Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 4 11

அதிரைநிருபர் பதிப்பகம் | July 31, 2013 | , , , ,


அல்லாஹ்வின் திருப்பெயரால்..

முந்தைய அத்தியாயத்தில் ஈமானில் உறுதிமிக்க தியாகச் செம்மலாகத் திகழ்ந்த அன்னை ஹதீஜா (ரலி) அவர்களைப் பற்றிய வரலாற்றுச் சம்பவத்தைங்களைப் பார்த்தோம். அதுபோல் மற்றுமொரு ஓர் ஈமானியத் தாயின் உறுதியான உயிரோட்டமான ஈமானைப் பற்றிய ஒரு சில வரலாற்றுச் சம்பங்களைப் பார்ப்போம்.

நபி(ஸல்) அவர்களுக்கு முன்னால் நம்முடைய தலைச்சிறந்த மூதாதையர்களில் முன்னணியில் இருப்பவர்கள் தான் நம் அருமை நபி இபுறாஹீம்(அலை) அவர்கள். அவர்களின் மனைவி அன்னை ஹாஜரா(அலை) அவர்களின் வயது முதிர்ந்த பருவத்தில் அந்த தம்பதியர் அவர்கள் இருவருக்கும் இஸ்மாயில்(அலை) என்னும் அழகிய குழந்தை பிறக்கிறது. (மேலும் பார்க்க அல்குர்ஆன் 14:39) தவமாய்த் தவமிருந்து கிடைத்த அந்த பொக்கிஷமாக நபி இஸ்மாயில்(அலை), இவர்களின் வழித்தோன்றலில் வந்தவர்கள் தான் நம்முடைய ரஹ்மத்துலில் ஆலமீன் அண்ணல் நபி முஹம்மது (ஸல்) அவர்கள். நபி இபுறாஹீம் (அலை) அவர்களின் வழியைப் பின்பற்றுமாறு அல்லாஹ் நபி(ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடுகிறான் (மேலும் பார்க்க அல்குர்ஆன் 3:95)

நபி இபுறாஹீம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ்வின் கட்டளை வருகிறது, அன்னை ஹாஜரா (அலை) அவர்களையும், பால்குடிப் பச்சிளம் குழந்தை நபி இஸ்மாயில் (அலை) அவர்களையும் மக்காவின் மானுட புழக்கம் இல்லாத அந்த வெட்டவெளி பாலைவனத்தில் விட்டு விட்டுச் செல்லும்படி அல்லாஹ் கட்டளையிடுகிறன். நபி (இபுறாஹீம் அலை) அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்தவர்களாக எவ்வித மறுதலிப்பின்றி அன்றைய மக்கா பிரதேசத்தை விட்டு செல்ல ஆரம்பத்து விடுகிறார்கள். அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் நபி இபுராஹீம் (அலை) அவர்களிடம் கேட்கிறார்கள் “பச்சை பயிர்கள் அற்ற இந்த வரண்ட பூமியில் என்னை விட்டுவிட்டு எங்கே செல்கிறீர்கள்” இபுறாஹீம் அலை) அவர்களிடமிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. அன்னை ஹாஜரா (அலை) மீண்டும் “அல்லாஹ் கட்டளையிட்டானா?” என்றும் கேட்கிறார்கள், அதற்கு இபுறாஹீம் (அலை) அவர்கள் “ஆம் அல்லாஹ் தான் இப்படி விட்டு விட்டுப் போகச் சொன்னான்” என்று பதிலுரைத்தார்கள்.

உடனே அந்த ஈமானியத் தாயிடமிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் இஸ்லாமிய வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவைகள். “அப்படியானால் அல்லாஹ் எங்களை கை விடமாட்டான்” என்று தன்னுடைய ஈமானிய உறுதியை கியாம நாள் வரை மக்களும் சொல்லும் விதமாக அந்த தியாகப் பெண்மணி அன்னை ஹாஜரா(அலை) அவர்கள் சொன்னார்கள். பின்னர், அல்லாஹ்வே அன்னை ஹாஜராவுக்கும், நபி இஸ்மாயீலுக்கும் (அலை) உணவளித்தான். ஸஃபா-மர்வா மலைக் குன்றுகளுக்கு இடையே அன்னை ஹாஜரா அவர்கள் தண்ணீருக்காக அங்குமிங்கும் ஓடினார்கள், அல்லாஹ் ஜம்-ஜம் என்ற நீரூற்றை வரவைத்து, இவ்வுலக இறுதி நாள் வரை அன்னை ஹாஜராவின் ஈமானை ஞாபகப்படுத்தும் விதமாக செய்துள்ளான். (மேலும் பார்க்க புகாரி:3364 Volume :4 Book :60)

அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் அல்லாஹ் மேல் வைத்திருந்த நம்பிக்கை, அவர்களின் ஈமானிய உறுதியில் சிறிதளவேனும் நம்மிடம் ஈமானிய உறுதி அல்லாஹ் மேல் முழு நம்பிக்கையாக இருக்கிறதா என்பதை சிந்திக்க வேண்டும். 

அல்லாஹ்வின் தீனை எத்திவைக்க இஸ்லாமிய பிரச்சாரத்திற்காக ஒரு ஆண் வேறு ஊருக்கு செல்ல நினைத்தால், நம் தாய் தந்தையர்கள், மனைவிமார்களிடம் அன்னை ஹாஜரா ஈமானிய உறுதியுடன் சொன்னது போன்ற வார்த்தையை எதிர்ப்பார்க்க முடியுமா? நபி(ஸல்) அவர்களின் அருமை மனைவி அன்னை ஹதீஜா (ரலி) அவர்கள் சொன்ன ஆறுதல் வார்த்தைகளைப் போன்று நாம் செவியுற முடியுமா?

பொருளாதாரத்தில் இலட்சங்கள் செலவு செய்து கடமையான ஹஜ்ஜுக்கும், உம்ராவுக்கு செல்கிறோம், அங்கே ஜம்-ஜம் நீரையும் பருகுகிறோம் அதனை ஊரில் இருக்கும் சொந்தங்களோடு பகிர்ந்து கொள்ளவும் எடுத்து வருகிறோம், அந்த தருணத்தில் ஈமானிய தாய் அன்னை ஹாஜரா அவர்கள் செய்த தியாகத்தை எண்ணி அவர்கள் பட்ட கஷ்டத்திற்காக என்றைக்காவது நாம் கண்ணீர் சிந்தியிருப்போமா? தன்னுடைய ஈமானின் உறுதியோடு தன் மகனின் உயிரைக் காப்பாற்ற போராடிய போராட்டத்தால் கண்டெடுத்த ஜம்-ஜம் தண்ணீரை ஒரு புனித நீராக மட்டுமே காண்கிறோமே, அதை அல்லாஹ்வுக்காக செய்த தியாகத்தின் ஒரு அத்தாட்சியாக நாம் கண்டு அன்னை ஹாஜரா (அலை) அவர்களின் ஈமானிய உறுதியை நினைவு கூர்ந்து நம்முடைய ஈமானை  வலுப்படுத்த முயற்சித்திருப்போமா?

ஈமானைச் சோதனை செய்து பார்க்க நம்முடைய சமுகத்தின் முன்னோடி இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு மீண்டும் அல்லாஹ்வின் கட்டளை வருகிறது, தன்னுடைய மகனை அல்லாஹ்வுக்காக அறுத்து பலியிட வேண்டும் என்ற கட்டளை வருகிறது.

வயது முதிர்ந்த பருவத்தில் கிடைத்த பொக்கிஷம், நீண்ட காலம் தன் மனைவியையும், மகனையும் பிரிந்திருந்தார்கள் அல்லாஹ்வின் தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள். தன்னுடைய மகனை அறுத்து பலியிட தயாராகிறார்கள் தந்தை இப்றாஹீம் (அலை) அவர்கள், தன் அருமை மகன் இஸ்மாயிலிடம் கேட்கிறார்கள், “அல்லாஹ் உன்னை அறுத்து பலியிட கட்டையிட்டுள்ளான் என் அருமை மகனே உன்னுடைய நிலை என்ன?” அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் “எனதருமை தந்தையே அல்லாஹ் ஏவியதை நீங்கள் செய்யுங்கள், என்னை பொறுமைசாலியாக காண்பீர்கள்” என்று தன்னுடைய ஈமானின் உறுதியை உலகுக்கு காட்டிய முன்மாதிரி தியாகத்தின் சுடராகத் திகழ்ந்தார்கள் இஸ்மாயீல் (அலை) அவர்கள்.

