Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அணு(வே) உலை ! 15

அதிரைநிருபர் பதிப்பகம் | May 31, 2011 | , ,

அணுசக்தியைப் பயன்படுத்தி கல்பாக்கத்தில் 2012-ல், 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் கூடங்குளத்தில் 2012-க்குள் அணுசக்தியைக் கொண்டு 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த முயற்சி நம் நாட்டில் முதன்முதலாக அதிவேக ஈனுலை என்கிற "பாஸ்ட் பிரீடர் ரியாக்டர்' நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அணு உலை அமைக்க ஏற்பாடுகள் நடை பெற்று வருகின்றன.

அறிவியலின் முனேற்றமாக இது இருந்தாலும் நம் அறிவை சில நேரம் கிள்ளிப்பார்த்து பல உயிர்களை அள்ளிச் சென்று விடுகின்றது இது மறைமுகமாகவும் சில நேரங்களில் நேரிடியகவும் பல சோதனைகளையும், வேதனைகளையும் தாரளம நமக்கு அள்ளித்தரகூடிய ஒன்றாக அமைந்து விடுகின்றன. காலத்தின் கட்டாயத்தால் இது போன்ற அணு உலைகளை நாம் அமைத்தாலும் அது தரும் பாடங்கள் நமக்கும் நமக்கு பின் வரும் நமது சந்ததிகளும் லேசில் மறக்க கூடியதாக ஒன்றாக இருக்காது என்பது மட்டும் உண்மை.

25 ஆண்டுகளுக்கு முன் ரஷியாவின் செர்நோபில் இந்த ஆண்டு ஜப்பானின் புகுஷிமா அணு உலை அசம்பாவிதங்களால் ஏற்பட்ட, இன்னும் ஏற்பட்டு வரும் மிகக் கொடிய கதிர்வீச்சுத் தாக்கங்களையும் உயிர் சேதங்களையும் பற்றி மகிழன்கோட்டை மன்னாரில் இருந்து கொள்ளுக்காடு குப்பன் வரை நன்கு அறிந்து வைத்திருக்கும் போது நமது நாட்டில் அணு உலை என்றதும் அடித்தட்டு மக்களில் இருந்து மேல் தட்டு மக்கள் வரை (விவரம் தெரிந்தவர்கள் இந்த தட்டுக்களுக்கு விவரம் சொல்லுங்கப்பா ) . அணு உலை ஆபத்து பற்றி அறிந்து வைத்துள்ளனர்.


கல்பாக்கத்தில் இந்த நவீன உலை நிறுவப்படவுள்ள செய்தி அனைவருக்கும் அடி வயிற்றில் உலையாய் கொதிக்கின்றது காரணம், 25 ஆண்டுகளுக்குப் முன் ஏற்பட்ட அணு உலை விபத்தில் இன்றும் செர்னோபிலில் உள்ள பாறைகள் அங்கு உள்ள தண்ணீரில் இருந்து கடுமையான அளவில் கதிர்வீச்சு வெளியாகிக்கொண்டே உள்ளது.

அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் நமது நாட்டைக் காட்டிலும் மிக முன்னேற்றமடைந்த ஜப்பான் மற்றும் ரஷ்யா ஆகிய இந்த இரண்டு நாடுகளிலும் நடந்துள்ள விபத்து பற்றி தினமும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது, இந்த இரு நாடுகளும் அணு உலைகளை கையாள்வதில் மிக தேர்ச்சி பெற்றவர்கள் ஆனால் அவர்களால் கூட இந்த அணு உலைகளை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. காரணம் மனித உடல்கள் இதன் கதீர் வீச்சை தாங்கிக்கொள்ள முடியாது .

நமது நாட்டில் இப்படி ஒரு அணு உலை பிரச்சினை வந்தால் நமது நாட்டு தொழில் நுட்பமும் அரசும் எந்த அளவுக்கு செயல்படும் என்பது ஒரு பெரிய கேள்வி குறியே ! சுனாமியால் பாதிப்பு தீயால் பாதிப்பு வெள்ளத்தால் பாதிப்பு என்றால் தொண்டு நிறுவனங்களும் பொது நல ஆர்வார்களும் போய் நின்று உதவி செய்து விடலாம் ஆனால் அணு உலை பாதிப்பு என்றால் நாம் அங்கு கச்சல் கட்டி முண்டா தட்ட முடியாது.

சென்னை அருகில் உள்ளது கல்பாக்ககம் இங்கு நிறுவப்படவுள்ள இந்த அணு உலை, ஜப்பானில் இந்த ஆண்டு சுனாமியால் தாக்கப்பட்டு, கட்டுப்பாடு இழந்து வெடித்து, கதிர்வீச்சைக் கக்கிய அந்த அணுஉலையைவிட, எந்தெந்த வகையில் பாதுகாப்பானது என்பது இது வரை யாருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. இங்கு சுனாமி தாக்கினால் எந்த வகை பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன என்பதும் யாருக்கும் தெரியாது.

தற்போது அமெரிக்காவில் எந்த ஒரு அணு உலையும் புதிதாக நிர்மாணிக்கவில்லை (பார்டி உஷாராகிட்டான்கள்) காரணம் 1979-ம் ஆண்டு ஏற்பட்ட அணு உலை விபத்து அவர்களுக்கு நல்ல புத்தியை புகட்டி உள்ளது நாம் பாடம் படிக்கும் முன் உஷாரகிக்கொல்வது கொள்வது நமக்கும் நல்லது நமது சந்ததிகளுக்கும் நல்லது காரணம் அணு உலை என்பது அமைதியாக உறங்கிக் கொண்டு இருக்கும் மிக கொடிய மிருகம் இது வெளியோ கசிய தொடங்கினால் கட்டுப்படுத்துவது சுலபமல்ல இயற்க்கை சீற்றம் என்பது வரும் போவும் ஆனால் இந்த "செயற்கை சீற்றம் வரும் ஆனால் போகாது" இந்த செயற்கை சீற்றம் மனித குலத்திற்கே பெரும் நாற்றம் !

-S-ஹமீது

நோம்பு வருது.... 12

அதிரைநிருபர் பதிப்பகம் | May 31, 2011 | , ,

இஸ்லாமிய மாத வரிசையில்
ஒன்பதாம் மாதமாம் உன்னதமாய்
சங்கைமிகு ரமளானும் நம்மை
சீராட்டி இறைப்புகழ் பாராட்ட வருது


தெளிவாக வானம் தென்பட்டாலும்
தெரியாமல் போன அப்பிறையை
இலங்கை ரேடியோ கண்டெடுக்கும்
அதனால் நோன்பும் ஊரில் ஆரம்பமாகும்
 
 
முதற்பிறையை கண்டதுமே
எம் முகமலர்ச்சி பெற்றிடுமே
பெரியவர் சிறியவருக்கெல்லாம்
பெரும் மகிழ்ச்சி வந்திடுமே
 
 
பிறையைக்காணும் முன்னே
நம் வீட்டு பெண்டிரும்
ஒரு மாத தேவைகளை
அது வருமுன்னே செய்திடுவர்
 
 
வீட்டை கழுவி ஒட்டடை அடித்து
மாவிடித்து பூபோல் வறுத்தெடுத்து
வீட்டு ஆண்களின் அகம்புறம் குளிர
அனைத்தையும் செய்து வைப்பர்.
 
 
பள்ளிகளெல்லாம் வெள்ளையடித்து
தன்னழகை மெரு கூட்டி நிற்கும்
காற்றில் கரைந்து வரும் பாங்கின்ஒலி
தொழுகைக்கு நம்மை தயார் படுத்தும்
 
 
கஞ்சி கீற்று கொட்டகையிடம்
பிஞ்சு உள்ளம் கெஞ்சிக்கேட்டிடும்
இன்னும் பதினொறு மாதங்களும்
நீ பள்ளியிலேயே தங்கிடுவாயாவென.
 
 
நோன்பு கால தண்ணீர் தாகம்
வீம்பின்றி பொறுமை கொள்ளும்
பசிகளெல்லாம் பறந்து போகும்
நோன்பு திறக்கும் சமயத்தை எண்ணி.
 
 
கண்சிவக்க குளித்து வந்த குளக்கரையும்
உள்ளம் குளிர உம்மா தந்த சர்பத்தும்
பார்வையால் உண்டுமகிழும் பதார்த்தங்கள்
பசித்தலால் உருவாகும் பல ருசித்தல்கள்
 
 
பள்ளிவாசல் நஹராவோ
பகல்நேர சூரியக்குளியல் எடுக்கும்
பகலவன் மறையும் மக்ரிபில்
இடிமுழக்கமென ஊருக்கு பறைசாற்றும்
 
 
ஆங்காங்கே வாடா,சம்சா கடைகள்
திடீர் காளானாய் முளைத்து நிற்கும்
வாடாவில் புதையுண்ட இறாலை
கண் பார்வை பெயர்த்தெடுக்கும்
 
 
இராக்கால வீண் விளையாட்டு
போர்க்களம் போல் நடந்தேறும்
தேவையற்ற தெரு சண்டைகளும்
தேடாமல் தெருவுக்கு வந்து சேரும்
 
தலை நோன்பில் கொடுத்த சீனி சோறு
நினைக்கும்பொழுதெல்லாம் தித்திக்கும்
சில்லரையில் நிறையும் சட்டைப்பை
நிறைமாத கர்ப்பிணியாய் வழிந்திருக்கும்
 
 
முதல் நாள் ஆசையாய் தொழுத தராவீஹும்
இரண்டாம் நாள் ஆசையே மோசம் செய்யும்
மூன்றாம் நாள் இடுப்பொடிந்த கிழவன் போல்
அமர்ந்து கொண்டே நார்சாவுக்கு நேரம் கடத்தும்
 
 
அட்டூழியம் புரியும் சைத்தான்கள் கட்டப்பட்டு
கபடியும்,கிளித்தட்டும் கட்டவிழ்த்துவிடப்படும்
இராக்கால வணக்க வழிபாடாய் உள்ளம்
தவறாக வீண்விளையாட்டை புரிந்துகொள்ளும்
 
 
பவுடர் போட்ட கேரம் போர்டில்
கருப்புவெள்ளையை சிகப்பு விரட்டும்
குழிக்குள் விழும் காய்களோ
குழந்தையாய் தொட்டில் உறங்கும்
 
 
அதிகாலையிலிருந்து அமைதியுற்ற இதயம்
அஸருக்குப்பின் அங்குமிங்கும் அலைபாயும்
வாடா,சம்சா வேண்டியதை சேமித்து வைக்கும்
வாங்கி வரும் வரை கஞ்சியும் காத்திருக்கும்
 
 
பேரீத்தம்பழம் கிடைத்து உள்ளம் பேரானந்தமடையும்
அதன் கொட்டை எடுக்க கைகள் பட்டை தீட்டும்
பசியின் உச்சத்தில் நோன்புதிறக்க ஓதும் து'ஆவும்
ஏனோ மறந்து போகும் பாதியில் மறைந்து போகும்
 
 
கஞ்சி குடிக்கும் முன் உள்ளம்
பசியில் கோட்டை கட்டும்
குடித்ததுமே ஆசையில் சேமித்தவை எல்லாம்
அடுத்த நாள் வேலைக்காரிக்கு போய் சேரும்
 
 
திருக்குர்'ஆனும் சிறப்புடன் ஓதி முடித்து
பள்ளிகளை வண்ண விளக்குகளால் அலங்கரித்து
வருவோருக்கு நல்ல நாக்கு ருசியாய் நார்சாவும்
நிரப்பமாய் வந்து சேரும் வயிறுண்டு வாழ்த்தும்
 
 
முதல் பத்தில் உள்ளம் சிறு மூச்சு விடும்
இரண்டாம் பத்தில் அரை கடலை தாண்டும்
மூன்றாம் பத்தில் பெருநாளுக்கு தயாராகும்
முடிவில் வேதனையுடன் ஆனந்தமடையும்
 
 
ஏழைகளின் ஏக்கம் தீர்ந்து காசும் சேரும்
பயனடைந்தவர்களின் உள்ளமோ இன்னும்
பன்னிரண்டு மாதமும் ரமளானை வேண்டும்
இராப்பகலாய் ரஹ்மத்தும் ரஹ்மானிடமிருந்து வந்துசேரும்
 
 
காலஞ்சென்ற ரமளான் நினைவுகளை கண்முன்னே கொண்டு வந்தேன்.

இன்னும் இரு மாதங்களில் புதுக்குழந்தையாய் பிறக்க இருக்கும் புனித ரமளானே! நீ எங்களுக்கு வாழ்வில் பரக்கத்தும், ரஹ்மத்தும் தந்து எஞ்சி இருக்கும் எம் வாழ்நாட்களை இனிமையாக்கி இறுதியில் இன்முகத்துடன் இறைவனடி வந்து சேர உன்னையும், என்னையும் படைத்த அந்த வல்லோனிடம் இறைஞ்சிடுவாயா!
 
 
என புதுக்குழந்தையாய் பிறக்க இருக்கும் ரமளானை பாசத்துடன் கேட்டுக்கொண்டவனாக..
 
 
இனிய நினைவுகள் தொடரும் இன்ஷா அல்லாஹ் இறைவன் அதற்கு வாய்ப்புகள் கொடுக்கும் வரை.....
 
 
- மு.செ.மு. நெய்னா முஹம்மது

இந்திய தூதரக அதிகாரிகள் 5

அதிரைநிருபர் பதிப்பகம் | May 30, 2011 | , ,

அன்புடையீர் !

ஜித்தா இந்தியத் தூதரகத்திற்கு பாஸ்போர்ட் செக்ஷன் கவுன்சிலராக ஒரு தமிழர் நியமிக்கப் பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.திரு தாஸ் ஜெயச்சந்திரன் என்ற இவர் இனிமையாகப் பழகும் ஓர் தமிழ் ஆர்வலர். தூத்துகுடி பகுதியைச் சேர்ந்தவர். ஜெத்தா தமிழ் சங்கத்தின் சார்பாக வாழ்த்தி வரவேற்கப்பட்டார்.

ஏற்கனவே மதிப்பிற்குரிய S.D. மூர்த்தி அவர்கள் திருச்சிப் பகுதியைச்சேர்ந்த தமிழ்த் தாக்கமும் தேசப் பற்றும் ஒரு சேரப் பெற்ற நற்றமிழர்.சென்ற வருடம் வரை ஹஜ் செக்ஷனை கவனித்து வந்து ஹாஜிகளின் துஆக்களை அள்ளிக் கொண்ட நம் நண்பர் ,இவ்வருடம் மக்கள் நலத்துறை - welfare - கான்சளாக உயர்த் தப்பட்டுள்ளார்.


நாகர்க்கோவில் பகுதியைச்சேர்ந்த மரியாதைக்குரிய முபாரக் அவர்கள் ஒரு இளம் அதிகாரி.ஹஜ் கான்சலான இவர்களோ அனைவரும் மெச்சும் வன்ணம் தனது பணிகளை செவ்வனே செய்து வந்து கொண்டிருக்கின்றார்கள்.


மும்மூர்த்திகளாய் மூன்று தமிழ் அதிகாரிகளை ஒரே நேரத்தில் பெற்றது யாம் பெற்ற பெரும்பேறு!

- ரஃபியா

ஷம்சுல் இஸ்லாம் சங்கம் - பொதுக்குழுக் கூட்டம் ! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | May 30, 2011 | , ,

புத்துணர்ச்சி ஊட்டிய பொதுக்குழுக் கூட்டம்!

'ஷம்சுல் இஸ்லாம் சங்கம்' நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு தனது பொதுக்குழு பற்றிய அறிவிப்புச் செய்த பின்னர் வெகுவாக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இன்றைய தினம் (29 / 05 / 2011) பொதுக்குழுக் கூட்டம், சங்கத்தின் புதிய கட்டிடத்தில் ஜனாப் இக்பால் ஹாஜியாரின் தலைமையில், சங்கத் தலைவர் அட்வகேட் அப்துர்ரஜாக் ஹாஜியார், எம்.எஸ். தாஜுத்தீன் ஹாஜியார், சங்கச் செயலாளர் ஆகியோர் முன்னிலை வகிக்க, இன்று காலை பத்து மணியளவில் கூடியது.

சங்க நிர்வாகிகளின் அன்பான வரவேற்புடன், பொதுக்குழு வருகையாளர்கள் ஆவலுடன் கூட்ட நிகழ்வுகளுக்காகக் காத்திருந்தனர். முன்னதாக, காரீ அப்துல் ஹாதி பாகவியவர்களின் திருமறை குர்ஆன் ஓதலுடன் கூட்டம் முறையாகத் தொடங்கிற்று. அதனைத் தொடர்ந்து, 2010 – 2011 நிதியாண்டின் வரவு செலவுக் கணக்கு, சங்கப் பொருளாளரால் வாசிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சங்கத் துணைச் செயலாளர், சங்கப் புதிய நிர்வாகத்தின் கடந்த காலச் செயல்பாடுகள் பற்றிய தொகுப்புரையை வழங்கினார்.

அடுத்த நிகழ்வாக, சங்கத்தின் சட்ட வரைவுகளின் திருத்தங்கள், பரிந்துரைகள் பற்றிய அறிமுக உரையை, அக்குழுவின் தலைவர் மவ்லவி அஹ்மது இப்ராஹீம் காஷிஃபி அவர்கள் நிகழ்த்தினார்கள்.

அதனையடுத்து, பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் சங்கப் புதிய கட்டிடத்தைப் பூர்த்தி செய்வதற்கான பொதுக்குழு உறுப்பினர்களின் நன்கொடைப் பங்களிப்பின் அவசியத்தை வலியுறுத்திச் சிற்றுரை நிகழ்த்தினார்.






இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து, பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துரைகளுக்கான வாய்ப்பளிக்கப்பட்டு, அவர்கள் தம் கருத்துகளை மைக் மூலம் தெரிவிப்பதற்கு வசதி செய்து கொடுக்கப்பட்டது. கருத்துரைகள் – கண்டனமாக இருந்தாலும், வரவேற்பாக இருந்தாலும் – திறந்த மனத்துடன் உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டன. அவை வருமாறு:

  • முன்னதாக சகோதரர் ஒருவர், சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் தேர்வு முறையாக நடக்கவில்லை என்றும், அது பொதுக்குழுவால் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். அதனை வரவேற்ற நிர்வாகிகள், அவருடைய ஆட்சேபனையை இந்தப் பொதுக்குழுவில் முன்வைத்து, அதற்கு ஒப்புதல் பெற்றனர்.
  • அடுத்து பேசிய சகோதரரின் ஆட்சேபனை, சங்க நிர்வாகிகள் வாரத்தில் ஆறு நாட்கள் கூடி, தலாக் போன்ற பிரச்சினைகளில் ஆண்களை மட்டும் விசாரணை செய்கின்றனர். ஆனால், பெண்களின் கருத்தாடல் அங்கே புறக்கணிக்கப் படுகின்றது. அதனால் இந்தத் தீர்வுகள் ஒரு பக்கச் சார்புடையவை; பெண்களையும் பெண்களைக் கொண்டே விசாரணை செய்து, அவற்றின் விவரங்களைப் பெற்றுத் தீர்ப்புச் செய்வதே நல்லது என்பதை முன்வைத்தார். இந்தப் பரிந்துரை பலரால் வரவேற்கப்பட்டது; எதிர்காலத்தில் செயல்படுத்த வேண்டியது என நிர்வாகிகளால் உறுதியளிக்கப்பட்டது.
  • பேரசிரியர் அப்துல் காதர் தனது உரையின்போது, நமதூர் மக்கள் உள்ளூரில் இருக்கும் வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்தவேண்டும் என்று குறிப்பிட்டு, 'ஷிஃபா மருத்தவமனை, காதிர்முகைதீன் கல்வி நிலையங்கள் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிட்டார். இது பற்றிய கருத்துரையில், சகோதரர் ஒருவர் தனது ஆட்சேபனையைப் பதிவு செய்தார். தன் மகளை நிறைமாதக் கர்ப்பிணியாக ஷிஃபாவில் சேர்த்தபோது, அங்கிருந்த மகப்பேறு மருத்துவர் நடந்து கொண்ட விதத்தைக் கடுமையாக விமரிசித்தார்.
  • சங்கத்தின் அறிவிக்கை ஒன்றில், சங்கக் கட்டிட நிதி வசூலாக ஒவ்வொரு வீட்டினரும் கட்டாயம் இருநூறு ரூபாய் கொடுக்க வேண்டும் என்பது பற்றிக் குறிப்பிட்ட பேராசிரியர் அப்துல் காதர், அந்த இருநூறு ரூபாய் என்பது மிகவும் குறைந்தது; அதனால், அந்தத் தொகையைக் கூட்டி அறிவிக்க வேண்டும் என்பதைத் தமது சொந்தக் கருத்தாக எடுத்து வைத்தார். பலர் அதற்கு மாற்றமான கருத்துகளை வெளியிட்டனர். முடிவில், தொகை குறிப்பிடாமல், கூடுதலோ குறைவானதோ, எதுவாயினும் அவர்கள் நன்கொடையாகத் தருவதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதாகக் கோரினர். அதையே பொதுக்குழுவும் ஏற்றுப் பரிந்துரைத்தது.
  • விரைவில் நடக்கவிருக்கும் பேரூராட்சித் தேர்தலில் நமது பகுதிகளில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் சங்கத்தின் அனுமதியையும் ஆதரவையும் பெற்று எதிர்ப்பின்றித் தேர்வு பெறுவதற்கான வாய்ப்புகளை அவர்களுக்கு நம் சங்கம் ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்ற பரிந்துரை மற்றொரு சகோதரர் ஒருவரால் வைக்கப்பட்டு, அது ஒருமனதாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • ஊரின் கட்டிடப் பணிகளுக்கு வெள்ளிக் கிழமைகளில் ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதை, அதற்கான காரணங்களுடன் விரிவாக விளக்கி சகோதரர்ஒருவர் பேசி, அதற்காக சங்கம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, சம்மந்தப்பட்டவர்களிடம் அதனை அமுல் படுத்துமாறு கோரவேண்டும் என்பதை வலியுறுத்தினார். அமர்வில் கலந்துகொண்ட அனைவரும் இதனை வரவேற்றனர்.
  • சங்கத்தின் திருமணப் பதிவேட்டிற்கு மாற்றமாகச் சிலர் தனித்தனிப் பதிவேடுகள் வைத்திருப்பது பற்றியும், அப்படி வைத்திருப்பவர்கள் மீது சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இன்னொரு சகோதரர் கருத்தறிவித்தார். "அப்படிச் செயல்படுவோர் உங்கள் உறவினர்களாக இருந்தால், அவர்களின் நிகழ்ச்சியைப் புறக்கணிப்பீர்களா?" என்ற கேள்வி சங்க நிர்வாகிகளால் எழுப்பப்பட்டபோது, "நிச்சயமாகப் புறக்கணிப்போம்" என்று பலர் குரலெழுப்பினர்.

இவை போன்ற இன்னும் பல ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்களும் நிகழ்ந்தன. கூட்டம் நிறைவடையும் தருவாயில், சங்கக் கட்டிடப் பணிக்காக யார் யார் எவ்வளவு தர முடியும் என்ற கணக்கெடுப்பும் நடந்தது.

இந்தப் பொதுக்குழுக் கூட்டம் எழுச்சியும் ஆர்வமும் பொங்க உறுப்பினர்களுள் பெரும்பாலோர் கலந்துகொண்டு, ஆக்கப் பூர்வமான ஆலோசனைகளை வழங்கி, சங்க நிர்வாகிகளை ஊக்குவிக்கும் விதத்தில் அமைந்துவிட்டது குறிப்பிடத் தக்கதாகும்.

அனலாய் எரித்தெடுக்கும் வெயிலைத் தணிக்கும் விதத்தில், இக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு இரண்டு முறை குளிர் மோரும் தண்ணீரும் வழங்கியதைப் பொதுக்குழு உறுப்பினர்கள் வெகுவாகப் பாராட்டினர்.

நிறைவாக, அஹ்மது இப்ராஹீம் ஆலிமவர்களின் துஆவுடன் கூட்டம் இனிதே முடிந்தது.

தகவல் : முஹம்மத்

பல்வலி என்பது யாதெனில்...! 19

அதிரைநிருபர் பதிப்பகம் | May 30, 2011 | , , ,

சம்பவம் பெரிது... சுருங்கச் சொல்ல முயல்கிறேன்.

ஷார்ஜா:

எந்த நேரம் பவர் கட்டாகும் என கனிக்கமுடியாத கடும் கோடைக் காலம். சின்ன மழை பெய்தாலே ஏரியாகிப்போகும் சாலைகளையும், அவை தானாக வற்றி அல்லது வடிந்து போகும்வரை நிவாரணம் என்ற பெயரில் ஒரு துரும்பைகூட எடுத்துப்போடாத ஷேக்குகளையும் கொண்ட ஒரு பிஸியான நகரம்.

கண்டநேர காட்பரீஸும், எப்பப்பார்த்தாலும் எக்லேர்ஸும், வேண்டி விரும்பி கேன்டியும் என நான் என் சொந்த பற்களுக்கு செய்த இனிப்பான சித்ரவதைக்கெல்லாம் பலி வாங்கும் விதமாக ஒரு இரவு 12 மணிக்கு மேல் வாய்க்குள்ளே ட்ரில்லிங்க் மெஷினை 3000 ரொட்டேஷன் பெர் மினிட்ல சுத்துற மாதிரி என் பல்லே எனக்கு வலித்தது.

பல்வலி என்பது யாதெனில், அது ஒரு பக்கா வலி; எத்தனை இருக்க்க்கிப்பிடித்தாலும் சற்றேனும் இறங்கா வலி; உடனே நிருத்தாவிடில் உலகயே வெருக்க வைக்கும் உச்சகட்ட வலி.

எனவே, அந்நேரம் திறந்திருந்த மருந்தகத்தை அனுகியபோது அவன், "வலி இருந்தால் பல் மருத்துவமனையில் எந்த அங்க்கிளிடம் போனாலும் ஆன்ட்டி பையாட்டிக்தான் தருவான். அதனால நான் தரும் ஆன்ட்டி பையாட்டிக்கும் வலி நிவாரணியும் 5 நாட்கள் சாப்பிட்டுட்டுப் போனால் உடனே வலிக்கிற பல்லைப் பிடிங்கிடலாம்" என்றான்.

ஆள் பார்க்க வறுமை காரணமாக BDS பாதில விட்டமாதிரி தெரிந்ததாலும், வேறு b, c, d என்று எந்த ஆப்ஷனும் தராததாலும் என் கடைவாய்ப்பல் அவசர அவசரமாக "a" "சரி" என்ற பொத்தானையே அழுத்தியது. அடுத்த 10 நிமிடத்தில் தூங்கிப்போனேன்.

5 நாட்களில் 3 snikkers, ரெண்டு kitkat தவிர வேறு சாக்லேட்டா...மூச். 6வது நாள் பல் மருத்துவமனையில், "அவன் கொடுத்த ஆன்ட்டி பையாட்டிக்கெல்லாம் செல்லாது. நாங்க கொடுத்தாதான் நாங்க புடுங்குவோம் (ஹிந்தில இவ்வளவு கலீஜா ஒலிக்காது)" அப்டினு சொல்லி, ஃபார்மஸி காரன் சொன்னதையே காப்பி பேஸ்ட் செய்தான்.

மேற்கொண்டு 5 நாட்களும் குறைந்த ஸுகர் கன்ஸம்ஷனில் கழிய ப்ராஜெக்ட்டின் (பல்லு புடுங்கிறதெல்லாம் ஒரு ப்ராஜெக்ட்டாய்யா) 11வது நாள்:

பாதிக்கப்பட்ட பல்லின் இப்புறமும் அப்புறமுமான முரசினுள்ளே ஆஆஆசி...ஸாரி ஊசி குத்தி (வலில உளறிட்டேன்) கொஞ்ச நேரம் குந்த வச்சாங்க.

டி வியில் ஏதோ மலையாளச் சேனலில் விளம்பரத்தில், "இந்த பேரீச்சம்பழ சிரப் குடித்தால் உங்கள் இர்ரெகுலர் பீரியட் பிரச்னைகளையெல்லாம் சீராக்கும்" என்று பினாத்தினார்காள். இவர்களை விட்டால் நமக்கும் சேர்த்து ரெகுலேட் செய்வதாகக்கூடச் சொல்லிவிடுவார்களோ என்று பயமாக இருந்தது.

பிறகு என்னை அழைத்து ஆயுதங்களோடு கொஞ்சங்கூட அன்பில்லாமல் முதலில் பிக்பாக்கெட்காரன் பர்ஸை உருவுகிறமாதிரி இதமா முயன்றான். பல் வரல. வராததற்குக் காரணம் அந்தப்பல்லுக்கும் எனக்குமான பால்ய காலந்தொட்ட ஸ்நேகமானு எனக்குத் தெரியாது.

அடுத்து, கயிறு இழுக்கும் போட்டியில் ஜெயிக்க முயன்றான், ம்ஹூம். பனங்கெழங்கு பிடிங்கினான், ம்ஹூம், குடக்கல்லாய் ஆட்டி அசைத்தான்,ம்ஹூம், கொத்துத்தலைமுடியாய் இழுத்தான், ம்ஹூம், பட்டம் விடும் நூலென வெட்டி வெட்டி இழுத்தான், ம்ஹூம், கடைசி முயற்ச்சியாய் சங்கிலியால் கட்டி 50 டன் க்ரேன் கொண்டு இழுத்தான், ம்ஹூம் பல் வரவே இல்லை. மேலே ஒவ்வொரு கமாவுக்கும் இடையில் "ஆ, ம்மா, அல்லா, வலி உயிர் போகுதே" நு சேர்த்து வாசிக்கவும்.

பிறகு, கையில் ஒரு டெஸ்ட் இஞ்ஜெக்க்ஷன் போட்டு மீண்டும் டி வி முன்னால் உட்கார வச்சாங்க. டெஸ்ட்ல 10 நிமிஷத்தில பாஸாயிட்டேன் (ஹய்யா). பாஸானதும் இப்ப ஹெவி டோஸ் வலி நிவாரணி கொடுத்து கோட்டை கழட்டி வச்சிட்டு சட்டையின் கையை மடிச்சு விட்டுட்டு பயமுருத்தறமாதிரி மீண்டும் புடுங்க முயன்றான். அந்தப்பல்லுக்கு உள்ளங்கால்வரை வளர்ச்சியோ என்னவோ, அசைந்து கொடுத்ததே தவிர வராம டாக்டருக்கு பெப்பே காட்டியது.

இப்ப டாக்டர் என்னை ஒரு ஜந்துவைப்போல பார்த்துவிட்டு, "புடுங்கும் முயற்சியில் முரசு புண்ணாகிவிட்டது. இன்னொரு கோர்ஸ் amoxillin எடுத்துட்டு 5 நாள் கழிச்சி வா" வென ஹிந்தினான்.

"நாளன்னிக்கு ஊருக்கு போறேனே"ன்னு நானும் ஹிந்தினேன். அப்ப ஊர்லேயே புடுங்கிக்கோன்ட்டான்.

ஊர்:

மிக பரிச்சயமான பல் டாக்டர், என் நண்பரும்கூட, அவரிடம் மொத்த கதையும் சொல்லி முடிக்க அவரும் sharjah வசனங்களை வழிமொழிந்துவிட்டு, மீண்டும் ஆன்ட்டி பயாட்டிக் கொடுத்துவிட்டு கூடுதலாக ஒரு எக்ஸ்ரேயும் எடுத்து பார்ட்துவிட்டு "பல் நல்லாருக்கு...(கவனிக்கவும்..எக்ஸ்ரேயை பார்த்துவிட்டு) எடுக்க வேணாம். மருந்து சாப்பிட்டா போதும்" என்றார்.

சாப்பிட்டும் வலி போகல.

இப்ப தஞ்சாவூர்ல உள்ள எம் டி எஸ்ஸிடம் காட்ட நண்பர் சொன்னதால்...

தஞ்சாவூர்:

கதையெல்லாம் கேட்டுட்டு எற்கனவே எடுத்த (கவனி... அதே எக்ஸ்ரேயை பார்த்துவிட்டு) என்னிடமும் காட்டி பல் உடைந்துவிட்டதை உறுதி செய்துவிட்டு பேச்சு பேச்சாகவே இருக்கும்போதே பூ கொய்வதுபோல பல்லை கொய்து கையில் தந்துவிட்டார்.

எனவே, நான் கற்ற நீதி: வியாதிக்கு ஏற்ற சரியான மருத்துவரை தேடிப் போவது சரி.

ஆதாரம்: என் கையில் போட்ட டெஸ்ட் ஊசி வெட்டிவிட்ட இடம்போல இப்பவும் தழும்பா இருப்பதை அடுத்த விடுமுறை நாளில் நீங்கள் நண்பர்களோடு வந்து கண்டு களிக்கலாம்.

- எஞ்சிய பற்களுடன் சபீர்

முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் சில தொண்டு நிறுவனங்கள்‏ 4

அதிரைநிருபர் | May 29, 2011 |

அல்லாஹ்வின் திருப்பெயரால்....
 
அன்பானவர்களே.
 
12 மற்றும் 10 வகுப்புகளின் தேர்வு முடிவுகள் வெளிவந்து நம் சமுதாய மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள். கல்வி கற்க பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற உயரிய நோக்கில் இஸ்லாமியக் தொண்டு நிறுவனங்கள் பல மாணவர்களுக்கு கல்வி உதவிகள் செய்து வருகிறார்கள். இதே அவர்களின் விபரம்.
 
என்னால் முடிந்ததை உங்களுக்கு பகிர்ந்துள்ளேன். மேலும் கல்வி உதவி செய்பவர்கள் பற்றிய செய்திகள் இருந்தால் பகிர்ந்துக்கொள்ளுங்கள். கல்வி கற்க ஆர்வமிருந்தும் பொருளாதாரமில்லாதா மாணவர்கள் தகுதியானவர்கள் மட்டும் இந்த கல்வி உதவியை பெற்று பயனைடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
 
1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை, அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 தொலைபேசி: 2829 5445.
 
2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க், ராயபேட்டைநெடுஞ்சாலை சென்னை - 14 தொலைபேசி: 94440 52530
 
 3. சீதக்காதி அறக்கட்டளை,  688 , அண்ணா சாலை, சென்னை - 06
 
 4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன், 688 , அண்ணா சாலை, கிரீம்ஸ் ரோடு, சென்னை - 06
 
 5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் , 4, மூர்ஸ் ரோடு, சென்னை - 06 (ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்)  Phone:+91-44-42261100 Fax: +91-44-28231950 Download Aplication
 
 6. சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட், 82,Dr. Radha Krishnan Road,Mylapore, Chennai, 600004, Phone : +91-44-28115935 Mob : 93805 31447
 
 7. முஹம்மது சதக் அறக்கட்டளை , 144/1 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34. Tel: 044-2833 4989, 2833 4990 http://www.sathaktrust.com
 
 8. மெஜெஸ்டிக் பவுண்டேசன், 117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை ,சென்னை - 02
 
 9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட், ஜபார்ஷா தெரு, திருச்சி.
 
 10. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், 118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை, சென்னை - 03
 
 11. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட், டி - பிளாக் 10 ( 23 ) 11 வது தெரு, அண்ணா நகர் - சென்னை 40 போன் 98400 80564
 
 12. அஸ்மா காசிம் அறக்கட்டளை, மாண்டியத் சாலை, எழும்பூர் - சென்னை – 08
 
 13. ராஜகிரி பைத்துல்மால், கீழத் தெரு, ராஜகிரி - 614 207
 
 14. டாம்கோ, 807, - அண்ணா சாலை, 5 வது மாடி, சென்னை
 
 15. ஹாஜி. அஹமது மீரான், (Managing Director Professional Courier’s), 22, மகாராஜா சூர்யா ராவ் ரோடு, ஆழ்வார்பேட்டை - சென்னை – 18
 
 16. மியாசி, புதுக் கல்லூரி வளாகம்,பீட்டர்ஸ் ரோடு சென்னை – 14
 
 17. S I E T கே.பி. தாசன் சாலை, தேனாம்பேட்டை, சென்னை .
 
தகவல் உதவிக்கு நன்றி: நூஹு.

இத்தகவலில் ஏதேனும் தவறு இருந்தால் பின்னூட்டத்தில் திருத்தத்தை தெரிவிக்கவும்.

அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக.

 இங்ஙனம்,

-- மீராஷாஹ் ரஃபியா

சீறப்படும் சமச்சீர் புத்தகங்கள் ! 10

அதிரைநிருபர் | May 28, 2011 | , ,

வா.. வின் ஓவியம்



கல்வி அமைச்சகம் கீழ்
பல பாடத் திட்டங்கள்;
‘மாணவர் ஒரே நிலை;
கல்வியும் ஒரே நிலை!’
என்ற சீரிய நோக்கின்
விளைவே சமச்சீர் கல்வி!

எல்லாத் தரப்பிலும்
ஏகபோக வரவேற்பு!
புது நூல்கள் அச்சாகி,
பள்ளிகளுக்கு வந்தன.
வந்ததோ வந்தது தேர்தல்!
ஆட்சி மாற்றமும் வந்தது!

மீண்டும் அம்மாவின் எழுச்சி!
கலைஞர் திட்டமோ வீழ்ச்சி!
‘சமச்சீர் கல்வி வேண்டும்,
பாடங்கள் மாற வேண்டும;’
இது புதிய அரசின் கொள்கை!

மீண்டும் பழைய புத்தகங்கள்
மாணவர்க்கு வழங்கப்படும்.
விலைவாசி உயர்வால் மக்கள்
வாங்கிய அடிகளின் அத்தனை
வரிகளும் மக்களின் முதுகில்!

பத்தாம் வகுப்பு நூல்களின்
நகல் எடுத்துப் பகல் முதுழும்
பாடம் நடத்தின பல பள்ளிகள்!
விழலுக்கு இறைத்த நீராயிற்று!

பாடங்களின் வழிகாட்டி நூல்களை
மாணவர் தந்து உதவிக் கொள்வர்.
அவ்வளவு நூல்களும் கடைகளில்
சங்கமமாகி, சுருள்களாயிப் போயின!

வழிகாட்டி நூல்கள் வெளியாகவில்லை;
விரைவில் கிடைப்பது குதிரை கொம்பே!
மாணவர், பெற்றோர், ஆசிரியர் அவதி;
கண்ணான கல்வியோ கரை காணா அகதி!

இது அரசின் முழு மூச்சு முழக்கம்:
‘தீண்டாமை ஒரு பாவச்செயல்;
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்;
தீண்டாமை மனிதத் தன்மையற்ற செயல்.’

பழைய அரசின் திட்டங்களைத் தீண்டாமை
பாவச்செயல், பெரும் குற்றம் அல்லவா!
புத்தகம், சட்டசபை பழையது மேல் எனில்
பழைய ஆட்சியே மேல் என மக்கள்
சிந்திக்க மாட்டார்களா என்ன!

-- உமர்தம்பிஅண்ணன்

கற்பவனாக இரு / கற்பிப்பவனாக இரு

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ! 10

அதிரைநிருபர் பதிப்பகம் | May 27, 2011 | ,


வெள்ளிக் கிழமை காலை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன அதில் 500க்கு 496 மதிப்பெண்களுடன் 5 பேர் மாநிலத்திலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.




இதில் நம் சமுதாயத்தை சேர்ந்த முஸ்லிம் மாணவரான சதாம் உசேன் மாநிலத்திலே இரண்டாம் இடம் பெற்ற 11 பேர்களில் ஒருவராகவும், மாணவியான ஷபனா பேகம் மாநிலத்திலே மூன்றாம் இடம் பெற்ற 24 பேர்களில் ஒருவராகவும் வந்துள்ளனர். சமூக அறிவியலில் 756 பேர்கள், அறிவியலில் 3,677 பேர்கள், கணிதத்தில் 12,532 பேர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அதேபோல முதல் மூன்று இடங்களை, இத்தனை மாணவர்கள் பகிர்ந்து கொள்வதும் இதுவே முதல் முறையும் சாதனையும் ஆகும்.


இரண்டாவது இடம்
11 மாணவ-மாணவியர்கள் மாநிலத்தில் இரண்டாவதாக வந்துள்ளனர். இதில் மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் படித்த ஏ.சதாம் உசேன், இரண்டாம் இடத்தை அடைந்து நம் சமுதாயத்திற்கு பெருமையை தேடிதந்துள்ளார்.

மூன்றாவது இடம்
24 மாணவ-மாணவியர்கள் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர். இதில் பல்லாவரம் செயின்ட் தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த எம்.ஷபனா பேகம் மூன்றாம் இடத்தை அடைந்து நம் சமுதாயத்திற்கு பெருமையை தேடி தந்துள்ளார். இது கல்வியில் பின் தங்கியுள்ள நம் சமுதாயத்தை சேர்ந்த மற்ற மாணவர்களுக்கு ஓரு ஊக்கத்தையும் உத்வேகத்தையும் தந்துள்ளது.

மெட்ரிகுலேஷனில் 4 பேர் முதலிடம்
திருப்பூர் மாவட்டம் ஜெயபாரதி, ஈரோடு மாவட்டம் ஹர்ஷினி, தர்மபுரி மாவட்டம் அனிதா, செங்கல்பட்டு மாவட்டம் அனிக்ஷா ஆகியோர் தலா 493 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். 12 பேருக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. 22 பேருக்கு 3வது இடம் கிடைத்துள்ளது. மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதியவர்களில் 94.7 சதவீதம் பேர் பாஸ் செய்துள்ளனர். ஆங்கிலோ இந்தியன் பாடப் பிரிவில் தேர்வு எழுதியவர்களில் 95.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மாணவர்கள் 92.6 சதவீதம் பேரும், மாணவியர் 97.60 சதவீதம் பேரும் பாஸாகியுள்ளனர்.

2-வது இடம்
பைரோஸ் நகாத் (492) வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, முகப்பேர், பொன்னேரி.

வழக்கம் போல் அதிரை பள்ளி மாணவ மாணவியரும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்கள். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை பொருத்தே ஒவ்வொரு மாணவர்களின் வருங்கலாம் நிர்ணையிக்கப்படுகிறது என்பது எல்லோராலும் ஒத்துக்கொள்ளட்பட்ட உண்மை.

Name
School
Marks
Percentage
Al Jazeera
Imam Shafi Mtr.School
474
94.80%
Fahima Fathima
Imam Shafi Mtr.School
473
94.60%
Waseema
Imam Shafi Mtr.School
472
94.40%
Sakeera
K.M.Hsc School - Girls
482
96.40%
Nafeesa
K.M.Hsc School - Girls
481
96.20%
Malarvizhi
K.M.Hsc School - Girls
468
93.60%
Riasudeen
K.M.Hsc School - Boys
459
91.80%
Vincent
K.M.Hsc School - Boys
444
88.80%
Shaik Alavudeen
K.M.Hsc School - Boys
442
88.40%
வெற்றிபெற்ற மாணவ செல்வங்களுக்கு நம் அதிரைநிருபர்-குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் சிறப்புடன் படித்து பெற்றோர்களுக்கும், சமுதாயத்துக்கும், நம் நாட்டிற்கும் நற்பெயர் பெற்றுத்தர வல்ல இறைவனிடம் து ஆ செய்கிறோம்.
- அதிரைநிருபர் குழு

வித்தியாசமானவர்கள் - பகுதி 3 24

ZAKIR HUSSAIN | May 26, 2011 | ,

 எப்போதோ நடந்த விசயங்களுக்கு இன்றைய வரை மனதில் வைத்துக்கொண்டு தானும் முன்னேராமல் மற்றவனையும் முன்னேராமல் தடுக்கும் "பிரேக் இன்ஸ்பெக்டர்" கள் நிறைந்த உலகம் இது. இதில் காமெடி என்னவென்றால் ஒரு அட்சரம் கூட பிசகாமல் தான் இப்படி ஆகிவிட்டதற்கு தான் எந்த விதத்திலும் காரணம் இல்லை என்று கல்வெட்டு மாதிரி சொல்வார்கள்.

சில வருடங்களுக்கு முன் [ இங்கேயும் ஃபிளாஸ்பேக் எல்லாம் எழுதுவோம்ல'] எனக்கு தெரிந்த ஒருவர் தான் முன்னேராமல் போனதற்க்கு காரணம் , 'கப்பலுக்கு போகும் போது குறுக்க பண்ணி கிராஸ் ஆயிடுச்சி'... அதுதான் காரணம் என்றார். இதை சொன்னவர் அதிராம்பட்டினத்து காக்கா. அதை ஆர்வத்துடன் கேட்டது முத்துப்பேட்டை நானா. இந்த முத்துப்பேட்டைக்காரர் திடீரென்று மண்டையில் பல்ப் எரிய..எப்படி காக்கா தண்ணிக்கப்பலுக்கு குறுக்கே பண்ணி கிராஸ் பன்னமுடியும்..லாஜிக் உதைக்குதே என இஸ்ரோ விஞ்ஞானி ரேஞ்சுக்கு கேட்டார்.

உடனே அதிரை ஆள்..'சொல்ரதை சரியா கேளுங்க... நான் நடக்கும்போது கிராஸ் ஆனதுன்னு சொன்னேன்... கப்பல் போகும்போது நடுக்கடலில் கிராஸ் ஆனுச்சினா சொன்னேன்" என்றார். இந்த விசயம் நடந்தது இந்தியா சுதந்திரம் அடைய முன்னாடி. தெரியுமா என்றார். உடனே இந்த முத்துப்பேட்டைக்காரர் சொன்னது'..." இருந்தாலும் காக்கா இத்தனை வருசத்திலெ அந்த பண்னி செத்திருக்குமே காக்கா..இன்னுமா நீங்க முன்னேர அந்த பண்ணி தடையா இருக்கு?' என்று ஒரு குரோர்பதி கேள்வி கேட்டாரே....

வாழ்க்கையில் பணம் அதிகம் சம்பாதிக்க சிலர் எடுத்திருக்கும் ஒப்பற்ற முயற்ச்சிகளை பார்த்தீர்களானால்Millionair Mindset நடத்தும் வெள்ளைக்காரன் கூட தலையில் துண்டுபோட ஆரம்பித்துவிடுவான்.[ அவைங்களும் சரியா சொல்ரானுகளானு அவனுகளுக்கெ வெளிச்சம் ]

# ஒப்பற்ற முயற்சிகளை பார்ப்போம்.

  • ராசியான மணிபர்ஸ் என்று நாய் விழுந்து குதறியமாதிரி ஒரு பர்ஸ் வைத்திருப்பார்கள்.
  • தலைமாட்டுக்கு மேல் உள்ள சில படங்களுக்கு பத்தி காண்பிப்பார்கள்.[ பில்கேட்ஸ் , அம்பானி ஆபிசில் குத்துமதிப்பா ஒரு 200 படமாவது இருக்கனுமே காக்கா]
  • கல்லா பெட்டியில் மவுலூது ஒதிய கேசட்டை வைத்திருந்த ஒருவர் சொன்னது...'பணம் வரும்'
  • கையில் வைத்திருக்கும் சில நூல் சமாச்சாரங்கள் கஸ்டமரை கொண்டுவந்து சேர்க்கும் என்று ஒரு ஆள் அமெரிக்காவின் சிட்டி பேங்க் குரூப்பில் கிரடிட்கார்ட் பகுதியின் ஜெனரல் மேனேஜரையே நம்பவைத்து ஜல்லியடித்ததை பார்த்து அசந்து விட்டேன்.
  • பிரிதொருவர்... தான் போட்டிருந்த பெல்ட் ரொம்ப அறுதபழசாகிப்போனதை சொல்லிக்காட்டியவரை ராஜபக்சேயை பார்ப்பது போல் பார்த்தார். சிலருக்கு வருமானம் அதிகம் இருந்தாலும் தனக்கு செலவுப் செய்து கொள்வதை அது அத்யாவசியமாக இருந்தாலும் வேஸ்ட் என நினைப்பார்கள்.
  • முன்பு பழக்கப்பட்ட ஒருவர் ...அவரின் வருமானத்தில் ஒரு நாளைக்கு ஒரு லேப்டாப் வாங்கலாம், கணக்கில் திறமையான ஆள். இருந்தாலும் அவரின் பாக்கெட்டில் இருக்கும் சின்ன சின்ன பேப்பர்களுடன் கொஞ்சம் பணம் , பார்க்கிங் சீட். இன்னபிற பேப்பர் சமாச்சாரங்களை எப்படி மெயின்டைன் செய்கிறார் என்பது ஒரு மிகப்பெரிய கேள்வி.
  • இங்கு ஒருவர் [உறவினர்] இருந்தார், 10 நிமிடம் அவரிடம் பேசினால் குறைந்தது 20 பிசினஸ் அவரால் செய்ய முடியும் என்பதுபோல் பேச்சு இருக்கும். நானும் ஒரு மரியாதைக்கு அவர் பேசுவதையெல்லாம் அக்கரையுடன் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் போன பிறகு அவரது நண்பர் என்னிடம் சொன்னது
              ' என்ன சொல்றாப்லெ...ரொம்ப அள்ளிவிடுவானே???'

              'ச்சே அப்படியெல்லாம் இல்லெ"

' எனக்கு தெரியும்..இவன்லாம் விட்டா ரால் வித்தே ராக்கெட் வாங்கிடலாம் நு சொல்வான் ... தமிழில் புதுக்கவிதை , மரபுக்கவிதை மாதிரி 'வெடப்பு கவிதை' நு ஒன்னு இருக்கும்னு அப்பதான் தெரிஞ்சது.

காருக்குள் உட்கார்ந்து “ YOU CAN DO IT.. I CAN DO IT” என ஒருவர் கத்திகொண்டிருந்தார்...இன்னொரு ஏஜன்சியில் இருந்தவராகையால் செமினார் சமயங்களில் பார்க்கும் வாய்ப்பு அதிகம். ஆனாலும் கத்திய இடம் ஒரு டிராபிக் லைட் அருகில். எதற்க்கு கத்தினீர்கள் அன்று என கேட்டபோது ..அப்போதுதான் வாழ்க்கையில் முன்னேர முடியும் என்றார். அவ்வளவும் POWERFUL POSITIVE AFFIRMATION தெரியுமா என்றார்.

பலகீனமான எண்ண ஓட்டம் உள்ளவர்கள் அதை மறைக்க கத்துவார்கள் என்பது "ஜென் [ZEN]' தத்துவம்.

ZAKIR HUSSAIN

துபாயும் வாக்குச்சாவ‌டியும்... 24

அதிரைநிருபர் பதிப்பகம் | May 26, 2011 | ,

நான் துபாய்க்கு போன புதிதில் பல இடங்களுக்கு வேலை தேடிப்போனோம்.
தேடுன உடனே மேனேஜர் பதவியா கொடுப்பாய்ங்க. ஒன்னும் உருப்படியா சிக்கல.. வந்து ரெண்டு மாசமாச்சுனு.. புலம்பல்தான் ஜாஸ்தி.. மூணுமாசத்துல விசிட்டும் முடிஞ்சிரும்.. விசிட்ட ரினீவ் பண்ணனும்.. இப்படிய கவலைகள் மட்டுமே நிறைஞ்ச நேரம் அது.

அப்படியான சமயத்துல ஒரு மாசம் மட்டும் ஒரு வேலை இருக்குன்னு பேப்பர்ல விளம்பரத்த பார்த்தவுடனே நானும் சக வேலைதேடிகளும்? அங்கே சென்றோம். அந்த கம்பெனி கார்கோ கம்பெனி. சொன்னபடியே இவ்வளவு சம்பளம், இதான் வேலை என்றார்கள். அதன்படியே கொடுத்தார்கள். {கவனிக்க நாங்க எல்லோரும் DEGREE, DIPLOMA படித்தவர்கள்..} வேலையும் நல்லபடியாகவே போனது..

எனக்கு பார்கோட் ஸ்டிக்கரை ஒவ்வொரு பேக்கிங்கிலும் ஒட்ற வேலை... நான் லஞ்ச் ப்ரேக்கில் (1 ஹவர்) சீக்கிரமா சாப்பிட்டுவிட்டு அந்த பகுதியில் அமைந்திருக்கும் அனைத்து கம்பெனிகளுக்கும் என்னுடைய பயோடேட்டாவை (சி.வி) கொண்டுப்போய் கொடுத்துவிட்டு வருவேன். அப்படி கொடுத்த கம்பெனிகளில் ஒரு அட்வர்டைசிங் கம்பெனியில் இருந்த ஒருவர்(ம) ("ம- இவர்களில்லாத தேசமே கிடையாது")

என்னுடைய சி.வியை பார்த்துவிட்டு நாளைக்கு வந்து என்னைப் பாரு என்றார்.
அவர் சொன்னபடி அடுத்த நாளும் போனேன். இப்ப எம்.டி. இல்ல வெளியிலே போய்ட்டாரு இப்ப முடியாது நாளைக்கு கண்டிப்பா வந்துருன்னாரு.. என்னடா இப்படி அலைய விடுறாங்களேன்னு சலிச்சுக்கிட்டே அடுத்த நாளும் (எதையும் தாங்கிற இதயம்) போனேன். அப்பவும் எதையாவது காரணத்த சொல்லிக்கிட்டே இருந்தான்(ர்).

எனக்கு கண்டிப்பா தெரிஞ்சிப்போச்சி இவன் நம்மள அலையவிட்டு வேடிக்கைப் பார்க்கிறான் இவனுக்கு பாடம் கற்பிக்கனும்னு.. அந்த சமயம் மறுபடியும் என் சி.வி.யை பார்த்துக்கிட்டே கேள்வி கேட்டான்... இங்கே ஒன்னு சொல்லிக்கிறேன் என் சி.வி.யில தெரிந்த மொழிகளில் ஆங்கிலமும், தமிழும் என்று குறிப்பிட்டு இருந்தேன்.. இதையெல்லாம் விட்டுப்புட்டு அவன் கேட்ட கேள்வி இதான்..

"உனக்கு அரபி தெரியுமா?"

"எதிர்த்தாப்ல வந்தா தெரியும், பேசத் தெரியாது"

அன்னைக்கு அடிச்ச வேப்பிலைதான்,

தமிழன்டா யார்னு புரிய வெச்சுட்டேன்...

--------------------------------------------------

நாம் ஒட்டுப்போடுற இடத்துக்கு ஏன் "வாக்குச் சாவடின்னு" பெயர் வந்தது?

பணத்தை வாங்கிட்டு ஒன்னுக்கும் பிரயோஜமில்லாதவனுக்கு "வாக்கைப்போட்டு அதை சாவடிக்கிறோம்'ல அதனால வந்திருக்கும்...

- அஹ்மத் இர்ஷாத்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு