பாலகர் சிலருக்கும்
பெண்டிர் பலருக்கும்
பிடித்தது மருதாணி..
(*) ஐவிரல் தூணுடை
மாடத்தின் கூடத்தில்
அழகுற இடப்படும்
கோலமே மருதாணி..
(*) எவரது வீட்டினில்
மருதாணி இருக்கிறதோ...
அவரது வீட்டுக்கே
அனைவரும் ஏகுவர்..
(*) பறித்தலும்... இலைதரம்
பிரித்தலும்.... முடிந்தபின்
அரைத்தலும்... என்பதில்
அத்துணை ஆனந்தம்.
(*) இலையுடன் புளியும்
இட்டு அரைப்பதும்
தைலமும் சிறிது
தெளித்து அரைப்பதுமாக..
(*) இங்ஙணம் பலவகை
இன்பங்கள் கொடுத்திடும்
அங்ஙணம் அழகாய்
அரைத்த மருதாணி..
(*) செடியினில் பறிப்பதும்
செறிவுடன் அரைப்பதும்
அடியோடு இல்லாது
அழிந்ததை காணீரோ..!!
(*) அங்காடி கடைகளில்
அழகிய கோன்களில்
மங்கையர் விரும்பிடும்
மருதாணி கிடைக்குமாம்..
(*) ஒவ்வாது சிலருக்கு..
உருப்படியாய் வந்தாலும்
வெவ்வேறு நிறமாகும்
வெவ்வேறு தோலுக்கு..
(*) ஆயத்த மருதாணி
அரிப்பினை உண்டாக்கும்..
தீபட்ட இடம்போல
தழும்பினை உருவாக்கும்..
(*) உடம்பினில் மாறுதல்
உருவாதல் ஒருரகம்..
ஊடக பக்கத்தில்
புரளியோ பலரகம்..
(*) மருத்துவ குணமுள்ள
மருதாணி எனும்பெயரில்
உறுத்திடும் ஒருவகை
பசையுள்ள கூம்புகளில்
(*) வண்ணம் கிடைத்திடலாம்
வகைவகையாய் வரைந்திடலாம்..
சின்ன துளைவழியே
பெரிய துயர்வரலாம்..
(*) உண்மை பலன்கிடைக்க
சிறிதாய் முயன்றிடுவோம்.
பண்டைய வழியினிலே
பறித்து அரைத்திடுவோம்.
(*) அரைத்த பசையெடுத்து
கூம்பு செய்திடுவோம்..
நினைத்த வடிவங்களை
நிரப்பி மகிழ்ந்திடுவோம்!!
~அதிரை என்.ஷஃபாத்