Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label வளர்க. Show all posts
Showing posts with label வளர்க. Show all posts

நுண்மென், சாளரம் & வறட்டி ரொட்டி ! (தமிழே வளர்க!) 24

அதிரைநிருபர் பதிப்பகம் | November 08, 2013 | , , , , , , ,

"ஐயா! நான் நுண்மென் நிறுவனத்திற்கு எப்படிச் செல்லவேண்டும்?"

"ஹே! வாட் டூ யூ வாண்ட் மேன்? வாடீஸ் நுண்மென்?"

"மன்னிக்கவும். உங்கள் முகச்சாயலைப் பார்த்தால் தமிழர் மாதிரி தெரிந்தது. அதான் கேட்டேன்".

"சார்! நான் தமிழன் தான்! அதென்ன நுண்மென் நிறுவனம்? புரியும்படியா கேட்டீங்கன்னா தெரிஞ்சா சொல்றேன்".
"அதான் தம்பி. உலக பெரும்பணக்காரர் 'விலைக்குறிப்பு கதவுகளின்' நிறுவனம்!"

உலக பெரும்பணக்காரர் "விலைக்குறிப்பு கதவுகளா"? 

"அதான் தம்பி அமெரிக்கா நிறுவனம். கணிப்பொறிக்கான சாளரம்
இயங்குதளத்தின் தலைமை நிர்வாகி".

"சார்! கொஞ்சம் புரியும்படியா பேசுறீங்களா? நுண்மென், விலைக்குறிப்பு கதவுகள், சாளரம்!! இதெல்லாம் என்ன? எந்த மொழி?" (ஒருவேளை இவன் லூசா இருப்பானோ?)

"தமிழ்தான் தம்பி. என்னிடமுள்ள சமர்த்து பேசியில் நுண்மென் நிறுவன இலட்சினை இருக்கு. அதைப்பார்த்தால் உங்களுக்கு விபரம் புரியும்னு நினைக்கிறேன்".

"சரி காட்டுங்க பார்ப்போம்".

சட்டைப்பையிலிருந்து நோகியா ஸ்மார்ட்போனை எடுத்து அதிலுள்ள லோகோவைக் காட்டுகிறார்.

"அட! மைக்ரோசாஃப்ட்! ஏங்க இப்படி குழப்புனீங்க. மைக்ரோ சாஃட்டுன்னு கேட்டிருக்கலாமே! நேராபோயி லெஃப்ட்ல திரும்பி,ரைட்ல கட் பண்ணுனீங்கன்னா மெக்டொனாட் ரெஸ்டாரன்ட் வரும்,அப்புடியே ரோட்டை கிராஸ் பண்ணி ஆப்போசிட்ல இருக்கிற ஓவர் ஃபிரிஜ்ல ஏறிப்போய், அங்கிருந்து சப்வேயில இறங்கி நடந்தால் மைக்ரோசாஃப்ட் என்ட்ரன்ஸ் வந்துடும்.

தம்பி நான் "தீவிர" தமிழ் பற்றாளர்.தமிழை தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களிடம் தமிழிலேயே பேசவேண்டும் என்ற கொள்கையுடன் இருக்கிறேன்.ரொம்பநன்றி தம்பி.நாம் மீண்டும் சந்தித்தால் கண்டிப்பாக கொட்டைவடிநீரோ அல்லது ரொட்டிக்கடை-உள்ளே பதப்படுத்தப்பட்ட பாலாடை தடவிய வறட்டி ரொட்டியோ சாப்பிட வேண்டும். 

=*=*=*=*=*=*=*=*=*=*=*= 

இது கற்பனையான உரையாடல்தான். பேசப்பட்ட விசயமும் காமெடியாகத்தான் இருக்கிறது. ஆனால் மிகவும் சீரியசான விசயம் இது. சிலரின் அதீத ஆர்வத்தினால் ஒட்டுமொத்த சமூகத்தையும் பின்னோக்கி அழைத்துச் செல்லும் அல்லது பெரும்பாலோரிடமிருந்து அந்நியப்படுத்தும் விசயமும் அடங்கியுள்ளது. இதுகுறித்த கருத்து பரிமாற்றமே இந்த பதிவின் நோக்கம்.

மொழி என்பது தொடர்புச் சாதனம்.வெறும் ஒலியெழுப்பிக் கொண்டிருந்த ஆதி மனிதன் நாளடைவில் தனது உணர்வுகளைத் தெரிவிக்க மொழியைக் கற்றுக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. மதரீதியில் படைத்தவனே பயிற்றுவித்ததாகச் சொல்லப்படுகிறது.

மனிதனின் தேவைக்கேற்பவே அனைத்தும் படைக்கப்பட்டன.தேவை என்பது மட்டும் இல்லையெனில் உலகம் இத்தனை வேகமாக முன்னேறியிருக்காது. அறிவுத்தேடலின் தொடர்ச்சியால் தேவை உருவாகி கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன.அவ்வாறு மனிதன் கண்டுபிடித்தவற்றுக்குப் பெயரிட்டு அடையாளப்படுத்துகிறான். அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் கொலம்பஸ் என்று சொல்லப்பட்டாலும் கொலம்பஸுக்கு முன்பே அமெரிக்கா இருந்துள்ளது. நியாயமாகச் சொல்வதென்றால் அமெரிக்காதான் கொலம்பசைக் கண்டுபிடித்தது! :) 

அதுபோல் தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் கிராஹாம்பெல், ரேடியோவைக் கண்டுபிடித்தவர் மார்கோனி என்பர். இதுவேண்டுமானால் சரியாக இருக்கலாம்.ஏனெனில் இவர்கள் இதை அறிமுகப்படுத்தும்வரை அத்தகைய சாதனங்களைப்பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை; அப்பொருட்கள் அதே வடிவில் இருந்திருக்கவும் இல்லை! மார்கோனி தனது கண்டுபிடிப்பிற்கு அஞ்சரைப்பெட்டி என்று பெயரிட்டிருந்தால், ரேடியோவின் பெயர் அஞ்சரப்பெட்டி! கிரஹாம்பெல் டெலிபோனுக்கு அம்மிக்குளவி என்று பெயரிட்டிருந்தால் டெலிபோனை அம்மிக் குளவி என்றே அழைப்போம்! 

ராமதாஸ் என்பதை ராமதாசு என்றும், தட்சினாமூர்த்தியை கருணாநிதி என்றும் மாற்றிக்கொண்டால் மட்டும் இவர்களிடம் தமிழ்பற்று மிகைத்துள்ளதாகக் கருதிட முடியாது. ஏனெனில்,தாசு என்பது தமிழல்ல; தாசன்/தாசர் என்று இட்டுக்கொண்டாலும் ஓரளவு ஒப்புக்கொள்ளலாம். இந்த அரசியல் தலைவர்கள்மேலுள்ள வெறுப்பில் இதைக் குறிப்பிடவில்லை. தமிழை வைத்து செய்யும் மொழி அரசியலைப் அடையாளம் காட்டவே அவ்வாறு குறிப்பிட நேர்ந்தது.

என்னைப் பொருத்தவரை சைக்கிள் என்பதை மிதிவண்டி என்றும்,பைக் என்பதை மோட்டர் சைக்கிள் என்றும், ரயிலை புகை வண்டி என்பதும்கூட தேவையற்றது. சைக்கிள் ஐ சைக்கிளாகவும், மோட்டார் பைக்கை மோட்டார் பைக் என்றும், ட்ரைனை ட்ரைன் என்றும் சொல்வதால் தமிழ் அழிந்துவிடாது. மாறாக, அவ்வாறு இயற்பெயரில் உபயோகித்துக் கொண்டிருப்பவர்களிடமிருந்து தமிழர்களை அந்நியப்படுத்தவே செய்யும்.  

தமிழக சட்டமன்றத்தில் நடந்த ஒரு விவாதத்தில் சைக்கிளின் உதிரி பாகங்களுக்குக் தமிழ் பெயர்களைக் குறிப்பிடும்படி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கேட்டபோது, தமிழார்வலர்கள் திணறித்தான் போனார்கள். ட்ரைனை புகை வண்டி என்றல், தற்போது புகையில்லா ட்ரையின் (எலக்ட்ரிக் ட்ரையின், மோனோ ட்ரையின் என்றெல்லாம் முன்னேறிய பிறகும் புகைவண்டி என்பது அர்த்தமற்றதாகி விடுகிறதுதானே!

ஒருபொருள் அதனை உற்பத்தி செய்தவரால் எவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதோ அவ்வாறே அழைக்கப்பட வேண்டும். நமது கண்டுபிடிப்பான இட்லியை அமெரிக்கனும் இட்லி என்று அழைக்கிறானோ அவ்வாறே நாமும் அந்தந்த பொருளை அதனதன் பெயரிலேயெ அழைக்க வேண்டும். இட்லியை ஆங்கிலேயர் பாயில்ட் ரைஸ் கேக் என்றோ ஹாட் ரைஸ் கேக் என்றோ அழைப்பது எப்படி சரியல்லவோ,அதுபோன்றே பிறமொழி சொற்களை நமது வசதிப்படி தமிழாக்கிக் குறிப்பதும் தவறாகும்.நம்மூர் கண்ணாயிரத்தை Thousand Eyes என்றும்,ஆறுமுகத்தை Six Face என்றோ அல்லது Tiger Woods-ஐ புலிக்கட்டை என்றோ சொன்னால் சகிக்க முடியாதுதானே. ஆக, மொழி ஆர்வம் இருக்கலாம் வெறியாக மாறக்கூடாது.

மற்ற மொழிகளைவிட ஆங்கிலம் உலகளாவிய அளவில் பரந்து விரிந்ததற்குக் காரணம், அந்தந்த மொழியில் இருந்த சொற்களை உள்வாங்கி ஆங்கிலமாக்கிக் கொண்டதே. உ.ம். நம்மூரு கட்டுமரத்தை ‘கடமரன்’ என்றே பயன்படுத்துகிறார்கள்.

N.B: மேற்கண்ட உரையாடலில் "விலைக்குறிப்பு (Bill) கதவுகள் (Gates)" என்பது மைக்ரோச்சாஃட் நிறுவனர் பில்கேட்ஸ் (Bill Gates) என்றும் ரொட்டிக்கடை-உள் என்பது Pizza-In என்பதுமாகும் சற்று அதீத கற்பனையில் எழுதியது என்றாலும் தமிழார்வம், தமிழ் வெறியானால் இந்நிலை ஏற்படாது என்று சொல்லமுடியாது. 

அதிரைக்காரன்
N.ஜமாலுதீன்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு