பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
நெடுநாட்களாக மேற்சுட்டிய தலைப்பில் எழுத வேண்டும் என்ற சிந்தனையிலிருந்து கொண்டிருந்தேன், அதற்கான சூழலை நமது சகோதரர்களே உருவாக்கி விட்டனர்.
இன்றைய காலகட்டத்தில், அல்லாஹ் நமக்கு கொடுத்துள்ள மிகப்பெரிய அருட்கொடைகளில் ஒன்றான தகவல் தொழில்நுட்பம், இதனை இஸ்லாமிய சமுதாயமாகிய நாம் சரியாகப் பயன்படுத்தத் தவறியதோடு அல்லாமல், மிகக் குறைந்தபட்ச எண்ணிக்கையைத் தவிர பெரும்பாலானவர்கள் ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல் வீணாகவே அதிகமதிகம் பயன்படுத்தி நம் சமூகத்திற்கு கேவலத்தையும், அவப்பெயரையுமே தோற்றுவிக்கிறார்கள்.

இன்றையச் சூழலில் “நம்முடைய செயல்கள் அல்லாஹ்வுடைய திருப்தியை பெறுவதற்கு” என்பது வெறும் நாவளவில் உள்ளதா? உண்மையில் செயலில் உள்ளதா? என்பதை ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளாகவே கேட்டுக்கொள்ள வேண்டும்.
நபி(ஸல்) அவர்களின் காலம் முதல் இன்று வரை தூய இஸ்லாம் வளர்ந்து வரும் மார்க்கம் என்பதில் யாவருக்கும் மாற்றுக் கருத்தில்லை. பிற மதத்திலிருந்து இஸ்லாத்தை வாழ்வியலாக தழுவும் பெரும்பாலானவர்கள் முஸ்லீம்களின் வாழ்வைப் பார்த்து வருவதை காட்டிலும், திருக்குர்ஆனை பொருளுணர்ந்து வாசித்தும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை உளப்பூர்வமாக அறிந்தும் உணர்ந்தும் இஸ்லாத்திற்கு வருபவர்களே அதிகம் என்பது நம் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை.
தமிழகத்தில் நாமிருக்கும், அனுபவிக்கும் இந்த அழகிய மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்ற பிரபலங்கள் அப்துல் ஹாலிக் (யுவன் சங்கர் ராஜா), ரஹீமா (மோனிகா). கடந்த இரண்டு வாரங்களாக இணைய தளங்களிலும், சமூகத் தளங்களிலும் குறிப்பாக முஸ்லீம்கள் அதிகம் இருக்கும் தளங்களில் பேசப்பட்டு, செய்திகள் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருபவர்களாக இந்த முன்னால் சினிமா நட்சத்திரங்கள் இருந்து வருகிறார்கள். இவ்விருவரும் இஸ்லாத்தை அழகிய வாழ்க்கை நெறியாக ஏற்று இஸ்லாத்திற்கு வந்தவர்கள் என்பதில் யாருக்கும் எந்தவித மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
அப்துல் ஹாலிக் அவர்களுக்கு கீழக்கரையைச் சேர்ந்த பெண் ஒருவருடன் திருமண நிச்சயம் செய்யப்பட்டது முதல் அவர்கள் இருவருடைய திருமணம் முடியும் வரை, சமூக தளங்களில் குறிப்பாக FACEBOOK, WHATSUP போன்றவைகளில் இவர்களை பற்றிய செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் எண்ணிலடங்காதவைகள் வெளியிடப்பட்டு வருகிறது. இச்செய்திகளை பரப்புகிறவர்களும், அதனை பார்த்து கருத்திடுபவர்களும் “சுப்ஹானல்லாஹ்” என்றும் “அல்ஹம்துலில்லாஹ்” என்றும் “பாரகல்லாஹ்” என்றும் கருத்துக்கள் இட்டு நம் தூய இஸ்லாத்தை வலுப்பெற செய்ய முயலுகிறார்கள்.
ஓரிரு தினங்களுக்கு முன்பு ரஹீமா (மோனிகா) என்ற சகோதரிக்கு மதுரையைச் சேர்ந்த ஒரு சகோதரருக்கும் திருமணம் நடைபெற்றது, ஆனால் அந்த திருமண நிகழ்வை ஒருசிலர் புகைப்படம் எடுத்து இணையத்தளங்களிலும், FACEBOOK, WHATSUP போன்ற சமூக பினைப்புத் தளங்களிலும் இஸ்லாத்திற்கு ஏதோ மிகப்பெரிய பெருமையை சேர்த்து விட்டது போல் “முன்னால் நடிகை இஸ்லாமிய முறைப்படி(?) திருமணம் செய்து கொண்டார்” என்று பதிவுகள் இட்டு, இதை வாசிப்பவர்கள் “மாஷா அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர், பாரக்கல்லாஹ்” என்று மறுமொழிகளும் இட்டு தங்களின் தீனை வலுப்பெறச் செய்ய போட்டி போட்டதை உணராமல் இருக்க முடியவில்லை. அல்லாஹு அஃலம் [அனைத்தையும் அல்லாஹ் மட்டுமே அறிவான்] !
பிரபலங்கள் யாராயினும் இஸ்லாத்தை ஏற்பதால் இஸ்லாத்திற்கு பெருமை ஒன்றுமில்லை, இஸ்லாத்தை ஏற்றதால் அவர்களுக்குத் தான் பெருமை வந்து சேரும், அது யாராக இருந்தாலும் சரியே.
இன்று உலகில் வாழும் கோடிக்கணக்கான முஸ்லீம்களின் இல்லங்களில் திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது. நம் சகோதரர் அப்துல் ஹாலிக் அவர்களின் திருமணமாகட்டும், சகோதரி ரஹீமா அவர்களின் திருமணமாகட்டும். அது அவர்களின் தனிப்பட்ட நிகழ்வு. ஆனால் இந்த தனிப்பட்ட நிகழ்வை பெருமைக்காகவும், முகஸ்துதிக்காகவும் அந்த திருமண நிகழ்வின் புகைப்படங்களை இணையத்தளங்கள், facebook, whatsup போன்ற சமூக தளங்களிலும் முஸ்லீம்களாலே அறிந்தோ அறியாமலோ பகிரப்பட்டு நம் சமூதாயத்தின் மானத்தை காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. திருமணம் என்பது ஒரு தனிப்பட்ட நிகழ்வு (Private event), அது யாருடைய திருமணமாக இருந்தாலும் முஸ்லீம்களாகிய நம்மவர்கள் செய்வது சரியா?
பிரபலங்களின் திருமண நிகழ்வுகள் என்று காரணம் காட்டி முஸ்லீம் பெண்களைப் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து பொதுதளங்களில் பரப்பும் கணவான்களே, பெரியோர்களே, தாய்மார்களே. உங்களிடம் கேட்கும் கேள்வி இதுதான். இது போன்ற திருமண நிகழ்வுகள் உங்கள் வீடுகளில் நடந்தால், பட்டுப்புடைவையோடும், அலங்காரங்களோடும், சீவி சிங்காரித்துக் கொண்டிருக்கும் உங்கள் வீட்டுப் பெண்கள் இருக்கும் புகைப்படங்களையும், விடியோக்களையும் நீங்கள் வெளியிட விரும்புவீர்களா? நிச்சயம் விரும்ப மாட்டீர்கள். ரஹீமாவும் ஒரு முஸ்லீம் பெண்தானே, அப்துல் ஹாலிக் மணம் முடித்திருக்கும் கீழக்கரையைச் சேர்ந்த அந்த பெண்ணும் மூஸ்லீம் பெண்தானே. இந்த முஸ்லீம் பெண்களின் புகைப்படங்களைப் பரப்புவது எவ்வகையில் நியாயம்?
