற்கு வருவோம் கார் டிசல் போட்டுக் கொண்டு திருச்சி நோக்கி புறப்பட்டது A/C போடுவதும் அமத்துவதுமாக காரை ஓட்டிக் கொண்டு வந்தார். செல்லும் வழியில் மாடு ஒன்று குறுக்கே புகுந்தது. என்னுடன் துணைக்கு வந்த நாண்பர் “மாடு காக்கா” என்று சத்தம் போட்டதும்  ‘பிரேக்’ அடித்து வண்டியை நிறுத்தி மாடு போன பின்பு வண்டியை எடுத்தார் "பகலில் பசு மாடு தெரியாதவருக்கு இரவில் எப்படித்தான் எருமை மாடு தெரியப் போவுதோ"  ஒருவழியாக திருச்சி ஏர்போர்ட் வந்து சேர்த்தார். 

ஏர்போர்ட் உள்ளே போவதற்கு சாமான்களை சிறிய தள்ளு வண்டியில் ஏற்றி கொண்டு சாமான்கள் இல்லாமல் யாரும் தம்மாம் போகிறார்களா என்று தேடியதில் ஒருவர் சிக்கினார், இல்லை இல்லை நாம் அவரிடம் சிக்கினோம். லகேஜ் இல்லாதவரிடம் சலாம் சொல்லி நம் லகேஜ் விவரம் சொன்னதும் உடன் சரி சொன்னவர் ‘ரூபாய் இரண்டாயிரம் பணம் வேண்டும்; என்று பேரம் பேச ஆரம்பித்தார். 

உடன் வந்த நண்பர்கள் அவரிடன் ஒருவாறாக பேசி ஆயிரத்திற்கு ஒப்புக் கொண்டார் பணத்தை கையில் வாங்கி பக்கத்தில் நின்ற அவர் மனைவி வசம் கொடுத்தார் மனைவிக்கு கணவரை பிரியும் சோகமெல்லாம் மறந்து பணம் முகத்தில் மலர்ச்சியை ஏற்ப்படுத்தியது. நமது லகேஜை  வாங்கிக் கொண்ட அவரின் விமான டிக்கெட்டை வாங்கி பார்த்தால் திருச்சியில் இருந்து அவருக்கு 4:30க்கு  தான் மிஹென் லங்கா  விமானம். நமக்கு 3:30க்கு ஸ்ரீலங்கன் விமானம் ஆனால் இருவருக்கும் கொழும்பில் இருந்து மாலை 6:50 மணிக்கு ஒரே விமானம் தான்.

நம் லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு போர்டிங் வேலை அனைத்தையும் முடித்துவிட்டு விமானத்தில் அமர்ந்ததும் விமானம் புறப்பட்டு மாலை நான்கு முப்பது மணிகெல்லாம் கொழும்பு ஏர்போர்ட் வந்தடைந்தோம். நம் லக்கேஜ் கொண்டு வருபரின் விமானம் ஐந்து முப்பதுக்கெல்லாம் கொழும்பு  வந்து இறங்கியது கேட் நம்பர் எட்டு தமாம் போவதற்கான வாயில் நாம் காத்திருந்தும் நாம் சாமான் கொடுத்தவர்  வந்த பாடில்லை விமானம் புறப்படுவதற்கான நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது.ஆகா இதற்கு  மேல் தாமதித்தால் சரியா வராது என்று கொழும்பு ஏர்போர்ட்டில் லகேஜ் கொடுத்தவரை தேட ஆரம்பித்தேன் ஆள் கிடைக்கவில்லை ஆனால் அங்கு ஸ்ரீலங்கன் ஆபீஸ் வாசலில் ஒரு கும்பல் ஆக்ரோசமாக ‘சப்தம்’ போட்டு  கொண்டிருந்தது அங்கு சென்று பார்த்ததில் நம் லகேஜ் ஆளும் நின்றார் விவரம் கேட்டதற்கு கொழும்பு தமாம் விமானத்தில் இவருக்கும்  இன்னும் ஒரு இருபது பேருக்கும் இடம் இல்லையாம் இரண்டு நாள் தங்கி மூன்றாவது நாள் ரியாத் ஏர்போர்ட்டிற்கு தான் அனுப்பி வைப்பார்களாம் என்றார்.

இதற்கிடையே விமான ஊழியர்கள் இந்த இருபது பேருக்கும் அடுத்த முறை போக வர விமான டிக்கெட் இலவசம் என்று சொல்லி ஒரு டிக்கெட் பிட்டை போட்டதால் நாம் லகேஜ் கொடுத்த ஆள் மிக கூலா சொன்னார் “நான் ரியாத் வந்து பிறகு தம்மாம் வருவேன் அப்போ உங்க லகேஜ்ஜை வந்து தந்து விடுகின்றேன்” என்றார். அடப்பாவி அதற்குள் அதன் உள்ளே இருக்கும்  இரண்டு ஆட்டுத் தலை அதன் கூட  நம் ஊர் ஆட்டு இறைச்சி, பிளாஸ்டிக் டப்பாவில் ஒரு பெரிய கொடுவா மீன் வெட்டியது, இது இரண்டையும் இரண்டு நாட்களுக்கு முன் ப்ரோசன் செய்து பாதுகாப்பாக வைத்து கொண்டு வந்தது எல்லாம் கூல் போய்  வீணாகி நாறிப்போய் விடுமே. குப்பென்று வேர்த்த்து உடனே அவர் கையில் இருந்த பாஸ்போர்ட் டிக்கெட் மற்றும் லக்கேஜ் போட்டதற்கு கொடுத்த பார்-கோடு டிக்கெட் அனைத்தையும் வாங்கிக் கொண்டு அங்கு பணியில் இருந்த ஆபீஸ்சரை நோக்கி போனேன் 

அவரிடம் போய் “இவர் என் பிரதர் இவருக்கு டிக்கெட் கன்ஃபாம் இல்லை இவரை நாளைக்கோ அல்லது நாளை மறுநாளோ  சவுதிக்கு அனுப்புங்கள். ஆனால், இவர் கொண்டு வந்த லகேஜ் மட்டும் நான் போகும் விமானத்தில் ஏற்றி விடுங்கள் காரணம் அதில் நிறைய ப்ரோசன் பொருட்கள் உள்ளது” என்றேன். அந்த ஆபீஸர் உடனே நம் கையில் இருந்த பார்-கோடு டிக்கட்டை அனைத்தையும் வாங்கி பார்த்து விட்டு இன்டெர் காமில் செய்தியை சொல்லிவிட்டு நீங்கள் புறப்படுங்கள் அந்த லக்கேஜ் தம்ம்முக்கு உங்கள் கூட வந்துவிடும் என்றார். 

அவருக்கு நன்றியை சொல்லி விட்டு தம்மாம் செல்லும் விமான கேட்டை நோக்கி தலை தெறிக்க ஓடினேன் (இதே போன்று ஒரு சம்பவம் நம் நாட்டு ஏர்போர்ட்டில் நடந்து இருந்தால் நிலைமை என்னவாகி இருக்கும்) நான் வந்து போர்டிங் போட்டு விட்டு அங்கிருந்த ஆபீஸ்சர் வசம் நமது லகேஜ் ஏறிவிட்டதா என்று பார்க்க சொன்னதும் அவர் உடனே பார்த்துவிட்டு லகேஜ் உங்களுடன்தான் வருகின்றது என்று சொன்னதும் தான் மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது காரணம் அந்த கொடுவா மீனும் நம் ஊர் ஆட்டுத்தலை மற்றும் இறைச்சியும்… ருசி கண்ட நாக்கு சும்மாவா விட்டுச்சு !?

Sஹமீது

பேராவூரணி பலாப்பழம்! 26

அதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, அக்டோபர் 28, 2012 | , ,

பேரன்பு மிக்க பெரியோர்களே, அருமைத் தாய்மார்களே, அன்புத் தோழர்களே, ரத்தத்தின் ரத்தங்களே, ஹீமோகுளோபின்களே, கிட்னிகளே, சட்னிகளே, உடன்பிறப்புகளே, ஒன்று விட்ட பங்காளிகளே, என் உயிரினும் மேலான எலும்பின் மஜ்ஜைகளே, உங்கள் அனைவர்மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

பேராவூரணி பலாப்பழம்!

பேராவூரணியும் சரி பலாப்பழமும் சரி மேடை போட்டுக் கூட்டம் கூட்டி பேசப்படும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததா என்கிற கேள்வி, சந்தேகம், ஆர்வம் உங்களிடையே எழலாம். இதை ஒரே மூச்சில் உங்களுக்குச் சொல்லி முடிக்க வேண்டியது என் கடமை, தார்மீக உரிமை, தயவு தாட்சண்யம் பார்க்காத பொறுப்பு!

எந்த ஒரு சாதாரண நிகழ்வும் சற்று மாறுபட்டு நடந்தால் அதில் சுவாரஸ்யம் கூடிப்போகும் அல்லவா? அதைப்போல் ஒரு நிகழ்வுதான் இதுவும். 

அது அந்த இடத்தில் இருக்கத் துவங்கி இரண்டு நாட்களாகிவிட்டிருந்தது.  ஒவ்வொரு முறை வீட்டின் கதவைக் திறக்கும்போதும் முதலில் கண்ணில் படுவது அதுதான்.  மனைவி மக்கள் வேறு விடுப்பில் ஊருக்குப் போயிருந்ததால் விளக்கை அனைத்த பின்பும் மெல்லிய இருளில் அது போர்த்திக்கொண்டிருப்பதுபோல் அமர்ந்திருக்கும்.  குர்பானி கொடுப்பதற்காக வாங்கிய ஆடு தனது காத்திருப்பு தினங்களில் உட்கார்ந்து அசை போட்டுக்கொண்டிருக்குமே அதைப்போல இருந்தது அது.  தலை,வால், கைகள், கால்கள் என்றெல்லாம் அமையப்பெறாமல் வயிறு மட்டுமே அமையப்பெற்ற மிருகம் படுத்துக் கிடப்பதுபோல் இருந்தது அது.  வழவழவென்ற தோலுமில்லாமல் முள்ளம் பன்றியின் கூரான முட்களுமில்லாமல் சொறசொறத்த தோலுடன் படுத்திருந்தது அது.

என்ன செய்வதென்று குழம்பிப்போன நான் இரண்டு மூன்று பாகிஸ்தானியரிடம் விசாரித்தேன்.  அவர்களுக்கு அதைப்பற்றி ஒன்றும் புரியவில்லை.  “அப்னா முலூக்மே அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது” என்று சொல்லிவிட்டார்கள். நான் படம் வரைந்து பாகங்களைக் குறித்தும் உஸ்கோ சமஜ்மே நஹீ ஆயா. ஒருநாள் காலை என் அலுவலக உதவியாளனிடம் விளக்கிச் சொன்னதும் அவன் சட்டென்று, “ஓ ச்சக்கபழம், அல்லே?” என்று கேட்டான்.  நான் கூகுளில் தேடி படம் காட்டினேன். “அதே, இது ச்சக்கபழம்தன்னே. ஞான் இங்கென முறிக்காம்” என்று சொடுக்குப் போட்டுக் காட்டினான். அவன் ச்சக்கப்பழம் என்று சொன்னது நம்மூர் பலாபழத்தைத்தான்.  பலாப்பழம் வெட்டி சுளை எடுப்பதில் மலையாளிகள் கில்லாடிகள். மட்டுமல்லாது சுளை, கொட்டை, சக்கை (ச்சிப்ஸ்) என்று அத்தனையும் சாப்பிடுவர்.

அந்தப் பலாப்பழம் என்னைப் பாடாய்ப் படுத்தியதின் பின்னணி நம்ம “சகோதரியே” அலாவுதீனிடம் இருந்து துவங்குகிறது.

“நான் ஒரு ஐந்து நாட்களுக்கு ஊருக்குப் போகிறேன். வரும்போது லக்கேஜ் ஏதும் இல்லாமல் சும்மாதான் வருவேன். வீட்டில் சொல்லி ஏதும் சாமான் இருந்தால் தயார் பண்ணி வைக்கச்சொல் வரும்போது கொண்டு வருகிறேன்” என்று சொல்லும்போது அவனுக்குத் தெரியாது ‘சொந்த செலவில் சூனியம் வைக்கிறோம்’ என்று.

என் வீட்டார் என்மேல் பாசத்தை மழையாகப் பொழிவதில்லை. மாறாக, இடி மின்னலோடு அடைமழையாகவோ சுனாமி தரத்திலோதான் பொழிவார்கள் என்பது நிறைய பேருக்குத் தெரியாது.  “அலாவுதீன் வருகிறான். அவனிடம் கொஞ்சம் பலாப்பழமும், பப்பாளிப்பழமும், முடிந்தால் வீட்டில் வளரும் சப்போட்டாவிலிருந்து கொஞ்சமும் அனுப்பி வையுங்கள்” என்று சொன்னேன்.  காலகாலமாக பினாங்குக் காரவுகளுக்கும் வளைகுடாவாசிகளுக்கும் உம்மாக்களும் மனைவியரும் அனுப்பும் பாரம்பரியப் பொருட்களான பனியான், நாநக்கத்தான், நார்த்தங்கா ஊருகாய், சீனிச்சேவு மற்றும் தம்ரூட் ஆகியவற்றை கட்டாயம் அனுப்ப வேண்டாம் என்று கண்டிப்போடு சொல்லி வைத்தேன்.

நான் கேட்ட நேரம், பலாப்பழ சீஸன் இல்லாத நேரம் என்பதை எந்த ச்சேனலும் கொசுறுச் செய்திகள் ஓடுமே அதில்கூட சொல்லவில்லை.  உம்மாவோ,  தன் பேத்தியை அப்பதான் மணந்த புதுமாப்பிள்ளையிடம், "உன் மாமாவுக்குப் பலாப்பழம் வேண்டுமாம். போய் வாங்கி வந்துவிடு" என்று அனுப்ப அவரும் காரை எடுத்துக்கொண்டு புலி வேட்டையைப்போல் பலா வேட்டையில் ரொம்ப சிரத்தை எடுத்துத் தேடியும் எங்கும் கிடைக்காததால் கடைசியில் பேராவூரணியில் இருப்பதாகக் கேள்விப்பட்டு அங்கு போய் வாங்கியிருக்கிறார்.

பத்து ரூபா கொடுத்தால் ஒரு உதாவக்கரை செய்தி அடங்கிய தினசரியின் கால்பக்கத்தில் இருபது சுளைகளை மடித்துத் தருவார்களே அப்படித்தான் எனக்கும் அனுப்பியிருப்பார்கள் என்று நீங்கள் கணித்தால் உங்களுக்கு நிச்சயம் ஃபெயில் மார்க்தான்.

விமான நிலையத்தில் அலாவுதீனை வரவேற்கச் சென்ற எனக்கு இருபது கிலோவுக்குமேலே எடைகொண்ட ஒரு பெட்டியை பாலித்தின் சட்டையெல்லாம் போட்டு, "இந்தா உன் வீட்டில் கொடுத்த சாமான்" என்று கொடுத்தபோது எனக்குச் சரியான குழப்பம். அந்தப் பெட்டி கனசெவ்வகமாகவோ கனசதுரமாகவோ இல்லாமல் இரண்டு பக்கங்களிலும் கர்ப்பவதிபோல் வயிறு பெருத்து இருந்தது.

"அப்டி என்னடா இருக்கு உள்ளே" என்று கேட்ட எனக்கு, "நீதானே பலாப்பழம் கேட்டியாம். திருச்சி ஏர்போர்ட்டில் அட்டைப்பெட்டியின் வடிவம் பார்த்து மிரண்டு க்ளிங் ராப் (cling wrap)பண்ணச் சொல்லி 300 ரூபாய் பிடுங்கிக்கொண்டான்" என்றான்.

"பலாச்சுளை ஒரு கிலோ அனுப்பினா போதாதா" என்று முனுமுனுத்துக்கொண்டே வீட்டுக்கு வந்து பெட்டியைப் பிரித்துப் பாசத்தை வெளியே எடுத்த எனக்கு  வெட்டுவது எப்படி என்று தெரியாததால் மேடைபோட்டு உங்கள்முன்னால் பேசும் அளவுக்கான மேற்கண்ட நிகழ்ச்சிகள் நடந்தேறின.

கத்தி கப்படாவோடு மலையாளி வீட்டுக்கு வந்து பலாப்பழத்தை  வெட்டி சுளைகளைத் தந்தாலும், சீஸன் இல்லாத நேரத்து பழமாதலால் சுளைகளைவிட சக்கைத்தான் அதிகமாக இருந்தது.

இதில் உச்சகட்டச் செய்தி என்னவெனில், பலாப்பழம் வெட்டித்தந்த நாள் முதல் வீட்டில் நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ரோபோ(ROBOT) போல தூக்கித்தூக்கித்தான் வைக்கப்பட வேண்டியிருந்தது. தரை முழுதும் அவ்வளவு பிசுபிசுப்பு. வெட்டிக்குளத்துச் சேற்றில் நடந்த அனுபவம் இருந்ததால் தப்பித்தோம் பிழைத்தோம் என்று வீட்டுக்குள் தாம் தூமென்று நடமாட முடிந்தது.

பாசத்துக்கு அளவில்லை என்பார்கள். ஆனா,  பலாப்பழ சைஸ்ல பாசம் எல்லாம் ரொம்ப ட்டூமச்!

அப்பாடா... சோடா ப்ளீஸ்!

Sabeer AbuShahruk

இரு கல்வியாளர்கள், ஒரு கலைக்களஞ்சியம், ஒரு கட்டுரையாளர் - கலந்துரையாடல் ! - 2 தொடர்கிறது 24

அதிரைநிருபர் பதிப்பகம் | சனி, அக்டோபர் 27, 2012 | , , ,

கலந்துரையாடல். – பகுதி ண்டு

ஜனாப்.  ஹாஜா முகைதீன் சார் அவர்கள் ஆங்கிலம் ஒரு பைத்தியக்காரர்களின்  மொழி ( English is the language of lunatics) என்று பெர்னாட்ஷா சொன்னார் . அந்த விபரம் உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டதும் அங்கிருந்த நானும் பேராசிரியரும்  அதை ஹாஜா முகைதீன் சார் அவர்கள் மூலமே தெரிந்து கொள்ள விரும்பினோம்.  நூர் முகமது அவர்கள் மட்டும்  ஒரு சிறிய நமுட்டுச் சிரிப்பு சிரித்தார். அந்த சிரிப்பின்  பொருள் நூர் முகமது அவர்களுக்கு இந்த விபரம் ஏற்கனவே தெரியுமென்பதன் அடையாளம்  ஆகும். 

“என்ன நூர் முகமது உங்களுக்குத் தெரியுமா “  இது நான்.

“தெரியும். ஹாஜா முகைதீன் சார் அவர்கள் எங்களுக்கு வகுப்பு எடுக்கும்போது சொல்லி இருககிறார்கள். ஆனாலும் அதிலும் ஒரு வியக்கத்தக்க செய்தி உண்டு அதை  பெர்னாட்ஷா  ஆங்கிலத்தைப் பற்றிச் சொன்ன விமர்சனத்துக்கான ஜஸ்டிபிகேசனுக்குப் பிறகு சொல்கிறேன்” என்றார்.  

நாங்கள் ஹாஜா முகைதீன் சார் அவர்களிடம் விபரம் கேட்டோம். 

ஹாஜா முகைதீன் சார் அவர்கள் கூறினார்கள். “ ஒரு முறை ஒரு அவையில் பெர்னாட்ஷா  ஆங்கிலத்தின் சில குழப்பமான உச்சரிப்புகளின் காரணமாக அதை ஒரு பைத்தியக்காரர்களின் மொழி என்று கூறினார் . உடனே பெரிய எதிர்ப்புக் கிளம்பியது.  பெர்னாட்ஷா  மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று பலர் கிளம்பினார்கள். இதற்கு பெர்னாட்ஷா  மன்னிப்புக் கேட்கமாட்டேன். ஆனால் நான் அப்படிக் கூறியதற்கான காரணத்தை வேண்டுமானால்  சொல்கிறேன். அதைக் கேட்ட பிறகு ஆங்கிலம் பைத்தியக்காரர்களின் மொழியா இல்லையா? என்பதை   நீங்களே சொல்லுங்கள்”  என்று  கூறிவிட்டு அவர் அப்படிக் கூறியதற்கான காரணத்தை அவர்களிடம் விளக்கினார்.  பெர்னாட்ஷாவை   எதிர்த்தவர்கள் வாயடைத்துப் போனார்கள்.  “ அப்படி அவர் என்ன நிரூபித்தார் “ என்று நான் கேட்டேன்.

உடனே அவர் ஒரு காகிதத்தை எடுத்து GHOTI   என்கிற ஆங்கில வார்த்தையை எழுதி இதைப்படி என்றார். நான் அதை இந்தியில் GH என்கிற உச்சரிப்பு  வரும் விதமாக கோட்டி என்று படித்தேன். எல்லோரும் அப்படித்தானே படித்திருக்க முடியும்?   ( நானும் இந்தி படித்து இருக்கிறேனாக்கும்!)

இதையேதான் தன்னிடம் எதிர்க் கேள்வி கேட்டவர்களிடம் பெர்னாட்ஷா   GHOTI என்று எழுதி  அவர்களைப் படிக்கச்சொன்னார். அவர்களும் நான் படித்தது போலவே  கோட்டி என்றே படித்தனர். ஆனால் பெர்னாட்ஷா  சொன்னாராம் இதன் உச்சரிப்பு FISH  என்று.  வந்தவர்களுக்கு மூளை குழம்பி விட்டது. இந்த பெர்னாட்ஷா  சரியான கிறுக்கராக இருப்பார்  போல் தெரிகிறது என்று தமக்குள்ளே சிரித்துக்கொண்டே, “ என்ன ஆச்சு உங்களுக்கு?” என்று கேட்டார்கள்.  அவர் விபரம் சொன்னார். 

ஆங்கிலத்தில் ROUGH என்கிற வார்த்தையில் கடைசி இரண்டு எழுத்துக்கள்  ஆகிய  GH க்கு உங்கள் ஆங்கிலம் தரும் உச்சரிப்பு  F , அதேபோல்  WOMEN என்கிற வார்த்தையில்  O என்கிற எழுத்து   I என்கிற உச்சரிப்பைத் தருகிறது அத்துடன்   STATION என்கிற வார்த்தையில் TI என்கிற எழுத்துக்கள் தரும் உச்சரிப்பு  SH என்பதாகும். அப்படிப் பார்த்தால் GHOTI என்பதை FISH  என்று படிக்கலாமா கூடாதா என்றும்,  இப்படி குழப்பம் ஏற்படுத்தும் மொழி பைத்தியக்கார மொழியா ? இல்லையா? என்று கேட்டாராம். 

