என்ன தான் நாம் இன்று படிப்பாலும், பதவியாலும், பணியாலும் இன்னும் பல காரண, காரணிகளால் வாழ்வில் ஒரு உயரிய நிலையிலும், வசதி வாய்ப்புகளிலும் இருந்து வந்தாலும் உள்ளத்திற்குள் பசுமை தரும் அந்த பழைய, இனிய நினைவுகளை இன்றைய காலத்துடன் ஒப்பிட்டு உள்ளத்திற்குள் ஒரு ஏக்கத்துடனும் ஒரு ஏமாற்றத்தை கண்ட உணர்வுடனும் நாம் வாழவேண்டியுள்ளது இக்காலத்தில். அதிரையில் பிறந்து வளர்ந்த நமக்கு உள்ளப்பெருங்கடலில் பிடிபட்டவை சில:
1. அதிகாலை எழுந்து இறைவனைத்தொழுது பள்ளிக்குச்சென்று உஸ்தாதிடம் பாடம் படித்து வருவது.
2. பள்ளி விட்டு வந்ததும் நண்பர்களுடன் சென்று குளத்தில் வேண்டிய நேரம் குளித்து கும்மாளமிட்டு வருவது.
4. குறைந்த காசே கையில் இருந்தாலும் வேண்டியதை வாங்கி உண்டு மகிழ்வது.
5. பெற்றோரை மதித்து சொந்த பந்தத்தினரையும், உற்றாரையும் பேணி நடந்து "கண்ணான வாப்பா", "தங்கமான புள்ளெ" என அவர்களின் திருவாய் மலர்ந்து நிற்பது.
6. சிரமங்கள் ஏதுமின்றி சொற்ப பணத்திலேயே மனை வாங்கி வீடு கட்டி முடிப்பது.
7. வீட்டில் நடைபெறும் திருமண காரியங்களை கையில் உள்ள காசை வைத்து எளிமையாக இருந்தாலும் சுற்றமும், நட்பும் கூடி சிறப்புடன் நடத்தி முடிப்பது.
8. வீட்டில் டி.வி.எஸ். 50 மோட்டார் சைக்கிள் இருந்தாலே போதும் வீட்டின் பெரும் வேலைகள் நடந்தேறுவது.
9. மருத்துவ தேவைகளுக்காகவோ, உறவினர்களை வழியனுப்பவோ அல்லது அவர்களை இறக்கி வரவோ சென்னைக்கு கம்பன் எக்ஸ்பிரஸில் ஊரிலிருந்தே குதூகலமாய் சென்று வருவது.
10. புற்களைக்கொண்டு நிரப்பி அதன் மேல் பாய் விரித்து நல்ல மெத்தை போல் இருக்கை அமைத்து அதன் மேல் அமர்ந்து குதிரை வண்டி சவாரி அவ்வப்பொழுது செய்வது.
11. பதினஞ்சுருவாக்கி (பதினைந்து ரூபாய்க்கு) மீனு வாங்கி பகல் ஆக்கிய ஆணத்தை அப்படியே ராத்திரிக்கும் வச்சி குடும்பமே சோறு உண்டு வருவது.
12. ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஒட்டு மொத்த குடும்பமே ஒரு மாதத்தை சிரமமின்றி ஓட்டி வருவது.
13. எவ்வித மத துவேசமும் இல்லாமல் அவரவர் மதத்தை அவரவர் பேணி அச்சமின்றி அமைதியுடன் வாழ்ந்து வருவது.
14. சொந்த வயலில் நெல் விதைத்து முறையே அறுவடை செய்து விளைச்சல் நெல்லை வீட்டின் பத்தாயத்தில் சேமித்து வருடம் முழுவதும் வீட்டின் அரிசித்தேவைகளை சிரமமின்றி நிறைவேற்றுவது.
15. வீட்டு தோப்பில் பருவத்தில் வெட்டப்படும் தேங்காய், மாங்காய்களை வைத்து அதன் வருவாயைக்கொண்டு அந்த தோப்பை பராமரிப்பது அத்துடன் வீட்டுத்தேவைகளையும் (இளநீர், மாங்காய், மாம்பழம், பலாப்பழம், எலுமிச்சை, வாழை) நிறைவேற்றிக்கொள்வது.
16. வசதி வாய்ப்பு குறைவால் ஊரில் வாகனங்களும் குறைவு அதனால் விபத்துக்களால் ஏற்படும் உயிர்ச்சேதமும் குறைந்திருப்பது.
17. ஆரோக்கியமான வாழ்வால் ஊரில் குடும்ப, தெரு பெரியவர்கள் நிறைந்திருந்தது. அவர்களின் அறிவுரையும், ஆலோசனையும் எம் வாழ்வை சீர்படுத்தியது.
18. அன்று கலப்படம் இல்லாமல் உண்டு, உடுத்திய பொருட்களால் வாழ்க்கை ஆரோக்கியத்துடனும் மன அமைதியுடனும் செல்வது.
19. கடிதத்திற்குள் புதைந்திருந்த ஆயிரம் சந்தோசங்களும், ட்ரங்காலுக்காக காத்திருந்து உறவினர்களுடன் உரையாடியதும் ஆனந்தத்தை வாழ்வில் பஞ்சமின்றி அள்ளித்தந்தது.
20. இயக்கங்களும் அதனால் ஊர் ஒற்றுமைக்காக வரும் தயக்கங்களும் குறைவாக இருந்தது.
21. தொலைதூர நாட்டுப்பயணங்கள் இல்லாமல் அவை தொலைதூரமாகவே இருந்து வந்தது. அதனால் வரும் பல தொல்லைகளும், பேராசைகளும் இல்லாமலேயே இருந்தது.
22. அன்றைய ஆட்சியாளர்கள் விமர்சிக்கப்படும் பொழுது நல்லவர்கள், கெட்டவர்கள் என்று தான் பிரித்து பேசப்பட்டனர். உலக மகா கொள்ளைக்காரர்கள் என்றோ அல்லது ஊழல் பெருங்கடல் என்றோ யாரும் விமர்சிக்கப்படவில்லை. இத்தனை பணங்காசுகளும் புழக்கத்தில் இல்லாமல் இருந்தது.
23. சுவிஸ் நாடு எங்கிருக்கிறது என்று அரசியல்வாதிகளுக்கு தெரியாமல் போனதால் அங்கு கருப்புப்பணத்தை பதுக்க வழியில்லாமல் போனது.
24. சுலநலன்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்துவந்தாலும் பொதுநலன் எங்கும் பரவலாக பரவிக்கிடந்தது.
25. மாணவர்கள் பள்ளியில் பாடம் மட்டுமே படித்து வந்தனர். கலாச்சார சீரழிவுகள் எல்லாம் அவர்கள் கனவுகளில் கூட வந்து செல்லாமல் போனது.
26. நிலத்தடி நீர் வீட்டின் கிணத்தடியில் படுத்துறங்கி நமக்கு முகம் பார்க்கும் கண்ணாடி போல் அருகிலேயே காட்சி தந்தது. ஆழ்குழாய்க்கிணறுகளுக்கெல்லாம் அவசியம் இல்லாமல் இருந்தது.
27. பனைஓலைப்பையில் (ஒமல்) புழக்கம் பரவலாக இருந்து வந்ததும் பிளாஸ்டிக் பைகளெல்லாம் யாரோ வெளிநாட்டு சபுராளிகள் கொண்டு வந்திறங்கினால் தான் உண்டு என்றிருந்தது.
28. முடைந்த பாயில் படுத்துறங்கி எழுந்த சுகம் இன்று பஞ்சுமெத்தை படுக்கைகளில் கொஞ்சமும் கிடைத்திடாமல் போனது.
29. ஓட்டு வீட்டினுள் சூரிய ஒளிக்கதிர்கள் ஊடுருவி இருந்தாலும் உள்ளத்திற்குள் எவ்வித கள்ளம், கபடமும் ஊடுருவாமல் இறையச்சத்தால் நேர்மையையே பெரும்பான்மை மக்கள் பெற்றிருந்தது.
30. பெற்றோர்களை மதித்து அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகள் செய்து அவர்களின் நெஞ்சம் குளிர்ந்து எல்லாவளமும் நிரம்பப்பெற்று நீடுழீ வாழ அவர்களின் மாசற்ற து'ஆவைப்பெறுவது.
இன்ஷா அல்லாஹ் படிப்பவர்களுக்கு ஆர்வமிருந்தால் எம் பட்டியலும் நீளும்...!
-மு.செ.மு. நெய்னா முஹம்மது