நம்முடைய பிள்ளைகள் மார்க்கச் சூழல் கல்வியோடு உலக கல்வி படிக்க அரபு மதர்ஸாவோடு ஒன்றிணைந்த பள்ளிக் கூடத்திலோ அல்லது வெளியூரிலோ அல்லது வெளிநாட்டிலோ படிக்க வைக்க வேண்டும், குறைந்தபட்சம் இந்த தியாகத்தை செய்ய நாம் பல முறை யோசிக்கிறோம், மார்க்க கல்வியை கற்கப்போகும் அந்த பிள்ளையின் எதிர்காலம் என்னவாகும் என்கிற ஒருவித குழப்பத்தோடு தள்ளாடுகிறோம். ஆனால், யூத கிருஸ்தவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வித் திட்டமான இந்த அற்ப உலக கல்விக்காக கண்டம் விட்டு கண்டம் தாண்டி படிக்க வைக்க உடனே முடிவு செய்து தன் பிள்ளையின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று நம்பி அனுப்பி வைக்கிறோமே, மார்க்க கல்வியோடு உலக கல்வி பயிலப்போகும் நம் பிள்ளையின் எதிர்காலத்தை அல்லாஹ் சிறப்பாக்கி வைப்பான் என்ற நம்பிக்கை ஏன் நம்மிடன் உறுதியாக வர மறுக்கிறது?

எத்தனை ஆடுகள், மாடுகள் உணவுக்காவும், உலுஹியாவுக்காகவும் அறுத்திருப்போம்? எத்தனை விதமான பொட்டலங்களாக அந்த கறியினை பங்கு வைத்திருப்போம்? அவன் இத்தனை ஆடு / மாடு அறுத்திருக்கிறான், நாம் அதைவிட இரண்டு கூடுதலாக அறுக்க வேண்டும், அவன் மாடு கொடுக்கிறான், நான் ஒட்டகம் கொடுக்க வேண்டும் என்று மனிதர்களுக்காக போட்டி போடுகிறோமே, என்றைக்காவது அந்த தியாகங்கள் செய்த தாய் தந்தையரான இபுறாஹீம் (அலை) ஹாஜரா (அலை) அவர்களின் அருமை மகனார் இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் ஈமானிய உறுதியையும் அவர்கள் அல்லாஹ் மேல் வைத்திருந்த முழு நம்பிக்கையையும் ஞாபகப்படுத்திக் கொண்டு ஆடு / மாடு / ஒட்டகம் அறுத்து பங்கிட்டு வைத்திருக்கிறோமா? அதன் மூலம் நம்முடைய ஈமானை உறுதிப்படுத்த முயற்சி செய்திருப்போமா? பங்கு வைத்த கறியில் பற்றாக்குறை என்பதற்காக கடையில் கறி வாங்கி உலுஹிய்யா என்று அல்லாஹ்வை ஏமாற்றி மனிதர்களை திருப்திபடுத்தும் நிலையில் அல்லவா நம்முடைய ஈமான் பலவீனமாக உள்ளது என்பதை என்றைக்காவது சிந்தித்திருப்போமா?

அல்லாஹ்வின் கட்டளையை நம்பி ஈமானிய உறுதிமிக்க அன்னை ஹாஜரா (அலை) அவர்கள் போன்றவர்கள் வளர்ப்பில் தான் ஈமானில் உறுதிமிக்க பொறுமைசாலியான இஸ்மாயீல் (அலை) அவர்களை அல்லாஹ்வின் உதவியால் வளர்த்தெடுக்க முடிந்தது. அல்லாஹ்வின் கட்டளைப்படி நடக்கும் ஈமானில் உறுதிமிக்க தாய் தந்தையின் துஆ மற்றும் அவர்களின் வளர்ப்பால் வளர்ந்த பிள்ளைகள் பொறுமைசாலியாக இருந்து இஸ்லாத்திற்காக தியாகம் செய்யும் பிள்ளையாக அல்லாஹ்வின் உதவியால் வாழ முடியும், இதுவே நாம் இந்த அத்தியாயத்தில் பெறும் படிப்பினை.

தந்தை, தாய், மகன் ஆகியோரின் ஈமானில் நிலைத்த உறுதிக்கு முன்மாதிரியான இப்றாஹீம் (அலை), அன்னை ஹாஜரா (அலை) இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் வாழ்விலிருந்து படிப்பினை பெற்று நம்முடைய ஈமானை உறுதி படுத்த முயற்சி செய்வோம். நம் சந்ததியரை ஈமானிய உறுதியுடன் இறுதிநாள் வரை நிலைத்திருக்க பக்குவப்படுத்துவோம். அல்லாஹ் நம் எல்லோரையும் ஈமானில் உறுதி மிக்கவர்களாக ஆக்கி அருள்புரிவானாக.
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
M தாஜுதீன்

குறிப்பு : கட்டுரையில் மேலும் பார்க்க என்று அடைப்புக்குறிக்குள் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் எண்கள் மட்டும் இடப்பட்டிருக்கும் நோக்கம் நீங்களும் தேடியெடுத்து அல்குர்ஆனையும் ஹதீஸ் களையும் புரட்டிப் பார்த்து அறிய வேண்டும் என்பதற்காகவே.

பேசும்படம் :: பூக்களை கொல்லாதீர் ! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | July 30, 2013 | , , , ,

அதிரைநிருபரின் எழில் எடுத்துவைத்த கருத்தாடல் ஒன்றில், 'எழுதுவது ஒரு கலை, அதனை சிலர் செய்வதோ கொலை' என்றார். எழுதுவதில் மட்டுமா ? எடுக்கும் படங்களையும் கலை என்று சொல்லி 'கொல்லும்' படங்களையும் பார்க்கத்தான் செய்கிறோம் ! சற்றே இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் பூக்களை எடுத்து கவிஞர்களுக்கும், கட்டுரையாளார்களுக்கும், வாசகர்களுக்குக்கும் அவர்களின்  பார்வையோடு இருக்க விருந்தொன்று பகிர்ந்தளிக்கிறேன் இஃப்தாருக்குப் பின்னரே, இனி உங்கள் சாய்ஸ் !



காகிதப் பூக்களை கசக்கிப் போடவைக்கும் கொசுவங்களுடன், யார் வீட்டு முற்றத்திற்கு இப்படி வெளிச்சம் போடுகிறது... !


சொட்டும் துளிர் நீருடன் மொட்டும் கொள்ளும் திட்டு முட்டு !




இப்பொழுதெல்லாம் வண்டுகள் பூக்களை விட்டுவிட்டு தீன் எனும் தேன் தேடிச் சென்று விட்டன போலும் ஈக்கள்தான் பூக்களின் மீது அமர்ந்து நாங்களும் தேன் குடிப்போம்ல என்று பாவனை செய்கிறது !




தலையில் வைக்க தலைவியை தேடும் தலைவன் இருந்தது அந்தக்காலம் இப்போதெல்லாம் அப்படி இல்லைங்க ! மாறாக தலைவியின் காலில்தான் போடுகிறார்கள் !




எங்களை கிள்ளி கூஜா தேடிச் சொருகும் மனிதன் பின்னர் அதனை மட்டும் தூக்காமல் இருந்தால் சரி.



பூவடை சுட்டு நடுவில் வைத்தது போன்ற இந்த பூவின் சாடை எப்படி !?



பார்வையை சீவியெடுக்கும் பரவசமான பூவின் தோற்றம் !





பூவுக்குத் தெரியுமா மூன்றாம் கண் படம் பிடிப்பது !?




51:58   إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ
51:58. நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன்; பலம் மிக்கவன்; உறுதியானவன்.





 41:10   وَجَعَلَ فِيهَا رَوَاسِيَ مِن فَوْقِهَا وَبَارَكَ فِيهَا وَقَدَّرَ فِيهَا أَقْوَاتَهَا فِي أَرْبَعَةِ أَيَّامٍ سَوَاءً لِّلسَّائِلِينَ

41:10. அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான்; அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான்; இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான்; (இதைப் பற்றி) கேட்கக் கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்).









இனி உங்களனைவரின் ரசனைக்கு விட்டுவிடுகிறேன் இனி அதனை என்னைப் போன்றோரின் வாசிப்புக்கும் வாரி வழங்குங்கள்.

Sஹமீது

இறைவன் அருளிய இரவு! 26

அதிரைநிருபர் பதிப்பகம் | July 30, 2013 | , , , , ,


தெளிவான வேதம் தரைவந்த மாதம்
ஒளியான இரவில் இறைதந்த மார்க்கம்
பிரகாச இரவை பிசகாத அருளை
பிறைசார்ந்த உறவை படைத்திட்ட இறைவா

பாவமென அறிந்தும் பழகியன பொறுத்து
பாரமென அழுத்தும் தண்டனை அகற்ற
கடைப்பத்து நோன்பின் ஒற்றைப்படைப் பிறையில்
கிடைத்திட அருள்வாய் ‘லைலத்துல் கதிர்’

கைக்கெட்டும் தூரம் கவளமென சோறும்
கைப்பிடி குவளையில் கனிகளின் சாறும்
கண்படும் அருகில் கிடைத்திட்ட போதும்
கடன்பட்ட நாவோ இறைப்புகழ் ஓதும்

நிற்கின்ற நிலையில் நெடுநேரம் தொழுதோம்
நெற்றி நிலம்தொட்டு நின்றன்முன் விழுந்தோம்
பட்டதுய ரெல்லாம் போதுமென அழுதோம்
பகலிரவு பாராமல் பிரார்த்தித்தே எழுந்தோம்

கணக்கிட்டுக் கொடுத்த தர்மங்கள் அறிவாய்
மெனக்கெட்டு செய்த தியானங்கள் ஏற்பாய்
மனக்கட்டுக் கொண்டு துதித்தது உனையே
இனக்கட்டுச் சிறக்க இறைஞ்சுகிறோம் அல்லாஹ்

அன்பிலும் அருளிலும் அளவற்ற நீதான்
அகத்தையும் புறத்தையும் அறிந்திட்ட அல்லாஹ்
எண்ணமும் செயல்களும் செய்திட்டப் பாவம்
மன்னித்துக் காத்திடு மறைதந்த இறையே

இம்மையும் மறுமையும் அழகாக்கி தருவாய்
இழிவையும் அழிவையும் நிகழாது நீக்கு
உன்னையே துதிக்கிறோம் உளமாற கேட்கிறோம்
நரகத்து நெருப்பை எமைவிட்டு விலக்கு

ஏந்திடும் கரங்களில் ஈடேற்றம் இடுவாய்
ஏகனே எங்களைச் சுவர்க்கத்தில் விடுவாய்
நீர்நிலை நெளிந்தோடும்  நதிக்கரை தருவாய்
நின்னையே வணங்கினோம் எம்மைநீ காப்பாய்

நரகத்து நெருப்பிற்கு விறகாக்க வேண்டாம்
நாள்தோறும் வெந்தழியும் தண்டனை வேண்டாம்
சுவனத்துக் கதவுகள் திறக்கின்ற மாதம்
சுகமான சீவிதம் கிடைக்கட்டும் இறைவா

ஆயிரம் இரவுகளுக்கு மேலான இரவின்
அருள்மழை எம்மீது பொழியட்டும் அல்லாஹ்
முகமன் செய்தொழுகும் அதிகாலை வரையே
வானவர் உலவவே இறைஞ்சுகிறோம் அல்லாஹ்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

அதிரை பட்டுக்கோட்டை சாலையில் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல் ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | July 29, 2013 | , , , , ,

ஜூலை 29, பட்டுக்கோட்டையிலிருந்து  வந்து கொண்டிருந்த ஆட்டோவும் அதிரையிலிருந்து சென்ற SRM தனியார் பேருந்தும் அதிரை பட்டுக்கோட்டை சாலை காளிகோயில் அருகே  நேருக்கு நேர் மோதிக்கொண்டன  இதில் நிலை தடுமாறி சாலையோர மின்சார கம்பத்தில் மோதிய பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. பேருந்தில் பயணம் செய்த பலர் காயங்களுடன் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

விபத்துக்குள்ளான ஆட்டோ மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது வெளிநாட்டிலிருந்து இன்று பட்டுக்கோட்டை வந்து அங்கிருந்து ஆட்டோவில் அதிரைக்கு வந்து கொண்டிருக்கும்போது இந்த  விபத்து நேர்ந்துள்ளது ஆட்டோ டிரைவரும் அதில் பயணம் செய்தவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படிருக்கிறார்கள்.

காயம்பட்டவர்கள் விரைவில் குணமடையவும் இழப்பிலிருந்து அவர்கள் அனைவரும் மீளவும் பிரார்த்திப்போம் இன்ஷா அல்லாஹ் !






தகவல் : Sஹமீது

அதிரையில் (குடி) தண்ணீர் - பரிந்துரை ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | July 29, 2013 | , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும்.

அண்மைய அதிரை வலைப்பதிவுகளில் தண்ணீர்…தண்ணீரென குடிநீர்ப் பற்றாக்குறை, நிலத்தடி நீரை சேமிக்காததால் வறண்ட நமதூர் நீர்வளம் குறித்த தகவல்களைக் காண நேர்ந்தது.

ஊரில் மழையே இல்லாமல் குடிநீர்க்குழாயில் நீர் வராதிருந்தபோது "எனக்கு குளிக்கக் குடிநீர் கிடைக்கவில்லை" என கருத்திட்டதையும் கண்டு சிரிக்காமலிருக்க இயலவில்லை!

நேற்றைய அரை நாள் அதிரைப் பயணத்தின்போது, சேதுச்சாலையில் ஹாஜா நகர்/கடற்கரைத்தெரு துவக்கத்திற்கெதிரே பேரூராட்சி இலவசக் குடிநீர் குழாயிலிருந்து தண்ணீர் அருகிலுள்ள குட்டையில் விரயமாகும் காட்சி (காணொளியாக இணைப்பில்).

குறுகிய கால அவகாசமே இருந்ததால் உரிய தடுப்பேதும் செய்ய இயலவில்லை. சில நேரம் கழித்து இரண்டொரு பெண்கள் அங்கு தண்ணீர் சேகரிக்க குடங்களுடன் வந்து விட்டனர்!

இதுபோல் நீர் விரயமாவதைத் தடுக்க, நகரங்களில் உள்ளது போன்று இலவசக் குடிநீர்க் குழாய்களுக்கு பூட்டுப் போட்டு குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பொதுமக்கள் பயன்படுத்துமாறு சேவையாற்ற அந்தந்த பகுதி பேரூராட்சி உறுப்பினர்களையோ அல்லது குடிநீர் நிலையப் பணியாளர்களையோ அதிரை பேரூராட்சி நிர்வாகம் பணிக்கலாமே.

Shafi M.I.

அதிரையில் ரமளானும் அன்பளிப்பு எனும் சீதனங்களும் ! 9

அதிரைநிருபர் பதிப்பகம் | July 28, 2013 | , , , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

அன்பளிப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள் அது உங்களுக்கிடையே நெருக்கத்தை அதிகரிக்கும் - நபிமொழி !

நபிமொழி அதுதான் நம் அனைவருக்கும் நேரான வழி, மானுட வாழ்வியலை அர்த்தமுடன் எக்காலத்திற்கும் எடுத்துரைக்கும் சூளுரைகள் !

அல்ஹம்துலில்லாஹ் !

அதிரையைப் பொறுத்தமட்டில் வரதட்சனைகள் அங்கொன்றும் இங்கொன்றும் இருந்தாலும், ஆண்மக்களைப் பெற்றவர்கள் வீட்டில் வரதட்சனைகளாக கேட்டாலும் பெண்ணைப் பெற்றவர்கள் உறுதியாக தர இயலாது என்று மன உறுதியுடன் சொல்லும் நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், முற்றிலுமாக நின்றுவிட்டது என்று மார்த்தட்ட இயாலாவிடினும், பெரும்பாலும் குறைந்திருக்கிறது.

என்ன பயன் !?

தலைவாசலின் கதவுகள் அரைகுறையாக பூட்டப்பட்டுக் கொண்டிருக்கும்போது கொல்லைப்புற வாசல்களை திறந்து வைத்துக் கொண்டு இருக்கும் நம்மவர்களின் கலாச்சாரமாக மாறிவரும் வரதட்சனைக்கு மறுபதிப்பாக விஷேட காலங்களில் குறிப்பாக ரமாளன் காலங்களில் தலை தூக்கும் விரையங்களை அள்ளிக் கொட்டும் சம்பந்திபுற சாப்பாட்டு பரிமாற்றங்களே.

அன்பளிப்புகள் அவரவர்களுக்குள் பரிமாற்றமாக இருந்திருந்தால் விமர்சனங்களாக எடுத்துரைக்கப்பட மாட்டாது, ஆனால், வீட்டாரின் தேவைகளுக்கு மேல் பன்மடங்கு பெறப்படும் அன்பளிப்புகளால் அதனை ஏற்பாடு செய்பவர்களின் செலவினங்களை அதிகரிக்கும் இந்த விரையம் தேவைதானா என்று சிந்திக்க கடமை பட்டுள்ளோம்.

மாப்பிள்ளை, பெண் பேசி வைத்துவிட்டால் இருவீட்டாரின் நட்புறவுகள் வலுப்பெற பரஸ்பர பரிமாற்றங்கள் இருவீட்டாருக்குள் இருந்தால் விதிமீறல்கள் இருக்க வாய்ப்புகள் குறைவு, ஆனால் பகட்டுக்காக அடுத்தவர்களின் பார்வைக்காக, ஊர் மெச்ச வேண்டும் என்பதற்காக கேட்டுப் பெறுவது ஒரு வழக்கமாக இருப்பின், கேட்காமலே வாரிவழங்கும் வள்ளல்களாக மாறும் பெண் விட்டாரை என்னவென்று சொல்வது!?.

இயன்றவர்கள் செய்யும் செலவுகள், இயலாதவர்களையும் அசைத்துப் போடுகிறது பொருளாதார எல்லைதாண்டி செலவுகள் செய்து இப்படிச் செய்ய வேண்டும் என்று அப்படி என்னதான் அவசியம் !?

பகட்டுக்காகவும், பெருமைக்காகவும் பகிர்ந்து கொள்ளும் இத்தகைய அன்பளிப்புகள் அவசியம் தானா ?

மார்க்கம் அனுமதிக்கவில்லை என்று எல்லோருக்கும் தெரியும் ஏனோ அதனை துப்பட்டிக்குள் போர்த்தி மூடி வைத்துவிட்டு, சஹனுக்கு மற்றொரு சஹனை போர்வையாக போர்த்திச் செல்லும், கேட்டுப் பெறும், அல்லது கேட்காமல் அனுப்பி வைக்கப்படுவதை வாங்கும் / கொடுக்கும் அனைத்து சீதனங்களும் சீர்கேடுகளே.

சிந்தியுங்கள் ஈமானிய சகோதர சகோதரிகளே !

இஸ்லாம் அனுமதித்தவைகளோடு இல்லறம் சிறக்க வாழ்வோம் இன்ஷா அல்லாஹ் !

மேலும் பார்க்க : http://adirainirubar.blogspot.ae/2013/05/blog-post_27.html

நேரம் ஒதுக்கி இங்கே கீழே பதிக்கப்பட்டிருக்கும் காணொளியில் எடுத்து வைக்கப்படும் கருத்துரைகளை தயைகூர்ந்து கேட்டுப்பாருங்கள் இன்ஷா அல்லாஹ்.


அதிரைநிருபர் பதிப்பகம்

இப்போது எல்லோரும் எழுதலாம்... 67

ZAKIR HUSSAIN | July 28, 2013 | , , , , ,

வலைத்தளங்களில் எழுதுவது என்பது எல்லோராலும் முடியும் என்பதை தமிழ்கூறும் நல்லுலகுக்கு சொல்லவே இந்த நோக்கம். 

இது 70 களின் நடுவருடங்களாய் இருப்பதால் கொஞ்சம் நம் ஊரை பற்றி சொல்லும்போது கூடவே நிலக்கரி எல்.ஜி எஞ்சின், தலை நரைக்காத நம் ஆசிரியர்கள், டெலிவிசன் இல்லாத வீடுகள், ரேடியோவில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனத்தின் தமிழ்ச்சேவை 2. , பைப் வசதியில்லாததால் ஒரளவு சுத்தமான தெருக்கள். ஆட்டோ / கேபில் டி வி /  இல்லாத நம் ஊரை கற்பனையில் காண்க:

Riaz Ahamed
உன் கதை கிடைத்து விட்டால் வெளியிட்டு விடலாம் என்று அன்புடன் சொன்ன எங்கள் ரியாஸ். டேய் உன் கையெழுத்தை பார்த்தால் திட்டுவாங்க நானே உன் எழுத்தை பிரதி எடுக்கிறேன் என்று சொன்ன எங்கள் ஹாஜா இஸ்மாயில்.

உன் எழுத்தில் ஆங்கிலம் அதிகம் தெரிகிறது. தமிழில் எழுதித் தொலைடா என்று திட்டும் எங்கள் பாஸ் சபீர். எங்கள் பத்திரிக்கை வெளியிட முழுப் பொறுப்பும் ரியாஸ்தான் எடுத்துக் கொள்வான். சின்ன வயதிலிருந்தே ரியாஸிடம் பொறுப்பை   ஒப்படைத்து விட்டு ஊர்சுற்றுவதே எங்கள் வேலையாக இருந்தது. 

இப்படித்தான் தேன் துளி என்ற கையெழுத்து பத்திரிக்கை வெளியிட்டோம். [இதில் கையெழுத்தில் பிரதிகள் வேறு-நோ போட்டோஸ்டேட்]

எப்படியோ ஒருத்தனை ஒருத்தன் திட்டிக் கொண்டு பத்திரிகை வெளியிடுவதில் கண்ணும் கருத்துமாக இருப்போம். வரும் வருமானத்தில் பரோட்டாவும் டீயும் குடிக்கும் சந்தோசம் [பந்து விளையாட்டுக்குப் பிறகு] ஏதோ ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடும் சந்தோசம் இருக்கும்.

Sabeer Ahamed
பிறகு சரித்திர நாவல் எழுத எங்கள் அஸ்லம் மாமா வர இன்னும் களை கட்டியது. பிறகு இக்பால் [இக்பால் சாலிஹ் ] வெளியிட்ட தேடல் கவிதையுடனும், புதிய பாதையில் பயணித்தது. "என் ஆக்கத்தை அப்படியே போட்டு 'எடிட்' பன்றதுக்கு எனக்கு நீ வேலையே கொடுக்கல" என்று சொன்னான். பிறகு என் தம்பி நசீர் ஹுசேன் வெளியிட்ட நியூ இந்தியாவில் எழுதி ஸ்கூலில் ஆசிரியர்களிடம் அட்வைஸ் வாங்கியது எல்லாம் அப்படியே காற்றோடு கலந்து மறைந்து விட்டது. நியூ இந்தியாவில் என் நண்பன் சரபுதீன் நூஹ் உடைய தம்பி அஸ்ரப் பங்களிப்பும்  இருந்தது.   

Haja Ismail
இப்போது அந்த வேலைகள் ரியாஸ் இறைமார்க்கம்  என்ற வலைதளம் தொடங்கவும், ஹாஜா இஸ்மாயில் ' ஹாஜாவின் கைவண்ணம்" என்ற வலைத்தளம் தொடங்கவும் உதவியது என நினைக்கிறேன். ஹாஜா கைவண்ணம் என்று எழுதினாலும் பிளாக் இங்க்-தான் அதிகம் உபயோகிப்பான்.  நாங்கள் எல்லோரும் சேர்ந்து "தேன் துளி" என்று வலைத்தளம் உருவாக்கினோம், எங்களுக்கே பாஸ்வேர்ட் மறந்து போர அளவுக்கு நாங்கள் இப்போ அதை கண்டுக்கிறது இல்லே.

பின்னாளில் படிக்கும் பழக்கத்தை சின்ன வயதில் ஏற்படுத்திக் கொண்டதும், தொடர்ந்து ஏதாவது படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் சமயங்களில் எழுத உதவியாக இருக்கிறது.

நான் சமீப காலமாக சிலரின் கருத்துக்களை பார்த்து வருகிறேன். அவர்கள் கருத்துப் பகுதியுடன் நிற்பதில் எனக்கு உடன்பாடில்லை. அவர்களும் எழுதுவதற்கு நிறைய விசயம் வைத்து இருக்கிறார்கள். அவர்களில் என் கண்ணுக்கு பட்ட ஆட்கள். நண்பர் அப்துல்காதர், ZAEISA ,

எம். ஹெச். ஜே.,  மற்றும் கிரவுன் இருவரும் எழுதினாலும் எப்போதாவது வரும் பள்ளி மாணவர்கள் போல் இல்லாமல் ஆக்கங்கள் தருவதிலும் 'அடிக்கடி" இருக்க வேண்டுவது அவர்களின் திறமையே.

அதிரை மன்சூர் [நான் படிக்கும்போது படித்த நண்பர்] இவரிடமும் நிறைய விசயம் இருக்கிறது. சரியான ட்ராக்கில் இவரது எழுத்து தொடர்ந்து பதியப்படுமானால் ஒரு சிறந்த பங்களிப்பாளர் கிடைத்துவிடும்.

அடுத்து நமக்கு கிடைத்த பொக்கிஷம் எங்கள் மரியாதைக்குறிய எஸ். முஹம்மது ஃபாரூக் மாமா அவர்கள்

நமது வயது அவர்களின் அனுபவம்..இதைவிட எதுவும் எழுதத் தேவையில்லை. மலேசியாவில் அவர்கள் சொந்தமாக நடத்தியதே ஒரு பப்ளிசிங் கம்பெனி.

