நான்காம் ஆண்டிலும்நன்மையே வேண்டி !
மூன்றாண்டு காலம்
முத்துக் குளித்தோம்
இணையக்கடல் எமக்கு
எத்துணைத் தந்ததோ
அத்துணையும் உங்களுடன்
அன்புடன் பகிர்ந்தோம்
கண்டெடுத்துக் கரைசேர்த்தது
ஏராளம்
ஒத்துழைத்த உங்கள் மனம்
தாராளம்
மொழியை மெருகேற்றினோம் -நல்
வழியைக் கருவாக்கினோம்
அரசியலை அலசினோம் - அதன்
விரிசல்களில் வெளிச்சமிட்டோம்
இஸ்லாத்தை எத்தி வைத்தோம் - இதில்
பிரிவுகளைக் குட்டி வைத்தோம்
சமுதாயச் சீர்திருத்தமும்
சீர்கேட்டில் சிறு திருத்தமும் சொன்னோம்
உள்ளத்திற்கு
உரமூட்ட "படிக்கட்டுகள்"
அமைதியூட்ட "அருமருந்து"
மகிழ்வூட்ட "நபிமணியும் நகைச்சுவையும்"
நெகிழ்வூட்ட "அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும்"
ஆஃப்ரிக்கா முதல்
அமெரிக்காவிலிருந்து அதிரை வரை
அழகிய "பயணக் கட்டுரைகள்" பல கண்டோம்
பேச்சற்ற இடங்களைப்
"பேசும் படங்களாக்கினோம்"
கற்றோரும் மற்றவரும்
மெச்சுகின்ற "கவி" படைத்தோம்
"மனுநீதி மனிதகுலத்திற்கு நீதியா"
ஆய்வுக்கட்டுரையை
அகிலத்தின்
புத்தியைப் புதுப்பிக்கப்
புத்தகமாய்ப் பதிப்பித்தோம்
"பழகு மொழி"யெனத் தமிழை
அழகாய்க் கற்பிக்கிறோம்
அற்ப உலகின்
பொருளாதாரக் கொள்கைகளை
மண்டியிட வைக்கப் போகும்
"இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள்"
ஆராய்ச்சி தொடர்கிறது
ஆங்கிலத்தின் அவசியத்தை
அவ்வப்போது வலியுறுத்துகிறோம்
குருட்டுப் பார்வை
மாறுகண்
மங்கியப் பார்வை
என
எல்லாப் பார்வைகளையும்
ராஜபார்வையால்
சீராக்கி
மருண்டும் மருகியும்
உழன்ற இஸ்லாமிய
இக்காலக் கவிஞர்களுக்காக
வக்காலத்து வாங்கினோம்
"கவிதை ஓர் இஸ்லாமியப் பார்வை"யில்!
விதி மீறலைச் சுட்டினோம்
வீதி யெங்கும் பேசவைத்தோம்
சதி யேதும் நிகழாமல்
நீதி கேட்டு நிமிர வைத்தோம்
விவாதக்களம் அமைத்தோம்
விரசமில்லா விமர்சனமும்
துணிவான தூண்டல்களே என
தனியொரு விதி படைத்தோம்
அதிரையின்
வட்டார மொழி
தனிப்பட்ட வாழ்வியல் தோரணை
என
எல்லாவற்றையும்
உங்களோடு
உள்ளன்போடு பகிர்ந்தோம்
இனிவரும் காலங்களில்
இன்னும் சாதிக்க
இருகரம் ஏந்தி
இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்
இணைந்திருங்கள்
இன்ஷா அல்லாஹ்!
அதிரை நிருபர் பதிப்பகம்