மேலே கண்ட இந்த விளக்கத்தை ஜனாப். ஹாஜா முகைதீன் சார் அவர்கள் கூறியதும் , நூர் முகமது அவர்கள் இது தொடர்பான மற்றொரு செய்தியை கூறி  ஆச்சரியப்படுத்தினார்கள். அதாவது நூர் முகமது அவர்கள் காதிர் முகைதீன் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது 1972 –ஆம் வருடம்  ஹாஜா முகைதீன் சார் அவர்கள்  இந்தத்  தகவலை வகுப்பில்  கூறியதாகச் சொன்னார்கள். ஆனால் அதைவிட வியப்புக்குரியதாக  நூர் முகமது அவர்கள்  சொன்னது என்னவென்றால்   1972 ஆம் ஆண்டு ஹாஜா முகைதீன் சார் அவர்கள் வகுப்பில் சொன்ன இந்த செய்தி,  39 ஆண்டுகளுக்குப் பிறகு   2011 ஆம் ஆண்டு கனடா நாட்டிலிருந்து     International Language Institute, Canada, www.ili.ca என்கிற  வலை தளத்தில் வெளிவந்து ஆங்கில  மொழி தொடர்பான சிக்கல்கள் விவாதிக்கப்பட்டதாகச் சொல்லி ஆச்சரியப்பட்டார்கள். அப்படியென்றால் நாம் எவ்வளவு பேறு பெற்ற பெருமகன்களை நமது ஆசிரியர்களாகப் பெற்று இருந்தோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்த நேரம் நானும் நமது பள்ளியில் குறைந்த காலமே தமிழாசிரியராகப் பணியாற்றிய மதுக்கூரைச் சேர்ந்த  புலவர் திருஞன சம்பந்தம்  அவர்களை நினைவுறுத்திச் சொன்னேன்.  புலவர் அவர்கள் ஒரு தமிழாசிரியர் மட்டுமல்ல நல்ல கவிஞர்- சிந்தனையாளர். புரட்சிக் கவி பாரதிதாசனின் பாடல்களை அவர் வகுப்புகளில் விவரிக்கும் அழகே அழகு. திராவிடக் கழகத்திலும் – பெரியாரோடும்  ஈடுபாடுடையவர். தமிழ் மொழிக்கல்வி கற்க வேண்டுமென்று மாணவர்களிடம்  வகுப்புகளில் வலியுறுத்துவார். ஆங்கில மொழிக் கல்வியின் எதிர்ப்பாளர். அவர் கூறிய ஒரு சொற்றொடர் எனக்கு நினைவுக்கு வந்தது . அது கிட்டத்தட்ட ஷேக்ஸ்பியரின் ஆங்கிலம் பற்றிய கருத்துக்கு துணை நிற்பதாகும்.  அதாவது,  பி(P) யு டி  PUT  புட் என்றும்  பி( B) யு டி    BUT  பட் என்றும் கூறி நமை குழப்பும் மொழி தேவையா  என்று  கேட்பார்.  

புலவர் அவர்களை இன்னொரு சம்பவத்திலும் நான் நினைவு படுத்திச்சொன்னேன். அதற்கு முன் சில நிகழ்ச்சிகளை குறிப்பிடவேண்டும். 

காதிர் முகைதீன் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியாராக பணிக்கு சேரும் முன்பு ஹாஜா முகைதீன் சார் அவர்கள்    காதிர் முகைதீன் கல்லூரியில் நூலகராக வேலை பார்த்து வந்தார்கள். (அந்த நூலகத்தில்  இருந்த  நூல்களை கல்லூரி மாணவர்கள் படித்தார்களோ என்னவோ ஹாஜா முகைதீன் சார் அவர்கள் படித்து இருப்பார்கள்.) நான் குறிப்பிட விரும்பும் அந்த வருடம் பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள்  பள்ளியின் மாணவர் தலைவர் மற்றும் அன்றைய S.S.L.C என்கிற பள்ளியின் இறுதியாண்டு படிக்கும் மாணவர். பள்ளியில் வருடா வருடம் ஆண்டுவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும். அந்த ஆண்டு விழாக்களில்  மாணவர்கள் பங்கேற்று நடிக்கும் நாடகங்கள் அரங்கேற்றப்படுவது  வழக்கமாகும்.

அந்த வருடமும்  நாடக நிகழ்ச்சியுடன்   ஆண்டு விழாவை நடத்த வேண்டுமென்று அன்றைய தலைமை ஆசிரியர் மர்ஹூம் P.S.R. ஜெயினுலாபிதீன் அவர்கள்  பணித்து இருந்தார். நான் அப்போது ஒன்பதாம் வகுப்பு  மாணவன். ஆண்டு விழா நாடகத்துக்கான தேர்வு பற்றிய கலந்துரையாடலின் போது மதிப்பிற்குரிய வாவன்னா சார் அவர்கள், கல்லூரியில் நூலகராக இருக்கும் ஹாஜா முகைதீன் அவர்கள்  நிறைய நாடகங்கள் எழுதிவைத்து இருக்கிறார் என்று கூற ஜனாப். ஹனிபா சார் அவர்கள் அதை வழி மொழிந்தார். உடனே நானும், பேராசிரியர் அப்துல் காதர் அவர்களும் ஒரு சைக்கிளை எடுத்துக்கொண்டு  கல்லூரியின்  நூல் நிலையம் சென்று ஹாஜா முகைதீன் சார் அவர்களை சந்தித்து விபரம் சொன்னோம். உடனே அவர்கள் எங்களுக்காகத் தர சம்மதித்த நாடகம்தான் ஒட்டக்கூத்தர்.

இதில் ஓட்டக்கூத்தராக பேராசிரியர் அப்துல் காதர் அவர்களும், சீத்தலைச் சாத்தனாராக மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அப்துல் ரெஜாக் ( கனடா) அவர்களும், சோழ மன்னனாக நானும், எனக்கு  அரசியாக அப்துல் மஜீது என்கிற நண்பரும் (பெண்வேடமிட்டுத்தான் ) நடித்தோம். அந்த நாடகத்தில் ஒரு காட்சியில் ஒட்டக்கூத்தர்  மிகவும் மனமொடிந்து போயிருப்பார். அரசன் வேடமிட்ட நான் அவருக்கு ஆறுதல் கூறும்போது,

“நீங்கள் அரும்பைத் தொள்ளயிரம் அளித்த அறிஞராயிற்றே!  தக்கயாகப்பரணி தந்த செக்கர் வானத்து முழுமதியாயிற்றே” என்று      வசனம் பேச வேண்டும். (இந்த வசனங்கள் இன்று வரை எனக்கு மறக்கவில்லையே!) 

இந்த நாடகத்துக்கான ஒத்திகைகள் பலமுறைகள் நடந்தன. பள்ளி வேலை நேரம் முடிந்ததும், நாங்களும் , கல்லூரி நூல் நிலையத்திலிருந்து ஹாஜா முகைதீன் சார் அவர்களும்  இப்போது இ. சி. ஆர். சாலையில் இருக்கும் அப்போதைய பள்ளியின் நெசவுக் கூடத்தில் கூடி தினமும்  ஒத்திகைகள் பார்ப்போம்.  

பள்ளியின் ஆண்டுவிழா நடைபெறுவதற்காக குறிப்பிடப்பட்ட இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளியின் ஆசிரியர்கள்  அனைவரையும் அழைத்து ஒத்திகைகள் முழுமையடைந்த முழு நாடகத்தையும் அச்சுப் பிசகாமல் அரங்கேற்றிக் காட்டவேண்டுமென்று நாடகத்தின் இயக்குனர் ஹாஜா முகைதீன் சார்  அவர்கள் கூறினார்கள். அதன்படி பள்ளியில் அப்போது பணியில் இருந்த அனைத்து ஆசிரியர்களும் நெசவுக்கூடத்தில் கூட,   முழு வடிவம் பெற்ற நாடகத்தை அரங்கேற்றிக் காட்டினோம்.  நாடகத்தில் மேலே கண்ட வசனத்தை நான் பேசும்போது வழக்கு மன்றங்களில் ‘அப்ஜெக்க்ஷன் மை லார்ட்’  என்று ஒரு குரல் கேட்குமே அப்படி ஒரு உரத்த குரல் கேட்டது. குரல் எழுப்பியவர் நான் முன்னர் குறிப்பிட்ட மதுக்கூர் புலவர் திருஞனசம்பந்தம் அவர்கள் ஆவார். “இந்த வசனத்தில் வரும் செக்கர் வானத்து முழுமதி என்பதில் ‘செக்கர்’ என்கிற  வார்த்தை தமிழில் இல்லை. ‘செக்கர்’ என்பதற்கு பதில் ‘செவ்வானத்து  முழுமதி’ என்றுதான் இருக்க வேண்டும்   “ ஆகவே அதன்படி வசனத்தை மாறுங்கள் என்று கண்டிப்புடன்  சொன்னார். சொன்னவர் தமிழ் ஆசான். எழிதியவரும் தனது தமிழ் ஆற்றலில் சற்றும்  குறைந்தவர் அல்ல.  தக்கயாகப்பரணி என்பதற்கு எதுகை மோனை மாறாமலிருக்க செக்கர் வானம் என்று போட்டிருந்தாலும்  தமிழில் இல்லாத அந்த  வார்த்தையை தவிருங்கள் என்று  அறிவுரை தந்தார்  புலவர். உடனே ஹாஜா முகைதீன் சார் அவர்கள் அந்த இடத்திலேயே வசனத்தை மாற்றினார். “தக்கயாகப்பரணி தந்த சொக்கத்தங்கம் நீங்களாயிற்றே!” என்பதே  திருத்தப்பட்ட வசனம். கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடத்தப்பட்ட பள்ளியின் ஆண்டுவிழாவில் நாடகம் அரங்கேறியது.   இந்த விபரங்களை நான் நினைவுபடுத்திக் கூறியதும் ஹாஜா முகைதீன் சார் அவர்கள் மலைத்துப் போனார். 

இந்த சந்தர்ப்பத்தில் நான் ஹாஜா முகைதீன் சார் அவர்களிடமும், பேராசிரியர் அப்துல் காதர் அவர்களிடமும்     அதிரைநிருபரில் தொடர்ந்து கல்வி பற்றிய விழிப்புணர்வு தரும் ஆக்கங்களை அவர்கள் இருவரும்  தொடர்ந்து எழுதவேண்டுமென்று ஒரு கோரிக்கை வைத்தேன். இருவரும் ஏற்றனர். ஆனால் தட்டச்சு செய்ய முடியாது என்று சொன்னார்கள். நான்,  “ நீங்கள் எழுதி மட்டும் கொடுங்கள் மற்றவற்றை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்று சொன்னேன். விரைவில் எதிர்பாருங்கள். இறைவனருளால்  அதிரை நிருபரின் தரம் இன்னும் கூடப்போவதை பகிர்கிறேனே தவிர வேறொன்றுமில்லை. 

அடுத்து ஹாஜா  முகைதீன் சார் அவர்கள் என்னை நோக்கி “ நீ வாணியம்பாடியில் படிக்கும்போது பேராசிரியர் தி. மு. அ. காதர் அங்கு பணியாற்றினாரா ?“ என்று கேட்டார். நான்  “ ஆமாம் ! நாங்கள் நல்ல நண்பர்கள் போல் இருந்தோம். மூன்று ஆண்டுகள் தமிழ் மன்றத்தின் செயலராக நான்  தொடர்ந்து இருந்ததால் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுடனும் மற்ற தமிழ்      பேராசிரியர்களுடனும் நெருக்கமான உறவு இருந்தது”  என்று கூறினேன்.

“பேராசிரியர் தி .மு. அ. காதர் கவிதை எழுதுவாரா?” என்று கேட்டார்.  அவர் கவிதை    வகுப்புகளாகவே நடத்துவார் என்றும்    சில சூழ்நிலைகளைச் சொல்லி  அதற்கு கவிதையின் சிந்தனையில் மாணவர்களை பதில் சொல்லச் சொல்லும்  பழக்கம் அவருடையது. என அவருடன்  அனுபவத்தைச் சொன்னேன் .

ஒரு முறை வகுப்பில் ஒரு கேள்வி வைத்தார். வாழ்நாள் முழுதும்  மலடியாகவே  வாழ்ந்த ஒரு  பெண் உயிர் துறக்கும் வேளையில் ஒரு உயில் எழுதி வைக்கிறாள். அந்த உயிலில் என்ன எழுதுவாள்? இது கேள்வி. 

மாணவர்கள் சொதப்பினார்கள் என்றால் அப்படி சொதப்பினார்கள். இறுதியில் அவரே கரும்பலகையில் எழுதினார்  இப்படி

மலடியின் மரண ஓலை  
என் உடலை நான்   இறந்த பிறகு
 எரிக்க வேண்டாம் 
புதைத்துவிடுங்கள் 
அப்போதாவது 
என் வயிற்றில் 
புழு பூச்சி வைக்கட்டும். 

இப்படி சுருக்கமாக  கவிதை சிந்தனைகளை வளர்ப்பது பேராசிரியர் தி.மு. அ. காதர் அவர்களின் இயல்பு.  இன்னும் இது போல் எத்தனையோ. (விலை மகளின் கல்லறையில் என்ன எழுதலாம்? போன்றவை- இவை நேயர் விருப்பம் . கேட்டால் அடுத்துத் தருவேன். ) 

அடுத்து,  பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் தான் ஒரு முறை கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதைகளை புகழ்ந்து பேசிய ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட ஆரம்பித்தார். 

அந்த நிகழ்ச்சியும், கவிக்கோ அவர்களுடன் எனது அனுபவங்களும் அறிய காத்திருப்போமா?
இன்ஷா அல்லாஹ் தொடரும்.  
இபுராஹீம் அன்சாரி

அதிரையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை - 27.10.2012 - காணொளி updated 7

Unknown | சனி, அக்டோபர் 27, 2012 | , , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அதிரை ஈத் கமிட்டியால் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் மிகச் சிறப்பாக நடத்தி வரும் பெருநாள் திடல் தொழுகையை வழமைபோல் இவ்வருடமும் அறிவித்தபடி இன்று (27-10-2012) காலை ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை மேலத்தெரு சானவயல் திறந்த வெளி திடலில் சிறப்புடன் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

ஹஜ் பெருநாள் பேரூரை: சகோதரர் ஜமீல் முஹம்மது சாலிஹ்

அதன் காணொளி மற்றும் புகைப்பட அணிவகுப்பு உங்கள் பார்வைக்காக...              அதிரைநிருபர் குழு
நன்றி : AIM-UAE

ஹஜ் பெருநாள் 2012 சந்திப்பு - லண்டன் 12

அதிரைநிருபர் பதிப்பகம் | சனி, அக்டோபர் 27, 2012 | , , , ,


அதிரை சகோதரர்களின் ஹஜ் பெருநாள் சந்திப்பு உலகம் முழுவதும் நிகழ்ந்து வருவதை அதிரை வலைத்தளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருவதை அறிவோம், அவ்வகையில் லண்டன் அதிரை சகோதரர்களின் ஹஜ் பெருநாள் 2012 சந்திப்பு புகைப்பட காட்சிகள். 
 
தகவல் : M.H.ஜஹபர் சாதிக்


உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு