புனித ரமழான் மாதம் முடிந்த கையோடு பழைய குருடி கதவைத்திறடி என்பது போல் நம் ஊரில் மின்தடை மிக மோசமாக அதிகரித்துள்ளது. கண்ட நேரங்களில் மின் அளிப்பு துண்டிக்கப்படுவதால் அனைத்து தரப்பு பொது மக்கள், வியாபாரிகள், சிறு தொழில் செய்வோர் என பல தரப்பட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பருவ மழை பொய்த்துள்ளதால் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக எந்த குளத்திலும் தண்ணீர் தேக்கம் இல்லை. கூடங்குளம் அணுமின் நிலையம் துவங்கப்பட்டும் பிரயோஜனம் இல்லை. இன்னும் பதினைந்து கூடங்குளங்கள் வந்தாலும் இப்படித்தான் இருக்குமென்றால் எதற்காக அவைகள் என தெரியவில்லை.
இந்த நிலை இன்னும் நீடித்தால் மின் சாதனங்களை வைத்து தொழில் செய்வோர் உதாரணமாக ஜெராக்ஸ், ரத்தப்பரிசோதனை நிலையம், ஃபிசியோ தெரபி, ஜூஸ் பிழியும் மிக்ஸி போன்ற தொழிலில் ஈடுபடும் நபர்கள் அந்த தொழிலை விட்டு வேறு ஏதேனும் தொழிலுக்கு செல்ல வேண்டி வரும். நாட்டில் தேவையில்லாமல் பொதுமக்களுக்காக கொடுக்கப்படும் இலவசங்களும், மானியங்களும் மத்திய, மாநில அரசுகளால் ஒழிக்கப்பட்டு அத்தியாவசிய தேவைகளின் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டு அதற்காக ஒவ்வொரு நிதியாண்டிலும் போதிய நிதி தாராளமாக ஒதுக்கப்பட வேண்டும்.
விமானத்தில் கொழும்பிலிருந்து திருச்சி வரும் வழியில் மேலிலிருந்து கண்டால் இந்தியாவின் தென்கோடியான தனுஷ் கோடியிலிருந்து ஆரம்பிக்கும் வறட்சி மாநிலம் முழுவதுமாக பரவிக்கிடக்கிறது. இப்படியே வறட்சி தொடர்ந்து பருவ மழை பொய்த்துக்கொண்டு விவசாயம் மெல்ல, மெல்ல சிரமமின்றி லாபம் ஈட்டும் வேறு தொழிலுக்கு நகருமேயானால் வங்கிகளில் பெருத்த பண இருப்பு இருக்கும். ஆனால் வாய்க்கு நல்ல சாப்பாடு கிடைக்காத சூழ்நிலை உருவாகும்.
காலப்போக்கில் மக்கள் தண்ணீருக்காக ஆழ்குழாய்க்கிணறுகள் தோண்டும் பொழுது இடையில் பெட்ரோல் கிடைத்தாலும் யாருக்கு பெட்ரோல் வேண்டும்? தண்ணி கிடைக்கிதாண்டு பாருங்க... என்று தான் கேட்க நேரிடும். ஒரு காலம் ஆகஸ்ட் மாதத்தில் வானம் வடகிழக்கில் மேகம் கருத்து இருட்டு கசமாகி நல்ல மழையை பொழிந்து சென்றது. அதனால் மக்களின் மனமும் குளிர்ந்திருந்தது. தெருவில் கூறிச்சென்ற கலர்க்கலரான காய்ச்சல் குருவியுடன் பருவ மழையும் கண்மாசியாக்காணாமல் போய் விட்டதோ? என்னம்மோ? தெரியவில்லை.
விமானத்தில் வானில் பறக்கும் பொழுது கருமேகங்கள் பஞ்சு மிட்டாய் போல் தாராளமாய் குவிந்திருந்தாலும் மழை பொழிய அதன் எஜமான் அல்லாஹ்விடமிருந்து கட்டளை வரவில்லை போலும்.
அது என்னம்மோ தெரியவில்லை. மின்சாரத்திற்கும், நமதூர் மரங்களுக்கும் எதோ தொடர்பு இருக்கும் போல் தெரிகிறது. அது நல்ல தொடர்பா? இல்லை கள்ளத்தொடர்பா? தெரியவில்லை. காரணம் மின்சாரம் இருந்தால் தான் மரங்களும் தலை விரித்தாடி காற்றை வீசச்செய்கின்றன. மின்சாரம் இல்லையேல் மரங்கள் ஏதோ 144 ஊரடங்கு உத்தரவு போட்டது போல் கப்சிப் என அமைதியாய் நின்று விடுகின்றன.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய நிர்வாக இயக்குநர் திரு. ரமணனிடம் கேட்டால் வட கிழக்குப்பருவ மழை ஆரம்பிக்க இருப்பதால் இடியுடன் கூடிய மழை இன்றோ, நாளையோ பெய்யலாம். அல்லது பெய்யாமலும் போகலாம் என்கிறார். இதை வானத்தைப்பார்த்து செக்கடிமோட்டிலிருந்து நம்ம காதராக்காவே ஈஸியாக சொல்லி விடுவார்களே? இதற்கு எதற்கு சென்னையில் வானிலை ஆய்வு மையம் என சில பேர் கேட்டு விடுகிறார்கள். என்ன செய்ய?
வீடுகளில் வைக்கப்பட்டுள்ள இண்வெர்ட்டர்களெல்லாம் வேலைப்பளு தாங்க முடியாமல் ஓவர் டைம் பார்த்து பல்லிளித்து படுத்து விடுகிறது. கொசுக்களும் மக்களின் ரத்தத்தை குடித்து தன் முதுகில் சுமந்த ரத்தத்தை தூக்க முடியாமல் மக்களின் தோல் மேலேயே தூங்கி விடுகிறது களரி சாப்பாட்டில் நல்ல் வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு 7 அப்புக்காக காத்திருப்பவர்களைப்போல.
பூமியிலிருந்து 57 கோடி கிலோ மீட்டர் தூரம் உள்ள செவ்வாய்க்கிரகத்திற்கு 'கியூரியாஸிட்டி ரோவர்' விண்கலம் சென்றிருக்கலாம். ஆனால் தொடர் மின்சார அளிப்பிற்கு வேறு ஏதேனும் கிரகத்திற்காவது சென்று ஒரு நல்ல காண்ட்ராக்ட் போட்டு வந்தால் நல்லது. மீன்கள் உலாவ வேண்டிய செக்கடிக்குளத்தில் இன்று மாடுகள் உலாவி வருகின்றன.
போதிய மரங்கள் இருந்தால் மட்டுமல்ல மக்களின் மனங்களும் சுத்தமாகி மனித நேயம் தாரளமாய் எங்கும் பரவிக்கிடந்தாலே இறைவன் மழையை தாரளமாய் நமக்கு இறக்கி அருள்வான் என்பது மட்டும் திண்ணம்.
பறவை, விலங்கினங்களுக்கும் நாம் அன்றாடம் சரிவர குடிக்க நீர் புகட்ட வழி வகை செய்ய வேண்டும். பிறகு இறைவன் நமக்கு கருணை காட்டி அருள் மழை பொழியச்செய்வான்.....இன்ஷா அல்லாஹ்...
மு.செ.மு. நெய்னா முஹம்மது

.jpg)
