1) வலைப்பூ வளர்ப்பு
இதைப்பற்றி எழுத வேண்டும் என்கிற எண்ணம் எனக்கும் என் மலேசிய நண்பனுக்கும் நீண்ட நாட்களாக உண்டு. “படிக்கட்டுகள்” எழுத ஆரம்பித்ததிலிருந்தே அவன் தனது இயல்பான தீவிர நகைச்சுவையிலிருந்து சற்றே விலகி மிதமான, சற்றே மிதமான நகைச்சுவைக்கு மாறிவிட்டதால், இப்போது இதை எழுதச்சொன்னால் அவனுக்கு எதிராக வழக்குத் தொடுக்குமளவிற்கு சீரியஸாக எழுதிவிடுவானோ என்கிற பயத்தால் நானே கோதாவில் இறங்கி இருக்கிறேன். அவன் அளவிற்கு சிரிக்கவைத்தே வயிற்றுவலி வரவைக்க என்னால் இயலாது எனினும் கொஞ்சமாவது கிச்சுகிச்சு மூட்டமுடியும் என்கிற நம்பிக்கை எனக்குண்டு.
இனி இக்கட்டுரையின் பேசுபொருளுக்குள் நுழைவோம். நாட்குறிப்பேடு (diary) எழுதும் பழக்கம் எனக்குக் கொஞ்ச காலம் இருந்தது. எழுதப் படிக்கத் தெரியாத என் உறவுக்கார ‘அங்கிள்’ ஒருவருக்கு இலவசமாகக் கிடைத்த டையரி ஒன்றை ‘படிக்கிற புள்ள’யாகிய எனக்குத் தந்து புது பழக்கத்தை உருவாக்கி விட்டார் (இந்த நோட்டு உன் க்ளாஸுக்கு உள்ளதாப் பாரு). ஏதோ ஒரு பள்ளி இறுதியாண்டுகளில் தொற்றிய அந்தப் பழக்கம் கல்லூரிக் காலங்களில் தீவிரம் அடைந்து, கல்யாணம் ஆகும்வரை விடாப்பிடியாகத் தொடர்ந்தது. ஒவ்வொரு வருடத்தின் துவக்கத்திலும் ‘எனக்கு நல்வழி காட்டு இறைவா’ என்ற முதற்பக்க வேண்டுதலோடு சுறுசுறுப்பாகத் தொடங்கப்படும் என் குறிப்பேட்டில் முதல் தேதியிலிருந்து சில காலங்கள்வரை விழித்தது, உண்டது, உடுத்தியது, சென்றது, வந்தது என எல்லா விவரங்களும் எழுதப்பட்டிருக்கும். இத்தனை மணிக்கு இன்ன செய்தேன் என்றெல்லாம் மிகவும் பொறுப்பாக எழுதி வைக்கத் துவங்கி, நாட்பட நாட்பட அதுவே ஒரு சுமையாகிப் போய் காலப்போக்கில் ஒன்றுமே எழுதாமல் விடப்பட்டிருக்கும் பக்கங்களைப் பார்த்து நான் இருக்கேனா போய்ச் சேர்ந்துவிட்டேனா என்று கேட்குமளவுக்கு பக்கங்கள் தொடப்படாமலிருக்கும். பிந்தையக் காலங்களில் ஆங்காங்கே கவிதைகளாகக் கிறுக்கி வைக்கப்பட்டிருக்கும். எல்லாம் கற்றுக்குட்டி கவிதைகள். சாம்ப்பிலுக்கு ஒன்னு:
அன்பே
நாம்
லவ் ஸர்க்யூட்டை
சரியாகத்தானே போட்டோம்
பிறகு ஏன்
உன்னைத் தொட்டால்
ஷாக் அடிக்கிறது?
இப்போது, இந்த நாட்குறிப்பேடு டிஜிட்டலில் வந்துவிட்டதுபோலும். ஆளாளுக்கு திறந்து வைத்துக் கொண்டு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நாட்குறிப்பேடு வலைப்பூ (blog) என்றாகிப்போனது. என்ன ஒரு வித்தியாசம் என்றால் என் டயரியை மூடி மேசையின் இழுவறக்குள் வைத்திருப்பேன்; ப்ளாகையோ திறந்து போட்டு வைத்திருப்பதால் யார் வேண்டுமானாலும் வாசித்துப் போகலாம். தத்தம் கருத்துகளையும் சொல்லிவிட்டுச் செல்லலாம் போன்ற உபரி வசதிகளோடு வலைப்பூக்கள் கலை கட்டுகின்றன. நல்ல ஆரோக்கியமான விஷயம்தான். ஆனால், என் குறிப்பேடுகளைப் போலவே பல நாட்கள் எந்தவித பதிவுகளும் பதியப்படாமல் பல வலைப்பூக்கள் வெறிச்சோடிப்போய்க் கிடக்கின்றன.
“ஜாயிரு, இன்னிக்கு அந்த ப்ளாக் பார்க்கப் போகிறேன். துணைக்கு வாயேன், தனியாகப் போக பயமாயிருக்கு” என்று கேட்குமளவிற்கு இருண்டுபோய்க் கிடக்கின்றன. அவனோ “அங்கேயெல்லாம் போகாதடா பூச்சி வட்டை இருந்து கடிச்சிடப் போவுது” என்பான். ஏற்கனவே பதியப்பட்டு நாட்பட்டுப்போன பதிவுகளைச் சொடுக்கினால் தூசு கிளம்பி நெடி ஏறி தும்மல் வருமளவுக்கு பாழடைந்துபோய்க் கிடக்கின்றன. கோவாலு துணைக்கு இல்லாமல் எந்த மாப்ளேயும் தனியாகப் போக முடியாத அளவுக்கு ஒட்டடையோடும் காலாவதியானப் பதிவுகளின் இடிபாடுகளுடனும் வெளவ்வால் அடைந்துபோய் கிடக்கின்றன பல ப்ளாக் கள். பழைய பேப்பர் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டும் என்று வெளியே ப்ரவ்சிங் செய்யும்போதே போர்ட் போட்டுவிடுவது நல்லது. ப்ளாகுக்குச் சொந்தக்காரர்களே வரதட்சணை பாக்கி வைத்துவிட்ட மாமியார் வீட்டைப்போல புறக்கணித்துவிடுவதால் அவர்கள் வலைப்பூ வாழாவெட்டி ரேஞ்சுக்குப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது. சில வலைப்பூக்கள், என்னுடையதையும் சேர்த்து, அன்டர் கன்ஸ்ட்ரக்ஷன் என்று பல வருடங்களாக அப்படி அப்படியே கிடக்கிறது. சிமென்ட் செங்கல்லாம் இருந்தும் கட்டி முடிக்காமல் ஜல்லியடிக்கின்றன.
வலைப்பூக்களுக்குப் பெயர் வைப்பதில் எல்லோருமே தன் முழுத் திறமையையும் காட்டியிருப்பர். பிள்ளைக்குப் பேர் வைப்பதைவிட ப்ளாக்குக்குப் பேர் வைப்பதற்கு அதிக சிரத்தை எடுத்துக்கொண்டதாகத் தோன்றும். தலைப்புக்குக்கீழே ஒரு கோஷம் இருக்கும். அதில் நச்சென்று சிலரும் நசநசவென்று சிலரும் பஞ்ச் டயலாக் ஸ்டைலில் எழுதி வைத்திருப்பர். ஆயினும் அந்த கோஷத்திற்கும் பதிவுகளுக்கும் குறைந்த பட்சம் ஆயிரம் வித்தியாசங்கள் இருக்கும். கவிதை வலைப்பூக்களில் பெரும்பாலும் பூ, நிலா, மழை, பெண் இவையில்லாமல் கவிதையே இருக்காது. இதையும் தாண்டி சிலர் தம் நிலையை உண்மையிலேயே அறியாது வித்தியாசமாக எழுதுகிறோம் என்கிற பேரில் டபுள் ஸ்ட்ராங்காக எழுதி விடுவதால் எனக்கும் என் சுற்றத்திற்கும் நட்புக்கும்கூட புரிவதில்லை. தமிழ் எழுத்துகளை தெளித்து வைத்தால் அது மொழியாகாது; புரிந்தாலே தமிழ் என்பதை யாராவது இவர்களுக்கு எடுத்துச் சொன்னால் வாசிப்பவருக்கு தலையில் முடி மிஞ்சும்.
திருட்டு விசிடியைப்போல சில ப்ளாக்’கள் பிறர் படைப்பைத் திருடி கீழே தம் பெயரைப் போட்டுப் பதிந்து வைத்துள்ளனர். பல பெண்களின் தளங்கள் பழக்க தோஷத்தால் ஆலங்கரிக்கப்பட்டு படு ஷோக்காக இருக்கும். தலைப்பூவைப்போல அழகாக தலைப்பு வைத்தாலும் வலைப்பூ வாசிக்க வருபவர்களுக்கு ஒரு களைப்பு வராமல் சுவாரஸ்யமாக வைத்திருத்தல் அவசியம்.
தத்தம் வலைப்பூக்களைக் கொண்டு வாட்ப்போர் போல சதாவும் பிரச்னைகளை கிளப்புவது தற்கால வலைப்பூக்களின் மற்றும் சமூக வலைதளங்களின் வாடிக்கையாகி விட்டது. எதற்கெடுத்தாலும் பிற தளங்களைக் குறை சொல்வது, தன்னிச்சையாக இயங்கும் வலைஞர்களை வம்புக்கிழுப்பது, எந்த ஒரு சமூகச் செயல்பாடுகளிலும் தமக்கு என்றொரு நிலைபாடு இல்லாமல் பொத்தாம் பொதுவாக ஏனோதானோவென்று பதிவுகளை வெளியிடுவது போன்றவற்றால் ஊடகவியலைப் பற்றி ஒரு அடிப்படை ஞாயதர்மம்கூட அறியாமல் இருப்பது வேதனைக்குரியது. தவிர, வெளியிடப்படும் வாழ்வியல், உளவியல் மற்றும் தத்துவப் பதிவுகள் வாழ்க்கையை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டுமேயொழிய ஒப்பாரி வைக்கச் சொல்வதாக இருக்கக் கூடாது.
O0O0O0O0O0O0O0O0O0O0O0O0O0O0O0O0O
02) விபரீதம் – ஒரு மாதிரி உரையாடல்
-அஸ்ஸலாமு அலைக்கும்
-வ அலைக்குமுஸ்ஸலாம். செளக்கியமா? பார்த்து நாளாச்சு?
-நல்லாருக்கேன். நீங்க எப்டி இருக்கீங்க? உங்களத்தான் பார்க்க முடியல
-என்ன பண்றது நாம் எல்லோருமே பொழப்புக்காகத்தானே பிரிஞ்சி கிடக்கோம். ம்..அப்புறம்?
-உங்க கிட்ட கொஞ்சம் பேசனும். எப்ப வீட்டுக்கு வர?
-என்ன விஷயம்?
-இல்ல நம்ம தவ்ஹீது பள்ளி கட்டுமான விஷயமாப் பேசனும்.
-அல்லாஹ்வோட பள்ளின்னு சொல்லுங்களேன்.
-அல்லாஹ்வோடதுதான். ஆனா, தவ்ஹீதுக்கென்று தனிப்பள்ளி காண்கிறோம்
-பொதுவாக அல்லாஹ்வோட பள்ளியென்று சொல்வீர்களேயானால் நான் இன்ஷா அல்லாஹ் ஒரு கணிசமானத் தொகைத் தருகிறேன். தவ்ஹீதுக்கென்று தனிப்பள்ளி என்று முழங்கினால், எல்லோரையும் போல ஒரு குறைந்த பட்ச தொகையையே நான் தர விரும்புவேன்.
-நாம் பிரியவில்லையே? அவர்கள்தானே பிரித்து வெளியே அனுப்பி விட்டார்கள். எங்களை உள்ளே அனுமதிக்கமாட்டோம் என்று அறிவிப்புப் பலகையே வைக்கிறார்களே?
-நீங்கள் பழங்கதை பேசுகிறீர்கள். இப்ப அப்படியெல்லாம் இல்லை. வேறு ஊர்களைப்பற்றி அவ்வளவாக என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், நம்ம ஊர்ல இல்லே. யாரும் எந்தப் பள்ளியிலும் தொழலாம்.
-அல்லாஹ் குர் ஆனில் சொல்கிறான்….
-நிறுத்துங்கள். அல்லாஹ் குர் ஆனில் என்ன சொல்கிறான் என்று எனக்கு விளக்காமாகத் தெரிவதற்கு முன்பிருந்தே பெற்றோர் வளர்ப்பில் நான் ஒழுக்கமான வாழ்க்கையையே வாழ்ந்து வந்துள்ளேன். இப்பவும் ஒரு பொது மேடையில் ஏறி தைரியமாக என்னால் அரைகூவ இயலும், “என் மேல் குற்றம் பிடிப்பவர், குறை சொல்பவர் யாரும் உள்ளனரா?” என்று. உங்கள் நிலை என்ன? பள்ளிக்குப் படிக்க அனுப்பினால் மட்டம் போட்டு படம் பார்க்கச் சென்றீர்கள், ஓத அனுப்பினால் ஒளிந்து கொண்டீர்கள், மீசை வருமுன் பீடி சிகரெட், கழிசடைகளோடு சேர்ந்துகொண்டு கள்ளு சாராயம், கல்யாணம் கட்டிக்கொடுத்தபின்பும் கண்டவளோடும் தொடுப்பு, இப்படித்தானே பகிரங்கமாக நீங்கள் என் கண்முன் வாழ்ந்து காட்டினீர்கள். மூத்தவரை மதிப்பதில்லை. ஒரு வக்த் தொழுவதில்லை; நோன்பு நேரத்திலும் குடிபோதை, ஒரு நல்ல செயல்? நல் வார்த்தை? ம்ஹூம். இப்படி வாழ்ந்த உங்களுக்கு நினைவிருக்கா நான் எப்படி வாழ்ந்தேன் என்பது?
-ஒரு காலத்தில் தப்பு செய்தவர் திருந்தக் கூடாதா?
-திருந்தலாம். கண்டிப்பாகத் திருந்த வேண்டும். ஆனால், திருந்திய பிறகு, உங்கள் கண்களுக்கு முன்னாலேயே ஓர் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்து வருபவனுக்கு தவ்ஹீது என்னும் கட்டுக்குள் உபதேசம் செய்ய முயல்வதைவிட உங்களிடம் பண பலமும் உடல் பலமும் இருந்தபோது உங்களைச் சுற்றி கூடவே ஒரு கழிசடைக் கூட்டம் இருந்ததே, அவர்களையும் வழி கேட்டில் அழைத்துச் சென்றீர்களே அவர்களிடம் போங்கள்; உபதேசியுங்கள், நீங்கள் எட்டிய நேர்வழிக்கு அழைத்து வாருங்கள். நாம் யாவரும் சகோதரர்களே. நமக்குள் மார்க்க விஷயத்தில் மாற்றுக் கருத்துகள் ஏற்படும்போது கண்ணியமாக உரையாடுங்கள். நக்கலோடும் குத்தலோடும் எல்லாம் தெரியும் என்னும் இருமாப்போடும் ஏனையோரை முட்டாள்கள் என்று தீர்மாணித்து உரையாடுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். நல்ல அழகிய முறையில் மனிதர்களை அனுகி புரியும்படி இலகுவாக மார்க்கத்தை எத்தி வையுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, நம் சகோதரர்களுக்குள் ஒற்றுமையை வளர்த்தாலே நம்மை எதிர் நோக்கியிருக்கும் ஆபத்திலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும். போய் வாருங்கள்.
~()~~()~~()~~()~~()~~()~~()~~()~~()~~()~~()~
3) குறி சொல்லவா குறி!
எல்லா உறவுகளும்
ஏதாவதொரு சந்தர்ப்பத்தில்
காற்புள்ளியோடு கலங்கியோ
அரைப்புள்ளியோடு தயங்கியோ
கேள்விக்குறியேந்தி
உம் வீட்டு வாசல்
வந்து நின்றால்
ஆச்சர்யக்குறிகளில் பிணைத்துவைத்து
ஆணியடிக்காமல்
முறைத்து
முற்றுப்புள்ளியிடுமுன்
அவர்கள் கேள்விக்குறிக்கு
திருப்தியான
விடையளித்து விடைபெறவும்
மேற்கோள் குறிகளுக்குள் வைத்து
முகஸ்துதி பாடாமல்
அடைப்புக் குறிகளினுள்
அவமானப் படுத்தாமல்
தட்டை வரிகளால்
தரம்பிரித்தால் போதும்
பத்திபத்தியாய் நீளும் பாசம்
வாழத்தலைப்பட்டு
வழிநெடுக வாய்த்தக்
கூட்டல் குறிகளால்தான்
வாழ்க்கையில்
பெருக்கல் குறிகள் வாய்த்தன
கழித்தல் குறிகளால்
காயப்படுத்துமுன்
வகுத்தல் குறிகளுக்குளிட்டுப்
பகுத்துப்பாருங்கள்
இன்பம்
ஈவு எனப் பொங்க
மீதியாக மிஞ்சும்
நிறைவான நிம்மதி!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்