தனியாக ப்ளாக் வைத்திருப்பவர்களின் ஆக்கமும் நாம் சமயங்களில் அவர்களின் அனுமதியோடு வெளியிடலாம். எனக்கு தெரிந்து அஹமது இர்ஷாத், முஜீப், இவர்களின் ஆக்கங்களை நான் எப்போதும் படித்து வருகிறேன். இருவரிடமும் நல்ல ஜர்னலிசம் சென்ஸ் அதிகம் இருக்கிறது.

சரி... ஏன் எல்லோரையும் எழுதச் சொல்கிறேன். எழுத்து ஒரு வெளிப்படுத்தும் கலை. இதற்கு நீங்கள் வில்லியம் வேர்ட்ஸ் வொர்த் , கீட்ஸ், கம்ப ராமாயணம், மணிமேகலை , வலையாபதி, குண்டல கேசி... எந்த மண்ணும் படித்திருக்க தேவையில்லை. சொந்தமாக தபால் எழுதத் தெரிந்தாலே போதுமானது.  4 பேர் 30 வயதைத்தொட்டவர்கள் எழுதினால் ஏறக்குறைய 120 வருடத்தின் நிகழ்வுகளை எழுதப்போகிறீர்கள். இதை விட என்ன பெரிய விசயம் இருக்கப்போகிறது.

பொதுவாகவே எழுதுபவர்கள் அதிகம் வாசிப்பவர்களாக இருப்பது நல்லது. ஏனெனில் எப்படி மற்றவர்கள் எழுதுகிறார்கள் என்ற ஒரு அவதானம் கிடைக்க வாசிப்பே உதவி செய்யும்.

இப்போது சில தமிழ் வலைத்தளங்களை பார்த்தால் எந்த அளவு மெச்சூரிட்டி இல்லாமல் எழுதுகிறார்கள் என்பதும் புரியும். சிலர் ஜாதிச்சண்டை, ஒருத்தனை பத்து பேர் திட்டித்தீர்ப்பது எல்லாம் பார்க்கும்போது இவர்கள் பள்ளிக்கூடத்தில் படித்தது போல் தெரியவில்லை, ஏதோ பேட்டை ரவுடிகளின் "ரோட்டோரக்கல்வி" கற்றவர்கள் என்றுதான் எடுத்து கொள்ள முடியும்.

முக்கியமாக சினிமாவை பற்றி எழுதும் வலைத்தளங்களில் "பேட்டைத்தமிழ்" பின்னி விளையாடும். சில கவிதை வலைத்தளங்களில் சில விவாதங்கள் அழகாய் இருந்தாலும் ஒரு கவிஞரை மனம் திறந்து பாராட்டும் மற்றொரு கவிஞர் என்பது அறிதாகிவிட்டது. ஒரு கவிஞர் 'நிலா' என்று எழுதிவிட்டால் 'என்னுடைய நிலாவை காப்பி அடிச்சிட்டான்யா" என்று கமென்ட் போட சில கவிஞர்கள் இருக்கிறார்கள்.
 
முன்பு பள்ளியில் படிக்கும்போது தமிழ் - 2 பரீட்சை எழுதும் தெனாவெட்டு ஆர்ட்டிக்கிள் எழுதும்போது ரொம்பவும் உதவுகிறது.

வலைத்தளம் வைத்திருப்பவர்கள் சிறுகதைகளை வெளியிட யோசிக்கலாம். சமயங்களில் கதைகளின் மூலமும் ஒரு நல்ல கருத்தை சொல்ல முடியும்.

Shahul Hameed
உலகம் நவீனமயமாதலில் விவசாயத்தை இழந்து வரும் அபாய மணியை ஆனந்த விகடன் ஒரு 20 வருடத்துக்கு முன் ஒரு கதைப்போட்டியின் மூலம் உலகத்துக்கு சொன்னது [முதல் பரிசும் அந்த கதைக்குத்தான்]. கதையை கதையாக படித்ததால் இன்றைக்கு ஒரு படி அரிசிக்கு இவ்வளவு பெரிய விலை நாம் கொடுக்கிறோம்.

சம்பவங்களை விவரிக்கு முன் இப்போதைய நடைமுறையுடன் ஒன்றியிருப்பது நன்று. நடைமுறைக்கு ஒவ்வாத சென்டன்ஸை யாரும் கண்டு கொள்வதில்லை.

ஒரு இளைஞனை அறிமுகப்படுத்தும்போது ' கல்லூரி மாணவன் ராமு ஒரு "கட்டிளங்காளை" என்றெல்லாம் எழுதாதீர்கள்,  "எங்கே கழுத்திலெ கறுப்பு கயிற்றில் கட்டிய சங்கை காணவில்லை?'- என்று கமெண்ட் போட நிறைய பேர் இருக்கிறார்கள்.

அதே போல் 'காலம் உருண்டோடியது....' என்று எழுதினால் ' அப்படி எப்படி கரெக்டா சொல்றீங்க காலம் 'உருண்டையா" தான் இருந்ததுன்னு-  ஏன் அது ஹெக்ஷாகன் ஆக இருக்ககூடாது" என கேள்வி வரும்.

முதலில் எழுத நம்மைச் சுற்றி நடக்கும் இன்டர்ஸ்டிங் ஆன விசயங்களை எழுதுங்கள். ஒரு சின்ன விசயத்தை எப்படி ஒரு ஆர்டிக்கிள் ஆக எழுத முடியும் என்று யோசிக்க வேண்டாம். பல சின்ன விசயங்களை எழுதலாம் அல்லவா? . பல விசயங்கள் ஒரு ஆர்டிக்கிள் ஆக எழுதினாலும் வெளியிடுவோம். இப்போதைக்கு எழுதுவதற்கு பல விசயங்கள் இருக்கிறது.

இவ்வளவு பேர் வெளிநாட்டில் இருக்கிறீர்கள், நீங்கள் பல போராட்டங்களுக்கு இடையேதான் விசா கிடைத்து போயிருக்க வேண்டும். எப்படி நீங்கள் விடாமல் முன்னேறத் துடித்தீர்கள் என்று எழுதலாம். எனக்கு தெரிந்து சபீர் பம்பாயில் ஏறக்குறைய ஒரு தந்தூரி அடுப்பு மாதிரி புழுங்கும் ஒரு ரூமில் பல மாதம் தங்கியிருந்து, ஒரு டாய்லெட்டுக்கு காலையில் 20 பேருடன் க்யூவில் நின்று, பழக்கமில்லாத ஊரில் பணப்புழக்கம் இல்லாத சூழலில்தான் சவூதிக்கு முதலில் சென்றான். இதுபோல் எத்தனையோ பேரின் அனுபவம் இப்போது கேட்ஜெட்டில் கேம் விளையாடும் இளைஞி / இளைஞர்களுக்கு ஒரு முன்னேற்றத்திற்கான அடித்தளத்தை அறியத்தரலாம்.  ஊரில் நடந்த பல விசயங்கள் இப்போதைக்கு உள்ள சூழ்நிலையில் படிப்பை தரலாம்.
 
உங்கள் மனதை பாதித்த நெகிழ்ச்சியான விசயத்தை எழுதலாம். இப்படி நிறைய விசயங்கள் இருக்கிறது எழுத.

கூடிய விரைவில் எங்கள் மரியாதைக்குறிய எஸ்.முஹம்மது ஃபாரூக் மாமா தனது அனுபங்களை எழுத இருக்கிறார்கள். அவர்களின் ஆக்கத்திற்கு வரும் கமென்ட்ஸ் நிச்சயம் பெரியவர்கள் சொல்வதை கேட்கும் இளைஞர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தும்.

Iqbal Salih
இந்த ஆக்கத்தில் என் நண்பர்களை படத்துடன் உங்களுக்கு அறிமுகப் படுத்தியதற்கு நியாயமான காரணம் இருக்கிறது.

காலம் அதன் வழக்கத்தோடு ஓடிக் கொண்டிருந்தாலும் எங்களுக்குள் நாங்கள் சேமித்து வைத்த 'சிறுவர்களை' நாங்கள் இப்போது எங்களை சுற்றி வளர்ந்திருக்கும் பொறுப்புகளுக்கு பலி கொடுக்கவில்லை.

சாகுல் சின்ன வயதில் உருவாக்கிக் கொண்ட ஃபோட்டோகிராஃபி தான் இன்று அவர் எழுத காரணம். அதுபோல் எங்கள் ஹாஜா இஸ்மாயிலின் காமிக்ஸ் ஆர்ட் திறமை அவனை ஒரு மிகப்பெரிய வாசக வட்டத்தை உருவாக்க உதிவியிருக்கிறது. சபீரின் கவிதைகள் பாராட்டப்பட காரணம் அவன் வாழ்வில் சந்தித்த நிஜங்கள் அவனுக்கு கற்றுத்தந்த "ஞானிகளின் கல்வி".

என் நண்பன் இக்பால் சாலிஹ் உடைய மார்க்க அறிவின் விசாலம் அவன் தனது அத்தனை கஷ்டங்களிலும் கொஞ்சம் கூட அலுத்துக்கொள்ளாமல் மார்க்கத்தின் மீது அவன் செலுத்திய அசைக்க முடியாத ஈடுபாடு, அல்லது மார்க்கத்தின் மீது 'கல்வித்தாகம்"

உங்களுக்கு உள்ளேயும் பல திறமைகள் இருக்கும், அதை எழுத்தில் கொண்டு வர வேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள்.

ZAKIR HUSSAIN

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள்! - தொடர் - 25 36

அதிரைநிருபர் பதிப்பகம் | July 27, 2013 | , ,

தொடர் : இருபத்தி ஐந்து
இஸ்லாமியப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூண்கள் – ஜகாத்

“ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்று முழங்கப் பட்ட கோஷம் அண்மைக்கால அரசியலில் இடம்பெற்ற கோஷங்களில் புகழ்  பெற்ற ஒன்று. ஆனால் அவை எல்லாம் வெற்று கோஷத்துடன் நின்று விட்டன.  அல்லது நீர்க்குமிழிகள் போல் சில திட்டங்கள் சில வருடங்கள் மட்டுமே தோன்றி மறைந்துவிட்டன. அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மறைக்கப்பட்டுவிட்டன.  காலம் தோறும்  நின்று நிலைக்கும்படி ஆக்கபூர்வமாக எதுவும் செய்யப்படவில்லை.  ஆனால் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஏழையின் ஏற்றத்தை என்றுமே காணும் திட்டத்தை மனிதனின் வாழ்நாள் கடமையாக்கி மார்க்கத்தின் சட்டமாக்கி வைத்திருப்பது இஸ்லாம்

பொருளாதாரத்துடன் சம்பந்தப்பட்ட இஸ்லாத்தின் கோட்பாடுகளில், இஸ்லாத்தின் ஐந்து கட்டாயக் கடமைகளில் ஒன்றாக சேர்க்கப் பட்டு, உலகில் மனித இனம் வாழ்வதற்கு பொருளாதாரம் எவ்வளவு முக்கியம் என்பதை இறைவனே உலகுக்குப் பறைசாற்றும் ஒரு ஜீவாதாரக் கொள்கை ஜகாத். படைத்த இறைவனின் சாம்ராஜ்யத்தின் பொருளாதாரக் கொள்கைதான் ஜகாத். இஸ்லாமிய அமைச்சரவையின் பொருளாதார  திட்டக் கமிஷனின் தலைமை இடம் ஜகாத்துக்குத்தான்.  ஜகாத் என்பது பக்தர்கள் செலுத்தும் காணிக்கையல்ல; கடமை. ஜகாத் என்பது ஒரு சடங்கு அல்ல ; சட்டம்.

அவரவர் திறமைக்கேற்ப  பொருளீட்டும் சமுதாயத்தில் ஏற்ற தாழ்வை எடுத்தெறிந்து  பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமையை இக்கடமை பெற்று இருக்கிறது. பொருளாதாரத்தின் ஆணிவேரான  உற்பத்திப்  பெருக்கத்துக்கு ஜகாத்  காரணமாகிறது. அடுத்து,  செல்வம் ஒரே  இடத்தில் குவியாமல் செல்வத்தின் பகிர்வு பகிர்வு என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் மற்ற இசங்களுக்கு மத்தியில் ஆன்மீக முறையில் அடக்கமாக கத்தியின்றி இரத்தமின்றி அந்தப் பணியைச் செய்கிறது. மேலும் ஜகாத் பொருளாதாரத்தின் ஆதாரமான வேலை வாய்ப்புப் பெருக்கத்தையும் வாய்ப்புகளையும் அதிகமாக்குகிறது. உரிய முறையில் நிறைவேற்றப்படும்போது சமூகம் சார்ந்த பல்வேறு சவால்களைச் சமாளிக்கும் சாத்தியம் ஏற்படுகின்றது.

நவீன பொருளியல் கோட்பாடுகளைப் பற்றிப் படிக்கும் மாணவர்கள் LAW OF DIMINISHING MARGINAL UTILITY (குறைந்துசெல் பயன்பாட்டுவிதி) என்கிற கோட்பாட்டை விழுந்து விழுந்து படிப்பார்கள். இது வேறொன்றுமல்ல . ஒரு மனிதனின் பயன்பாட்டுக்கு உதவும் ஒரு பொருள் , அந்தப் பொருளின் அளவு அவனிடம் சேரச்சேர தொடக்கத்தில் அந்தப் பொருள் அவனிடம் சேரத்தொடங்கிய போது அந்தப் பொருள் அவனுக்குப் பயன்பட்டதாக அவன் உணர்ந்த அளவுக்குப் பயன்பாட்டை தொடர்ந்து சேரும் அதே பொருளால் அந்த மனிதனால்  உணர முடியாது என்பதே இந்த விதி. உதாரணமாக சொல்லப் போனால்  வேலைக்குச்சென்று வாங்கும் முதல் சம்பளத்தின் மீது இருந்த ஆர்வம், பயன்பாடு, தேவை, வேட்கை ஆகியவை முப்பது வருடங்கள் டேரா போட்டு சம்பாதித்து வாங்கும் கடைசி சம்பளத்தின் மீது மனிதனுக்கு இருக்காது.  இடைப்பட்ட காலத்தில் அவன் வாங்கிக் கொண்டிருக்கும் சம்பளத்தின் மீதும் ஆசை குறைந்துவிடும்.  பணம் சேரச்சேர மனதளவில் அதன் மதிப்பு இறங்கிக் கொண்டே வரும். முதல் சம்பளத்தின் தேடல் மற்றும் தேவைகளின் அளவு இருபதாவது  முப்பதாவது சம்பளத்தில் இருக்காமல் இறங்க ஆரம்பித்துவிடும்.

அடுத்து சொல்ல வருவதுதான் மிக முக்கியம்.

இப்படி உபரியாக மனிதனால் ஈட்டப்படும் அந்தப் பணம் அடுத்தவர்களின் தேவைக்கு அளிக்கப் பட்டால் அது அவர்களின் அத்தியாவசிய காரியங்களுக்குப் பயன்படும். அதாவது ஒருமனிதன் தனக்குப் போதும் என்கிற நிலையில் கருதும் பணம் மற்றவனுக்கு வாழ்வின் ஆதாரமாக ஆகும்.  இதுவே ஜகாத் என்கிற தாரக மந்திரத்தின் சூட்சமக் கயிறு. ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே ஜகாத் விதியாக்கப் பட்ட போது இன்றைக்கு நவீனப் பொருளாதாரத்தின் விதி இவ்வாறு இறைவனால் அன்றே உபதேசிக்கப் பட்டிருக்கிறது என்பதை உணர முடிகிறது.

தனது செல்வத்தில் நாற்பதில் ஒரு பங்கை எழைகளுக்கு வருடா வருடம் வரியாகப் பிரித்துக் கொடுத்துவிட வேண்டுமென்கிற சட்டம் சமுதாயத்தில் பாய்கிற போது கொடுப்பவருக்கும் துன்பமில்லை. அதைப் பெறுபவர் அந்த நிதியைக் கொண்டு தங்களின் ஏழ்மை வாழ்வை செம்மையாக்கிக் கொள்ள இயலும் என்பதே இதன் பொருளாதாரத் தத்துவம். ஒரு பணக்காரரின் வருமானத்திலிருந்து ஒரு சிறு அளவு,  ஜகாத்தாக ஏழைக்கு சென்று சேர்கிற பொழுது பணக்காரருக்கு ஏற்படும் இழப்பைவிட ஏழைக்குக் கிடைக்கும் இலாபமே அதிகமாகும். இதனால் ஒட்டுமொத்த சமுதாயத்தில் சமத்துவம்    சம்மணம்  போட்டு அமரும்.

ஜகாத் என்பது ஒரு பெரிய ஏரியின் வரப்புகள் நீர் மிகுதியால் உடைப்பெடுத்துக் கொள்ளாமல்  வெட்டிவிடப்பட்ட ஒரு சிறு வாய்க்கால். அதிலிருந்து ஏழைகளின் வயல்களை நோக்கி உற்பத்திக்கான நீர் ஓடிக்கொண்டே இருக்கும் . அதே நேரம் இறைவனின் அருள் என்கிற ரஹ்மத்தும், பரக்கத்தும் பெருமழையாய் பெய்து ஏரியை நிரப்பிக் கொண்டே இருக்கும். ஆண்டுதோறும் ஜகாத்  செலுத்தப் படவேண்டுமென்கிற  விதி  இந்த ஆன்மீகப் பணியின் மூலமான சமுதாய வளர்ச்சி   தொய்வில்லாமல் நடைபெற வழி வகுக்கிறது.  சொர்க்கத்தில் நமக்கென இடத்தைப் பதிவு செய்யும் நன்மைக் கட்டணமாக ஜகாத் இறைவனிடம் சென்று செயல்படுகிறது.

மனிதப்  பிறவியின் மாறுபட்ட மோகம், பொறாமை, கர்வம், அகம்பாவம் போன்ற கெட்ட இயல்புகளை  மாற்றும் மாபெரும் சக்தி ஜகாத்துக்கு இருக்கிறது.

‘ஆசைகளின் மூட்டை’ என வர்ணிக்கப் படும்  மனிதனிடம் இயல்பாகவே பொருளாதாரத்தில் மோகம் இருக்கின்றது. பொருளாதாரத்தைத் தேடி, திரட்டி அதைப் பார்த்து மகிழ்வடையும் மனநிலை காணப்படுகின்றது. தொடர்ந்து நியமப்படி ஜகாத்  வழங்கிவரும் ஒருவனிடம், பொருளாதாரத்தின் மீதான வெறித்தனம் தணிந்து அதிலே ஓரளவு தாராளத்தன்மை ஏற்படும். இது ஏற்பட்டு விட்டால் நியாயமான முறையில் பணம் திரட்டும் பக்குவம் ஏற்பட்டுவிடும். நீதியையும் நேர்மையையும் நெறிப்படுத்தும் மாபெரும் சக்தி பெற்றது ஜகாத்.

தான் தேடிய செல்வத்தை, தான் கூட அனுபவிக்காமல், அதனைப் பார்த்துப் பார்த்து ரசிக்கும் தன்மை பலரிடம் காணப்படுகின்றது. தனக்கே செலவழிக்காதவன் பிறருக்கு எப்படிக் கொடுப்பான்? இறைவனின் ஆணையை ஏற்று, இந்தக் கட்டாய தர்மத்தைச் செய்பவனிடம் கஞ்சத்தனம் விடுபட்டுவிடும். அதன் பின் அவன் தாராளத் தன்மையுடன் உபரியான தர்மங்களைச் செய்பவனாக மாறிவிடுவான். கஞ்சத்தனம் இஸ்லாத்தில் கண்டிக்கப்பட்ட குற்றமாகும்.

தனக்குக் கிடைத்தது அடுத்தவனுக்குக் கிடைத்து விடக்கூடாது, அல்லது அடுத்தவனுக்குக் கிடைத்தது அவனிடமிருந்து அழிந்துவிட வேண்டும்என்ற உணர்வே பொறாமையாகும்.  ஜகாத்  கொடுப்பவன் தன்னைப் போல் அடுத்தவனும் பொருளாதார முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்று விரும்புவதால் அவனிடமிருந்து இயல்பாகவே பொறாமைக் குணம் பாதியிலேயே கழன்றுபோய் விடுகிறது.  ஏழைகள்கூட செல்வந்தர்கள் மீது பொறாமை கொள்ளலாம். அதே செல்வந்தர்கள் ஜகாத்  மூலம் தமக்கு உதவும் போது தமக்கு உதவுபவர்கள் மீது அவர்களுக்கு பொறாமை ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே, ஜகாத் கொடுப்பவர், எடுப்பவர் இருவரிடமும் பொறாமை என்ற தீய குணம் ஏற்படுவதைத் தவிர்க்கின்றது.

சிலரிடம் பெருமை, கர்வம் என்ற தீய குணம் இருக்கலாம். தன்னைப் போல அடுத்தவனும் உயர்வடைவதை, கர்வம் கொண்டவன் ஏற்றுக்கொள்ள மாட்டான். ஆனால், ஜகாத்   செல்வந்தர்களிடம் இந்த கர்வ உணர்வை ஒழிக்கின்றது. ஏழைகளும் செல்வந்த நிலையை அடைவதை விரும்புபவனிடம் கர்வம் அற்றுப்போகும். பொது நல உணர்வு மேலோங்கும்.

பணம்படைத்தவர்களில் பலர்  சமூக உணர்வு அற்றவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் ஜகாத் வழங்குபவர்களாக மாறும் போது சமூகத்தில் நலிவடைந்தவர்களின் வாழ்க்கை நிலவரத்தைப் புரிந்துகொள்ளவும், அவர்கள் மீது அக்கறை  காட்டவும் வாய்ப்பு ஏற்படுகின்றது. இவர்கள் ஏழைகளின் மீது  அக்கறை செலுத்தும் போது,  இயல்பாக சமூக உணர்வு அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகின்றது. இவ்வாறு நோக்கும் போது ஜகாத் பல்வேறு விதத்திலும் மனித மனங்களைத் தூய்மைப்படுத்தி நல்ல மாற்றங்களை                       விளை விக்கின்றது.

உலக சரித்திரத்தில் பொருளாதார சித்தாந்தங்களில் இன்றுவரை பேசப்படும் ஒரு வார்த்தை வர்க்க பேதம் என்பதாகும். செல்வம் ஒரே இடத்தில் குவிவதால் ஒரு புறம்  பணக்கார வர்க்கமும் , அவர்களின் செல்வத்தின் குவியலுக்குக் காரணியாகத்  திகழ்கிற - காலத்துக்கும்  பஞ்ச்சையாக, பராரியாக யாரிடமும் எதுவும் கேட்கமுடியாத ஊமையாக  பாட்டாளி வர்க்கமும் அமைந்துவிட்டதால் - செல்வத்தைப் பகிர்வதற்கு ஆன்மீக ரீதியாக அன்பு முறையில் முறைகள் சொல்லப் படாததால் - வழிகள் வகுக்கப் படாததால் செங்குழம்பு இரத்தம் சிந்தப்  பட்ட  வரலாறுகளைப் படித்து இருக்கிறோம். அத்துடன் நேற்றைக்குப் பணக்காரன் இன்றைக்குப் பிச்சைக்காரன் ஆகும்படி அவனது செல்வங்கள் வன்முறையால் பிடுங்கப் படும் வரலாறுகளை ஜகாத் தடுத்து நிறுத்துகிறது. ஒரு ஆன்மீக உடன்பாட்டில் –இறையச்சத்தில்-  ஏழைகளுக்கு,  அவர்களுக்குரிய செல்வம் பணக்காரர்களால் பாசத்துடன் பந்திவைத்துப் பரிமாறப் படுகிறது.  அரசியல் சரித்திரத்தில் ஆன்மீக மேம்பாட்டில் அமைதியை  தழைக்கச் செய்யும் அருமருந்தே ஜகாத்.

இறைமறையிலும் நபி மொழியிலும் வலியுறுத்திக் கூறப்  படுகிற ஜகாத்துடன் நவீனப் பொருளாதாரத்தை ஒப்பிட்டுக் காட்டினால் ஜகாத்தின் சிறப்பு இன்னும் புலப்படும்.

இன்றைக்கும் வளரும் நாடான நமது இந்தியாவில் நக்சலைட்டுகள் என்றொரு இயக்கம் உருவாகி வெறியாட்டம் போடுவதன் பின்னணியில் வறுமையும் வேலை இல்லாத் திண்டாட்டமும் இருப்பதை யாரும் மறுக்க இயலாது. ஏழைகளின்பால்               இறக்கமற்றவர்களின் செல்வக் குவிப்பு - தனக்கே எல்லாம் வேண்டும் என்கிற சுயநலப் போக்கு  காடுகளில் மலைகளில் பல ஏழை இளைஞர்களை நெஞ்சில் பொறாமையுடனும்  கையில் துப்பாக்கிகளுடன் வன்முறை வெறியாட்டங்களுக்கு வித்திட்டு வைத்திருக்கிறது. பணக்காரர்கள் இரக்கமற்ற பாவிகளாக இருப்பதால் இல்லாதவர்களின் நெஞ்சில் அவர்களின் மேல் ஏற்படும் பொறாமைத் தீ  அமைதியான  வாழ்வுக்கு அங்கங்கே சாவுமணி அடித்துக் கொண்டே இருக்கிறது. ஜகாத்தின் சட்டங்கள் அமுலில் இருக்கும் நாடுகளில் - ஜகாத் வழங்கப் படும் சமுதாயத்தில் பணக்காரர்களின் மேல ஏழைகளுக்கு பொறாமைக்கு பதிலாக மரியாதை ஏற்படுகிறது என்பதே கண்கூடான காட்சி. ஜகாத் அரசாளும் பிரதேசங்களில் ஆண்டான் அடிமை வர்க்க பேதங்கள் அடிபட்டுப் போகின்றன. ஏழைகளையும் பணக்காரர்களாக்கும் இறைவனின் வித்தை இது . பணக்காரர்களை நன்மை செய்யத்தூண்டும் நற்பணி மன்றம் இது.

நவீனப் பொருளாதாரத்தில் வரிவிதிப்புக் கொள்கைகளை சில முறைகள் வரையறுக்கின்றன. இவற்றில் மிகவும் முக்கியமானது 

Keep it simple. The tax system should be as simple as possible, and should minimize gratuitous complexity. The cost of tax compliance is a real cost to society, and complex taxes create perverse incentives to shelter and disguise legitimately earned income.  என்பதாகும் . அதாவது, எந்த ஒரு வரியும் வசூலிப்பதற்கு இலகுவாகவும்  எளிதாகவும்  இருக்க வேண்டும் என்பதே இதன் சாராம்சம். 

இன்றைய அரசுகள் வசூலிக்கும் வரிகள் இந்தத்தன்மையைப்பெற்று  இருக்கின்றனவா என்றால் இல்லை என்ற சொல்ல நேரிடும். வரியை வசூலிக்க அந்த குறிப்பிட்ட வரியால் வரும் வருமானத்தைவிட அதிகம் செலவழிக்க வேண்டி இருக்கிறது. விற்பனை வரிச்சட்டம்- வருமானவரிச்சட்டம்- நிலவரிச்சட்டம்- உள்ளூராட்சிவரிச்சட்டம் –  என்பன போன்ற சட்டங்கள், அவற்றிற்கான தனித்தனி அலுவலகங்கள்- அவற்றிற்கான ஊழியர்கள் என்றெலாம் அளவிடமுடியாத அமைப்புகள் மற்றும் செலவுகளை மேற்கொண்டே அரசுகளால் வரிகளை வசூலிக்க முடிகிறது. இத்தனை ஏற்பாட்டுக்குப் பிறகும் கூட இவற்றில்  பல கள்ளக் கணக்குகள்,  தில்லுமுல்லுகள், செப்பிடுவித்தைகள்,  ஏமாற்றுகள்,  நிலுவைகள் என்று   பலதகிடுதத்தங்கள் வெளிப்படுகின்றன.

இந்தியாவில் வசூலிக்க முடியாத நிலுவையில் உள்ள  வருமான வரிமட்டும் ஒழுங்காக வசூலிக்கப் பட்டால் அதைவைத்து எதிர்காலத்தில் வரியே போடாமல் ஆள முடியுமென்று ஒரு ஆய்வு கூறுகிறது. பலருடைய வரி பாக்கிகளுக்காக அவர்களுடைய இருப்பிடம் உட்பட சொத்துக்கள் ஏலத்துக்கு விடப்படுகின்றன. இருக்கும்போது  நவாப்சாவாக இருந்தவன் இல்லாவிட்டால் பக்கீர்சாவாக ஆகிவிடுகிறான். வரியை  ஏய்ப்பதற்கு தகுந்தபடி கணக்கை சரிக்கட்டுவதற்கே தனித்திறமை பெற்ற ஆடிட்டர்கள் இருக்கிறார்கள். அரசை ஏமாற்றி பதுக்கப் பட்ட பணம் கள்ளப் பணமாக உருவெடுத்து மற்றொரு பொருளாதார சீர்கேட்டின் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. இவ்வளவுக்கும் காரணம் , வரி வசூலிக்கும் முறையும் சரியில்லாமல் இருப்பது மட்டுமல்ல வரிகளின் விகிதமும் உச்சாணியில் ஏறி , ஏமாற்றுவதை  தூண்டிவிடும்வகையில் அதிகமாக இருப்பதுதான்.  

இதற்கு மாறாக இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் ஜகாத் பிரதான  வரியாக விதிக்கப்படுவதாக நாம் கற்பனை பண்ணிப் பார்ப்போம்.  இறையச்சத்தின் அடிப்படையில் அமையும் அந்த சமுதாயத்தில் ஏமாற்று வேலைகளுக்கு வேலை இல்லை. சட்ட நடவடிக்கைகளுக்கு சாத்தியம் இல்லை. இருக்கும் சொத்தை ஏலம் விட அவசியம் இல்லை. தந்து தேவைகள் போக திரளும் செல்வத்தில் மட்டுமே செலுத்துபவர் தரும் சதவீதம் மிகவும் குறைவு என்பதால் செலுத்துபவர்களுக்கும் கஷ்டம் இல்லை; அரசுக்கு வருமானம் திட்டமிட்டபடி வந்து சேரும். ஜகாத் செலுத்துவதும் இறைவணக்கத்தின் ஒரு பகுதி என்று ஆகிவிடுவதால்  இன்முகத்துடன் எல்லோரும் அவரவர் வைத்திருக்கும் செல்வங்களுக்கு ஏற்றபடி தந்துவிடுவார்கள். இறையச்சத்தின் அடிப்படையில் கூடுதலான சதகா என்கிற தர்ம சிந்தனையும் சேர்ந்துகொண்டால் ஜகாத்தும் சதக்காவும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக வறுமை என்னும்  பிசாசின் அடையாளத்தை அடித்து நொறுக்கிவிடும்.  இப்படி ஒரு இனிய சமுதாயம் அமையுமா? 

நவீனப் பொருளாதாரத்தைப் பின்பற்றும் நாடுகள் மாய்ந்து மாய்ந்து தீய்ந்து போவது இரண்டு விஷயங்கள் பற்றித்தான். ஒன்று உள்நாட்டில் வறுமை, மற்றது வெளிநாட்டுக் கடன் அதன் வட்டிமற்றும் அதன் குட்டிகள்.

அரசின் வரி  வருமானம் ஜகாத் மூலம் சரியாக , ஒழுங்காக வருமானால் அரசு வெளிநாடுகளிடம் கடனுக்காக கை ஏந்தவேண்டியது இல்லை. அதற்காக பெரும்தொகையை வருடாவருடம் உலகவங்கிகளுக்கு வட்டியாகக் கட்டிவிட்டு தனது நாட்டு மக்களின் நல்வாழ்வுத்திட்டங்களுக்கு பணமில்லாமல் ஈரச்சாக்கைப் போட்டுப் போர்த்திக் கொண்டு படுக்க வேண்டியது இல்லை.

வளர்ந்து வரும் நாடான இந்தியா தனது வருமானத்தில் 26% த்தை வெளிநாடுகளில் வாங்கிய கடன்களுக்காக அழுது வருகிறது என்று புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. நாட்டில் வாழும் மக்களுக்கு இன்னும் அடிப்படை வசதிகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவை முழுமையாக தரப்படவில்லை. வறுமைக்கோட்டுக்கு கீழே பல கோடிமக்கள். இந்நிலையில் இவ்வளவு பெரும்தொகை வட்டியாகப் போகிறது . இந்த சுமையில் இருந்து மீள வல்லுனர்கள் கூறும் கருத்து வரிகளையும் வரிகளின் நிலுவைகளையும்  வசூல் செய்யுங்கள் என்பதுதான். ஆனால் வரி செலுத்தும் நிலுவைப் பட்டியலில் உள்ளவர்களோ மலை முழுங்கி மகாதேவன்களாக இருக்கின்றனர்.   அரசியலில் வாலாட்டும் தன்மை கொண்டவர்களுக்கு எலும்புத்துண்டுகளைப் போட்டு அவ்வப்போது தப்பித்துக் கொள்கின்றனர்.  இந்த நிலையில் ,

இந்த நிதியாண்டில் மட்டும் இந்தியா தனது மொத்த வெளிநாட்டு கடனான 390.04 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து, 172.35 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். இந்த தொகை இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடனில்  44 சதவீதம் ஆகும். 

உலகம் முழுதும் இத்தகைய நிலைகள் இருக்கின்றன. இப்படிப்பட்ட பொருளாதார சறுக்கல்கள் ஏன் ஏற்படுகின்றன? யாரால் காப்பாற்ற முடியும்? இஸ்லாம் காப்பாற்றும். இஸ்லாமியப் பொருளாதாரம் காப்பாற்றும். காப்பாற்றச் சொல்லி இறைவனை நோக்கி கை ஏந்துவார்களா?

ஜகாத் பற்றிய இறைவனின் வாக்குகள், எச்சரிக்கைகள், நபிமொழிகள், வரலாற்று சம்பவங்கள் ஆகியவற்றை அடுத்து காணலாம்.


இன்ஷா அல்லாஹ் தொடரும்...

இபுராஹீம் அன்சாரி


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு