பெண்ணுக்கு மகுடம்
பிழையற்றத் தாய்மை
மண்ணுக்குப் பகரம்
மனிதத்தின் சிகரம்
மனத்தினுள் சேர்த்த
கனவுகள் யாவற்றையும்
மனைவியோடு சுவாசித்து
காத்திருக்கும் கணவா
பிள்ளைக்குப் பெயரும்
பெறயிருக்கும் நாளும்
கனவிலும் நனவிலும்
அசைபோடும் ஆணே
பிரசவ நாளோ ஒன்றுதானெனினும்
பரவச நாட்கள் பலவாகிப் போக
கருத்தறித்த நாள் முதல்
பிள்ளைச் சுமைக்கு
நிகரான பாரமன்றோ
காத்திருப்புச் சுமை
அன்னையாகும் முயற்சியில்
அலறல் கேட்ட நொடிகளில்
வராண்டாவில் வலியோடு
விழித்திருந்தது நினைவிருக்கா
கனவுகளின் பலனாக
காத்திருப்பிற்கான அர்த்தமாக
முதல் அழுகை ஒலித்ததும்
மூச்சு சீரானது உனக்குத்தான்
வயிற்றுச் சுமை பத்துமாதம்
இறக்கி வைத்து இளைப்பார
தோள்ச் சுமையைத் தூக்காமல்
தூர நின்றால்
துயர மன்றோ?
விற்றுத் தீர்த்தப் பொருளின்மீது
பற்று
அற்றுப் போகும் வியாபாரிபோல்
பெற்று விட்டால் முடிந்ததா – வாழ்வைக்
கற்றுத் தர வேண்டாமா
பெற்றெடுத்தது ஒரு
வெற்றுப் பிண்டமென்றாகுமா
ஒற்றுப் பிழையென்றாலும்
சற்று
உற்று நோக்கினால் திருத்திவிடலாம்
பெற்றப் பிள்ளையல்லவா
பிழையின்றி வளர்க்க வேண்டாமா
இரும்பேயானாலும்
இற்றுப் போகுமுன்
சுட்டும் அடித்தும்தானே
வலுவேற்றனும் வடிவேற்றனும்
தகப்பன் என்றாகும்வரை
தவிப்பதுவும்
வளர்த்தெடுக்கும் சிரத்தைகளைத்
தவிர்ப்பதுவும்
தறுதலைப் பிள்ளையெனக் கேட்டுத்
துடிப்பதுவும்
தேடி வாங்கும் தேனீக் கடி
தகப்பன் கடமையைத்
தவறாமல் செய்
தனையன் தலைக்கு
இறையச்ச இழைகொண்டு
கடமை என்றொரு
தனிமகுடம் நெய்
உன் பிள்ளை
முடிசூடும் நாளை
எதிர்பார்த்துக் காத்திரு
இம்முறை
காத்திருப்பு
சுமையல்ல சுவையாகும்!
உரு: சபீர்
கரு: கிரவுன்


