
வாட்டும் போதெல்லாம்
வாப்புச்சா மடிதேடும்
வலிகண்ட மனம்!
வட்ட முகத்தில்
வரிவரியாய் ரேகைகள்
வாழ்ந்த வாழ்க்கையின்
விளக்க உரைகளாய்!
வாப்புச்சா வார்த்தைகளில்
வகைவகையாய் அன்பிருக்கும்
வாஞ்சையுடன் வருடும்போது
வாழ்க்கையிலே தெம்பு வரும்
வாப்பா மறுத்த தெல்லாம்
வாப்புச்சா வாங்கித்தரும்
உம்மா அடிக்கவந்தால்
ஒருபார்வையில் தடுக்கும்
சுருக்குப்பை யொன்று
இடுப்பினில் தொங்கும்
இறுக்கிய முடிச்சவிழ்த்து
எனக்கு மட்டும் கொட்டும்
முந்தானை முனையிலெல்லாம் - என்
மூக்கைச் சிந்திவைக்கும்
மொத்தியாகப் போகவேண்டி
முதல்வனிடம் கோரும்
புரைவிழுந்த பார்வைக்கு
பகல்கூட மங்கல்தான்
பாசமான பேரன்மட்டும்
பிரகாச பிம்பம்தான்
சாப்பாட்டை வைத்துக்கொண்டு
காத்திருக்கும் உம்மா
தட்டோடு என்னைத்
தேடிவரும் வாப்புச்சா
தென்னையாய் நினைத்து
எனைவளர்த்த வாப்புச்சா
என்றும் என் நெஞ்சில்
இனிக்கும் இளநீராய்!
- சபீர்