Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label வசதி. Show all posts
Showing posts with label வசதி. Show all posts

காரை வீடுகள்..! 38

ZAKIR HUSSAIN | December 01, 2013 | , , ,



நம்மையும் மீறி காலம் எழுதிச் செல்லும் உண்மைகளை மறுபடியும் பார்க்கும் மீள்பார்வை மாதிரி இருந்தது, அந்த வீட்டை பார்த்த தருணம். மார்ஃபிங் டெக்னாலஜியில் மறுபடியும் அந்த வீட்டுக்கு பெயின்ட் அடித்து லைட் எல்லாம் ஒளிர விட்டு பார்த்தால் நிச்சயம் வாயடைத்துப் போய் பார்த்துக் கொண்டிருக்கலாம்.


இப்போ யார் இருக்காங்க'அந்த வீட்டுக்காரங்கன்னு யாரும் இல்லே... ஒரு வயசானவர் அந்த வாசல்லெ படுத்துக் கிடப்பார், அவருடைய சேஃப்டிக்கு ஒரு படல் மட்டும் கட்டி வச்சிருக்கார், ஒரு கயிருதான் அவருடைய பூட்டு.

நாங்க சிறுசுங்களா இருக்கும் போது அந்த வீட்டிலெ எப்போதும் சந்தோசத்தைத்தான் பார்த்து இருக்கோம். நிறைய உறவுக்காரங்க ரொம்ப 'தாட்டியா' இருப்பாங்க. அந்த வீட்டுக்கார அம்மா எப்போதும் சளைக்காமெ எல்லோரையும் கவனிச்சுக்குவாங்க... ஒரு வாட்டி அந்த வீட்டிலெ அவங்க மகளுக்கு அம்மை போட்டிருந்துச்சா..தலைக்கு தண்ணி விடும்போது சக்கரைப்பாவிலெ சோரு.. அரிசியை அரைச்சு தேங்காய் எல்லாம்  சில்லு சில்லா போட்டு உருண்டையா ஒரு எழனி [இளநீர்] மேலே வச்சு தந்தாங்க... இன்னிக்கும் இனிக்குதுங்க..

பெரியவருக்கு கண்ணுக்கு எட்டினதூராம் எல்லாம் அவருடைய சொத்துதான். வசதி இருந்தாலும் மனுசன் சுறுசுறுப்புக்கு கொரவில்லே..'


எங்க ஊர்லெ முதன் முதல்லெ கார் வாங்கியதும் அவர்தான். புல்லட் மோட்டார் சைக்கிள் வாங்கியதும் அவர்தான். அவர் தெருக்கோடிலெ வந்து நுழையும்போது அந்த மோட்டோர் சைக்கிள் அவருக்காகவே செஞ்ச மாதிரி அப்படி ஒரு கம்பீரம் இருக்கும். அவங்க வீட்டம்மா முழுக்கை ஜாக்கெட் போட்டிருப்பாங்க... பார்க்க ஏதோ ராஜ குடும்பத்து மனுசி மாதிரி அப்படி செவப்பா... கவுரவமா இருப்பாங்க.

அவங்க கார்லெ வெளியே போகும்போது நாங்க எல்லாம் சின்னப்பசங்களா.... அந்த அம்பாசிடர்காரின் பின்னால் உள்ள ஃப்ரேமில் உட்கார்ந்து அந்த சிக்னல் லைட்டை பிடிச்சிட்டு கொஞ்ச தூரம் போய் எறங்கிடுவோம். அப்ப ஒரு பெட்ரோல் வாசனை இருக்கும் பாருங்க... அது ஒரு ஜென்ம சந்தோசமுங்க... இது வரைக்கும் அந்த மாதிரி ஒரு வாழ்க்கை இல்லே.

இவ்வளவு வாழ்ந்த வீடு ஏன் இப்படி ஆயிடுச்சி...

அதுதான் எல்லோருக்குமே ஒரு மர்மமா இருக்கு. நான் சின்ன வயசா இருக்கும்போது வெளியூர் அப்படி இப்படினும் போயிட்டதாலே, இந்த வீட்டை பற்றிய ஞாபகம் இல்லே... பூட்டியிருக்குனு நெனச்சோம்... அப்புறமா அந்த வீட்டு வசதிகள் மற்றவர்களுக்கு பங்கு வைக்க முடியாத சூழ்நிலை... அப்புறம் என்ன செத்த மாட்டிலெ உண்ணி எறங்குற மாதிரி சொந்தமெல்லாம் வேறு இடங்கலெ நாட ஆரம்பிச்சிடுச்சி...

கெளரவமா வாழ்றவதில் இதில் தான் ரிஸ்க். எதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லவா?

சொல்றது ஈசி....வாழ்றதுலெ கஷ்டம் இருக்கு.

சொந்த ஊர்லெ கொஞ்சம் அடக்கி வாசிக்கனுங்கிறியளா...

அட நீங்க ஒன்னு  அடக்கி வாசிச்சாலும் நீட்டி வாசிச்சாலும் டன் கணக்கிலெ குறை வரத்தான் செய்யும். சம்பாத்யம் இல்லேனே சோம்பேரினுவான். சம்பாதிச்சா கொடு எல்லாத்தையும்னு வந்து நிப்பானுக. பசிச்சவனுக்கு சோறு கிடைக்கலயேனு கவலை. சோறு கிடைச்சவனுக்கு, பிரியாணி கிடைக்கலயேனு கவலை. குழிக்கு போர நேரம் வரை கூடவே வர்ர உணர்வுதானே இது.

இருந்தாலும் என மனதுக்குள் என்னவோ செய்தது. அந்த வீடு கரைபடிந்து இடிந்த நிலையில் இருந்தது. வெகு நாட்களாக ஜனப்புழக்கம் இல்லாததால் சன்னல்களின் சட்டங்கள் சுவற்றோடு ஒட்டாமல் தனியாக நின்றது. இடைவெளியில் ஒரு மரவட்டை நகர்ந்து கொண்டிருந்தது. வீடு நீளமாக இருந்ததால் பக்கவாட்டில் இருந்த சுவரும் நீலமாகவே இருந்தது.

எப்போதோ நடந்த தேர்தலில் போட்டியிட்ட எம்.எல்.ஏ-வின் பெயருடன் உதயசூரியன் வரைந்து இருந்தது.... மங்கிப்போய். வழக்கம்போல் ஒழிக / வாழ்க இருந்தது.  உள்ளே நடு முற்றம் வைத்து கட்டிய வீடு, முற்றமெல்லாம் செடி கொடிகள் மண்டிப்போய்...!

' அந்த நடுவில்தான் பெரியவர் உட்கார்ந்து பேப்பர் படிப்பார்... வேலைக்காரங்க பக்கத்திலேயே செம்பு சட்டிலெ வெண்ணீர் போட்டு வச்சிருப்பாங்க குளிக்க...

உற்றுப்பார்த்தேன்.... மூன்று கருங்கள்கள் செடிகொடிகளுக்கிடையே... வீட்டின் கடைசிப் பகுதியில் உள்ள ஒரு ரூம்.... .க்ராஸ் பன்னும்போதே வவ்வால் நாற்றம்.

இங்கே தான் அறுவடை சமயங்கல்லே  கூரை முட்டும் அளவுக்கு நெல் மூட்டையா அடுக்கி இருக்கும்.

"அதோ அந்த சமையல் கட்டை பாருங்க.... எப்போதும் பொங்கி போடுற எடம். கேட்டு வர்ரவங்களுக்கு இல்லேனு சொல்லாத வீடும்பாங்க....

கூரை ஒட்டையாகப் போய் உடைந்த சட்டங்களுக்கிடையே சூரிய வெளிச்சம் வந்தது.

மனசு கணத்துப்போய் கேட்டேன். ' இந்த வீட்டுக்காரங்க இப்போ எங்கேதான் இருக்காங்க.....

பெரியவர் இறந்து போனப்புரம், அந்த அம்மா தனது மகளை கூட்டிட்டு எங்கே போனதுன்னு தெரியலெ.

சில பேர் சொல்றாங்க எதோ வெளி ஊர்லெ இருக்காங்க ரொம்ப தூரம்னாங்க...

எத்தனையோ ஊர்களில் இப்படி காரை வீடுகளின் அஸ்திவாரங்களுக்குள் புழுங்கிபோன வரலாறுகள் இருக்கிறது.

சரி இப்படி வாழ்ந்தவர்களின் வாழ்க்கை ஏன் இப்படி போனது?...

'தெரியலெயே..! எல்லாத்துக்கும் பதில் தெரிஞ்சா ஆண்டவனை மறந்துட மாட்டோமா... அதான்....!

ZAKIR HUSSAIN


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு