ஒருவர் இன்னொருவரை ஏமாற்றி போலியான உறவுமுறையை ஏற்படுத்திக்கொண்டு தங்களின் அற்ப உடல் இச்சையை தனித்துக் கொள்வதையே “கள்ளக்காதல்” என சமூகத்தால் குறிப்பிடப்படுகிறது, ஏன் இதுவும் விபச்சாரமே !
1. மனிதாபிமானம், அன்பு, பாசம், குழந்தைகள், அவர்களின் எதிர்காலம் என்று எதையுமே பொருட்படுத்தாமல் சுயநலம், சபலம், காமம், துரோகம் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் கேடு கெட்ட மனிதர்கள் ஒரு வகையாகவும்.
2. கணவன் கடல் கடந்தோ அல்லது ஊர்விட்டு ஊர் சென்று எங்கெல்லாம் போய் குடும்பத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கையில் இங்கே கள்ளக்காமுகனோடு தொடர்பு ஏற்படுத்தி அவர்களின் போலியான அன்பையும், பாசத்தையும் உண்மை என நம்பி தனது குடும்ப அந்தரங்க ரகசியங்களைச் சொல்லி அவர்களிடம் ஏமாந்து போனவர்கள் மற்றொரு வகையாகவும்.
3. பிள்ளைகள் கல்வி கற்க வேண்டி வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடம். கல்லூரி, ட்யூசன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங் கிளாஸ், ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே, கிளப், பஃப்பே, இன்பச்(!!?)சுற்றுலா என்று போகும் இடங்களில் அவர்கள் “காதல்” எனும் கர்ம வலையில் சிக்கிக்கொண்டு இந்த இனம்புரியாத வயதில் சின்னா பின்னமாகி போனவர்கள் ஒரு வகையாகவும்.
4. பொழுதைப் போக்குகின்ற விழாவில் ஏற்பட்ட சந்திப்பு, அலைபேச் எண்கள் பறிமாற்றம், இணையத் தொடர்புகள் மூலம் ஏற்பட்ட தொடர்பு போன்றவற்றால் வீட்டை விட்டு ஓடிப் போனவர்கள் இன்னொரு வகையாகவும்.
5. குடும்ப உறுப்பினர்கள், அக்கம்பக்கத்தினர் சிலரால் ஏற்பட்ட முறையற்ற தொடர்பைக் கொண்டுள்ளவர்கள் மற்றொரு வகையாகவும்.
என சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.
பிள்ளையின் வாழ்க்கை, குடும்ப மானம், இஸ்லாத்தின் கண்ணியம். இவற்றை முன்னிறுத்தி. கவனமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.. இவ்விசயத்தில் சிந்தித்து செயல்பட வேண்டியது ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் மிக மிக அவசியம்.
தங்கள் பிள்ளைகளுக்கு மார்க்கத்தை கற்றுக்கொடுத்து அவர்களின் வாழ்வில் முன்னேற்றம் அடைய உறுதுணையாக இருங்கள். தங்களின் பொறுப்பை மறந்து, தங்களது பிள்ளைகளுக்கு ”செல்லம்” ”பாசம்” “ஃபேஷன்” என்ற பெயரில் சுதந்திரம் கொடுத்து. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வதாக கருதி அவர்கள் வழிகெட காரணமாக இருக்க வேண்டாம்.
பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை தொழுகையை நிலை நிறுத்தும்படி அடிக்கடி ஏவுங்கள், அதனை நினைவூட்டிக் கொண்டே இருங்கள் ”தொழுகை மானக்கேடான காரியத்தை விட்டும் பாதுகாக்கும்” இந்த நபி மொழியை அறியாத அதிரையர் யாரும் உண்டா ? அப்புறம் ஏன் இரட்டை வேடம் !??
பெற்றோர்களே !! உங்கள் பிள்ளைகளை நரகத்தின் தீயிற்கு இறையாக வளர்க்காதீர்கள். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு எதிராக சாட்சி சொல்லும் நிலைக்கு ஆகிவிடாதீர்கள். இவ்வுலகில் - நாகரிகத்தையும், கவுரவத்தையும், அந்தஸ்தையும் விட,
ஈமான் (இறை நம்பிக்கை)
மானம்
மரியாதை
குடும்ப நலன்
இவைகள் அனைத்தையும் விட தூய்மையான இறையச்சம் அதி முக்கியம்.
அல்லாஹ். நம் அனைவரையும். மானக்கேடான விஷயத்தில் இருந்து பாதுகாத்து, ஈமானோடு வாழவைத்து முஸ்லிமாக மரணிக்க செய்வானாக! ஆமீன்.
சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...


