Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label அதிரை. Show all posts
Showing posts with label அதிரை. Show all posts

வாங்க! வாங்க! இந்த சஹனில் உட்காரலாம். 8

அதிரைநிருபர் பதிப்பகம் | January 06, 2017 | , , , , , ,

“தமிழன் என்றொரு இனம் உண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு “ என்று நாமக்கல் கவிஞர்  இராமலிங்கம் பிள்ளை பாடினார். 

தமிழர்களுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு இனத்தோருக்கும் ஒரு சிறப்பான அல்லது தனியான குணம் இருப்பது இயல்பே. கேரளாக்காரர்களுக்கும், வங்காளத்தைச் சேர்ந்தோருக்கும், ஆந்திராக்காரர்களுக்கும் , மார்வாரிகளுக்கும் கூட  தனிப்பட்ட சில பழக்கங்கள் இருக்கின்றன.

இன ரீதியாக மட்டுமல்ல, மொழி ரீதியாக மட்டுமல்ல, சாதி ரீதியாக மட்டுமல்ல, ஊர்கள் ரீதியாகவும் சில பழக்கங்கள் இந்த மண்ணில் வாழும் மைந்தர்களோடு ஊறிப் போய் இருக்கிறது. அந்தப் பழக்கங்கள் அந்த குறிப்பிட்ட ஊரின் மக்களோடு ஒன்றிவிட்ட அடையாளங்கள்.

சில ஊர்களில் சில உணவு வகைகள் ஊர்பெயருடன் சிறப்பாக குறிப்பிடப்படும். உதாரணங்களாக , மணப்பாறை முறுக்கு, சாத்தூர் சேவு, காஞ்சிபுரம் இட்லி, திருநெல்வேலி ஹல்வா, ஸ்ரீ வில்லிப் புத்தூர் பால்கோவா, திருவையாறு அசோகா, கீழக்கரை தொதல், பரங்கிப்பேட்டை தூள் சம்சா , அதிராம்பட்டினம் பீட்ரூட் ஹல்வா  போன்றவைகளும்  விருந்து அயிட்டங்களில் தோப்புத்துறை சொறி ஆணம், அய்யம்பேட்டை வெள்ளை மட்டன் குருமா, அதிராம்பட்டினம் கத்தரிக்காய்பச்சடி, பரங்கிப்பேட்டை கோழி சம்மா, முத்துப் பேட்டை   தாளிச்சா , கூத்தாநல்லூர் கொத்துக்கறி கூட்டு ஆகியவையும் புகழ்பெற்றவை. 

அதே போல வாணியம்பாடி,  ஆம்பூர் பகுதி பிரியாணி, திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி, மதுரை மாலை மட்டன் ஸ்டால் அயிட்டங்கள், விருதுநகர் புறாக்கறி, மதுரை சித்திரக்காரத்தெரு மண்பாண்ட சமையல் அயிட்டங்கள், நாஞ்சில் நாட்டு இடலக்குடி நெய்மீன் கறி ஆகியவையும் சீரும் சிறப்பும் சுவையும் வாய்ந்தவை. 

செட்டி நாட்டு சமையல் என்று தனிச்சுவையுடைய சாப்பிடும் வகையறாக்கள் , பாண்டிய நாட்டு பனியார வகைகள் ஆகியவற்றை நாம் யாருக்கும் அறிமுகப்படுத்த வேண்டிய தேவை இல்லாத அளவுக்கு அவை புகழ்பெற்றவை. 

மாநில ரீதியாகவும் உணவு வகைகள் தனித்தனி சுவை அம்சங்கள் பெற்று இருக்கும். கர்நாடகாவில் சாம்பாரில் வெல்லம் கலப்பார்கள் . ஆந்திராவிலோ காரம் நாக்கை துளை போட்டுவிடும். உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களில்  நெய்யும் எண்ணெயும் வெண்ணையும் , கடித்துக் கொள்ள பச்சை மிளகாயும் வெங்காயமும் இல்லாமல் உணவு இருக்காது. உள்ளே இறங்காது. தயிரில் புகுந்து விளையாடுவது , முழு உருளைக் கிழங்கை அவித்து அதில் மிளகுப் பொடியைத்தூவி சாப்பிடுவது  பஞ்சாப் , ஹரியானா மாநிலங்களில் மாலை நேர                  சாலையோரக்கடைகளில்  நாம் காணும் காட்சிகள். சாட் மசாலா , பானி  பூரி போன்றவையும் வடமாநிலங்களில் அனைவராலும் விரும்பி ரசித்து உண்ணப்படும் சில்லறை உணவுகள். பச்சை முள்ளங்கியைக் கடித்து  சாப்பிடுவது டில்லியில் சர்வ சாதாரணம். 

கடுகு எண்ணெயில் பொறித்த கங்கை ஆற்று மீன் வகைகள் பாட்னாவில் பிரசித்தம். கடுகை வறுத்து தூளாக்கி அதை மீனில் தடவி ஊறவைத்துப் பொறித்துக் கொடுப்பதும் பெரிய பெரிய சைஸ் பீப் சாப்களை திரண்ட மசாலாவில் தோய்த்து சாப்பிடுவதும் முளைவிட்ட கொண்டைக் கடலையில் நறுக்கிய வெங்காயம்,  பச்சை மிளகாய் கலந்து  புளித்தண்ணீர் ஊற்றி ,  உதட்டோரம் ஒழுகினாலும் சப்புக் கொட்டி சாப்பிடுவது, கல்கத்தா நகரக் காட்சிகள். 

இவ்வாறு ஊருக்கு ஊர் மாநிலத்துக்கு மாநிலம் ஒரு சில குறிப்பிட்ட உணவுகள் , பழக்கங்கள், முறைகள், மாற்றவே  முடியாத கலாச்சார அடையாளங்கள் விரவியும் பரவியும் காணப்படுகின்றன.   

நமது ஊரான அதிராம்பட்டினத்துக்கு என்றும் சில  கலாச்சார அடையாளங்கள் காலம் காலமாய் நிலைத்து நிற்கின்றன. 

பெண்ணுக்கு வீடு கொடுப்பது 

ஒரு வீட்டில் பாதி பாதியை இரண்டு குமர்களுக்கு எழுதிவைப்பது 

உடன் பிறந்த அண்ணன் தம்பிகள் சம்பந்திகளாவது 

குண்டாமாத்து என்கிற பெண் மாப்பிள்ளை கொடுத்தல் , எடுத்தல் 

திருமண வீட்டுக்கு வரும் அனைவருமே  பொதுவாக வெள்ளை கைலி வெள்ளை சட்டை அணிவது. அதிலும் குறிப்பாக கைலி மட்டுமாவது மடமடவென்று கஞ்சிப்பாடம் கலையாமல் உடுத்துவது 

வெள்ளிக்கிழமை ஜூம் ஆவுக்குப் போகும்போது  சர்பத் குடிப்பது 

வெள்ளிக் கிழமை என்றாலே  பகல் உணவுக்கு ஆட்டு இறைச்சி அல்லது கோழி இறைச்சி      சமைப்பது  

எவ்வளவு பெரிய விருந்தானாலும் சஹனில் வைத்துப் பரிமாறுவது 

நெய்சோற்றுக்கு புளியாணம் என்கிற ரசம்  

ஆண்கள் லுஹர் தொழுகைக்குப் பிறகு கூட்டமாக  விருந்துக்கு வருவது , பெண்களுக்குரிய விருந்தை அதற்கு முன்னரே நிறைவு செய்துவிடுவது  

வெல்வட் தொப்பி போடுவது 

இரவுப் பயணம் போகும் போது கொத்துப்புரோட்டா  பார்சல் வாங்கிப் போவது 

பெருநாள் மாலை பட்டுக் கோட்டை சென்று இரவு உணவாக இட்லி சாப்பிடுவது 

இத்யாதி..... இத்யாதி. 

இப்போது இந்தப் பதிவில் சிலகாலமாக நாம் காணும் ஒரு மாற்றம் பாரம்பரியமாகவும் நமது ஊருக்கு அடையாளமாகவும் இருக்கும் ஒரு பழக்கம் மெல்ல மெல்ல மறைந்து வருவது பற்றி நமது கருத்துக்களை சொல்ல நினைக்கிறோம். 

அது சகன்களில் விருந்து பரிமாறுவது பற்றியது. 

அண்மைக்காலமாக  சகன்களில் விருந்து பரிமாறுவது மெல்ல மெல்ல மறைந்து வருகிறது . அந்த இடத்தை இலைச் சாப்பாடு பிடித்து வருகிறது. நமது ஊரின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழும் சஹன் சாப்பாட்டை இலைச்சாப்பாடு எடுத்துக் கொள்வதை ஏனோ ஏற்க இயலவில்லை. நம்மில் சிலரும் இந்த மாற்றத்தை வரவேற்பதாகவும் அடையாளங்கள் தெரிகின்றன. 

ஒரு நண்பர்  மூலமாக ஒரு செய்தி நாம் அறிந்துகொண்டோம். அதாவது நமது ஊரில் நடைபெற்ற திருமணத்துக்கு   வெளியூரில் இருந்து பிறமத சகோதரர் ஒருவர் வந்திருந்தார். திருமணத்தில் கலந்துகொள்ள நமது ஊரைச்சேர்ந்த ஆண்களும் பெண்களுமாக பெரும் கூட்டமும் கூடி இருந்தது. திருமணம் முடிந்ததும் விருந்து சஹன் மூலம் பரிமாறப்பட்டது. ஒரு மணி நேரத்தில் எல்லோரும் உணவருந்திவிட்டுப் போய்விட்டார்கள். வெளியூர்காரருக்கு ஆச்சரியமாக இருந்தது. நாங்கள் நடத்தும் திருமணங்களில் முகூர்த்தம் காலை பத்து  மணிக்கு முடிந்ததும் முதல்  பந்தி வைத்தால் , கடைசி பந்தி நிறைவுற பிற்பகல் மூன்று மணிவரை ஆகிறது. இந்த ஊரில் இவ்வளவு கூட்டமும் ஒரு மணி நேரத்துக்குள் உணவருந்திப் போய்விட்டதே என்று ஆச்சரியப்பட்டார்.  

கலாச்சாரம் என்பது ஒரு பக்கம் இருக்க, பெரும் மக்கள் தொகை கொண்ட நமது ஊரில் சஹன் சாப்பாடு என்பது விருந்து கொடுப்போர்கள் நிர்வகிக்க மிகவும் இலகுவானது. பேப்பரைப் போட்டோமா , மரவையை வைத்தோமா மறு சோறு போட்டோமா தட்ஸ் ஆல். ஆட்டம் குளோஸ். ஆனால் இலைச்சாப்பாடு அப்படியா? 

சாப்பாட்டு மேசை போடணும், பேப்பர் ரோலை விரிக்கணும் , இலைகளை ஒவ்வொன்றாய் போடணும் அதிலும் கிழிசல் மற்றும் சைஸ் சிறிய இலைகள் மாற்றிப் போட்டாக வேண்டும், தண்ணீர் பாக்கெட் வைக்கவேண்டும். பிறகு அயிட்டங்களை ஒவ்வொன்றாய் வாளியில் மற்றும் தட்டுகளில் கொண்டு வந்து கரண்டி வைத்துப் பரிமாறவேண்டும். அதற்குள் அடுத்த அணி , முன் சாப்பிடும் அணியின் பின்னால் நிற்கும். நேர விரயம் ஒருபக்கம் உணவு விரயம் மறுபக்கம் என்று நிர்வாகம் மிகவும் கஷ்டம். உணவுப் பொருள்கள் விற்கும் விலையில் சிறுவர்கள் கூட ஒரு இலையில் உட்கார்ந்து அதிகமான அளவு சமைத்த உணவுகளை வீணாக இலைகளில் மிச்சம் வைத்துவிடுகிறார்கள். 

ஆனால் சஹனில் தேவையானதை கலந்து பேசிக் கேட்டு வாங்கி சாப்பிடுகிறோம்; யாராவது கூடுதலாக சாப்பிட்டாலும் குறைவாக சாப்பிட்டாலும் சஹனில்   பெரும்பாலும் விரயமாவதோ வீணாவதோ இருக்காது. இருந்தாலும் அது அரிதானது.  மிச்சபடுவதில் ஆளுக்குக் கொஞ்சமாக சாப்பிட்டு முடித்துவிடும் அழகான முறைகளும் அங்கு அரங்கேறுகிறது.  

சகோதர வாஞ்சை, ஒற்றுமை ஆகியவைகளுக்கு சஹன் சாப்பாடு உதாரணமாக இருக்கிறது. 

சஹன்  சாப்பாடு என்பது உருவானது எவ்வாறு என்று  பார்க்க அரபுமக்களின் பாலைவனப் பயணங்கள் குறிப்பாக வணிகப் பயணங்களை சுட்டுகிறார்கள். நெடுந்தூரம் பயணிக்கும் அரபுகள் தாங்கள் கொண்டுவந்த வேறுபட்ட உணவுவகைகளை ஒரே தட்டில் வைத்து சுற்றி அமர்ந்து கொண்டு சாப்பிடுவார்கள். இவ்வாறு சுற்றி அமர உணவுகளைப் பகிர்ந்துகொள்வது ஒரு காரணமாக இருந்தாலும் பாலைவனத்தில் அடிக்கும் காற்றின் காரணமாக  மண் துகள்கள் உணவில் கலந்துவிடாமல் சுற்றி உட்கார்ந்து தடுப்பதும் ஒரு காரணமாக இருந்து இருக்கிறது. இவ்வாறு சாப்பிடுவதில் இருக்கும் வசதியையும் வீண் விரயம் இல்லாமல் இருப்பதையும் அறிந்தவர்கள் வணிகப் பயணம் முடிந்து வீடுகளுக்கு வந்ததும் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் பழக்கத்தை தொடர்ந்தனர் என்றும் கூறப்படுகிறது. 

பெருமானார் ( ஸல்) அவர்கள் தங்களது தோழர்களுடன் சஹனில் சாப்பிட்ட வரலாற்று நிகழ்வுகள் நாம் காணக் கிடைக்கின்றன. அகழ்ப் போர் சமயத்தில் பற்றாக்குறையான உணவைப் பகிர்ந்து உண்டதில் அதில் பரக்கத் உண்டானதாகவும் பலரின் பசி நீங்கி மிச்சமும் இருந்ததாகவும் அறிகிறோம். 

இன்றும் அரபு நாடுகளில் அரபுகளின் வீட்டு விருந்துகள் சஹனில்தான் பரிமாறப்படுகின்றன. பள்ளிவாசல்களில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளும் அவ்வாறே நடத்தப்பட்டு வருகின்றன. உலகின் அனைத்து பாகங்களிலிருந்தும் வேலைக்கு வந்துள்ள முஸ்லிம்கள் ஒரே சஹனில் சாப்பிடுகிறார்கள்.   

இன்றைய தமிழகத்தில் நாகூர், பரங்கிப் பேட்டை, காயல்பட்டினம், முத்துப் பேட்டை, கூத்தாநல்லூர் போன்ற ஊர்களுடன் அதிராம்பட்டினமும் இந்த சஹன் கலாச்சாரத்தைக் கொண்டு திகழ்கிறது. இந்தப் பழக்கம் 450 முதல் 500 ஆண்டுகளாக இந்த ஊர்களில் கடைப்பிடிக்கப்படுகிறது என்று நாகூரைச் சேர்ந்த ஒரு பெரியவர் கூறினார்.    

மருத்துவக் காரணங்களை சுட்டிக்காட்டி சில நவீனத் தம்பிகள் சஹன் சாப்பாட்டை தவிர்க்கவேண்டுமென்று நினைக்கிறார்கள். நாம் சொல்ல வருவது என்னவென்றால் சில மாற்றங்கள் தேவையாக இருந்தாலும் அந்த மாற்றங்களை நமது கலாச்சாரத்தின் அடிப்படையை  அழித்துவிடாமல் செய்துகொள்ளலாம் . மண்கலயத்தில் கொடுத்த தண்ணீரை பாட்டில்களில் கொடுப்பது போலவும், மண்சட்டியில் வைத்த கத்தரிக்காய் பச்சடியை எவர்சில்வர் கோப்பைகளில் வைத்துப் பரிமாறுவது போலவும் அடிப்படையை அழிக்காத மாற்றங்களை செய்துகொள்வதில் தவறில்லை. ஆனால் அதற்காக அடிமடியிலேயே கை வைக்கத் துணிய வேண்டாம். 

இன்றைக்கு உடல் பருமன் என்பது பரவலாக இருக்கிறது. அப்படிப்பட்டவர்களால் சஹன்களில் சாப்பிட கீழே உட்கார்ந்து எழ இயலாமல் இருக்கிறது என்பது உண்மைதான். ஆகவே அவர்களைப் போன்றவர்களுக்கு இலைச்சாப்பாடு என்று தனியாக  வைத்தால் கீழே அமர்ந்து எழ சக்தி உடையவர்களும் இலைச்சாப்பாட்டுப் பந்தியில் வந்து அமர்ந்துவிடுகிறார்கள். அவர்களை எழச் சொல்வதில் தர்மசங்கடங்களை எதிர்கொள்ளவேண்டி இருக்கிறது. இதைத்தவிர்க்க உடல்பருமன் உள்ளவர்களுக்கு சகனை ஒரு ஒற்றைக் கட்டிலில் வைத்து சுற்றி நான்கு நாற்காலிகளைப் போட்டு உணவருந்தச் சொல்லலாம். காலத்துக்கும் வசதிக்கும் ஏற்ப மாறுவதில் தவறில்லை. ஆனால் அந்த மாற்றம் அடிப்படையை மாற்றிவிடக் கூடாது என்பதையே வலியுறுத்த விரும்புகிறோம். 

ஆகவே சஹன் சாப்பாடு நமது கலாச்சாரத்தின் சின்னம். நாம் கட்டிக் காக்கவேண்டிய சின்னம். இலகுவானது; வசதியானது; சிக்கனமானது ; சிறப்பானது. நமக்குள் கைகலப்பு வேண்டாம் . கலகலப்பாக சகனில் கைகலந்து சாப்பிடலாமே சகோதரர்களே! 

எழுத்து உரு : இப்ராஹீம் அன்சாரி. M.Com

ஃபேஸ்புக் - உங்களின் உண்மை முகமா ? 17

அதிரைநிருபர் பதிப்பகம் | January 03, 2017 | , , , , ,

'அதிரை' எங்கள் ஊர் ! 

நாம் பிறந்த, வளர்ந்த, வாழ்வின் வசந்தம் சூழும் நமதூர் மண் வாசனையை மறக்கத்தான் முடியுமா !?

அதிரை என்ற பெயரைக் கேட்டாலே ஆனந்தம் அப்படியே அட்டாச் ஆகிவிடுகிறது நினைவுகளை அசை போடும்போதே!.

ஃபேஸ்புக் என்ற சமூக பிணைப்பு தளங்களை முகநூல், முகப்புத்தகம், இன்னும் ஏதேதோ...! இப்படியாக கஷ்டப்பட்டு ‘தமிழ்’ வளர்க்க பாடுபடும் அனைவருக்கும் அந்தப் பின்னலின் பின்புலங்கள் தெரிந்திருக்குமா என்பது கேள்விக்குறியே !

நேசிப்பவர்களோடு உறவாடத்தான் என்று நேற்று வரை நினைத்திருந்தால் அதுவும் அறியாமையே இன்றையச் சூழலில். வேடதாரிகளின் வேடந்தாங்கலாகவும் புகழிடமாகவும் இவ்வகை சமூக பிணைப்பு வலைத்தளங்கள் அமைந்து இருப்பதையும் மறுக்க இயலாது.

வளர்ந்து விட்ட அல்லது வளர்ந்துவரும் தகவல் பரிமாற்றங்கள் மனிதகுலத்தின் ‘மதி’மாற்றத்தை எவ்வாறெல்லாம் சூரையாடுகிறது என்பதற்கு ‘முதல் காட்டே’ இவ்வகை சமூக வலைத்தளங்களின் மற்றொரு முகம்.

ஆணென்றும் பெண்ணென்றும் பால் மாற்றி அன்பால் இனம் மாற்றி சமூகச் சீரழிவைத்தான் தூண்டுகிறது என்ற காலம் பின்னுக்குச் சென்று, ஆளுக்கு ஆயிரம் ஐடிகள் (குறியீடுகள்) அனைத்திலும் ஆயிரத்தில் ஒருவனாக முன்னிறுத்திக் கொள்வதில் மும்முரம்.

யாரோடு உறவாடுகிறோம் நட்பு பாராட்டுகிறோம் என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும் இவ்வகை கண்ணாமூச்சி விளையாட்டில், உள்ளே நுழைந்திருப்பது பாஷீச தீயசக்திகள். திட்டமிட்டு குறிவைத்து ஆரம்பித்திருக்கும் இந்த குழுமங்கள் அல்லது தனிநபர் குறியீடுகள் அனைத்தும் தரம் பிரித்து அதன் நம்பகத்தன்மையை அவசியம் அறிய வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம்.

இலகுவான தொடர்புகளை ஏற்படுத்தும் இவ்வகை சமூக பிணைப்பு வலைத்தளங்களில் உலாவும்போது, அங்கே மேயச் சென்ற மான்களைப் போன்று இல்லாமல் கூட்டமாக சென்ற சிங்கங்களாக நிமிர்ந்து நிற்பவர்கள் வெகுச் சிலரே அதில் நம்மவர்கள் வீறுநடையும் போடுகிறார்கள்.

சமீபத்தில் 'அதிரை' என்ற பெயரை எங்கு கேட்டாலும் 'அட! நம்மவூரு' என்ற வாஞ்சையுடன் 'அதிரை'க்குள் என்ன இருக்கிறது என்று பார்க்கும் முன்னரே அங்கே 'லைக்' என்ற முத்திரை குத்துவது வாடிக்கையாகி வருகிறது.

அதிரை என்ற சொற்றொடரை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் அதில் என்னுரிமை உன்னுரிமை என்று மல்லுக்கட்ட முடியாது. ஆனால், நம்மவர்கள் அதிகமாக பயன்டுத்தி வந்த இந்தச் சொல் சமூக விரோதிகளாலும், பாஷிச கொடூர சக்திகளாலும் பயன்படுத்தப்பட்டு வருவதை கண்டறிய முடிகிறது.

சமூக பிணைப்பு தளங்கள் அல்லது இணைய குழுமங்கள் அல்லது தனி மின்னாடல் குழுமங்கள் என்று எதிலிருந்து உங்களுக்கு அழைப்போ அல்லது இணையத் தேடலில் சிக்கியதில் சொடுக்கியோ வந்தால் நன்கறியப்பட்டவர்களாக அல்லது அறியப்பட்டவைகளாக இருந்தால் மட்டும் இணைத்துக் கொள்ளுங்கள் இல்லையேல் தவிர்த்து விடுங்கள்.

கோடி கோடியாக கொட்டி கொடியவர்களால் பின்னப்பட்டிருக்கும் இந்த வலையில் சிக்கி விடாதீர்கள், அவர்களால் விரிக்கப்படும் இந்த மாஸ் மீடியா என்ற சிக்கலில் சிக்கிவிடாமல் தனித்து நின்று வென்றெடுங்கள் !

பகிர்வுகளை பத்திரமாக பகிர்ந்து கொள்ள உங்களின் நட்பு வட்டத்தையும் சமூக வட்டத்தையும் வலுப்படுத்த மேற்சொன்ன புல்லுருவிகளை அடையாளம் கண்டு விளகிக் கொள்ளுங்கள்.

அதிரைச் சமூகத்திற்கென்று இருக்கும் குழுமங்கள் அல்லது சமூக பிணைப்பு வலைத்தளங்கள் என்று இருக்குமாயின் அதன் நடத்துனர்கள் / பங்களிப்பாளர்கள் யாரென்று அறிந்து கொண்ட பின்னரே இணையுங்கள், எதையும் பகிர்ந்து கொள்ளுங்கள். மாறாக ஏதும் விபரங்கள் அறியாமல் "அதிரை" என்ற பெயர் தாங்கி யாரென்றே அடையாளம் அறியப்படாத எதுவானாலும் புறக்கணியுங்கள்.

இது ஒரு புலணாய்வின் விளைவாகக் கண்டறிந்த திடுக்கிடும் தகவல்களின் காரணமாக எச்சரிக்கையுணர்வை ஏற்படுத்தவே பதிக்கப்படுகிறது...!

அதிரைநிருபர் பதிப்பகம்

தேசியத் தினம் 45 26

அதிரைநிருபர் பதிப்பகம் | November 30, 2016 | , , , , , , ,


ஷேக்குகள் எழுவரின்
போஷாக்குக் குழந்தை
அமீரகம்!

இந்தக்
கூட்டமைப்பின் வெற்றி
ஒற்றுமைக்கான அங்கீகாரம்
உலகுக்கான முன்னுதாரணம்

இந்த ஒற்றுமை
நாற்பத்திஐந்து ஆண்டுகாலப்
பத்தியம்
நன்மையைத் தேடித்தந்த
வைத்தியம்

தொழுகைக்குப் பிறகும்
தோளோடு தோள் நின்றதால்
தோல்வி யறியாத
தேசமாகிப்போனது அமீரகம்

ஒன்றுமில்லாதத் துவக்கம்
என்றுமில்லாத வளர்ச்சி
எனினும்...
மாய மந்திரமல்ல
நேயம், தந்திரமல்ல!

அமீரகம்...
ஊரில்
ஊதாரியாகத் திரிந்த
உதவாக்கரைப் பலருக்கு
உலகத்தைக் காட்டியது

உழைப்பை மதித்தது
ஊதியம் கொடுத்தது
திறமையைக் கண்டெடுத்துத்
திரவியம் தந்தது

வாழ்க்கையில்
பிந்திய மனிதர்களின்
இந்திய வயிற்றுக்கு
பந்தியே வைத்தது!

அரசியல் தலைவன் என்னும்
அடர்த்தியான விஷத்தையும்
தல தளபதி யென்னும்
மதிமயக்கும் யுக்தியையும்
நம்நாட்டில் விட்டுவிட்டு
உழைத்து வாழ
உகந்த இடம் அமீரகம்!

சுதந்திர நாட்டில்
சுகாதாரச் சீரழிவு
ஷேக்குகள் நாட்டிலோ
சீக்குகள் மிகக்குறைவு

இயற்கை வளமிருந்தும்
எல்லைகளகன்ற இடமிருந்தும்
எம் நாட்டிலோ
எல்லாத் துறைகளிலும்
கையூட்டு
பொதுப் பணிகளில்
சதவிகித வெட்டு
இருபத்தியோராம் நூற்றாண்டிலும்
இருள்சூழ மின்வெட்டு

எந்த வளமும்
இல்லயெனினும்
யானைப் பலம்
அமீரகத்திற்கு

ஊழலால் உழன்று
உதவியின்றி மிரண்டு
அலைகழிக்கப்பட்ட இந்தியனை
அரவணைத்தது அமீரகம்

வகைக்கேற்ப அவரவர்க்கு
வருமானத்தை வழங்கியது
வாழ்க்கையை
வரையறுத்துத் தந்தது

படிக்காதவருக்கும்
துபை என்னும் அடைமொழி
படித்தெடுத்தப் பட்டம்போல்
பெயரோடுச் சேர
ஊர் மதித்தது

இந்தியாவில்
கனவுகளில் மட்டுமே வாய்த்த
காட்சிகளெல்லாம்
நனவானது அமீரகத்தில்

நம்நாட்டு முன்னோரும்
நானும்
பின் வருவோரும்
உண்ணவும் உடுக்கவும்
உறையுள் உருவாக்கி உய்க்கவும்
உதவி இத்தேசம்

நபிமொழி உணர்ந்து
நாகரிகத்தைச் சற்றே
நன்முறைப்படுத்தி
எல்லைமீறலைக் கொஞ்சம்
இழுத்துப் பிடித்தால்
நானிலத்தில் நிகரின்றி
நிமிர்ந்து நிற்கும் இந்நாடு.

நம்
நாட்டுப்பற்றுக்கு நடுவில்
கொஞ்சம்
நன்றிக்கடன் பட்டு
வாழ்த்துவோம் அமீரகத்தை1

....ஈஷி பிலாதி... எமராத்தி!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

சுருக்க நடவுல... ! - வாக்கி டாக்கி ! 23

அதிரைநிருபர் பதிப்பகம் | October 24, 2016 | , , , ,


அதிரை மண்ணின் மைந்தர்கள் ஆகாயத்திலும் மனைபோட்டு வீடுகட்ட தயங்காதவர்கள் இருந்தாலும் விமானங்களை வீட்டு மாடியிலேயே இறக்கி கலரிச் சாப்பாட்டில் கலந்து கொள்ளும் வேகமும் இருக்கும். இது கடல் கடந்து இருக்கும் ஆண்மக்களோடு இருந்திடாது, அதிரையின் அழகும், ஆளுமையும், அன்பும், ஆர்ப்பரிப்பும் ஒருங்கே சுற்றிச் சுழலும் பெண்மக்களும் சலைத்தவர்கள் அல்ல. உலக அரசியலானாலும் உள்ளூர் பிரச்சினைகளானாலும், ஜெயா-சசி பிணக்கானாலும், மு.க. குடும்ப பிரச்சினைகளானாலும். எதனையும் அலசும் அசாத்திய துணிச்சலும் தீர்வும் தங்களுக்குள் சொல்லும் இருவர்; சாலை வழி காலை வாக்கிங்  சென்று கொண்டிருந்த இரு பெண்டிரின் அசத்தும் உரையாடலைக் கேட்க நேர்ந்தது அதன் பாதிப்புதான் இந்த பதிப்பு.


“என்னாவுள இந்தப்பக்கமா தெரியுது எதாச்சும் சேதி இல்லாம இந்தபக்கம் வரமாட்டியே”

 “அதயான் கேக்குறேவுள, இம்புட்டு நாளா ஓடிக்கிட்டு இருந்த ‘அட்லாண்ட ஓடத்த’ நிப்பாட்ட போறாஹலாம்”

“அது எங்கவுள ஓடிக்கிட்டு இருந்துச்சு”

“அந்த கூத்து தெரியாத ஒனக்கு? இதுவரைக்கும் பூமிக்கும் வானத்துக்கும் 135 தடவ பறந்து போயிட்டு வந்து கீது மொத மொதல்லே ஆமாத்து மாப்பிள இருக்கிற அமெரிக்காவுல 1983 வருசத்துலதான் சேலன்சர்’னு புராக்கு வாஹம்மாதிரி ஈக்கிறத்துல அனுப்பி அது அங்கே போயி கோளை சுத்த விட்டுட்டு பூமிக்கு திருபும்புனிச்சி.

“வானத்துக்கும் பூமிக்குமா? என்னமோ அதுராம் பட்டன்த்துக்கும் பட்டுக்கோட்டைக்கும் PP லே போயிtடு வரமதிரில சொல்றீய்வுல?”

“அடியா ஆமாவுளே அப்புடித்தாவுள போச்சு ஆனா ஒருவாட்டி போனது திரும்பி வரலே வானத்துலே மாக்குண்டு  சாஞ்சி வெடிச்சி போச்சி  நம்ம ஊரு பொம்புளை ஒன்னு மௌத்தாபோச்சு அது கூட போன பதிமூணு பெரும் சேந்து மௌத்தா போய்ட்டாஹ”

“என்னவுளே சொல்றே  நீ சொல்றது எல்லாம் ஒரு கொதரத்தாவும் புதுனமான   செய்தியாவுல ஈக்கிது அதுவும்  நம்ம ஊரா எந்த தெருவு”

“அடிபோடி இவ ஒருத்தி, வெவரம் இல்லாதவ நம்ம ஊருன்னா நம்ம நாட்டு பொம்புளைன்னு சொல்ல வந்தேன்”

“அதானே பாத்தேன். ஆமா அந்தபுள்ள பேருகூட கல்பனா’ன்னு ஊட்லே புள்ளையளுவோ ரொம்ப நாளைக்கு முன்னாடி பேசிக்கிட்டு இருந்துச்சுவோ நா என்னவோ தர்மாஸ்பத்திரி நர்ஸுன்னு நினைச்சேன். அதுகூட அரசல் புரசலா காதுலே உளுந்துச்சி”

“ஒனக்கும் ஊரு ஒலகத்துளே நடக்குறது அப்பொப்போ காதுல உளுவுதுதான், மொதல்ல வாணவேடிக்கை காட்டுறமாதிரி எல்லாம் ராக்கெட்டை வானத்துலே போய் செயற்கை கோளை இறக்கி உட்டுப்புட்டு அந்த ராக்கெட்டு தன்னாலே வெடிச்சி வாணம் முழுக்க ஒரே குப்பையும் கூளமுமா போகுதுன்னுதான் இந்த அட்லாண்ட ஓடத்த கண்டு பிடிச்சாஹ இது போயிட்டு கோளை வானத்துலே விட்டு புட்டு பத்தரமா திரும்பி  வந்துடும் வானத்தையும் குப்பை கூலமக்காது, நம்ம சேர்மனுக்கும் அலச்சல் இல்லாம போயிடுச்சுவுல”

“அடியா ரைமாம பேத்திடியாடி நீ ஒனக்கு வெளக்கா தெருவுலே நல்ல மீனு  மட்டும்தான் வேங்க தெரியும்ன்னு இம்புட்டு நாளா தப்பாவுல வெளங்கிட்டேன் நீனும் வெவரமாத்தான் ஈக்கிறே எந்த புத்துல எந்த பாம்பு ஈக்கும்ன்னு  அல்லாஹ்க்குத்தான் வெளிச்சம்”

“இன்னும் ஈகிது கேளுவுள இந்த அட்லாண்ட ஓடம் மொத்தம் அஞ்சு செஞ்சாஹவுள, அதுலே ஒன்னு வெடிச்சி போச்சி பாக்கி நாளுல ரெண்டே செத்த காலேஜ்லே வச்சிபுட்டாஹ பாக்கி ரெண்டுக்கு இப்போ ஓய்வு கொடுக்க போறாஹவுல”

“இம்முட்டு நாளா இந்த அஞ்சும் என்ன வேல செஞ்சிச்சி இதுக்குமா ஓய்வு கேக்குது ? நீ சொல்லறது எல்லாம் எனக்கு புதுனமா தாம் புள்ள ஈக்கிது”

“வர வர நீனும் நல்ல நல்ல கேள்வியா கேக்குறேவுள. இந்த அஞ்சும் இதுவரைக்கும் நூத்துகணக்கான செயற்கை கோளை வானத்துல போய் சுத்த உட்டுபுட்டு பூமிக்கு திரும்பி வந்துருச்சி அதுலே முக்கியமான ஒன்னு ‘ஹப்பில்’ தொலைநோக்கியை வானத்துலே சுத்த உட்டு ஊரு உலகத்துலே என்ன நடக்குதுன்னு ஒத்து கேக்குறது இல்லே இல்லே உத்து பாக்குறது. அதுபோய் பாத்துட்டுதான் ஆச்சிக்கு ஃபோன் போட்டு எங்கடி ஊரு ஒலஹத்துல மனை இருக்குன்னு சொல்லுதுவுல”

“ஆமா இந்த நூத்துக்கணக்கான கோலும் அங்கே  வானத்துலே போய் என்னாவுல செய்து ?”

“நல்லா கேட்டே போ, நமக்கு அடுத்த ஊடு பூட்டி இருந்தாலே கொஞ்ச நேரத்துலே நாம  மக்கசக்க ரத்துலே வர்றோம் அவுக எங்கோ போயிட்டாக என்ன வாங்க போய்ட்டஹன்னு தலை சுத்துது அதுபோல் பக்கத்து பக்கத்து நாடெல்லாம் என்ன செய்றாக எங்கே போரஹன்னு  மேலர்ந்து கீழ  உத்து பார்க்கத்தான் இப்புட்டு ஏற்பாடும்”

“அப்போ மேலர்ந்து பாத்தா கீழே எல்லாம் நல்லா தெரிய்மாவுள?!”

“என்ன புள்ள ஒனக்கு எல்லா சேதியையும்  எம்பிக்கிகனுமாவுளோ இக்கிது.  நீ கொல்லைளே இருந்து மீன் ஆஞ்சா அது கொடுவா மீனா, கெலகன் மீனா, பண்ணா மீனான்னு சரியா பாத்துரலாம் ! அதுல அந்த அளவுக்கு கேமராவ வச்சிகிரஹ இங்கே மூணாவது கண்ணு நாலாவது கண்ணுன்னு எல்லாம் வச்சி போட்டோ எடுக்குரோஹலே அந்த கேமராவெல்லாம் டுபுக்குத்தான் புள்ள 

“அடியே  இப்புடி காட்டி குடுக்குறதாளதான்  அத கோளு கோளுன்னு சொல்றாஹளோ !! இனி கொல்லைக்கு போனாலும் மொட்ட மாடிக்கு போனாலும் தலைக்கு முக்காட்டை இழுத்து  போட்டுகிட்டுதான் போவனும். இப்புடி எல்லாத்தையும் அவ்வோ கைலை வச்சிகிரதலதான் இந்த பவுமானமா  இக்கிதோ!”

“நீவேற புதுசு புதுசா கெளப்பி உடுறே இதையும் கேளு அட்லாண்ட ஓடத்த நெருத்துரதால அங்கே வேல செஞ்ச  நாசாவின் 4 ஆயிரம் பேருக்கு வேல இல்லாம போவுதாம்”

“அல்லாவே அப்படின்னா நம்மவூரு புள்ளையலுவோ எல்லாம் அப்பம் மாதிரி திரும்பி வந்திடுவாஹலோ ?”

“என்னாவுல எந்த ஒலஹத்துல ஈக்கிறே?”

“அப்போ அவ்வோ  அவ்வளவு பெரும் சோத்துக்கு என்ன செய்வோக நாசன்னு பேர வச்சிக்கிட்டு அந்த  4000 பேரையும் நாசம் பண்ணிட்டாஹலே”

“அடி போடி இவ ஒன்னும் வெலங்காதவளா ஈக்கிரா  அவ்வொளுக்கு சோத்துக்கா பஞ்சம்  இவ்வளவு நாளா செஞ்ச வேலகித்தான் பணத்த அல்லு அள்ளுன்னு அள்ளி ரெண்டு மூணு தல மொறைக்கு சேத்து கட்டி வச்சி இருபாஹலே”

“அமெரிக்காவுலே உட்ட ரக்கெட்டையோ    திரும்ப திரும்ப உட்டுர்றாஹ. நம்ம ஊருல செய்ற பாலித்தின் பைய ஒருக்கா   பயன்படுத்துனா மருவா பயன்படுத்த முடியாம செஞ்சி ஊரு முழுக்க  எங்கே பாத்தாலும்  குப்பையும் கூளமுமா    பிளாஸ்டிக் பையா தான்  கெடக்குது  அவுக வானத்தைய குப்பை கூலம் பன்னக்குடதுன்னு பாக்குரக நாம இருக்குற பூமிய போட்டு எல்லா அடந்தரசியும் பண்ணி வச்சிக்கிறோம்    எப்போதான் நாம திருந்த போறோமோ தெரியலவுள?”

“அடியா சீக்கிரம் நடவுல, நம்மல ஃபோட்டோ எடுத்துடப் போவுது”

-Sஹமீத்

புகை(யில்லாத அதிரைப்)படங்கள் ! - MSM Clicks... 4

அதிரைநிருபர் பதிப்பகம் | October 04, 2016 | , , ,


நம் சுற்றுவட்டாரத்தை சுற்றிப்பார்ப்போம் (புகையில்லாப்படங்களுடன்)

ஊரில் கண்ட காட்சிகளும், அத்துடன் சேர்ந்து வந்த எண்ண வெளிப்பாடும் ஒன்றிணைந்து இங்கே ஒரு சிறு ஆக்கம் உங்களின் ஏக்கம் தீர:

அஃதொரு மழைக்கால காலை நேரம் புதுமனைத்தெருவின் யாரும் நடக்காத வேளை.


தனியே தன்னந்தனியே ஒரு பாக்கு மரம் மழைத்துளியை முத்தமிட எத்தனிக்கும் நேரம்.


பசுந்தரையும், குடை பிடிக்கும் புளியமரமும், மரத்தில் விளையாடப்பட்ட சதுரங்க கருப்பு வெள்ளைக்கட்டமும் காண்போருக்கு குதூகலமளிக்கும் (அதிரை, பட்டுக்கோட்டை வழியில்.)


வீட்டுக்கு முன்னே வேப்பமரம் அது கண்ணுக்கும், மனதிற்கும் குளிர்ச்சி தரும்.


அமைதியாய் காட்சி தரும் செக்கடிப்பள்ளியும் அதை அரவணைக்கும் இயற்கை சூழலும்.


தூய்மையான செக்கடிப்பள்ளி கீழ்த்தளம் படுக்க பாயின்றி உறங்கினாலும் நல்ல தூக்கம் வரும்.


பள்ளிக்கு வருவோரை பரவசமூட்டி வரவேற்கும் இளம்பச்சை செடிகள்.


நண்பனின் கையில் இருக்கும் முறுக்கும், ராஜாமட சாய்ங்காலத்தென்றலும் சந்திக்கும் ஒரு அந்தி மாலைப்பொழுது.


வான் மழை வந்திறங்கினால் மண் மட்டுமல்ல நம் மனமும் புன்முறுவல் பூத்து பூரித்து போகும். (மளவேனிற்காடு)


இரு பக்கம் மரங்கள் நட்டு நடுவிலே தார் சாலை இட்டு குளிர்க்காற்றை ஓட விட்டு கொண்டாடும் இயற்கையே இறைவனின் அத்தாட்சிகள். (மளவேனிற்காடு)


சாய்ங்கால தென்றல் காற்று சாமரம் வீசிச்செல்லும் செக்கடிக்குளக்கரை


அமைதியான இயற்கைச்சூழல் அமர்ந்திருக்கும் செக்கடிக்குளமும், அதில் தப்படித்த நினைவுகளும், இக்கரையிலிருந்து அக்கரைப்போய்ச்சேர்ந்த உள்ளமும் இனி திரும்ப வாய்ப்பேதும் உண்டோ?


கம்பீர ஒற்றைக்கோபுரமும், ஒலி எழுப்பும் ஒலி பெருக்கியும் ஒரு போதும் ஓரிறையை போதிக்காமல் இருந்ததில்லை. (இடம் முஹைதீன் ஜும்மாப்பள்ளி)


வான் மழையை வாஞ்சையுடன் வரவேற்கும் செக்கடிக்குளமும், அதன் சுற்றுவட்டார சொந்தபந்தங்களும்.


வானில் ஒன்று சேரும் கார் மேகக்கூட்டமும், நேர்த்தியாய் உருவாக்கப்பட்ட தரைச்சாலையும் ஒன்றோடொன்று மொளனமாய் பேசிக்கொள்ளும் வேளை. (இடம் திருச்சி, தஞ்சைக்கு இடைப்பட்ட சாலை)


பனைமரமும், தென்னைக்கூட்டமும், படுத்துறங்கும் பசும் நெல்கதிரும் காண்போருக்கு பரவசமூட்டும். அதில் வெள்ளைக்கொக்குகளும் வரிசையில் நின்று வரவேற்று காட்சிக்கு மெருகூட்டும்.


கரடுமுரடான காட்சிகளும் கண்கொள்ளாக்காட்சிகளாகும் கார் காலம் வந்து விட்டால் சுவிட்சர்லாந்தைக்கூட பார்வையில் பின்னுக்கு தள்ளும். (இடம் பட்டுக்கோட்டை, தஞ்சைக்கு இடைப்பட்ட சாலை)


தண்ணீர், தண்ணீர் என பரிதவிக்கும் மனிதர்களே! சலசலப்பின்றி மொளனமாய் கடந்து சொன்று கடலில் சங்கமிக்கும் முன் இந்த ஆற்று நீரை வேண்டிய இடத்திற்கு கொண்டு செல்ல மாட்டீரோ?


ஆத்தங்கரை ஓரம் ஒரு திண்ணை இருக்கும். அங்கு தான் இவ்விருவரின் சொத்து,சுகம் இருக்கும். (இடம் கலியாண ஓடை சப்தமின்றி நகர்ந்தாலும் சமீபத்தில் நமதூர் இளைஞனை பலிகொண்டு விட்டது.)


பச்சைக்கிளிகள் கூட இக்காட்சி கண்டு பொறாமை கொள்ளும் அப்படியொரு பசுமை போர்வையின்றி படுத்துறங்கும் இடம். (இடம் பட்டுக்கோடை, தஞ்சைக்கு நடுவே)


இன்னும் நன்கு வளர்ந்து மனிதர்களுக்கு பல பலன்களை அளிக்க போட்டியின்று வளர்ந்து வரும் சகோதர பனைமரங்கள்.


ரம்மியமான பசுமை கண்டு எல்லைக்கல் கூட எழில் பெரும். பசுமைக்கு பாடம் நடத்த கால் வலிக்காமல் காட்சி தரும் மின்கம்பம்.


உயர உயரவே பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது; உயர உயரவே பறக்கும் பருந்தானாலும் வயிற்று பசிக்கு தரை வந்திறங்கியே தீர வேண்டும். தனியே தன்னந்தனியே தன் ரிஜ்க்கைத்தேடி ஒரு பருந்து பறந்து செல்கிறது.


காண்பதற்கு ஏதோ ஐரோப்பாவில் எடுத்த புகைப்படம் போல் காணப்பட்டாலும் காலார நடந்தே இக்காட்சிகளை நம் கண்ணுக்கு விருந்தாக்கலாம். (இடம்: ரயில்வே கேட் தாண்டி ராஜாமடம் நோக்கி செல்லும் சாலையோரம்)


முட்டுக்கால்களை முத்தமிட்டு ஓட வேண்டிய நீர் வெறும் தரையில் தவழ்ந்து பாதங்களை முத்தமிட்டு ஓடுகிறதே என பேசிக்கொள்ளும் நமதூர் சிறுவர்கள்.


பள்ளிக்கு தொழ வருவோரை வரவேற்று நிற்கும் இருபக்க மாமரங்களும், நடுவே தொழுகை முடிந்து வெளியேறும் எத்தீம்கானா மாணவர்களும். (இடம் மரைக்காப்பள்ளி)


உலக உருண்டையில் என்ன தான் உருண்டு திரிந்தாலும் இறுதியில் பாஸ்ப்போர்ட்டின்றி வந்திறங்க வேண்டிய இடம் மையவாடியல்லவா? (இடம் மரைக்காப்பள்ளி மையவாடியின் நுழைவு)


சில்லென்ற காற்றுடன் சொட்டென சொட்டும் மழைத்தூரல். அதில் தலை மூழ்கிக்கொள்ளும் தரைப்புற்கள்.  (இடம் எங்கூட்டு வாச)


கை கழுவிய மின்சாரமும், கை கொடுக்கும் அரிக்களாம்பும். ஓட்டு கேட்டு நிற்கவில்லை. ஒளி கொடுத்து ஓரமாய் நிற்கிறது. பழமைக்குத்திரும்பும் புதுமை.


அழுது அடம் பிடிக்கும் குழந்தைகளை அமைதிபடுத்த காட்டப்படும் கிளுகிளுப்பை போல் எல்லாக்காட்சிகளையும் கண்டு ஆனந்தமடைந்த எனக்கு இறுதியில் நாட்கள் முடிந்து ஒரு இயந்திரப்பறவையினுள் சிறைப்பிடிக்கப்பட்டேன் (சீறீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்திற்குள்) வேதனையில் என் தாய் மண்ணை ஒரு சன்னலோரம் கண்டு நின்றேன். கிளுகிளுப்பைப்போல் வேடிக்கை காட்டி நின்றது மேனியில் பல வண்ணம் பூசிய அந்தவிமானம்.


அடுத்த முறை ஊர் வந்து காட்சிகள் பல காண மூலப்பொருள் மண்ணும், மண்ணுக்கு மேல் இந்த கண்ணும் இருத்தல் வேண்டும்.

இறைவன் அதற்கு நமக்கெல்லாம் வாய்ப்பளிக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்.....

பயணங்கள் முடியவில்லை.......

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | October 03, 2016 | , , ,

நினைவில் நிலைத்ததை பகிர்வது : மர்ஹூம் ஹாஜி த. அ. அப்துல் ரசாக்...

அதிரை நகரக் கல்வித் தந்தை ஹாஜி எஸ்.எம்.எஸ். ஷேக் ஜலாலுதீன் 28-ஜனவரி-1920ல் பிறந்தார். நகரத் தந்தை சேர்மன், முஹம்மது அபுல் ஹசன் மரைக்காயரின் ஒரே பிள்ளை; செல்லப்பிள்ளை; சேர்மன் தன் தந்தை ஹாஜி ஷேக் ஜலாலுதீன் பெயரைப் பிள்ளைக்குச் சூட்டினார். அதனால் மகனை எப்போதும் ’வாப்பா’ என்றே அழைப்பார்! மற்றவர்களிடம் பிள்யைப் பற்றிச் சொல்லும்போது ‘தம்பி’ என்பார்! இதனால் அவர் எல்லாருக்கும் ‘தம்பி’ ஆகிவிட்டார்!

நான் ஜனாப் ஷேக் ஜலாலுதீனின் பள்ளித் தோழன்; நான் அவருக்கு இரண்டு வகுப்புகள் இளையவன். அதிராம்பட்டினம், ஆராவமுத அய்யங்கார் நடுநிலைப் பள்ளியிலும், பட்டுகோட்டை மாவட்டக் கழக உயர் நிலைப் பள்ளியிலும் படித்தோம். ஆராவமுத அய்யங்காரும் அவருடைய இரண்டாவாது மகனும் ஆசிரியர்கள்; அருமையான ஆசிரியர்கள்! அவர்கள் திறம் படப் பாடங்களை நடத்தியதோடு, மாணவர்களை வைத்து நாடகங்களையும், மற்ற கலை நிகழ்ச்சி களையும் நடத்தினார்கள். குறிப்பாக, ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் பிறந்த நாளன்று கலை நிகழ்ச்சிகள் அமர்க்களப்படும். அரசு மருத்துவ மனை வளாகம்தான், பள்ளியின் கலை அரங்கம்! ஒரு ஆண்டு சேக்ஸ்பியரின் ’வெனிஸ் வர்த்தகன்’ ஆங்கில நாடகம் நடந்தபோது, அதில் ஜனாப் ஷேக் ஜலாலுதீன் நீதிபதியாக நடித்தார்!

உடல் தளர்ச்சி காரணமாக ஆராவமுத அய்யங்கார், பள்ளியை மூடிவிட்டார்! அப்போது, தற்போதைய ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி மாவட்டப் பகுதிகளில், பட்டுக்கோட்டை – ஒரத்தநாடு இந்த இரண்டு இடங்களில் மட்டுமே உயர் நிலைப் பள்ளிகள் இருந்தன! எனவே மேற் படிப்புக்காக நாங்கள் பட்டுக்கோட்டை போய் வரலானோம்!

இப்போது போல அப்போது பட்டுக்கோட்டைக்கு பேருந்து வசதி கிடையாது! ஒரு நாளைக்கு இரு முறையோ, ஒரு முறையோ பேருந்து வரும்; போகும்! பயணக் கட்டணம் 4 அணா! பயணம் செய்வோரும் மிகவும் குறைவு! நான்கு அல்லது ஐந்து பேர் சேர்ந்து வருவதாகச் சொன்னால் வீட்டு வாசலில் பேருந்தை நிறுத்திக் கூட்டிச் செல்வார்கள்!

பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூருக்கும் பயணிகளை ஏற்றிச்செல்ல, பையை ஒருவர் இடையே ஒருவர் பிடுங்கிக் கொண்டு போவார்கள்! பயணக் கட்டணம் எட்டணா! போட்டி காரணமாக ஒருநாள் கட்டணத்தை ஓரணாவாகக் குறைத்ததோடு தஞ்சாவூரில் காப்பியும் கொடுத்தார்கள்! இந்தப் போட்டியைக் கண்டுதான் அப்போதைய முதல்வர் ராஜாஜி, அவர்கள் பேருந்துகளுக்கு வழித் தடங்களையும், நேரத்தையும் ஒதுக்கும் முறையைக் கொண்டு வந்தார்கள்! பேருந்து யாவும் கரி வண்டிகளே!

நான் ஜனாப் ஷேக் ஜலாலுதீன், திரு என்.எஸ். இளங்கோ, உட்பட ஏறத்தாழ 25 மாணவர்கள் பட்டுக்கோட்டையில் படித்தோம்! பெரும்பாலோர் புகை வண்டியில் சென்று திரும்புவர்! சிலர் சைக்கிளில் செல்வர்! இன்னும் சிலர் பட்டுக்கோட்டையிலேயே வாடகைக்கு அறை எடுத்துத் தங்கிப் படித்தார்கள்!

சேர்மன் ஒரு குதிரை வண்டியும், ஒரு ஃபோர்டு காரும் வைத்திருந்தார்! ஜனாப் ஷேக் ஜலாலுதீனையும் என்னையும் காலையில் புகை வண்டி நிலையத்திற்கும், மாலையில் அங்கிருந்து வீட்டிற்கும் ஏற்றிச் செல்ல குதிரை வண்டியோ அல்லது காரோ காத்திருக்கும்!

அக்காலத்தில் பட்டுக்கோட்டையில் உணவகங்கள் மிகவும் குறைவு! தரத்தையோ, ருசியையோ உணவுப் பண்டங்களில் எதிர் பார்க்க முடியாது! அளவு மட்டும் அதிகமாக இருக்கும்! தயிரோடு சாப்பாடு இரண்டணாதான்! முப்பது சாப்பாட்டுச் சீட்டுகள் மூன்றே முக்கால் ரூபாயே! திங்களன்று வடை, பாயாசத்துடன் சாப்பாடு போடுவார்கள்!

நானும் மற்ற மாணவர்களும் பகல் உணவை வீட்டிலிருந்து கொண்டு வருவோம்! ஜனாப் ஷேக் ஜலாலுதீன் உணவுப் பொட்டலம் எதுவும் கொண்டு வரமாட்டார்! மணிக்கூண்டிற்கு அருகில் இருந்த கன்டியர் சிற்றுண்டி விடுதியில் இரண்டு அல்லது மூன்று பரோட்டாக்களை பால் ஊற்றிச் சாப்பிடுவார்! நீலாதான் அப்போது பட்டுக்கோட்டையில் இருந்த ஒரே திரைப் படக் கொட்டகை! எப்போதாவது அவரும் மற்ற நண்பர்களும் திரைப் படம் பார்க்கப் போவோம்! மாணவப் பருவத்தில் ஜனாப் ஷேக் ஜலாலுதீன், பள்ளி உண்டு, வீடு உண்டு என்று இருப்பார்! விளையாட்டில் அவருக்கு ஈடுபாடு கிடையாது! அப்போதே ஆங்கிலத்திலும் தமிழிலும் நன்றாக, ஆணித் தரமாக எழுதுவார்! 1938 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.எ\ல்.சி. தேர்வு எழுதினார். தமிழில் தேற வில்லை! அப்போ தெல்லாம் ஒரு பாடத்தில் தேராவிட்டாலும் எல்லாப் பாடங்களையும் மீண்டும் எழுதவேண்டும்! அதனால், அடுத்த ஆண்டும் அதே வகுப்பிக் தொடர்ந்து படித்தார்!

மீண்டும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதக் கட்டணம் கட்டினார். 1939 மார்ச் துவக்கத்தில் தேர்வு எழுத படிப்பு விடுமுறை விட்ட போது, அவருக்குத் திருமணம் நடந்தது. திங்கட் கிழமை, தேர்வு தொடங்குவதாக இருந்தது. சனிக்கிழமை அவருக்குக் காய்ச்சல் கண்டது. மறுநாள் ஞாயிற்றுக் கிழமை அம்மை போட்டது! இதனால் தேர்வு எழுதமுடிய வில்லை! பல்லாயிரம் மாணவர்களுக்குக் கல்லூரிக் கல்வி வழங்கிய கல்வித் தந்தைக்கு கல்லூரிக் கல்வி கிடைக்க வாய்ப்புக் கிட்டவில்லை!

பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடக்கும் நாட்களில் மற்ற மாணவர்களுக்குக் காலை 9.30 மணி வரை வகுப்புகள் நடக்கும். அந்த நேரத்தில் பட்டுக்கோட்டைக்குப் புகை வண்டியோ, பேருந்தோ கிடையாது!

அப்படி ஒரு நாள் 1937 – ஆம் ஆண்டு மார்ச் திங்கள் காலை 7.30 மணி வகுப்புக்கு சேர்மனின் ஃபோர்டு காரில் பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்தோம். பட்டுக்கோட்டைப் பொது பணித்துறை பயண மாளிகைக்கு அருகில், காருக்கு பழுது ஏற்பட்டு நின்று விட்டது. நாங்கள் நடந்தே பள்ளிக்கூடம் நோக்கிப் போனோம்! திடீரென மழை பிடித்துக் கொண்டது! பக்கத்தில் வீடுகளோ, ஒதுங்கும் இடங்களோ எதுவும் இல்லை! நனைந்து கொண்டே பள்ளிக் கூடம் நோக்கிச் சென்றோம்!

அப்போது ஷேக் ஜலாலுதீன் சொன்னார், ”நாம் படிப்பதற்காக பட்டுகோட்டை வருவதில் அதிகமாகச் சிரமப் படுகிறோம்! நம் குழந்தைகள் இவ்விதம் சிரமப் படக் கூடாது! நாம் பெரியவர்களாகி ஓரளவு சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு, முதல் காரியமாக நம் பிள்ளைகள் நம் ஊரிலேயே படிக்க சொந்த முயற்சியில், ஓர் உயர் நிலைப் பள்ளியை ஆரம்பிக்க வேண்டும்!” மேற்படியார் இவ்வாறு சொன்னது, இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது! அவர் நினைத்தபடி தன் முயற்சியால் உயர் நிலைப் பள்ளி என்ன, ஆண்கள் மேல் நிலைப் பள்ளி, பெண்கள் மேல் நிலைப் பள்ளி, இளங் கலை, முதுகலை, கல்லூரி, தொழிற் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றை ஏற் படுத்தி தன் கனவை நனவாக்கி, அதற்கு மேலும் சாதித்து, நம் மத்தியில் தன் நினைவு என்றும் நிலைத்து நிற்கும் படிச் செய்து விட்டார்.

என்னைக் கல்லூரிக் கட்டிடக் குழுச் செயலாளராகப் பணியாற்றி நிதி திரட்ட ஓரளவு உதவ வைத்தது, இறைவனும், அவரின் வாயிலாக எனக்கு அளித்த பெரும் பாக்கியமாகும்!

நாங்கள் படித்த காலத்தில் அதிராம்பட்டினத்தில் இருந்த பி.ஏ. பட்டதாரிகள் இரண்டே பேர் தான்! ஒருவர் திரு மஜீது! அவரை பி.ஏ. மஜீது என்று தான் அழைப் பார்கள்! மற்றவர் என்.எஸ் இளங்கோவின் தமையனார் திரு கோவிந்தராஜுலு! இன்று அதிரையில் தடுக்கி விழும் இடமெல்லாம் பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பட்டதாரிகள்! இந்த புரட்சி கரமான மாற்றத்திற்கான பெருமை கல்வித் தந்தை எஸ்.எம். எஸ். ஷேக் ஜலாலுத்தீன் அவர்களையே பெரிதும் சாரும்! இது உண்மை! வெறும் புகழ்ச்சி இல்லை!

கல்வியும் செல்வமும் ஒரு சேரப் பெற்றிருந்த அதிரைப்பட்டினத்தின் சரியான வாரிசு நம் கல்வித் தந்தை என்று சொன்னால் அது மிகை ஆகாது! 

வாவன்னா

இன்று அக்டோபர் 2 1

தாஜுதீன் (THAJUDEEN ) | October 02, 2016 | , , ,

இன்று காந்தி பிறந்த நாள்.

தலைவர்கள் ஒவ்வொருவரும் வரிசையாக காந்தி சிலைக்கு மாலையணிவிப்பதும் மலர் வளையம் வைப்பதுமாக தொலைக் காட்சிகளில் காட்டப் பட்டனர். சிலரைப் பார்க்கும்போது உள்ளூர சிரிப்பு வந்தது. இவர்களுக்கும் காந்திக்கும் என்ன தொடர்பு? காலத்தின் கோலம் இவர்களை இப்படி ஆக்கி வைத்திருக்கிறது.

நிச்சமாக காந்திஜி ஒரு தீர்க்கதரிசிதான். அவருக்குப் பின்னால் வரப்போகும் தலைவர்களைப் பற்றி மக்களுக்கு அறிவுறுத்த எவ்வளவு எளிமையான வழியை குரங்கு பொம்மைகள் வழியாக நமக்கு சொல்லித்தந்திருக்கிறார். இன்றைய அரசியல்வாதிகள் எப்படி "நேர்த்தியாக" காந்தீய வழியைப் பின்பற்றிகின்றனர்? உண்மைகளைப் பேசுவதே இல்லை. எளியோருக்கு நடக்கும் கொடுமைகளை கண்டுகொள்வதே இல்லை. மக்கள் போடும் அவலக் கூச்சல்களை காதில் போட்டுக் கொள்வதே இல்லை.

இங்கு இரட்டைக் குவளை முடிந்தபாடில்லை. கீழவெண்மணிகள் ஓய்ந்தபாடில்லை.

அரசியல்வாதி என்ற ஜாதியில் எல்லாம் சர்வ சமம். இந்த ஜாதியில் தீண்டாமையில்லை. அரசியல் திருமணங்கள் ஜாதி பார்ப்பதில்லை. வேண்டியதெல்லாம் "ஓட்டு" என்ற சீதனம்தான். சீதனம் தகுமானதாக இருந்தால் ஜோடிப் பொருத்தம் தானாகவே அமைந்துவிடும்.

நல்லவேளை அக்டோபர் 2 காலண்டரில் இருக்கிறது. இல்லையென்றால் காந்தியின் நினைவுகள் எப்போதொ கரைந்து போயிருக்கும்.

காந்திக்கு போட்ட நாமம் வாழ்க!

உமர்தம்பி

அந்த திக் திக் நேரங்கள்... 25

அதிரைநிருபர் பதிப்பகம் | September 26, 2016 | , ,


இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் சந்தோசமான, சங்கடமான, பதட்டத்துடன் கூடிய இருதயம் படபடக்கும் திக், திக் நேரங்களை எப்படியேனும் சந்திக்காமல் இருப்பதில்லை. சிலருக்கு அவை ஆனந்தம் பொங்கக்கூடியதாகவும், சிலருக்கு அவை துக்கம் தொண்டையை அடைக்கக்கூடியதாக இருப்பதை காண முடியும். அவற்றுள் அறிந்த சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பிரசவத்திலும் கணவன், மனைவிக்கு மட்டுமல்லாது ஒட்டு மொத்த குடும்பத்தினருக்கும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின் ஒவ்வொரு நிமிடமும் அது ஆப்பரேசனா? சுகப்பிரசவமா? ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? தாயும், சேயும் எப்படி இருக்கின்றனர்? என ஒவ்வொருவருக்கும் இதயத்தின் திக், திக் ஓசை அதிகரித்துக்கொண்டே செல்லும்.
ஆண் குழந்தையானால் அது வளர்ந்து சுன்னத் செய்யும் பருவம் வந்ததும் அதற்கு அதனால் வரும் பயம் கலந்த திக், திக் அந்த குடும்பத்தையே தொற்றிக்கொள்ளும்.

பெண் குழந்தையானால் அது பருவம் அடையும் தருவாயில் அதன் பெற்றோருக்கு வரும் ஏதேச்சையான திக், திக் அந்த குடும்பத்தில் கொஞ்சம், கொஞ்சமாக பரவ ஆரம்பிக்கும்.

ஆண், பெண் பிள்ளைகளை ஆரம்ப பள்ளி அனுப்பும் பொழுது பள்ளி செல்லும் முதல் நாள் வரும் பயம் கலந்த திக், திக் நாளடைவில் பள்ளிக்கட்டணம் செலுத்தும் நாளை எண்ணி பக், பக் வென மாறிப்போகும்.

அமைதியாய் இருக்கும் பரிட்சை அறையில் வினாத்தாள் வாங்கும் சமயம் படித்த கேள்விகளா? அல்லது படிக்காதது வந்து விட்டதா? என அதை பார்க்காமலேயே திக், திக் அங்கிருக்கும் மாணவர்களுக்கு பரவத்தொடங்கும்.

பரிட்சைகளெல்லாம் எழுதிய பின் தேர்வுத்தாள்கள் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் அறிவிக்கப்படும் பொழுது அவரவருக்கு எதிர்பார்ப்பிற்கேற்ப திக், திக் ஓசை ஓயாமல் அடிக்கத்தொடங்கும்.

பள்ளி, கல்லூரி மாணவ பருவத்தில் ஏதேனும் தவறுகள் செய்திருப்பின் அதை செய்தது யார்? என ஆசிரியர்களால் விசாரணை துவங்கும் சமயம் திக், திக் தானாகவே சம்மந்தப்பட்டவர்களுக்கு இதயத்தில் ஆனாகிவிடும்.

அவரவர் வேலையுண்டு, வெட்டியுண்டு என அமைதியாய் இருந்து வரும் ஊரில் திடீரென ஒரு மூலையில் வெடிக்கும் கலவரம், குழப்பத்தால் ஒட்டு மொத்த ஊரினருக்கும் திக், திக் சூழ்நிலையை ஏற்படுத்தும்.

முதன் முதலில் அயல்நாடுகள் செல்வோருக்கு விசா, விமான டிக்கெட் ஏற்பாடுகள் ஆகி விமான நிலையத்திற்குள் நுழையும் பொழுதும், வரிசையில் ஒவ்வொருவராக குடியுரிமை அதிகாரிகளின் முன் சென்று நிற்கும் பொழுதும் நாம் குற்றமேதும் செய்யாமல் அப்பாவியாக இருந்தும் இதயத்தில் திக், திக் தீயாய் பற்றிக்கொள்ளும்.

வருடங்கள் சில கழித்து அயல்நாடுகளிலிருந்து தாய் நாட்டிற்கு திரும்பி சென்று தாய், தந்தையரை, உற்றார், உறவினரை, சொந்த, பந்தங்களை பார்க்க ஊர் திரும்பும் வேளையிலும், கொண்டு செல்லும் சாமான்களுக்கு கூடுதல் லக்கேஜ் ஏதேனும் வந்து விடாமல் இருப்பதற்காகவும் ஒவ்வொரு அசைவிலும் திக், திக் அடிக்காமல் யாரும் ஊர் திரும்புவதில்லை.

வீட்டினரால் திருமண ஏற்பாடாகி அந்த அரிய தருணம் நெருங்கும் வேளையில் நடந்தேறும் ஒவ்வொரு நிகழ்விற்கும், இறுதியாக மணமேடையில் சான்றோர்கள், மார்க்க அறிஞர்கள், பெரியவர்களின், குடும்பத்தினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இருகால்கள் மரத்து மண்டியிட்டு முக்கிய நிகழ்வான நிக்காஹ் செய்ய அமரவைக்கப்பட்டிருக்கும் அந்த வேளையிலும் பின்னர் மணப்பெண்ணை கை பிடிக்க இருக்கும் அந்த வேளையிலும் என்ன தான் நாம் உடல் பலசாலியாக இருந்து சிக்ஸ் பேக் வைத்திருந்தாலும் இதய பேஸ்மெண்ட் திக், திக் என கொஞ்சம் ஆட ஆரம்பித்து விடும்.  

நன்கு படித்து முடித்து உள்நாட்டிலோ அல்லது அயல்நாட்டிலோ ஒரு நல்ல வேலைவாய்ப்பு தேட நேர்முக தேர்விற்காக அழைக்கப்பட்டு உரிய இடம் சென்றடைந்து நேர்முக தேர்வு நடத்தும் அதிகாரியால் கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு தக்க பதில் அளித்து திரும்பும் வரை திக், திக் இதயத்தை ஆக்கிரமித்துக்கொள்கிறது.

அரசு பொதுத்தேர்வுகள் எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளில் பரபரப்புடன் கூடிய திக், திக் திசையெல்லாம் பரவிக்கிடக்கும்.

பணியிடங்களில் மேலதிகாரிகளால் ஏதேச்சையாக சந்திக்க அழைக்கப்படும் பொழுது எதற்கென்றே தெரியாமல் திக், திக்கும் கூடவே சேர்ந்து வரும்.

விலையுயர்ந்த பொருட்கள் காணாமல் போகும் பொழுது உள்ளத்தில் திக், திக் நிரம்பிக்கிடக்கும்.

நாம் நேசிக்கும் சிலர் திடீரென இவ்வுலகை விட்டுப்பிரியும் பொழுது அதைக்கேட்கும் சமயம் மனவேதனையுடன் செய்வதறியாது திகைக்கும் சமயம் உள்ளத்தில் திக், திக் குடிகொள்ளும்.

வீட்டினர்களுக்கு திடீரென சுகக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சமயமோ அல்லது அறுவை சிகிச்சை செய்யப்படும் சமயமோ பரிதவிக்கும் உள்ளத்தில் திக், திக் வந்து பாய் விரித்து படுத்துக்கொள்ளும்.

மரண தண்டணைக்கைதிகளின் மரண தண்டணை நிறைவேற்றப்படும் சில மணித்துளிகளுக்கு முன்னர் அவர்களின் இதயம் திக், திக்கால் எப்படி திண்டாடி இருக்கும் என அவர்களையும், நம்மை படைத்த அந்த இறைவனுக்கே நன்கு விளங்கும்.

உலகில் பெரும் குற்றங்களுக்கு தண்டணை இஸ்லாமிய ஷரியத் சட்டங்கள் மூலம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் மனிதர்களால்  நிறைவேற்ற கட்டளையிடப்பட்டிருக்கும் இறைவன் அதே வேளையில் பாதிக்கப்பட்ட மனிதர்கள் மன்னித்தால் அந்த தண்டணையிலிருந்து குற்றவாளிக்கு விடுதலை அளித்து விடுவிக்கலாம் எனவும் தெளிவுர நமக்கு என்றோ தெரிவித்துவிட்டான் இறைவன். எனவே குற்றத்திற்காக தண்டிக்கும், மன்னிக்கும் இரு பெரும் பொறுப்புகளைப்பெற்றிருக்கும் மனிதர்களாகிய நாம் அந்த ஏழைப்பெண் ரிஸானா நஃபீக்கை அவள் குடும்ப ஏழ்மை கருதி அப்படியே அவள் தவறு செய்திருப்பினும் மன்னித்து விட்டு உலக இஸ்லாமிய எதிரிகளின் வாய்களை அடைத்திருக்கலாமே? அதனால் இறைப்பொருத்தத்தை நிரம்பப்பெற்றிருக்கலாமே? அரபு நாட்டவர்களெல்லாம் காட்டுமிராண்டிகள் என உண்மைநிலையறியாது உளரும் ஊடகங்களுக்கும் பாலைவனத்திலும் நறுமணம் வீசும் ரோஜாக்கள் அன்று முதல் இன்று வரை மலர்ந்து கொண்டு தான் இருக்கின்றன என  அந்த பாதிக்கப்பட்ட அரபுக்குடும்பம் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி உலகுக்கு எடுத்துரைத்திருக்கலாமே? என்ற துக்கம் கலந்த ஏக்கம் நம் எல்லோருக்கும் இல்லாமல் இல்லை.

திடீரென நேற்று நள்ளிரவு சுமார் 1:30 மணியளவில் சவுதியில் தண்டணை நிறைவேற்றப்பட்டு சமீபத்தில் மரணமடைந்த இலங்கைப்பெண் ரிஸானா நஃபீக்கின் ஞாபகமும், அவர் பெற்றோரின் துக்கம் தொண்டையை அடைக்கும் பேட்டியும் பார்த்தபின் மனசுக்கு ரொம்ப கஷ்டமா போயிரிச்சி. அதற்கு பின் எனக்கு தூக்கத்தை தொடர இயலாமல் போய் காலையில் எப்பொழுதும் போல் எழும்பி வழக்கம் போல் பணிக்கு வந்து விட்டேன். அதன் தாக்கமே இந்த ஆக்கம் எழுத வித்திட்டது.

இது எதோ ஒரு இஸ்லாமியப்பெண்ணுக்கு சவுதி அரேபியாவில் ஏற்பட்டுவிட்டதால் நமக்கு வந்த பச்சாதாபமும், இரக்கமும், பரிவும் அல்ல. உலகில் எந்த மூலையிலும் மனிதனாய் பிறந்த எவருக்கும் வேதனை தரும் நிகழ்வுகளும், அநீதியும் இழைக்கப்படக்கூடாது என்பதே மார்க்கம் போதிக்கும் நம் விருப்பமும், ஆசையுமாகும். அதை சரிவர உலக ஊடகங்கள் புரிந்து கொள்ளவில்லையெனில் அது அவர்களின் தவறேயன்றி அதற்கு நாம் பொறுப்பேற்க இயலாது.

சமீபத்தில் நம் வடக்கு எல்லையை பாதுகாத்து வந்த இந்திய ராணுவ வீரர்கள் இருவர் (பாக்கிஸ்தான் ராணுவத்தாலோ அல்லது இரு நாட்டு எல்லையின் சீர்கேட்டை என்றுமே விரும்பும் சில அயோக்கிய பிரிவினைவாதிகளாலோ) கொல்லப்பட்டு அதில் ஒரு வீரனுடைய தலை துண்டிக்கப்பட்டு வெறும் முண்டம் மட்டும் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொடூர சம்பவத்திற்கு யாரும் ஒரு போதும் வக்காலத்து வாங்க இயலாது. அந்த வீரனின் தலை கிடைக்காமல் அவர் முண்டத்தை மட்டும் வைத்துக்கொண்டு அவரின் பெற்றோர்கள் மேற்கொண்ட ஆக வேண்டிய சடங்குகள் அவர்கள் நம்பிக்கைப்படி செய்ய இயலாமல் வேதனையில் தவித்து வருவதால் வரும் வலியை வெளியிலிருந்து யாரும் அந்தளவுக்கு உணர்ந்து விட முடியாது. அவ்வளவு கொடுமையான வலி தன் மகனின் தலையை திருப்பித்தர கேட்டு நம் நாட்டு அரசிக்கு அவர்கள் கோரிக்கை வைத்து நிற்பது. கண்ணீருக்கு நிறமில்லை, வேதனைக்கு மதமில்லை, மார்க்கமில்லை. எனவே யாருடைய வேதனையையும் யாரும் கொச்சைப்படுத்த உலகில் யாருக்கும் அதிகாரம் அளிக்கப்படவில்லை.

அல்லாஹ் அந்த பெண்ணுக்கு மறுமையில் உயர்ந்த பதவியை தந்தருள்வானாக.... அவரின் பிரிவால் வாடும் அந்த ஏழைக்குடும்பத்திற்கு அவர் ஹயாத்தோடு இருக்கும் பொழுது என்ன வருமானம் கிடைத்ததோ அதை விட பன்மடங்கு அந்த குடும்பத்திற்கு நினையாப்புறத்திலிருந்து ஏற்படுத்திக்கொடுப்பாயாக....ஆமீன்.

இதுபோல் வாழ்வில் நாம் சந்திக்கும் எத்தனையோ திக், திக் நிகழ்வுகள் ஏதேனும் விடுபட்டிருப்பின் அதை பின்னூட்டம் மூலம் நீங்கள் தொடரலாம்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு