
அடை மழை
கூடைக்கு உள்ளே
அடை காக்கிறது கோழி:
நல்லோர் அடைகாக்கும்
நல்லெண்ணங்களைப் போல
கோழி இறக்கைகள்
பறக்க இயலாவிடினும்
பாதுகாக்கும்;
தேகம் பழுத்து
திண்ணையில் இருக்கும்
தாத்தா பாட்டியின்
அறிவுரை போல.
தட்டை மேல்
முட்டைகளை வைத்து
அடை காத்திருந்த கேள்விகளுக்கு
விடை யென
வெளி வருகின்றன குஞ்சுகள்;
பொறுத்தோருக்கு
பூமி பிளந்து விளையும்
விதைகளைப் போல
முட்டைகளின்மேல் கோழி
இருக்கிறது - ஆனால்
இறுக்குவ தில்லை;
பிள்ளைகள்மீதான
அன்னையின் அடியைப்போல
ஓட்டை முட்டி
உடைத்த பின்னரே
உலகை எட்டிப்
பார்க்கிறது குஞ்சு;

எதார்த்தத்தைச் சந்திக்கும்
மனிதனைப்போல
முட்டி மோதாமலும்
தட்டிக் கேட்காமலும்
முடங்கிப் போகும் மனிதர்கள்
உள்ளேயே அடங்கி
கூமுட்டையாய் -நிலை
குலைந்து போவர்
கூட்டை உடைக்க
குஞ்சுகளிடம்
கைகளுமில்லை
கடப்பாரையுமில்லை
அலகால் கொத்தி உடைக்கும்
அழகாய் கத்தி பிறக்கும்
இல்லாதவை எண்ணி
இயலாமல் கிடப்பதைவிட
இருப்பதை உபயோகித்து
இயன்றதை ஈட்டுவதே
இதிலுள்ள பாடம்!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்