மீண்டும் தாமதம், என்ன யாசிர் நீங்க தொடர் முடிப்பதற்குள் நாங்கள் ஆஃப்ரிக்காவையே ஒரு எட்டுபோய் பார்த்திட்டு வந்திடுவோமே என்று பலர் முணுமுணுப்பது காதில் அ(றை)ரையும் குறையுமாக விழுகின்றது,சிலர் பார்த்துவிட்டே வந்திருக்கலாம் நானும் இரண்டு நாடுகளுகு போய்விட்டு வந்துட்டேன்
கடந்த தொடரின் கடைசியில் காட்டிய பட மேட்டருக்கு வருவோம் என்ன மறந்துட்டீங்களா ??
இந்தபடம்தான் அது
தாயின் காலடியில்தான் சொர்க்கம் உண்டு என்று சொன்னது இஸ்லாம். தாயின் அன்பு சுயநலமில்லாதது,தன் குழந்தைகளின் நலம் விரும்புவது,அந்த பாசத்திற்கு எடுத்துக் காட்டுவதுபோல் மேலே உள்ள படத்தில் நீங்கள் காண்பது எத்தியோப்பியர்களின் பாரம்பரிய வீடுகளில் சாப்பிடும் தட்டுகள். இதைப்போல் வயது வாரியாக,வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும், குழந்தைகள் தங்களுக்கு சாப்பாடுத் தேவைப்படும்போது அவர்களுடைய தட்டை எடுத்துக் கொண்டு அமர வேண்டும்,அதனைக் காணும் தாய் அத்தட்டில் உணவு பரிமாறி மகிழ்வாள். அவர்கள் பெரியவர்களாகி பல இடங்களுக்குச் சென்று பொருள் சேர்த்து, வருடத்தில் ஒரு நாள் ஒன்றுகூட வேண்டும் என்பது அம்மக்களின் மரபு, அப்பொழுதும் அந்த பெரிய குழந்தைகள் தட்டுகளை எடுத்துக்கொண்டு அமர வேண்டும். எல்லாத் தட்டுகளும் தரையில் இருந்தால் தாய் எல்லையில்லா மகிழ்ச்சியடைவாள். அதில் ஒன்று தரையில் இறக்கபடாமல் இருந்தால் அவள் அதிகமான கவலையில் மூழ்குவாள். அத்தட்டுக்குரியவர் ஏதாவது காரணத்தால் வராமல் இருக்கலாம் அல்லது இவ்வுலகைவிட்டே சென்று இருக்கலாம், தாய் அன்பிற்கு நிகர் எதுவுமே உலகிலில்லை.
அடுத்த நாள் என்னுடைய கஸ்டமர் “வாங்க” அடிஸ் அபாபாவை ஒரு சுற்று சுற்றி விட்டு வரலாம் என்று கூற நானும் கிளம்பினேன்..பல புராதன இடங்கள்,வரலாற்று வாழ்விடங்கள், அழிந்தும் அழியாமலும் இருக்கும் நினைவுச்சின்னங்கள் என்று பட இடங்கள் சுற்றிக் காட்டப்பட்டாலும் ஹஜ்ரத் பிலால்(ரலி) அவர்கள் பெயருடைய பள்ளியை அவர்கள் பிறந்த ஊரிலயே காணும்போது உடல் மெதுவாக சிலிர்க்கத்தான் செய்தது.
மேகங்கள் புடைசூழ,கார்கள் அணிவகுக்க கம்பீரமாக நடந்துவரும் எத்தியோப்பியன்
கண்ணியத்திற்குரிய ஹஜ்ரத் பிலால் அவர்களின் பெயரில் உள்ள பள்ளி.
வளர்ந்து வரும் இஸ்லாம் பெருகிவரும் பள்ளிகள்.
நாட்டின் பார்லிமென்ட், கண்ணுக்கு தெரிகின்றதா ?
இத்தாலி ஆக்கிரமிப்பாளர்களை விரட்டியடித்த தியாகிகளின் நினைவு சதுரம் (ஆஃப்கானில் விரட்டி அடிக்கப்பட்டால் அது “தீவிரவாதம்”)
என்ன எத்தியோப்பியாவைச் சுற்றி பார்த்தாச்சா !!!
இவ்வுலகில் இறைவனால் செல்வத்தால் சிறப்பாக்கிவைக்கபட்டவர்களில் எத்தியோப்பியவைச்சேர்ந்த சேக் முகம்மதுவும் ஒருவர் ( Mohammed Hussein Al Amoudi),எத்தியோப்பியா / சவூதி என்று இரட்டைக்குடியுரிமை பெற்ற இவரின் ஷெரட்டான் ஹோட்டல் ஆஃப்பிரிக்காவிலயே மிகப்பெரிய ஹோட்டல். அதன் அழகும், அமையப் பெற்றிருக்கும் லோகேஷனும் ஒரு நிமிடம் திக்கு முக்காட வைத்தது என்றே சொல்லவேண்டும் (அல்லாஹ் காப்பாற்ற வேண்டும் )சில மனிதர்கள் அதனையே சொர்க்கம் என்று நினைத்து வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் அவர் பல நல்ல காரியங்களை நாட்டிற்கும் ,மார்க்கத்திற்கும் செய்து கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன்.
மழை மேகங்கள் இருட்டிக்கொண்டு வந்தாலும்,நாங்க எங்கள் பயணத்தைச் சுருட்டிக்கொண்டு வர தயாரில்லை,அடு்த்து அனைத்து ஆஃப்ரிக்க நாடுகளும் ஒன்று கூடும் ஆஃப்ரிக்க யூனியனைக் காணவேண்டி சென்றோம், அந்த பில்டிங்கை போட்டோ எடுத்தவுடன் பில்ட் பாடியுடன் வந்த இரண்டு செக்யூரிட்டிகள் இக்கட்டிடத்தை புகைப்படம் எடுக்க அனுமதியில்லை எடுத்ததை அழித்துவிடுங்கள் என்றனர்…நாங்கள் எடுக்கவே இல்லை எங்க அழிப்பது என்று கூறிவிட்டு காரை தள்ளிக்கொண்டு கிளம்பினோம்…ஆமாம் துபாயில் 130KMH ஓட்டிவிட்டு அங்கே 50 KMH ஓட்டுவது என்பது தள்ளிக்கொண்டு போவதற்கு சமமாகத்தான் இருந்தது
ஆஃபிரிக்காவை தாழ்வு நிலையில் வைத்துவிட்டு தான் நிமிர்ந்து நிற்கும் ஐ.நா-வின் ஆஃபிரிக்க யூனியன் கட்டிடம்
எத்தியோப்பியாவின் மிகப்பழமையான மார்க்கெட் “மெர்க்காட்டோ (Mercato)” மால் 200 வருட பாரம்பரியமிக்க அந்த மார்க்கெட்டுக்கு சென்றால் எல்லாவற்றையும் வாங்கிவிடலாம் (வாப்பா/உம்மாவைத்தவிர என்று துபாய் ஆட்கள் சிட்டி சென்டரைப் பற்றி முன்னர் சொல்லுவார்கள் ). அல்ஹம்துலில்லாஹ் அந்த மார்க்கெட் இயக்கத்தைக் கட்டுபடுத்துபவர்கள் முஸ்லிம்கள்தான் என்றதும் மனதில் எத்தியோப்பிய குளிர்க்காற்றின் சுகம் முழுவதுமாக உடம்பெங்கும் பரவியது
கம்பீரமாக காட்சி தரும் மெர்க்காட்டோ மார்க்கெட் பள்ளி
அப்புறம் சகோதரர் மாலிக்கிற்காக… சில பிஸினஸ் குறிப்புகள்
90 மில்லியன் மக்கள் தொகையுள்ள நாடு…மிகப்பெரிய கன்னி மார்க்கட்
சொந்த நாட்டில் தயாரித்து அல்லது அசெம்பிள் செய்து விற்கப்படும் பொருள்களுக்கு அரசு ஆதரவும்,வரிச்சலுகைகளும் உண்டு
வளர்ந்து வரும் துறை என்றால், கணினி(மென்பொருள்/வன்பொருள்) / கட்டுமான சம்பந்தமான தொழில்கள்/ கனரக வாகனங்கள் / ஜெனரேட்டர்கள்/ஆடைகள் அதன் மூலப்பொருட்கள்
நீங்கள் ஏற்றுமதி செய்வதாக இருந்தால் முதலில் ஒவ்வொரு பொருட்களுக்கும் விதிக்கப்படும் வரிகளின் தகவல்களை பெறவேண்டும் சில பொருட்கள் 100% வரிகளுக்குட்பட்டவை.பொதுவாக அனைத்துப் பொருட்களுக்கும் 35 முதல் 45% வரிகள் உண்டு
HS code எனப்படும் பொருட்களின் கஸ்டம்ஸ் எண் குறியீடு உலகின் டாப் பிராண்ட்களின் குறியீட்டையே அவர்கள் முட்டாள்தனமாக பயன்படுத்துவதால் நீங்கள் ஒரு 3 டாலர் வெப் கேமை எடுத்து சென்றாலும் 1000டாலர் மதிப்புள்ள சோனிக்கு கேமராவிற்கு நிகரான வரி செலுத்த வேண்டி வரும்
அலுவலக செட்டப் அந்த நாட்டின் குடிமகனோடுதான் செய்யவேண்டும் அந்த”குடி”மகனை கொஞ்சம் நாள் கழித்து ஓரம் கட்டிவிடலாம்
நான் பயணத்தை முடித்துகொண்டு கிளம்பும்போது, வழியனுப்ப வந்த மேகங்கள்
போர்டு சாய்ந்து இருந்தாலும், அந்தநாட்டின் மக்களின் மனதில் நிமிர்ந்த நடைபோடும் இந்தியா(ர்கள்)
வீட்டிற்கு போக காந்திருந்த நேரம்…எமிரேட்ஸ்..இதன் டேஸ்ட்டே தனிதான்
வளங்கள் பல இருந்தும் வறுமையாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட ஆஃபிரிக்கா கண்டம்தான் இன்றைய வியாபார உலகிற்கு விடிவெள்ளியாக திகழ்கின்றது.பல முன்னேறிய மார்க்கெட்டுகள் தன்னிறைவு அடைந்துவிட்டது. அங்குள்ள பயன்பாட்டாளர்களும் முதிர்ச்சி அடைந்து விட்டார்கள். ஆனால் கன்னித் தன்மை மாறாத ஆஃப்ரிக்கா இன்னும் பல நூறு வருடங்களுக்கு உலக வியாபார நிறுவனங்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை
என்ன வாசகர்களே …கென்யா பயணத்தைத் தொடரலாமா?…மறுபடியுமா ? எக்ஸ்கீயூஸ் மீ இந்த ”எக்ஸ்ட்” எங்கே இருக்கு என்று கேட்டு வெளியே வந்துடலாமா ? எல்லாம் உங்கள் கமெண்டின் வீரியத்தை பொறுத்துதான் இருக்கும்..மீண்டும் சந்திப்போம் இன்னொரு கோணத்தில்
இத்துடன் இத்தொடர் நிறைவடைகின்றது. ஆனால் ,பயணங்கள் தொடரும்
முஹம்மது யாசிர்














