1984களில் வெளிவரும் வார இதழ்களில் ஒன்றான கல்கண்டு இதுதான் நான் முதன் முதலில் படித்த வார இதழ். அப்போது திங்கள் தோறும் வரும் என்று நினைவில் இருக்கிறது, மறு திங்கள் கிழமை வரும் வரை அந்த இதழையே திரும்பத் திரும்ப படித்துக் கொண்டிருப்பேன் விளம்பரம் உள்பட அப்படி படிக்கும் போது ஆவிகள் தொடர்பும் அடையும் நன்மைகளும் என்ற தலைப்பில் ஒரு புஸ்தகம் விற்பனைக்கு இருப்பதாக ஒரு விளம்பரம் பார்த்ததும் அந்த வயதில் அதில் ஒரு ஆர்வம் தொற்றிக் கொண்டது.
'15 பைசா'விற்கு போஸ்ட் கார்டு வாங்கி விளம்பரத்தில் கண்ட அந்த புஸ்தகத்தை வி.பி.பி.யில் அனுப்புமாறு எழுதி போஸ்ட் செய்து விட்டேன். இதற்கிடையில் பேய்கள் (ஆவி) இருக்கிறதா? இல்லையா? என்ற விவாதம் நண்பர்கள் மத்தியில் சூடு பிடிக்க தொடங்கி விட்டது.
தொடர்ந்த விவாதம் என் பெயரைக் கொண்ட ஒரு பெரியவரிடம் தீர்ப்புக்காக சென்றது. அவரும் “பேய்கள் இருக்குதுப்பா நான் வேணும்னா உங்களுக்கு காட்டுறேன்” என்றார்.
பேயை பார்க்கும் ஆர்வத்தில் “சரி எப்போ காக்கா பேயை காட்டுவீர்கள்” என்றதும்.
“இன்று இரவு சரியா பத்து மணிக்கு எல்லாரும் புளிய மரத்தடிக்கு வந்துருங்கோ” என்றார்.
பேயை பார்க்கும் ஆர்வத்தில் சரியாக பத்து மணிக்கெல்லாம் நண்பர்கள் அனைவரும் புளிய மரத்தடியில் ஆஜர்.
பேயை காட்ட அந்த காக்காவும் அங்கு வந்து சேர்ந்தார். “சீக்கிரம் பேயை காட்டுங்கள்” என்று அவசர படுத்தவும்.
பேயைக் காட்ட வந்த காக்கா சொன்னார் “பேயை பார்க்க வருபவர்கள் தைரியமான ஆளா இருக்கணும் பேயை பார்த்ததும் பயந்து இரத்தம் கக்கினால் நான் பொறுப்பு கிடையாது” என்ற கன்டிஷனோடு (100 ருபாய் பத்திரத்தில் கையெழுத்து மட்டும் வாங்கலே) “அப்படி இருந்தா வாங்க” என்றார்.
அதுவும் பேயை பார்க்க ரயில்வே கேட்டை தாண்டி கஸ்டம்ஸ் பில்டிங் அருகே தான் பேய் இருக்குது என்று ஒரு பொடியைத் தூவி வைத்திருந்தார். இதை கேட்ட என்னோடு வந்த நண்பர்கள் பலரும் பயந்தவர்களாக “அவ்வளவு தூரம் போயிட்டு வர நேரம் ஆகும் உம்மா பேசும் நான் வரலே” என்று ஒவ்வொருவராக கழன்று கொண்டார்கள் (அப்போது எங்களில் யாருக்கும் கல்யாணம் ஆகலே அதுனாலதான் உம்மா பேசும் என்றவர்களாக கழட்டிக் கொண்டார்கள்).
பேய் பார்க்க போகும் தைரியமான குருப்பில் ‘தமிழ் தெரிந்த அடியேனும்’ ஒருவன் என்பதை இங்கு சொல்ல வேண்டியதில்லை AN வாசகர்களுக்கு அடியேனின் ‘தைரியம்’ பற்றி நல்லா தெரியும்! 10 பேரா இருந்த குருப் 4 பேரா மாறிப்போய் பேய் பார்க்க கிளம்பினோம்.
இரவு மணி 10.30 ஆகிவிட்டது ரயில்வே ஸ்டேஷனை தாண்டியதும் அனைவரையும் ஒரு வகை பயம் கவ்விக் கொண்டது. பயத்துடன் ஒருவரை ஒருவர் உரசிக் கொண்டு நடந்து போய் கொண்டிருக்கும்போது சட்டென்று ஒருவர் “கொஞ்சம் எல்லோரும் நில்லுங்கப்பா” என்றார்.
ஆகா ‘பேயை’ இவர் பாத்துட்டாரோ என்று அனைவரும் பயத்துடன் நின்றதும் அவர் தொடர்ந்தார் “எனக்கு ஒன்னுக்கு வருது” என்றதும்.
“சரி இருந்துட்டு வா நாங்கள் போய் கொண்டு இருக்கின்றோம்” என்றதும்.
“அதெல்லாம் முடியாது எல்லோரும் ஒன்னுக்கு இருங்கள் நான் மட்டும் ஒன்னுக்கு இருக்க பயமா இருக்கு” என்று பரிதாபமாக கெஞ்சியதும்.
“சரி” என்று அவருக்காக நாங்களும் ஒன்னுக்கு இருந்தோம்.
ரயில்வே கேட்டை தாண்டியதும் எங்களுக்குள் பயத்தால் நெருக்கம் அதிகமாகியது தொடர்ந்த நடையில் வலது புறம் கடைசிலும் இடதுபுறம் கடைசிலும் நடந்து வருபவர்கள் பயத்தில் முண்டியடித்துக் கொண்டு நடுவில் புகுந்துவிட ஒரு பெரிய போட்டியே நடந்தது.
அந்த கும்மிருட்டில் ரயில்வே கேட்டிற்கும் கஸ்டம்ஸ் பில்டிங் கிற்கும் நடுவே சென்றதும் தீடீர் என்று “யாரும் அசையாதீர்கள் அப்படியே உட்காருங்கள்” என்றார் சொன்ன மறுகணம் எங்களுக்குள் பயத்தால் நடு ரோட்டில் அப்படியே உட்கார்ந்து விட்டோம். யாரு நடுவில் பாதுகாப்பாக உட்காருவது என்பதில் ஒரு சிறு தள்ளு முள்ளு ஏற்பட்டு பிறகு சமாதானம் ஆனது.
கடல் காற்று தொன்றலாய் எங்களை வருடிச் சென்றது. பேயை காட்ட வந்தவரிடம் “எப்போ பேய் வரும்” என்றதும்.
“கொஞ்சம் சும்மா இருங்கடா” என்று சப்தமில்லாமல் சத்தம் போட்டார். என் பக்கத்தில் இருந்த நண்பன் சொன்னான் இல்லை இல்லை புலம்பினான் “நேரமாக ஆக மரியாதை கொறஞ்சி போவுது” என்று புலம்பியது என் காதுக்கு மட்டுமே கேட்டது. இது அவரோட டைம்ன்னு நினைத்து கொண்டு முழங்காலை கட்டிப் பிடித்து கொண்டு அனைவரும் கப்சிப் என்று நடு ரோட்டில் உட்கார்ந்து இருந்தோம்.
மணி 11.30 ஆனது தொன்றலாய் வீசிக் கொண்டிருந்த காற்று சற்று ஓய்ந்தது அதோடு சேர்ந்து தென்னை மற தோகையின் சலசலப்பும் ஓய்ந்தது. அங்கு நாங்கள் விடும் மூச்சு காற்று சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.
அப்போது திடீரென்று ஒரு சம்பவம் நடந்தது தென்னை மரத் தோகையிலிருந்து சடசடவென சத்தம் வந்தது, காற்று திசை மாறி வீச ஆரம்பித்தது பேயை காட்ட வந்தவர் சொன்னார் “எல்லாம் தைரியமா இருங்கள் பேய் வரும் நேரம் ஆச்சு” என்று அவர் சொன்ன கணமே மூச்சு காற்று சத்தத்தோடு இதய துடிப்பு சத்தமும் வெளியே கேட்க ஆரம்பித்தது. சற்று நேரத்தில் மூக்கில் சொக்க வைக்கும் வாசம் நுகர ஆரம்பித்தது. பேயை காட்ட வந்தவரோ “இன்னைக்கு வந்து இருக்கின்ற பேய் பெண் பேய் அதான் வாசமா இருக்கு” என்றார்.
பேயை பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் எங்களின் கண்கள் அந்த இருட்டிலும் நாலா பக்கமும் அலை பாய்ந்தது காற்றின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அந்த வாடையும் அதிகரித்தது.
ஹாய்யாக தொடரும்...
Sஹமீது