தன் வீட்டுத் திருமணம் போன்ற நிகழ்வுகளில் நம்மவர்கள் வீட்டில் மகள், மனைவி, தாய் போன்றவர்களின் புகைப்படங்களைப் பொதுத் தளங்களில் போட மனம் தடுக்கும் போது பிற வீடுகளில் நடைபெறும் திருமணம் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ள பெண்கள் யாருடைய மகளாகவோ, மனைவியாகவோ, தாயாகவோ இருப்பாரல்லவா? நமக்கு ஒரு நியாயம்? மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? இது அப்பட்டமான இரட்டை வேடமில்லையா? இதோ உங்களுக்குக்கு நினைவூட்டுவதற்காக ஒரு ஹதீஸ்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' மனிதர்களிலேயே மிகவும் மோசமானவன் இரட்டை முகத்தான் ஆவான். அவன் இவர்களிடம் செல்லும்போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும்போது இன்னொரு முகத்துடனும் செல்கிறான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஷஹீஹ் புகாரி. 42 Volume :7 Book :93.
இணையத்தளங்கள், facebook, whatsup போன்ற தளங்களில் சகோதரர் அப்துல் ஹாலிக் அவர்களின் மனைவி, அந்த பெண்ணைச் சார்ந்த குடும்பப் பெண்கள் இருந்த புகைப்படங்கள், சகோதரி ரஹீமா, அவரோடு இருந்த முஸ்லீம் பெண்களின் புகைப்படங்களைக் கணக்கில்லாமல் பரப்பிய சகோதர சகோதரிகளே சிந்திக்க மாட்டீர்களா?
இஸ்லாத்தில் உள்ள சில மக்கள் மார்க்கத்தை சரியாக விளங்காத காரணத்தால், பிற மதத்தவர்களின் சடங்கு சம்பிரதாயங்களைத் தங்களின் திருமணம் போன்ற நிகழ்வுகளில் கடைப்பிடிக்கிறார்கள். இவைகள் முழுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியவைகள். ஆனால் அவைகளை கண்டிக்காமல், இஸ்லாத்திற்கு மாற்றமான முறையில் நடைபெற்ற நிகழ்வுகளை ஆதரிக்கும் விதமாக செய்திகளைப் பரப்பி வருவது சரியான செயலா என்பதை எனதருமை சமுதாய மக்களே சிந்திக்க மாட்டீர்களா?
“எதை எடுத்தாலும் நெட்டில் போடு” என்று சமூக பொறுபற்ற போக்கை நம் சமூதாய சொந்தங்கள் கைவிட வேண்டும். அல்லாஹ் நமக்கு கொடுத்திருக்கும் மிகப்பெரும் ஊடகங்களான இந்த இணையம், Facebook, whatsup, telegram போன்ற சமூகதளங்கள். இவைகளை முழுக்க முழுக்க இஸ்லாத்தின் வளர்ச்சிக்காவும், நம் இளைய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவும், இந்த நாட்டின் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தி வெள்ளையனை வெளியேற்ற போராடிய நம் முன்னோர்கள், முப்பாட்டன்கள் மற்றும் பாட்டன்களைப் போன்று வீரமுள்ள சமூகமாக மாற்ற வேண்டுமே தவிர, சமூகத்திற்கு ஒன்றுக்கும் உதவாத கண்டதையும் செய்திகளாகவும், புகைப்படங்களாகவும், வீடியோக்களாக பதிந்து, பரப்பி உங்கள் நேரத்தையும், மக்களின் பொன்னான நேரத்தையும் வீண்டித்து அநியாயமாக பாவத்தை சம்பாதித்து, முகஸ்துதிக்காக பணக்காரர்களையும், அரசியல்வாதிகளையும், இயக்கவாதிகளையும், நண்பர்களையும் திருப்திபடுத்த மட்டுமே ஊடகத்தை பயன்படுத்தி கோழைகளாக நம் சமூகத்தை ஆக்க வேண்டாம்.
நாளை மறுமையில் அல்லாஹ்விடம் அனைவரும் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்வோம். அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஊடகத்தை பயன்படுத்துவோம்.
"எல்லாத்தையும் நெட்டில் போடு” தொடரும்...
தாஜுதீன்